Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிறம் தந்த வானவில் 20

அத்தியாயம் 20

குளியலறையிலிருந்து அவள் வெளிவருவதற்குள் முடிக்க வேண்டிய சிலதை முடித்து விட நினைத்தான் ஏகலைவன். சரியாக பாவை வெளிவரவும், அவன் செய்ய வேண்டிய வேலையை முடிக்கவும் சரியாக இருந்தது… கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பி பாவையைப் பார்த்தவன் இமைகள் இரண்டும் மீண்டும் இணைவேணா என்று அடம் பிடித்தது ஆடவனுக்கு.



Advertisement

 முதலில் போனிடைலில் இருந்தவள் தற்போது ஃப்ரீ ஹேரில் இருந்தாள். முக பொலிவு இல்லையென்றாலும் முன்பிருந்த நிமிர்வும், கம்பீரமும் வந்திருந்தது ஆரிக்கு. அவளின் அழகை ரசித்தானோ இல்லையோ மங்கையின் நிமிர்வை ரசித்தான். சற்று முன் அவளிடம் குறைவது போல் தோன்றியது இந்த நிமிர்வு தானோ?

“போகலாமா?…” என்பதை போல் தலையசைத்தாள். அந்த நிமிடம் பட்டென நீர் குவியலாய் ஏதோ ஒன்று ஆடவனின் மனதை தாக்குவது போல் ஓர் மாயை… கீழ் இதழ்களை அழுத்தி கடித்துக் கொண்டவன் அவளுக்கு பதில் சொல்லும் விதமாக தலையசைத்து விட்டு வெளியே வந்து விட்டான்.

Advertisement

Advertisement

மனம் படபடவென அடித்துக் கொண்டது. இதயத்தை தடவிக் கொண்டே மங்கை வரும் திசையை பார்த்தான். காற்றில் மிதந்த கேசத்தை செவியோரம் ஒதுக்கியப்படி வந்தாள்.

அவள் வருவது என்னவோ சாதாரணமாக தான் இருந்தது. ஆனால் இவனுக்கு தான் பாவை வருவது ஸ்லோமோஷனில் நடந்து வருவது போல் தோன்றியது. கூடவே இளையராஜா இசையோடு ஏ.ஆர் ரஹ்மானின் குரல் வேறு கேட்க, அந்த நிமிடம் தனக்குள் தோன்றும் உணர்வுகளை அடக்க பெரும்பாடுபட்டு போனான் ஏகலைவன்…

Advertisement

இதழ்களில் புன்னகையுடன் அசையாமல் நின்றிருந்தவனை கண்களை சுருக்கி பார்த்தவள் கலையின் அருகில் சென்றதும் ‘என்ன?..’ என்பதை போல் புருவத்தை ஏற்றியிறக்கி கேட்டாள்.

மங்கையின் புருவத் தூக்கலில் தன்னிலைக்கு வந்தவன் அவசரமாக ஒன்றுமில்லை என தலையாட்டி முன்பக்க கார் கதவை திறந்து விட, அவனை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவள் காரில் ஏறியமர்ந்தாள்.

மங்கை காரில் ஏறியதும் இழுத்து பிடித்த மூச்சை வெளியிட்டப்படி

பின்னங்கேசத்தை அழுத்தி கோதிக் கொண்டே டிரைவர் சீட்டில் அமர்ந்தான்.

‘எங்கு செல்கிறோம்’ என்று கேட்கும் நிலையில் அவளும் இல்லை, இங்கு தான் செல்கிறோம் என்று கூறும் நிலையில் கலையும் இல்லை. மனதில் எழுந்த மெல்லிய உணர்வை அனுப்பவித்தப்படியே மருதமலை கோவில் வரை வந்துவிட்டான்.

“என்னதான் நினைச்சிட்டு இருக்கான் உங்க பையன்? இப்பவே மணி எட்டாச்சு! இன்னும் அவனை காணோம். எங்க போயிட்டான்னு தெரியல! நானும் பத்து காலுக்கு மேலே பண்ணிட்டேன் ஒரு கால் கூட எடுக்கவேயில்லை… ஒரு தடவை அட்டன் பண்ணி பேசினாதான் என்ன? எங்க இருக்கான்னும் தெரியல? கொஞ்சம் கால் பண்ணி தான் கேளுங்களேன்…” என சிடுசிடுவென பேசிக் கொண்டிருந்த தாயின் குரல் கோவில் வளாகத்தில் நுழைந்த கலைக்கு நன்றாகவே கேட்டது.

