Skip to content
Post Views: 3,540
33
ஒருவழியாக இருவரின் முத்தயுத்தமும் ஓர் முடிவுக்கு வந்து இருவரும் சமாதனம் ஆன பின், “கேடி… தூங்குற மாதிரி நடிச்சிக்கிட்டு இருந்தியா?!” என்றான் அவள் கன்னத்தில் கோலமிட்டபடியே.
“ஹும்! நான் ஒண்ணும் நடிக்கல, நிஜமாவே தூங்கிட்டேன். ஆனா நீ என் பக்கத்துல வந்து என் தலையைக் கோதிவிட்ட உடனேயே விழிப்பு வந்துடுச்சு! ஆனா எழுந்துட்டா… உன்னைத் தொட விடாம கையைத் தட்டிவிடனும், அதான் அப்படியே கண்மூடிப் படுத்திருந்தேன்!” என்று அவன் மார்பில் சாய்ந்தவள்,
Advertisement
“உனக்குள்ள இப்படி ஒரு காதல் மன்னன் இருப்பான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைடா..! நீ பேசப் பேச என்னால அழுகையைக் கட்டுப் படுத்தவே முடியலை தெரியுமா?! இவ்ளோ லவ் எப்பலயிருந்து?!” என்றாள் புருவம் உயர்த்தி.
“அது…?! இந்த குண்டு கண்ணை வைச்சு என்னை முறைச்சு முறைச்சு லவ் பண்ண ஆரம்பிச்சியே, அப்பலயிருந்தே!” என்றான் கண்சிமிட்டி.
“ஹான் அப்பவேவா?!” என்று அவள் வாய்பிளக்க,
Advertisement
“ம்!” என்று தலையசைத்தவன்,
Advertisement
“விட்டா நைட் முழுக்க நாம பேசிகிட்டே இருப்போம்! ரொம்ப டயர்டா தெரியிறடா… படுத்துத் தூங்கு..!” என்றான் தாயின் அக்கறையோடு.
“ம்!” என்றவள், நீண்ட நாள் இடைவெளியைத் தொலைக்கும் பொருட்டு, அவன் நெஞ்சமேனும் மஞ்சத்தில் பொன்நிலவாய் துயில் கொள்ள, மனம் திருடிய மலர்க்கொடியை மார்பில் சுமந்தபடியே மன்னவனும் துயில் கொண்டான்.
மாதங்கள் நீர்த் திவலைகளைச் சுமந்த கருமேகக் கூட்டங்கள் போல் வேகமாக நகர்ந்தன ஆனந்த மழை பொழிய.
Advertisement
ஓர் நிறைந்த நன்னாளில், ரஞ்சனின் தனிப்பட்ட முயற்சியால் உருப்பெற்றிருந்த அந்த அழகிய கிருஷ்ணாஸ் ஜவுளி மாளிகை, இராமநாதன், காமாட்சி தம்பதியரால் குத்துவிளக்கேற்றி துவங்கிவைக்கப்பட, வீட்டின் மற்ற உறுப்பினர்களும், மனநிறைவோடு அக்கடை திறப்பு விழாவில் பங்கேற்றனர்.
ரஞ்சனும், நிலாவும் மிகுந்த மனமகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். ரஞ்சன் தன்னவளையும், தன் குடும்பத்தினரையும், வந்திருந்த விருந்தினரையும், கடையின் ஒவ்வொரு பகுதிக்கும் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டி மகிழ்ந்தான்.
மும்பையிலிருந்து, ரஞ்சனின் அழைப்பிற்கிணங்க ரிஷியும் அங்கு வந்து சேர்ந்தான்.
அவன் வருகயைக் கண்ட ரஞ்சன், வேகமாய் அவனை நெருங்கி, “எப்படி இருக்க மச்சான்?!” என்று அணைத்துக் கொள்ள,
“நல்லாயிருக்கேன் டா…! நீ எப்படி இருக்க?!” என்றான் ரிஷியும்.
“நான் ரொம்ப நல்லாயிருக்கேன் டா…!” என்றவன், தன் மனைவியை நோக்கிக் கையசைத்து அழைத்தான்.
