Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கற்ப(னை)து சுகமானதே...

கற்ப(து )னை சுகமானதே.. அத்யாயம் 2

கல்லூரியில் அநேகம் நண்பர்களை சம்பாதித்து வைத்திருந்தாள் திருமகள். ஆண் பெண் எனும் பாகுபாடெல்லாம் கிடையாது. அவளது அழகு,ஆடல்-பாடலில் தேர்ச்சி , அவளது ஆடை அணியும் நேர்த்தி என்று ரசிகர் பட்டாளம் புடை சூழத்தான் எப்போதும் இருப்பாள். கல்லூரியில் கல்ச்சுரல் செக்ரெட்டரியாகவும் கூட இருந்தாள் . கேட்கவும் வேண்டுமோ…

கல்லூரியில் விழாக்களை முன்னின்று நடத்துவதும், பிரபல நட்சத்திரங்களை அருகிருந்து சந்திப்பதும் அவளுக்குள் ஒரு மாய மயக்கத்தை உண்டு பண்ணியதென்றால் அதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. தான்என்ற போதை ஏறியது. மதிப்பெண்களும் அவ்வளவு மோசமில்லை. அறுபதுகளில் பிரயாணப்பட்டுக்கொண்டிருந்தாள் . வீட்டிலும், ‘ இந்த வயசுல இப்படித்தான் இருக்கும்.தப்பு தண்டா ன்னு சிக்காம இருந்தா சரிஎன்ற மனப்போக்கில் இருக்க அவளுக்கு இன்னும் தோதாகிப் போனது.



Advertisement

கூட படிக்கும் சில  நண்பர்களின்  காதல் கடிதங்களுக்கு அவளது பதில் நோதான். காரணம் தனக்கு பிரமாதமான இடத்தில்  நல்ல தகுதிகளுடன் மாப்பிள்ளை அமையும். அதை செய்ய வேண்டிய பொறுப்பு வீட்டினருக்கு உண்டு என்று திரு மனப்பூர்வமாக நம்பினாள் .( அவங்க பாக்குறது இருக்கட்டும்.. உன்னோட எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவு செய்யும் மாப்பிள்ளை?)

வீட்டில் அவள் எண்ணப் போக்கு தெரியும் என்பதாலேயே அதிகமான சுதந்திரம் இருந்தது. சில சமயங்களில் அவள் ஏதேனும் சிறிய தவறுகள் செய்தால் நரேன் கண்டிப்பான் .அதற்க்கும் கூட அவன் அப்பாவிடமிருந்து அவனுக்குத்தான் திட்டு விழும். அவள் விஷயங்களில் தலையிடுவதற்க்கே நரேன் தயக்கம் கொள்ளும்படிக்கு , நிலைமையை மாற்றிவிட்டாள்  திருமகள். அவள் செய்த ஏதாவது குளறுபடிகள் வெளியே வரும்பொழுது, அப்பாவோ, அம்மாவோஏன் திரு,கொஞ்சம் பார்த்து செய்யக்கூடாதா..என்பதுடன் கண்டிப்பு முடிந்து விட,அவளுக்கு தான் செய்வதுதான் சரி என்றுத் தோன்ற ஆரம்பித்தது. 

Advertisement

Advertisement

திரு சிறு வயதில் இருக்கும் பொழுது பெற்றோரின் கண்டிப்பு இருந்தது. ஆனால் என்னவோ அவள் பருவம் எய்திய நாள் முதலாய் , அவளே வீட்டில் பிரதானப்படுத்தப் பட்டாள் .வேறு வீட்டுக்கு செல்லப் போகும் பெண்.நாமாவது செல்லமாய் வளர்ப்போமேஎன்ற எண்ணமாகக் கூட இருக்கலாம்.

நரேன் எதுவும் செய்யவோ,சொல்லவோ முடியாமல் தவிப்பதும் வழக்கமாகிவிட்டது.  இந்த அழகில் சாகேத் மனதிலும்  ஏதோ ஒன்றை விதைத்துவிட்டான். சாகேத் ..அவனைப் பற்றி என்ன சொல்ல?

