Skip to content
Post Views: 3,751
“சரி டி. நீ உன் வொர்க் பாரு. என்னால தான் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியலை., அண்ணா கிட்ட உன்னைப் பத்தி முன்னாடியே சொல்ல வந்தேன் டி. நான் டாக்டருக்கு படிக்கலைன்னு என்னை கண்ணா பின்னான்னு திட்டிட்டான். அப்புறம் உன்னைப் பத்தி அவன் கிட்ட பேசவே முடியலை”
“பரவால்ல ஸ்ருதி. இங்க ஹெல்ப் பண்ண தான் நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்களே. நான் மேனேஜ் பண்ணிப்பேன்”
Advertisement
“சரி நாளைக்கு கால் பண்ணு”,. என்று சொல்லி போனை வைத்தாள் ஸ்ருதி.
Advertisement
“கடவுளே ஸ்ருதிக்காக என் அண்ணனோட மனசை மாத்திரு. அவன் இல்லைன்னா இந்த லூசு உயிரோட இருக்குமான்னு தெரியலை”, என்று மனசார வேண்டிக் கொண்டாள் தேன்மொழி.
Advertisement
அப்படியே நாட்கள் நகர ஸ்ருதி இஞ்சினியரிங் நான்காம் வருடம் படித்துக் கொண்டிருந்தாள். தேன்மொழி மெடிக்கல் நான்காம் வருடம் படித்துக் கொண்டிருந்தாள். நவீன் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்து உயர் கல்வியை அதே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அப்படியே அந்த கல்லூரியை சார்ந்த மருத்துவ மனையில் டாக்டராகவும் பணியாற்றினான்.
Advertisement
ராகவனின் குடும்பம் ஏற்கனவே ராகவன் தங்கி இருந்த வீட்டுக்கு ஷிப்ட் ஆகியது. அமர் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து சென்னையில் இருக்கும் ஒரு பெரிய ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ந்து விட்டான். அவனுக்கு போலீஸ் ஆக வேண்டும் என்று கனவு இருந்ததால் ஒரு டிகிரி போதும் என்று முடிவு எடுத்து விட்டான். டிகிரி முடித்து விட்டு போலிஸ்க்கு பரீட்சை எழுத போகிறேன் என்று அவன் சொல்லி விட்டதால் அவனைப் பற்றி யாரும் கவலைப் பட வில்லை.
ராகவனோ ஐ.டி கம்பெனியில் தந்தைக்காக வேலைக்கு சென்று கொண்டிருந்தவன் அவனுக்காக மற்ற நேரங்களின் பல படங்களுக்கான இசை அமைப்பாளர் ஆனான். அது அவனுக்கு திருப்தியே.
வெளியே போகும் போது “சார் நீங்க சிங்கர் ராகவன் தானே?”, என்று சிலர் கேட்கும் அளவுக்கு புகழ் பெற்றிருந்தான். இசைத் துறையில் அவன் வளர்ச்சி அதிகமாகவே இருந்தது. அதற்கு சேகர் தான் காரணம் என்றால் அது மிகை இல்லை. இந்த காலகட்டத்தில் சினிமாவில் முப்பதுக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடி இருந்தான்.
அவ்வப்போது ஸ்ருதியை நினைத்துக் கொள்வான். அவன் எழுதும் பாடல்களின் கதாநாயகியே அவள் தான். அவளைப் பற்றி எண்ணினாலே அவன் மனதில் கவிதைகள் பிறந்து கொண்டே இருக்கும்.
ஸ்ருதி கடைசி செமஸ்டரில் இருக்கும் போது காலேஜில் அந்த வருடத்திற்கான திறமை போட்டி நடந்தது.
யார் வேண்டும் என்றாலும் கலந்து கொண்டு தங்களின் திறமைகளைக் காட்டலாம் என்ற அறிவிப்பு வந்தது. அதில் கலந்து கொள்வதற்காக அனைத்து கல்லூரிகளில் இருந்தும் இளைஞர்களும் மாணவிகளும் வந்திருந்தனர்.
