அவன் தயாராகி கிளம்பும் நேரம் அவள் முகம் அவளையும் மீறி வாட்டத்தை வெளிப்படுத்திவிட,
“டோன்ட் வொரி பேபி… ஒன் வீக்தான்! இப்படிங்கிறதுக்குள்ள ஓடிடும்! அதுவரைக்கும்….” என்றவன், அவளை இறுக அணைத்து, ஓர் நீண்ட முத்தத்தைப் அவன் நினைவாய் பதித்துவிட்டு, பிரிய மனமின்றி விடைபெற்றான்.
ரஞ்சன் அங்கு சென்ற பின், அவளுக்கு போன் மூலம், தான் நல்லபடியாக அங்கு சென்றுவிட்டதைத் தெரியப் படுத்த, அவன் சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டு, வேறேதும் பதில் கூறாமல், “ம்!” என்ற ஒற்றை வார்த்தையோடு போனை வைத்துவிட்டாள். அதன் பின் அவள், அவன் போனை அட்டென்ட் செய்யவுமில்லை அவன் அனுப்பிய குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பவும் இல்லை.
“ரொம்ப பிடிவாதம்!” என்று வாய்விட்டுப் புலம்பியவன், “சரி நாளை பேசுவோம்” என்று தனக்கென புக் செய்திருந்த ஹோட்டல் அறைக்குச் சென்று ஓய்வெடுத்தான்.
ஆனால் மறுநாள் அல்ல, அவன் வீடு திரும்பும் வரை அந்த வரட்டுப் பிடிவாதக்காரி போனை எடுக்கப் போவதேயில்லை என்று அப்போது அவனுக்குத் தெரியவில்லை!
ரஞ்சன் கிளம்பிய மறுநாள், நிரு, யாஷினியை அவள் தந்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட, நிலாவும் தன் தாய் வீட்டிற்குச் சென்றாள்.
திருமணமாகி இப்போதுதான் மகள் தங்கள் வீட்டில் வந்து தங்குகிறாள் என்று வேணி மகளுக்குக்காகப் பார்த்துப் பார்த்துச் சமைத்துப் போட்டார்.
ஆனால் அவளால்தான் அதனை விரும்பி உண்ணமுடியவில்லை. மன்னவனின் நினைவும், மசக்கையும் அவளை வாட்டி எடுத்தன.
அவள் அடிக்கடி சோர்ந்து அமர்ந்திருப்பதைக் கண்ட பெற்றோர், மசக்கையின் காரணமாகவே அவள் அப்படி இருக்கிறாள் என்று நினைத்திருக்க, இவளோ தேவையற்றதை எல்லாம் எண்ணி மனதைக் குழப்பிக் கொண்டிருந்தாள்.
ரஞ்சன் போன் செய்யும் போதெல்லாம், அவள் போனை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று விட, அவள் தனிமையில் பேச விரும்புகிறாள், என்று எண்ணி வேணியும், வெங்கடேசனும் நினைத்துக் கொண்டனர். இருந்தாலும் எப்போதுமே அவள் அப்படிச் செய்வதைக் கண்ட வெங்கடேசனுக்குச் சற்றுச் சந்தேகம் எழ,
தாயின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த, நிலாவின் அருகே வந்தமர்ந்து, அவள் தலையை மெல்ல வருடி, “நிலாம்மா… நீ சந்தோஷமாயிருக்க இல்லை?!” என்றார்.
‘அட கண்டுபிடிசிட்டாரே?!’ என்று எண்ணியவள், உடனே தன் மனதைச் சமாளித்துக் கொண்டு,
“எனக்கென்ன ப்பா… உங்க மாப்பிள்ளை என்னை ராணி மாதிரி வைச்சுப் பார்த்துக்கறாரு!” என்றவளின் கண்கள் தன்னை மீறிக் கலங்கிவிட,
“என்னங்க நீங்க?! முதல் முறையா மாப்பிள்ளை அவளைத் தனியா விட்டுட்டு ஊருக்குப் போயிருக்காரு இல்ல.. அதான் பிள்ளை இப்படி வாடி இருக்கா…!” என்றார் வேணி.
“ம்! இருக்கும் இருக்கும்! இந்தப் பெண் பிள்ளைங்களுக்கு கல்யாணம் ஆகுற வரைதான் அப்பா, அம்மா பாசமெல்லாம்! அப்புறம் புருஷன்தான் முக்கியம்!” என்று அவரும் சொல்ல,
“அப்பா..!” என்று அவள் சிணுங்கி, அவர் சொன்னது உண்மை என்று நிரூபித்தாள்.
