Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்?

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 9

 அத்தியாயம் – 9

“கடைசியில் நினைத்ததை சாதித்துவிட்டாய்.” என்று தன்னைக் குற்றம் சாட்டியவனை ஓர் நொடி பார்த்தவள் எதுவும் பேசாமல் மேலே நடக்கத் தொடங்கினாள்.

“உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.” என்றான் அழுத்தமான குரலில்.

‘இப்ப மட்டும் என்ன பேசாமலா இருக்க?’ மனதிற்குள்ளேயே கேட்டுக்கொண்டாள்.



Advertisement

“உன்கிட்ட தான் சொல்றேன்.”

“சொல்லுங்க. என்ன பேசனும்?”

“வா பேசலாம்.” என்றவாறே சிற்றுண்டி விடுதியை நோக்கி நடந்தான்.

Advertisement

அவனை பின்தொடர்ந்து சென்றாள்.

Advertisement

அவளுக்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அத்தனை எளிதாக மனோரஞ்சன் வீட்டிற்குள் நுழைந்துவிட முடியாது என்றுதான் அவள் நினைத்திருந்தாள்.

அதற்கு சகுந்தலாவோ, சித்தரஞ்சனோ எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று தெரியும்.

அப்படியிருக்க இப்போது எப்படி சாத்தியமாயிற்று.

Advertisement

எப்படியும் மனோரஞ்சனுக்கு மருத்துவ உதவி தேவைப்படும்.

அதை சாக்கிட்டு செல்லலாம் என்ற முடிவில்தான் இருந்தாள்.

ஆனால் அவளோ, கிருஷ்ணாவோ எந்த முயற்சியும் எடுக்காமலே அவர்கள் வீட்டிற்கு அழைப்பு வந்துவிட்டது.

அதுவும் குடும்பத்தலைவர் தேவேந்திரன் கூறிய பிறகு அதற்கு மாற்றுக்கருத்து யாரிடமும் இருந்து வராது என்று கிருஷ்ணா கூறியிருக்கிறான்.

தேவேந்திரன் எப்போதும் எதிலும் தலையிடுவதில்லை.

ஆனால் அவர் எதையாவது மறுத்துக் கூறினாலோ, அல்லது நடக்க வேண்டும் என்று சொல்லிவிட்டாலோ அவர் வீட்டில் யாரும் மறுக்க முடியாத அளவிற்கு உறுதியாகத்தான் அவர் கூறுவார்.

சித்தரஞ்சன் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்று பிடிவாதமாக இருந்ததால்தான் அதைக் காரணம் காட்டி மனோரஞ்சனுக்குத் திருமணம் செய்ய சம்மதம் வாங்கினார் சகுந்தலா.

இல்லை என்றால் இத்தனை சின்ன வயதில் அவனுக்குத் திருமணம் வேண்டாம்.

முதலில் படிப்பைப் பார்க்கட்டும். பிறகு தொழிலைக் கவனித்து பொறுப்பு வரட்டும். அதன் பிறகு செய்து கொள்ளலாம் என்று மறுத்திருப்பார்.

அப்போதுமே முழு மனதுடன் அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. வேறு வழியில்லாமல் தான் தலையாட்டினார்.

ஆனால் அதன் பிறகு மகனின் திருமண வாழ்க்கையைக் கண்ட பிறகு எதற்கு சம்மதம் சொன்னோம் என்று அவர் வருத்தப்படாத நாளில்லை.

அதுவும் மருமகள் லலிதா திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்ளும் முடிவில் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தான் மகன் முகத்தில் தப்பித்த உணர்வைக் கண்டார்.

இதோ மரணம் வரை சென்று திரும்பியிருக்கும் மகனது முகத்தில் இப்போது சில நாட்களாக ஒரு ஒளியைக் காண்கிறார்.

மகனைக் காப்பாற்றியவள் என்ற நல்ல அபிமானம் அவள் மீது.

ஏனோ மகன் பிழைக்க அவள்தான் காரணம் என்று அவர் நிச்சயம் எண்ணினார்.

அவள் இங்கே வருவதற்கு முன்னர் மனோரஞ்சனின் நிலைமையைப் பற்றி கவலைக்கிடம் என்றுதான் ஜெயச்சந்திரன் கூறியிருந்தார்.

