Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கடைவிழியின் காதலில்

Kamali Maduraiveeran’s கடைவிழியின் காதலில் 1

முன்னுரை

 

 மௌனத்தை

 



Advertisement

மெள்ள பருகி

 

மென்மையாய் உணர்ந்து

Advertisement

       

Advertisement

நாம் வாழும் காலங்களுடன்

 

மௌனமே நம்மின் புரிதலை

Advertisement

 

மேம்படுத்தும் – நமது

 

முதுமை காலங்கள் வரை

 

பயணிக்கும் நம்மின் அன்பு

 

மெய்ப்படும் போது தான்

 

நம்மின் அன்பு உண்மையாகும்…

 

அத்தியாயம் 1                            

     

                  கண்ணுக்கெட்டிய தூரம் வரை உயர்ந்த பச்சை பசேலென்ற மலைகளும், தென்னந்தோப்புகளும், அம்மலைகளுக்கு   நடுவே யாரோ அமர்ந்து உணவு சமைப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தும் பனிப்புகையும், எங்கு பார்த்தாலும் பச்சை வண்ணைப் புடவை உடுத்திய வயல்வெளிகளும்,

                                  

வயல்வெளிகளுக்கு நடுவே ஆங்காங்கு என்னையும் கொஞ்சம் பாரேன் என்று அமர்ந்திருக்கும் வெள்ளை நிற கொக்குகளும், என்னை சுவாசிக்காமல் நீ வாழ முடியாது எனக் கூறும் மண் வாசமும் நிறைந்த தேனி மாவட்டதில் சோலையூர் என்னும் ஒரு சிறிய கிராமத்தில் சர்க்காரின் உதவியால் வயல்வெளிகளுக்கு நடுவே கருப்பு கம்பளம் ஆங்காங்கே விரித்தாற்போல காட்சியளிக்க, ஒரு அரசுப் பேருந்து அதிகாலையிலேயே மது அருந்தியவனைப்போல் சீராக செல்லாமல் அங்கும் இங்கும் அலைக்கழித்தது.

                         

நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள் ஆனால் நான் என் சொந்த ஊரின் இயற்கை அழகை ரசிக்காமல் விடமாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள் இளவரசி.

                             

ஆம், இளவரசி கணிதத்தில் இளங்கலை பட்டதாரி ஆசிரியருக்கான தகுதி தேர்வில் வெற்றி பெற்று அவள் சொந்த ஊருக்கே பணியாற்ற செல்கிறாள்.    

                  

வண்டியின் குலுங்கள் தாங்காமல் தூங்கிக் கொண்டிருந்த ஒரு பெரியவர் கம்பியில் மோத ஆ….. என்ற சத்தத்துடன் “ஏப்பா டிரைவரு வண்டிய கொஞ்சம் பாத்து ஒட்டப்படாதா, கண்ண என்ன பொடனியிலையா (பிடரி) வச்சுருக்க, இங்க பாரு மண்டை வீங்கிப்போச்சு” என்று கத்த…

                

வண்டியை செலுத்திக்கொண்டிருந்த டிரைவர் “யோவ் எனக்கு தான் கண்ணு தெரியாது… நீவேனா வந்து பாத்து பக்குவமா ஓட்ரியா” என்று அழுத்தம் கொடுத்து சொல்ல கப் சிப் என்று அடங்கி அமர்ந்த பெரியவரை. 

 

அருகில் அமர்ந்திருந்த பாட்டி “யோவ் கொமரி (குமரி) புள்ள முகம் மாதிரி மேடும்பள்ளமுமா ரோடு இருந்தா அவருந்தேன் என்ன செய்வாரு… நீ நல்லா புடுச்சு உக்காரு….” என்றார்.

