Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Isaiyindri ennaven

இசையின்றி என்னாவேன் 10 (1)

இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்கு திரும்பிய தமிழிற்கு மனதே சரியில்லை. இவ்வளவு அன்பாய் பாசமாய் இருக்கும் தங்கையை புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டோமே என்ற குற்றவுணர்வு குற்றவாளியாக நிற்க வைத்து தாக்கியது.

இத்தனை நாட்கள் அவன் உணர்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து சுயநலமாக இருந்து விட்ட உணர்வு. கடந்த காலங்களை நினைத்தவனுக்கு தங்கையுடனான குழந்தை பருவங்களை இழந்துவிட்டதன் ஏக்கம். இனி எதையும் இழக்க கூடாது என நினைத்தவன் நாளை முதல் வேளையாக முல்லையிடம் மண்ணிப்பு கோரி அவளுடனான உறவை புதுப்பித்துக் கொள்ள முடிவெடித்துவிட்டு தூங்க சென்றான்.

தமிழ் காலை கண் விழித்த போது மணி எட்டு. அன்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் தாமதமாக எழுந்தான்.

தமிழ் அறையிலிருந்து வெளியே வர பள்ளிக்கு தாயாரிக் கொண்டிருந்த முல்லை அவனை பார்த்து, “குட் மார்னிங் அண்ணா” என புன்னகைக்க தயக்கம் விடுத்து, “குட் மார்னிங்” என்று அவனும் புன்னகைத்தான்.



Advertisement

“இன்னிக்கு ஸ்கூல்லா?” சீருடையில் இருந்தவளை பார்த்து கேட்க, “ஆமா அண்ணா.. ஹாஃப் டே” என்றாள்.

புடவையில் தயாராகி வந்த கலைவாணி இவனை கண்டதும், “எழுந்திருச்சுட்டியா.. காபி போட்டு வைச்சிருக்கேன் சூடு பண்ணி குடிச்சிக்கோ” என்க அவரை பார்த்தவன், “நீ எங்க ம்மா கிளம்பீட்ட?” என கேட்க.

“பாப்பாவ ஸ்கூல்ல விட டா”
“ஏன்.. அப்பா இல்லை?”
“புதுசா ஆர்டர் எடுக்கிற விசயமா இப்போ தான் அவசரமா கிளம்புனாரு..”
வெளியே எட்டிப் பார்த்தவன், “அப்படியா.. அவர் வண்டி வெளியே நிற்குது..?”
“அவர் ஃபிரண்டு கூட போயிருக்காரு..”
“ஓஓ.. இப்போ நீங்க எப்படி போறீங்க?”

Advertisement

அவன் கேள்வி மேல் கேள்வி கேட்க எரிச்சலானவர், “இப்போ எதுக்கு உங்க அப்பன மாறி இத்தன கேள்வி கேட்கிற?” என சிடுசிடுத்தார்.

Advertisement

“ம்ப்ச்.. பதில் சொல்லு ம்மா..” அவன் சலித்துக் கொள்ள அவனை முறைத்தவர், “பஸ்சுலதான்..” என பதிலளித்தார்.

“நீ வீட்ல இரு.. வண்டி இருக்குல்ல நானே பாப்பாவ ஸ்கூல்ல டிராப் பண்றேன்” என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் தயாராக சென்றுவிட்டான்.

“உங்க அண்ணனுக்கு என்னாச்சு? இந்த சோம்பேறி நாய் அவனே வந்து டிராப் பண்றேன்னு சொல்றான்” கலைவாணி மகளிடம் ஆச்சரியமாக கேட்டிட அண்ணின் கூற்றை நம்ப முடியாமல் மகிழ்ச்சியில் நின்றிருந்த முல்லையோ, “அவன் ஒன்னும் சோம்பேறி இல்ல ம்மா” என அண்ணனுக்கு பரிந்து பேசினாள்.