அவள் அவனது அறைக்குச் சென்றுவிட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே மனோரஞ்சனுக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் வந்துவிட்டது.

அதனால் அவள் மீது அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை.

அத்துடன் மகனும் அபர்ணாவிடம் பிரியமாகப் பேசுவதைக் கண்டவர் அவளே மருத்துவ உதவிக்கு வரவேண்டும் என்று நண்பன் ஜெயச்சந்திரனிடம் கேட்டுக்கொண்டார்.

இது எதையும் உணராத அபர்ணா இன்னும் ஆச்சர்யத்தில் இருந்து மீளவில்லை.

சித்தரஞ்சனுக்குமே இது ஆச்சர்யமான விசயம்தான்.

இதற்கெல்லாம் பின்னணியில் அபர்ணாதான் இருக்கிறாள்.

அவள் தான் கிருஷ்ணா மூலம் தூது விட்டு ஜெயச்சந்திரனை பேச வைத்திருக்கிறாள் என்று எண்ணினான்.

அவள் ஏதோ திட்டத்துடன் தான் தன் வீட்டிற்குள் நுழைய நினைக்கிறாள் என்று அவனுக்குத் தோன்றியது.

ஆனால் தான் இருக்கும் இடத்தில் அவளது திட்டம் எதுவும் பலிக்காது என்றாலும், அவளை எச்சரித்து வைக்க எண்ணினான்.

சிற்றுண்டி சாலையில் கூட்டம் அவ்வளவாக இல்லை.

இருந்தும் ஓர் ஓரத்தில் போய் அமர்ந்தான். அவளும் அவன் எதிரே போய் அமர்ந்தாள்.

“என்ன திட்டத்தோட எங்க வீட்டுக்கு வர்றேன்னு எனக்குப் புரிஞ்சுப்போச்சு.” அமர்த்தலான குரலில் கூறினான்.

அவள் நிதானமாக அவனை ஏறிட்டாள்.

“என்ன எதுவுமே பேசாமல் இருக்கே? உண்மை தெரிஞ்சுடுச்சேன்னு பயமா?”

“எனக்கு என்ன பயம் சார்? அதுதான் உங்களுக்கு நான் எதற்கு உங்க வீட்டுக்கு வர்றேன்னு புரிஞ்சுடுச்சே. அப்புறம் நான் எதுக்கு பேசிக்கிட்டு.”

“ஏய் என்ன நக்கலா?” கோபத்தில் எகிறினான்.

“நான் ஏன் சார் நக்கல் செய்யப்போறேன். நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பெரிய டாக்டர் தான் என்னை கூப்பிட்டு உங்க வீட்டிற்கு வேலைக்குப் போக சொன்னார். நானும் மறுத்தேனே.”

“நீ மறுத்த லட்சணைத்தான் நானும் பார்த்தேனே?”

“நீங்க என்ன வேணா நினைச்சுக்குங்க. எனக்குப் பிரச்சினையில்லை.”

“அது எப்படி பிரச்சினை இல்லாமப் போகும்? அங்கே வந்து நிம்மதியா இருந்துடலாம்னு நினைச்சியா? நான் அந்த வீட்டில் இருக்கிறேங்கிறதை மறக்காதே?”

“அது எப்படி சார் மறக்க முடியும்? அது உங்க வீடு. நீங்க அங்கதானே இருப்பீங்க?”

“அப்ப எனக்காகத்தான் அங்கே வர்றேன்னு சொல்லு.” பொடி வைத்துப் பேசினான்.

“எனக்குப் புரியலை.”

“என்ன புரியலை. நடிக்கறியா? நீ எனக்காகத்தான் அங்கே வர்றேன்னு சொல்றேன்.”

“உங்க தம்பிக்குதானே ஆக்சிடென்ட் ஆச்சு? உங்களுக்கு என்னாச்சு?”

“என்ன நக்கலா?”

“இல்ல சார். உங்க தம்பிக்குதானே ஆக்சிடென்ட் ஆகி கால் முடியாமல் இருக்காரு. அவருக்கு வைத்திய உதவி செய்யத்தானே என்னை உங்க வீட்டுக்குப் போகச் சொல்லி பெரிய டாக்டர் சொன்னாரு. அதான் கேட்டேன்.” பவ்யமாகக் கூறினாள்.