                   

அதற்கு பெரியவரை பார்த்து பரிதாபப்பட்ட இளவரசிக்கு வயது இருபத்துநான்கு, நல்ல உயரம், அவளது மாநிற மேனியை ஒரு அழகான சிவப்பு நிற பருத்தி புடவை அலங்கரித்திருந்தது. கடந்து செல்வோரையும் எதிரே இருப்போரையும் “இன்னும் ஒரே ஒரு தடவ திரும்பி பாக்கலாமா…” என்று எண்ணுமளவு வசீகரமான முக அமைப்பு கொண்டவள்.

 

வலது கையில் அவள் தாயின் இரு தங்க வளையல்கள், இடது கையில் அவள் தந்தை அவள் பிறந்தநாளிற்கு பரிசளித்த பாஸ்ட் டராக் வாட்ச், ஆசிரியருக்கு உரிய கம்பீரத்தை எடுத்துக்காட்டும் நிமிர்ந்த நடை, கண்களில் ஒரு பணிவு, மாணவர்களுக்கு ஆசிரியர் மீது இருக்கும் பயத்தை போகுமாறு உதட்டில் எப்போதும் ஒட்டியிருக்கும் ஒரு புன்சிரிப்பு, கழுத்தில் ஒரு சிறு பொன்சங்கிலி அவள் சங்கு கழுத்திற்கு மேலும் அழகூட்டியது. 

                

ஒரு கை தன் தோளைத்தொட்டு திருப்ப, அது யாரென்ற உணர்வறிந்து திரும்பியவளோ தன் ஆச்சி தங்கம்மாளை பார்த்து சிரித்தாள். “என்ன அரசி இன்னம் ஊரு போய்சேர ஒரு மணிநேரமாவது ஆகும், செத்த எம்மடியில படுத்து கண்ணயரு” என்றார் இளவரசியை ஈன்றவரை ஈன்றவர். அதாவது இளவரசியின் தாயினை பெற்ற தாய்.                       

         

ஆம், தற்போது இளவரசிக்கு இருக்கும் ஒரே சொந்தம் அவள் ஆச்சி மட்டுமே.                                                                                                                                    

          

“இல்ல ஆச்சி எனக்கு தூக்கம் வரலை, எவ்ளோ நாளாச்சு நம்ம ஊருக்கு வந்து நான் வேடிக்கை பாத்துட்டே வரேன் நீ வேணா தூங்கு நான் ஊரு வரவும் உன்னைய எழுப்புறேன்” என்றாள் இளவரசி.

               

இளவரசியின் தலையை வாஞ்சையுடன் கோதிய ஆச்சி தன் கலங்கிய கண்களை பேத்தியிடம் காட்டாமல் தலையை வேறுபுறம் திருப்பினார். தன் ஆச்சியின் மனநிலை புரிந்த இளவரசியோ பெருமூச்சு ஒன்றை வெளியேற்றிவிட்டு தன் ஆச்சியை தோளோடு சேர்த்து அணைத்து கன்னத்தில் இதழ் பதித்தாள்.

                

அவளின் செய்கையை உணர்ந்த ஆச்சியோ, “ஐயோ என்ன அரசி இது… இப்படி செய்யாதன்னு எத்தனை வாட்டி சொல்லீருக்கேன்” என்று தனது கொசுவதால் கன்னம் துடைத்த பாட்டியோ மனதிற்குள் உண்மையாகவே பாரம் குறைந்தது போல் உணர்ந்தார்.

                

இளவரசியை ஆதுரத்துடன் பார்த்த ஆச்சிக்கு தன் மகள் மற்றும் மருமகன் நினைவு தானாக வந்தது.

                

இளவரசியின் தந்தை செந்தில்நாதன் தாய் வள்ளியம்மை. செந்தில்நாதன் சோலையூரில் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்தவர். தாய் வள்ளியம்மை இல்லத்தரசி.

 

நகரங்களில் தான் பள்ளி ஆசிரியர் என்றால் “டீச்சரா நல்ல சுலபமான வேலை காலைல போயிட்டு சாயங்காலம் சீக்கிரமா வீடு வந்துரலாம்” என்பர்.

