Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எண்ணமெல்லாம் உன் வண்ணமே

வண்ணம் – எபிலாக் (1)

“என்ன உன் அத்தைகிட்ட தான் கேப்பியா? என்கிட்ட சொல்லலாம்ல தீஷா குட்டி” என்ற ரகு அப்படியே மருமகளை தோளில் அமரவைத்து மனைவியை பார்த்தான்.

“என்னடி என் புள்ளைய திட்டுனியா?”

திவ்யா குனிந்து மகனை பார்க்க அவனோ தந்தையின் காலை கட்டிக்கொண்டு பாவமாக அன்னையை பார்த்து, “அம்மா சாட் தானே ப்பா சொன்னேன்?” என்றான் உண்மையாக.

குழந்தை கூறியது கூட அது தான், ஆனால் ரகுவுக்கு மனைவியை சீண்டியே ஆக வேண்டும் அதற்காக தான் இந்த நாடகம். திவ்யாவுக்கு சிரிப்பு தான் வந்தது, வேதவ் அப்படியே ரகுவை போல் தான்.



Advertisement

சேட்டை, குணம், பாசம் எல்லாமே. திவ்யா முகம் சிறிது வாடினாலும் உடனே கண்டுக்கொண்டு தந்தையிடம் நின்றுவிடுவான் ஏதாவது செய்து அன்னையை சிரிக்க வை என.

அவனும் அவளை சீண்டியே சிரிக்க வைத்துவிடுவான். இப்பொழுதும் தந்தையை ஒட்டி நிற்க மனம் இல்லை, அன்னையோடு அதிகம் சுற்றிய குழந்தைக்கு அவளை விட்டு தள்ளியே நிற்க முடியவில்லை.

திவ்யா கருவுற்ற பிறகு வழக்கம் போல் அன்னை மீது வேதவ் தாவிவிட்டால் என்ற பயத்தில் இருவரும் அவனுக்கு கதைகள் பல கூறி தங்கைக்காக நிதானமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Advertisement

மகனின் கை பற்றி தன்னை நோக்கி இழுத்த திவ்யா அவனை கட்டிக்கொண்டு தலை வருடி, “அம்மாக்கு ஒன்னுமில்ல வேதவ், கொஞ்சம் கை கால் எல்லாம் வலி அவ்ளோ தான்” என்றாள்.

Advertisement

“அப்றம் ஏன் ம்மா சாட்?” என்றான் விடாமல். அவளையே பார்த்திருந்த ரகு அசையாமல் அங்கேயே நிற்க மாமனை கண்ட இளசுகள் அவனை கட்டிக்கொண்டு விளையாட அழைத்தனர்.

“ஒன்னுமில்ல தங்கம், நீங்க போய் விளையாடுங்க. ரகு பசங்க கூப்பிடுறாங்கடா” என்றாள் கணவனையும் மகனையும் சமாதானம் செய்யும் எண்ணத்தோடு.

அவனோ பிள்ளைகளை அனுப்பி வைத்து மனைவி கை பிடித்து, “மாமா நாங்க கொஞ்சம் உள்ள இருக்கோம்” தகவலை கூறி மெல்ல திவ்யாவை உள்ளே அழைத்து சென்றான்.

Advertisement

திவ்யாவுக்கு நிற்கவும் முடியவில்லை அமரவும் முடியவில்லை. மெல்ல மெல்ல வலி அதிகமாக ரகுவின் கைகளை பற்றிக்கொண்டாள் இறுக்கமாக.

 “திவி என்ன ஆச்சு, வலி வருதா?” தன்னுடைய பதட்டத்தை வெளிக்காட்டாமல் தைரியமாக கேட்டான்.

கீழ் உதட்டை பற்களால் கடித்து அமர்ந்திருந்த திவ்யாவுக்கு என்ன முயன்றும் தன்னுடைய அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. ரகுவின் தோளில் முகம் புதைத்து கண்ணீர் விட உறுதியாக கூறியது அவள் வேதனையை.