Advertisement

மிகவும் மென்மையான சுபாவம் இயற்கையிலேயே அமைய பெற்றவன். அழகன் என்று நிச்சயம் சொல்ல மாட்டேன். அதே சமயம்சுமார் மூஞ்சிஎன்று யாரும் சொல்லிவிட முடியாது. நல்ல உயரம். கல்லூரியில் சேர்ந்த பிறகு , உடற்பயிற்சி செய்யவென்று ஜிம் செல்லவும் தொடங்கியதன் விளைவு, நன்றாக கட்டுடலை வைத்திருந்தான். வாலி பால் விளையாடுவது அவன் பொழுதுபோக்கு. கிரிக்கெட் ஜுரம் அவனை தாக்கவில்லை. மாநில அளவிலும் அவன் குழு கோப்பையை இரண்டு வருஷங்களாக தக்க வைத்திருக்கிறது. நரேந்திரனுடனும்,அப்பாவுடனும் செஸ் நன்றாகவே விளையாடுவான். 

எல்லோரையும் எளிதில் அனுசரித்து செல்லும் சுபாவம். ஒருவேளை அவன் அம்மாவிடமிருந்து வந்திருக்கலாம். மாநிறத்திற்கு சற்றுக் கூடுதலான நிறம். கூரிய நாசி, சிகரெட் பழக்கமில்லை என்று சொல்லும் உதடுகள். அவனை எளிதில் வசீகரனாய் எடுத்துக்காட்டும், மீசை. அமைதியும், புன்னகையும் சிந்தும் கண்கள். அவன் அறிவை பறைசாற்றும் அகல நெற்றி.   என்பது சதவிகிதம் தாண்டும் மதிப்பெண்கள்.(  பி காம்  தங்க மெடல் வாங்கி பாஸ் செஞ்ச படிப்ஸ் )

ஜானவி ,அவனிடம் மயங்கியது சற்றும் எதிர்பாராதது. எப்படி அவளுக்குள் நுழைந்தான் என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது. அவளுக்கும் தெரியாது. அவள் தன் காதலை சொல்லும் பொழுது அவனுக்கு அதிர்ச்சிதான். நரேன், ஜான்வி, சாகேத் மூவரும் மூன்று வருஷங்கள் ஒன்றாகப் படித்தவர்கள்.அப்போது தோன்றாத இந்த உணர்வு  இப்போது தோன்றுவது விந்தைதான்.

ரொம்ப சாரி ஜான்வி. இது… இது நடந்திருக்கவே கூடாது. நா..எப்படி உன்னை அட்ராக்ட் பண்ணேன்னு தெரியல. பட்  எனக்குள்ள வேற யாரோ….ப்ச் , அம் ரியலி சாரி.அவன் உணர்ந்து சொன்ன வார்த்தைகள் அவளுக்குள் மிச்சமின்றி காயத்தை ஏற்படுத்த, ” இட்ஸ் ஓகேய் ன்னு நா சொல்ல மாட்டேன்.என்று அழுது கொண்டே சென்றவளை கையாலாகாத்தனத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

அதற்குப் பிறகு பெண் அவனுடன் பேச விரும்பவில்லை.அவளுக்குள் ஒரு வன்மத்தை விதைத்தது. காதலிக்கிறேன் என்று சொன்ன பிறகு, எப்படி இவ்வாறான எதிர்மறை எண்ணம் வரும் என்பதற்கு, நிறைய சாட்சிகள் உண்டு. காதலிக்க மறுத்த பெண்ணின் மீது திராவகம் ஊற்றுவது, கொலை மிரட்டல் விடுப்பது,கடத்துவது…இன்னும் எத்தனையோ. அதனால், ஜான்விக்கு அவன் மீது வன்மம் என்றால் நான் நிச்சயம் ஆச்சர்யம் கொள்ள மாட்டேன்.

