Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maruvak Kaathal Kondaen

மருவக் காதல் கொண்டேன்-3

ஒரு நிமிடம் கிருஷ்ணாவின் பார்வையில் உறைந்த உமையாள், அடுத்தகனமே தெளிந்து, தன்னை தெளிவித்து கொண்டு, ஏற்கனவே அறிமுகமானவர்களை, மீண்டும் சந்திக்கும் போது சிந்தும் அளவான நட்பு பாராட்டும் புன்னகையுடன், அவனை நெருங்கி,

“கிருஷ்ணா, எப்படி இருக்கீங்க” என்று கேட்க, அவனோ அவளின் புன்னகைக்கு பதில் புன்னகை தர வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல், இயந்திரதத்தை ஒத்த குரலில்,

“யா பைன், நீங்க” என்று இவ்வளவு நேரத்தில், முதல் முறையாக தன் திருவாய் மலர்ந்து, அவளின் கேள்விக்கு பதில் அளித்தவன், கூடுதலாக வசீகரனுக்காக, அவளை ஒப்புக்கு
நலம் விசாரித்தும் வைத்தான்.

அவனின் குரலோ, பாவமோ, எதை பற்றியும் கிஞ்சித்தும் கவலை கொள்ளாத உமையாள், சாதாரணமாகவே,



Advertisement

“நானும் நல்லா இருக்கேன்” என அவனுக்கு பதில் அளிக்க, ஏனோ பாலாவை போல இவனிடம், அவளால் அத்தனை இலகுவாக பேச முடியவில்லை என்பதை விட அவன் அனுமதிக்கவில்லை என்பது தான் உண்மை.

மேற்கொண்டு என்ன பேசுவது என்று உமையாள் முழிக்க, பாலாவோ சற்று முன்பு தத்து எடுத்த தங்கையின் மேல் தோன்றிய திடீர் பாசத்தில்,

“பாப்பு, இத்தனை மணிக்கு ஏன் தனியா வந்த, இதோ நிக்கிறானே, இந்த வளர்ந்து கெட்டவன், அவனை போன் பண்ணி உன்னை கூப்பிட வர சொல்ல வேண்டியது தானே” என வசீகரனை சுட்டி காட்டி கேட்டான்.

Advertisement

இந்த அகால நேரத்தில் உமையாள், இப்படி தனியாக வந்து இருக்காளே என்ற அக்கரையில் பாலா கேட்க, அவனின் “பாப்பு” என்ற விளிப்பா, இல்லை அவனின் கேள்வியா, என்று பிரித்தறிய முடியாமல், வசீகரன் உடல் ஏகத்துக்கும் இறுக, அவன் எதும் பேசும் முன், உமையாள்,

Advertisement

“நல்லா சொன்னிங்க போங்க அண்ணா, இவன் வந்து கூட்டிகிட்டு போவானு நான் வெய்ட் பண்ணி இருந்தா, போற வர, பேய், பிசாசுக்கு பேன் பார்த்துகிட்டு அங்கேயே உட்கார்ந்து இருக்க வேண்டியது தான், அதுபோக நான் எங்க தனியா வந்தேன்” என பதில் கேள்வி கேட்டு வைத்தாள் அந்த காரிகை.

[the_ad id=”6605″]

பாலாவை நோக்கி கேள்வியை வீசியவள், தான் வீசிய கேள்விக்கு, தானே பதிலும் பகரும் விதமாக, அப்படியே திரும்பி வாசலை பார்க்க, அங்கு ஆஜானுபாகுவான ஒருவர் நிற்க கண்டனர் நண்பர்கள்.

Advertisement

பாலாவின் மனமோ, “எம்மாடியோவ், கோத்ரேஜ் பீரோக்கு சட்டை, பேண்ட் போட்ட மாதிரி, எம்மா பெருசா இருக்காரு, இவரை சுத்தி பார்க்கணும்னாலே மூனு நாள் ஆகும் போலயே” என வாயில் கை வைத்து அவரின் தோற்றத்தில் மலைத்து போய் நின்றான்.