ஆனால் அவள் முகத்தில் கிண்டல் தொனித்தது.

அவன் அவளை முறைத்துப் பார்த்தான்.

“பேசிட்டீங்களா சார். எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் கிளம்பறேன்.” என்றவள் எழுந்தாள்.

“நீ என்ன நினைச்சு எங்க வீட்டுக்கு வர்றியோ அது நடக்காது.”

“நான் என்ன நினைச்சேன்.”

“நடிக்காதே. மனோக்கிட்ட உன் பருப்பு வேகலை. எதனாலோ உன்னை அண்ணின்னு சொல்லிட்டான். அதான் அதை சாக்கா வச்சுக்கிட்டு வர்றே. உன்னைப் பத்தி நல்லாத் தெரியும். பணம் இருந்தால் பசை மாதிரி ஒட்டிக்குவே.”

அவள் சிறிது நேரம் கண் மூடித் தன்னை நிதானித்தாள்.

“இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க?”

“நீ எனக்காகத்தான் வர்றே. ஆனால் என்கிட்டே உன் பாச்சா பலிக்காது. நீ எத்தனை நாடகம் போட்டாலும் நான் உன்கிட்ட மயங்க மாட்டேன். அதனால் வீண் முயற்சியைக் கைவிட்டுவிட்டு ஊர் போய் சேரு.”

“அதுதான் என்கிட்டே மயங்க மாட்டேன்னு சொல்லிட்டீங்க. அப்புறம் உங்களுக்கு என்ன?”

“இல்ல. உன்னை மாதிரி ஒருத்திக்கு என் வீட்டில் இடம் கொடுக்க நான் விரும்பலை.”

“அப்ப உங்க அப்பாக்கிட்ட போய் சொல்லுங்க.”

“என்னன்னு?”

“நான் பள்ளிக்கூடத்துல படிக்கும்போதே ஒரு பணக்காரனோட ஓடிப்போயிட்டேன். பெத்த புள்ளையை தம்பின்னு சொல்லிக்கிட்டு திரியறேன். இதை எல்லாம் நீங்கதானே சொன்னீங்க. அதை சொல்லித் தடுத்துக்குங்க.”

“என்ன நான் செய்ய மாட்டேன்னு நினைக்கறியா?”

“அதுதான் சார் சொல்றேன். என்கிட்டே பேசறது வீண். நீங்க உங்க அப்பாக்கிட்டயே பேசுங்க. இல்லை பெரிய டாக்டர்கிட்ட பேசுங்க. உங்க பையனுக்கு வலை விரிக்கப் பார்த்தா. இப்ப உங்களோட நான் வசதின்னு தெரிஞ்சதும் எனக்கு வலை விரிக்கிறதுக்கு வர்றான்னு. எதை வேண்டுமானாலும் சொல்லுங்க.” என்றவள் நிதானமாய் அந்த இடத்தை விட்டு வெளியேற முயன்றாள்.

“நீ ஒருவேளை எங்க வீட்டுக்கு வந்தால், நான் வீட்டை விட்டுப் போறேன். தயவு செய்து என்னை விட்டுடுங்கன்னு உன் வாயாலேயே சொல்ல வக்கிறேன்.”

“அப்படியா சார். முடிஞ்சா செய்யுங்க. இங்கே நானும் ஒரு சவால் விட்டா நல்லாருக்கும்ல. நீ வீட்டை விட்டுப் போக வேண்டாம்னு உங்களை என்கிட்டே கெஞ்ச வக்கிறேன்.”

“அதெல்லாம் உன் கனவுல தான் நடக்கும்.”

“முடிஞ்சா தடுக்க முயற்சி செய்யுங்க. ஆல் த பெஸ்ட்.” என்றவள் சென்றுவிட்டாள்


தேவேந்திரன் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு மனோரஞ்சனின் அறைக்கு மீண்டும் சென்றார்.

“என்னப்பா இன்னும் வீட்டிற்கு கிளம்பலையா?”

“இதோ கிளம்பனும்பா. உனக்குத் துணையா ஒரு நர்சை ஏற்பாடு பண்ணச் சொன்னேன் சந்திராக்கிட்ட. அது சம்பந்தமா அவன்கிட்ட பேசறதுக்காகத்தான் போனேன்.”