 

ஆனால் கிராமங்களில் “நாம தான் இந்த வேகாத வெயில்ல வெந்து கஷ்டப்படறோம், நம்ம புள்ளகுட்டிகளாச்சும் நல்லா படுச்சு சக்கார் உத்தியோகத்துக்கு போகணும்” என்ற எண்ணம் கிராமங்களில் வாழும் ஒவ்வொரு தாய் தந்தைக்கும் தோன்றும் அபரிமிதமான எண்ணம்.

            

அந்த எண்ணத்திற்கு உரம் சேர்க்கும்படி அமைவது அரசு பள்ளிகளும், இலவச உணவு மற்றும் பாட புத்தகங்களும் தான். அதிலும் ஆசிரியர் என்பவர் கிராம மக்களுக்கு ஒரு ஊன்றுகோலாக கருதப்படுபவர். அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் கடவுளாக நினைப்பார்கள். 

         

அதன் வெளிப்பாடாக செந்தில்நாதனுக்கென்றே ஒரு தனிப்பட்ட மரியாதை உண்டு. தன் இருபது வருட ஆசிரியர் பணியை சோலையூரில் கழித்தவர்.

           

இளவரசியின் பன்னிரெண்டாம் வகுப்பில், செந்தில்நாதனுக்கு தலைமை ஆசிரியராக பணிபுரிவதற்கான வாய்ப்பு வந்தது. ஆனால் சோலையூரில் அல்லாமல் மதுரையில் உள்ள அரசுப்பள்ளியில் கிடைத்தது.   

             

முதலில் தலைமையாசிரியர் பொறுப்பை மறுத்தவர் பின்பு தன் மகள் இளவரசியின் நலன் கருதி, அதாவது அவளின் மேற்படிப்பிற்கு மதுரையில் உள்ள கல்லூரிகளின் துணை வேண்டி மதுரை செல்ல முடிவெடுத்தனர்.

 

தங்கம்மாளும் “நீங்க யாருமில்லாத ஊர்ல நா மட்டுமென்ன செய்யப்போறேன்” என்று கூறி அவரும் உடன் கிளம்பினார்.

              

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன.  செந்தில்நாதன் தன் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பின், இளவரசியும் இளங்கலை ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, அவர்கள் சொந்த ஊரான சோலையூருக்கே பணிநியமனமும்   கிடைத்தாகிவிட்டது.

               

இதோ குடும்பத்துடன் அடுத்த வாரம் கிளம்ப தயாராக இருந்தனர்.

             

“அரசி எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கோடா, நானும் அப்பாவும் ஊருக்கு போக, தேவையான சில பொருளு வாங்கீட்டு வந்துறோம்” என்றார் வள்ளியம்மை தன் மகளிடம்.

 

“ஆ ….அது சரி எங்க போனாலும் உன்ர புருஷனையும் முந்தானையிலேயே முடிஞ்சு வச்சுக்க” என்று அரசி தன் தாயை வம்புக்கு இழுக்க, “உனக்கு என்னடி கஷ்டமா வருது, கல்யாணத்துக்கு பொறவு நீ உன்னோட புருஷன எங்க முடியப்போறேன்னு நானும் பாக்கத்தானே போறேன்” என்றார் வள்ளியம்மை.