கூடவே “இந்த நேரத்துல சொல்லாமல் கொள்ளாமல் போயிருக்கான்னா முக்கியமான வேலையா இருக்கும் சௌந்தர்யா, கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணலாமே…” என மகனுக்கு பரிந்து பேசிக் கொண்டிருந்த ராஜின் குரலும் கேட்டது. எப்போதும் போல தந்தையின் பேச்சில் ஆடவனின் இதழ்கள் புன்னகையில் மலர அவர்களை நோக்கி நடந்தான்.

சிலடி தூரத்தில் வந்து கொண்டிருந்தவனை முதலில் கவனித்தது என்னவோ சௌந்தர்யா தான். புருவங்கள் நெறிய மகனையும் மகனுக்கு அருகில் வரும் பெண்ணையும் பார்த்தவர் “உங்க பையன் வந்துட்டான்…” என்றார் அருகில் அமர்ந்திருந்த கணவனிடம்.

சௌந்தர்யாவின் குரலில் தியாகராஜன் மட்டுமல்ல ஐயர் கூறி சென்ற வேலைகளை செய்து கொண்டிருந்த காசியும், மகளை மடியில் வைத்தபடி அமர்ந்திருந்த மேகலையும் கூட நிமிர்ந்து பார்த்தனர்.

“தட் ஒயிட் ஷர்ட் என் அப்பா,அவருக்கு பக்கத்துல பிங்க் அண்ட் லைட் கிரீன் கலர் சரீ என் அம்மா… அண்ட் அப்பாக்கு சைடுல டார்க் கிரீன் கலர் சரீ என் தங்கச்சி மணி, அண்ட் ஐயர் பக்கத்தில டார்க் கிரீன் கலர் ஷர்ட் போட்டுட்டு இருக்கறது என் மச்சான் காசி…” அவளுடன் இணைந்து நடந்து கொண்டே தூரத்திலிருந்தவர்களை பார்த்தபடி கூறினான்.

கலை பேச பேச எப்போதும் போல மெளனம் மட்டுமே அவளிடமிருந்து பதிலாக வந்தது. தன் பேச்சிற்கு மங்கையிடம் பதிலில்லை என்பதை சில நிமிடங்களுக்குப் பின்பே உணர்ந்தான். அதற்கான காரணத்தை மறவோனின் மனம் முழுவதும் உணரும் முன்பே “மறுபடியும் மறுபடியும் தப்பு பண்றீங்க ஏகலைவன்…” என மாயவனின் மதி சற்று கடுப்பாகவே கூறியது.

“ஷ்…” நாக்கைக் கடித்தபடி பக்கவாட்டில் திரும்பி ஆரியை பார்க்கவும், அவள், இவன் புறம் திரும்பவும் சரியாக இருந்தது.

“உங்க அப்பா, அம்மா…” என புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டவளிடம் ஆமென இமை மூடித் திறந்தான். “ம்…” என்றவளின் பார்வை அவர்களின் மீது பட்டுத் தெறித்தது.

ஆடவளின் பார்வை தங்களின் மீது படிந்ததும் “வா மா…” என்றபடி பெரியவர்கள் இருவரும் எழுந்து நிற்க இருவரையும் பார்த்து புன்னகைத்தாள்.

பதிலுக்கு புன்னகைத்த சௌந்தர்யா மகனை பார்த்தபடி “யாரு ப்பா உன் ஃப்ரெண்ட்டா…” என்றார். அதற்கு கலை பதில் கூறும் முன் “எங்க எம். டி அத்தை…” என்றான் காசி. பேச்சு சௌந்தர்யாவிடம் இருந்தாலும் பார்வை கலையின் மீது அழுத்தமாக படிந்தது…

காசியின் பார்வை ஏனோ கலைக்கு எரிச்சலை கொடுத்தது. கேசத்தை அழுத்தி கோதிக் கொண்டவன் காதில் ‘உன்னை மாதிரி ஒருத்தனை இந்த பொண்ணு கல்யாணம் பண்ணிட்டா அவளோட வாழ்க்கையே குழியில விழுந்தது போல ஆயிடும். ஓபனா சொல்லனுன்னா அந்த பொண்ணு என்ன பேசினாலும் பெண்ணியம், பெரியாரிசம் பேசறயான்னு அவளை நிமிர்ந்து கூடப் பார்க்காம பண்ணிடுவ நீ…’ என்ற காசியின் வார்த்தை ரீங்காரம் போல் கேட்டது. பொசுக்கென்று முகம் இறுக கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே காசியின் பார்வைக்கு பதில் பார்வை பார்த்தப்படி நின்றான்.

