Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

En Nila Thozhikku

En Nila Thozhikku 32 1

 

                                                                                

                                     32

     தேர்வு முடித்து பிள்ளைகள் கொடுத்த விடைத் தாள்களை வாங்கி அடுக்கிக் கொண்டிருந்த நிலாவிடம், பள்ளியில் வேலை பார்க்கும் ஆயாம்மா ஒருவர் வந்து தலைமை ஆசிரியர் அழைப்பதாகக் கூற, “இதோ வருகிறேன்!” என்றவள், பிள்ளைகளிடம் பேசாமல் அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு, தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றாள்.



Advertisement

      அங்கு ரஞ்சன் அமர்ந்திருப்பதைக் கண்டதும், “இவன…?!” என்று மனதுக்குள் எழுந்த எரிச்சலைக் கட்டுப் படுத்திக் கொண்டு,

     “எக்ஸ்கியுஸ் மீ மேம்!” என்று அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தாள்.

     “வாங்க நிலா!” என்றவர், அவளைப் புன்னகையுடன் வரவேற்று அமரச் சொன்னார்.

Advertisement

     “வாழ்த்துக்கள் நிலா..!” என்று அவர் சொன்னதும், இவன் எல்லாவற்றையும் கூறியிருப்பான் என்று உணர்ந்து கொண்டவள்,

Advertisement

     “தாங்க யூ மேம்!” என்றாள்.

     “நீங்க சின்சியர்னு எனக்குத் தெரியும், ஆனா செக் அப்க்கு கூட போகாம ஸ்கூல்லுக்கு வந்திருக்கீங்களே..?!” என்று வியந்து கேட்க,

     “அது… ஈவினிங் போகலாம்னு இருந்தேன்…!” என்று அவள் சமாளித்தாள்.

Advertisement

     “நோ நோ இந்த விஷயத்தில் எல்லாம் டிலே பண்ணக் கூடாது, நீங்க உடனே கிளம்புங்க. நான் உங்க வகுப்புகளுக்கு சப்ஸ்ட்டிடியுட் டீச்சர் போட்டுடறேன்” என்று அவர் சொல்ல, வேறு வழியின்றி நிலா அவருக்கு நன்றி கூறி விடைபெற்று அவனுடன் கிளம்பினாள்.

     பள்ளியை விட்டு வெளியேறும் வரை இன்முகத்துடன் வந்தவள், காரில் ஏறியதும், “எதுக்கு இப்படி ஓவர் ஆக்டிங் பண்ற?!” என்றாள் முகத்தை கடுகடுவென வைத்து.

      “ம்!” என்ற சிறு சிரிப்புடன் அவன் ஏதும் பேசாமல் நிறுத்திக் கொண்டான்.

     “திடீர்னு ஏன் இவ்ளோ அக்கறை?! ஓ! உன் பிள்ளை என் வயத்தில வளரதுனாலயா?!” என்று அவள் புருவம் உயர்த்திக் கேட்க, அப்போதும் அவன் வாய் திறக்கவில்லை.

     “நான் ஒருத்தி இங்க கேட்டுகிட்டு இருக்கேன்!” என்று அவள் சற்றே குரல் உயர்த்த,

     “பதில் உனக்கேத் தெரியும்!” என்றதோடு நிறுத்திக் கொண்டான்.

     “என்ன என்ன பதில் தெரியும்?!” என்று அவள் பொரிய,

     “இப்படி எண்ணையில போட்ட பச்சை மிளாகாய் மாதிரி வெடிக்காம, நீயே யோசிச்சுப் பாரு புரியும்!” என்றான் பாதையில் கவனத்தைச் செலுத்தியபடியே.

     “நான் நான் பச்சை மிளகாயா?! அப்ப நீ?!” என்று சிலிர்க்க,

      “சும்மா சும்மா டென்ஷன் ஆகாதா பேபி… பிபி ரேஸ் ஆகிடப் போகுது! அப்புறம் உன் வயத்துல இருக்க என் பேபிக்கு ஆகாதுல்ல?!” என்று அவன் பொறுமையாய் சொல்ல, சற்றே நிதானமடைந்தவள்,

     ‘நேத்து வரைக்கும் நான் பேபி, இப்போ அவன் பிள்ளை பேபியாகிட்டான்!’ என்று உள்ளுர அவளுக்கு சற்றே பொறாமைக் கிளம்ப,

     ‘ஏய்… உண்மையாவே நீ அவன் மேல கோபமா இருக்கியா?! இல்லை சும்மா சீன் போடறியா?!’ என்று சீண்டியது அவள் மனம்.

