Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கண்மணியே காதல் என்பது நீ தானே

KKEN 1

KKEN – 1

அழகான காலை பொழுது. புதியதாய் பூத்த  மலர் இதோ ராபிடோவில் ஆட்டோ புக் செய்து காத்திருக்கிறது. அவள் வேறு யாருமல்ல. நம் நாயகி வித்யாதான். பெயருக்கு ஏற்றபடி கை  வைக்கும் அனைத்து வித்தைகளிலும் வித்யா தான். இதோ எம் பி  ஏ  படித்துக் கொண்டிருக்கிறாள்.



Advertisement

  அவளை பற்றி பின்னர் பார்ப்போம்… இதோ ஆட்டோ வந்து விட்டது. நாமும் அவளுடன் ஏறி பிரயாணிப்போம்.  இது வரை ஆட்டோக்காரன் முகம் பார்க்கவில்லை. இறங்கும்போது QR  கோடில்  பணம் செலுத்தி விட்டாள் .

  இவளை இறக்கி விடுவதற்கு முன்பே அடுத்த புக்கிங் வந்திருந்தது. கஸ்டமரிடம் பேசிக் கொண்டே அடுத்த இடம் விரைந்தது ஆட்டோ.

 “ஹாய் டீ “

Advertisement

வழக்கம் போல அவளது தோழிகள் அவளை சூழ்ந்து கொண்டார்கள்.

Advertisement

“என்னடி ஆட்டோல வந்து இறங்கற? அப்பா எங்க?”

“அவரு பாரின் போய் இருக்காரு. இன்னும் பத்து  நாளைக்கு ஆட்டோதான். ஜாலி”

“அப்ப டெயிலி இதே ஆட்டோல வாடி. ஆட்டோ மேன் சூப்பரா இருக்கான்”

Advertisement

“அப்டியா  நான் பாக்கலியே “

“ஏய்! வெளில வந்தா கண்ணுக்கு குளிர்ச்சியா ஏதாவது இருக்கான்னு  ரோட்டை பாக்கணும். அப்பவும் உக்காந்து போனையே நோண்டிகிட்டு இருந்தா போரடிக்கும். பேசிக் கொண்டே வகுப்புக்குள் நுழைந்தார்கள். என்னதான் பேச்சு பேசினாலும் நால்வருமே நன்றாக படிப்பவர்கள் தான் . அதனால் எந்த கவலையும் இல்லை. பேச்சும் உண்டு. வம்பும் உண்டு.

அமைதியாக யாராவது அமர்ந்திருந்தால்,

“இதோ பாருடி தெரேசா அம்மா அவதாரம் எடுத்திருக்காங்க” என்பார்கள். அதுவே ஆண்களாக இருந்தால் “வந்துட்டாருடா வெள்ளை சட்டை  விவேகானந்தரு”  என்பார்கள்.

அதுவே இவர்களை யாராவது இவர்களிடம் வம்பு பண்ணினால் அழுவது போல நடித்தே ஏமாற்றிவிடுவார்கள்.

  “நீ ஆட்டோல வர்றதுக்கு உன்னோட அம்மா எப்படி டீ ஒத்துக்கிட்டாங்க?”

“மம்மியை ஏமாத்தறதெல்லாம் ஒரு  மேட்டரா?” அலட்சியமாக சொன்னாள் ஒருத்தி. அவர்கள் பேசுவதையே பார்த்துக் கொண்டு தோழியின் தக்காளி சாதத்தை இன்னொருத்தியின் உருளை வருவலோடு சேர்த்து ரசித்து ருசிக்க ஆரம்பித்திருந்தாள் வித்யா.

“இவ அன்னையே அன்னையேன்னு சொல்லி அம்மாவோட கண்ணையே பார்த்து மயக்கி இருப்பா. அவங்களும் பொண்ணோட அழகுல மயங்கி ஓகே சொல்லி இருப்பாங்க. இது தெரியாதா?”

 இப்படியே அரட்டை அடித்துக் கொண்டே மதிய உணவை காலி செய்திருந்தார்கள்.

 மீண்டும் அடுத்த நாள் அன்னையிடம் வந்து,

“அம்மா! ப்ளீஸ் மா! நான் யாரு மேலையும் இடிக்க மாட்டேன் ப்ளீஸ் ப்ளீஸ்…ஒரே ஒரு நாள் கார்ல போறேன் மா ” என்னதான் கண்ணை சுருக்கி உதடு குவித்து கெஞ்சினாலும் காயத்ரி  இன்று மசிய போவதில்லை.