கையிலிருந்த கைபேசியை எடுத்தவன் உடனே வெளியில் இருந்த மாமனாருக்கு தகவல் கூற மொத்த குடும்பமும் உள்ளே ஓடி வந்துவிட்டனர்.

“நான் ரிப்போர்ட் எல்லாம் எடுத்துட்டு வர்றேன், பிரபு வண்டிய எடு. நல்ல வேலை இன்னைக்கும் நாள் நல்லா இருக்கு, நாளைக்கும் நல்ல நாள் தான். பயந்துட்டே இருந்தேன்ங்க” என்ற அவள் அன்னை வேகமாக உள்ளே சென்று திவ்யாவின் ரிப்போர்ட்டை எடுத்து வர,

“அத்தை டிரஸ் எதுவும் எடுத்தீங்களா?” என்றாள் திவ்யாவின் அண்ணி.

“ஐயோ மறந்துட்டேன் ம்மா”

“இருங்க நான் எடுத்து அவர்கிட்ட குடுத்துவிடுறேன், நீங்க முன்னாடி போங்க” என்றாள்.

குழந்தைகளை வைத்து இரண்டு மருமகளும் வீட்டில் இருக்க பெரியவர்கள் அனைவரும் உடனே மருத்துவமனைக்கு விரைந்தனர். திவ்யாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வலி அதிகரிக்க ரகுவின் கைகளை உடைந்துவிடும் அளவிற்கு பற்றிக்கொண்டு விசும்பிக்கொண்டே வந்தாள்.

“ஒன்னுமில்ல திவ்யா… இதோ ஹாஸ்பிடல் வந்துட்டோம்” சமாதானம் செய்து அவளை மருத்துவமனையில் சேர்த்தவன் நடையாக நடந்தான் அந்த நீல வளாகத்தையே.

பதட்டம், பயம், அழுகை என அவனுக்கும் நிலைகொள்ளவில்லை. அவள் அழுகை வேறு காதில் கேட்டுக்கொண்டே இருக்க எத்தனை தூரம் செல்ல முடியுமோ சென்று தலையை பிடித்து அமர்ந்துகொண்டான்.

இதில் அவள் சகோதரர்கள் வேறு இவனை அடிக்கடி முறைத்து வைக்க ஐயோ என ஆனது ரகுவுக்கு. நேரம் நள்ளிரவை தாண்டிவிட ரகுவின் பெற்றோர் வந்துவிட அவர்களிடம் புலம்பித்தள்ளிவிட்டான்.

இடையிடையே அழுகை வேறு எட்டிப்பார்க்க அன்னை தோள் சாய்ந்து தன்னைகட்டுப்படுத்த போராடினான்.

இதில் மருத்துவரை சென்று பார்த்து அவளது நலனை அடிக்கடி விசாரிக்க மருத்துவருக்கும் கோவம் வந்துவிட்டது, “உக்காருங்க சார், வலி வந்தா போதுமா குழந்தையோட தலை இன்னும் வெளிய தெரியவே இல்ல. பிரசவம் என்ன ஒடனேவா நடக்கும் நேரமாக தான் செய்யும்” என திட்டிவிட்டு செல்ல திவ்யாவின் சகோதரனும்,

“இவ்ளோ துடிக்கிறவன் ஏன் பிள்ளை வேணும்னு நினைக்கணும்?” ரகுவின் முகத்திற்கு நேரே பேச அவன் தந்தை தான் ரகுவை அடக்கினார்.

“மாமா உங்க மகனை அமைதியா இருக்க சொல்லுங்க, இருக்க எல்லா டென்ஷனையும் அவன் மேல அப்றம் இறக்கிடுவேன்” விளையாட்டாக எச்சரிக்கை செய்து ஓரம் சென்றிட ரகுவின் தந்தைக்கு சிரிப்பு தான் இருவரின் செயலும்.

எலியும் பூனையும் தான் அவர்கள் மூவரும்.