ரஞ்சன் ஒவ்வொரு முறை போன் செய்யும் போதும், போனை அட்டென்ட் செய்யாமல் அவனை வாட்டி வதைத்தவள், அன்று அவன் வரும் நாளன்று தன் தாய், தந்தையிடம் சென்று,
“அம்மா… அப்பா.. நான் எங்க வீட்டுக்குக் கிளம்பறேன்.. அவர் வர நேரத்தில நான் அங்க இல்லன்னா அவர் வருத்தப்படுவார்!” என்க, வெங்கடேசன் மனதில் இருந்த சிறு சஞ்சலமும் நீங்கியது. இருவரும் மனநிறைவோடு மகளை வழியனுப்பி வைத்தனர்.
அன்று இரவு பதினொரு மணியளவில், தங்கள் அறையிலிருந்த சோபாவில் அமர்ந்தபடி, “ஒன்பது மணிக்கு பிளைட் லேன்ட் ஆகியிருக்கும். இப்ப மணி என்ன ஆகுது?! பதினொன்னு!”
“ஒருவாரம் ஆச்சே?! பொண்டாட்டி நம்மள பார்க்காம எவ்ளோ துடிச்சுப் போயிருப்பான்னு கொஞ்சமாவது நினைப்பிருக்கா?!” என்று போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்த தன் கணவனை வருத்தெடுத்துக் கொண்டிருந்தாள் நிலா.
“சிரிக்காத… சிரிச்சு சிரிச்சே என்னை மயக்கிடுறது!” என்றவள், தங்கள் இருவரின் புகைப்படங்களையும் தாங்கியிருந்த அந்த போட்டோ ஃபிரேமை கையில் எடுத்து,
“சிரிக்காதன்னு சொல்றேன்ல..!” என்று புகைப்படத்தில் இருந்தவனின் தலையில் குட்டியவள், நொடியில் கோபத்தைக் கைவிட்டு, ஏக்கதிற்குத் தாவி,
“ஒரு வாரம் ஆச்சு உன்னைப் பார்த்து! இங்க இருந்தா.. அட்லீஸ்ட் உன் குரலையாவது கேட்டுகிட்டு இருப்பேன்! சீக்கிரம் வந்திடு என்ன?!” என்று சொல்லி அவன் நிழலுக்கு முத்தமிட்டுத் தன் அன்பைக் காட்டினாள்.
ஆனால் மேலும் ஒரு மணிநேரம் சென்ற பின்னும், அவள் பொறுமையை சோதிக்கும் வண்ணம் அவன் வீடு வந்து சேராமலிருக்க, அவள் நிருவின் கைப்பேசிக்கு அழைத்தாள்.
அவன் போனை எடுத்ததும், “எங்கிருக்க?!” என்றாள்.
“என்னடி கேள்வி இது ஏர்போர்ட்லதான்!” என்று அவன் சொல்ல,
“ஏன் இன்னும் கிளம்பல?! நைட் முழுக்க அங்கேயே உட்கார்ந்திருக்கறதா உத்தேசமா?!” என்று அவள் கேட்க,
“பிளைட் டூ ஹார்ஸ் டிலே..! கொஞ்ச நேரம் முன்னாடிதான் அவன் வந்து இறங்கினான். இன்னும் அஞ்சு நிமிஷத்துல கிளம்பிடுவோம்!” என்று நிரு சொல்ல, அவள் பட்டென போனை வைத்துவிட்டாள்.
“டேய்… இன்னும் உங்க சண்டை தீரலையா?! என்னதான் டா பிரச்சனை உங்க ரெண்டு பேர்க்கும் நடுவுல… அவ ப்ரேக்னன்ட்டா இருக்க இந்த நேரத்துல அவளை டென்ஷன் பண்ணாதடா…!” என்று நிரு கவலையுடன் சொல்ல,
“ஹாஹா நான் அவளை டென்ஷன் பண்றேனா?! நல்ல ஜோக்!” என்று ரஞ்சன் சிரிக்க,
“டேய் சீரியஸா சொல்றேன்டா.. நீ என்னன்னா சிரிச்சிக்கிட்டு இருக்க?!” என்று நிரு முறைக்க,
“அதெல்லாம் ஒண்ணுமில்லடா… அவ கோபம் எந்த மட்டும்?!” சீக்கிரமே சரியாகிடுவா..!” என்று ரஞ்சன் சொல்ல, நிரு சற்று சமாதானம் ஆனான்.