வேண்டாம் என்று அவனால் மறுக்க முடியவில்லை.

கூடவே இருந்து பார்த்துக்கொள்ள மனைவியும் இல்லை.

தாயார் என்றுமே உடன் இருந்து கவனித்துக்கொண்டதில்லை.

இப்போது மட்டும் கவனித்து விடவாப் போகிறார்.

அவன் நடமாடும் நிலையில் இல்லை எனும்போது அவனாலும் மறுக்க இயலவில்லை.

“சரிப்பா. இப்ப வீட்டுக்குப் போங்க. அதுதான் அண்ணன் இருக்கான்ல. அவன் என்னை அழைச்சுட்டு வந்துடுவான்.”

“சரி மனோ. நான் கிளம்பறேன்.”


தான் இருந்த அறைக்கு வந்தாள் அபர்ணா.

மதன்ராஜ் உறங்கிக்கொண்டிருந்தான். அவன் விழித்து எழுவதற்குள் தான் முதலில் கிளம்பிவிடுவோம். அதன் பிறகு அவனை எழுப்பிக் கொள்ளலாம் என்று உடைமைகளை எடுத்து வைத்தாள்.

பெரிதாக ஒன்றுமில்லை. மதன்ராஜ் மற்றும் அவளுடைய உடைகள் மட்டும்தான்.

அவள் கை வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும், மனம் சித்தரஞ்சனிடம் பேசியதையே நினைத்துக்கொண்டிருந்தது.

எதற்காக தன் மீது இத்தனை கோபம் அவனுக்கு? அவளுக்குப் புரியவில்லை.

அவன் மற்றவர்களிடம் இப்படிப் பேசி பார்க்கவில்லை.

சொல்லப்போனால் மற்ற பெண்களிடம் அவன் எதுவும் பேசவேயில்லை.

மனோரஞ்சனிடம் பேசும் பொன்னி கூட சித்தரஞ்சனைக் கண்டால் ஒதுங்கித்தான் போகிறாள். தன் பார்வையாலேயே மற்றவர்களை அப்படியே ஒதுக்கிவிடுகிறான்.

அப்படி தான் ஒதுங்கிப் போகாததுதான் அவனுக்குக் கோபத்தை உண்டு பண்ணுகிறதோ? அவளுக்குப் புரியவில்லை.

அவனுக்காகப் பார்த்தால் சரண்யாவை அந்த வீட்டில் எப்படி கொண்டு போய் சேர்ப்பது?

எந்த திட்டமும் மனதில் இல்லை.

தான் அந்த வீட்டிற்குள் நுழைந்துவிட்டால் மட்டும் சரண்யாவை மனோரஞ்சனோடு சேர்த்து வைத்துவிட முடியுமா? தெரியாது.

ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கை.

இப்போது அவர்கள் வீட்டிற்குள் போக வேண்டும் என்று அவள் நினைத்தாள் தான்.

ஆனால் அதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அதே போன்று ஏதாவது நடந்து சரண்யா அந்த வீட்டிற்கு மருமகள் ஆக வேண்டும் என்ற விதி இருந்தால் நிச்சயமாக யாராலும் அதைத் தடுக்க முடியாது.

அவளுக்கு அப்படி ஒரு வாழ்க்கை காத்திருப்பதால்தான் மனோரஞ்சனுக்குத் திருமண வாழ்க்கை இப்படி விவாகரத்தில் வந்து முடிந்திருக்கிறது.

மனோரஞ்சனும் சரண்யா மீது காதல் கொண்டுள்ளான்.

சரண்யா குணமாகும் நாட்கள் தூரமில்லை.

ஓரளவிற்கு இப்போதே அவளிடம் மாற்றம் தெரிவதாக அவளுக்கு சிகிச்சை கொடுக்கும் மருத்துவர் தெரிவித்திருந்தார்.

அவளைப் போய் பார்க்க வேண்டும்.

ஆனால் அதற்கு இது சரியான நேரமில்லை.

இங்கு வந்த உடனே போய் பார்த்திருக்க வேண்டும்.

இப்படி மனோரஞ்சன் வீட்டிற்குத் தான் உடனடியாகக் கிளம்ப வேண்டும் என்று அவளுக்கு முன்கூட்டியே தெரியாதே.