அவன் அழைப்பைப் புரிந்து கொண்டு அவனை நெருங்கிய நிலா, ரிஷி அங்கு வந்திருப்பதைக் கண்டு, வேகமாக நடந்து வர, “ஏய் ஒரு நிமிஷம் இருடா..” என்று ரிஷியிடம் சொல்லிவிட்டு, மனைவியை நோக்கி ஓடியவன்,
“மெதுவா நடந்து வா நிலா…! எப்படி மூச்சு வாங்குது பாரு?!” என்று நிறைமாதமாயிருந்த தன் மனைவியை கைப்பிடித்து அழைத்துவர, ரிஷியின் மனதிற்குள் நிம்மதி பரவியது.
‘ரொம்ப நன்றி கடவுளே.. பாருவைப் பிரிஞ்ச பிறகு அவன் இருந்த நிலைமையைப் பார்த்து, ரொம்பவே பயந்து போயிட்டேன்! இப்போதான் நிம்மதியா இருக்கு!’ என்று கடவுளுக்கு நன்றி கூறிய போது, ஏனோ, பாரு அவனிடம் வாங்கிக் கொண்ட சத்தியமும் நினைவு வந்தது.
அன்று ரஞ்சனிடம், பாரு அப்படிப் பேசிவிட்டுச் சென்ற பின், ரிஷிக்கும் அவள்மேல் கடும் கோபம் ஏற்பட்டது. அதனால் எப்படியாவது அவளைப் பார்த்து தன் கோபம் தீர அவளை நன்றாக நான்கு வார்த்தைக் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தவனுக்கு, அவள் திருமணம் நடந்து முடிந்த ஒரு மாதத்திற்குள், எதேச்சையாய் அவளைச் சந்திக்க நேர்ந்தது. அதுவும் ரஞ்சனும் அவளும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் அக்கோவிலிலேயே!
அவளைப் பார்த்ததும், அவளின் தங்கை உடன் இருக்கிறாள் என்பதைக் கூட மறந்து, ரிஷி அவளை வாய்க்கு வந்தபடி திட்ட, சகுந்தலா கோபம் கொண்டு அனைத்தையும் பட்டென்று போட்டு உடைத்துவிட்டாள்.
அதன்பின் ரிஷி, பாருவின் நிலையைப் புரிந்து கொண்டு அவளிடம் மன்னிப்புக் கேட்டு, “இருந்தாலும் நீ இப்படிச் செய்திருக்கக் கூடாது! அவன்கிட்ட உண்மையை சொல்லியிருந்தா அவன் நிச்சயமா இப்படி நடக்க விட்டிருக்க மாட்டான்” என்று சொல்ல,
“அவர் உயிரா? எங்க காதாலான்னு வரும்போது, எனக்கு அவர் உயிர்தான் பெரிதா தோணுச்சு அண்ணா…! அதுக்கப்புறம் ஒரு நொடி கூட என்னால தாமதிக்க முடியலை!” என்றவள்,
“அண்ணா… எக்காரணத்தைக் கொண்டும் ரஞ்சிக்கு இந்த விஷயம் தெரியக் கூடாது, அவர் தனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுகிட்டு நல்லபடியா வாழனும்! எனக்குத் தெரியும், கடவுள் நிச்சயமா என்னைவிட சிறந்த பெண்ணைத்தான் ரஞ்சிக்குத் துணையா தேர்ந்தெடுத்திருப்பார்.. அதுதான் நான்…!” என்று வார்த்தைகளை முற்றப் பெறாது நிறுத்தி, ஒரு நொடி கண்களை மூடி தன் கண்ணீரைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தவள்,
“எனக்கு சத்தியம் பண்ணுங்க அண்ணா… ரஞ்சிக்கு எந்த காலத்திலையும் இந்த உண்மையை சொல்ல மாட்டேன்னு!” என்று கைகளை நீட்ட, அவன் தயங்கி நின்றான்.
