Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வண்ணம் தேடும் வானம்

வண்ணம் 08

தமயந்திக்கு அருண் அவள் ‘டீம்’ என்று சொன்னதும் உள்ளுக்குள் பட்டாம்பூச்சி பிரவாகம். அவன் கண்களைப் பார்க்க முடியாமல் வெட்கம் தின்றது. தைரியம் கூட்டி கொண்டு அவன்  முகம் பார்த்தால் கடப்பாரையை விழுங்கியவன் போல உணர்வே இல்லாது கல்லு முகத்தில் சின்ன சிரிப்பு மட்டுமே தெரிந்தது. 

சிரஞ்சீவி “இன்னிக்கு கிளாஸ் முடிஞ்சு பாஸ்கெட் பால் கோர்ட் போறோம் யாரு கெத்துன்னு பார்த்துரலாம்” என்று வீரதீரமாக ‘உதார்’ விட்டுக் கொண்டிருந்தான். அருண் அவன் கன்னத்தில் தட்டி “ரொம்ப பேசாதே” என்றான். தமயந்திக்கு பெருமை கூடியது. சிரஞ்சீவியை சவாலாக பார்த்தாள். 

பேச்சு சுவாரசியத்தில் தேநீரும் சிற்றுண்டியும் இவர்கள் மேஜைக்கு வந்தது யாருமே கண்டு கொள்ளவில்லை. இடைவேளை முடியும் தருவாயில்தான்  வாட்ச் பார்த்தான் அருண். அடுத்து இரண்டு மணி நேரம் தொடர்ந்து கிளாஸ் இருக்கே,போன் பேச வேண்டி இருக்கே என்று வகுப்பறை விட்டு வெளியே செல்ல எழுந்தவன்; வெளியே போகும் முன் மேஜை மீது இருந்த தேநீரை எடுத்து அருந்தினான். தேநீர் சுவை வித்தியாசமாக உணரவும் இரண்டு சிப்பில் கீழே வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

பூர்ணிமா, சிரஞ்சீவியுடன் பேச்சு கலாட்டாவில் மூழ்கி இருந்தவள் தமயந்தி, அருண் எழுந்து செல்லவும் தான் அது தேநீர் இடைவேளை என்று உணர்ந்து எழுந்து வெளியே சென்றாள்.



Advertisement

சிரஞ்சீவி “ஏய் இங்கேயே குடி”

தமயந்தி “ச்சே ச்சே இது ஆறிப்போச்சு. எனக்கு நல்லா சூடா தொண்டையில இறங்கணும்” என்றவள்  வெளியே சென்று வழக்கம் போல  டீ வாங்கி குடித்துவிட்டு அருண் எங்கே போனான் என்று சுற்றி முற்றி பார்த்தாள். 

அருண் அந்த தளத்தின் கடைசியில் இருந்து தடுமாறி தடுமாறி நடந்து வந்து கொண்டிருப்பது போல் தெரிய அவன் நடையில் வித்தியாசம் பார்த்தவள் அவனை நோக்கி நடந்தாள். அவன் பக்கம் செல்ல செல்ல இவளை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தவன்  திரும்பவும் கழிவரைக்கு ஓடிசென்று வாந்தி எடுத்தான்.

Advertisement

தமயந்தி “அருண் அரூண் என்ன ஆச்சு”

Advertisement

கழிவறை விட்டு வெளியே வந்தவன் ‘ஒன்னும் இல்லை’ என்று செய்கையில் தெரிவிக்க,அவன் முகம் பார்க்கவே அவளுக்கு பயம் பற்றிக் கொண்டது.

“ ஹாஸ்பிடல்..” என்று கம்மிய குரலில் சொன்னவன் வயிற்றை பிடித்துக்கொண்டு தரையில் உட்கார்ந்தான்.

எதுவோ சரியில்லை என்று உணர்ந்த தமயந்தி அவனை எழுப்பி தோள் மீது சாய்த்துக்கொண்டு “ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல” என்று சொல்லிக்கொண்டே  இழுத்துக் கொண்டு நடந்தாள்.

Advertisement

சாதாரணமாக நடந்தால்  கல்லூரிக்கென இருக்கும் டிஸ்பென்சரி அடைய இரண்டு நிமிடம்தான் ஆகும். ஒரு மாடி கீழ இறங்கி அந்த கட்டிடம் விட்டு வெளியே வந்து இடப்பக்கம் திரும்பி ஒரு பத்தடி நடந்தால் டிஸ்பென்சரி இருக்கிறது. தமயந்திக்கு தோள் மீது சாய்ந்திருப்பவனை இழுத்துக்கொண்டு நடந்த அந்த ஐந்து நிமிட நடையில் பயத்தில் பதற்றத்தில் தானாக வாய் உளறல்  தொடங்கியது “என்ன இது? அலர்ஜி ரியாக்ஷனா? பூச்சிக்கடியா? இல்ல டீல ஏதேனும் விழுந்துருச்சா? வயிறு வலிக்குதா? காலைல எதுவும் சாப்பிடாம வந்தியா?  அரூண் ப்ளீஸ் பேசு.என்ன ஆகுது சொல்லு. பெருசா எதுவும் இல்லன்னு சொல்லு. ப்ளீஸ் என்னைவிட்டு போயிடாத”