“ஏதாவது பிரச்சனை ஆனா உங்க அப்பாகிட்ட என்னால பதில் சொல்ல முடியாது. சீரியஸ் இஸ்சுன்னா  என்னால தனியா ஹாண்டில் பண்ணவும் முடியாது. திருப்பி திருப்பி அதையே மகள் கேட்டுக் கொண்டிருக்க அன்னையும்தான் எத்தனை முறை தான் அதே பதிலையே சொல்லிக் கொண்டிருப்பாள்? அன்னைக்கு பொறுமை பறப்பதை கண்டு மகள் ரூட்டை மாற்றினாள். அப்ப டூ வீலர் ?

“அதற்கும் நோ தான். எத்தனைமுறை எப்படி விதவிதமாக கேட்டாலும் அதேதான். ஒன்னு பஸ்ல போ. இல்ல! ஆட்டோல போ” கண்டிப்புடன் முடித்துக் கொண்டாள்  அன்னை.

  மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு போகும் மகளை பார்த்து சிரிப்புதான் வந்தது. ஏதோ சில கிலோ மீட்டர் தூரம் என்றால் ஒன்றும் சொல்லி இருக்க மாட்டாள் தான். ஆனால்  இவள் படிக்கும் கல்லூரிக்கும் இவர்கள் வீட்டிற்கும் பன்னிரண்டு கிலோ மீட்டர். இருக்கும் ட்ராபிக்கை பார்த்தால் பயமாகத் தான் இருக்கிறது. இதற்கும் வித்யாவின் அன்னை காயத்ரி அப்படி எல்லாம் பட்டிக்காடு இல்லை. பெரிய பெரிய ஸ்போர்ட்ஸ் காரையும் அசால்டாக ஓட்டுபவர்தான். ஏனோ தனக்கு என்றால் இருக்கும் தைரியம் அத்தனையும் மகளின் விஷயத்தில் காணாமல் போய்  விடுகிறது. ஒரே மகள் என்பதால் கூட இருக்கலாம். காயத்ரியும் விஜயகுமாரும் ஒரே அலுவலகத்தில் பணி  புரிந்தவர்கள். எனக்கு அடுத்தவர் கீழ் கை கட்டி நின்று வேலை பார்க்கும் வேண்டாம். சுயதொழில் செய்யப்போகிறேன் என்று அவர் கூறியதும் விஜயன் வீட்டில் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிஸ்னஸ் கை  கூடினால் சரி. இல்லை என்றால்? வெளியில் வேலை பார்க்கும் வசதி வேறு எங்கும் கிடையாது. மாதம் 30ம் தேதியே சம்பளம் வந்து விடும். ஆயிரம் காரணங்கள் சொன்னார்கள். அவர்கள் சொல்லும் காரணங்கள் அனைத்துமே சரிதான். இருப்பினும் ஒரே ஒரு முயற்சி செய்தால் தான் என்ன?இளங்கன்று பயம் அறியவில்லை.

“ஏம்பா! வேலைய விடக் கூடாதுன்னு இத்தனை காரணம் சொல்லறீங்களே? ஒரே ஒரு வார்த்தை நீ முயற்சி பண்ணி பாருடா. நீ சாதிப்ப! கூட நாங்க நிக்கறோன்னு  ஒரு வார்த்தை சொன்னா என்னப்பா?” கண்ணை பார்த்து நியாயம் கேக்கும் மகனுக்கு பதில் சொல்ல முடியவில்லை. யோசித்தார். மீண்டும் மீண்டும் பல முறை யோசித்தார். நடுத்தர வர்கத்திற்கே இருக்கும் பயம் அவரை சரி சொல்ல விடவில்லை.

குடும்பத்தில் விஜயனின் அண்ணண்  உட்பட ஒருவருமே அவரை ஊக்க படுத்தவில்லை. நாட்கள் செல்ல செல்ல வீண் வாக்குவாதங்களும் , சண்டைகளுமே  அதிகரித்தன. அவர் மனம் தளர்ந்த நேரத்தில் உனக்காக நான் இருக்கிறேன் என்று வந்தவள் தான் காயத்ரி.

“வேற ஜாதி பயலா இருந்தாலும் பரவால்ல வேலை இல்லாம இருக்கற வெட்டி பயலுக்கு என் பொண்ண குடுக்க மாட்டேன்.இது காயத்ரியின் அப்பா.

ஏதோ ஒரு நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறத்தான்  வேண்டும் என்ற சூழலில் இருவரும் இணைந்தார்கள். லோன் போட்டு சிறியதாக ஒரு துணி கடையை ஆரம்பித்தார். மாதாந்திர செலவுக்கு  என்று பெரியதாக வருமானம் எதுவும் இல்லை. இருந்தாலும் காயத்ரியின் வருமானம் கை  கொடுத்தது. அதை தவிரவும் கணவனின் கடையில் துணி வாங்குபவர்களுக்கு இவளே ரவிக்கையும் சுடிதாரும் தைத்து கொடுக்க ஆரம்பித்தாள். பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைந்தார்கள். இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்தவர்களுக்கு இதோ அதோ என்று வருடங்கள் ஓடியது. இதோ திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் ஆகி ஐந்தாம் வருடம் துவக்க நாள். இப்போதும் இருவர் வீட்டிலும் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. காயத்ரியின் அன்னை மட்டும் இவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார்.

