Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அலைபாயுதே

அலை – 1.1

🎵🎶

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே…
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே…
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்…
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்…

இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்…
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்…
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்…
செந்தாமரை செந்தேன் மழை…
என் ஆவி நீயே தேவி…



Advertisement

ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
பூவே காதல் தீவே…

🎵🎶

Advertisement

வானத்து இருளானது அன்று அதிகமாய் கருமை பூசி நின்றது. நட்சத்திரங்கள் அங்கும் இங்கும் போட்டி போட்டு கூச்சலிட்டுக் கொண்டிருக்க, வான் அவன் அதனை தனக்கு சாதகமாக்கி தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டான்.

Advertisement

பாடல்கள் ஒரு பக்கம் மனதை வருடினாலும், அவள் சிந்தனை அந்த நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட பெருகி நின்றது. நாள் முழுவதும் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் அந்த சிரிப்பு, அவள் அழகிற்கு அழகு சேர்த்தது.

அவ்விருட்டிய இடத்தினில் எங்கிருந்து தான் வந்தனவோ, அந்த விட்டில் பூச்சிகள். பறந்து அவளிடம் வந்து அடைக்கலமாக, வைர வளையல்களாக மின்னின அவளது அழகிய கைகள்.

அழகிய அந்த பெரிய கண்களை, இயற்கையே கண் வைத்திடுமோ என்ற அச்சத்தில், காலையில் அவள் தீற்றிருந்த மை கலைந்து திருஷ்டி பொட்டானது.

Advertisement

நீண்ட நெடிய பின்னப் பட்டிருந்த அவளது ஆசை கூந்தல், காற்றின் திசைக்கெல்லாம் இங்கும் அங்கும் ஆடிக்கொண்டே இருக்க, பெண்ணின் வெண்டை விரல்கள் அதனை சுகமாக ஒதுக்கி விட்டுக் கொண்டிருந்தது.

வான் சுற்றும் திங்கள் இன்றும் அவளை பிரிய மனமே இல்லாமல், இயற்கை அன்னைக்கு அவளது முகத்தை தன்னுடைய கதிர்கள் மூலம் மிளிரச் செய்ய,

என்ன திங்கள்… அவள் அழகு அந்த திங்களையே விழுங்கிவிட்டது. வெண்ணிறமாய் மிளிரிய கன்னங்கள், உதட்டு சாயம் பூசாத அவளது செவ்விதழ்களை எடுப்பாய் காட்ட, பூங்காற்று அவள் தேகத்தையும் இதழ்களையும் வருடிச் செல்ல, சிலிர்த்து அடங்கியது அவள் மேனி.

மங்கையவளின் மேனியை கடந்து சென்ற தென்றலுக்கோ அத்தனை கர்வம். அவளை உரசி சென்றதோடு இல்லாமல், தன்னுடைய தொடுகைக்கு சிலிர்க்கவும் செய்த குதூகலத்தோடு துள்ளி ஓடியது. எழிலாய் உலகம் மறந்து அமர்ந்திருந்தவள் கால்கள் மரத்துப் போயிருக்க, அருகே இருந்த மரத்தினை பிடித்து இரண்டு அடி நொண்டியபடியே நடந்து ரத்த ஓட்டத்தினை சீராக்க முயன்றாள்.

ஓரளவிற்கு ரத்தம் கால்களில் பாய்ந்திருந்தாலும், இன்னமும் கால்கள் இருப்பதன் அடையாளமே இல்லை. கால்களை முன்னும் பின்னும் ஆட்டி ஆட்டி பார்க்க, ஒன்றுமே தெரியவில்லை. ஆனால் அதையும் ரசித்தவள், மீண்டும் அப்படியே அமர்ந்து கால் சட்டையை தூக்கி, கால்களைப் பார்த்தவள் இதழ்களில் சிரிப்பு வர, ஒற்றை விரலை வைத்து அழுத்த, ஏதோ உயிரற்ற பொருளை தொடுவது போல் உணர்ச்சியே இல்லை.

மீண்டும் அழுத்தி பார்க்க, கால்களின் உள்ளே ஏதோ மீன் ஊறுவது போல், மெல்ல உணர்வு பெற்று கூச்சம் உண்டானது. வாயினை திறந்து சத்தமில்லாமல் சிரிக்க, மீண்டும் அதையே செய்து மறுபடியும் சிரிப்பு வர, அந்த உணர்வை பகிர தன்னிச்சையாக பக்கம் திரும்பி பார்த்தாள்.

ஊத காற்றும் காய்ந்த இலைகளும் மட்டுமே சுழன்று கொண்டு தன்னுடைய இருப்பைக் காட்ட, கண்களில் மின்னி மறைந்த அந்த வெறுமை, இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது ஒரே நொடியில்.

