வண்ணம் 18
கமலநாதன் கேசில் புதிய திருப்பம் என்று வக்கீலிடமிருந்து அம்பிகாவுக்கு அழைப்பு வந்தது. கமலநாதன் உபயோகித்த இரண்டாவது செல்போன் விபத்தில் காணாமல் போயிருந்தது, அது கிடைத்திருக்கிறது.
அம்பிகாவின் தேடலுக்கு பதில் கிடைக்க வேண்டும் என மிகவும் ஆராய்ந்து அலசி பல போலீசார்களின் தேடுதல் வேட்டைக்கு பின் கிடைத்திருக்கிறது.
இயற்கையாகவே கிடைக்கும் வைரம் உலகம் முழுவதும் கிடைப்பது சவுத் ஆப்பிரிக்காவிலிருந்துதான். இயற்கையாக நிலத்தடியில் பல ஆயிரம் கிலோ மீட்டர் ஆழம் தோண்டி சுரங்கம் அமைத்து எடுக்கிறார்கள். அந்த வைரத்தை செயற்கையாகவும் தயாரிக்கலாம், அப்படி செயற்கை முறையில் தயாரிப்பதற்கு தனிப்பட்ட விதமாக லைசென்ஸ் எல்லாம் பெற்றுதான் அதை செய்ய முடியும். இதில் சவுத் ஆப்பிரிக்காவில் இருந்து கிடைத்த இயற்கையான வைரம் என்று சொல்லி ‘ஆராய்ச்சிகூடத்தில்’ தயாரித்த வைரங்களை விற்று வந்திருக்கிறது ஒரு கும்பல். அப்படி விற்பதற்கு ஒரு மாபெரும் நெட்வொர்க்கை அமைத்து செயல்பட்டிருக்கிறார்கள். இந்த நெட்வொர்க்குக்கு பல இடங்களில் இருந்து வரும் பணத்தை கமலநாதன் தான் கண்காணித்து வந்திருக்கிறார். முதலில் வைர கடத்தல் தொழிலில் ஆரம்பித்து அது போதைப்பொருள் கடத்தல் மற்றும் துறைமுகத்தில் வந்து இறங்கும் வெளிநாட்டு சரக்குகளை திருடுதல் என்று பலவகையாக சென்றிருக்கிறது. இது போன்றவற்றை செய்யும் கும்பலுக்கு பணத்தை கணக்கு வைத்துக்கொள்ளவும், கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றவும் கமலநாதன் நிறைய உதவி செய்து லாபம் ஈட்டிருக்கிறார்.
கடைசியாக கமலநாதன் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கடத்தல் தொழில் செய்யும் ஆளிடம் மொத்த பணத்தையும் அவனையே எடுத்துக்கொள்ள சொல்லி மெயில் செய்திருக்கிறார். அதன்பின் என்ன நடந்தது தெரியவில்லை. விபத்துக்குள்ளாகி இறந்து போனார். விபத்தும் திட்டமிட்ட கொலை என்று தெரிந்தாலும் கடத்தல்கார கும்பலின் தலைவனை கண்டுபிடிக்க முடியவில்லை. கூடவே இந்த கேசை கைவிடச்சொல்லி பல பேரிடமிருந்து கமிஷனருக்கு பிரஷர் வந்து கொண்டே இருக்கிறது.
Advertisement
அம்பிகாவுக்கு இது இப்படியே சென்று கொண்டிருந்தால் அம்பிகாவோ பூமிகாவோ நிம்மதியாக வாழ முடியாது. அந்த கண்ணுக்குத் தெரியாத எதிரி யார் என்று தெரிந்து கொண்டால் அவனுடன் இனி இந்த தொழிலில் எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று முடித்துக்கொண்டு வந்து விடலாம்.