பாட்டுப் போட்டி, நடனப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியம், காய்கறிகள் வெட்டும் கலை போன்ற இண்டோர் கேம்ஸ் என்று சொல்லப் படும் பல போட்டிகள் அங்கே நடந்தது.
இந்த போட்டி ஒவ்வொரு வருடமும் நடை பெறுகிறது தான். ஆனால் இந்த காலேஜில் நடப்பது இது தான் முதல் முறை. தங்களின் கம்பெனிக்கான விளம்பரத்தை அதிகரிக்க பல பெரிய கம்பெனிகள் இந்த நிகழ்ச்சி நடத்த பணத்தை செலவழித்தனர்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பணம் கொடுக்க கசக்கவா செய்யும்? இந்த போட்டி தமிழ்நாடு முழுவதும் பிரசித்தி பெற்றது.
காலையில் ஆறு மணிக்கே முதல் கட்ட தேர்வு நடக்க ஆரம்பித்தது,. அந்த கல்லூரி வளாகத்தில் தனித் தனியாக ஒவ்வொரு போட்டியும் நடந்து கொண்டிருந்தது.
மியூசிக் பிரிவுக்கு ராகவன் தான் சீஃப் கெஸ்டாக வந்திருந்தான். சிதம்பரம் கேட்டுக் கொண்டதால் தான் வந்தான். அவன் வரப் போகிறான் என்று தெரிந்து ஸ்ருதிக்கு படபடப்பாக இருந்தது. இப்போதெல்லாம் கல்லூரியின் எந்த நிகழ்ச்சி வந்தாலும் ஸ்ருதி பாட்டு தான் இருக்கும்.
இந்த போட்டியிலும் அவளது பேர் எழுதப் பட்டிருந்தது. மேடையில் ஏறினான் ராகவன். அவனை மேடையிலேயே சந்தோஷமாக அணைத்துக் கொண்டார் சிதம்பரம். மேடையில் நடுநாயகமாக வீற்றிருந்த ராகவனை ஸ்ருதியின் கண்கள் தின்று விடுவது போல ரசித்தது.
“ஏய் இந்த உலகத்துல தான் இருக்கியா டி?”, என்று கேட்டு அவளை கிண்டல் செய்தாள் வைஷ்ணவி. அதை எல்லாம் ஸ்ருதி கண்டு கொள்ளவே இல்லை. அவளுடைய கடமை அவனை பார்த்துக் கொண்டிருப்பது மட்டும் தான் என்பது போல இருந்தது அவள் செய்கை.
ராகவனும் கண்களைச் சுழற்றி அவளைத் தான் தேடிக் கொண்டிருந்தான். கூட்டம் அதிகமாக இருந்ததால் அவனால் அவளைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனாலும் மனம் தளராத விக்ரமாதித்யன் போல தேடிக் கொண்டே இருந்தான்.
ஒரு வழியாக நிகழ்ச்சி ஆரம்பமானது. ஒவ்வொருவராக தங்களின் பாடல் திறமையை வெளிபடுத்தினார்கள். அதில் ஸ்ருதியும் அடக்கம். அவள் பெயர் வாசிக்கப் பட அவன் பரபரப்பானான். கூட்டத்தில் இருந்து எழுந்து வர இப்போது அவன் கண்கள் அவளையே வெறித்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் உடலில் வந்திருந்த மாற்றங்கள் எல்லாம் தெரிந்தது.
அவன் நினைவில் நன்கு மெலிந்திருந்தாள். அவள் நடந்து வரும் போது அவளது நீண்ட பின்னல் தெரிய “முடி இன்னும் வளர்ந்து விட்டது”, என்று எண்ணிக் கொண்டான்.
வெட்கம் சங்கடம் எதுவும் இல்லாமல் அவனையே பார்த்த படி மேடை ஏறினாள் ஸ்ருதி. அவள் அகமும் முகமும் மலர்ந்திருக்க இன்னும் அழகாக தெரிந்தாள்.
“உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே? உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுதே?”, என்ற பாடலை அவனைப் பார்த்துக் கொண்டே பாட அவன் தான் அவளுடைய பார்வையில் திணறி தலையை திருப்பிக் கொள்ள வேண்டியதாயிற்று.
