Skip to content
Post Views: 1,061
“ஹலோ சீனியர் நான் இசை பேசுறேன்” என்ற இசையின் குரலில் தூக்கத்தில் இருந்து அடித்து பிடித்து எழுந்து தமிழுக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை.
கண்களை ஒரு முறை நன்றாக கசக்கி விட்டு பார்க்க இசையிடம் இருந்து தான் அழைப்பு.
“ஹலோ.. ஹலோ சீனியர் லைன்ல இருக்கிங்களா?..” என்ற இசையின் குரலில் சுயம் பெற்றவன் “ஹான், ஹான்.. சொல்லு இசை.. அது..நான்.. எழில்னு நெனச்சு..” என்று திக்கி திணற, அவன் பதட்டத்தில் “பரவாயில்ல சீனியர்..” என சிரித்தவள், “சாரி தூங்கீட்டு இருந்தீங்க டிஸ்டர்ப் பண்ணீட்டேன் போல.. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க.. பை” என அழைப்பை துண்டிக்க போக
“இசை..இசை..இசை..” என அவசரமா அழைத்தவன் “இல்ல நான் முழிச்சிட்டேன் தூங்கல.. என்ன விஷயம் சொல்லு..”
Advertisement
“இப்போ எப்படி இருக்கீங்க சீனியர்? உங்களுக்கு உடம்பு சரியில்லைனு எழில் அண்ணா சொன்னாங்க இப்போ பரவாயில்லையா?”
அவள் அக்கறையில் மெல்ல முறுவலித்தவன் “இப்போ பரவாயில்ல இசை.. சாதாரண காய்ச்சல் தான்” என்றான். அவன் குரலில் சோர்வு.
“உங்க வாய்ஸ்லயே தெரியுது.. ஹாஸ்பிடல் போனீங்களா?”
Advertisement
“அவ்ளோ காய்ச்சல் எல்லாம் இல்லை.. நைட் லைட்டா ஃபீவர் இருந்துச்சு, தல வலி அதான் லீவ் போட்டேன்.. நீ நினைக்கிற அளவுக்கு இல்ல.. காலையிலிருந்து ரெஸ்ட் எடுத்தேன்.. இப்போ ஐ அம் ஃபீலிங் பெட்டர்” என்றான்.
Advertisement
“அப்போ ஓகே.. உடம்ப பாத்துக்கோங்க.. சாரி தூங்கீட்டு இருந்தீங்க நான் வேற கால் பண்ணி தொந்தரவு பண்ணீட்டேன். போய் தூங்குங்க சீனியர்.. பை டேக் கேர்” என அவள் அழைப்பை துண்டிக்க போக மீண்டும், “இசை இசை இசை..” வேகமாக அழைத்தவனோ “சின்ன கேப் கிடைச்சாலும் ஓடுறதுலையே குறியா இருக்கா..” என மனதில் அவளை கடிந்து கொண்டு, “இல்ல காலையில இருந்து தூங்கீட்டு தான இருந்தேன்.. இப்போ காய்ச்சல் இல்ல.. சோ ரெஸ்ட் எல்லாம் தேவையில்ல”
என்றான்.
“ஓ சரி சீனியர்” என்றவள் அடுத்த என்ன பேசுவதென தெரியாமல் அமைதியாக இருக்க தமிழோ “இவ வேலைக்கு ஆக மாட்டா.. நம்ம தான் கான்வோ டெவெலப் பண்ணனும்” என நினைத்தவன் அவளிடம் பேச்சு குடுக்க தொடங்கினான்.
“அப்பறம் இசை உன் செமினார் எப்படி போச்சு? நல்லா பண்ணியா?” என அவன் கேட்டதும் தான் தாமதம் காலையிருந்து செமினார் முடிந்ததும் அவளை ஆசிரியர் பாராட்டியது வரை ஒன்று விடாமல் சொல்லி முடித்தவள், “ரொம்ப தேங்க்ஸ் சீனியர் எல்லாம் உங்களால தான். நான் மேம் திட்டுவாங்களோனு பயந்துட்டே இருந்தேன் பட் பாராட்டுவாங்கனு கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல்ல.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் மகிழ்ச்சியாக.