     ‘ஹான் அது அது கோபமா?! அதெல்லாம் நேத்து அவன் என் பையன்கிட்ட சொல்லி, என்னைச் சமாதானப் படுத்தினப்பவே போயிடுச்சு!’ என்று அவள் பதில் கொடுக்க,

      ‘சீ இவ்ளோதான உன் ரோஷம்?!’ என்று அவள் மனம் அவளைக் குதறியது.

     ‘என் புருஷன்கிட்டே எனக்கென்ன ரோஷம்? அவன் மனசு எனக்குத் தெரியாதா?! பாவம் என் GEM, ஏதோ டென்ஷன்ல இருந்திருப்பான்! அந்த டென்ஷன்ல ஏதோ தெரியாமப் பேசிட்டான்! அவன் கோபத்தை என்கிட்டே வெளிப்படுத்தாம வேற யார்கிட்ட வெளிப்படுத்துவான்?!’ என்று அவள் எதிர்கேள்வி கேட்க,

     ‘ம்! நல்ல புருஷன், நல்ல பொண்டாட்டி..!’ உங்களுக்கு நடுவுல இனி வரவே கூடாது ப்பா..!’ என்ற மனம், ‘கடைசியா ஒருகேள்வி கேட்டுக்கட்டுமா?!’ என்றது.

     ‘சரி சரி எதுவாயிருந்தாலும் சீக்கிரம் கேளு!’ என்று அவள் அனுமதி அளிக்க, ‘எல்லாம் என் நேரம்!’ என்று முனகிவிட்டு,

     ‘அதான் உனக்கு ரோஷமே இல்லன்னு ஆகிப் போச்சுல்ல?! அப்புறம் எதுக்கு இந்த வெட்டி சீன்?! அவன்மேல கோபமா இருக்க மாதிரி?!’ என,

     ‘அது… என்ன இருந்தாலும் அவன் பேசின வார்த்தைத் தப்பு இல்ல.. எப்பப் பாரு இப்படி புரிஞ்க்காம வார்த்தையை விடறது! அப்புறம் ஸாரிம்மா பூரிம்மான்னு கொஞ்சுறது! இனி ஒருதரம் அவன் இப்படிச் செய்யக் கூடாது! அதுக்கு கொஞ்ச நாளாவது அவன் படட்டும்!’ என்று அவள் சொல்ல,

     ‘ஆள விடுங்கடா சாமி..!’ என்று கும்பிடுபோட்டு விடைபெற்றது அவள் மனம்.

     ரோட்டில் கவனம் செலுத்தியபடியே, “என்ன செம டிஸ்கஷன் போல?!” என்றான் ரஞ்சன்.

     “என்ன என்ன டிஸ்கஷன்?!” என்று அவள் துள்ள,

     “அதான் பத்து செகண்ட்ல நூறு ரியாக்ஷன் கொடுக்கிற உன் முகத்தை பார்த்தாலே தெரியுதே?! மனசுல ஏதோ பெரிய டிஸ்கஷன் போயிருக்கும்னு!” என்று அவன் வார,

     “ஹாஹா.. பெரிய கண்டுபிடிப்பு?!” என்றவள், அவன் புறமிருந்த கண்களை விலக்கி வெளியில் கவனத்தைச் செலுத்தலானாள்.

     மருத்துவமனைக்குச் சென்று திரும்பிய பின், டாக்டர், அவள் வீக்காக இருப்பதால், ஒரு மாதம் பெட் ரெஸ்டில் இருக்க வேண்டும் என்று சொன்னதன் பொருட்டு, ரஞ்சன் அவள் பள்ளிக்கு, போனில் அழைத்து விவரம் சொல்லி, முதல்வரிடம் பேசி அவளுக்கு ஒரு மாதம் விடுப்புக் கோர, அவரும் அனுமதி கொடுத்துவிட்டார்.