அருண் டிஸ்பென்சரி அடையும்  பொழுதும்  அவன் நல்ல நேரம் அங்கே  டாக்டர் இருந்தார். ‘டீ குடித்தேன், வித்தியாசமாக இருந்தது.  உடலில் தள்ளாட்டம். இரண்டு முறை வாந்தி எடுத்து விட்டேன்.  தொண்டை அடைக்கிறது. மூச்சு விடமுடியவில்லை.  தூக்கம் வருகிறது” என்றவன் மயங்க தொடங்கினான்.  மயக்கத்திலும்  தமயந்திடம் “அவங்க ரெண்டு பேரையும் அந்த டீ குடிக்க வேண்டாம் சொல்லு போ” என்று அவசரப்படுத்தினான். மருத்துவர் அவனுக்கு முதலுதவி செய்யப்போக, தமயந்தி வகுப்பறைக்கு ஓடினாள்.

பூர்ணிமாவிடம் எதையோ கைபேசியில் காட்டி சிரித்துக்கொண்டிருந்த சிரஞ்சீவி வியர்த்து விறுவிறுக்க கண்கள் கலங்கி சிவந்த முகமாய்  ஓடிவரும் தமயந்தியை பார்த்தான்.

 தமயந்தி “அருண்… ஹாஸ்பிடல்ல… அந்த  டீ குடிக்காதீங்க” என்று விட்டு விட்டு  பேசவும் விபரீதம் எதோ  என்று புரிந்துக்கொண்டார்கள் நண்பர்கள்.

தமயந்தி சுதாரித்து தங்கையிடம் என்னவாக அருணுக்கு இருக்க முடியுமென கேட்கலாம் என அவள் கைபேசியை  பையில் இருந்து எடுக்கும் வேளை  சிரஞ்சீவியும், புவனும்  டிஸ்பென்சரி பறந்திருந்தார்கள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த டீ லேப்ற்க்கு அனுப்பப்பட்டது. கபிலன் கல்லூரிக்கு வந்துவிட்டார். அந்த காலேஜ் நடத்தும் டிரஸ்ட் ஆட்கள், டைரக்டர், பிரின்ஸ்பல், ப்ரொபசர்கள்  எல்லோரும் டிஸ்பென்சரி வாசலில் நின்றார்கள்.

அருந்ததீ  கபிலனுக்கு அழைத்து “கபிலன் என் பிள்ளைக்கு விஷம் வைக்க யாருக்கு தைரியம் இருக்கு இங்க” கேட்டு உறுமினார் 

கபிலன் “பார்த்துட்டு இருக்கேன்  மேடம். தம்பி நல்லா இருக்காப்புல டாக்டர் எல்லாம் பாத்துட்டு இருக்காங்க” தகவல் சொல்லவும் 

அருந்ததீ “என்ன கபிலன் உங்கள நம்பி தானே என் பையன்ன விட்டு வச்சிருந்தேன். என்ன பண்றீங்க நீங்க? என்ன இப்படி எல்லாம் நடக்குது? உங்க செக்யூரிட்டி என்ன ஆச்சு?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டாள் 

கபிலனிடம் சொல்ல பதில் எதுவும் இல்லை ‘நான் எல்லாம் விசாரிச்சுட்டு உங்ககிட்ட தகவல் சொல்றேன்  மேடம்’ என்று சொல்லி அழைப்பை துண்டித்தார். 

சிரஞ்சீவி சிந்தித்துக் கொண்டே அமர்ந்திருக்க, புவன் குட்டி போட்ட பூனை போல் இங்குமங்கும் நடந்துக்கொண்டே இருந்தான். இருவருக்கும் அருணுக்கு ஏன் இது நடந்தது என்ற கேள்வியே!

அருண் அறையில் மருத்துவர்கள் அவனை வாந்தி எடுக்க வைத்துக்கொண்டிருக்க கபிலன் சிசிடிவி கேமரா பார்க்க ஒரு கும்பல், தேநீர் சப்ளை செய்த ஆள் அவன் யார் என்ன என்று விசாரிக்க ஒரு கும்பல் என்றும்  கல்லூரியில் இத்தனை நாட்கள் அவர்களுக்கு உணவு எப்படி வழங்கப்பட்டது என்று விசாரிக்க ஒரு கும்பல் என்று எல்லா பக்கமும் ஆட்களை அனுப்பிவிட்டு எதனால் இந்த முயற்சி நடந்து என்று சிந்தனையில் ஆழ்ந்தார்.