இப்போது சரண்யாவைக் காண தான் கிளம்பினால் நிச்சயமாக சித்தரஞ்சன் தன்னைக் கண்காணிப்பான். தான் யார் என்று அவனுக்குத் தெரிந்துவிட்டால் அவ்வளவுதான்.

ஏற்கனவே சரண்யாவை மறுத்தவர்கள்தான் அவனும், அவனது தாயும். இப்போது தேவேந்திரன் மீது கொஞ்சம் நம்பிக்கை பிறந்திருக்கிறது.

மகன் வாழ்வு இப்படி ஆகிவிட்டதை நினைத்து மிகவும் வருத்தத்தில் இருப்பவர் அவர்.

அத்துடன் அவனுக்கு விபத்தும் ஏற்பட்டுவிட்டது.

இந்த நிலையில் போய் அவள் மனோரஞ்சன், சரண்யா இருவரின் திருமணத்தைப் பற்றி பேச்செடுக்க முடியாது.

காயம் ஆற அவர்களுக்குக் கொஞ்ச அவகாசம் கொடுக்க வேண்டும்.

அந்த காலத்திற்குள் சரண்யாவிற்கும் குணமாகிவிட வேண்டும். வேண்டிக்கொண்டாள்.

“அப்பு. என்ன கிளம்பிட்டியா? இன்னொரு தரம் அங்கே போகனுமான்னு யோசியேன்.”

திடீரென்று அறைக்குள் வந்து நின்ற கிருஷ்ணாவைக் கண்டு அவளுக்குக் கோபம்தான் வந்தது.

இது செவிலியர்கள் தங்கும் அறை. இங்கே அவன் வந்து நிற்பதைக் கண்டால் அவனைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?

இந்த மருத்துவமனையின் தலைவரின் மகன். இப்படி பொறுப்பற்று நடந்து கொள்ளலாமா?

“சார். இங்கே ஏன் வந்தீங்க?” படபடப்புடன் கேட்டாள்.

“நான் கேட்டதுக்குப் பதில் சொல்லாமல் எதுக்கு வேற பேசறே?”

“நான் இங்கே வந்த காரணம் தெரிஞ்சும் இப்படி பேசறீங்களா சார்?”

“சும்மா சார் சார்னு கூப்பிட்டு எரிச்சல் படுத்தாதே. இப்பதான் இங்கே யாருமில்லையே. நீதான் இனி இங்கே வேலை பார்க்கப் போவதுமில்லை. அப்புறம் என்ன?”

“மறந்துட்டீங்க சார். உங்க ஹாஸ்பிட்டல் சார்பாதான் நான் அங்கே வேலைக்குப் போவதே.”

“நான் வேற அந்த திமிர் பிடிச்ச சித்தரஞ்சன் வீட்டிற்கு வரமாட்டேன். உனக்கு ஏதாவது பிரச்சினைன்னா என்ன பண்ணுவே?”

“ஓ. நீங்கதான் என்னோட எல்லா பிரச்சினைகளுக்கும் துணையா இருந்து பார்த்துக்கிட்டீங்களோ?”

“இல்லதான். ஆனாலும் என்னை நம்பித்தான், நான் இருக்கிற தைரியத்தில்தான் உன்னை இங்கே அனுப்பி வச்சிருக்காங்க.”

அவள் அமைதியானாள். அதுவும் உண்மைதான்.

அவள் எதற்காக இங்கே வருகிறாள் என்று தெரிந்தாலும், அவளுக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிடுமோ என்ற பயம் ராஜலட்சுமி அம்மாளுக்கு.

அதன் பிறகு நவீன் பிரசாத் கிருஷ்ணா பற்றிக் கூற, அவரே அவனோடு பேசினார்.

அதன் பிறகுதான் அவளை இங்கே அனுப்பி வைக்க சம்மதம் தெரிவித்தார்.

அப்படி ஏதாவது பிரச்சினை என்றால் கூட அபர்ணா தன்னைக் காத்துக்கொள்வாள்.

அவளுக்குத் தற்காப்பு கலைகள் அத்துப்படி. இருந்தாலும் அவர்களுக்கு பயம்.

“அப்பு. ஐ லவ் யூ அப்பு. என்னை விட்டுட்டுப் போயிடாதே அப்பு. நான் உன் மேல் உயிரையே வச்சிருக்கேன் அப்பு.”