மொத்த வீட்டினரையும் கதிகலங்க வைத்து மறுநாள் காலை ஆறு மணிக்கு தான் பிறந்தாள் ரகு, திவ்யாவின் புதல்வி. மகளை பார்க்காமல் ரகு முதலில் சென்று நின்றது மனைவியிடம் தான்.

சோர்ந்து, முகம் எல்லாம் வாடி கிடந்தவள் அருகே அமர்ந்தவன் தன்னை கட்டுப்படுத்த முடியாது அவளது தோளில் முகம் புதைத்து அழுதே விட்டான்.

திவ்யா அவன் சிகையை வருடிவிட்டு தன்னுடைய தலையை சாய்த்து அவனது தலையில் வைக்க அவள் முகத்தை இறுக்கமாக பற்றிக்கொண்டது ரகுவின் கைகள்.

“நமக்கு குழந்தைங்க போதும்டி” என்றான் மூக்கை உறிஞ்சி.

அவன் தலையில் ஒரு அடி வைத்து, “இன்னொன்னு வேற அய்யா பிளான் பண்றிங்களோ” மனைவி சிரிப்போடு கேட்க அவள் முகம் பார்த்து திரும்பி படுத்தவன் அவள் கன்னத்தை மென்மையாக வருடினான்.

“என் ஆசைல உன்ன கஷ்டப்படுத்துறேனாடி?”

“அடேயப்பா ரொம்ப லேட்டா தான் மூளை வேலை செஞ்சிருக்கு” என்றவள், “நான் தானே பொண்ணு வேணும்னு கேட்டேன்”

“ஆனாலும் நான் தான உன் கஷ்டத்தை புரிஞ்சு உன்ன புரிய வச்சிருக்கணும்”

“இரு என் பொண்ணு வளந்ததும் நீ இப்போ பேசுனது எல்லாம் சொல்றேன், வேதவ் தான் ரொம்ப ஆசைப்பட்டான் பாப்பாவை பாக்க, ஆமா அவன் எங்க ரகு?”

“அவன் வீட்டுல இருக்கான், உனக்கு ரொம்ப வலிக்கிதா கோவிந்தம்மா?”

“வலிக்காம” அந்த குரலில் இருந்த வேதனையே ரகுவை துடிக்க வைத்தது. அவன் வாடிய முகம் பார்த்தவள், “பேச முடியல ரகு என்னால” என்றாள் எச்சில் கூடி விழுங்கி.

உடனே எழுந்து அருகில் இருந்த பிளாஸ்க்கில் தண்ணீரை எடுத்தவன் ஸ்பூன் கொண்டு அவளுக்கு மெல்ல மெல்ல தண்ணீரை கொடுக்க கதவை திறந்து வந்த நர்ஸ் கையில் அவர்கள் புதல்வி,

“ஆண்ட்டி எனக்கு.. ஆண்ட்டி எனக்கு பாப்பா” என அவர் பின்னால் வால் பிடித்து பேரனையும் அனுப்பி வைத்திருந்தார் கார்த்திகா.

உள்ளே மருமகளை பார்க்க வந்த கார்த்திகா மெல்ல கதவை திறக்க மகன் மருமகளின் தனிப்பட்ட நேரத்தை பார்த்து வந்த தடயமே தெரியாமல் கதவை மூடி சென்றுவிட்டார்.

அடுத்த சில நொடிகளிலேயே குழந்தையை குளிக்க வைத்து எடுக்க வேண்டிய சில பரிசோதனைகளை செய்து குழந்தையை முதலில் அவள் தப்பான கையில் ஏந்தட்டும் என மகனிடம் கொடுக்க கூறி, ‘உன் பாப்பா வேதவ் குட்டி’ என்று குடும்ப நேரமாக மாற்றி அவனையும் அனுப்பிவிட்டார்.

உள்ளே வந்த செவிலியர் தன் பின்னே வந்த வேதவை சிரிப்போடு பார்த்து, பின் திவ்யாவிடம், “உங்க முதல் பையனா?”