     “நீ பாட்டுக்கு போன் பண்ணி லீவ் சொல்லிட்ட?! எனக்கும், எம் பிள்ளைக்கும் செலவுக்கு நான் எங்க போறதாம்?!” என்று அவள் கோபத்துடன் கேட்க,

     “என் பொண்டாட்டி, பிள்ளைக்கு செலவு பண்ணக் கூட வக்கில்லாதவன்னு என்னை நினைச்சிட்டியா?!” என்றான் அவனும் காட்டமாகவே. அதன் பின் அவள் எங்கு பேசவது?!

     அதன் பின் வந்த இரண்டு நாட்கள், இப்படியே அவள் முறைத்துக் கொண்டும், அவன் மிரட்டிக் கொண்டும் கடந்தது.

     அன்று மாலை ரஞ்சன் வீட்டிலுள்ள அனைவரும், ஹாலில் ஒன்றாகக் கூடி அமர்ந்து, மறுநாள் செல்லவிருக்கும் டூர் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு மாதத்திற்கு முன்பே இராமநாதன், காமாட்சி, ராதா, கிருஷ்ணன் நால்வரும் காசி, ராமேஸ்வரம் மற்றும் சில இடங்களுக்கு டூர் செல்ல ஏஜென்சி மூலம் டிக்கெட் புக் செய்திருந்தனர். 

     இப்போது, மருமகள்கள் கர்ப்பமாக இருப்பதால் அடுத்த வருடம் செல்லலாம் என்று பெரியவர்கள் நினைக்க, மருமகள்கள் இருவரும், ‘கோவிலுக்குச் செல்வதைத் தள்ளிப் போட வேண்டாம், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று சொல்லி அவர்களை சமதானப் படுத்தி கிளம்ப ஆயத்தம் செய்திருந்தனர்.

     “உங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டுப் போக மனசே வரலைம்மா…! பேசாம ஒண்ணு செய்யுங்களேன், நீங்க ரெண்டு பேரும் உங்க அம்மா வீட்டுக்குப் போய் ஒரு நாலு நாள் தங்கிட்டு  வாங்களேன்!” என்றார் காமாட்சி.

     யாஷினி நிருவைப் பார்க்க, அவன், “ம்!” என்று தலையசைத்து அனுமதி கொடுத்தான்.

     “ஹான் ஓகே பாட்டி…!” என்று யாஷினி சொல்ல,

     “நீ நிலாம்மா..?!” என்றார் காமாட்சி.

      ‘எனக்குமே ஆசையாதான் இருக்கு! ஆனா அவன்ட்ட கேட்டா… ‘போ பேபி… ஆனா சாயந்திரம் நான் வீட்டுக்கு வர்றதுக்குள்ள வந்திடு!’ ‘அப்படின்னு சொல்லும்!’ என்று அவள் மனதுள் முனக,

     “அவளும் போயிட்டு வரட்டும் பாட்டி…!” என்றான் ரஞ்சன் தன் மனைவியின் மனதைப் படித்தவனாய்.

     “என்னடா இது?!” என்று அவள் வாய்பிளந்து யோசிக்க,

     “நானும் நாளைக்கு சிங்கப்பூர் கிளம்பறேன்! அங்க நம்ம நியூ பிரான்ச் ஓபன் பண்ற விஷயமா அவங்க கவர்மேன்ட்கிட்ட சில ஒப்புதல்கள் வாங்க வேண்டியிருக்கு!” என்று அவன் சொல்ல,

    ‘அதானே பார்த்தேன்! ஹப்பா… ஒரு நாலு நாளாவது நிம்மதியா இருக்கலாம்’ என்று நிம்மதி கொள்ள நினைத்தவளுக்கு, அதற்கு மாறாக, ‘சிங்கப்பூர் போறதை பத்தி ஒருவார்த்தை சொன்னானா என்கிட்டே?!’ என்று கோபம்தான் வந்தது.

     இரவு உணவு முடிந்ததும், தன் அறைக்குச் சென்றவள், ஏதோ ஓர் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அமர்ந்து கொண்டாள்.