“எருமை எருமை. உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன். வெளியில் காலடி சத்தம் கேட்குது. யாரோ வந்துட்டு போயிருக்காங்க. நீ இப்படி விளையாட்டுக்குப் பேசறதை அவங்க தப்பா நினைச்சுட்டா? எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? இப்படி பேசாதன்னு.” என்றவள் அவன் தலையில் ஓங்கிக் கொட்டினாள்.

“ஓ. காட். இந்த ஒட்டக சிவிங்கியை கொஞ்சம் குள்ளமா பொறக்க வச்சிருக்கலாமே. இவகிட்ட குட்டு வாங்கி குட்டு வாங்கி நான் குள்ளமா போயிடுவேன் போலவே.”

“இப்படி விளையாடக்கூடாதுன்னு உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன். எனக்குப் பிடிக்காதுன்னு தெரியும்ல.”

“அப்புறம் நீ என்னை சார் சார்னு கூப்பிட்டு வெறுப்பேத்தினால் என்ன செய்வேன்? கண்டிப்பா நான் உன்னை லவ் பண்ண மாட்டேன் தாயே. பயப்படாதே. அப்புறம் என்னை தலையில் குட்டி, அடித்து என்னைக் காயப்படுத்தும் பெண் எனக்கு வேண்டாம். எனக்கெல்லாம் அன்பா, அனுசரணையா…”

“கிடைப்பாள் கிடைப்பாள்.”

“அப்பு இது வாழ்த்தா? இல்லை சாபமா? நான் எப்படி எடுத்துக்கொள்ள.”

“நீ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்.”

“விளையாட்டுக்குக்கூட பேசக்கூடாதா?”

“பேசக்கூடாது.”

“ஏன் உன்னோட கண்ணன்தான் உனக்கு ஐ லவ் யூ சொல்லனுமா?”

அவன் கேட்டதும் திகைத்தாள். அவன் விளையாடவில்லை. அவன் முகம் அவள் பதிலை எதிர்நோக்கியிருந்தது.

“என்ன உளர்றே?”

“நான் உளரலை அப்பு. நீதான் உளறி வச்சே.”

“எப்ப உளறினேன். என்ன உளறினேன்.”

“எப்பவாவது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது கண்ணான்னு உளறியிருக்கே.”

“அட அசடே அதைத் சொல்லறியா? அது ராஜிம்மா வீட்டில் வெண்ணை திருடிய கண்ணனை வரைஞ்சு வச்சிருக்காங்களே மறந்துட்டியா? அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதோட நான் வளர்ந்த இல்லத்திலும் கண்ணனோட சிலை இருக்கும். உனக்கும் தெரியும்தானே?”

“ஓ. அப்படியா?”

“ஆமாம். அப்படித்தான். நீ கிளம்பு. நான் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு கிளம்பனும்.”

“சரி வா.”

அப்போது திடீரென்று மதன்ராஜ் “அம்மா” என்று அலறிக்கொண்டு எழுந்தான்.

அவனருகில் ஓடிப்போன அபர்ணா அவனை அணைத்துக்கொண்டவள், ஆறுதலாய் தட்டிக்கொடுத்தாள்.

சிறுவன் இறந்துபோன தன் பெற்றோரை கனவில் கண்டுவிட்டான் போலும்.

அவளுக்கே எரிந்து கரிக்கட்டைகளாக இருந்த குமரனையும், கலைவாணியையும் கண்டபோது பேரதிர்ச்சியாக இருந்தது. சிறுவனுக்கு எப்படியிருந்திருக்கும்.

“அப்பு. இவன் பேசறானா?”

“ஆமாம். நாங்க வந்த பஸ் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியில் அவனுக்குப் பேச்சு வந்துடுச்சு. நானே எதிர்பார்க்கலை.”

“அப்புறம் ஏன் அவன் இத்தனை நாளா பேசலை?” புரியாமல் கேட்டான்.