கமலநாதன் ஏமாற்றி சம்பாதித்த காசையெல்லாம் உரியவரிடம் திருப்பி கொடுப்பதும், நன்கொடையாக கொடுப்பதும் என்று முடிந்த அளவு அந்த காசை சொந்த பயன்பாடுகளுக்கு உபயோகபடுத்தாமல் இருக்க யோசித்தார் அம்பிகா. கமலநாதன் சென்ற பின் அவர் சம்பாத்தியம் எதையும் தொடாமல் தந்தை வாங்கி வைத்திருந்த வீட்டை விற்று அதில் வந்த காசில்தான் வீட்டு செலவு, ஆபிஸ் நடத்த செலவு மற்றும் பூமிகாவின் படிப்பு செலவு எல்லாம் செய்தார். கர்மா, பாவம், புண்ணியம் போன்றவற்றில் நம்பிக்கை இருக்கும் அம்பிகாவுக்கு கமலநாதன் பாவம் அவரோடு செல்லட்டும் என்பதே எண்ணம். பூமி போலவே தமயந்தியும் ஓர் மகளென கருதியவருக்கு நிஜமாகவே அந்த மாதம் ஐம்பதாயிரம் கையில் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக தந்தை வாங்கிக்கொடுத்த சொத்துக்கள், நகைகளை விற்றுத்தான் ஆபிஸ்ஸை ஒழுங்கு செய்து, புது ஆட்களை பணியில் அமர்த்தி ஆபிஸ்ஸை நேர்செய்தார். பணியில் அமர்த்தியிருக்கும் ஆட்களுக்கு சம்பளம் போக வீட்டை சமாளிக்கவே கையில் காசு இருப்பதில்லை. அதிலும் பூமிகாவின் தேவைகளை எந்த குறைகளும் தெரியாமல் பார்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துவதில் அழுத்தத்தில் இருப்பவருக்கு மகள் ‘சுயநலவாதி’ என்று சொல்லியது வருத்தம். வருத்தத்தை சொல்லி அழ நேரம் இருக்கிறதா என்ன?
பூமிகா அவளை பாட அழைக்கும் கல்யாணத்தில் பாட உற்சாகமான பாடல்களை தீவிரமாக பழக தொடங்கினாள்.அவள் சின்னபெண் என கருதி அம்மா அவர் கஷ்டங்களை மறைத்து வாழ்வது பிடிக்கவில்லை, கண்ணாடி குவளை போல தமயந்தி அவளை எங்கே உடைந்து விடுவாளோ என்பது போல நடத்துவது பிடிக்கவில்லை, போகும் இடமெல்லாம் வந்து தொந்திரவு செய்பவன் தொந்திரவு செய்யாமலும் இருந்தாலும் பிடிக்கவில்லை.
Advertisement
அருண் ப்ரொடக்ஷனில் உருவான படம் ரிலீஸ் ஆகி லாபமும் ஈட்டி கொடுத்தது.அருந்ததீ மகனென அடையாளப்படுத்தபட்டாலும் ப்ரொட்யூசர் எனவும் ஓர் அடையாளம் உருவானது. ஆனால் நண்பர்களிடமிருந்தும் தமயந்தியையும் விட்டு வெகு தூரம் சென்றுவிட்டான். அருண் என்று ஒருவன் இருக்கிறான் ஆனால் கூட இருக்கமாட்டான் என்ற நிலை உருவானது. தேர்வு சமயங்களில் தேர்வை இரண்டு மணிநேரத்தில் எழுதி முடித்துவிட்டு அவன் மற்ற வேலைகளை பார்க்க சென்றான். தமயந்தியை கண்ணோடு கண் பார்ப்பதையே தவிர்த்தான்.
Advertisement
தமயந்திக்கு அருண் அவளை ஒதுக்குவது வலியாக இருந்தாலும் இப்போதெல்லாம் இவர்கள் யாருக்கும் ஏற்ற ‘பிரெண்ட்’ நாம் இல்லை என்ற எண்ணம் அதிகம் வரத்தொடங்கியது. ஊரில் அம்மாவுடன் இருக்கும் தங்கை இந்த வருடம் எம்.டி சீட் வாங்கிவிடுவேன் என்று உறுதியாக சொல்லிக்கொண்டிருக்கிறாள், தந்தை ‘அம்மா கிட்ட சொல்லும்மா நாமெல்லாம் அங்க சிட்டி வந்து சேர்ந்து வாழலாம் என்று சொல்லும்மா’ என்று அவளிடம் நச்சரிக்க தொடங்கினார். வீட்டிலும் ஆறுதல் தேட முடியாமல் போனது.
இந்நிலையில் கல்லூரியில் ஆளுமை வளர்ச்சிக்காக நடந்த ‘பெர்சனாலிட்டி டெவெலப்மெண்ட் ஒர்க்ஷாப்’ ஒன்றில் அதை நடத்தியவர் தமயந்தியிடம் ஆளுமை திறன் குறைவாக இருகிறது என்று சொல்லிவிட்டார்.