Advertisement

தயாராகி வந்தவன் தங்கையை கூட்டிக் கொண்டு புறப்பட்டான். இதுவரை அன்னை சொல்லி மட்டுமே அழைத்து சென்ற அண்ணன் இன்று தானாக முன்வந்து அழைத்துச் செல்லவும் முல்லைக்கு அத்தனை ஆனந்தம்.

பள்ளி வந்ததும் இறங்கியவள் தமிழிடம், “தேங்க்ஸ் அண்ணா” என்றாள். புன்னகைத்தவன், “மதியம் கூப்பிட வரட்டுமா?” என கேட்க “வேணா வேணா நானே விது தியா கூட வந்துடறேன்” என்றாள்.

“முல்லை..” தோழியை கண்டதும் தியா கூச்சலுடன் அவளிடம் ஓடி வர அவள் பின்னே அவள் பேக்கை தூக்கிக் கொண்டு வந்தான் அவள் அண்ணன் தீபக்.

“எரும உனக்கு பேக் சுமக்க தான் அம்மா என்ன பெத்தாங்களா..” என திட்டிக் கொண்டே அவள் கையில் பையை திணிக்க, “இதை கண்டுபிடிக்க உனக்கு இத்தனை வருஷம்..” என சலித்தபடியே பேக்கை வாங்கி மாட்டிக் கொண்டாள் தியா.

“வர வர உனக்கு வாய் ரொம்ப நீளுது..”
“உன்ன விடவா..?” தியா பதிலுக்கு பதில் பேச இருவருக்கும் முட்டிக் கொண்டது. அண்ணன் தங்கையின் செல்ல சண்டையை முல்லையின் விழிகள் வழக்கம் போல் ஏக்கத்துடன் ஏறிட்டன.

சண்டையை கைவிட்ட தியா, “அங்கிள் வரலையா?” என முல்லையிடம் கேட்க, “இல்ல டி அப்பா வெளிய போயிட்டாங்க.. எங்க அண்ணன் தான் கூட்டீட்டு வந்தான்..” என பதிலளித்தவள் முகத்தில் பெருமை பொங்கி வழிந்தது.

தங்கையின் பாவனைகளை கண்டவனுக்கு சிரிப்பு. மறுபுறம் மனசாட்சியோ இதற்கெல்லாம் கொஞ்சம் கூட நீ தகுதியில்லாதவன் என சாடியது.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் பெல் அடிக்கவும் முல்லையும் தியாவும் வகுப்பிற்கு சென்றுவிட, “டேய் இனியா எப்படி இருக்க? பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு..” என தீபக் அவனை பிடித்துக் கொண்டான்.‌ தீபக் அவனின் ஸ்கூல் சீனியர். பொதுவான நல விசாரிப்புகளோடு அவனுடன் சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டான்.

முல்லைக்கு விடுமுறை என எண்ணி காலையில் பேசலாம் என நினைத்திருந்தவன் அவளுக்கு பள்ளியிருக்கவும் மதியம் அவள் வந்த பிறகு பொறுமையாக பேசிக் கொள்ளலாம் என தன் முடிவை மாற்றிக் கொண்டான்.

வீட்டிற்கு செல்லும் வழியில் தங்கைக்காக ஏதாவது பரிசு வாங்கலாம் என்ற எண்ணம் எழ, யோசித்தவனுக்கு முதலில் நினைவு வந்தது எம்பிராய்டரி தான். ஏனோ முல்லைக்கு அதில் அத்தனை ஆர்வம், வீட்டில் பொழுது போகாத நேரங்களில் எல்லாம் கையில் ஊசியும் நூலுமாக தான் வலம் வருவாள். அவளுக்காக ஒரு எம்பிராய்டரி கிட்டை கிஃப்ட் ரேப் செய்து வாங்கிக் கொண்டு சென்றான்.