ஒரு வழியாக நிகழ்ச்சி முடிய ரிசல்ட் சொல்லும் நேரம் வந்தது. ஸ்ருதி ஆவலாக அவனையே பார்த்திருந்தாள். அவளுக்கு முதல் பரிசு வாங்க வேண்டும் என்ற ஆசையை விட அவன் வாயால் தன்னுடைய பெயரைக் கேட்க வேண்டும் என்ற ஆசை தான் அதிகம் இருந்தது.
அனைவரும் முடிவை ஆவலாக எதிர் பார்க்க “பிரியா பர்ஸ்ட் பிரைஸ்”, என்று அறிவித்தான். ஸ்ருதி முகம் வாடிப் போனது. வைஷ்ணவி தான் அவளுக்கு ஆறுதல் சொன்னாள்.
உண்மையிலே பிரியாவும் நன்றாக பாடி இருந்ததால் இந்த விஷயம் மற்றவர்களால் பெரிய அளவில் பேசப் படவில்லை. விழா முடிந்து அனைவரும் கிளம்பும் போது “ஏன் ராகவன் நீ ஸ்ருதி பேரைக் சொல்லலை? அவளும் நல்லா தான் பாடினா”, என்று கேட்டார் சிதம்பரம்.
“எனக்கு ஸ்ருதி வாய்ஸ் விட அந்த பொண்ணு வாய்ஸ் ரொம்ப பிடிச்சிருந்தது சார்”
“நம்ம காலேஜ்க்கு தான் அவார்ட் கிடைக்கும்னு நினைச்சேன் . வேற காலேஜ்க்கு போயிருச்சு”
“எனக்கு தோணுச்சு சார். அதான். சாரி”
“ஏய் ஏன் சாரி எல்லாம் கேக்குற? உண்மையிலே அந்த பொண்ணு வாய்ஸும் நல்லா தான் இருந்தது. சரி நான் கூப்பிட்டேன்னு எனக்காக டைம் ஒதுக்கி வந்ததுக்கு தேங்க்ஸ்”
“என்ன சார் தேங்க்ஸ் எல்லாம் சொல்லிட்டு? நீங்க எனக்கு இன்னொரு அப்பா மாதிரி”, என்று சொல்ல நெகிழ்வுடன் அவனை அணைத்துக் கொண்டார் சிதம்பரம். அவரிடம் விடை பெற்று ஏற்கனவே காத்திருந்த காரில் கிளம்பினான்.
போகும் போது ஸ்ருதி எங்காவது தென்படுகிறாளா என்று தேடினான். அவளோ அவன் கண்ணிலே பட வில்லை. ஒரு பெருமூச்சொடு அந்த கல்லூரியில் இருந்து விடைபெற்றான்.
“ஏன் ஸ்ருதி உன் ஆள் உனக்கு பர்ஸ்ட் பிரைஸ் கொடுக்கலை?”, என்று கேட்டாள் வைஷ்ணவி.
அவனை விட்டுக் கொடுக்க மனதில்லாமல் “உண்மையிலே அந்த பொண்ணும் நல்லா தானே டி பாடுச்சு. அதான் அந்த பொண்ணை செலக்ட் பண்ணியிருக்காங்க. நான் வேற பாட்டை சூஸ் பண்ணிருக்கணும் டி. சரி விடு”, என்று சொல்லி சமாளித்தாள்.
ஆனால் தேன்மொழியிடம் பேசும் போது “உன் அண்ணாவுக்கு என்னை பிடிக்கவே இல்லை டி. இனி பிடிக்கும்னு எனக்கு நம்பிக்கையே இல்லை”, என்று ஆரம்பித்து நடந்ததைச் சொன்னாள்.
அவளுக்கு ஆறுதல் சொல்லி போனை வைத்தவள் ராகவன் வருகைக்காக காத்திருந்தாள். அவன் வந்ததும் “ஏன் அண்ணா இப்படி பண்ணின? ஸ்ருதியும் நல்லா தான் பாடிருப்பா. அப்புறம் ஏன் அவளை சூஸ் பண்ணலை?”, என்று கேட்டாள்.