ஆனால்,அதற்காக அவள் என்ன செய்யக்கூடும் என்று ஏதேனும் ஊகங்கள்? ம்ம்…சில விஷயங்கள் மர்மங்களாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே!

நரேந்திரனிடம்,ஜான்வி நடந்தவற்றை கூறி,”அவனோட மனசுல யாருன்னு கேட்டு சொல்ல முடியுமா..நரேன் என்று உதவியும் கேட்டாள் . அவளைப் பொறுத்தவரை அந்த பெண் யாரென்று நிச்சயம் தெரிந்துக் கொண்டாக வேண்டும்.அவளால் தானே, சாகேத் என்னை மறுத்தான் என்னும் எண்ணம். தெரிந்துகொண்டு மட்டும் இவள் என்ன செய்யப் போகிறாளென தெரியவில்லை.

எனக்கே இது ஆச்சர்யம் தான் ஜானு..இத்தனை வருஷங்களா நானும் அவனும் நெருங்கிய நண்பர்கள்னு பேருதான். ம்ஹும்…நீ சொன்ன பிறகுதான் எனக்கும் தெரியும்.அவன்கிட்ட கேட்டு பாக்குறேன்.சரியான அமுக்குணிஎன்று முடித்துவிட்டான் நரேன்.

அவனுக்குள் தன் உடன்பிறப்பை தான்  சாகேத் காதலிக்கிறானாஎன்ற சந்தேகம்.அதை வாய் விட்டு சொல்ல நரேனுக்கு பிடிக்கவில்லை. சாகேத்தை காதலிக்கிறேன் என்பவளிடம் என்னவென சொல்வது என்று. அத்துடன் நரேனுக்கு வெறும் ஊகம்தானே!

இதையெல்லாம் எதையும் மனம் வெறும் கொண்டு செல்லாது வெறும் படிப்பில் மட்டும் தன் எண்ணங்களை குவித்தான் சாகேத். எப்படியாவது நல்ல வேலை தேடிக்கொண்டால் தானே, தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்ய கேட்க முடியும்.அந்த எண்ணமே அவனை  ஊக்கம் கொள்ள செய்தது.மனதை அலைபாய விடாமல் தீவிரமாக படிக்க ஆரம்பித்தும் விட்டான். அதனாலேயே மதிப்பெண்கள்  தொண்ணூறு சதவிகிதம் வந்தது. அவன் ஆசை பட்ட படிக்கு கேம்பஸ்சில்  வேலை கிடைக்கவேஇறுதியாண்டு தேர்வு முடிவுகள் வரும்முன்னரே  பெங்களூரு நகரம் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்து விட்டான் சாகேத். 

அவனது இந்த தீர்மானத்தின் மீது ராஜம்-துரை  தம்பதிக்கு நிச்சயம் வருத்தம் தான். இவ்வளவு வருஷங்களாக பாடுபட்டு வளர்ந்திருக்கும் அவர்களது கல்விக்கூடம். மகனது கைகளில் கொடுத்து இன்னும் வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்று கனவு கண்டாரே துரை. 

ராஜம் தான் தனது வருத்தத்தை முழுங்கிக் கொண்டு,”  இருக்கட்டுங்க..கொஞ்ச வருஷம் வெளிய வேலை செஞ்சு உலகத்தை பார்க்கட்டும். எங்கே போயிடுவான். இப்போ நாம சொன்னா அவனுக்குப் புரியாதுஎன்று கணவனுக்கு ஆறுதல் சொன்னாள் .

ராஜத்தின் மனதில்,தனது ஒரே மகன்,அருகே இல்லாமல் வெளியே இருக்கிறானே …எனும் ஏக்கம். இவ்வளவு வருஷங்களில் அவனை பார்க்காது ஒரு நாள் இருந்தது இல்லையே! கணவருக்கு சொன்ன மொழிகளை தனக்கேயும் சொல்லிக் கொண்டாள் .