மதியம் பள்ளி முடிந்ததும் முல்லை வர, அதற்காகவே காத்திருந்த தமிழிற்கு அதுவரையில்லாத தயக்கமும் பதட்டமும் வந்து ஒட்டிக் கொண்டது. எந்த முகத்தை வைத்துக் கொண்டு தங்கையை எதிர் கொள்வது என தெரியவில்லை.

மதிய உணவிற்கு பின் தங்கைக்காக வாங்கியிருந்த பரிசை எடுத்துக் கொண்டு தயக்கத்துடன் மெதுவாக அவள் அறையின் வாசலில் சென்று நின்றான்.

தமிழை கண்டதும், “ஒரு நிமிஷம் ண்ணா..” என எழுதிக் கொண்டிருந்த நோட்டை மூடி வைத்தவள், அருகே சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த லேப்டாப்பை எடுத்து அவனிடம் நீட்ட தமிழிற்கு என்னவோ போல் ஆனது, வழக்கமாக இது போன்ற விஷயங்களுக்கு மட்டும் தானே அவளின் அறை பக்கம் செல்வான்.

“இல்ல வேண்டாம்..” அவளிடமிருந்து லேப்டாப்பை வாங்கி மீண்டும் மேஜையின் மீது வைத்தவன் அவன் பின்னே மறைத்து வைத்திருந்த பரிசை அவளிடம் நீட்ட, “எனக்கா..?” என விழிகளை விரித்து வியப்புடன் கேட்டாள் முல்லை.

புன்னகைத்தவன், “உனக்கு தான்..” என்க சிரிப்புடன் பரிசை வாங்கி உடனே பிரித்தவள் அதை பார்த்துவிட்டு, “எம்பிராய்டரி கிட்டா..! தேங்க யூ ண்ணா..” என அவன் கைகளை பிடித்துக் கொண்டாள்.

“சூப்பரா இருக்கு ண்ணா..” பரிசில் பார்வையை பதித்து கூற தங்கையின் தலையை வருடியவன், “சாரி டா..” என்றான்.

“எதுக்கு அண்ணா?”

“எல்லாத்துக்கும்.. இத்தனை நாள் என் எமோஷன்ஸ் மட்டுமே முக்கியமா நினைச்சுட்டு ரொம்ப செல்ஃபிஷ்ஷா இருந்துட்டேன்ல.. உன்ன பத்தி நான் கொஞ்சம் கூட யோசிக்கல.‌. உன் எமோஷன்ஸ்.. உன்ன புரிஞ்சிக்கவேயில்ல..”

“ம்ச்.. அப்படியெல்லாம் இல்ல ண்ணா” முல்லையின் கண்கள் நீர் கோர்த்துக் கொள்ள மறுப்பாக தலையாட்டிவன், “உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்.. சாரி” என்றான் கரகரத்த குரலில்.

“எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.. நீ ஃபீல் பண்ணாத ண்ணா.. எனக்கு கஷ்டமா இருக்கு” விசும்பலுடன் அவள் பேச தமிழிற்கு மனதில் விவரிக்க முடியாத வலி. தன் மீதே ஒரு எரிச்சல் கோவம். அவளின் அன்பிற்கும் பாசத்திற்கும் நீ கொஞ்சம் கூட தகுதியில்லாதவன் என மனம் மீண்டும் சாடியது.

நேற்றிலிருந்து மனதில் பல விஷயங்கள் மாறி மாறி ஓடினாலும் இப்போது அதை வார்த்தைகளால் வெளிப்படுத்த தெரியவில்லை. “சாரி டா..” என்றான்.. இறுதியில் மன்னிப்பை தவிர அவனிடம் கூற வேறு வார்த்தையில்லை.

குற்றவுணர்வுவில் மனதில் புழுங்கிய தமிழ், நேற்று இரவு முழுவதும் மனதில் நடத்திய சுய அலசலில் அவன் தவறுகளை முழுமையாக உணர்ந்துவிட்டான். எக்காரணங்கள் கூறியும் அவன் செயல்களை நியாயப்படுத்த அவன் நினைக்கவுமில்லை அதை விரும்பவுமில்லை.

