Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கடல் சேர்ந்த நாணல்

நாணல் – 2.1

குறுக்கும் நெடுக்கும் பல முறை நடந்தாயிற்று, ஆனாலும் கமலவல்லியின் ஆவேசமும் ஆத்திரமும் அடங்கியபாடில்லை. அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் ஒரு பாவனை அவள் கணவன் கிரிதரன் முகத்தில். என்றும் இல்லாத திருநாளாக இன்று அறையை மிகவும் சுறுசுறுப்போடு சுத்தம் செய்யும் வேலையில் இருந்தாள்.

“ப்பா ஆர் வி கோயிங் அவுட்?” கிரிதரன் மகன், துருவ் வந்து மெல்ல தந்தையிடம் கேட்டான் அன்னையை சந்தேகமாய் பார்த்துக்கொண்டே.

“மகனே சைலெண்டா வந்து ஒக்காருடா, உன் அம்மா எந்நேரமும் வெடிக்கலாம்.” மகனை இழுத்து வைத்து, தன்னுடைய மடிக்கணினியில் ஒரு படத்தை போட்டு துணைக்கு இழுத்துக்கொண்டான்.

“என்ன படம் ப்பா?”



Advertisement

“ஜெகன் மோகினி.”

பதறிய மகன், “கோஸ்ட் படமா? போ ப்பா, நான் பாக்க மாட்டேன்.” கையை விசிறி தந்தையை விட்டு நகர்ந்து அமர்ந்தான் துருவ்.

மகனை மீண்டும் அருகில் இழுத்து, “உன் அம்மாவை டெய்லி பாக்குறல?” காதில் கிசுகிசுத்தான் தந்தை.

Advertisement

மகன் ஆம் என்கவும், “இந்த கோஸ்ட் அப்டிதான் இருக்கும். அதைவிட இது பயம் கம்மியா தான்டா இருக்கும்.”

Advertisement

மகனை இழுத்து வைத்து கிரி படத்தில் ஐக்கியமாக, இடையிடையே கேட்கும் சிரிப்பு சத்தத்தில் கமலவல்லிக்கு டென்ஷன் ஏறியது.

எந்தவிதமான கோவமான மனநிலையில் அவளிருக்க, கணவனும் மகனும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள்.

முகமெல்லாம் கோவத்தில் சிவந்தது, பத்திரகாளியாக மெல்ல மெல்ல மாறத் துவங்க, “ஆமா ப்பா, இது மம்மிய விட பயம் கம்மியா தான் இருக்கு.” சரியான நேரம் பார்த்து மகன் தந்தையின் தலையையும் சேர்த்து உருட்டிவிட்டான்.

Advertisement

“என்ன சொன்னான், என்ன சொன்னான்?” இதோ வந்துவிட்டாள் சண்டையிட.

“ரோட்டுல போற ஓணானை தூக்கி பனியன்ல போட்டேன் பாரு.”

மகனை வலிக்காமல் கொட்டி கிரி, துருவை முறைக்க, அவனோ தந்தையைப் பார்த்து கண்ணடித்து சிரித்து, “ஆல் தி பெஸ்ட் ப்பா!” என்ற வாழ்த்தோடு ஓடிவிட்டான் தன்னுடைய தங்கையோடு விளையாட.

“நான் உங்களுக்கு அந்த மோகினி பேயோட பயங்கரமானவளா?” இடையில் கை வைத்து முறைத்தாள் கமலவல்லி.

“அதை நான் என் வாயால எப்படிம்மா சொல்லுவேன், சரி நீ கேக்குறதால ஒத்துக்குறேன்.”

“ம்ம்ம்…” பற்களைக் கடித்து கணவனை அடிக்க சென்றவள் கோவத்தை கட்டுப்படுத்தி,

“நீங்க எது பேசுறதுக்கும் தகுதியில்லாதவர், ஒரு விசயம் ஒழுங்கா பண்றிங்களா? தெண்டம்… எல்லாத்துலயும் நீங்க தெண்டம் தான்…”

“இப்ப என்னடி உனக்கு வேணும்?” என்றான் கிரி சோர்வோடு.

“சொன்னா மட்டும் அப்டியே கிழிச்சிடுற மாதிரி தான்…”

“கிழிக்கிற மாதிரி விசயத்தை சொல்லணும்.”

“குண்டு சட்டிக்குள்ளையே குதிரை ஓட்டுற எண்ணம் தான் உங்களுக்கு. எப்போதான் நாம இந்த நிலைல இருந்து வெளிய வர்றது?”