“என்  பொண்ண பாக்கறதுக்கு நான் யாரு கிட்டையும் பெர்மிஷன் வாங்க வேணாம்” சொல்லி விட்டு வந்து விடுவார். ஏனோ அந்த தைரியம் விஜயனின் அன்னைக்கு இல்லை.

“சீக்கிரமா புள்ளைய பெத்துக்கற வழிய பாருங்க. இன்னும் வாழ்க்கைல செட்டில் ஆகல செட்டில் ஆகல்லன்னு  எத்தனை  வருஷம் தள்ளி போடுவீங்க? ரோடு பெருக்கறவன் கூட நாலு புள்ள பெத்துக்கறான். அவங்கள்லாம்

புள்ளைய பெத்து சோறு போடலியா? மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான். நீ மட்டும் குழந்தையோட வந்து நில்லு. உங்கப்பாவை எப்படி நான் வழிக்கு கொண்டு வரேன் பாரு”

அன்னை சொல்வதும் சரியாகத் தான் இருந்தது. காயத்ரிக்கு ஏற்கனவே மனதில் குழந்தைக்கான ஆசை இருந்ததுதான். ஆனால்  அதுவே இப்போது ஏக்கமாக மாறிக் கொண்டிருக்கிறது.

கணவனின் தோள்  வளைவில் சாய்ந்து அவனின் நெஞ்சு முடிகளில் விளையாடிக்  கொண்டே அன்னை சொன்ன வார்த்தைகளை சொன்னாள் .

கணவனின் பதிலுக்காக ஆவலுடன் அவன் முகத்தை பார்த்தால்  அவன் இருந்த அசதியில் எப்போது தூங்கினானோ? அடுத்து வந்த நாட்களும் அப்படித்தான்.

கண்ணீர் முட்டியது. “இவருக்கு என்ன புடிக்கலியா? தவறான ஆளை  தேர்ந்தெடுத்து விட்டோமா?”

இரவெல்லாம் குளியறைக்குச்  சென்று அழும்  பழக்கம்  ஆரம்பித்தது. என்னதான் அருகில் இருப்பவர்கள் எல்லாம் தோழமையுடன் இருந்தாலும் இவள் மலடி என்று பேசிக் கொள்வதும் நல்ல விஷயங்களுக்கு இவளை அழைக்காமல் தவிர்ப்பதும் ஆண்களுக்கு எங்கே புரியும்?

எதற்கும் இருக்கட்டும் என்று மருத்துவரிடம் சென்றிருந்தாள் . உங்களுக்கு பி சி ஓ ஸ் இருக்கு. அதுவே இதுவே என்று லிஸ்ட் போட்டார்கள். ஏனோ யாருமே சரியான வழிமுறையை  சொல்லவில்லை. இவளுக்கு இன்னும் மன அழுத்தம் கூடியதே தவிர குறையவில்லை. இதில் அவர்கள் சொல்லும் நாளுக்கெல்லாம் கணவன் ஒத்துழைப்பானா? ஏதோ இருவரும் முகம் பார்த்து பேசிக் கொள்வார்கள். அதில் நிச்சயம் சிரிப்பு இருக்காது.எந்நேரமும் விஜயன் தொழிலை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தான். இவளும் வேலைக்கு செல்வாள். வீட்டு வேலைகள் செய்வாள். வரும் துணிகளை தைத்து கொடுப்பாள். இப்படித்தான் நாட்கள் சென்று கொண்டிருந்தது. இப்போதெல்லாம்  வாடி இருக்கும் மனைவியின் முகம் கூட முழுவதாக பார்ப்பதில்லை விஜயன். எந்திரமாக வாழும் காயத்ரி விடுமுறை எடுத்து கொண்டு அழும்  அளவுக்கு மன அழுத்தத்தில் இருந்தாள் .

காலை கணவன் கிளம்பும்போது எப்போதும் மகிழ்வுடன் வந்து கை காட்டி விட்டு தானும் கிளம்புவாள். ஏனோ இன்று அவள் முகம் சரி இல்லை. உடம்பு சரி இல்லையா?

மனம்  கேட்கவில்லை. ஏனோ  விஜயனுக்கு கவலையில் இருந்த மனைவியின் முகமே கண் முன் வந்து போனது. வேலையை கவனிக்க முடியவில்லை. உடம்பு சரியில்லையா? மாதாந்திர நாட்களாக இருக்குமா? யோசித்தவனுக்கு அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை. கடையில்  இருந்த பையனிடம் சொல்லி விட்டு வீட்டிற்கு வந்தான். வீட்டில் எந்த வேலையும் செய்யவில்லை. ஏதோ சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தாள் மனைவி. நாந்தான்  பெரிய தப்பு பண்ணிட்டேன். ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள்.