Advertisement
அதற்குப் புன்னகைத்தபடி “நமக்குள்ள எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்..” என்றவன்,
சட்டென அந்த தேங்க்ஸில் நினைவு வந்தவனாய், “இசை ரியலி சாரி சொல்ல மறந்துட்டேன், அன்னிக்கு ஆடிஷன்ல ஹெல்ப் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்..” என நன்றி சொல்ல “ரொம்ப சீக்கிரம் சொல்லீட்டீங்க சீனியர்..” என்றாள் கிண்டலாக.
“சாரி இசை நான் அன்னிக்கே சொல்லியிருக்கணும்.. பட் அப்போ இருந்த மைன்ட்செட்ல எனக்கு சுத்தமா தோணவேயில்ல.. ரியலி சாரி.. அன்னிக்கு கேண்டீன்ல கூட உங்கிட்ட தேங்க்ஸ் சொல்ல தான் வந்தேன் ஆனா… ” என அவன் தீவிரமாக பேச அவனை தடுத்தவள், “சீனியர்.. சீனியர்.. நான் சும்மா தான் சொன்னேன்.. ஏன் இவ்வளோ சீரியஸ் ஆகுறீங்க.?” என கேட்க
“இல்ல இசை எனக்கு உன்கிட்ட தேங்க்ஸ் சொல்லாதது ஒரு மாதிரி கில்ட்டாவே இருந்துச்சு.. சாரி” என வருத்தமாக பேசினான் தமிழ்.
“இருங்க.. இருங்க.. இப்போ எதுக்கு இவ்வளோ சாரி..தேங்க்ஸ்.. எல்லாம்? கொஞ்சம் நேரத்திற்கு முன்ன நமக்குள்ள தேங்க்ஸ் எல்லாம் இருக்க கூடாதுன்னு சொல்லீட்டு.. இத்தனை தேங்க்ஸ் சொல்வீங்கனு தெரிஞ்சிருந்தா உங்களுக்கு முன்ன நான் அந்த டீல் போட்டிருப்பேன்” என அவனை இலகுவாக்கும் வகையில் பேசி இன்னிசை சிரிக்க தமிழும் புன்னகைத்தான்.
“இசை உன்கிட்ட ஒன்னு கேட்கனும் கேட்கலாமா?” என கேட்க “ஹான் கேளுங்க சீனியர்..” என்றாள்.
“அன்னிக்கு அந்த ஆடிஷன்ல நான் பாடுனது உனக்கு நிஜமாவே ரொம்ப பிடிச்சிருந்துச்சா..?” என வெகு நாட்களாக அவளிடம் கேட்க நினைத்ததை கேட்க
“என்ன சீனியர் இப்படி கேட்கிறீங்க? பிடிக்காம தான் உங்களுக்காக நாள் முழுக்க ஃபீல் பண்ணுவேனா..”
“அவ்வளோ நல்லாவா பாடுனேன்?”
“சூப்பரா பாடுனீங்க.. ப்பா உங்க வாய்ஸ் சான்ஸே இல்ல தெரியுமா.. அதுவும் ஸ்டார்டிங்ல.. அப்பறம்..” என சில வரிகளை எல்லாம் பாடிக் காட்டியவள், “ஹையோ அப்படி இருந்துச்சு தெரியுமா.. அவ்ளோ சூப்பரா பாடுனீங்க. உங்க வாய்ஸ் லா ஒரு தெரெப்பி ஒரு ட்ரக்ஸ் மாதிரி.. ரொம்ப அடிக்டிவ்” என அவனின் ரசிகையானவள் அவன் பாடலின் ஒவ்வொரு வரிகளையும் ரசித்து ரசனையாக பேச அந்த ரசிகையின் பேச்சில் அவளின் ரசிகன் ஆகிப் போனான் தமிழினியன்.
“இப்படி ரசிச்சு ரசிச்சு பேசுறியே மியூசிக்னா உனக்கு அவ்ளோ பிடிக்குமா இசை?”
“என் பேரே இன்னிசை எனக்கு மியூசிக் புடிக்காம இருக்குமா?… ரொம்ப பிடிக்கும் சீனியர்” என ரசனையாக சொன்னவள், “நிறையா.. பாட்டு கேட்பேன்” என்றாள்.
“ஓஓ அப்படியா.. யாரோட மியூசிக் எல்லாம் கேட்ப..?”
