“அதை அப்படியே கருவிலே அழிச்சிருக்க முடியாதா என்ன, என்னோட திறமையை அவங்க தானே ஊக்குவிச்சாங்க…”
“அவங்களுக்கு உதவும்ன்னு தானே அதை செஞ்சிருப்பாங்க…”
“இருக்கலாம்… நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன், அதுக்காக ஒரேடியா உறவுகள் வேணாம்ன்னு என்னால இருக்க முடியலை…”
“பாம்புக்கு பாலை வார்க்கணும்ன்னு நினைக்கிறே??”
“நான் ஒண்ணும் திரும்பவும் அவங்களோட போய் சேரணும்ன்னு நினைக்கலை… ஆனா அவங்களை நேர்ல பார்த்தா என்னன்னா என்னன்னு நின்னு பேசுவேன்… முகத்தை திருப்பிட்டு போக மாட்டேன்”
“உன்னை மாதிரி எல்லாம் என்னால இருக்க முடியாதுடா… சரி விடு நீ ஊருக்கு போறது எனக்கும் சந்தோசம் தான்… குடும்பம் குழந்தைங்கன்னு இனிமே உன் வாழ்க்கையை வாழத் தொடங்கு…”
“ரேகா வேற மாசமா இருக்கா, அவளுக்கு அண்ணனா எதையுமே நான் செய்யலை… அவ கல்யாணம் அப்போக் கூட வேண்டா வெறுப்பா தான் இருந்தேன்…”
“ஊருக்கு போய் என்ன செய்யணுமோ அதை செஞ்சிடு… ஆமா இந்த வேலையை என்ன பண்ணப் போறே??”
“அங்க இருந்தே செய்யறேன்…”
“சங்கவி மேனேஜ் பண்ணுவாளா??”
“கண்டிப்பா பண்ணுவா, நீ கொஞ்சம் கைட் மட்டும் பண்ணு… நானும் அங்க இருந்து என்னோட புல் சப்போர்ட் கொடுப்பேன்… ரொம்ப லேட் பண்ணாம சீக்கிரம் மேரேஜ் பண்ணிடு…”
“அப்பா அன்னைக்கே கண்டுப்பிடிச்சிட்டார் போல, சங்கவி கிளம்பவும் என்னை கேட்டார் என்ன விஷயம்ன்னு… அப்போவே அவர்கிட்ட சொல்லிட்டேன்…”
“அப்போ நீ என்ன கன்னியாகுமரி கடல்லவா விழுகப் போறே??” என்றான் விஜய் கடுப்பாய்.
அதற்கு வாய்விட்டு சிரித்த விஸ்வாவை கொலைவெறியாய் பார்த்தான் விஜய்.
“சிரிச்ச மவனே கொன்னுடுவேன்”
“எனக்கு சீ பேஸ் பண்ண மாதிரி வீடு வேணும்டா…”
“கன்னியாகுமரில கிடைச்சாலும் சரி, இல்லை அங்கவே நியர் பை ஊரா இருந்தாலும் ஓகே தான்…”
“அதென்ன எங்க போனாலும் கடலை பார்த்த மாதிரி வீடு கேட்கறே??”
“என்னமோ நான் பிறந்ததுல இருந்தே பார்த்திட்டு இருக்கேன்டா, அது என்னோட உறவாகிட்டு. எங்க போறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருந்தப்போ எனக்கு இங்க வரணும்ன்னு தோணினதுக்கு ரெண்டே காரணம் தான் இருக்கு”
“ஒண்ணு நீ இன்னொன்னு இங்கயும் கடல் இருக்குன்னு தான். உன்னோட இருக்க சம்மத்திச்சதும் அந்த ஒரே காரணத்துக்காக தான். இங்க கடலை தினமும் பார்க்க முடியுதே, அதுவும் வீட்டில இருந்தே…”
“சரியான கடல் பைத்தியம்டா…”
“நான் கடல் காற்றை தான் சுவாசிச்சு இருக்கேன், தினமும் கடலோடி போறவங்களுக்கு அந்த கடல் தான் மூச்சே… எனக்கும் அப்படியெல்லாம் போக ஆசை தான்…”
“டேய் விஜய் என்னடா தூங்குறே??”
“நீ எப்போடா முடிப்ப, எனக்கு ரொம்ப தூக்கம் வருதுடா…”
“நான் என் ஆசைய சொல்றேன் உனக்கு தூக்கம் வருதா…”
“தூக்கம் மட்டுமில்லை துக்கமாவும் வருது, நீயெல்லாம் ஒரு பிரண்டான்னு இப்படி கொல்றியேடா, உனக்கு பிரண்டா இருக்க ஒரே பாவத்துக்காக நீ சொல்ற கதையை எல்லாம் கேட்குறேன் பாரு. என்னைச் சொல்லணும்”
“சரி சரி இனிமே உன்கிட்ட கதை சொல்லலை, வீடு மட்டும் பாரு… அது போதும்…”
“எனக்கு இப்போ அங்க யார் கூடவும் கான்டாக்ட் பண்ண விருப்பமில்லை. நான் போய் தேடி கண்டுப்பிடிச்சு அது நடக்கற கதையில்லை. நீயே பாரு, எனக்கு தெரியும் உன்னால முடியும்ன்னு” என்று வீடு பார்க்கும் பொறுப்பை நண்பனை முழுதாய் நம்பி ஒப்படைத்தான்.