“ரியலி சாரி பாப்பா.. நான் என் தப்ப ரியலைஸ் பண்ணீட்டேன்.. இனி அப்படி நடந்துக்க மாட்டேன்” தமிழ் மனம் வருந்தி பேச

“எனக்கு உன்ன ரொம்ப ரொம்ப பிடிக்கும் ண்ணா.. எழில் அண்ணா தீபக் அண்ணாலாம் விது தியா கூட சண்ட போடுறது விளையாடுறது எல்லாம் பார்க்கும் போது நம்ம ரெண்டு பேரும் அப்படி இல்லையேன்னு கஷ்டமா இருக்கும். மத்தபடி சாரியெல்லாம் வேண்டா ண்ணா.. நீ என்கூட இப்படி சகஜமா பேசுனாலே போதும்” என அவனை இயல்பாக்க பேசியவள் சிறிய இடைவெளி விட்டு “என்ன உனக்கு புடிக்குமா ண்ணா?” என்று தயக்கத்துடன் அவனை ஏறிட்டாள்.

தங்கையின் கேள்வி தமிழை வெகுவாய் தாக்கியது. “ரொம்ப பிடிக்கும் டா..” என்றான் அவள் கண்ணீரை துடைத்தபடி.
“நிஜம்மா..?” விசும்பலுடன் அவள் கேட்க “நிஜம்மா..” என அழுத்தமாய் புன்னகையுடன் பதிலளித்தவன் அவள் தலையில் கை வைத்து, “அழாத டா..” என்க “எவ்ளோ புடிக்கும்..?” அழுகையிலும் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பினாள் முல்லை.

“ரொம்ப ரொம்ப புடிக்கும்.. உனக்கு என்ன எவ்ளோ புடிக்குமோ.. அதை விட ரொம்ப அதிகமாக புடிக்கும்..” என தமிழ் புன்னகைக்க அண்ணனை அணைத்துக் கொண்டாள் முல்லை.

பதிலுக்கு தங்கையை அணைத்தவன், “சாரி டா.. இனி அண்ணா அப்படி நடந்துக்க மாட்டேன்.. நீ அழாத” என்க அவனிடமிருந்து விலகி “இனி அழ மாட்டேன்” என புன்னகைத்தாள்.

“ஒரு நிமிஷம்” என ஓடியவள் அவள் பள்ளி பையிலிருந்து ஒரு சாக்லேட்டை எடுத்து வந்து அவனிடம் நீட்ட, “எனக்கு வேண்டாம்.. நீ சாப்பிடு” என்றான்.

“நீ எனக்கு கிஃப்ட் குடுத்தல.. இப்போ எங்கிட்ட குடுக்க இது மட்டும் தான் இருக்கு.. சோ இது என்னோட கிஃப்ட்” என அவனிடம் நீண்டினாள்.

“பரவாயில்லை டா.. நீ சாப்பிடு” அவன் மறுக்க “அப்போ நான் குடுத்தா வாங்க மாட்டியா?..” என்றாள் கொஞ்சம் அதட்டலுடன்.

“அப்படியெல்லாம் இல்ல டா..”

“அப்போ இந்தா..” வீம்பாக சாக்லேட்டை அவனிடம் கொடுக்க “தேங்க்ஸ்” என மறுக்காமல் வாங்கிக் கொண்டவன், “சரி நீ போய் உன் வேலைய பாரு” என அவள் கன்னம் தட்டிவிட்டு அறையிலிருந்து வெளியே சென்றான்.

தமிழ் சென்றதும் மீண்டும் இருக்கையில் சென்று அமர்ந்த முல்லைக்கு அத்தனை மகிழ்ச்சி இன்னும் அவள் அண்ணன் பேசியதெல்லாம் நம்பவே முடியவில்லை. எப்படி இந்த தீடீர் மாற்றம் என யோசித்தவளுக்கு அனிச்சையாய் இன்னிசையின் நினைவு.

