Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எண்ணமெல்லாம் உன் வண்ணமே

வண்ணம் – 10.2

கண்ணீரை துடைத்து வரவழைத்த சிரிப்போடு அவனது வாடிய முகத்தை பார்த்து, “நீ ஒன்னும் பீல் பண்ணாத, இதெல்லாம் பழைய மாதிரியே எதிர்பாத்த என் மேல தான் தப்பு. நீ தான் இதெல்லாம் மறைச்சு தெளிவா சொல்லிட்டியே, பழைய மாதிரியே என்கிட்ட எதையும் எதிர் பாக்காதனு. அப்பயே சுதாரிச்சு நான் தெளிஞ்சிருக்கணும்”

“திவ்யா, நான் பண்ணதுக்கு நீயே ஏன் உன்ன வருத்திக்கிற…” அவள் கையை பிடித்து மீண்டும் தனக்கு அருகே நிறுத்தி அவள் முகத்தை வேதனையோடு பார்த்தான்.

அவன் அருகாமை அவளை மேலும் வதைத்தது, “நான்… நான் அவ்ளோ ஈஸியா உன் வாழ்க்கைல இருந்து போய்ட்டேனா ரகு?”

“ஹே… திவ்யா…” துடித்து போனான் அவள் கண்ணீரில்.



Advertisement

“கோவத்துல, திமிருல டிவோர்ஸ் கேட்டுட்டேன். நீ ஏன் ரகு ஒடனே சரி சொன்ன? என் மனசை மாத்த ட்ரை பண்ணிருக்கலாம்ல? இந்த பிசாசு வேணாம்னு முடிவு பண்ணிட்டியா? உன் அம்மாகிட்ட என்ன பத்தி அவ்ளோ பேசுனியே, எல்லாம் சரி தான்.

உன்ன இருக்க சொல்லிட்டு நான் யார் யார்கூடையோ பேசுனது தப்பு தான். ஆனா அதெல்லாம் உன் கூட இருக்கணும்னு ஆசைப்பட்டு தானே செஞ்சேன். சரி நீ சொல்லு, கல்யாணம் ஆகி ஆறு மாசம் கழிச்சு என்ன எத்தனை தடவை நீ வெளிய கூட்டிட்டு போயிருப்ப?

உனக்கு பயம், எங்க இவளை கூட்டிட்டு வெளிய போனா மொத்த காசையும் வேஸ்ட் பண்ணிடுவாளோனு. சொல்லிருக்கலாமே ரகு? நீ செய்றது பிடிக்கல, உன்னோட ஊதாரித்தனம் பிடிக்கலனு… மாத்திருப்பேனே… மொத்தமா என்ன மாத்திருப்பேனே ரகு.

Advertisement

அன்னைக்கு எப்டியோ போனு சொல்லிட்டு போன மனசுக்கு இன்னைக்கு அப்டி போக மனசு வரல. ஒரு தடவையாவது நல்ல சாப்பாடு சமைச்சிட மாட்டேனானு தினம் தினம் எதிர்பார்த்து ஏமாந்து போகுற ரகுவ பாத்து ரசிச்சு சிரிக்கணும் போல இருக்கு.

Advertisement

நாம லவ் பண்ணது, சண்டை போட்ட நேரத்துல ஒருத்தரை ஒருத்தர் சமாதானம் பண்ணி, கல்யாண பிரச்சனை வந்தப்போ ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா நின்னு சப்போர்ட் பண்ணி வருதத்துலையும் சந்தோசமா சிரிச்சு நமக்கான வாழ்க்கையை வாழ்ந்த அந்த நாளுக்கு மறுபடியும் போகணும்னு ஒவ்வொரு நிமிஷமும் ஆசையா இருக்கு.

ஆனா நீ இதெல்லாம் மறந்துட்டல. இப்போ என் அப்பாகிட்ட போய் பேசுனது கூட நீ ஆஸ்திரேலியா போகுறப்போ உனக்கு தடையா நான் நின்னுட கூடாது, என்ன தனியா விட்டுட்டு வந்தோம்னு உன் மனசாட்சி உன்ன கேள்வி கேக்காம இருக்கணும்னு தான்.