கண்களில் ஆசை மின்ன குழந்தையிடமிருந்து பார்வையை அகற்றாது வந்த மகனை ரசித்து பார்த்தவள் ஆமாம் என தலையை ஆட்ட தன்னிடம் குழந்தையை கொடுக்க வந்த செவிலியரிடம், “அவர்கிட்ட குடுங்க”

ரகுவை அவள் கை காட்ட, அதனை புரிந்து கொண்ட வேதவ் ஓடி சென்று தந்தை மடியில் அமர்ந்துகொண்டான்.

“அப்பா நாம ஒண்ணா பாப்பாவ வாங்கலாம்” நல்ல பிள்ளையாக தந்தையிடம் ஒட்டிக்கொண்டான்.

ரகுவும் சிரிப்போடு மகனை ஏதுவாக மடியில் வைத்து அந்த குட்டி பொக்கிஷத்தை பக்குவமாக கையில் வாங்க, பஞ்சு போன்ற பிஞ்சு அவளை கையில் வாங்கிய ரகுவின் கண்கள் மேலும் கலங்கியது.

“திவ்யா பயமா இருக்குடி”

நடுக்கத்தோடு குழந்தையை அவன் யோசனையாக பார்க்க, “ப்பா கீழ பிடிங்க ப்பா” தந்தைக்கு வழிகாட்டினான் தனயன்.

“எப்படிடா” மகனை கேள்வி கேட்டு ரகு மெதுவாக குழந்தையை கீழே பிடிக்க, “ஆமா ப்பா அப்டி தான்” தனக்கு ஏதுவாக குழந்தையை பிடிக்க உதவி செய்தான்.

“அப்பா நான் பாப்பா கை தொட்டு பாக்கவா?”

ரகு, “ம்ம்ம்” என அனுமதி கொடுக்க பட்டும் படாமல் அந்த குட்டி கரத்தை வேதவ் தொட, என்ன தோன்றியதோ அந்த பிஞ்சுக்கு, மெல்ல சினுங்க துவங்க பதறிய வேதவ்,

“ப்பா நான் இல்ல ப்பா, ம்மா நான் பாப்பாவை எதுவும் பண்ணல” தானாக பயத்தில் உளறிய மகனை அத்தனை நேரம் சிரிப்போடு பார்த்தவள் ரகுவின் பிடியை மாற்றி வைத்து குழந்தையை தட்டிக்கொடுக்க அவள் அழுகையை நிறுத்தி மீண்டும் உறங்க ஆரம்பித்துவிட்டாள்.

“பாத்தியா வேதவ், பாப்பா உன்ன மாதிரியே இருக்கா”

“ஏய் என் புள்ள என்ன மாதிரிடி, உன் மகனை மாதிரி இல்ல” சண்டைக்கு வந்தான் ரகு.

“என்ன மாதிரி ப்பா” என்றான் மகனும் ஒன்றும் புரியாமல் அன்னையின் வார்த்தையை பின்பற்றி.

“டேய் என் புள்ளைக்கு மூக்கை பாரு அப்டியே கிளி மூக்கு மாதிரி, இங்க என் மூக்கை பாரு” தன்னுடைய மூக்கை தூக்கி காட்டினான்.

“ஆமாப்பா” என்ற மகன், “ஆனா பாப்பா வைய்ட்டா இருக்கே ப்பா” என்றான் மொத்தமாக காலை வாரி.

திவ்யா வயிற்றை பிடித்து சிரித்துவிட மகனையும் மனைவியையும் ரகு முறைக்க, வேதவ் அன்னையை பார்த்து சிரிக்க என அந்த அழகிய நினைவு பிரபுவின் கைபேசியில் அழகான புகைப்படமாக மாறி போனது.

மாமனால் அதற்கு மேல் புதிதாக பிறந்த குழந்தையை பார்க்காமல் இருக்க முடியவில்லை உள்ளே வந்தவன் அவர்களின் அழகிய நினைவுகளை உடனே புகைப்படம் எடுத்துக்கொண்டான்.