அவனின் பாப்பு சுட்டிக்காட்டியதும் தான், வாசலில் நின்றவரை பார்த்த வசீகரன், வீட்டுக்கு வந்தவரை உள்ளே அழைப்பது அடுத்த விஷயம், அவரின் வரவை கூட கவனிக்காத தன் மடத்தனத்தை நொந்து கொண்டான்.

அவனின் பாப்பு, தனியே வரவில்லை, அதோடு உடன் வந்த நபரை பார்த்ததும், அவளுக்கு வழியில் ஆபத்து வந்து இருக்க வாய்ப்பே இல்லை என்பது புரிய, அவனின் இறுக்கம் சற்று தளர்ந்து தான் போனது.

மிச்சம் இருந்த கொஞ்ச இறுக்கத்தையும் தளர்த்தி, அவரை வரவேற்கும் விதமாக, ஒரு இளநகையை உதட்டில் ஓட்ட வைத்து கொண்டு, அவரை நெருங்கியவன், “வாங்க மைக், உள்ளே வாங்க” என வரவேற்றான்.

அந்த மைக் ஆகப்பட்டவரோ, இவ்வளவு நேரம் தன்னை கவனிக்காததிலோ, அல்லது உள்ளே அழைக்கபடாததிலோ சற்றும் பாதிக்கப்படாமல், பாறை போன்று இருந்த முகத்தில் சிறு சுனக்கம் கூட கொள்ளாமல், இவனின் அழைப்புக்காகவே காத்திருந்தவர் போல உள்ளே வந்தார்.

மைக்கை ஆராய்ச்சி பார்வை பார்த்த கிருஷ்ணாவும் சரி, அவரின் தோற்றத்தை பார்த்து மலைத்த பாலாவும் சரி, அவரின் கையில் இருந்த பெட்டியை கூர்ந்து கவனிக்க தவறினர்.

மைக்கோ வசீகரனின் அழைப்பின் பேரின் உள்ளே வந்தவர், யாரின் கவனத்தையும் கவராமல், தன் கையில் இருந்த பெட்டியை, அங்கு வரவேற்பறையில் இருந்த பெரிய “ட” வடிவ சோபாவின் பின் கிட்டத்தட்ட மறைத்த மாதிரி வைத்தார்.

தன் மலைப்பில் இருந்து வெளிவந்த பாலா,
“இவரு” என்று இழுக்க, உமையாளே,

“இவர் பேரு மைக்கேல், நானும், கரனும், சின்ன வயசுல இருந்தே மைக்னு தான் கூப்பிடுவேன், என்னோட ஊரு தான், எங்க பக்கத்து வீடு, நான் சென்னைக்கு போறேனு சொன்னதும், இங்க நல்ல வேலை, நல்ல சம்பளத்தில் கிடைக்கும்னு என் கூடவே இவரும் கிளம்பி வந்துட்டாரு, இவருக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ணனும் கரன்” என பாலாவிடம் ஆரம்பித்தவள், கரனிடம் முடித்தாள்.

கிருஷ்ணாவின் பார்வை முன்னினும் கூர்மையாக, அதே சமயம் நிதானமாக அந்த மைக்கேலை தலை முதல் கால் வரை அலசி ஆராயலானான்.

பாலாவோ, “இந்த மலைமுழிங்கி மகாதேவனுக்கு, பொருத்தமான வேலைனா, அடியாள் வேலை தான் கொடுக்கணும், நம்ப கரன் பாட்சா பாய் மாதிரி இருந்தா பரவாயில்லை, இவனோ ஒரு அப்பாவி பிசினஸ் மேன், ஒருவேளை சிவாஜி படத்துல வர மாதிரி, ஒரு ஆபிஸ் ரூம் போட்டு, எதிரிகளை நல்லா கவனிக்கிற மாதிரி எதும் வேலை கொடுப்பானோ” என்று தீவிர சிந்தனையில் இறங்கினான்.

வசீகரனோ, அவனின் பாப்புவின் பேச்சில், என்ன புரிந்துகொண்டானோ, அந்த மைக்கேலை நோக்கி,

“உங்களுக்கு கார் டிரைவ் பண்ண தெரியும் தானே” என கேட்க,

அந்த மைக்கோ, யாரும் அறியாவண்ணம் உமையாளை பார்க்க, அவள் கண்ணசைத்ததும், வசீகரனை நோக்கி, ” தெரியும்” என ரத்தினசுருக்கமாக விடைப் பகர்ந்தார்.

அடுத்த நிமிடமே அவரை தன் காரோட்டியாக ஏற்றுக்கொண்ட வசீகரன், வீட்டிற்கு பின்புறம், எப்போதும் தயாராக இருக்கும், ஒரு அறை, ஒரு சமையலறை கொண்ட, சிறிய வீட்டையும் அவரின் பயன்பாட்டிற்கு எடுத்து கொள்ள சொல்லவும், அவரும் அமைதியாய் அதை ஏற்று கொண்டார்.

வசீகரன் பேசி முடிக்கும் வரை, பொறுதிருந்த உமையாள், திடீரென அப்போது தான் ஏதோ நினைவு வர பெற்றவளாக, வசீகரனை நெருங்கி, ஏதோ பேச வரவும், கிருஷ்ணா அவனை நெருங்கவும் சரியாக இருந்தது.

[the_ad id=”6605″]

கிருஷ்ணாவை பார்த்து, அவன் பேசட்டும் என உமையாள் அமைதியாக ஒதுங்கி நிற்க, கிருஷ்ணாவோ “பொறுத்தது போதும் பொங்கி எழு” எனும் நிலையில் இருந்தான்.

உமையாளை, கிருஷ்ணா பார்த்தது இல்லையே தவிர, வசீகரன் சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறான். வசீகரனுக்கு அவள் எவ்வளவு முக்கியம் என்பது, கிருஷ்ணா அறிந்த ஒன்று தான்.

உமையாளை வந்ததுமே, இன்று இவர்களின் ஆலோசனை கூட்டம் தொடர வழியே இல்லை என்று கிருஷ்ணாவிற்கு புரிந்துவிட்டது.

சரி விடைபெற்று, வீட்டிற்காவது செல்லலாம் என நினைத்தால், இவர்கள் இவன் பேச சிறு அவகாசமும் கொடுக்காமல், தொடர்ந்து வளவளத்து கொண்டே இருக்க, கடுப்பானவன், ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் தான் வசீகரனை நெருங்கி இருந்தான்.

“இன்னைக்கு மீட்டிங்ல, அல்மோஸ்ட் எல்லாமே டிஸ்கஸ் பண்ணிட்டோம்னு தான் நினைக்கிறேன், ஒருவேளை ஏதாவது முக்கியமான விசயம், உடனே பார்க்க வேண்டிய விஷயம் மிஸ் ஆகி இருந்தா, மன் டே பார்த்துக்கலாம், நான் கிளம்புறேன்”

வசீகரனை நெருங்கி, அருகில் இருந்த பாலாவிற்கும் கேட்கும் வகையில் தான் கிளம்ப போவாதாக தகவல் தெரிவித்தவன், “நீ என்ன பண்ண போற” எனும் விதமாக பாலாவையும் பார்த்து வைத்தான்.

கிருஷ்ணாவின் பார்வையில் இருந்த கேள்வி, பாலாவிற்கு அதிசயத்திலும் அதிசயமாக புரிய, “நீ கிளம்புடா, இன்னும் கொஞ்ச நேரத்துல நானும் வீட்டுக்கு கிளம்பிடுவேன்” என்று பதில் அளித்தான்.

பாலாவின் பதிலில் அவனை பார்த்த கிருஷ்ணா,
“என்னோட வீட்டுக்கு வந்துடு” என்று உரைத்துவிட்டு, அவனின் பதிலுக்கு காத்திராமல், நண்பர்கள் இருவரிடமும் ஒரு தலை அசைப்புடன் விடைப்பெற்று தன் வீடு நோக்கி சென்றான்.

வழக்கமாக சனி கிழமைகளில், இவர்களின் ஆலோசனை கூட்டம் முடிய எப்படியும் நேரம் நள்ளிரவை தாண்டும். களைப்பில் பாலா, வசீகரனுடன் அவனின் வீட்டிலே தங்கி விடுவான்.

இன்று உமையாள் வந்து இருக்க, பாலா இங்கு தங்குவது உசிதமாக இருக்காது என்பதால் தான், பாலா தன் வீட்டிற்கு சென்று விடுவதாக சொன்னது.

ஆனால் இந்த நேரத்தில் பாலா அவ்வளவு தூரம், காரோட்டி கொண்டு செல்ல வேண்டாம் என தான் கிருஷ்ணா அவனின் வீட்டிற்கு வர சொன்னான். கிருஷ்ணாவின் வீடு, வசீகரனின் வீட்டுக்கு அடுத்த வீடு தான், அதாவது அடுத்த பங்களா.

கிருஷ்ணா கிளம்பவும், வசீகரன் அவனின் பாப்புவை தான் பார்த்தான். அவள் எதோ சொல்ல வந்தாள் இல்லையா, கண்களாலே என்னவென்று கேட்ட, அவனின் பாப்புவோ,

“எங்கடா உன்னோட போன்” என்றாள்.

வசீகரனும் அவனின் அலைபேசியை எடுத்தவன், அதில் வந்து இருந்த எண்ணிலடங்கா தவறவிடப்பட்ட அழைப்புகளை பார்த்தவன், அவள் கேட்காமலே, தன்னிலை விளக்கமாக,

“அது வந்து பாப்பு………, மீட்டிங் இருந்ததா…….., அப்போ சைலண்ட்ல போட்டேனா…….” என கதை சொல்லும் பாவனையில் சொல்லியபடியே, பின்னாடியே நகர்ந்தான்.

வசீகரன் அவளிடம் இருந்து விலக எண்ணி, பின்னாடி எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும், அவனை நோக்கி முன்னாடி அடி எடுத்துவைத்து அவனை நெருங்க முயன்றாள் அவனின் பாப்பு,

“நான் போன் பண்ணும் போது எடுக்காத உனக்கு, போன் எல்லாம் ஒரு கேடு, ஒழுங்கா அதை என் கிட்ட கொடுத்துடு” என அதை பறிக்க முயல,

வசீகரனோ, “அடியேய் இது புது மாடல் ஆப்பிள் ஐ போன்டி, எவ்ளோ காஸ்லி தெரியுமா” என அவளின் உத்தேசம் அறிந்து, அவளுக்கு போக்கு காட்டியபடியே சொல்ல,

“அது ஆப்பிளா இருந்தாலும் சரி, ஆரஞ்சா இருந்தாலும் சரி, கோடி ரூபாயா இருந்தாலும் சரி, இன்னைக்கு அதை நான் சிதறு தேங்காயாக உடைக்கல, என் பேரு உமையாள் இல்லைடா” என வீரமுழக்கம் இட்டவள், அவனை விடாமல் துரத்தினாள்.

பாலா இப்படி யாரும் சண்டை இட்டு எல்லாம் பார்த்தது இல்லை. வீட்டின் கடைக்குட்டி அவன்.

பாலாவின் வீட்டில் எல்லாரும் அவனை, அப்படி தாங்குவார்கள். இந்த மாதிரி விளையாட்டு சண்டையிடவோ, ஓடி பிடித்து விளையாடவோ அவனுக்கு எந்த உறவும் இருந்தது இல்லை.

“பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகள் தான் உயிர்ப்போடு இருக்கும்” என்று என்றோ கேள்விப்பட்டதன் உண்மையான பொருள் அவனுக்கு இன்று தான் புரிந்தது.

அவர்களின் விளையாட்டையே, கொஞ்சமே கொஞ்சம் ஏக்கத்ததோடு, பாலா வேடிக்கை பார்க்கலானான்.

வசீகரனை எப்படியாவது பிடித்து, அவனின் கைபேசியை கையகப்படுத்தி, பிள்ளையாருக்கு காணிக்கையாக்கும் முயற்சியில் இருந்த உமையாள், இதற்சியாக பாலாவை பார்த்தவள், அவனின் விழி வழியே, அவனின் மனதை படித்து,

“டேய் அண்ணா” என்று மிகவும் மரியாதையாக விளித்து,

“நான் இங்க தனியா அல்லாடிக்கிட்டு இருக்கேன், நீ என்ன அங்க மரம் மாதிரி நின்னு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க, வா வந்து இவனை பிடிக்க ஹெல்ப் பண்ணு” என்று அவனையும் துணைக்கு அழைத்தாள்.

பாலாவும், உமையாளுடன் சேர்ந்து கொண்டு வசீகரனை துரத்த, இவ்வளவு நேரம் அவனின் பாப்புவிடம் போக்கு காட்டியவன், இருவரும் துரத்த அவர்களிடம் இருந்து தப்பிக்க, வெளியே தோட்டத்தை நோக்கி ஓடினான்.

அந்த நடுநிசியில், மூவரும் சிறு மழலைகள் என அந்த புல்வெளியில் ஓடி விளையாட, அம்மூவர் முகத்திலும் அப்படி ஒரு சிரிப்பு.

முதலில் வசீகரனின் கைபேசியை பறிக்கவென, ஆரம்பித்த அந்த துரத்தும் படலம், நேரம் செல்ல, செல்ல, தொடங்கிய காரணம் மறந்து, துரத்தும் தீவிரம் குறைந்து, கவலைகள் துறந்து, அந்த இரவில், மகிழ்ச்சியில் முகம் மின்ன, மின்மினி பூச்சியென அந்த தோட்டத்தில் சுற்றியவர்கள், தொப்பென அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்தனர்.

இவர்களை தொடர்ந்து வாசலுக்கு வந்த மைக்கேல், பார்வை முழுவதும் உமையாள் மீது தான்.

மூவரும் ஒருவாறாக சிரித்து முடித்ததும், உமையாள் இருவரையும் மிரட்டி, வீட்டிற்கும் அழைத்து சென்றாள்.

வீட்டிற்குள் வந்ததும், உமையாள், வசீகரனை நோக்கி,

“எனக்கு பால் வேணும் கரன்” என முகம் சுருக்கி பாவம் போல கேட்க, கரனுக்கு அப்படியே உருகிவிட்டது.

[the_ad id=”6605″]

உமையாள் பொதுவாக பசி தாங்க மாட்டாள். பிரயாணத்தில், எப்போது என்ன உண்டாலோ, அவளை பார்த்த மகிழ்வில், அவளின் பசியை கவனிக்க மறந்த தன்னை தானே திட்டிக்கொண்டு, அவளே வாய்விட்டு கேட்கும் அளவுக்கு வைத்த தன் மேலே கோவம் வர,

“சாரிடா, பாப்பு, வெறி சாரி, இரு இப்போவே எடுத்துக்கிட்டு வரேன்” என சமையல் அறையை நோக்கி சென்றான்.

பாலா, செல்லும் வசீகரனையே பார்க்க, உமையாள்,

“என்ன அண்ணா, கரனை அப்படி பார்க்கிறிங்க”

“இல்லை, இவனுக்கு காஸ் எல்லாம் ஆன் பண்ண தெரியுமானு யோசிக்கிறேன்” என, அடுப்பை பற்றவைப்பது, ஏதோ ஏவுகணை ஏவும் அளவுக்கு நினைத்து பேச, அவனின் கேள்வியில், உமையாள் சட்டென சிரித்து விட்டாள்.

“அது என்ன பெரிய விஷயம் அண்ணா, கரன் சூப்பர் அஹ சமைக்கவே செய்வான்” என அசால்ட்டாக சொல்ல, அவளின் பதிலில் பாலா வாயை பிளந்துவாறே,

“எப்படி தெரியும், எனக்கு தெரிஞ்சவரைக்கும் ஆண்ட்டி அவனை கிட்சன் பக்கமே விட்டது இல்லையே”

“கரன் எம்.பி.ஏ பாரின்ல தானே படிச்சான், அங்க எல்லாம் அவங்க தானே சமைத்து சாப்பிடுவாங்க, அப்படி கத்துகிட்டது தான் அண்ணா” என விளக்க,

அதேநேரம் சமையலறையில் இருந்து வந்த வசீகரன், தான் சமையலறையில் சல்லடை போட்டு சலித்து கண்டுபிடித்த, சில வகையான பிஸ்கட்-களை அவனின் பாப்பு கையில் திணித்துவிட்டு மீண்டும் சமையலறைக்கே சென்றான்.

வசீகரன் கொடுத்த பிஸ்கட்டை பிரித்தவள், கொஞ்சத்தை எடுத்துக்கொண்டு, சமையலறைக்கு சென்றவள், வசீகரனுக்கு கொடுத்து, சாப்பிட சொல்லிவிட்டு வந்தாள்.

மீதி இருந்ததில், தானும் எடுத்துக்கொண்டு, அருகில் அமர்ந்து இருந்த பாலாவிற்கும் உண்பதற்கு கொடுத்தாள்.

வசீகரனுக்கும், அவனின் பாப்புவிற்கும் இடையில் இருக்கும் பாசத்தை பார்த்து நிட்சயம் பாலா அசந்து தான் விட்டான்.

இவர்கள் இருவரையும் பற்றி எண்ணமிட்டபடியே பாலா, உமையாள் கொடுத்ததை உண்ண, உமையாள் கதை சொல்லும் பாவனையில் ஏதோ சொல்ல ஆரம்பிக்கவும், தன் கவனத்தை அவளின் பக்கம் திருப்பினான். உமையாளோ,

” எனக்கு அப்போ ஒரு பத்து வயசு இருக்கும்னு நினைக்கிறேன் அண்ணா, அப்போ இங்க, மாமா வீட்டுக்கு வந்து இருந்தேன், நானும், கரனும் விளையாட பார்க் போனோமா” என ஆரம்பிக்க, பாலாவும் நன்றாக அவள் பக்கம் திரும்பி உட்கார்ந்து கதை கேட்க ஆரம்பித்தான்.

“அந்த பார்க்ல, நிறைய பசங்க இருந்தாங்க, நாங்களும் அவங்களோட சேர்ந்து விளையாடிக்கிட்டு இருந்தோமா”

“ஹான் அப்புறம்”

“எங்க கூட விளையாடிய ஒரு பையன், கரன் என்ன “பாப்பு” னு கூப்பிட்டதை பார்த்து, அது தான் என்னோட பேருனு நினைச்சி, அப்படியே கூப்பிட்டான்”

“ஓ”

“அவ்ளோ தான் கரனுக்கு வந்ததே கோவம், அவன் மூக்குல விட்டான் பாருங்க ஒரு குத்து, மூக்குல இருந்து பொல பொலனு ரத்தம் வந்துடுச்சி” என உமையாள் பாவனையோடு சொல்லி முடித்தாள்.

அவ்வளவு தான் சுவாரசியமாக கதை கேட்டுக்கொண்டு, ரசித்து ருசித்து பிஸ்கட் உண்டுகொண்டு இருந்த பாலாவுக்கு, உமையாள் கதையை முடிக்கவும், பிஸ்கட் தொண்டையயில் சிக்கி பொறையேறி விட்டது. பதறிப்போய் உமையாள் அவனின் தலையில் மெல்ல தட்டலானாள்.

“ஒருவன் என் பெயர் தெரியாமல் “பாப்பு” என்றதற்கே, அந்த வயதிலே மூக்கை உடைத்தான், அப்போது உன் நிலைமையை யோசித்துப்பார்”
என்ற உமையாள் சொல்லிய கதையின் சாராம்சம் மெல்ல மெல்ல புரிய,

“மம்மி, என்னோட மூக்கு” என்று பாலா அலறியவாறே, அவசரமாக கையை எடுத்து மூக்கை மூடி கொண்டான்.

[the_ad id=”6605″]

பாலாவின் செயலில் உமையாள் வாய் விட்டு சிரிக்க, பாலாவோ அவளை பாவமாக பார்த்து வைத்தான்.

“நீங்க உமா-னு கூப்பிடுங்க அண்ணா, வீட்டுல எல்லாம் அப்படி தான் கூப்பிடுவாங்க” என அவளே அவன் எப்படி கூப்பிடலாம் என்று இலவச ஆலோசனையும் வழங்க, சரியாக மூன்று கண்ணாடி குவளைகளில், பாலோடு வசீகரன் வந்தான்.

வந்தவன் மூக்கின் மேல் கை வைத்து அமர்ந்து இருக்கும் தன் நண்பனை பார்த்து,

“என்னடா ஏன் மூக்கை மூடிக்கிட்டு உட்கார்ந்து இருக்க”, என்று கேட்க, பாலாவோ

“இல்லைனா தான், நீ மூக்கை உடைச்சிடுவியே, மூக்கும், முழியுமா இருக்கும் போதே ஒரு பொண்ணும் என்ன பார்க்க மாட்டுது, இதுல மூக்கு இல்லைனா…….” என்று மனதிற்குள் அலறியவன், வெளியில்,

“அது ஒன்னும் இல்ல மச்சான், உமா ஒரு கதை சொல்லுச்சா, அதுல வியந்து போய் வாய்ல கை வைக்க வந்து, கை ஸ்லிப் ஆகி மூக்கில் வச்சிட்டேன்” என உளறிகொட்டி கிளறி மூட, வசீகரனோ அவனின் “உமா” என்ற அழைப்பிலே நின்று விட்டான்.

வசீகரனுக்கு அவனை தவிர, யாரும் அவனின் பாப்புவை “பாப்பு” என்று அழைத்தால், பிடிக்காது. முதலில் பாலா, “பாப்பு” என்று அழைக்கவும், அதை ஏற்று கொள்ள முடியாமல் தான் அவனின் உடல் இறுகியது.

சில விஷயங்களை வசீகரனால் எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது, அதில் ஒன்று அவனின் பாப்பு மீதான உரிமை உணர்வு.

இவனை கவனித்து, அவனை புரிந்து கொண்ட இவனின் “பாப்பு” தான் ஏதோ கதை சொல்லி, பாலாவின் அழைப்பை மாற்ற சொல்லி இருக்கிறாள் என்பதில் அவனுக்கு அப்படி ஒரு ஆசுவாசம்.

வசீகரன் அவனின் பாப்புவை பார்க்க, அவ்ளோ அவனை பார்த்து கண்ணை சிமிட்டி, சிரித்தாள்.

அதன்பிறகு, கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு பாலா, கிருஷ்ணாவின் வீட்டிற்கு செல்ல, மைக்கும் அவரின் பகுதிக்கு செல்ல, வீட்டை பூட்டிவிட்டு வந்தான் வசீகரன்.

இவ்வளவு நேரம் குறும்புடன், சரிசரிக்கு வாயாடிய அவனின் பாப்பு, கண்ணில் நீர் திரள வசீகரனை பார்த்து,

“என்னால அங்கு இருக்க முடில கரன், மூச்சுமுட்டுற மாதிரி என்னால முடிலடா, கோழை மாதிரி கிளம்பி வந்துட்டேன்டா” என அழுகை அடக்கிய குரலில் பேச, வசீகரன் அவளின் கண்ணீரில், அப்படியே உறைந்து நின்று விட்டான்.

காதல் கொள்வோம்…………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!