“ஏய் எனக்கு எது பிடிச்சதோ அதை தான் நான் சொல்ல முடியும்? உன்னோட பிரண்டு அப்படிங்குறதுனால என்னால சுயநலமா நடந்துக்க முடியாது”
“அதை விடு, ஸ்ருதி எனக்கு பிரண்டு மட்டும் தானா அண்ணா?”
“ஆமா, வேற என்ன?”
“வேற ஒண்ணுமே இல்லையா?”
“வேற என்ன இருக்கணும்? எனக்கு வேலை இருக்கு. தேவையில்லாம பேசி டைம் வேஸ்ட் பண்ணாத”, என்று சொல்லிச் சென்றான்.
“இவனை என்ன மெட்டீரியல் வச்சு செஞ்சாங்கன்னு தெரியலையே? இவன் ஒரு ஆளுன்னு அந்த லூசு இவன் பின்னாடி பைத்தியம் புடிச்சு சுத்துது? பேசாம நவீன் கிட்ட சொல்லிறலாமா? ஐயோ வேண்டாம் பா. அப்புறம் ஸ்ருதிக்கு தான் கஷ்டம்”, என்று எண்ணிக் கொண்டாள்.
ஸ்ருதி கல்லூரியின் கடைசி வருடத்தில் இருக்கும் போது பல கம்பெனிகளில் இருந்து கேம்பஸ் இன்டர்வியூ வந்தது. ஸ்ருதி எப்படியோ ராகவனின் கம்பெனியில் செலக்ட் ஆகி இருந்தாள். அதற்கு அவள் எவ்வளவு கஷ்டப் பட்டாள் என்று அவளுக்கு தான் தெரியும். அவனுக்காக படித்து படித்து காலேஜ் டாப்பராகவும் இருந்தாள்.
காலேஜ் முடிந்து லீவில் இருந்தவளுக்கு எப்போது டா அவனது கம்பெனியில் இருந்து வேலையில் சேரச் சொல்லி அழைப்பு வரும் என்று இருந்தது.
“ஹலோ ராகவன்”, என்ற படி கம்பெனி சி.ஈ.ஓ அவனது கேபினுக்குள் வந்தார்.
“ஹலோ சார்”, என்று எழுந்த ராகவன் அவருக்கு கை கொடுத்தான்.
“புராஜெக்ட் எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு ராகவன்?”
“வெல் குட் சார். எல்லாம் முடிஞ்சிருச்சு. போன டெமோல கிளைண்ட் சில கரெக்ட்சன்ஸ் சொன்னாங்க. அதை தான் டீம் மேட்ஸ் சரி பண்ணிட்டு இருக்காங்க”
“குட், எத்தனை நாள்ல முடியும்?”
“அவங்க கொடுத்த டைம் இன்னும் டூ வீக்ஸ் இருக்கு சார். ஆனா திரீ டேஸ்ல வொர்க் முடிஞ்சிரும்”
“சரி ரெண்டு மாசம் முன்னாடி புது சாஃப்ட்வேர் இன்ஜினீயர்க்கான கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது தெரியும் தானே?”
“யெஸ் சார், தெரியும்”
“ரெக்ருட்மெண்ட்க்கு உங்களைப் போகச் சொன்னேன். நீங்க தான் போகலை”
“இல்லை சார், அது நான் படிச்ச காலேஜ். நானே அங்க போய் இன்டர்வியூ எடுக்குறது ஒரு மாதிரி இருந்துச்சு. அதான்”, என்று சமாளித்தான்.
“இது தான் உண்மைக் காரணமா? இல்லை ஸ்ருதியையும் பார்க்க வேண்டும் என்பதால் அங்கே செல்ல வில்லையா?”, என்று கேள்வி எழுப்பியது அவன் மனது.
“இஸ் ஓகே, நம்ம டீம் இருபத்தி நான்கு ஃபிரெஷ் கேண்டிடேட்ஸை செலக்ட் பண்ணியிருந்தாங்க. லிஸ்ட் பாத்தீங்களா?”
“நோ சார்”, என்றவனுக்கு மனதுக்குள் சில எதிர்பார்ப்புகள்.
இசை தொடரும்…..
error: Content is protected !!