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வந்து பெற்றோருடன் சென்னையில் இரண்டு நாட்கள் இருப்பான் சாகேத்.அப்போது தவறாமல் நரேந்திரன் இவர்களது டியூஷன் சென்டருக்கு வந்து இவனுடன் இருந்துவிட்டு செல்வான். பைனல் சி ஏ இரண்டு முறை எழுதியும் ஒருமுறை ஒரு தாளிலும்,இன்னொருமுறை மொத்த மதிப்பெண்களிலுமாக போய்விட்டதில் ஏக மன உளைச்சல் அவனுக்குள். ஒரே ஆறுதல் சாகேத் தான்.அவனளவுக்கு வேறு யாரையும் நரேன் தனது அருகில் சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை.போதாதகுறைக்கு,நரேனின் பெற்றோர் இருவருமே, குடும்ப பின்னணியை காட்டி  பேசத் தொடங்கவே வெகுவாக வெறுத்துப் போனான் நரேன்.

விளைவு,சாகேத்துடன் இருக்கப் போவதாக சொல்லி,நரேந்திரனும் பெங்களூரு வந்துவிட்டான். இருவருமாக குந்தனஹள்ளி பகுதியில் பிளாட் எடுத்துத் தங்கினார்கள். நரேந்திரனும்  தனக்கான ஒரு வேலையை ஆடிட்டிங் நிறுவனம் ஒன்றில் தேடிக்கொண்டு,படிப்பைத் தொடர்ந்தான். 

சென்னையில் இருந்த மன அழுத்தம் இங்கே இல்லை. சி ஏ பாசாகாம சென்னை வரப்போவதில்லை என்று சபதம் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு அவன் வீடு அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்திருக்க, சாகேத் சென்னை வந்தாலும் ,நரேன் வருவதில்லை. 

அவ்வப்பொழுது அவன் வீட்டினர் வீடியோ காலில் பேசுவார்கள். சில சமயங்களில் திருமகள் ஏதாவது வாங்கி அனுப்ப சொல்வாள். இப்படியாக நாட்கள் கழிய, திருமகளும் பட்டப்படிப்பை முடித்துவிட்டு,தனியார் நிறுவனம் ஒன்றில்  ஜூனியர் ப்ரோக்ராம்மர் வேலையில் சேர்ந்து கொண்டாள் .  பெரிய நிறுவனம் என்று இல்லை. ஸ்டார்ட் அப் நிறுவனம்தான். ஆனால் ,இப்போதைக்கு இது போதும்.கொஞ்சம் வேலை கற்றுக்கொள்ளலாம் என்பது அவளது எண்ணம். வீட்டில் பெற்றோர் இருவருமே ஒன்றும் சொல்லவில்லை.

நரேந்திரனுக்கோ ,உடன் வேலை செய்யும் சாருமதியுடன் காதல்.அவளும் சி ஏ இன்டெர் முடித்து ,பயிற்சியில் இருக்கிறாள். இருவருக்கும் ஆரம்பத்தில் நட்பாக ஆரம்பித்தது. பெங்களூருதான் அவளது பூர்வீகம். ரூபே நகராவில் அவளது வீடு. நரேந்திரன் சோர்வாக உணரும் சமயங்களில் அவளது ஆறுதல், இப்போது காதலில் வந்து நிற்கிறது. 

அவனுக்கு தனது வீட்டிலிருந்து , உணவு எடுத்துக் கொண்டு வந்து தருவது, சேர்ந்து மல்லேஸ்வரம்,ஜைநகர்  சிக்பேட் என்று சுற்றுவது என இருவரது உலகமும்  ஒன்றானது. சாகேத் ,அவனுக்கும்கூட சாருமதியை அறிமுகம் செய்து வைத்தான் நரேந்திரன்.மூவருக்கும் இடையே நல்ல புரிதல் உண்டு.விடுமுறை சமயங்களில் சாரு  ,இவர்கள் இடத்திற்கு வந்து விடுவாள். மூவரும் சேர்ந்து சமைப்பார்கள்.நரேந்திரனும்  சாருவும் சேர்ந்து படிக்கும் சமயங்களில் அவர்களை சாகேத் கவனித்துக் கொள்வான். 