                       

செந்தில்நாதன் “என்ன வள்ளி கிளம்பீட்டியா” என்று வந்தவர் மகளுடன் வம்பு வளர்த்துக்கொண்டு இருந்த தன் மனைவியிடம் “அய்யய்ய…. என்ன வள்ளி, அரசி தான் சின்னப்புள்ள, நீயும் அவ கூட சரிக்கு சரியா வாய்ச்சண்டை போட்டுட்டு இருக்க” என்று இடித்துரைக்க,

 

“அதானே மகளுக்குத்தானே எப்பவும் சப்போட்டு” என்று முறுக்கிய வள்ளியை ஒருவழியாக தேற்றி, தன் இருகைகளாலும் வாய் பொத்தி சிரித்த அரசியை பார்த்து சிரித்த முகத்துடன் ஒரு விரலை உயர்த்தி கண்டிப்பு காட்டிய செந்தில்நாதன், ஒரு வழியாக மனைவியை சமாதானப்படுத்தி விட்டு,

 

மகளிடம் “பத்திரமா இருந்துக்கோ அரசி ஆச்சி கோயிலுக்கு போயிருக்கு, இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துரும், கதவை பூட்டிக்க” என்று விடை பெற்றனர் இருவரும்.

 

“நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்” என்பது போல, எப்போதும் ஒன்றாக இருப்பவர்கள் தங்கள் மரணம் கூட ஒன்றாக இருக்க வேண்டும் என்று பேசி வைத்திருந்தார்கள் போலும். ஆம், இளவரசியின் பெற்றோர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி இருவரும் இப்பூவுலகைப் பிரிந்தனர்.

 

தங்கம்மாளின் நினைவுகளில் இருந்து அவர்களை பிரித்தெடுக்கும் வண்ணம், அருகில் சென்ற பேருந்து அதீத ஒலியெழுப்பி அவர்களை மீட்டது.

 

ஆச்சியின் கண்களில் வழிந்த கண்ணீரால், அவரின் எண்ணம் புரிந்தது போல் இளவரசி தங்கம்மாளின் கைகளை அழுதிக்கொடுத்தாள். “தாயே மாரியம்மா என் பேதிக்கு நீதான் நல்ல வழிய கட்டணும்” என்று வாய்விட்டே சத்தமாக பேசியவரை, “அதுசரி…., ஆச்சி … நமக்கு எது நல்லது எது கெட்டதுன்னு நாம தான் முடிவு எடுக்கணும், இதுல மாரியம்மா எங்க இருந்து வந்தாங்க?” என்று கேள்வி எழுப்ப.

 

“இப்பிடி சாமிய தப்பா பேசாதனு எத்தனவாட்டி சொல்லீருக்கேன்” என்று தங்கம்மாள் முறுக்கிக்கொள்ள. “ம்… உண்மைய சொன்னா ஒத்துக்கமாட்டியே, சரி விடு” என்று இளமதி ஆச்சியை தாஜா செய்ய துவங்கினாள்.

            

   ஆச்சியுடன் வம்பு வளர்ந்துகொண்டே வந்தவள், “ஆச்சி இன்னும் எவ்ளோ தூரம் இருக்கு” தனக்கு இக்கேள்வியின் பதில் தெரிந்தாலும் ஆச்சி வாயிலாக கேட்கும் பொருட்டு கேள்வி எழுப்பினாள்.

               

 “அந்தா அந்த புளியமரம் தெரியுதுல்ல, அத தாண்டுன உடனே நம்ம ஊரு தே, அரசி… அந்த புளியமரம் ஞாபகம் இருக்கா உனக்கு” என்று ஆச்சி கேள்வி எழுப்ப.

          

 “ஆ … எப்படி மறக்கும் ஆச்சி, அந்த மரத்துக்கு கீழ தானே நானும் அலரியும் தட்டாங்கல்லு, நொண்டி, அப்புறம் ம் ….. காவியம், தொட்டுவிளையாட்டு, கண்ணாமூச்சி எல்லாம் விளையாடுவோம்”

              

இளவரசியின் எண்ணம் தட்டாங்கல்லு, நொண்டியில் அலரியிடமும் மற்ற விளையாட்டுகளில் மற்றுமொருவனிடமும் லயித்தது.