என்னோட பதட்டம் எல்லாம்,  உன் பக்கத்துல வீக்கா ஆகுறேனோனு பயமா இருக்கு, நான் வேணாம்னு என்ன விட்டு நீ போக போக உன்ன தான் மனசு அதிகம் நெருங்குது. நீ என்ன விட்டு ரொம்ப தூரம் போய்ட்ட, இல்ல என் மேல இருந்த ஆசையெல்லாம் போச்சா? அந்த அளவு உன்ன டார்ச்சர் பண்ணிட்டேனா ரகு?”

Advertisement

தன்னை கேள்வி கேட்டு நிற்பவளிடம் என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் நின்றான். ஒரு வகையில் அவள் கேட்ட அனைத்து கேள்விகளும் அவனுள்ளே அவன் கேட்ட கேள்விகள் தான்.

ஏன் அதை தான் உண்மை எனவும் நம்பியிருந்து வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பாதையாகவே இந்த ஆஸ்திரேலியா செல்லும் திட்டம். ஆனால் ஒரே நாளில் அவனது எண்ணங்களை மாற்றி அவள் பக்கமே இழுத்து வந்துவிட்டாள்.

அன்று மட்டும் தினேஷ் தனக்கு திவ்யா வேலை செய்வதை பற்றி கூறாமல் இருந்திருந்தால் அவளுடைய அன்றைய தவிப்பு, இன்றைய காதல் எல்லாம் மறந்தே சென்றிருப்பானே.

“நேத்து உன்னோட ப்ரன்ட் ஜாப் இருந்தா ரெஃபர் பண்ண சொன்னார். சார் ஒடனே பேசி வாங்கி வச்சாச்சு. ஆனா இங்க நான் வேலை கிடைக்காதானு நாய் மாதிரி ஒவ்வொரு கம்பெனி ஏறி இறங்கி வேலை தேடி அசிங்கப்பட்டு நின்னேன், அப்போல்லாம் ஒரு சாதாரண மனுசிக்கு ஹெல்ப் பண்ற மாதிரி கூட எனக்கு ஹெல்ப் பண்ண தோணல.

ஹோட்டல்ல வேலை பாக்குறது உனக்கு கஷ்டமா இருக்கு… இல்ல இல்ல கௌரவ குறைச்சலா இருக்கு. ஏன்னா உன்னோட ப்ரன்ட்ஸ் என்ன பத்தி உன்கிட்ட பேசுறது உனக்கு அசிங்கமா இருக்கு.

ஆஸ்திரேலியால வேலை பாக்க போற உன்னோட மனைவியோட வேலை உன்ன முகம் சுளிக்க வச்சிருக்கு. அதுக்காக வந்து கெஞ்சி அந்த வேலைய பாக்க விடாம தடுத்த. இனிமேல் உனக்கு அந்த கவலை வேணாம். இந்த வாரம் எண்ட்ல டிவோர்ஸ்க்கு சைன் பண்ணிடுறேன்.

சந்தோசமா போ, இவ மூஞ்சிய பாக்கணுமே, வீட்டுக்கு வந்தா சண்டை போடுவாளேனு வீட்டுக்கு வராம எங்கையும் தங்க வேண்டாம். ஏன் நீ ஊருக்கு கிளம்ப ரெண்டு நாள் முன்னாடியே நான் இந்த வீட்டை விட்டு போய்டுவேன். எனக்க.. எனக்காக நீ கை அறுத்துட்டு…”

முடியவில்லை அவளால், அதை நினைத்து பார்க்க பார்க்க மனம் துடிக்கும் துடிப்பு வேதனையாக இருந்தது. எப்படி இப்படி ஒரு காரியம் செய்ய துணிந்தான், தன்னை விட்டு செல்ல எப்படி மனம் வந்தது அவனுக்கு?

அன்று ஏதேனும் நிகழ்ந்திருந்தால்…!!?? யோசிக்க கூட முடியவில்லை அதன் பிறகு தனக்கான வாழ்க்கையை. உடல் நடுங்க, கண்ணீர் பெறுக தேம்பி அழுதவள் இறுக்கமாய் மூடியிருந்த கைகள் வலிக்க துவங்கியது.

உணர்வுகளை எத்தனை முயன்றும் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த மனைவியை கைகளில் அள்ளி மெத்தையில் அமர்ந்த ரகு, அவளை தன்னுடைய மடியில் பத்திரமாக சிறை செய்துவிட்டான்.