நரேந்திரனது குடும்பத்திற்கு அவனது காதல் இன்னமும் தெரியாது.சாரு  நன்றாக தமிழ் பேசுவாள் .எழுத படிக்கத் தெரியாது. அதே போல் நரேந்திரன் குடும்ப அளவுக்கு வசதியும் கிடையாது. அவள் அப்பா கன்னட டிவி சானலில் எடிட்டிங் துறையில் வேலை.அம்மா இல்லத்தரசி. ஒரு தம்பி.அவன் பத்தாம் வகுப்பில் படிக்கிறான்.

சாருவுக்கு,திருமணம் செய்து கொண்டு வீட்டில் இருப்பதும்,குழந்தைகளை கவனித்து,கணவனுக்கு தேவையானதை செய்வதுமான தனது அம்மா போல் இருக்கத்தான் ஆசை.அவள் அப்பாவின் விருப்பம். அதற்காகத்தான் சி ஏ படிக்கிறாள். நரேந்திரனுடனான காதல் அவளுக்கு உற்சாகம் அளிக்கிறது. சேர்ந்து படிப்பதில் இன்னும் அதிகமாக படிக்கிறாள். அவள் வீட்டிலும் இன்னமும் இந்தக் காதல் விவகாரம் தெரியாது.

இருவருக்குமே மறைக்கும் எண்ணமெல்லாம் இல்லை. தானாக எப்போது யாருக்கும் தெரியட்டும்.கவலை இல்லை..என்ற மனோபாவம் .இயல்பானதாக இருந்தது அவர்கள் உறவு.நரேனுக்கும் அவள் விருப்பம் தெரியும். திருமணத்திற்குப் பிறகு அவளை வேலைக்கு செல்ல வேண்டும் என்று நிர்பந்தம் செய்ய அவனுக்கு விருப்பம் இல்லை.அப்பாவும் சாருவும் உடன்பட்டால்,அவர்களது நிறுவனத்தில் சாரு வேலை செய்யலாம்.அவனது அம்மா செய்வது போல்  கூட செய்யலாம். 

பார்க்கலாம்.முதலில் இருவருமே பைனல்ஸ் பாசாக வேணும்.பிறகுதான் மற்றவையெல்லாம்..என்று தன்னை தானே அடக்கிக் கொண்டான்.

சாகேத் தனது தங்கையைத்தான் விரும்புகிறானா..‘.என்ற சந்தேகம் நரேனுக்கு உண்டு. சாருவிடம் கூட தன் மனதை அவன் சொல்லியிருக்கிறான். சாகேத்தின் ஒழுக்கம்  பற்றிய பிரமிப்பு சாருவுக்கு அதிகமாகவே உண்டு. 

ஹும் ..ஒருவேளை சாகேத் உங்க தங்கைக்கு ஹஸ்பண்டா வந்தா,ஷி இஸ்  ஸோ  லக்கி. நல்ல சாய்ஸ் தான்.என்று தன் மனதை சொன்னாள்  உண்மையில் சாகேத்தை அவளுக்கு அவ்வளவு பிடித்தம்.அவன் மீது அவ்வளவு மரியாதை. இவ்வளவு காலமாக பார்க்கிறாள். அவனிடம் தப்பான பார்வைஏடாகூட பேச்சு, அசட்டுச் சிரிப்பு என்று ஒழுக்கக் குறைவாக ஒன்று சொல்ல முடியாது. பெண்கள் ஆசைப் படும் தகுதிகள் என்னதான் அவனிடம் இல்லை? நல்ல படிப்பு,காய் நிறைய சம்பளம், அப்பழுக்கற்ற ஒழுக்கம்.வேறு என்னதான் வேண்டும்?

நீங்கள் தான் சொல்லுங்களேன். மாப்பிள்ளையின் தகுதியாக இன்னும் என்ன வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!