     அவன் வந்ததை அறிந்தும் அறியாதவள் போல் அவள் புத்தகத்தில் மூழ்கியிருக்க, அவள் அருகே வந்து அமர்ந்தவன்,

     “அப்பா சிங்கப்பூர் போறதைப் பத்தி சொல்லலைன்னு அம்மா ரொம்ப கோபமா இருக்காங்களோ?! கேட்டு சொல்லுடா பட்டு…!” என்று பிள்ளையிடம் பேசுவது போல் அவளிடம் கேட்க,

     “நான் யாரு அவர் மேல கோபப் படறதுக்கு! அவர் சிங்கப்பூர் போகட்டும், இல்ல கோலாலம்பூர் போகட்டும்! எனக்கென்ன வந்துச்சு!” என்றாள் தன் கயல் கண்களில் கணை தொடுத்து. 

     “அய்யோ?! என்ன… கோபம் வருது உன் அம்மாவுக்கு?!” என்று பயந்தவன் போல் சொன்னவன், மெதுவாக அவள் கையைத் தன் கையில் எடுத்துக் கொள்ள, அவள் தன் கைகளை உருவ முயன்று முடியாமல் அவன் கைகளுக்குள் கட்டுண்டாள்.

     “ஜஸ்ட் ஒன் வீக்தான் டா.. வந்துடுவேன்!” என்று அவன் சொல்ல,

     ‘ஒன்…. வீக்….??!! வீட்ல எல்லோரும் டூருக்குப் போகிற இந்த நேரத்துல கர்ப்பமா இருக்க பொண்டாட்டியை தனியா விட்டுட்டுப் போறோமேன்னு கொஞ்சமாவது கவலையிருக்கா…?! ஒன்வீக்  தானாமாம்!’ என்று பொருமினாள் மனதுள்.

     “முக்கியமான வேலைடா.. மத்த யார் இதை ஹாண்டில் பண்ணாலும் சீக்கிரம் வேலை முடியாது. அதான் நானே போறேன்!” என்று அவன் சமதானமாய் கூற,

     “எனக்குத் தூக்கம் வருது. கையை விடறியா?!” என்று அவள் சொல்ல, சிறு புன்னகையுடன் அவள் கையை விடுவித்தான்.

     மறுநாள் காலை இராமநாதன், காமாட்சி, ராதா, கிருஷ்ணன் நால்வரும் கிளம்பிவிட, ரஞ்சனுக்கு அன்று இரவு பத்து மணிக்கு பிளைட் என்பதால், ஏழு மணியளவில் கிளம்ப ஆயத்தமானான்.

     நிரு, அவன் கிளம்பிவிட்டானா என்று பார்ப்பதற்காக, ரஞ்சுவின் அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வர, நிலா சோபாவில் உர்ரென்று அமர்ந்திருப்பதைக் கண்டு,

     “என்ன ரஞ்சு ஊருக்குப் போறான்னு கோபமா?!” என்றான் நிரு அவள் அருகே வந்து அமர்ந்து.

     “அதெல்லாம் இல்ல…!”  என்று அவள் சொன்ன விதத்திலேயே அதுதான் என்று புரிந்தது.

     “ரெண்டு பேரும் மறுபடியும் முட்டிகிட்டீங்களா?!” என்று நிரு கேட்க,

     “இப்ப என்ன பிரச்னை உனக்கு?! புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல ஆயிரம் பிரச்சனை இருக்கும்! அதெல்லாம் உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க முடியாது!” என்று ரஞ்சன் மீது இருந்த கோபத்தையெல்லாம் படபடவென இவன் மீது கொட்டினாள்.

     “ம்! முன்னல்லாம் அவன்தான் சிடுசிடுன்னு இருப்பான்! இப்பல்லாம் நீ அவன் செராக்ஸா மாறிட்ட?!” என்று நிரு சொல்ல, அவள் முறைப்பை பரிசாய்த் தந்தாள்.

     “ஓகே ஓகே கூல்…!” என்று அவன் சமாதானப் படுத்தவும், ரஞ்சன் குளித்து விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.

     “மணி ஏழு அஞ்சு ஆகுது. சீக்கிரம் டீச்சரம்மாவை சமாதானப் படுத்திட்டு ரெடியாகி வந்து சேருப்பா…!” என்று சொல்லிவிட்டு நிரு வெளியேற,

     ‘ஹாஹா.. அவனையும் ஒரு வழிபண்ணியிருப்பா..!’ என்று நினைத்து சிரித்துக் கொண்டே தயாரானான்.

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!