 

அவன் பரிதீரன். தீரா… மனதிற்குள் எண்ணிலடங்கா முறை சொல்லி பார்த்திருப்பாள் இப்பெயரை…            

இளவரசி தன் எண்ண ஓட்டங்களை முடிக்கும் முன்பே, எதிரே ஒரு டிராக்டர் தன் சுமைக்கு ஈடான வைக்கோல் சுமையை சுமந்துகொண்டு அவர்கள் செல்லும் வாகனத்தை கடக்க இருந்தது.

 

பேருந்தின் நடத்துனர் “ஏ ஏ … ஆ லெப்ட் அ ஒட்டுப்பா, போட்டும் ரைட் ரைட்… என்று குரல் கொடுத்தார்”.

               

டிராக்டர் அவர்களை கடக்கும் போது ஆச்சி இளவரசியை கை பிடித்து அவர்கள் பக்கம் இழுத்தார். “என்ன ஆச்சி, என்ற இளவரசிக்கு, “இங்கன தள்ளி வா, வைக்கோலு ஜன்னல் பக்கமா உள்ள வருது பாரு கைய கிளிச்சுப்புடும்” என்றார் ஆச்சி.

                  

ஆம், கிராமத்தில் பேருந்தில் சென்றவர்களுக்கு அந்த அனுபவங்கள் கண்டிப்பாக இருக்கும். கிராமத்தின் மிகச்சிறிய ஒற்றைச் சாலைகளில், இரு வாகனங்கள் செல்ல இடம் போதாமல் இரண்டும் கீழே விழுவது போல் சென்று பின் விலகிச்செல்லும்.

 

அதிலும் அருகில் செல்லும் வாகனம் ட்ராக்டராக இருந்தால், அது சுமந்து செல்லும் வைக்கோல், கரும்பு ஆகியவை ஜன்னல் பக்கம் அமர்த்திருப்போரை உரசாமல் செல்லாது. அதுவும் வெட்டப்படாமல் இருக்கும் கருவேல முட்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

 

டிராக்டர் பேருந்தை கடந்த பின்பும் அதன் தடயங்களை ஜன்னல் அருகில் இருப்போரிடம் விட்டுச்சென்றிருந்தது.

 

சிறுவர் சிறுமிகள் அதனை எடுத்து விளையாட ஆரம்பித்து இருந்தனர்.

                  

திடீரென்று வண்டியில் தட புட வென்று சத்தம் கேட்க, என்னவென்று திரும்பிப்பார்த்தால், பேருந்தில் பயணிப்போரில் சிலர், சோலையூரில் இறங்குவதற்காக தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு எழுந்து நின்றனர்.

 

கம்பியில் சாய்ந்து நின்று அவரது சில்லரைப் பைக்குள் தலையை கொடுத்திருந்த நடத்துனர், அவர்களின் தடபுடலை பார்த்து தன் விரலில் வைத்திருந்த விசிலை எடுத்து பீ…பீ…பீ…பீ…பீ… என்று ஊதினார்.

                   

“சோலையூர் வந்திருச்சு எறங்குங்க” என்று நடத்துனர் குரலெழுப்ப இறங்குவதற்கு தயாராக நின்றிருந்தவர்கள் இறங்க, சீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள், நடத்துனரின் விசில் சத்தத்தில் பயந்து விழுந்து அடித்துக்கொண்டு எதோ கனவிலிருந்து விழிப்பது போல் விழித்தனர். 

                   

அசைவே இல்லாமல் அமர்ந்திருந்த ஆச்சியை பார்த்து “ஆச்சி வா இறங்குவோம்” என்றாள் இளவரசி.

 

“இரு அரசி, இது புளியமர ஸ்டாப் நாம அடுத்த ஸ்டாப்ல இறங்குவோம்” என்ற ஆச்சிக்கு ஒரு தலை உருட்டை பதிலாக தந்தாள் அரசி என்னும் இளவரசி.