நேர அலைப்புறுதலுக்கு பிறகு மெதுவாக வெளியே வந்தவள், அங்கு நின்ற தன்னுடைய வாகனத்தை எடுத்து மீண்டும் சென்னை மாநகரை நோக்கி பயணப்பட்டாள். குறைந்தது அரை மணி நேரமாவது பயணிக்க வேண்டும், சென்னை மாநகரை அடைவதற்கே. அத்தனை தொலைவில் இருக்கும், அவள் இருந்த அவ்விடம்.

வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் அவளால் அவ்விடத்திற்கு வராமல் இருக்க முடியாது. எந்நேரமானாலும், என்ன கடின வேலைகளில் இருந்தாலும், அவ்விடத்திற்கு வராமல் அவளது அந்த வாரமே ஓடாது.

மொத்தமாய் தன்னை சுற்றி நூறு பேர் வந்து அமர்ந்திடும் உணர்வு அவளுக்கு, அதற்காகவே ஓடிவிடுவாள். இதோ இன்றும் இரவு ஏழைத் தாண்டிய பிறகு தான் வந்தது, இப்பொழுது கிளம்பும் பொழுது ஒன்பதை நெருங்கியும் விட்டது.

சென்னை மாநகரின் உச்சகட்ட சாலை நெரிசலிலிருந்து தப்பித்து, விடுதி வந்து சேரவே பத்து மணிக்கு மேல் ஆகியிருக்க, வரும் பொழுது ஒரு மெடிகலில் பான்டேஜ் டேப்பை வாங்கி முழங்கையில் ஒட்டி, மீண்டும் விடுதிக்கு வாகனத்தை செலுத்தினாள்.

பரபரப்பாக விடுதியை அடைந்தவள் கதவினைத் திறந்து வாகனத்தை உள்ளே நிறுத்த, தனக்கு பக்கவாட்டில் தன்னை துளைக்கும் பார்வையை உணர்ந்து, தலையை சிறிதும் தூக்கவில்லை அவள்.

“கேடி, என்கிட்டயே உன் வேலைய காட்டுறியா நீ?” மூக்குக் கண்ணாடியை மூக்கிலிருந்து நுனி மூக்கிற்கு இறக்கி, விடுதியின் நுழைவாயிலில் ஜம்பமாக சேர் போட்டு அமர்ந்தவர் தூக்கமெல்லாம், இருந்த தடயம் தெரியாமல் மறைந்தது.

“நம்பாத பரமு, நம்பவே நம்பாத. முக்கியமா அவளோட அப்பாவியான முகத்தைப் பாத்து ஏமாந்துடாத…” நூறு அறிவுரைகள் தனக்குத் தானே கூறி, முகத்தில் மறக்காமல் கடுமையை இறுக்கமாக பற்றிக்கொண்டார்.

“மிஸ் பரமு…” குழந்தையின் மென்மையின் குரலில் வந்தவள் முகத்தை, அதீத கோவத்தோடு தலை தூக்கி பார்த்தார் அந்த பரமு, விடுதியின் வார்டன்.

‘செத்தேன்டா சிவனாண்டி!’ மனதினுள் புலம்பியவள் முகம் அதிகமாக சோர்ந்திருந்தது.

பார்த்தவருக்கோ அது உண்மையாகி போக, நடித்தவளுக்கு நிம்மதி. அவரும் சுதாரித்துக்கொண்டார், “என்ன, இன்னைக்கு என்ன ட்ராமா பண்ண பிளான்? நான் அசர மாட்டேன். நீ என்ன சொன்னாலும் சரி, இன்னைக்கு உனக்கு சாப்பாடும் இல்ல, ரூமுக்கும் போக பெர்மிஷனும் இல்ல. பாய் தர்றேன், இங்கையே படுத்து வாட்ச்மேன் வேலை பார்.”

அதற்கு மேல் பேச்சில்லை என எழுந்து சென்றவர், கூறியது போலவே கையில் ஒரு பாயோடு வந்தார்.

‘ஆத்தி! இது சொன்னதை செஞ்சிடுச்சே…’ நொந்துதான் போனாள் பெண்.

“வார்டன் மனசை மாத்திக்க முடியாதா?”

“முடியாது, அமைதியா படுடி. நான் சொன்னது சொன்னது தான்!” அதட்டியவர், அந்த மேஜையில் அமர்ந்து மீண்டும் வேலையைத் துவங்கினார்.

“ஆமா, அப்டியே அரிச்சந்திர பரம்பரை, சொன்ன வாக்கை மீற மாட்டாங்க…” புலம்பிக் கொண்டே தோளில் தொங்கிய பையை அதே மேஜையில் வைக்க, “என்ன புலம்பல்?” அதட்டினார் இவள் திட்டை கேட்காமல்.

“இங்க படுக்கவா இல்ல, ரோட்டுல படுக்கவானு கேட்டேன், மொத்த தெருவுக்கும் பாதுகாப்பா இருக்கும்ல…”

நக்கல் பேசியவள் மேல் பேனாவை எறிந்து, “வர வர உனக்கு வாய் கூடிப்போச்சு, அமைதியா படு.” என்றார்.