“அப்படி குறிப்பிட்டு சொல்றது ரொம்ப கஷ்டம் சீனியர்.. எல்லா மியூசிக் டைரக்டர் கிட்டயும் ஒரு ஸ்பெஷலிட்டி இருக்கும்.. ஒரு ஸ்டைல் இருக்கும். அது அவங்க அவங்க இசையோட அழகு. எல்லோரோட மியூசிக்கும் கேட்பேன்” என்றாள்.
“ஓ அப்போ குறிப்பிட்டு ஒரு மியூசிக் டைரக்டர் மட்டும் உனக்கு பிடிக்காதா?” என அவன் கேட்க “நான் எப்போ அப்படி சொன்னேன்..?” என்றாள் உடனே.
“அப்பறம்?”
“சொல்றது கஷ்டம்னு தான் சொன்னேன் பட் சொல்ல மாட்டேன்னு சொல்லலையே..!” என்றவள், “எனக்கு ஏ.ஆர். ரகுமான் மியூசிக்னா ரொம்ப பிடிக்கும்.. ஹி இஸ் லைக் மை அன் பெயிட் தெரபிஸ்ட்…” என்றாள் ரசனையாக.
ரகுமான் என்றதும் ஆர்வமானவன், “ஏன் ஏ.ஆர்.ரகுமான் மட்டும் விதிவிலக்கா?.. அப்படி என்ன ஸ்பெஷல்?..” என கேட்க, “தெரியல.. என்னோட மியூசிக் டேஸ்ட் அப்படினு சொல்லலாம்.. நான் தனியா இருக்கிற நேரத்தில்ல அவரோட சாங்ஸ் தான் அதிகமா கேட்பேன்.. அதுலையும் அவரோட 90ஸ் மெலோடீஸ் லாம் ப்லிஸ் ங்க” என்றாள் சில்லாக்கித்து.
“ஒரு பாட்டு நம்மளோட எவ்வளவு மோசமான மைன்ட் செட்டையும் மாத்துற அளவுக்கு பவர்ஃபுல் ஆனது. காலையில்ல இருந்து அந்த நாள் எவ்வளவு மோசமா போயிருந்தாலும் சரி. இந்த மாதிரி ஒரு இராத்திரி நேரத்தில..” என இசை கூற
“ஹம் இந்த மாதிரி ஒரு அமைதியான இராத்திரி நேரத்தில.. மாடியில அந்த நிலாவ ரசிச்சிட்டே.. கூடவே ரகுமான் பாட்டு கேட்டா.. மொத்த டிப்ரஷனும் கிலோஸ்” என அவளை போலவே ராகம் இழுத்து ரசனையாய் பேசினான் தமிழ்.
தமிழ் பேச்சை ஆச்சரியமாக கேட்டவள், “எப்படி சீனியர்…!!!! நானும் இதேதான் சொல்ல வந்தேன்..” என சிரிப்புடன் கூற, “அதெல்லாம் அப்படி தான்.. ஒரு மேஜிக்கல் ஃபீல்” என்றான் ரசனையான.
“நீங்களும் ஏ.ஆர்.ரகுமான் ஃபேனா..?” ஆர்வமாக வந்தது இசையின் குரல்.
“ம்ம்.. சின்ன வயசுல இருந்து.. அவரோட பாட்ட கேட்டு தான் பாட ஆரம்பிச்சது,மியூசிக் எல்லாம்.. நான் சின்ன பையனா இருக்கப்போ முதல் முதல்ல எங்க அம்மா உலக அதிசயங்கள காட்ட பூவுக்குள் ஒளிந்திருக்கும் பாட்ட எனக்கு அறிமுக படுத்துனாங்க.. அப்போவே என்னமோ எனக்கு அந்த சாங்னா அவ்ளோ இஷ்டம்.. அதுல இருந்து அவரால தான் எனக்கு மியூசிக் மேல இன்ட்ரெஸ்ட்டே வந்துச்சு..” என சிறு வயது நினைவுகளை அவன் பகிர
“ச்சே செம சாங் ல சீனியர்.. எனக்கும் ரொம்ப பிடிக்கும். எங்க அம்மாவும் சின்ன வயசுல அந்த சாங்ல தான் வண்டர்ஸ் ஆஃப் தி வேர்ல்ட் காட்டுவாங்க..” என்றாள் அவளின் சிறு வயது நினைவுகளுடன்.
மேலும் ரகுமான் ராஜா என இருவருக்கும் பிடித்த இசையையும் பாடல்களையும் பற்றி பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை.