“கண்டிப்பா இசை அக்கா தான் சொல்லிருப்பாங்க..” என உறுதிபடுத்தியவளுக்கு இசையிடம் நன்றி சொல்ல வேண்டும் என்ற மன உந்துதல்.

தொலைபேசியை கையில் எடுத்தவளுக்கு அப்போது தான் இசையின் எண் அவளிடம் இல்லை என்பதே நினைவிற்கு வர, “ச்சே இசை அக்கா நம்பர் இல்லையே.. அடுத்த தடவ அவங்கள பாக்குற அப்போ மறக்காம வாங்கி வைக்கனும்” என நினைத்துக் கொண்டு விதுரனையும் தியாவையும் உடனே அழைத்தாள் இந்நிகழ்வை பகிர்ந்து கொள்ள.

அவள் அறையிலிருந்து வெளியே வந்த அவள் அண்ணனுக்கும் அதே உணர்வு இன்னிசையின் நினைவு.

தங்கையிடம் பேசிவிட்டு வந்த தமிழிற்கு மனதில் இருந்த பாரங்களை எல்லாம் இறங்கி வைத்த இதமான லேசான உணர்வு. உடனே இசையின் நினைவு.

அவள் செய்தது சாதாரண காரியமில்லையே அவன் இழக்கவிருந்த ஒரு உன்னதமான உறவை அல்லவா மீட்டு கொடுத்திருக்கிறாள். நன்றி என்பது மிகச்சிறிய வார்த்தையாய் மாறியிருக்க அதை தவிர வேறென்ன சொல்வது என்றும் தெரியவில்லை.

அவளிடம் அவன் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள அகமெங்கும் ஆவல் எழ அப்போதே அழைத்துவிட்டான் இன்னிசையை.

அவன் அழைப்பை ஏற்றவள், “சொல்லுங்க சீனியர்..” என்றாள் சோர்ந்த குரலில். தமிழ் இருந்த மகிழ்ச்சியான மனநிலையில் அதெல்லாம் அவன் கருத்தில் கொள்ளவில்லை.

“இசை நீ ஃபிரீயா.. உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..”

“நான் வெளியே இருக்கேனே சீனியர்..”

“வெளியவா.. அப்போ மீட் பண்ணலாமா..?” அந்நேரம் அவளை நேரில் காண மனம் உந்த உடனே கேட்டுவிட்டான்.

“மீட்டா…” அவள் தயக்கத்துடன் இழுக்க “நீ ஃபிரீனா பார்க்கலாம்.. இல்ல வேண்டாம்” என்றான் குரலில் ஏமாற்றம் எட்டிப் பார்க்க

“இல்ல மீட் பண்ணலாம்..” என்றவள் அவள் இருக்குமிடத்தை கூற “ஃபிப்டீன் மினிட்ஸ்ல வந்துடறேன்..” என்று வீட்டிலிருந்து புறப்பட்டான்.

பத்தே நிமிடத்தில் அவள் சொன்ன பூங்காவை அடைந்தவன் உள்ளே செல்லும் முன் வண்டியின் சைடு மிரர்ரில் தன்னை ஒரு முறை சரி பார்த்து விட்டு கைகளால் தலைமுடியை கோதி, இல்லாத மீசையையும் தாடியையும் நீவி சரி செய்துக்கொண்டு உள்ளே நுழைய பூங்காவின் மறுமுனையில் அமர்ந்திருந்தாள் இன்னிசை.

அவளை கண்டதும் மனதில் ஒரு பரவசம், மீண்டும் ஒரு முறை தலையை கோதி சரி செய்யக் கொண்டே அவளிடம் சென்றான். தூரத்தில் தெரிந்த சாலையை வெறித்தபடி அமர்ந்திருந்த இசையின் கருத்தில் சுற்றி நடக்கும் எதுவும் பதியவில்லை.

“ஓய் இன்னிசை..” தமிழ் அவளின் தோளை தொட அதிர்ந்து திரும்பினாள் இசை.