கலையின் பார்வையில் என்ன உணர்ந்தானோ காசியும் சௌந்தர்யாவிடம் திரும்பி “அத்தை, ஐயர் சில திங்க்ஸ் வேணும்னு சொன்னாரு நானும், மச்சானும் பக்கத்துல இருக்கிற கடைக்கு போயி வாங்கிட்டு வந்துடறோம்… ” என்றான் காசி…

காசி எதற்காக அழைக்கிறான் என்று புரிந்தது கலைக்கு. கண்களை இறுக மூடித் திறந்தவன் பக்கவாட்டில் நின்ற பெண்ணை பார்த்தான். அதே சமயம் காந்தையும் ஆடவன் புறம் திரும்பிட கலையின் நயனங்கள் இரண்டும் விரிந்து கொண்டது. கலையின் விழி விரிப்பை புரியாமல் பார்த்தவள் ‘என்னாச்சு…’ என்பதை போல கண்களை சுருக்கி கேள்வியாக பார்த்தாள்.

ஒன்றுமில்லை என தலையாட்டியப்படி “பியூ மினிட்ஸ்ல வந்துடறேன் மா…” எனக் கூறியவனுக்கு இதழ்களில் மெல்லிய புன்னகை… அவனையும், அவன் புன்னகையையும் குறுகுறுவென பார்த்தபடி சரியென தலையாட்டினாள்.

அதே சமயம் இருவரையும் பார்த்த காசிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. அதுவும் கலை, அவளை அழைக்காமலயே அவன் புறம் திரும்பியது காசிக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.இருவரையும் யோசனையுடன் பார்த்தபடி நின்றவனுக்கு ஒருவேளை இருவரும் விரும்புகிறார்களோ? என்ற கேள்வி முன் வந்து நிற்க கலையை அழைத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

இங்கு பூஜைக்கு தேவையான பொருட்களை மீண்டுமொருமுறை சரி பார்த்த சௌந்தர்யாவோ “என்ன திங்க்ஸ் இல்லை மாப்பிள்ளை ஐயர் கேட்ட எல்லாமே இருக்கே…” எனக் கேட்டபடி திரும்ப, அவரின் மகனும், மருமகனும் அவ்விடத்தில் இல்லை.

கண்களில் கோபத்தை தேக்கி”என்னங்க இது?…’ என்பதை போல கணவனை பார்த்தார் சௌந்தர்யா.

“நான் போய் பார்க்குறேன் மா, நல்ல நேரம் முடியறதுக்குள்ள பேத்திக்கு பேர் வைச்சுடலாம்,நீ டென்சன் ஆகாத…” என கூறியவருக்கு தெரியவில்லை இன்று அவரின் பேத்திக்கு பெயர் வைக்கும் வைபோகம் நின்றுவிடுமென்று…

கணவன் அவர்களை நோக்கி நடக்கவும் தான் சௌந்தர்யாவிற்கு மூச்சே வந்தது… இருவர் மட்டுமே சென்றிருந்தால் நேரத்தை பார்த்தபடி படபடப்போடு இருந்திருப்பார். தற்போது கணவனும் அவர்களுடன் சென்றதால் சில நிமிடங்களில் வந்து விடுவார்கள் என்ற நிம்மதியுடன் ஆரியின் புறம் திரும்பினார்.

“எவ்வளவு நேரம் தான் நின்னுட்டே இருப்ப மா, அப்படி உட்காரலாம் வா…” என கூறியவர் முன்பு அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தார். அவரை தொடர்ந்து மேகலை அமர அவர்களுக்கு எதிரில் ஆரியாவும் அமர்ந்தாள்.

இருவரையும் பார்த்து இதழ் பிரியாமல் சிரித்து வைத்தாள். அவளுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை… இப்படியான சூழ்நிலைகளை அதிகம் சந்தித்தது இல்லை என்பதாலோ என்னவோ சற்றே தயங்கினாள். அதே கணம் தன்னை தனியே தவிக்க விட்டு சென்றவன் மீது கடுப்பாக வந்தது… மனதின் எரிச்சலை முகத்தில் காட்டாது அமர்ந்திருந்தாள்.