“அவரோட பழைய 90s பாட்டுலாம் இன்னும் சூப்பரா இருக்கும் கேட்டுப் பாரு.. நான் என் பிளே லிஸ்ட் உனக்கு ஷேர் பண்ணுறேன்” என்று தமிழ் சொல்ல
“ஹப்பா.. ஃபைனலி என்னோட மியூசிக் வைப் ல இருக்க ஒருத்தர கண்டுபிடிச்சுட்டேன்..” என்றாள் இசை உற்சாகமாக. அவளை போன்ற ரசனை கொண்ட ஒருவனை கண்டு கொண்ட உற்சாகம் அவளிடம்.
“சரி சீனியர் ரொம்ப நேரம் பேசிட்டோம்.. நான் வைக்குறேன். நீங்க உடம்ப பாத்துக்கோங்க.. ” என அவள் அழைப்பை துண்டிக்க போக, “அதுக்குள்ளையா..?” என்றான் ஏக்கம் எட்டிப் பார்க்க தமிழ்.
“அதுக்குள்ளையா வா?… சீனியர் நேரத்த பாத்தீங்களா.. நம்ப கிட்ட தட்ட ரெண்டு மணிநேரம் பேசிருக்கோம்” என்றாள் சிரிப்புடன். “அவ்ளோ நேரம் ஆயிருச்சா.. உன் கூட பேசுனா நேரம் போறதே தெரியலை இசை..” என அவன் ராகமாக இழுக்க, “ம்ம் தெரியாது.. தெரியாது..” என்றாள் அவனைப் போலவே ராகமாக.
“சரி சீனியர்.. நாளைக்கு மறக்காம காலேஜ் வந்துருங்க.. உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.. “
“சர்ப்ரைஸா.. என்ன சர்ப்ரைஸ்? இப்படி சஸ்பென்ஸ்லா வைக்காத இசை”
“சஸ்பென்ஸா இருந்தா தான் அது சர்ப்ரைஸ்.. நாளைக்கு காலேஜ் வந்திருங்க நான் காலேஜ்ல சொல்றேன்.. பாய்.. உடம்ப பாத்துக்கோங்க” என அழைப்பை துண்டித்து விட்டாள்.
தமிழுக்கு இசையுடனான இரண்டு மணி நேர உரையாடல் போதவே இல்லை. அவளுடனான நேரங்கள் நீளவே அகம் ஆசைக் கொண்டது.
மறுநாள் கல்லூரியில் தமிழுக்கு நேரமே ஓடவில்லை. முதல் ரெண்டு வகுப்புக்கள் எப்போதும் முடியும் என இடைவெளிக்காக காத்துக் கொண்டிருந்தான்.
இடைவெளி விட்டதும் முதல் வேலையாக இசையை பார்க்க தான் எழிலையும் இழுத்துக் கொண்டு ஓடினான் தமிழ்.
கேண்டீனில் அவர்கள் அடிக்கடி சந்திக்கும் இடத்திற்கு வந்து அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான்.
“இப்போ எதுக்கு இவ்வளவு அவசரமா என்ன இழுத்துட்டு வந்த?” என எழில் கேட்க, “இசை எனக்கு ஏதோ சர்ப்ரைஸ் வெச்சிருக்கேன்.. மறக்காம நாளைக்கு காலேஜ் வந்திருங்க.. காலேஜ்ல சொல்றேன்னு சொன்னா.. இன்னும் ஆள காணோம்” என அவளை தேடியபடியே சொன்னவன் “என்ன சர்ப்ரைஸா இருக்கும்..? எனக்கு ஓரே ஆர்வமா இருக்கு டா..” என பதட்டமாக பேசிக் கொண்டிருந்தான்.
தமிழை சீண்ட நினைத்த எழில், “ஹாய் இசை..!” அவனுக்கு பின்னே கை காட்ட முகம் பிரகாசிக்க திரும்பியவன் அங்கு இசை இல்லை என்றதும் கடுப்பாகி எழிலின் சட்டையை பிடித்து, “டேய் உன்ன கொல்லப் போறேன்..” என கோவப்பட அவன் பிடியிலிருந்து விலகி நின்று கேலியாக சிரித்தான் எழில்.