தமயந்திக்கு அந்த டிஸ்பென்சரி  பக்கம் போகவே பயம் பற்றியது.  பூர்ணிமாவுடன் அமர்ந்துவிட்டாள். தங்கை பெரிதாக எதுவும் இல்ல ஃபுட் பாய்சன் ஆகி இருக்கும் மூன்று நாளில் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டாள்,

ஆனால் அருண் முகம் வலியில் இருந்ததும், அவன் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டதும் அவள் மனக்கண்ணில் இருந்து மறையாமல் இம்சித்தது. 

நேரம் செல்ல செல்ல  அருண் வெளியே ப்ரைவேட் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறான் என்கிற செய்தி மட்டுமே வந்தது. 

வகுப்பு எதுவும் நடக்காது என்று தெரியவர அவரவர் வகுப்பறையை விட்டு செல்ல தமையந்தி பூர்ணிமா மட்டுமே வகுப்பறையில் அமர்ந்திருந்தார்கள். கதைகள் பல பேசியும், புலம்பியும் கூட நேரம் செல்வேனா என்றது.

சிரஞ்சீவி கல்லூரி முடியும் சமயம் வகுப்பறைக்குள் வந்தவன் பூர்ணிமாவை பார்த்து “வாங்கக்கா  வீட்டுல விட்டுட்டு போறேன்” என்றவன் இவளிடம் ‘அருண் சரியாகிவிட்டான் தூங்கிட்டு இருக்கான்’ என்று மட்டும் தகவல் சொன்னனான்.

அன்று மாலை கல்லூரியில் நடந்ததை பூமியிடம் தமயந்தி சொல்லும் போது பூமி “ஊரெல்லாம் எதிரி வளர்த்துக்கிட்டா இப்படித்தான் ஆகும்” என்றவள் தமயந்தி  மேலும் எப்படி அழைத்துச் சென்றாள் என்பதை எல்லாம் விவரித்து சொல்லவும் அதைக் கேட்டு “நல்லவேளை அருணை  நீ பார்த்த தம்மு, ஹாஸ்பிடல் போய்ட்டான்ல்ல டாக்டர் காப்பாத்திருவாங்க”  என்று நல்லவிதமாகவும் பேசினாள். 

அருண் வாந்தி எடுத்து டயர்ட் ஆனவன் ட்ரிப்ஸ் ஏற படுத்திருந்தான். கபிலன் குழப்பத்தில் புருவம் சுருக்கியே அமர்ந்திருந்தார். “நான் டார்கெட் இல்ல” என்றான் அருண் சோர்வாக. 

 கபிலன் அவன்  சொல்வதைக் கேட்டு புருவம் சுருக்கி அவனை தீர்க்கமாக  பார்க்கவும் அருண் மேலும் “டேபிள்ல நாலு கப் டீ இருந்தது. நான் சிரஞ்சீவிக்கு வச்சிருந்த டீ எடுத்துதான் குடிச்சேன் சோ டார்கெட் நான் இல்ல இந்த கடா மாடு தான்” என்று கையில் கிடைத்த டவல் எடுத்து சிரஞ்சீவி மீது எறிந்தான். 

அதே நேரம் லேப்’லிருந்து  டெஸ்ட்க்கு அனுப்பி இருந்த ரிப்போர்ட் வந்தது. அதில் அருண் எடுத்து அருந்திய கப்பில் மட்டுமே விஷயம் கலக்கப்பட்டு இருக்கிறது என்று தெரியவந்தது.  விஷமும் ஏதோ ஒரு வகையான பூவின் சாறு கலந்து இருக்கிறார்கள். சுவைக்கு இனிப்பாக இருந்தாலும் அந்த சாறு உடலுக்குள் போனதும் நுரையீரலையும், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கக் கூடியது. நல்லவேளை ‘சென்சிடிவ் அருண்’ அவன் உணர்த்திறனால் இந்தளவு பாதிப்புடன்  தப்பித்திருக்கிறான் என்று தெரியவர கபிலன் கொதித்துப் போனார். அதிலும் இந்த விஷத்திற்கு தன் மகன் பலியாக வேண்டியது என்கிற உண்மை உரைக்கும் போது இதயமே நின்று துடித்தது அவருக்கு.

அருண் கபிலனிடம் “நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க எனக்கு ஒரு கெஸ் இருக்கு. டைம் குடுங்க” என்றான் அமைதியாக.