ஆரியை இமைக்காது பார்த்த மேகலையோ தாயிடம் திரும்பி மெல்லிய குரலில் ” இவங்களுக்கு காது கேட்காதுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க ம்மா, அது மட்டுமல்ல ரொம்ப அழகா இருக்காங்க, கார்சியஸ்…” என்றாள் சிலாகித்து…

இருவரிடமும் தனது எம்.டி.யான ஆரியைப் பற்றி அடிக்கடி கூறியிருக்கிறான் காசிநாதன். அதன்படி காசியின் எம்.டியை பற்றி தெரியுமே தவிர ஆரியை நேரில் பார்த்தது இல்லை, இன்று தான் சந்திக்கின்றனர்…

மகளின் கூற்றில் சிரித்தவர் ஆரியிடம் “உங்களை பத்தி மாப்பிள்ளை அடிக்கடி பேசுவார் மா, அப்ப இருந்தே உங்களை பார்க்கணும் ஆசை, இங்க வரும் போதெல்லாம் உங்களை பார்க்கலாம், பேசலாம்னு நினைக்கிறது அப்பறம் வேலையில மறந்துடறது, ஆனால்

இன்னைக்கு பார்ப்பேன்னு எதிர் பார்க்கல மா… உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோசம், ஆம்பளை இல்லாம ஒரு பெண்ணால எதுவும் முடியாது சொல்றவங்க மத்தியில நீங்க தனிச்சு நிமிர்ந்து நிக்கறது ரொம்ப பெருமையா இருக்கு மா, இதே தன்னம்பிக்கையோடவும் நிமிர்வோடவும் நீங்க நிறையா சாதிக்கணுன்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்…” என்றார் மனதார.

அதற்கு அவள் பதில் கூறும் முன்பே “மேல மேல சாதிக்காம என்ன பண்ணுவா? அதான் என் பையனை கைக்குள்ள போட்டு வைச்சிருக்காளே, அவனும் இவ பேச்சை தான் கேட்டுட்டு ஆடிட்டு இருக்கான்…” என்ற குரலில் சௌந்தர்யாவும், மேகலையும் குரல் வந்த திசையை பார்த்தனர்… இருவரின் பார்வை செல்லும் திசையில் பயணித்தது ஆரியின் விழிகள்.

அசோக்கின் தாய் தான் நின்றிருந்தார்… எதிர்பார்த்தது தானே என நினைத்தப்படி கண்களை இறுக மூடித் திறந்தவள் எழுந்து நின்றாள். அதற்குள் அவரும் இவளை நெருங்கியிருந்தார்.

“என்னடி சொல்லி வைச்ச என் பையன்கிட்ட? இத்தனை வருசத்துல என் மகன் என்னை ஒரு வார்த்தை எதிர்த்து பேசனது கிடையாது… ஆனா இன்னைக்கு எல்லார் முன்னாடியும் அவன் என்னை அசிங்கமா பேசி வெளிய போங்கன்னு சொல்லிட்டான். இதுக்கு காரணம் நீதான்னு எனக்கு தெரியும், உன்னை இப்படியே விட்டா தானே அவன்கிட்ட என்னைபத்தி சொல்லுவ,…” என்றவரின் பேச்சை ஆரி புரிந்து கொள்ளும் முன்பே காந்தையின் கற்றை கூந்தலை இறுக பற்றி அவளை அடிக்க கை ஓங்கிய சமயம் எவருமே எதிர்பாராத வகையில் அந்த பெண்மணியின் கன்னத்தில் இடியாய் இறங்கியது ஏகலைவனின் கரம்…

கோவில் வளாகத்திலிருந்து வெளிவந்தும் வராமல் ” நீயும், ஆரியும் லவ் பண்றீங்களா டா?…” என்ற காசியின் கேள்விக்கு கலை பதில் கூறும் முன்பே தியாகு அவ்விடத்திற்கு வந்திருந்தார்.

‘நீங்க இரண்டு பேரும் திங்க்ஸ் வாங்கி கிழிச்சது போதும்,வாங்க போலாம்…’ என்பதை போல் இருவரையும் கையோடு உள்ளே அழைத்து வந்திருந்தார்.