“ஹே ரிலேக்ஸ் இசை.. நான் தான்”.

“நீங்க தானா..” அவனை கண்டதும் ஆசுவாசம் அடைந்தவள், “எப்போ வந்தீங்க?” என கேட்க

“எப்போ வந்தீங்களா.. சுத்தம். நான் எவ்ளோ நேரமா கூப்பிடுறேன்.. நீ ஏதோ யோசனையிலையே இருக்க?..”

“அதெல்லாம் ஒன்னுமில்ல சீனியர்..” என மலுப்பியவள், “ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னீங்க?” என பேச்சை திசை திருப்பினாள்.

அவள் அமர்ந்திருந்த இருக்கையில் அவளை பார்த்தபடி இடைவெளி விட்டு அமர்ந்தவன், “இசை.. தேங்க்ஸ்ங்கிறது ரொம்ப ரொம்ப சின்ன வார்த்த. எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை. எல்லாத்துக்கும் நீ தான் காரணம்..” என உணர்ச்சி பெருக்கில் பேச

முதலில் அவன் எதை பற்றி பேசுகிறான் என புரியாதவள் பின் புரிந்ததும், “முல்லை அன்னிக்கு ஃபீல் பண்ணி அழுதது ரொம்ப கஷ்டம்மா இருந்துச்சு.. உங்க கிட்ட அதை பத்தி சொன்னேன் அவ்ளோதான்..” என்று புன்னகைத்தாள்.

“நீ ரொம்ப ஈசியா சொல்லீட்ட இசை.. ஆனா இது அவ்ளோ சாதாரணமான விஷயம் இல்ல.. நான் என் முட்டாள்தனத்தால இழக்கவிருந்த என் தங்கச்சிய எனக்கு திருப்பி கொடுத்திருக்க. உனக்கு எவ்ளோ தேங்க்ஸ் சொன்னாலும் பத்தவே பத்தாது”.

“சீனியர்.. நீங்க இப்படி பேசுற அளவு நான் ஒன்னுமே பண்ணல..” என்றவள் “முல்லை கிட்ட பேசுனீங்களா?” என கேட்க “ம்ம் பேசுனேன்..” என்றவன் தங்கையிடம் பேசியதெல்லாம் அவளிடம் பகிர்ந்தான்.

அவன் பேச்சில் எத்தனை முயன்றும் இசையால் ஒன்றமுடியவில்லை, அவை செவிகளை மட்டும் சென்றடைந்ததே தவிர அகத்தில் பதியவில்லை. என்னவோ ஒரு இறுக்கம் மனம் முழுவதும் ஒரு வெறுமை.

“முல்லைக்கு ஒரு எம்பிராய்டரி கிட் கிஃப்ட் பண்ணேன் அவ செம ஹேப்பி.. நானும் தான்.” என்றவனின் குரல் உற்சாகத்தில் உரத்து ஒலிக்க அதில் சுயம் பெற்று அவனை ஏறிட்டாள்.

“நேத்து நீ சொன்னல.. ஒருதர் நம்ம கூட இருக்கிற வரை அவங்க மதிப்பையும் அருமையையும் புரிஞ்சிக்காம அவங்க இல்லாதப்போ வருத்தப்படுறதுல கொஞ்சம் கூட அர்த்தமே இல்லனு.. தட் ஹிட் மீ ஹார்ட்.. அந்த வரி தான் என்ன யோசிக்க வச்சிச்சு”

“அவ இடத்தில இருந்து யோசிச்சப்போ தான் நான் எவ்ளோ அவள ஹர்ட் பண்ணியிருக்கேன்.. சுயநலமாக இருந்திருக்கேன்னு.. எனக்கு புரிஞ்சுச்சு..”

அவன் பேசிக் கொண்டே போக இசையின் மனம் முழுவதும் அவன் இதற்கு முன் மொழிந்த வாக்கியத்திலே நிலைத்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!