“எல்லாத்துக்கும் நீதான் காரணம். அவசரக்குடுக்கை. நீதானே உங்கப்பாக்கிட்ட பெத்தவங்க இறந்த அதிர்ச்சியில் மதுவுக்குப் பேச்சு போயிடுச்சுன்னு சொன்ன. எனக்கும் அப்ப உன்னை மறுத்துப் பேச முடியலை. அத்தோட நாங்க புதுசா வந்திருக்கிறதால் யாரும் எங்களைப் பற்றி விசாரிக்க விரும்பி மதுவை நோண்டக்கூடாது இல்லையா? அதனால் நீ சொன்னதை அப்படியே விட்டுட்டேன்.”

“சரி. சரி. இப்ப நீ கிளம்பப் போறே. திரும்பத் திரும்ப சொல்றேன். கவனமா இரு.”

“ஏய். நான் காட்டுக்கா போறேன்? தேவேந்திரன் சாரோட வீட்டுக்குத்தானே போறேன்.”

“அதுதான் எனக்குப் பயமா இருக்கு? உன்கிட்ட கேன்டீன்ல ஏதோ பேசிக்கிட்டிருந்தானே அந்த ரஞ்சன். என்ன சொன்னான்?”

“ம். இனி எனக்கு அவர்தானே முதலாளி. சம்பளம் பத்திப் பேசினார்.”

“ஏய்  சீரியசாதான் சொல்றியா?”

“இல்லன்னா மட்டும் என்ன பேசினோம்னு சொல்லிடப்போறேனா?”

சொல்ல மாட்டாள். பிடிவாதக்காரி.

“சரி. நீ கிளம்பும்போது பார்க்கிறேன். இப்ப மதுவைக் கிளப்பு.” என்று விடைபெற்றான் அவன்.

வெளியேறினாலும் கண்ணனுக்கு அவள் கொடுத்த விளக்கத்தை அவன் நம்பத் தயாரில்லை. கண்ணன் என்று பேசும்போது அவள் முகம் ஒளிர்ந்தது.

ஓரளவிற்குத்தான் அவளைப் பற்றித் தெரியும்.

அதனால் கண்ணன் அவளது சின்ன வயது தோழனாக இருப்பான் என்று அவனுக்குத் தோன்றியது.

நவீன் பிரசாத்துக்கும் கண்ணனைப் பற்றி தெரியவில்லை.

ராஜலட்சுமி குடும்பத்தினர் போன்றே அவனும் அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்ற வேண்டுதலுடன் அங்கிருந்து சென்றான்.


மனோரஞ்சனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு ஆகிவிட்டது.

அபர்ணாதான் தன்னைக் கவனித்துக்கொள்ள வீட்டிற்கு வரப்போகிறாள் என்ற உடன் மனோரஞ்சனுக்கு ஆச்சர்யம், கூடவே மகிழ்ச்சி.

அதை வெளிப்படையாக அவளிடம் காட்டவும் செய்தான்.

மனோரஞ்சனுக்குக் கொடுக்க வேண்டிய மருந்துகள், அவனை எப்படி கவனித்துக்கொள்வது பற்றி ஜெயச்சந்திரன் பாடம் எடுத்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவளும் கவனமுடன் கேட்டுக்கொண்டாள்.

மருத்துவமனை ஊழியர்கள் சக்கர நாற்காலியில் மனோரஞ்சனை வைத்து அழைத்து வந்தனர்.

அவனை காரின் பின்னிருக்கையில் அமர வைத்தார்கள்.

“மனோ. அப்படியே படுத்துக்கோ.” என்றவன் டிக்கியைத் திறந்துவிட்டான்.

சக்கர நாற்காலியை அதில் வைத்தனர்.

“உன்னோட பையை வைக்கிறதுக்கென்ன?” எரிச்சல் குரலில் கூறினான் சித்தரஞ்சன்.

அபர்ணா தன்னுடைய பொருட்களை டிக்கியில் வைத்தாள்.

அவன் அபர்ணாவிடம் எரிச்சலாகப் பேசியது கண்டு கிருஷ்ணா பல்லைக்கடித்தான்.

இங்கேயே இத்தனை பேர் இருக்கும்போது இப்படி நடந்துகொள்கிறானே?

அவன் வீட்டில் இன்னும் எப்படி நடந்து கொள்வானோ? கவலை கொண்டது அவன் மனம்.

முன்பக்கம் டிரைவர் சீட்டில் ஏறியமர்ந்த சித்தரஞ்சன் முன்பக்கக் கதவைத் திறந்து விட்டு “இரண்டு பேரும் ஏறுங்க.” என்றான்.

அவள் தயங்கினாள்.

“இல்லை. நாங்களும் பின்னேயே.” என்று இழுத்தாள்.

“அங்கே மனோ கொஞ்சம் வசதியா வரட்டும். நீ இங்கேயே உட்காரு.” குரலைத்தணித்துக் கடிந்தான்.

“நான் ஆட்டோவில் வர்றேனே.” தயக்கமாய் கூறினாள்.

“உன் இஷ்டத்துக்கு முடிவு பண்ற இடத்தில் நீ இல்லை. இனி நான்தான் உனக்கு முதலாளி. நான் சொல்றதைத்தான் கேட்கனும்.”

மற்றவர்கள் பார்க்கிறார்களே என்று மதன்ராஜை ஏறச்சொன்னவள் தானும் ஏறிக்கொண்டாள்.

“வர்றேன் அங்கிள்.”

“சரிப்பா. கவனமா போ. நான் அடிக்கடி வந்து மனோவை பார்க்கிறேன்.”

“சரிங்க அங்கிள்.” என்றவன் காரை எடுத்தான்.

கிருஷ்ணா அபர்ணாவிற்குக் கையசைத்தான். அவளும் தலையாட்டி விடைபெற்றாள்.

இதை எல்லாம் சித்தரஞ்சன் கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.

அவனுக்கு கிருஷ்ணா அபர்ணாவிடம் பேசிய வார்த்தைகள் காதில் ஒலித்தன.

“அப்பு. ஐ லவ் யூ அப்பு. என்னை விட்டுட்டுப் போயிடாதே அப்பு. நான் உன் மேல் உயிரையே வச்சிருக்கேன் அப்பு.”

அவன் முகம் இறுகியது.

வீட்டு வாசலில் கார் சென்று நின்றபோது ஆரத்தியுடன் சகுந்தலா நின்றுகொண்டிருந்தார்.

காரை விட்டிறங்கிய அபர்ணா டிக்கியில் இருந்து சக்கர நாற்காலியை எடுத்து வைக்க, மனோரஞ்சனை இறக்கி அதில் அமர வைத்தான் சித்தரஞ்சன்.

அபர்ணாவைக் கண்டதும் சகுந்தலாவின் முகம் சிறுத்துப் போனது. தேவேந்திரனின் முடிவு அது. அவரால் அதை மறுக்க முடியாது.

ஒரு நர்சை ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று தேவேந்திரன் கூறியபோது அது அபர்ணாவாகாத்தான் இருக்கும் என்று அவருக்குத் தெரியாது.

இப்போது அவளை நேரில் கண்டபோது அவளது வருகை தனக்குப் பிடிக்கவில்லை என்பதை தன் முகத்தில் காட்டினார்.

அதற்கு மாறாக தேவேந்திரனின் முகத்தில் வரவேற்பாய் புன்னகை இருந்தது.     

மனோரஞ்சனை சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வாசலுக்கு வந்தாள் அபர்ணா.

“நீ கொஞ்சம் தள்ளி நில்லு. என் புள்ளைக்கு ஆரத்தி எடுக்கனும்.”

அவளும் தள்ளி நின்றாள்.

“அம்மா கொஞ்சம் பொறுங்கம்மா.” என்ற சித்தரஞ்சன்

“ஒரு வேலையைக் கூட ஒழுங்கா செய்ய மாட்டியா? அம்மா சொன்னதுமே கீழே பள்ளம் இருக்கிறதை கவனிக்காமல் அப்படியே விட்டுட்டுப் போவியா. இதுதான் நீ வேலை செய்யற லட்சணமா? ஒழுங்கா பிடி.” என்றவன் அருகில் வந்து நின்று தானும் ஒருபக்கம் பிடித்துக்கொண்டான்.

“அம்மா. ஆரத்தியை சுத்துங்கம்மா. பரவாயில்லை. இல்லன்னா தள்ளி நிற்கறேன்னு இவ திரும்ப மனோவை ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சிடுவா போல.” என்றான்.

வேறு வழியில்லாமல் சகுந்தலாவும் மகனது பேச்சைத் தட்டாமல் ஆரத்தி சுற்றினார்.

 

காதல் வளரும் ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!