 

பின் சில நொடிகளில் “ஏன் ஆச்சி?” என்ற அரசியின் கேள்விக்கு “வய வரப்பு வச்சிருக்கவுக இங்கன இறங்கி தோப்புக்கு போவாக, நமக்கு இங்கன என்ன சோலி (வேலை), நாம ஊருக்கு உள்ளார போய் இறங்குவோம்” என்றார் தங்கம்மாள்.

                

சோலையூரின் சாலையை இருமருங்கிலும் அமைந்துள்ள புளியமரங்கள் வரிசையாக நிழற் குடை பிடித்து வரவேற்றன.

 

ஒரு சோலைக்குள் செல்வது போலவே தோற்றம் கொண்டது அந்த சாலை. தன் சுவாசத்தை நன்கு உள்ளிழுத்து வெளிவிட்டாள் இளவரசி.

                 

அடுத்த சில வினாடிகள் பேருந்து சோலையூர் பஸ் ஸ்டாண்டை அடைந்தது. பேருந்து வழக்கம்போல் அதன் இடத்தில நிற்காமல் சற்று தூரம் தள்ளிப் போய் இளைப்பாறியது.

 

ஆட்கள் இறங்குவதற்குள் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறத் தொடங்கியிருந்தனர்.

     

அடித்துப்பிடித்து இளசுகளுக்கு பழசுகளும் முண்டி மோத, “உங்க சண்டைக்கு நா வரலப்பா, என்னமோ பண்ணுங்க, நான் போய் ஒரு டீயை போட்டு வரேன்” என்று ஓட்டுநரும் நடத்துனரும் கிளம்பிவிட, எப்படியோ நம் ஆச்சியும் பேத்தியும் பேருந்திலிருந்து அவர்கள் காலடிகளை எடுத்து வைத்தனர் சோலையூருக்கு.

 

அனைவரும் ஏறிய பின்பும், ஒரு வயதான மூதாட்டி ஒரு கூடையில் சில காய்களை வைத்துக்கொண்டு, அங்கு போவோர் வருவோரிடம் “ஏப்பா ஏப்பா …. இந்த கூடையை கொஞ்சம் வண்டியில ஏத்தி வைப்பா” என்று கெஞ்சிக்கொண்டிருந்தார்.

             

கிராமங்களில் மட்டுமே இதுபோல் தன் செலவுக்கு தன் பிள்ளைகள் பண உதவி செய்தாலும் அவர்களால் முடிந்த வேலைகளை தன் வாழ்நாளின் இறுதி வரை செய்து உழைப்பார்கள்.

 

“சும்மா இருந்தா ரெத்தம் சுண்டி போகும் என்பார்கள்” அந்த வெள்ளந்தி மனிதர்கள். மனதில் தோன்றிய ஆச்சரியத்தை விழிகளில் தேக்கி அந்த மூதாட்டியை நோக்கிச் சென்றாள் அரசி. 

 

“என்னங்க பாட்டி, என்ன செய்யணும்”, என்று வினவினாள். இளவரசியை தலை முதல் கால் வரை ஆராய்ந்த பாட்டி சிறு யோசனையுடன்

 

“தாயி இந்தக் கூடைய வண்டியில ஏத்தணும்த்தா ஒரு கை புடிக்கிறியா” என்றார்.

       

“சரி பாட்டி, இருங்க வரேன்” என்று விட்டு தன் கைப்பையை ஆச்சியிடம் கொடுக்கச் சென்றாள் இளவரசி.

 

அதற்குள் பாட்டி தங்கம்மாளை அடையாளம் கண்டுகொண்டு “யாத்தே… தங்கம்மாளா இது” என்று கேள்வி எழுப்ப யார் என்று பார்த்த தங்கம்மாளோ, “ஏஏ கருப்பாயி நீதானா, என்ன இப்புடி ஒடஞ்சு போயிருக்க, ஆள அடையாளமே தெரியல” என்று தங்கம்மாள் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்த,

 

“ஆமா நீ மட்டும் கொமறியாட்டமா இருக்க? நீயுந்தே உருகொலைஞ்சு போயிருக்க, ஆமா… யாறுத்தே இது?” என்று தான் வலது கையை நீட்டி சுருங்கியிருந்த புருவத்தின் மேல் வைத்து இளவரசியை பார்த்து கருப்பாயி கேட்க…   

            

 “என்ன இப்புடி கேக்குறவ, எம்பேத்தி இளவரசி” என்றார் ஆச்சி.