அவன் ஸ்பரிசம் இன்னும் இன்னும் பெண்ணவளை ஏங்க வைத்தது, ‘இன்று அழுகாதே என்று சமாதானம் செய்து இவன் சென்றிடுவான் அதற்கு பிறகு நான் தானே தவிப்பது? நேற்று அவன் கொடுத்த முத்தமே இன்னும் தன் சிந்தை விட்டு அகலாமல் வண்டாய் மனதை குடைவது அவனுக்கு எங்கு தெரியும், இல்லை அதன் பிறகு அவன் விலகி சென்றதன் தாக்கம் தான் அவனுக்கு தெரிந்திடுமா?’

“ஹே பொண்டாட்டி அழுகாதடி” மனம் ஏங்கிய வார்த்தை, எத்தனை மாதங்கள் பிறகு அழைக்கிறான் இவ்வாறு.

“அப்டி சொல்லாத என்ன” கெஞ்சுவது போல் அவள் அழுவது அவனை மேலும் சிரிக்க தான் வைத்தது.

“அப்டி தான்டி சொல்லுவேன் என் பொண்டாட்டி” பல் வரிசை தெரிய அழகாக சிரித்தவன் மேல் காதல் இன்னும் இன்னும் கூடியது அவள் பிழையோ!

“சொல்லாதடா” அழுகை சற்று மட்டுப்பட்டு கோவம் எட்டி பார்த்தது திவ்யதர்ஷினிக்கு.

இதை தெரிந்து வைத்தே மேலும் அவளை சீண்டினான், “என் பொண்டாட்டிய நான் பொண்டாட்டி சொல்லாம வேற யாரை சொல்றதுடி பொண்டாட்டி…”

“நமக்கு டிவோர்…” மனைவியின் கழுத்தை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் அவளது இதழ்களை கவ்விக்கொண்டான்.

வார்த்தைகளை தடை செய்ய துவங்கப்பட்ட முத்தத்திற்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் போனது. தன்னுடைய வசதியாக மனைவியின் கழுத்தை பற்றி தனக்கு வசமாக வளைத்தவன் முத்தம் ஒவ்வொரு நொடியும் ஆழமாய் அழுத்தமாய் அவளுள் வேரூன்ற துவங்கியது.

இடையோடு இருந்த அவனது மற்றொரு கரம் அவள் கன்னத்தில் ஓவியம் தீட்ட அவனது கைவளைவினுள் சிறைப்பட்டு கிடந்தவள் முயன்று தன்னை கட்டுப்படுத்தி அவனை விட்டு எழுந்து நின்றாள்.

“என்னடி?” மோகம் சூழ்ந்த கண்களோடு அவளை பார்த்தான்.

“நமக்கு டிவோர்ஸ் ஆக போகுது”

நொடியில் எழுந்து நின்றவன், “இன்னும் ஆகலல” என மீண்டும் மனைவியின் இதழ்களை நோக்கி நெருங்க அவனை மொத்த சக்தியையும் திரட்டி தள்ளி நிறுத்தினாள்,

“ச்சீ இப்டி பேச உனக்கு அசிங்கமா இல்ல” முகம் சுளித்து அவனை அருவருப்பாய் பார்த்தாள்.

அவனுக்கும் உள்ளே கோவம் இருக்க தான் செய்தது, விவாகரத்து என்னும் பேச்சை எடுத்தது அவள் தான், தங்களுக்குள் பிரச்சனைகள் வர சில நேரங்களில் அவளும் காரணமாக இருந்துள்ளாள்.

அவள் கூறியது போல் ஹோட்டலில் வேலை பார்க்க கூடாதென்று இல்லை, எந்த வேலையும் கௌரவ குறைச்சலை தருவதில்லை, அவள் கஷ்டப்பட கூடாதென்னும் முக்கிய காரணம் தான் இருந்ததே தவிர வேறு எதுவும் அவன் நினைக்கவில்லை.

அவளுக்கு தெரியாதது, அவன் அவர்கள் திருமணம் ஆகும் முன்பு  அன்னை தந்தையிடம் கோவித்து, இந்த வேலையை சில மாதங்கள் செய்துள்ளான். அதில் ஏற்படும் மன உளைச்சல்களை பலமுறை கடந்து வர, நாட்கள் ஆகியுள்ளன.