“நீங்க இங்கிருந்து வெளிய டிகிரியோட போனா நல்ல ஒரு எக்சிக்யூட்டிவ் வேலையில உட்காருவீங்க இல்ல சொந்த பிஸ்னஸ் செய்ய போவீங்க.இதுக்கு எல்லாத்துக்கும் உங்க கிட்ட தன்னம்பிக்கையான ஆட்டிட்யூட் இருக்கணும். தமயந்தி உங்ககிட்ட எல்லாமே இருந்தும் புது ஆள் கிட்ட பேச தயக்கம் இருக்கு தன்னம்பிக்கை குறைவா இருக்கு அதுல கொஞ்சம் நீங்க உங்களை மாத்திக்கணும்” என்று சொல்லிவிட்டார். அதிலும் அவளுக்கு நல்ல வேலை வேண்டுமென்றால் அவளுடைய பேச்சு திறமையையும் எதையும் கையாளும் திறமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். தமயந்தியின் தலைவலி பட்டியலில் இப்போது பெர்சனாலிட்டி டெவலப்மென்ட்டும் சேர்ந்துகொண்டது.
Advertisement
சிரஞ்சீவி, அருண் எதோ பார்ட்டி சென்று வீட்டிற்கு வந்தவன் சோர்வாக இருப்பதை கண்டான் “என்ன மச்சி ஆபிஸ் தலை தின்னுது போல”
அருண் “ம்ம் ஆமா முடியல. ஒரு வெப் சீரியஸுக்கு ஹீரோயின் ஃபிக்ஸ் பண்ணாங்க அந்த பொண்ணுக்கு காமெரா முன்னாடி நடிக்க தைரியமே வரல. டைம் தான் வேஸ்ட் ஆச்சு”
சிரஞ்சீவி “அப்படியா நம்ம தம்ஸ் இருக்குல்ல அதுக்கு கூட கான்ஃபிடன்ஸ் ரொம்ப கம்மியா இருக்குன்னு வந்த ட்ரைனர் ஒருத்தர் சொல்லிட்டார்.அதுக்கு கண்ணு எல்லாம் கலங்கிடுச்சு”
அருண் விஷயத்தை கேள்விப்பட்டதும் சட்டென நக்கலாக சிரித்தவன் “ஹ்ஹ தமயந்திக்கு கான்ஃபிடன்ஸ் இல்லன்ன நம்ம யாருக்குமே இல்லன்னுதான் அர்த்தம்” என்றான்.
புவனும் வெளிநாட்டில் இருக்க சிரஞ்சீவிக்கு சலிப்பாக இருந்தது. பூர்ணிமா தினமும் கல்லூரி போவதால் தான் அவனும் செல்கிறான். இல்லையென்றால் புவன் கொடுத்த வேலையை பார்க்க ஊர் முழுக்க சுற்றி திரிந்திருப்பான்.
அருணும் புவனுக்கு உதவி செய்யவே யார் பார்ட்டிக்கு அழைத்தாலும் சென்று பேச்சு கொடுக்கும் பெரிய பெரிய ஆட்களிடம் எல்லாம் அவர்கள் அறுவையை, தற்பெருமையை எல்லாம் பொறுத்துக்கொண்டு பேச்சை வளர்கிறான்.
சிரஞ்சீவி “ஏதாச்சும் தகவல் தேறிச்சாடா ஏழு கடல் ஏழு மலை தாண்டி போயும் என் உசுர வாங்குறான் இவன்”
அருண் “இல்ல கெடைக்கல. ஒன்னு மட்டும் உறுதி அம்பிகா ஆன்ட்டி கைல சுத்தமா காசு இல்ல.”
சிரஞ்சீவி “அப்பறம் கச்சேரி, ஜீப் எல்லாம்…”
அருண் “அவங்க மெதுமெதுவா அவங்க அப்பா சொத்தெல்லாம் வித்திருக்காங்க”
சிரஞ்சீவி “இது வேறயா…..”
அருண் “புவன் மேல எந்த தப்பும் இல்லன்னு பூமிகா நம்பனும்ன்னா அவங்க அப்பா ஆக்சிடென்ட் பத்தி சொல்லணும். சோ அதை மொத விசாரி நீ . மத்த கேஸ் நான் பாக்குறேன்”
சிரஞ்சீவி “எங்கடா விசாரிக்க சொல்ற.எவனும் வாய தொறந்து அத பத்தி பேசவே மாட்டேங்குறாங்க. ஆக்சிடென்ட் நடந்த இடத்துக்கும் அத சுத்தி இருக்கிற ஏரியா பசங்க கிட்டயும் பேசிட்டேன். ப்ரயோஜனமா ஒன்னும் கிடைக்கல”
யோசித்தான் அருண் “நாம சேர்ந்து போய் விசாரிப்போம்” என்றவன் அடுத்த நாள் அவனும் கல்லூரி வருவதாக சொன்னான்.