கிரி, “இப்ப என்ன பிரச்சனை, உனக்கு நேரடியா சொல்லு?”

கமலவல்லி, “ஏன் உங்களுக்கு தெரியாதா, நான் எதை பேச வர்றேன்னு? உங்க தம்பி, உங்களுக்கு அடுத்து வேலைக்கு போனார்.”

“தம்பின்னா எனக்கு அடுத்து தான்டி போவான்…”

தேவையில்லாத இடக்கில் முறைப்படி பரிசாக வாங்கிக்கொண்டான் கிரி, “நீங்க படிச்ச உடனே வேலைக்கு போயி இது வரை என்ன பண்ணீங்க? உங்க தம்பி அஞ்சு வருசமா தான் தொழில் பண்றார். அதுக்குள்ள ரெண்டரை கோடிக்கு சொத்து வாங்க போறார். அதுவும் எல்லாமே கை காசு போட்டு.”

“அவன் உழைக்கிறான், வாங்குறான்.”

“அது எப்படி, வீட்டுக்கு உங்க சம்பளத்துல முக்கால்வாசியை குடுக்குறீங்க. உங்க தம்பியும் இத்தனை நாளும் அப்டி தான் குடுக்குறாருனு தானே நினைச்சேன், ஆனா எப்படி இவ்ளோ காசு வந்துச்சு?”

“அவன் பொண்ணுக்கு சேர்த்து வச்சிருக்கான், ஏன் யாருக்கும் தெரியாம போன வாரம் கூட ஒரு நெக்லஸ் வாங்கி குடுத்தேன்ல. அவன் அப்டியா? சின்ன பொருள் வாங்குனாலும் நடுஹால்ல வச்சு காட்டிட்டு தான் ரூம்க்கு போறான்.”

கமலவல்லி, “எல்லாத்தையும் சொல்றவர் எதுக்கு பூர்விக்கு சேர்த்து வச்ச பணத்தை மட்டும் சொல்லல?”

கிரி, “ஏன் சொல்லாம? அப்பா, அம்மா, எனக்கு, வசந்த்துக்கும் தெரியும்.”

மனைவி அதிர்ந்து கணவனைப் பார்த்தாள், “இதை ஏன் என்கிட்ட நீங்க சொல்லல?”

“சொன்னா என்னடி பண்ணுவ? என்னை நொய் நொய்னு நொச்சிட்டே இருப்ப. அதுக்கு தான் சொல்லல…” என்றான் பொறுமையாக.

“ரெண்டே வருசத்துல ரெண்டு கோடிக்கு சீட் போட்டு வீட்டுக்கும் காசு குடுத்து, குடும்பத்துக்கும் செலவு பண்ணி…”

நெடிய அமைதி, “எப்படி அவருக்கு மட்டும் இப்டி?” என்றாள் சந்தேகமாக.

“ஆடிட்டர் அவன், போதாததுக்கு சைட் பிஸ்னஸ். கஷ்டப்பட்டு உழைக்கிறான், முடியாதா என்ன?” என்றான் சகோதரனாக.

“ம்ம் சரி… உங்க தம்பி என்னமோ பண்ணிக்கட்டும். நீங்களும் படிச்சிருக்கீங்கல்ல, சொல்லப்போனா அவரை விட அதிகமாவே படிச்சிருக்கீங்க. உங்களால ஏன் ஒரு பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ண முடியல?”

“நடக்குறத பத்தி பேசணும் கமல், அது சிக்கலான வேலை. தெரிஞ்ச வேலையை செஞ்சா தான் நிலைக்க முடியும், நஷ்டமும் வராது. நான் வேலை பாக்குறது சாஃப்ட்வேர். முதலீடு ரொம்ப அதிகம், டெஸ்டிங்ல வேலை பாக்குற எனக்கு, டெஸ்டிங் மட்டும் தான் தெரியும். பிஸ்னஸ் ஆரம்பிக்கிறப்போ எல்லாமே தெரிஞ்சிருக்கணும்.”

“என்னமோ போங்க, ஒரே வீட்டுல இருக்கோம். பூர்விக்கு உங்க தம்பி ஒரு பொருள் காஸ்ட்லியா வாங்கி குடுத்தாலும், துருவ் அதே நம்மகிட்டயும் எதிர்பாப்பான்.