“ஒரு மாசத்துக்குள்ள பண்ணிடலாம் ஓகே…”
“என்னது ஒரு மாசமா, அதெல்லாம் முடியாது… நாளைக்கு நான் ஊருக்கு போனதும் நேரா அந்த வீட்டுக்கு போற மாதிரி இருக்கணும்” என்று விஸ்வா சொன்னதை கேட்டு காண்டானான் விஜய்.
“இவ்வளவு டார்ச்சர் பண்ணத்தான் நீ இங்க வந்தியா ராசா… முடியலைடா டேய், நான் பாவம்டா…”
“சரி நாளைக்கு நைட்குள்ள பண்ணிடுடா மச்சான்…”
“உன்னை நான் பார்க்காமலே இருந்திருக்கலாம்… எங்கயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறு ஆத்தாங்கற கதையா போச்சு… நீ வேற டிபார்ட்மென்ட் நான் வேற டிபார்ட்மென்ட் பார்த்தோமா சிரிச்சோமான்னு விட்டிருக்கணும்…”
“தமிழாச்சே பேசுவோமேன்னு பேசினா, என்னை வைச்சு செய்யற நீ இப்போ…”
“அத்தோட விட்டியா, நான் படிக்கறேன்னு நீயும் ஒரு ஆறு மாசம் இன்டீரியர் டிசைனிங் வேற படிச்சே, உங்க வீட்டில கேட்டதுக்கு கோர்ஸ் இன்னும் முடியலைன்னு சொல்லி என்னோட சேர்ந்திட்ட…”
“இப்போ எதுக்கு அந்த கதை எல்லாம்…”
“சும்மா நினைச்சு பார்த்தேன், நீயும் நானும் பிரண்ட்ஸ் ஆன கதையை…”
“சரி விஜய் வீடு மட்டும் பார்த்து ஓகே பண்ணு, நான் அதுவரைக்கும் ஹோட்டல்ல ஸ்டே பண்ணிக்கறேன்…” என்றான் இப்போது சீரியசான குரலில்.
“என்ன சீரியஸ் மோடா??” என்றவன் “போடா… நீ கேட்டது நாளைக்கே ரெடியா இருக்கும், ஆமா வாடகைக்கா இல்லை சொந்தத்துக்கா…”
“சொந்த வீடாவே இருக்கட்டும்…”
“என்னோட அக்கவுன்ட்ல பணமிருக்கு, நான் செட்டில் பண்றேன், மீதியை லோன் அரேன்ஜ் பண்ணிக்கறேன்…”
“அதெல்லாம் வேணாம், நானே பே பண்றேன், நீ அப்புறம் கொடு…”
“வேணாம்டா…”
“நீ இவ்வளவு தூரம் என்னை டார்ச்சர் பண்ணியே நான் ஏன்னு ஒரு வார்த்தை கேட்டனா, இப்போ நீ சொல்றதை நான் கேட்க மாட்டேன் ஓகே வா… நீ எனக்கு திரும்பி கொடுக்க போறே, நான் ஒண்ணும் உனக்கு ஓசில காசு கொடுக்கலை ஓகே… போய் கிளம்பறதுக்கு என்ன தேவையோ அதைப்பாரு??” என்றுவிட்டு அவனறைக்குள் சென்று மறைந்தான் விஜய்.
விஸ்வாவும் அவனறைக்கு சென்று ஊருக்கு செல்ல தேவையானதை தயார் செய்தான். பெரிதாய் ஒன்றுமில்லை அவன் உடுப்புகளும், லேப்டாப் மட்டும் தான்… ஒரு மணி நேரத்தில் அனைத்தும் தயாராய் வைத்தான். அறையைவிட்டு வெளியில் வர விஜய் இன்னமும் அறையை விட்டு வந்திருக்கவில்லை.
——————–
“தாத்தா…” அழைத்தது சரவணன்.
“என்ன??”
“என்ன முடிவு பண்ணியிருக்கீங்க??”
“அதான் ஒரு மாசம் டைம் கேட்டேன்ல…”
“சும்மா உங்களுக்கு ஞாபகப்படுத்த தான் கேட்டேன்…” என்றுவிட்டு அவன் நகர கனகவேல் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டார் அங்கிருந்த இருக்கையில்.
ரத்தினவேல் கூட இப்போது தனக்காய் பேசுவதில்லை என்பதை கனகவேல் பார்த்துக் கொண்டு தானிருந்தார்.
செந்தில்வேலோ விஸ்வா வீட்டை விட்டு சென்ற பின்னிருந்தே பேச்சை முற்றிலும் குறைத்து இப்போது அதுவுமில்லை. தெய்வானை, சகுந்தலா தவிர்த்து யாரிடமும் பேசுவதில்லை.
லேசாய் நெஞ்சு வலிப்பது போன்ற உணர்வு. தன்னைச் சுற்றி இத்தனை பேர் இருந்தும் ஒருவரும் அவரருகில் இல்லை. தனித்துவிடப் பட்ட உணர்வு அவருக்கு.
‘போங்கடா எனக்கு எவனும் வேணாம்’ என்ற மனநிலை தான் அவருக்கு அந்நேரத்திலும்.
நெஞ்சில் வலி சற்று அதிகமாவது தெரிந்தது, வியர்த்து வழிந்தது, படபடவென்று இருந்தது. அப்படியே மயங்கி அவர் இருக்கையில் இருந்து விழ இருக்கை பின்னால் சாய்ந்தது. அவர் தலையில் இருந்து இப்போது ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது.