Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அலைபாயுதே

அலை – 1.2

ஆறு பெண்களையும் வட்டமாக அமர வைத்து மெழுகுவர்த்தி, சில்லறை காசு எடுத்து வைத்து, அந்த அறையின் அனைத்து ஜன்னலையும் இழுத்து சாற்றி, கையில் ஒரு பேனா, பேப்பர், அட்டையோடு வந்து அமர்ந்தவளிடம், “இந்த கேன்டில் தான் நீ சொன்ன ஸ்பெஷல் ஐட்டமா?”

“ஹீ… ஹீ… மறக்காம எல்லாரும் உங்க பங்கு காசை தந்துடுங்க.”

“அடியே கஞ்சமே… இந்த அஞ்சு ரூபாய்கும் உனக்கு பங்கு வேணுமா?”

“அதெல்லாம் தெரியாது, எனக்கு வேணும்.”



Advertisement

அடமாய் கூறியவளைப் பார்த்து, அந்த ஆறு பெண்கள் இருந்த கூட்டம் பார்த்து சிரிக்கத்தான் செய்தது. அதை எல்லாம் சுத்தமாக காதில் வாங்காதவள், எடுத்த பேப்பரை அட்டையில் ஒட்டி அதில் ஏதேதோ எழுத துவங்கினாள்.

முதலில் புரியாமல் விழித்த கூட்டம், நேரம் செல்ல செல்ல புரிந்து போக பயத்தில் நடுங்க துவங்கினர்.

“ஏய் கொலைகாரி, என்னடி பண்ற?” வேர்க்க துவங்கியது ஒரு பெண்ணுக்கு.

Advertisement

ஆரோஹியிடமிருந்து விஷம சிரிப்பு எதிரொலிக்க திகிலடைந்தது அனைவருக்கும்.

Advertisement

“க்ராதகி, என் பொறந்த நாள்டி இன்னைக்கு…”

ஆரோஹி, “எத்தனை பேருக்கு பொறந்த அன்னைக்கே இறக்குற வரம் கிடைக்கும்?”

நெஞ்சே வெடித்தது அந்த பெண்ணுக்கு. எடுத்த வேலையை முடித்தவள், எழுந்து அறையின் தாழிட்டு அருகில் நின்று, “கேன்டில் லைட் பண்ணி வை, நான் சுவிட்ச் ஆஃப் பண்றேன்.”

Advertisement

ஆரோஹி நிற்க, சிலர் முடியவே முடியாது என்றனர். அதிலும் ஒரு பெண் மட்டும், “இன்னைக்கு பேய் கூட பேசியே ஆகுறோம்.” என்றவள் மெழுகுவர்தியை ஏற்ற, ஆரோஹி மின்விசிறி, மின் விளக்கு என அனைத்தையும் அணைத்துவிட்டு தோழிகளோடு அமர்ந்து கொண்டாள்.

“ரோஹி…” ஆரோஹியின் காலில் ஒரு பெண் சுரண்டி, “பயமா இருக்குடி, நிறுத்திடலாமா? நான் மட்டும் கூட வெளிய ஓடிடுறேன்.”

ஆரோஹி, “லைட் ஆஃப் பண்ணா அவ்ளோ தான், இனி பாதில எந்திரிச்சு போனா பெரிய பிரச்சனை உனக்குத்தான்.” ஏதோ ஒரு பொய்யை கூறி, அவளது கையைப் பற்றி கோர்த்துக் கொண்டாள்.

“எல்லாரும் கை கோர்த்துக்கோங்க. சில ரூல்ஸ் இருக்கு, காயின் மேல எல்லாரும் விரல் வைக்கணும். ரொம்ப அழுத்தி பிடிக்க கூடாது, பயப்பட கூடாது. முக்கியமா இடத்தை விட்டு அசைய கூடாது, ஆவிகளை அவமதிக்க கூடாது.”

விதிகளை கூறி முடிக்க, “ரோஹி சுத்தி இப்போ யாரும் இல்லையே?”

ஆரோஹி, “பேசாதடி, அனகோண்டா குரங்கே!”

“இப்ப என்னை பாம்புனு சொல்றியா? குரங்குனு…”

“மூடிட்டு கை வை பாலு…” மற்றொரு பெண் திட்ட, அனைவரது விரலும் அந்த ஒற்றை காயினில் வந்து நின்றது.

மங்கிய வெளிச்சத்தில் அனைவரது முகமும் பயத்தில் சிவந்திருக்க, ஆரோஹி முன் நின்று ஆட்டத்தைத் துவங்கினாள்.

“We call upon the spirit world and welcome any good spirits to talk with us.” (ஆவிகளின் உலகத்திலிருந்து நல்ல ஆவிகளை எங்களோடு பேச அழைக்கிறோம்.)

முற்றும் முழுதாய் மூடிய அறையில் சில்லென்ற காற்று வீச அரண்டு போயினர் அனைவரும், “என்னடி காத்தடிக்கிது?” தந்தியடித்தது பேச்சு.

“பேய் வந்துடுச்சோ?” பீதியோடு ஒரு பெண் கேட்க,

மற்றொரு பெண், “அதுக்கு ஏன் வர்ஷா என் தோளை சுரண்டுற?”

அந்த வர்ஷாவுக்கோ கண்கள் வெளியே வந்து விழுந்துவிடும் அளவு பயம், “கீர்த்தி, என் கை காயின்ல தானே இருக்கு. நான்… நான்… எப்… எப்டி உன்னை தொடுவேன்?”

மற்றவர்களைப் பார்த்து பார்வையை சுழலவிட்ட ஆரோஹி, “பேய் வந்துடுச்சு.” என்றாள் கண்களில் பயத்தோடு.

“Is there anyone here now?” (இங்கு யாராவது இருக்கீங்களா?) குரல் கேட்டு பத்து நொடிகள் அமைதி நிலவ, அவர்கள் தொட்டிருந்த காயின் தன்னாலே, ‘எஸ்’ என்ற எழுத்தை நோக்கி நகர்ந்த நொடி, படாரென ஜன்னல் ஒன்று அடித்து திறக்க, மெழுகும் அணைந்து போக அந்த ஆறு பெண்கள் அடித் தொண்டையிலிருந்து கத்த அவ்விடமே நடுசாமத்தில் கபளீகரமாகியது.

அடித்து பிடித்து ஒவ்வொருவரும் ஒரு பக்கம் ஓடப் பார்க்க கதவும் தென்படவில்லை, பயத்தில் சுவிட்ச் போர்டும் சிக்கவில்லை. அதோடு நில்லாது, காற்று பலமான சத்தத்தோடு வீச, சொல்லவே வேண்டாம் அவ்வளவு தான்! மொத்த விடுதியும் கூடியதோடு இல்லாமல், அந்த தெருவையே எழுப்பி விட்டிருந்தனர்.

பிறகு என்ன, அந்த பெண்கள் அனைவரும் அன்று இரவே காய்ச்சலில் விழ, ஆரோஹிக்கு கிடைத்த கூடுதல் பாராட்டில் ஒரு வாரம் காய்ச்சல் தான்.

***

கண்களுக்கு முன்னே தன்னை நோக்கி ஓடி வந்த அந்த உருவம் கண்ணில் துல்லியமாக தெரிய, அதனை மங்க செய்ய நெற்றியிலிருந்து வியர்வை, ஹெல்மட்டை விட்டு மழைத் துளி போல் பூமியை தொடர்ச்சியாக சென்றடைய, அவன் பார்வையோ சிறிதும் கவனம் சிதறவில்லை.

அவன் எண்ணமெல்லாம் தன்னை நோக்கி எரிகல்லை போல் தீயென வரும், அந்த சிறிய பந்தின் மீதே அவன் பார்வை நிலைத்திருந்தது. மணிக்கு நூற்றி நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் பறந்து வந்த பந்தினை, துல்லியமாக கையாண்டவன் சிம்ம பலத்தினால், அரங்கத்தின் நூறடி உயரத்தில் வீற்றிருந்த அந்த ப்லட்லைட் எனப்படும், விளக்கின் மையப்பகுதியை அடித்து நொறுக்க சில விளக்குகள் சில்லு சில்லாய் சிதறி விழுந்தது.

“நெருப்பா இருக்கடா அஸ்வின்.” அவனுக்கு பந்து வீசிய வேக பந்து வீச்சாளர், மூச்சிரைக்க அவனைப் பார்த்து பாராட்ட, சிரிப்போடு மீண்டும் பேட்டிங் செய்ய நின்றான்.

“போதும் அஸ்வின், ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாத.”

அவனது பர்ஸ்னல் கோச் அவனைத் தடுத்து கையில் ஒரு துவாலையைக் கொடுக்க, மனமே இல்லாமல் ஹெல்மட்டை அவிழ்த்து தலையைத் துடைத்தான். ஏனோ மனம் இன்னும் இன்னும் வேணும் என்றது, நிறுத்தவே மனம் வரவில்லை.

“ஏன்டா இவ்ளோ அவெர்சன்?”

சிரிப்போடு தலையாட்டியவன் கண்களில் ஒரு பிடிவாதம், “மூணு மாசம் சாலிட் ரெஸ்ட் எடுத்துட்டு, இப்ப கைல பேட் எடுக்கவும் நிறுத்த மனசு வரல டேவிட். ப்ளீஸ், இன்னும் ஒரு ஒன் ஹவர் மட்டும் ப்ராக்டிஸ் பண்ணிக்கிறேன்.”

“டேய் எனக்கு டைம் ஆச்சு, பொண்ணு பர்த்டே வச்சுட்டு இவ்ளோ நேரம் இருந்ததே பெருசு.” என்றார், அவர் தன்னுடைய பொருட்களை எல்லாம் கிட் பையில் அடக்கியபடி.

“ஓ… சாரி மறந்துட்டேன், நீங்க போங்க.” என்றான் இன்னும் நகராமல்.

“வாய்ப்பே இல்ல அஸ்வின், கையோட உன்னை கூட்டிட்டு வரதான் எனக்கு ஆர்டர் வந்துருக்கு, வாடா.”

“டேவிட் ப்ளீஸ்… நீங்க முன்னாடி போங்க, நான் கேக் கட் பண்ற டைம்க்கு கரெக்ட்டா வந்துடுவேன்.” அவரை கெஞ்சி அனுப்பி வைத்தவன், அடுத்த ஒரு மணி நேரம் இடைவிடாது பயிற்சியில் இருந்தான்.

சந்திக்கும் விமர்சனங்கள் அத்தகையது. ஒரு மாதம் இடைவேளை விட்டாலே, அவன் இடத்தை பிடிக்க நூறு மனிதர்கள் காத்திருக்க, இவனோ மூன்று மாதம் இடைவேளை எடுக்க வேண்டிய நிலை. உடும்பாக விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் வேகம் அவனிடம்.

ஒருவன் மீண்டும் வந்து டேவிட் கூறியதை நினைவுபடுத்தி செல்லவும் தான் மட்டையை விடுவித்தான். மைதானத்தில் இருந்த ட்ரெஸ்ஸிங் ரூமிலே குளித்து தயாரானவன், தன்னுடைய மெஷராட்டி ஜிப்லியை எடுத்து அவனுடைய பயிற்சியாளரின் வீட்டிற்கு விரைந்தான்.

அவன் அஸ்வின், அஸ்வின் நாராயண்! இந்திய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவன். ரசிகர்களால் செல்லமாக ரன் டயனமைட் (கொடூரமாக வெடிக்கக்கூடிய வஸ்து) என அழைக்கப்படுபவன்.

மைதானத்தினுள் இறங்கிவிட்டால் அவனைத் தடுப்பார் இல்லை. முதலில் ரசிகர்களிடம் ஆக்ரோஷத்தாலும் விளையாட்டின் மேல் உள்ள தீவிரத்தாலும் அறியப்பட்டவன், பிற்காலத்தில் அவனது வளர்ச்சியின் மூலம் தன்னுடைய இருப்பை உலகிற்கே தெரிவித்தான்.

ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் அவனது ஆட்டத்திற்கும் ஆடும் முறைக்கும் அடிமையானர். சாதாரண பந்தை எதிர்கொண்டால் கூட, அதிலும் ஒரு நேர்த்தி இருக்குமென முதல்முறை பார்ப்பவர்களுக்கே புரியும்.

எங்கு திரும்பினாலும் ரசிகர்களின் படையெடுப்பு, தன்னை முதன்மையாய் வைத்து தன் வழியில் பயணிக்கும் ரசிகர்களுக்காக, ஒரு நாளும் தேங்கிடவோ தோற்றிடவோ கூடாதென, முனைப்பாய் இருந்துள்ளான்.

அதற்கு பயந்தே சிறு எலும்பு முறிவால் மூன்று மாதம் இடைவேளை விட்டு, மீண்டு வந்து தீவிரமான பயிற்சியில் இறங்கிவிட்டான்.

பிடித்த காரியத்தின் மேல் இயல்பிலே வரும் பிடித்தம் வேறு அவனைத் தூண்டிவிட, இன்னும் தன்னுள் இழுத்துக்கொண்டது கிரிக்கெட். அதில் விரும்பியே மூழ்கினான் அஸ்வின் நாராயண்.

இதோ அவனுக்கு சிறு வயதிலிருந்து பயிற்சி கொடுத்த பயிற்சியாளரின் வீட்டிற்கு வந்தவனை, ஒரு ரசிகர் பட்டாளமே சூழ்ந்து கொள்ள, அதனை ஓரமாய் நின்று பார்த்த அவன் வீட்டினருக்கு அத்தனை பெருமிதம். கூட்டத்தைத் தாண்டி தான் பெற்றோரையும் உடன் பிறந்தவனையுமே சந்திக்க முடிந்தது.

“இப்போவாவது உன் கண்ணுக்கு நாங்க தெரியுறோமே…”

இளையவன் பார்க்க, மூத்தவன் அவனது காலரை சரி செய்து, “எப்பவோ கவனிச்சிட்டேன்.” கண்ணடித்து அஸ்வின் சிரிக்க, சிறியவனுக்கோ அப்பொழுதும் பெருமை தான்.

அஸ்வின் குடும்பம் இயற்கையிலேயே வசதி வாய்ந்த குடும்பம் தான். இரண்டு தலைமுறைக்கு முன்னர்தான் ஏற்றுமதி தொழில் செய்து, அதில் அதீத வளர்ச்சி அடைந்திருந்தனர்.

தந்தையின் தொழிலில் அதிகம் ஆர்வம் காட்டாத அஸ்வின், தனக்கென ஒரு பாதையை உருவாக்கி சென்றுவிட, சிறியவனான ஜெயந்த் தந்தையின் தீவிரத்தை மிஞ்சி தொழிலில் தீவிரம் காட்ட, பெரியவர்களுக்கு பாரம் நீங்கிய உணர்வு.

அது அஸ்வின், சிதம்பரத்திற்கு சாதகமாகி போக மகிழ்ச்சியாக வளைய வந்தான். ஆனாலும் தந்தையின் கிடுக்கு பிடியில் அவ்வப்போது தொழிலையும் எட்டி பார்ப்பான்.

இப்பொழுது வந்த வேலை முடிய, அன்னையின் கைகளால் விருப்பமானவற்றை வயிறார உண்டவன், தன்னுடைய வீட்டிற்கு செல்கிறேன் என சொன்ன பொழுது, குடும்பத்தினர் முகமே வாடி போனது.

“போடா படவா, இதுக்குத்தான் என்னை ஊட்டி விட சொன்னியா நீ?” சோகமாக முகத்தைத் திருப்பினார், அவன் அன்னை மதிவர்தினி.

“ம்மா கெரீயரையும் பாக்கணும் ம்மா. மூணு மாசம் உங்க கைக்குள்ள தான இருந்தேன், அடுத்த ரெண்டு மாசம் சாப்பாட்டுல கண்ட்ரோல் கொண்டு வரணும்னா இது அவசியம் ம்மா.”

தலை சாய்த்து அன்னை முகம் பார்த்து மகன் கேட்க, அவனுக்காக மட்டுமே யோசித்து சரி என்றார் மதி.

🎶🎵

பூக்களுக்குள்ளே
தேன் உள்ள வரையில்
காதலர் வாழ்க

பூமிக்கு மேலே
வானுல வரையில்
காதலும் வாழ்க

காற்றே என் வாசல்
வந்தாய் மெதுவாக
கதவு திறந்தாய் காற்றே
உன் பேரை கேட்டேன் காதல்
என்றாய்

🎵🎶

அனைவரிடமிருந்தும் விடைபெற்று தன்னுடைய வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தவன் காரில், இனிமையான இசைப்புயல் இன்னிசையில் இரவை இன்னும் ரம்யமாக்கிக் கொண்டிருந்தார். அந்த நேரம் தன்னுடைய கைப்பேசி இசைக்க எடுத்து பார்த்தவன் இதழில் சிறு புன்னகை.

யவ்னிகா என்னும் பெயரை தாங்கி நின்றது அந்த அழைப்பு.

மெல்லிய சிரிப்போடு கைப்பேசியை எடுத்துப் பேச, அந்த பக்கம் ஆசையின் அழைப்பு வந்தது.

“மிஸ் யு சோ மச் அஸ்வின்!” கீதமாய் இனித்தது அவளது குரல். நாயகனுக்கோ சிரிப்பு தான், அவள் இந்த வார்த்தையை கடந்த மூன்று மாதங்களில், இன்றுதான் வாயைத் திறந்து கூறியுளாள்.

“ஆஹான்…! அப்டியா?” என்றான் கேலி இழைந்தோடிய குரலில்.

“சந்தேகமே வேணாம். எப்போதான் இந்த டூ வீக்ஸை கடந்து வர போறேனோ தெரியல பேபி, பேசாம மும்பை வாயேன் நீ…”

“பாசிபிள் இல்ல யவ்னி, இன்னைக்கு தான் ப்ராக்டிஸ் ஸ்டார்ட் பண்ணிருக்கேன்.” என்றவன் கைகளில், வாகனம் இரவைக் கிழித்து சுலபமாக ஓடியது.

அந்த பக்கம் பெண்ணுக்கோ முகமே சூம்பிவிட்டது, “நானாவது வர்றேனே…”

தன்னுடைய அன்னையை நினைத்து ஒரு நொடி யோசித்தவன், உடனே அந்த எண்ணத்தை தூர வைத்துவிட்டான். “கனவுல கூட நினைச்சு பாத்துடாத, நான் கேம்ல மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணணும் நினைக்கிறேன்.”

“ஸ்டாப் லையிங் அஸ்வி, யார்கிட்ட பொய் சொல்ற நீ? உன்னை பத்தி எனக்கு தெரியாதா? என்ன நீ மிஸ் பண்ணவே இல்ல?”

இவனும் சிரிப்பை மெல்ல உதட்டில் படரவிட்டு அமைதியாக இருக்க, அவளுக்கு அதன் உண்மையும் புரிந்தது. இருந்தும் ஆசையை, காதலை விட முடியவில்லை. அவன் மேல், அவன் குணத்தின் மேல், அவன் உறுதியின் மேல் வர வேண்டிய ஆசைக்கு அதிகமாகவே பிரியம் உள்ளது.

அதற்கு சுற்றம் கேட்டு காதல் என்னும் பெயரை சூடி, அதிலே கட்டுண்டு கிடக்க இருவர் மனமும் மல்லுக்கட்டி நிற்கவில்லை. போகிற போக்கில் நிதானமாக தடயத்தை எடுக்க மௌனமாக முடிவெடுத்திருந்தனர்.

“ம்ம், சொல்லு ட்ரெயினிங் எல்லாம் எப்படி போகுது?”

“எல்லாம் சூப்பர்ப் தான்” என்றான் திருப்தியான புன்னகையோடு.

“டிபிகல்டீஸ் எதுவும் இருந்ததா ப்ராக்டிஸ் பண்றப்போ?”

இதமான சூழலில் தேசிய நெடுஞ்சாலையின் கிளைப் பகுதியில், மிதமான வேகத்தில் ஊர்ந்து கொண்டிருந்த வாகனத்தில் இருந்த அஸ்வினின் பார்வை, முகத்தை ஒரு குடத்தினுள் விட்டு எங்கு நடக்கிறோம் என்பதே தெரியாமல், சாலையில் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்த ஒரு நாயைக் கண்டு, யவ்னிகாவிடம் பிறகு பேசுவதாக கூறி அழைப்பைத் துண்டித்து வாகனத்தை விட்டு இறங்கினான்.

அந்த வாயில்லா ஜீவன், அருகே ஒரு மனிதனின் வாசனையை உணர்ந்து வேகத்தை அதிகரிக்க பார்க்க, அஸ்வின் மின்னல் வேகத்தில் அதனை பிடித்து முழு வீச்சில், அதன் முகத்தில் மாட்டியிருந்த குடத்தினை அவிழ்க்க பார்க்க, அந்த நாயோ அதிகமாக திமிறி அந்த சாலையில் மறு பக்கத்திற்கே அவனையும் இழுத்து வந்துவிட்டது.

“ஒன்னுமில்லடா, கொஞ்சம் பொறு.” அதன் முதுகில் தடவி ஆறுதல் கூற பார்த்தும், அது அசையவே இல்லை.

குழந்தை முகமறியா மனிதனிடம் சென்று அழுவது போல், பிடி கொடுக்காமல் திமிறி நிற்க, அதன் போக்கிலே சென்று குடத்தை இழுக்க, அந்த நாயோ மறுபக்கம் தன்னை இழுத்து ஒருவழியாக தலை தப்பித்த மகிழ்ச்சியில் ஓடிவிட, பாவம் அஸ்வின்தான் கால் தடுமாறி பின்னால் இருந்த அந்த வாகனத்தோடு மோதி விழுந்தான்.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!