அவன் கேட்டு உங்களால வாங்கி குடுக்க முடியாம போச்சுனா, என்ன பண்றது யோசிங்க. இதுல நம்ம பசங்களுக்கு சொத்து சுகம் சேர்க்கணும்.” தன்னுடைய மேடிட்ட வயிற்றைப் பார்த்து அவள் கூற, கணவனுக்கு யோசனை தான் இன்னமும்.

கிரிதரன், பார்த்திபனின் மூத்த சகோதரன்.

படிப்பில் அதிகம் நாட்டம் உள்ளவன். பொறியியல் படித்து கோயம்புத்தூரில் உள்ள ஒரு பெரிய மென்பொருள் நிறுவனம் ஒன்றில் நல்ல வருமானத்தோடு வாழ்பவன்.

திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் கையில் துருவ் என்னும் அழகிய ஆண் குழந்தை. அழகாக தான் செல்கிறது வாழ்க்கை. சில சமயங்களில் பிடிவாதம் பிடிக்கும் அவன் மனைவியைத் தவிர.

ஒரு நாள் பார்த்திபன் வந்து ஆடிட்டர் அலுவலகம் திறக்க, தொழில் கூட்டாளி ஒருவர் வேண்டுமென கேட்டு நின்றான். கமலவல்லி ஒற்றை காலில் முடியவே முடியாது என மறுத்துவிட்டாள்.

சகோதரனுக்கோ நம்பிக்கையான ஒருவர் இருந்தால் தான் நிம்மதி என்ற நிலை. அதன் பொருட்டே அன்று சகோதரன் எத்தனை கேட்டிருப்பான்?

ஒரு வாரம் சகோதரன் நாவிலிருந்து நல்ல செய்தி வந்திறாதா என்ற ஏக்கத்தோடு, பார்த்திபன் தினமும் கிரிதரன் அலுவலகம் கிளம்பும் நேரம் ஆவலோடு பார்த்து நிற்பான். முடியாது என கூறவும் முடியவில்லை, கையில் பணம் வைத்தே இருந்தாலும், சகோதரனை நம்பி பணம் கொடுக்க முடியவில்லை

தர்மசங்கடமான நிலை, ‘என்னையே நம்பி இருக்காதடா.’ என்றுவிட்டான் கடினமான மனநிலையோடு.

“ண்ணா…” அந்த நொடி பார்த்திபன் குரலில் இருந்த ஏமாற்றம், சகோதரனாக கிரிதரனை முதல்முறை தோற்கடித்தது.

இன்னும் சகோதரன் அன்று பார்த்த பார்வையில் இருந்து வெளிவர முடியவில்லை. கமலவல்லி கூட பணத்தை கொடுத்திருக்கலாமே என்று ஆதங்கமாக கேட்டாள்.

“பணம், நகை எல்லாம் வீட்டுல சும்மா தான் தூங்கிட்டு இருக்கு. நல்லது ஒன்னு நடக்கணும்னா தாராளமா எடுத்துக்கலாம். உங்க தம்பிக்கு வேணும்னா கூட குடுங்க, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.”

உடனே அவ்விடத்தை விட்டு அகன்றான். என்ன செய்வது, எப்படி தம்பியை அணுகுவது என்ற தயக்கம் சூழ்ந்த மனநிலையில்.

ராஜேந்திரன், வித்யா தம்பதியினர். திருநெல்வேலியை பூர்விகமாக கொண்ட குடும்பம்.

ராஜேந்திரன், வித்யா இருவரும் அரசு துறை பணியின் காரணமாக கோவை வந்து செட்டில் ஆகிவிட்டனர். அதன்பிறகு பிள்ளைகள் படிப்பு, தொழில் என அனைத்துமே கோவையாகிவிட சொந்த, பந்தங்களைப் பார்ப்பது எல்லாம் விசேஷங்களில் மட்டுமே.

மணிமணியாக மூன்று பிள்ளைகள். முதலில் கிரிதரன், இரண்டாவது பார்த்திபன், கடைக்குட்டியாக வசந்த். வீட்டினில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது. பெற்றோர் கையில் தேவைக்கு அதிகமாகவே பணம் நிற்க, நல்ல ஆடம்பரமான பெரிய இல்லம் ஒன்றை வாங்கி, நிம்மதியாக செட்டில் ஆகிவிட்டனர்.

பிள்ளைகள் மூவருக்கும் மேல் மாடியில் அறை, கீழ் தளத்தில் இரண்டு அறைகள். ஒன்று பெற்றோருக்கு, மற்றொன்று விருந்தினர்கள் தங்குவதற்கு.

மூத்த மகன் திருமண வயதை நெருங்கிய சமயம் கை நிறைய சம்பளம். மனதிற்கு பிடித்த மருமகளாக கமலவல்லி தெரிய, உடனே திருமண வேலைகள் நடந்தது.

அசத்தலான திருமணம், அதன்பிறகு அழகான திருமண வாழ்க்கை, ஒரே வருடத்தில் குழந்தை என கிரிதரன் வாழ்க்கை அழகுதான்.

அந்த நிலையில் தான் ஒரு நாள் பார்த்திபன் தான் ஒரு ஆடிட்டர் அலுவலகம் நிறுவப்போவதாகவும், அதற்கு தொழில் கூட்டணிக்கு ஒருவர் வேண்டும் என்றும் சகோதரனிடம் வந்து நின்றது.

வீட்டினரின் வற்புறுத்தலின் பெயரில் ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தவன், இன்று திடீரென அலுவலகம் துவங்க போகிறேன் என நிற்கவும் வீட்டினரால் நம்ப இயலவில்லை.

அவன் கேட்குமளவு பணமும் கையிலிருக்க, அவனை முழுதாய் நம்பி கொடுக்க முடியவில்லை பெற்றோரால். தயங்கினர், பொறுப்பிருக்கும், சுறுசுறுப்பிருக்கும்.

ஆனால் பெரிய தொகையை அவனை நம்பி கையில் கொடுக்க முடியவில்லை. அனைவரது தயக்கத்தையும் அறிந்தவன் தானே முயற்சியில் இறங்கினான்.

எவர் மீதும் கோவத்தைக் காட்ட விரும்பவில்லை. தவறு அவர்கள் மீதுமில்லையே, எந்த நாளும் இவர்களது நம்பிக்கையை சம்பாதிக்க முயன்றதில்லை. தானே ஒவ்வொரு வங்கியாக ஏறி இறங்கினான். ஒரு நாள் ஓய்வெடுக்கவில்லை.

தீவிரமாக, மிக தீவிரமாக முயற்சித்து தன்னுடைய வெற்றியின் முதற்படியை எடுத்து வைத்தான். எடுத்த எடுப்பிலே பத்து பேர் வைத்து வேலையும் செய்யும் அளவிற்கு பெரிய அலுவலகமாகவே திறந்தான்.

வீட்டினருக்கு பயம், மகன் எடுத்த எடுப்பிலே பெரிய குதிரையில் கால் வைக்கிறானோ என்று. அவர்களது பயத்தை தவிடுபொடியாக்கி இரண்டே வருடத்தில் தன்னுடைய வளர்ச்சியைக் காட்டியிருந்தான்.

வங்கியில் வாங்கிய அனைத்து கடனையும் ஒற்றை வருடத்தில் முடித்து, அடுத்து வந்த லாபத்தை அன்னை கையில் ஒப்படைத்துவிட்டான். அந்த மாற்றங்கள் அவன் தொழிலில் மட்டுமல்ல அவன் மேலும் அதிகம் தெரிந்தது. எந்நேரமும் நிமிர்வோடு கம்பீரமாக வலம் வர துவங்கினான் பார்த்திபன்.

வீட்டினர் மலைத்து போய் பார்த்திபனை பாராட்டிய நேரம் தான், ஆரபியைக் காதலிப்பதாகவும் அவளுக்காக தான் இந்த உழைப்பும் என்ற உண்மையைக் கூறி, அவள் வீட்டில் திருமணம் பேச கூறினான்.

மகனது செயலை ஏற்கமுடியாவிடினும், அவனுக்காக யோசித்து நிதானமாக ஆரபி வீட்டில் பெண் கேட்டனர்.

ஆரபியின் பெற்றோரும் முன்னமே விஷயம் கேள்விப்பட்டு மனதை தேற்றியிருக்க, மகளின் ஆசைக்கு தடையாய் தங்கள் குலம், கோத்திரம் எதுவும் இருக்க கூடாதென, பார்த்திபனுக்கு தங்கள் மகளைத் திருமணம் செய்து வைத்தனர் ராஜ் கோபால் மற்றும் க்ரிஷ்ணாம்பாள் தம்பதியினர்.

அன்று துவங்கிய அழகிய வாழ்க்கை இன்று வரை சுமூகமாக தான் தொடர்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!