அவன் சிரிப்பில் எரிச்சலான தமிழ் அவனை முறைக்க; மேலும் அவனை சீண்டி கடுப்பேற்றி கலாய்த்த எழில், “அதெல்லாம் இருக்கட்டும்.. இசை இசைனு அந்த பொண்ணு பேர சொன்னாலே உன் மூஞ்சி டால் அடிக்கிதே.. என்ன லவ்ஸா?” என கேட்டு அவன் முகத்தை குறுகுறுவென பார்த்தான்.
இசை என்றதும் இலகுவானவன், “இப்போதைக்கு இல்ல..” என்றான்.
“இதென்ன பதில்..?”, கடுப்பாக எழில் கேட்க
“எனக்கு அவ மேல ஒரு க்ரஷ்னு வச்சிக்கோ.. பட் லவ் தான் சொல்ற அளவிற்கு டீப்பா எந்த ஃபீலிங்ஸும் இல்ல.. மே பீ போக போக அவ மேல இருக்க ஃபீலிங்ஸ் போகலாம்.. இல்ல இன்னும் டீப் ஆகி அவள லவ் கூட பண்ணலாம்.. ஆனா இப்போதைக்கு இல்ல” என தமிழ் தோளை குலுக்க
“என்னமோ போ.. லவ்வு கிவ்வுனு கண்ண கசக்கீட்டு வந்த நில்லு.. அப்போ இருக்குது டா உனக்கு” என்றான் எழில்.
அதற்குள் இசையும் மலரும் வந்துவிட இவர்களின் பேச்சு தடைப்பட்டது.
அவள் வந்ததும் வாரததுமாய்
“இசை என்ன சர்ப்ரைஸ் சீக்கிரம் சொல்லு” என தமிழ் ஆர்வமாக கேட்க
“அவ்ளோ ஆர்வமா சீனியர்.. இருங்க ஒரு நிமிஷம்” என்றவள் அவள் போனில் இருந்த இன்ஸ்டாகிராம் போஸ்டை காட்ட தமிழுக்கு சப்பென ஆகிவிட்டது, “இதுக்கு தான் இவ்வளவு பில்டப் விட்டாளா” என ஏமாற்றம் அடைந்தவன், “இது தான் அந்த சர்ப்ரைஸா?” என கேட்டான்.
“ஆமா சீனியர்.. ” என புன்னகைத்தவள், “என் ஃப்ரண்ட் இந்த காலேஜ்ல தான் படிக்கிறா.. அடுத்த வாரம் அவங்க காலேஜ்ல பெரிய கல்சுரல் ஈவண்ட் நடக்குதாம்.. நிறையா காம்பெட்டீஷன்ஸ் நடக்குது.. எல்லாத்துக்கும் கேஷ் பிரைஸ் வேற இருக்கு.. நீங்க மட்டும் கலந்துக்கிட்டா கண்டிப்பா நீங்க தான் ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்குவீங்க” என்றாள்.
அதை அவளிடமே திருப்பிக் கொடுத்தவன், “இல்ல இசை நான் இதுல எல்லாம் கலந்துக்கல” என்க “ஏன் சீனியர்?” என கேட்டாள் ஏமாற்றமாக.
“ம்ச் அதெல்லாம் வேண்டாம் இசை..”.
“ஏன் நம்ம காலேஜ் மாதிரி ஏதாவது பண்ணுவாங்கனு யோசிக்கிறீங்களா?”
“ம்ச்.. இங்கேயே இவ்வளவு பாலிடிக்ஸ்.. அங்கயெல்லாம் எப்படி இருக்குமோ… நான் கலந்துக்கல”
“எல்லா இடத்துலையும் பாலிடிக்ஸ் இருக்காது.. சும்மா ஏதாவது காரணம் சொல்லாதீங்க. எழில் அண்ணா சொல்லுங்க” என எழிலை துணைக்கு அழைத்தாள்.
“ஆமா.. ரொம்ப சீன் போடாத.. ஒழுங்கா கலந்துக்கோ” என எழிலும் இசைக்கு ஆதரவாக பேச
“அவ தான் சின்ன புள்ள ஏதோ சொல்றானா நீயும் அவ கூட சேர்ந்துட்டு புரியாம பேசாத டா..” என எழிலிடம் எரிந்து விழுந்தவன், “இசை பிளீஸ் என்ன வற்புறுத்தாத.. சொன்னா புரிஞ்சுக்க” என அதிருப்தியாக அவளை பார்த்தான்.