அந்த சமயம் அசோக்கின் தாய் தன் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தான் ஏகலைவன். நிமிடம் எதைப்பற்றியும் யோசிக்காது ஆரியை வேகமாக நெருங்கினான். அதற்குள் அசோக்கின் தாய் மங்கையின் கூந்தலை பற்றியிருக்க வந்ததே கோபம், இன்னார் வீட்டு பெண்மணி என்றும் பார்க்கவில்லை, வயதில் மூத்தவர் என்று பார்க்கவில்லை சட்டென கையை நீட்டி விட்டான்.

கலை அடித்த அடியில் தன்னாலேயே ஆரியின் கேசத்திலிருந்து கையை எடுத்திருந்தார் அசோக்கின் தாய். அன்னிச்சையாக அவரின் பார்வை தன் முன் ருத்ர மூர்த்தியாய் நின்ற ஆடவனை மேல் விழுந்தது.

“இதுக்கு மேல ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வந்துச்சுன்னுவை, முன்னாடி மாதிரி உன் பையனுக்கு கால் பண்ணி சொல்லிட்டு இருக்க மாட்டேன். நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு தான் கால் போகும்…” என மிரட்டினான்.

அவனின் மிரட்டலையும், அடியையும் துளியும் கண்டுகொள்ளாமல் ஆரியிடம் திரும்பி “ஒரு ஆம்பளையை கூட விடல போல…” என் கேட்டார். அந்த நிமிடம் அவரின் இதழ்களின் அசைவு ஆரிக்கு நன்றாக புரிய கூசி போனவளாய் கலையை அழுத்தமாக பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

நிலைகுலைந்து செல்லும் பெண்ணின் பின்னாலேயே செல்ல துடித்த கால்களை வலுக்கட்டாயமாக அடக்கி நின்றவன் அசோக்கின் தாயிடம் திரும்பி “நீ பண்ண திருட்டுத்தனம் எல்லாம் உன் பையனுக்கு வேணா தெரியாம இருக்கலாம் ஆனா எனக்கு நீ பண்ண எல்லாமே தெரியும்…” என சொல்ல அரண்டு விட்டார் பெண்மணி.

‘இவன் எதை சொல்கிறான்’ என்ற எண்ணம் ஒரு பக்கம் தன்னாலேயே எழ கலையை விழி விரித்து பார்த்தார். அவரை அமர்த்தலாக பார்த்தவன் தாய், தந்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆரி சென்ற திசையை நோக்கி நடந்தான்.

சில நொடிக்குள் நடந்த நிகழ்வுகளையும், சம்பாசனைகளையும் கிரகித்து கொள்ளவே பல நிமிடங்கள் தேவைப்பட்டது கலையின் குடும்பத்திற்கு. அவர்கள் தங்களின் நிலைக்கு வரும் நேரம் மற்ற மூவருமே அங்கில்லை. உண்மையில் கலையின் கோபம் அவர்களுக்கு ஆச்சரியத்தையும், வியப்பையும் கொடுத்தது. அத்தனை சீக்கிரம் கோபப்படும் ரகமல்ல ஏகலைவன். ஆனால் இன்று தாயின் வயதுடைய பெண்ணை அடித்து இருக்கிறான் என்பதை நம்ப முடியவில்லை அவர்களால்…

“சௌந்தர்யா, அவன் போகட்டும் மா, நம்ம நல்ல நேரம் முடியக்குள்ள பேரை வைச்சுடுவோம், மணி, மாப்பிள்ளை போயி குண்டத்துக்கு முன்னாடி உட்காருங்க.. நான் ஐயர் எங்கன்னு பார்க்குறேன்…” என்றார் தியாகு சூழ்நிலையை இலகுவாக்கும் பொருட்டு…

கணவரின் குரலில் தன்னிலைக்கு வந்த சௌந்தர்யா “அவன் இல்லாம நடக்கணுன்னா முன்னாடியே பண்ணியிருக்க மாட்டேனா?…” என்றவர் ஆழ்ந்த மூச்சை வெளியிட்டப்படி

“இன்னைக்கு வேண்டாம் இன்னொரு நாள் பாத்துக்கலாம் இப்ப வீட்டுக்கு போவோம்…” இறுகிய குரலில் கூறிய மனைவியை அரண்டு பார்த்தார் தியாகு…

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!