 

“யாத்தே… கேள்விப்பட்டோம்தா, எங்களால நெலைகொள்ள (நிலைகொள்ள) முடியல, இப்படியா நடக்கணும்… அந்த கடவுளுக்கே அடுக்குமா…” என்று கேவ இருந்த கருப்பாயி, இளவரசியின் முகம்பார்த்து “இந்த அழகு பெத்த பிள்ளையை விட்டுட்டு இப்பிடியா போகணும்…” என்று தன்னைமறந்து அழத்தொடங்கிய கருப்பாயியை

 

“எல்லா எறியாசா வண்டி கெளம்பப்போகுது” என்ற குரலில் நடப்புக்கு கொண்டு வந்தார் பேருந்து நடத்துனர்.

 

“தங்கம்மா…. ஊருக்குள்ள தானே போற, நா ஆண்டிபட்டி சந்தைக்கு போறேன் சாயங்காலம் சந்தையிலிருந்து வந்துருவேன், வந்ததும் ஓடியறேன் செரியா”, என்று தன் இயலாமையை நினைத்து கருப்பாயி வருந்தவும்,

 

“சரி கருப்பாயி போயிட்டு வா” என்று நிலைமை புரிந்து சொன்ன தங்கம்மாள் இளவரசியிடம் “அரசி அந்த கூடையை கொஞ்சம் பாட்டிக்கு ஒரு கை புடி” என்று கூற, இளவரசி கருப்பாயிக்கு உதவி செய்தாள்.

             

கூடையை பேருந்தில் கருப்பாயி அமரும் இருக்கைக்கு அருகில் வைத்துவிட்டு நிமிர, இதோ நான் கீழே விழப்போகிறேன் என்று விழத்துடித்த கண்ணீரோடு கருப்பாயி இளவரசியின் தலை தொட்டு “நல்லா மகராசியா இருத்தா, உம்மனசுக்கேத்த மவராசன் கிடைப்பான்” என்று ஆசி வழங்கினார்.

 

கருப்பாயியை பேருந்தில் அமர வைத்துவிட்டு வந்த இளவரசி தன் ஆச்சியிடம் “ஆச்சி அவங்க உனக்கு தெரிஞ்சவங்களா?” என்று கேள்வியெழுப்ப,

 

“ஆமா அரசி, நான் கல்யாணம் கட்டிக்கிட்டு வந்த நாள்ல இருந்து நானும் கருப்பாயியும் ஒண்ணா தான் வேலைக்கு போவோம் வருவோம், உனக்கு ஞாபகம் இருக்காது” என்றார்.

 

பின் தங்கம்மாளும் இளவரசியும் தங்கள் உடை பெட்டிகளை கையில் எடுத்துக்கொண்டு ஊருக்குள் நடந்தனர்.   

-Kamali Maduraiveeran

Link👉வஞ்சித்தாய் வஞ்சிக்கொடியே

Link👉மகரந்தம் தாங்கும் மலரவள்(முழுநாவல்)

Link 👉நாணலே நங்கையானால்?(முழுநாவல்)

Link – முற்றும் முதல் நீ எனக்கு (முழுநாவல்)

Link 👉நிலவே நின்னை சரண் அடைந்தேன் (முழுநாவல்)

Link 👉கடைவிழியின் காதலில் (முழுநாவல்)

Link 👉Amazon Kindle

Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக,

https://www.youtube.com/channel/UCrluBa9P6MrjZOAjoVkoJhQ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!