கல்லூரி வந்தவனுக்கு தமயந்தி முகத்தை பார்த்து ஆச்சரியம். கொஞ்சமும் உற்சாகம் இல்லாமல் இருந்தாள். அன்றைக்கு மதியம் உணவு மேஜையில் ‘ஒரு பாஸ்கெட் பால் மேட்ச் பெட் கட்டினோம் தானே விளையாடலாமா’ கேட்டான். தமயந்தி எதற்கும் பதில் சொல்லாமல் அவள் எண்ண போக்கில் அவள் இருந்தாள். பூர்ணிமா திரும்ப அழுத்தி கேட்க தமயந்தி வேலை இருக்கிறது என்று முடித்துக்கொண்டாள்.அருணுக்குள் முள் தைத்த வலி.
தமயந்திக்கு அருண் மீது எரிச்சலாக இருந்தது. யாருக்குமே காட்டாத அவளுக்கே அவளுக்குள் இருக்கா என்று தெரியாத முகத்தை அவனுக்கு காட்டி இருக்கிறாள்.யாருமே கொடுக்காத உணர்வை அவன் கொடுத்திருக்கிறான். தமயந்திக்கு அருண் முன் அவள் வெட்கத்தை காட்டுவதில் தயக்கம் இருந்ததில்லை. அவள் இயலாமைகளை மறைத்ததே இல்லை. முதன்முதலில் காமெரா முன் அவன் முகத்தை பார்த்து நிற்க சொன்னபோது நின்றவள் ‘எனக்கு பயமா இருக்கு’ என்றாள். “உனக்கு பிடிக்கலைன்னா போஸ் மாத்த சொல்லலாம். ஆனா உனக்கு கஷ்டமா இருக்குற மாதிரி எதுவும் நான் செய்யமாட்டேன்’ என்றான். நம்பிக்கை பிறந்தது. அவன்மீது கண்மூடித்தனமாக எப்போது வளர்ந்ததோ அது! ஆனால் அருண் அவன் காட்ட வேண்டும் என்று நினைக்கும் முகத்தை தான் காட்டுகிறான் மற்றது அவனுக்குள்ளே மறைத்து வைத்துக்கொள்கிறான். அவனோ அவன் நண்பர்களோ அப்படித்தான் என்ற புரிதல் இருந்தாலும் அருணிடம் அவள் எதிர்பார்ப்பு நட்புக்கும் ஒரு படி மேலே சென்றிருந்தது.
தமயந்திக்கு ஆச்சரியமே அருணிடம் அவளுக்கு எப்படி இப்படியான ஒரு எதிர்பார்ப்பிற்கு தோதான நிலை வந்தது என்பதுதான். அவள் அவளாக இருக்க ஏதுவான ஒரு சூழலை உருவாக்கிக் கொடுப்பவன் அவனாக உண்மையாக அவளிடம் இருப்பதில்லை. அது ஏன் என்ற கேள்வியே சில நேரம் அவளுக்கு அவளையே சந்தேகப்பட வைக்கிறது. அதிலும் அவள் நேரம்! பார்ப்பவர் எல்லாம் உனக்கு மெச்சூரிட்டி இல்லை உனக்கு தன்னம்பிக்கை இல்லை என்றெல்லாம் முகத்துக்கு நேராக சொல்லும் போது இன்னமும் குலைந்து போகிறாள். இதனால்தான் தன்னை அருணுக்கு பிடிக்கவில்லையோ என்ற சந்தேகம் வதைக்கிறது.
அருண் அதற்குப் பின்பு கல்லூரிக்கு செல்லவே இல்லை. அவன் ஆபிஸ் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவதும் ஹிட் ஆகுமென தெரிந்த படத்தை விநியோகம் செய்ய வாங்குவதற்கு ஏற்பாடு செய்யவுமே காலம் கழிந்தது.
தமயந்தி அவளுக்குள் இருக்கும் குழப்பத்திற்கு பூமிகாவிடம் புலம்பினாள்.