“ஏது எப்படியோ, இப்ப எனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சிடுச்சு! அவரும் ரொம்ப நல்லவர்தான்! என்னோட மனசை அவர்கிட்ட பகிர்ந்துகிட்ட பிறகும் கூட, அவர் என்னை வெறுக்காம என் மனசு மாற அவகாசம் கொடுத்திருக்கார்! அதனால நிச்சயமா கொஞ்ச நாள்ல எங்க வாழ்க்கையில நல்ல மாற்றம் ஏற்படும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு! அதே மாதிரி ரஞ்சியும் தனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்கிட்டு நல்லபடியா வாழணும்னு நான் ஆசைப் படுறேன்! நீங்களும் அதைத்தான் விரும்புவீங்கன்னு நினைக்கிறன்!” என்று அவள் சொல்ல, அவன் அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்து,
“சொல்லமாட்டேன் ம்மா.. நிச்சயமா சொல்ல மாட்டேன்!” என்றான் கண்கலங்க.
அன்றைய நினைவுகள் நெஞ்சில் நிழலாட, சற்றே கண்களில் துளிர்விட்ட கண்ணீர்த்துளிகளை அவன் துடைத்து முடிக்கவும், அவன் அருகே ரஞ்சனும், நிலாவும் வந்து சேரவும் சரியாக இருந்தது.
“வாங்க அண்ணா.. எப்படி இருக்கீங்க? வீட்ல எல்லோரும் சௌக்கியமா?!” என்றாள் நிலா இன்முகத்துடன்.
“ம் எல்லோரும் நல்லா இருக்கோம் மா.. உன் புருஷன்தான் உன்னைய எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வர சொன்னா ரொம்பவும் பிகு பண்ணிக்கறான்.!” என்றான் ரிஷி.
“அவருக்கு நேரமே இருக்க மாட்டேங்குது அண்ணா.. வேலை வேலைன்னு ஓடிக்கிட்டே இருக்காரு.. கூடிய சீக்கிரம் கண்டிப்பா வரோம் அண்ணா..!” என்று வாக்குக் கொடுத்தாள் நிலா.
“ம் கண்டிப்பா வரணும், சரி… தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா எல்லோரும் எங்க போயிட்டாங்க? யாரும் ஆளையே காணோம்?!” என்று ரிஷி பார்வையைச் சூழல விட,
“எல்லோரும் ஃபர்ஸ்ட்ப்ளோர்ல இருக்காங்க டா… வா போகலாம்..!” என்ற ரஞ்சன்,
“நீ இங்கயே இருக்கியா இல்ல மாடிக்கு வரியா பேபி..!?” என்றான் மனைவியிடம்.
“ரொம்ப நாள் கழிச்சு பிரெண்ட்ஸ் ரெண்டு பெரும் மீட் பண்ணியிருக்கீங்க? பேசுறதுக்கு எவ்வளவோ இருக்கும்.. ஸோ முதல்ல நீங்க போங்க, நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்!” என்று புன்னகையுடன் விடை கொடுத்தாள் நிலா.
“சரிடா பார்த்து கவனமா இரு, கடையில கூட்டம் அதிகமா இருக்கு!” என்று ரஞ்சன் அவளிடம் விடைப் பெற,
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் ப்பா..!” என்று நிலா நகர, அவளை நோக்கி ஒரு சிறு குழந்தை கண்மண் தெரியாமல் ஓடி வந்தது.
அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்ற ரஞ்சன், தன் மனைவியை இடித்து விடும் போல் ஓடி வந்த அந்தக் குழந்தையை, முந்திக் கொண்டு தூக்கி,
“இங்க பாருங்க குட்டி.. இப்படியெல்லாம் வேகமா ஓடி வரக் கூடாது! கீழ விழுந்தா அடி படும்தானே?!” என்று கேட்டு செல்லமாய் மிரட்டவும் செய்தான்.
“ஆனா நான் விழமாட்டேனே!” என்று குழந்தை திடமாய்ச் சொல்ல, அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க, நிலா அவனைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
“ஏதாவது சமாளிடி..!” என்று அவன் பல்லைக் கடித்தபடி மனைவிக்கு மட்டும் கேட்கும் வண்ணம் சொல்ல,
“ஆனா குட்டிம்மா… எதிர்ல யாராவது வந்தாங்கன்னா, அவங்க மேல நீங்க இடிச்சு, அவங்க கீழ விழுந்துட்டா?!” என்று நிலா கேள்வியை வைத்தாள்.