தனக்கே இந்நிலை என்னும் பொழுது, வீட்டில் ஒரு பாத்திரத்தை கூட கழுவி பழகாதவள் மனநலனை மட்டுமே யோசித்து ரகு அவ்வாறு பேசியது. அதிலும் தன்னுடைய சுயநலம் தான் உள்ளதென்று பேசுபவள் வார்த்தைகளை இப்பொழுது திருத்த தோன்றவில்லை, உணர்ச்சிகளின் பிடியில் இருந்ததால்.

“டிவோர்ஸ் கேன்சல் பண்ண சொல்லிட்டேன்” என்றவன் அவளை மீண்டும் தன்னை நோக்கி இழுக்க, திகைத்து நின்றவள் அவன் நெஞ்சில் கை வைத்து இருவருக்கும் இடையே இடைவெளி ஏற்படுத்தினாள்.

“ஆமாடி லாயர்கிட்ட பேசிட்டேன், இனி காலத்துக்கும் நீ என்கூட தான் குப்பை கொட்டணும்”

அவள் கரங்களை தன்னுடைய கழுத்தோடு வளைத்து போட்டு அவளை மடியில் கிடத்தினான். திவ்யா இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

“யாரை கேட்டுடா கேன்சல் பண்ண?”

“நான் எதுக்கு யாரையும் கேக்கணும், ஒருத்தி மனசு உன் பின்னாடி வருதுனு சொல்லிட்டு அழுதுட்டே வந்துட்டா அதுக்கு மேல என்ன பண்ண முடியும் சொல்லு… அதான் எல்லாத்தையும் கிழிச்சு போட சொல்லிட்டேன்” என்றான் பெருமையாக.

“நீ சொன்னா அந்த லாயர் கிறுக்கன் ஒடனே கேப்பானா, நான் மறுபடியும் அப்ளை பண்ண தான் போறேன். நீ ஆஸ்திரேலியா கிளம்ப போறல? போடா கெளம்பு” அவன் சட்டையை பிடித்து மிரட்ட அவள் முகம் கணவனுக்கு வசதியாக நெருக்கத்தில் வந்தது.

“ஆமா கிளம்ப தான் போறேன், ஆனா தனியா இல்ல, என் பொண்டாட்டிய கூட்டிட்டு முதல் ஹனிமூன் போக போறேன்” என்றவன் விரல்கள் அவள் வெற்று இடையில் மெல்ல மெல்ல கோலம் போட துவங்கியது.

ரகுவின் கைகளின் பயணத்தை தடை செய்து, “இரக்கப்பட்டு நீ என் கூட இருக்கணும்னு ஒரு அவசியமும் இல்ல. இத்தனை நாள் கூட இருந்தப்போ என்னோட உணர்வுகள் இவருக்கு தெரியாதாம், நான் ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டதும் பாவப்பட்ட வாழ்க்கை போடுற நீ ம்?”

“எந்த மடையன் அப்டி சொன்னான்?”

“ரகுநந்தன்னு ஒரு மடையன் தான்”

“அவன் சொன்னா சரியா தான் இருக்கும், அப்போ இரக்கப்பட்டு யாருக்கும் வாழ்க்கை குடுக்க வேணாம்னு நீயும் சொல்றியா?”

ஒரு நொடி கலவரம் கண்களில் உதயமாக அடுத்த நொடி அதை மறைத்து, “ஆமாம்” என்றவள் பிடி மட்டும் அவன் சட்டை காலரில் கூடியது.

அவளை படித்தவன் உள்ளடக்கிய சிரிப்போடு, “அப்போ டிவோர்ஸ் குடுக்கலாம்னு சொல்றியா?” என்றான் கேள்வியாக.

தலை தயக்கத்தோடு ஆடினாலும் கண்ணீர் மணிகள் அவள் தவிப்பை படம் பிடித்து காட்டியது.

“நிஜமா?” விசும்பலோடு அவன் நெஞ்சினில் முட்டியவள் தலை தன் விருப்பமின்றி ஆமாம் என ஆட அவளை நெஞ்சோடு இறுக்கமாக அணைத்துக்கொண்டான் ரகு.

கணவனிடமிருந்து திமிறி திமிறி தோற்றவள் ஆற்றாமையில் அவன் நெஞ்சத்திலே பலமின்றி அடிக்க, சுகமாய் அந்த சிறு பிள்ளையின் அடியை வாங்கி சிரித்தான் அந்த காதல் கள்வன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!