கணவன் வந்து என்ன எது என்று கேட்டான். எப்போதோ கேட்டிருக்க வேண்டியதை சில வருடங்கள் கழித்து வந்து கேட்டால்? இருவருக்கும் வாக்குவாதத்தில் ஆரம்பித்து பெரிய சண்டையாகி போனது.

“உங்களுக்கு  என்ன வேணும்? பிசினஸ் பண்ணனும். ஆரம்பிச்சாச்சு. பணம் பண்ணனும். நல்லாதான் தான் போகுது. முதல்ல கஷ்டப்பட்டீங்க. இனிமே என்ன? கடைய பெரிசாக்கணும். அடுத்த பிரான்ச் திறக்கணும். அப்புறம்? அடுத்து, அடுத்து…இதுல நான் எங்க இருக்கேன்? இல்ல நம்ம குழந்தைங்க? சொத்து சேர்த்து சேர்த்து யாருக்கு கொட்ட போறீங்க? பாருங்க என்னோட மூஞ்சிய பாருங்க. இதுவா என் மூஞ்சி? கல்யாணத்தின் போது இப்படியா இருந்தேன்? காலரை உலுக்கி அழுதாள். என்னிக்காவது உனக்கு என்ன வேணுன்னு கேட்டுருக்கீங்களா? ஒரே ஒரு முழம் பூ?

“முடியல . என்னால முடியல. காலைல  எழுந்து வீட்டு வேலை செஞ்சி, வேலைக்கு போய் , மறுபடியும் வீட்டு வேலை செஞ்சு, துணிய தைச்சு . இப்டியே இருந்தா எனக்கு நிச்சயம் பைத்தியம் புடிச்சிடும்.

நான் எங்கையாவது போய்க்கறேன்”

“எங்கடி போவ?” பரிதாபமாக கேட்டான். அவனுக்கு கடை, தொழில், மனைவி தவிர ஒன்றும் தெரியாது.

“எங்கையோ போறேன். அப்பா வீட்டுக்கு போறேன்.  எங்கையாவது ஹாஸ்டலுக்கு போறேன். இல்ல செத்து  போறேன்”

கடைசி வார்த்தை அவனை நொறுக்கி விட்டது.

மனைவியை இழுத்து அணைத்தான். எத்தனை  ஆசையாய்  தன்னை  திருமணம் செய்தாள்?இந்த ஒற்றை அணைப்புக்காகத்தான் இருவருமே ஏங்கி இருந்தார்களோ? அவளின் கழுத்து வளைவில் அவன் தன்னை மூடிக் கொண்டான். அவன் தோளில்  சாய்ந்து முதுகில் கையை படர விட்டாள் அவள். அவர்களுக்குள் இருந்த ஊடல், அழகான கூடலில்  முடிந்தது.  இத்தனை நாள் வேலை வேலை என்று டென்ஷனில் சுற்றிக் கொண்டிருந்தவன் இப்போது தான் வாழ்க்கையை ஆரம்பித்தான். மருத்துவர்கள் சொன்னது போன்ற வழி முறைகள் இல்லை. அவர்கள் குறித்து கொடுத்த நாட்கள் இல்லை. தாம்பத்யம். அழகான உறவு . ஆனந்தமான கூடல். இன்பமான வாழ்க்கை. அப்போது மட்டும் இல்லை, அடுத்து வந்த நாட்களிலும் தான். அதில் உதித்தவள் தான் வித்யா. வெளியில் வந்ததும் குவா.. என்ற சத்தம் காதை பிளந்தது. காயத்ரியின் மலடி என்ற பெயர் அம்மாவாக மாறியது. ஒரே ஒரு குவா சத்தம்தான். அடுத்து மொத்த  கையையும் சேர்த்து வாய்க்குள் புதைத்திருந்தாள் வித்யா. மருத்துவரும் நர்ஸுகளும் அவளை பார்த்து சிரிக்க அரை மயக்கத்தில் இருந்த காயத்ரி சிரித்துக் கொண்டே முழு மயக்கத்திற்கு சென்றிருந்தாள் .

“வானத்து மலரே வையத்து நிலவே வாழ்க்கையின் பொருளே வா !மலடியின் மகளே மகள் என்னும் கனவே நீ வா!” என்றுதான் காயத்ரி வித்யாவை வளர்த்தார். பிள்ளை வந்த பிறகு யார் கணவனை தேடப் போகிறார்கள்? இத்தகைய அதீத பாசம் நல்லதா கெட்டதா? விதி தீர்மானிக்கட்டும் …… காலம் முடிவெடுக்கட்டும் ………

தொடரும்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!