“அச்சோ ஆமாம்!!” என்று தலையாட்டிய அக்குழந்தை, “சரி இனிமே அப்படி ஓட மாட்டேன்!” என்றது.
“உங்க அம்மா எங்க…?!” என்று ரஞ்சன் கேட்க, அப்பிள்ளையின் தாயே அவர்கள் அருகில் வந்து குழந்தையை வாங்கிக் கொண்டு,
“ரொம்ப நன்றிங்க…!” என்றார்.
“கூட்டம் அதிகமா இருக்கிற இடத்துல குழந்தைகளை தனியாக விடாதீங்க!” என்று நிலா புன்னகையுடன் சொல்ல,
“நான் அவ கையை பிடிச்சுக்கிட்டே தான் இருந்தேன், எப்படியோ ஏமாத்திட்டு ஓடி வந்துடுச்சு வாலு..!” என்றவர், மறுபடியும் அவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றார்.
“ம்! ஒரு சின்னக் குழந்தையை கூட சமாளிக்கத் தெரியலை! நீயெல்லாம் எப்படி அப்பாவா குப்பைக் கொட்டப் போறியோ?!” என்று நிலா, ரஞ்சனைச் சீண்ட,
“அதெல்லாம் என் பிள்ளை சொல்லித் தரும்?!” என்று ரஞ்சன் தன் சட்டைக் காலரை தூக்கிவிட்டுச் சொல்ல,
“வவ்வே!” என்று ஒழுங்கு காண்பித்தாள் நங்கை.
“நீ முதல்ல அங்க வந்து உட்காரு பேபி..! அப்புறம் நான் ரிஷியைக் கூட்டிட்டுப் போறேன்!” என்றவன், அவளை பத்திரமாக அழைத்துச் சென்று உட்கார வைத்துவிட்டு, ரிஷியின் அருகில் சென்றான்.
“ரொம்ப சந்தோஷமாயிருக்குடா, உங்க ரெண்டு பேரையும் இப்படிப் பார்க்க!” என்று ரிஷி புன்னகையுடன் சொல்ல,
“ஆனா இந்த சந்தோஷம் எங்க வாழ்க்கையில வரதுக்கு முன்பு, அவளை ரொம்பவே கஷ்டப் படுத்திட்டேன் டா..!” என்றான் வருத்தமாக.
“டேய் பழசெல்லாம் விடுடா, இப்போதான் எல்லாம் சரியாகிடுச்சே!” என்று ரிஷி உற்சாகமாய் சொல்ல,
“ம்!” என்று புன்னகையுடன் ஆமோதித்தான் ரஞ்சனும்.
இருவரும் மேலே சென்று கொண்டிருக்கையில் ரிஷியின் வீட்டிலிருந்து போன் அழைப்பு வர, அவர்களிடம் பேசிவிட்டு ரஞ்சனிடம் அவன் போனைக் கொடுக்க, ரஞ்சனும் அவர்கள் அனைவரிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு, போனை அணைத்தான்.
அவன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், தன் தந்தையிடம் பேசியபடியே ரிஷி வெகு தூரம் சென்றிருந்ததை கவனித்து, அவனிடம் போனைக் கொடுக்கலாம் என்று அடியெடுத்து வைத்த சமயம், அக்கைப்பேசிக்கு அவளின் அழைப்பு வந்தது.
அதில் தெரிந்த பெயரைப் பார்த்தவனின் நெஞ்சம் தணலாய் மாற, ‘இவ கூட ரிஷி இன்னும் தொடர்பில் இருக்கானா?!’ என்று நெஞ்சம் வினா எழுப்ப, அவன் புருவம் கோபத்தில் சுருங்கியது. வெறுப்புடன் அந்த அழைப்பைக் பட்டென துண்டித்தான்.
error: Content is protected !!