தனக்குள் இருக்கும் மனசங்கடத்தை எல்லாம் ஷாப்பிங் செய்வதிலும் விதவிதமாக சாப்பிடுவதிலும் செலவழிக்கும் பூமிகா “தம்மு பேபி உனக்குள்ள இருக்கிற குழப்பத்தை தூக்கிப்போடு. உனக்கு நல்லா வர விஷயத்துல உனக்கு எக்கச்சக்கமா கான்ஃபிடன்ஸ் இருக்கும். கூடவே புது ஆளுகூட பேச தயங்குற குணம் இருக்கிறதுல தான் பிரச்சனை.அத இனி பேசி பேசி சரி பண்ணிக்கலாம். பயப்படாதடீ”
தமயந்தி “இப்பல்லாம் எனக்கு நான் உங்களுக்கு எல்லாம் செட் ஆகமாட்டேன் தோணுது”
அதிர்ந்தாள் பூமிகா “என்ன பேசுற தம்மு. யார் கூட என்ன சேர்த்து பேசுற”
தமயந்தி “நீ, அருண், சிரஞ்சீவி, புவன் எல்லாரும் பெரிய இடத்துல நிற்கிற மாதிரியும் நான் கீழ நிற்கிற மாதிரியும் இருக்கு. நமக்குள்ள செட் ஆகாது தோணுது”
பூமிகா “சொன்னேனே கேட்டியா அவனுங்களோட சேராத சேராதான்னு சொன்னேந்தானே. எங்க கொண்டுவந்து நிறுத்திருக்காங்க பாரு”
தமயந்தி “எனக்கு புவன் சிரஞ்சீவி கூட பிரச்சனை இல்ல அருண் தான் பிரச்சனையா தெரியுறான்”
பூமிகா “ஏய்.. அவனுங்க மூணு பேருமே பிரச்சனைதான்”
பூமிகா அவள் கோபத்தில் இடம் பொருள் தெரியாமல் சீறிக்கொண்டிருக்க
புவன் அவளுக்கு பின்னாலிருந்து வந்தவன் “யார் மூணு பேர் பிரச்சனை பூமி” கேட்டுக்கொண்டே அவர்களை நெருங்கினான்
தமயந்தி படபடப்பாக முழிக்க, பூமிகா “வேற யாரை சொல்லுவேன் உங்களைதான் சொன்னேன்”
சிரஞ்சீவி “ஹ்ஹ நாங்க பிரச்சனையை தீர்க்குறவங்கமா…” என்றான் ஸ்டைலாக
பூமிகா கண்டுகொள்ளாமல் நடக்க புவன் “என்ன தம்ஸ் என்ன மிஸ் பண்ணியா”
சிரஞ்சீவி “ஓஓ அதுதான் நாலுநாளா முகத்துல ஒளியே தெரியலையா” சிரஞ்சீவி அப்படி சொல்லி முடிக்கும் முன் பூமிகா அவனை திரும்பி பார்த்து முறைத்தாள்.
தமயந்தி “எனக்கு பெர்சனாலிட்டி இல்ல சொல்லிட்டாங்க அதுக்குதான் டல்லா இருந்தேன்”
புவன் “அவ்வளவு தானே! பிஸ்னஸ் உலகத்துல ஏமாத்துறதும், நம்ம இஷ்டத்துக்கு பிஸ்னஸ் கொண்டுபோக தான கத்துக்கணும். நான் சொல்லித்தரேன்”
பூமிகா “ஆமா இவங்ககிட்ட கத்துக்கோ ஏமாத்துறது எல்லாம் கைவந்த கலை இவங்களுக்கு”
சட்டென புவன் பூமிகா முன் நின்றவன் “உன்ன நான் என்னிக்கும் ஏமாத்த நினைச்சது இல்ல பூமி” என்றான்
சிரஞ்சீவி அவனை கைபிடித்து இழுத்து “பாவம் டா பயந்துற போறாங்க”
பூமிகா அவனை கண்கள் சிவக்க பார்த்தவள் “உங்களுக்கு எல்லாம் பயப்படுற அளவுக்கு நான் இல்ல”
புவன் “நாளைக்கு காலேஜ்ல மீட் பண்ணுவோம் தமயந்தி வரேன்”
என்று கோபமாக திரும்பிச்செல்ல பூமிகா “நீ வா நாம ஐஸ் க்ரீம் சாப்பிட்டுட்டு போவோம்”
தமயந்தி “புவன் நல்ல டைப் தெரியுமா”
பூமி “தெரியுது இனி உன்கிட்ட பேசி பிரயோஜனம் இல்ல”
பூமி எண்ணியது போலவே தமயந்தியுடன் பெஸ்ட் பிரெண்ட் ஆனான் புவன்.