“அன்னிக்கு நீங்க தான் இந்த காம்பெட்டீஷன் போச்சுனா இன்னொன்னு சொன்னீங்க.. இப்போ இப்படி பேசுறீங்க” என இசை கேட்க
“அன்னிக்கு ஏதோ நீ எனக்காக ஃபீல் பண்ணது எனக்கு கஷ்டமா இருந்துச்சு.. அதான் சும்மா உன்ன சமாதானப் படுத்த அப்படி சொன்னேன்”
“பிலீஸ் சீனியர் இந்த ஓரே டைம் எனக்காக ..” என இசை கெஞ்சலாக கேட்க
“பிளீஸ் இசை.. இந்த விஷயத்தில மட்டும் என்ன வற்புறுத்தாத… என்னோட மனச புரிஞ்சுக்க பாரு. இதுக்கு மேலேயும் என்னால ஏமாற்றத்தையோ அவமானத்தையோ ஃபேஸ் பண்ண முடியாது.. அப்படி பண்ணி நானே என்ன காயப்படுத்திக்க விரும்பல. ஒவ்வொரு தடவ காம்பெட்டீஷனுக்கு ஓடி வாங்க அந்த ஹெச்.ஓ.டி கிட்ட எவ்வளவு பேச்சு வாங்கனும் தெரியுமா?, சும்மா சும்மா ஓடி வாங்கிற காம்பெட்டீஷன் போற ஒரு தடவையாவது ஜெயிச்சிருக்கியா கேட்டு அவ்வளவு அசிங்கமாக பேசுவாரு..” என வேதனையாக கூறினான்.
“சீனியர்..” என இசை ஏதோ சொல்ல வர கை நீட்டி தடுத்தவன், “நீங்க யாரும் என் மனநிலைய புரிஞ்சுக்க தயாரா இல்ல.. இனி இந்த காம்பெட்டீஷன் ஆடிஷன்னு இத பத்தியெல்லாம் என் கிட்ட யாரும் பேசாதீங்க..” என்றவன் கோவத்தில் எழுந்து சென்றுவிட இசைக்கு முகமே மாறிவிட்டது.
அவளின் முக மாற்றத்தை பார்த்த எழிலுக்கு மிகவும் கஷ்டமாக போனது. தமிழின் இந்த நடவடிக்கை அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
இசையின் முகம் மாற மலருக்கு கோவம் வந்துவிட்டது, “ஏங்க உங்க ஃப்ரண்ட் என்ன தான் நினைச்சுட்டு இருக்காரு?.. அவருக்காக தான இவ இவ்வளவு பண்றா.. இப்படி பேசீட்டிருக்க பேசீட்டிருக்க எழுந்து போனா என்ன அர்த்தம்?” என எழிலிடம் சண்டைக்கு வர எழலிற்கு கோவம் வந்துவிட்டது.
“நீ மத்த நேரம் எல்லாம் சீனியர்.. சீனியர் னு அவன்கிட்ட நல்லா தானே பேசுவ.. உனக்கு நிஜமாவே இசை மேல பாசம் இருந்தா நேரா அவன்கிட்டயே கேட்க வேண்டியது தான?.. சும்மா என்கிட்ட எகிறீட்டு இருக்க” என மலரிடம் எழில் கத்த
அவனின் “நிஜமாவே இசை மேல பாசம் இருந்தா” என்ற வார்த்தைகளில் தூண்டிவிட பட்டவளோ தமிழிடம் சண்டைக்கு போக எழ அவளை பிடித்து உட்கார வைத்த இசை, “ஏன் அண்ணா நீங்க வேற.. அவளே எப்போடா னு சண்டைக்கு நிப்பா” என்றாள் சலிப்பாக.
“பின்ன இவ இப்படி ஓவரா பேசுறா..” என்ற எழில் மலரை முறைக்க அவனுக்கு சளைக்காமல் அவனை பார்த்து முறைத்தாள் மலர்.
“இசை அவன் அப்படி எழுந்திருச்சு போனது தப்பு தான். அவனுக்காக நான் உன் கிட்ட சாரி கேட்கிறேன்.. அவன் சரியான லூசு கோவத்துல எப்படி ரியேக்ட் பண்றதுனு தெரியாம லூசுத்தனமா பண்ணீட்டு இருப்பான். அவன் இவ்வளவு கோவப்படுறானா.. அவன் அந்த அளவுக்கு ஹர்ட் ஆகியிருக்கான் இசை.. உனக்கு புரியும்னு நினைக்கிறேன் அன்னிக்கு நீயே அந்த ஆடிஷன்ல பாத்தியில” என எழில் தமிழுக்காக பேச ஆமோதிப்பாய் தலையாட்டியவள், “அன்னிக்கு அவர் அடிஷன்ல ஃபீல் பண்ணத பார்த்த தால தான் அண்ணா.. இன்னிக்கு இந்த காம்பெட்டீஷன் பத்தியே அவர் கிட்ட பேசுறேன்” என்றாள்.