வெளியில் ரகுவை பிடிக்காது என அவனை எந்நேரமும் முறைத்தாலும், தங்கையை அவன் கவனிக்கும் அன்பில் மெல்ல மெல்ல அவன் மேல் மரியாதை வர தான் செய்தது.

அதை வெளியிலும் அவனிடம் நேரடியாக காண்பிக்க முடியவில்லை. ஆனால் ரகு வீட்டிற்கு வந்தால் அவனுக்கு பிடித்த அத்தனையும் அன்று விருந்தாக, சிற்றுண்டியாக அவன் முன்னே சென்று நின்றுவிடும்.

வீட்டின் ஒரே மாப்பிள்ளை அல்லவா?

“என் மாப்பிள்ளை தான் பாய்ண்ட் பாய்ண்டா பேசுவான்” பேச்சை எடுத்து உள்ளே வந்தான் பிரபு.

“டேய் உன்ன யார் இங்க வர சொன்னது”

“அப்டி தான் நான் வருவேன்னு உன் அப்பாகிட்ட சொல்லு மருமகனே” வேதவிடம் தூதுவிட்டான் பிரபு.

“அப்டி தான் மாமா வருவார்களாம் ப்பா”

“எனக்கு கேட்டுச்சு மகனே” மகனை ரகு பொய்யாக முறைக்க மொத்த குடும்பமும் ஒவ்வொருவராக உள்ளே வந்து பிறந்த குழந்தையை பார்க்க அந்த நாளே அழகாக மாறிப்போனது.

திவ்யா அடிக்கடி ரகுவை பார்க்க தன்னிடம் ஏதோ கேட்க வரும் மனைவியை உணர்ந்தவன் அவளை மெல்ல படுக்க வைத்து அவள் அருகிலே அமர்ந்துகொண்டான் நகராமல்.

தூக்க காலத்தில் திவ்யா உறங்கவும் குழந்தையை தான் பார்த்துக்கொள்வதாக ரகு கூற மற்ற அனைவரும் காலை உணவிற்கு வெளியே செல்ல குழந்தையின் கையில் தன்னுடைய சுண்டு விரலை கொடுத்து அதனை சிரிப்போடு பாரதிர்ந்தவன் அப்படியே உறங்கிவிட்டான் இரவெல்லாம் உறக்கம் இல்லாத களைப்பில்.

அந்த நேரம் திடீரென குழந்தையை எண்ணி கண் விழித்த திவ்யா, ரகுவை போல் சகோதரியின் கை பற்றி அவளை பார்த்திருந்தான் வேதவ்.

“சாப்பிட்டியா வேதவ்?”

“ஷ்ஷ்…” வாயில் கை வைத்து சகோதரி, தந்தையை மகன் காட்டி அமைதியாக இருக்க கூற, திவ்யாவுக்கு சொல்ல முடியாத நிம்மதி.

வாழ்க்கையில் கிடைக்க வேண்டிய அனைத்தும் தன் கையில் இருக்கும் நிம்மதி. அன்பான கணவன், அழகு அறிவு நிறைந்த அங்கு குழந்தை, தேவதை போல் ஒரு பெண், ஒரு துன்பமெனில் நொடியில் ஓடி வந்து நிற்கும் சகோதரர்கள், அன்னையை ஒத்த மாமியார், பெற்றோர் என அவள் வாழ்க்கை ஒரு இடத்தில் கூட தேங்காது அழகான நீரோடையை ஓடிக்கொண்டே உள்ளது.

இதை விட என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு?

அழகிய இலக்கணமே வாழ்க்கையை உருமாறி பொலிவானது அவள் எதிர்காலம். ஓர் அழகிய கானா முரண் இல்லா கவிதையாய் உருமாறி அவர்களை அணைத்துக்கொண்டது.

நன்றி…

அடுத்த கதையின் தலைப்பு ‘கடல் சேர்ந்த நாணல்’ நல்லா இருக்கா டைட்டில்?

இந்த கதையின் முதல் பதிவு திங்கள் அன்று வரும்…

எபிலாக் எப்படி இருக்கு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!