வெகு நேரம் கண்விழித்து உட்கார்ந்திருந்ததால் உடல் சற்றே சோர்ந்து போக, சற்று நேரம் படுப்போம் என்று நினைத்துப் படுத்தவள், அவன் வருவதற்கு முன், தன்னையறியாமல் உறக்கத்தைத் தழுவியிருந்தாள்.
வீடு திரும்பிய ரஞ்சன், அவள் நல்ல உறக்கத்தில் இருப்பதைக் கண்டு, சில நொடிகள் அவள் நிலா முகத்தில் தன்னைத் தொலைத்து மீண்டு, ஓசைப் படாமல், தனது உடமைகளை வைத்துவிட்டு உடைமாற்றிக் கொண்டு வந்து அவளருகில் அமர்ந்தான்.
களைப்பினாலும், மனப் போராட்டங்களினாலும், ஆழ்ந்த உறக்கத்தைத் தழுவியிருந்த தன்னவளின் வாடிய முகத்தைக் கண்டு உருகிப் போனவன், மெல்ல அவள் அருகே சாய்ந்தமர்ந்து அவள் தலையைக் கோதிக் கொடுத்தபடியே,
“ஏன்டி.. ஏன்டி… என்னையும் இப்படிக் கஷ்டப்படுத்தி, உன்னையும் இப்படி வேதனைப் படுத்திக்கிற?!” என்றான்.
“ஒரு வாரமா உன் குரலைக் கூட கேட்க முடியாம எவ்ளோ தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா?!” என்றவன், அவள் இமைசிறகில் வீழ்ந்திருந்த அவளின் முடிக்கற்றையை ஒதுக்கி விட்டு,
“எனக்குத் தெரியும்டி.. உனக்கும் அந்த தவிப்பு இருந்திருக்கும்! ஆனாலும் ஏன்டி இவ்வளவு பிடிவாதம் உனக்கு…?!” என்று அவள் முகம் பார்த்துக் கேட்டுவிட்டு,
“அன்னிக்கு… நான் உன்னை அப்படிப் பேசினதுக்காக ஒவ்வொரு நொடியும் நான் எவ்வளவு வருத்தப்படுறேன் தெரியுமாடி.. எனக்கே என்மேல ரொம்ப வெறுப்பு வருது… அப்படியிருக்கும்போது, நீ என் மேல் கோபமாயிருக்கிறது நிச்சயம் நியாயம்தான்! ஆனா…
ஆனா என்னால தாங்க முடியலடி… உன்னோட விலகல் என் மனசை ரொம்பவே ரணப்படுத்துது! என்னை மன்னிக்கவே மாட்டியாடி…?!” என்று கேட்டு நிறுத்தியவனின் கண்கள் நீரில் நிறைந்தன.
சில நொடிகள் இடைவெளிவிட்டு, “சினிமாக்கள் லையும், கதைகள் லையும், காதலிக்கிறவங்க எல்லோரும், நான் உன்னை வானளவு நேசிக்கிறேன், கடலளவு நேசிக்கிறேன்னு சொல்வாங்க.. எனக்கு அப்படி எல்லாம் என் காதலை வெளிப்படுத்தத் தெரியலைடி…! ஏன்னா நான்.. உன் மேல வைச்சிருக்க நேசத்தை என்னால எதோடவும் ஒப்பிட முடியாது! ஒப்பிடவும் தெரியாது! ஆனா ஒண்ணு மட்டும் நிஜம்! நீ இல்லாம நான் வாழுற ஒவ்வொரு நொடியும் நான் இறந்ததுக்குச் சமம்!” என்று அவன் முடிக்க,
அவன் பேசப் பேச நீரால் நிறைந்து கொண்டிருந்த தன் விழி அணைகளைக் கட்டுப் படுத்த முடியாமல், வெள்ளமெனப் புரளவிட்ட மங்கை, காற்றும் புக முடியாத அளவு தன் மணாளனை இறுகத் தழுவி முத்தமழை பொழியத் துவங்கினாள்.
அவளின் முத்தமழையில் மூச்சுத் திணறிய கணவன், மெல்ல அவளை விலக்கி, “ஏய்… போதும் போதும் பேபி… உனக்கும் மூச்சு முட்டுது பாரு..! கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ! காலையில வரைக்கும் கன்ட்டினியு பண்ண வேணாம்?!” என்று புருவம் உயர்த்திச் சிரிக்க, அவன் மார்பில் செல்லமாய்க் குத்திவிட்டு, மீண்டும் முத்தங்களைக் கொண்டு யுத்தம் நடத்தத் தயாரானாள்.