“டிரஸ் மாத்திட்டு வரவா? இன்னைக்கு வேலை ரொம்பவே அதிகம்.” அப்பாவியாக கேட்டாள்.

“வேணாம், ஆஃபீஸ் முடிஞ்சதும் நேரா ஹாஸ்டல் வானு எத்தனை நாள் சொல்றது? ஒரு நாளும் பேச்சை கேக்குறது இல்ல. அதுவும் இன்னைக்கு ரொம்பவே லேட்டா வந்துட்டு, குழந்தை மாதிரில நடிக்கிற…?” முகம் எல்லாம் கருத்து இருப்பவரைப் பார்த்து, சிறிதும் வருத்தம் வரவில்லை.

இவரை சமாதானம் செய்திடலாம், ஆனால் தன்னுடைய மனதினை முடியாதே.

“சரிங்க வார்டன், உங்க பேச்சை மீறுவேனா? சரி, பெட்ஷீட் தருவீங்களா?”

“எதுவுமில்லை.” என்றார் கறாராக.

“ப்ச்! பரவால்ல, இன்னைக்கு எல்லாருக்கும் நான் ரத்தம் கொடுக்கணும்னு இருக்கு போல…” தியாகத்தின் செம்மல் அவள் வார்த்தை, நாற்காலியில் அந்த மனிதரை அமர விடவில்லை. பெண்ணின் கைகளைப் பிடித்து ஆராய்ந்தவர், போலியாக போடப்பட்டிருந்த அந்த சிறிய கட்டைப் பார்த்து பயந்தே போனார்.

“என்ன இது?”

“அது… அது வந்து… ஆஃபீஸ்ல யாருக்கோ ரத்தம் தேவைப்படுதுனு சொன்னாங்க. போனா லீவு கிடைக்கும்னு தெரிஞ்சு சும்மாவா இருப்பேன், ஓடிட்டேன்ல…” என்றவள், “என்ன, கொஞ்சம் மயக்கம் வர்ற மாதிரி இருக்கு. பரவால்ல பரமு, தூங்கி எந்திரிச்சா சரியாகிடும்.”

அவ்வளவு தான், அவளை கைகளில் ஏந்தாத குறையாக அவளது அறையினுள் விட்டு கையோடு இரண்டு மசாலா தோசையை ஊற்றி, அதோடு சுட சுட தேநீரோடு வர பெண்ணுக்கு ஏகபோக குஷிதான்.

பரமுவுக்காக தனிப்பட்ட முறையில் தயாராகி இருந்த உணவினை தனதாக்கிக் கொண்டாள் பெண். பாவம், அந்த ஜீவனும் அவளது நடிப்பில் மயங்கிதான் போனார்.

இது அவளுக்கும் புதிதில்லை, அவருக்கும் புதிதில்லை. ஏழு வருடங்களாக தாரகையின் குணாதிசயங்களை அறிந்திருந்தும், ஒவ்வொரு முறையும் அவளது பொய்களில் தொலைந்துதான் போவார் பரமு.

“இனிமேல் இந்த மாதிரி எல்லாம் ரத்தம் கொடுக்காத கண்ணு. நீயே ரொம்ப சோர்ந்து இருக்க, இதுல இதெல்லாம் தேவையா?” அங்கலாய்த்து அவளுக்கு பல அறிவுரைகளை கூறிதான் வெளியில் சென்றார்.

புன்னகை தவழும் முகம் அவளிடம், அவள் ஆரோஹி! அவளது உலகம் மிக மிக சிறியது. ஆனால் ஆசைகள், உறவுகள் எல்லாம் வானளாவியது. சிறு விஷயங்களில் கூட, அவளுக்கு ஏன் என சொல்ல முடியாத அளவு மகிழ்ச்சி வந்துவிடும். உடைந்த கண்ணாடி துண்டில் கூட முகத்தைப் பார்த்து சிரிப்பவள்.

பரமு வெளியில் சென்ற நொடி, மெத்தையிலிருந்து எழுந்து அந்த அறையின் கதவை அடைத்தவள், படபடவென அனைத்து விளக்குகளையும் உயிர்ப்பித்து, உறங்குவது போல் பாவனை செய்யும் தோழிகள் மூவரையும் அடித்து எழுப்பினாள்.

“ஏன்டி, நீ ரத்தம் குடுத்தியாக்கும்?” போர்வையை உடலோடு ஒட்டி, தரையில் அமர்ந்து கேட்டாள் ஒரு பெண்.

“அதையும் நம்புது அந்த ஜீவன்.” வேறொருத்தி அங்கலாய்த்தாள்.

“அதுக்கெல்லாம் முகராசி வேணும். சரி, இன்னைக்கு ஒரு ஸ்பெஷல் ஐட்டம் கடை கடையா ஏறி, இறங்கி வாங்கி வந்துருக்கேன். எல்லாரையும் இழுத்துட்டு வாங்க, நான் தேவையானது எல்லாம் எடுத்து வைக்கிறேன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!