“எனக்கு நீ சொல்ல வரது புரியுது இசை” என்றவன், “ஒரு நிமிஷம் அந்த இன்ஸ்டா போஸ்ட காட்டேன்” என கேட்க எழிலிடம் அதை காட்டினாள். அதை வாங்கிப் பார்த்தவன், “அடுத்த வாரம் தான காம்பெட்டீஷன்.. இன்னும் ரெஜிஸ்டரேஷனுக்கு டைம் இருக்குல, விடு நான் பாத்துக்கிறேன். அவன எப்படி அந்த போட்டியில கலந்துக்க வைக்கிறதுனு எனக்கு தெரியும். நீ நான் சொல்றத மட்டும் அப்படியே ஃபாலோ பண்ணு போதும்” என்றவன் என்ன செய்ய வேண்டும் என கூற இசையும் சம்மதமாய் தலையாட்டினாள்.
அவர்களை அவர்களின் வகுப்பிற்கு அனுப்பி வைத்துவிட்டு அவன் வகுப்புக்கு வந்த எழில் தமிழிடம் பேசவே இல்லை. கிளாசுக்கு வந்ததும் கொஞ்ச நேரம் கோவத்தில் இருந்த தமிழ் எழில் அவனிடம் பேசாததை கவனிக்கவில்லை. கோவம் தனிந்தவன் எழிலிடம் சாதாரணமாக பேச அவன் இவனிடம் பேசாமல் இவனை தவிர்த்தான்.
கொஞ்ச நேரம் எழிலின் தவிர்ப்பை பொறுத்துக் கொண்டவன் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, “இப்போ நீ எதுக்கு போசாம இவ்வளவு சீன் போடுற” என அவனிடம் கோவமாக கேட்க எழில் அதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக அவனை கண்டுக் கொள்ளாமல் இருந்தான்.
அதில் இன்னும் எரிச்சலான தமிழ், “உன் கிட்ட தான கேட்கிறேன்.. ஏன் இப்படி ஓவரா பேசாம சீன் போடுற” என எழிலிடம் கத்த “நான் ஒன்னும் உன்ன விட ஓவரா சீன் போடல” என்றான் எழில் தமிழை முறைத்தபடி.
“டேய் அவ தான் சின்ன பொண்ணு.. ஏதோ புரியாம பேசுறானா.. நீயும் அவ கூட சேர்ந்துட்டு இப்படி பண்ணா என்ன அர்த்தம்” என்ற படி அவனின் கையை பிடிக்க அவன் கையை உதறியவன், “அதுக்கு நீ அப்படி தான் மூஞ்சியில அடிச்ச மாதிரி எழுந்திருச்சு வருவியா? ஏன் டா அந்த பொண்ணுக்கு என்ன அவசியம் தேவையில்லாம உன் கிட்ட வந்து பேச்சு வாங்கனும்னு? உனக்காக தான அவ அவ்வளவு ஆசையா வந்து சொன்னா.. நீ பாட்டுக்கு மூஞ்சில அடிச்ச மாதிரி எழுந்திருச்சு வர. பாவம் அந்த புள்ள மூஞ்சியே மாறிப் போச்சு.” என எழில் கூற தமிழுக்கே அவன் செயலில் அதிருப்தி, “கொஞ்சம் ஓவரா பண்ணீட்டோமோ” என வருந்தினான்.
அதன் பிறகு தமிழ் எவ்வளவோ முயற்சி செய்தும் எழில் அவனிடம் பேசவில்லை. உணவு இடைவேளையில் இசையை தேடி சென்றவன், அவளிடம் மன்னிப்பு கூற அவனை நிமிர்ந்து பார்த்தவள் பதில் ஏதும் சொல்லாமல் சென்றுவிட அவளையே ஏக்கமாக பார்த்துக் கொண்டு நின்றான் தமிழினியன்.
error: Content is protected !!