புவன் “கூல் ஆகுங்க அங்கிள்  நாங்க பார்த்துக்கிறோம்” என்று சொல்ல 

கபிலனுக்கு  இன்னமும் கோபம் ஏறியது “என்னடா பாத்துப்பீங்க நீங்க என்ன பார்த்துப்பீங்க” கேட்டு கர்ஜித்தார் 

சிரஞ்சீவி  ” நான் உன் புள்ளப்பா உன் அளவுக்கு முரட்டுத்தனம் எனக்கும் இருக்கும் விஷயத்தை எங்ககிட்ட விடு நாங்க பார்க்கிறோம்”

 கபிலன் “அதுதான் வேணாங்குறது. இந்த ரவுடித்தனம் காவலித்தனம் எல்லாம் என்னோட போகட்டும் அதெல்லாம் உங்களுக்கும் தொத்திட்டு வரக்கூடாது யார்கிட்ட என்ன வம்பு வளர்த்தீங்க எனக்கு சொல்லுங்க நான் பார்த்துக்கிறேன்”

கபிலனின் கர்ஜனையில் அடங்கிவிட்டனர் மூவரும்.  

அருண் “எனக்கு தூக்கம் வருது நான் தூங்குறேன்” என்ற அறிவிக்கவும் 

கபிலன் “சரி நான் கிளம்புறேன் வீட்டுக்கு” என்று அறை விட்டு வெளியே வந்தார். எதனால் இது நடந்தது, இதற்கு பின்னால் என்னவெல்லாம் காரணம் இருக்க முடியும் என்று யோசிக்க அவருக்கு அமைதியான இடம் வேண்டும்.அது அவர் மனைவி பக்கம் மட்டுமே கிடைக்கும். 

 இப்போது சிரஞ்சீவி புவன் அருண்  மட்டுமே இருக்க,

சிரஞ்சீவி ” பாவம் நம்ம தம்ஸ் நல்ல பயந்துருச்சு.சாயந்திரம் பார்க்கும்போது கூட  ஆள் பயத்திலேயே இருந்துச்சு”  

 கண் திறந்தவன் அருண் “நான் சரியாயிட்டேன் சொல்லிட்டியா” கேட்டான். மனதில் அழுகையை அடக்கிய குரலில் ‘என்ன ஆகுது சொல்லு , என்ன விட்டு போயிடாத’ கேட்டவள் குரல் ஓடியது. அசதியிலும் முகத்தில் புன்னகை மலர்ந்தது. 

சிரஞ்சீவி “சரி சொல்லு யார் அந்த வில்லன். யாரை கெஸ் பண்ற”

அருண் “முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”

சிரஞ்சீவி“சொல்டேன்….டா…”

அருண்“சரி அப்போ நான் தூங்குறேன்”

சிரஞ்சீவி“ஏய் சொல்றா.. இவன் வேற, டைமிங் மிஸ் பண்ணிடப்போறோம் அருண் விளையாடாத”

“சரி சொல்லு உன்ன கொன்னா யாருக்கு லாபம்” அருண் கேட்டதும் சிரஞ்சீவி யோசித்தான் .

சிரஞ்சீவி“ நல்லா யோசிச்சேன் சத்தியமா  தெரியலடா”

புவன் “ம்ம் யாருக்கு லாபம்ன்னு தெரியல ஆனா நஷ்டம் கபிலன் அங்கிளுக்கு”

அருண் “எஸ். கபிலனோட வீக் பாய்ண்ட் தெரிஞ்ச ஆள், கூடவே உன்மேல வன்மம் இருக்கிற ஆள். அப்படி யாராச்சும் தெரியுமா”

சிரஞ்சீவி யோசித்தான். இப்போதும் யாரையும் சுட்டிக்காட்ட தோன்றவில்லை. 

அருண் “நம்ம வெள்ளச்சாமி. அதான் மொத நாள் வணக்கம் வெச்சிட்டு போனாரே, மனுஷன் எங்க இருக்கான்னு பாரு”

சிரஞ்சீவி “அவனா அவன் எப்படிரா” நம்பாமல் கேட்க 

அருண் “சமீபமா டெண்டர்  எடுக்க போகுற இடமெல்லாம் அவன் வரான்னு அங்கிள் அன்னிக்கு சொன்னார். கூடவே உன்மேல அவனுக்கு பயங்கர கோபம். இதெல்லாம் வச்சு பாக்குறப்ப அவனாதான் இருக்கணும்” 

புவன் “ம்ம் விசாரிப்போம்” என்றவன் சிரஞ்சீவி அழைத்துக்கொண்டு கிளம்ப அருண் “எதையும் விசாரிக்கலாம் கொஞ்சம் பொறுமையா இருங்கடா” சொல்லிக்கொண்டே போக சிரஞ்சீவி “மச்சான் இட்லி தானே இப்போ வரும்” என்று சொல்லிக்கொண்டே அறையை விட்டு வெளியேறினான். 

அருண் “கடவுளே…” என்று சலித்துக்கொண்டு கண்களை மூடினான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!