Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்?

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 10.1

அத்தியாயம் – 10.1

மனோரஞ்சன் தங்குவதற்கு கீழேயே ஒரு அறை ஏற்பாடாகி இருந்தது.

அவன் அறைக்குப் பக்கத்தில் இருந்த மற்றொரு அறையில் அபர்ணா தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அவளை வேலையாட்கள் தங்குவதற்கு என்று கட்டி விடப்பட்டுள்ள ஏதாவது ஒரு வீட்டில் தங்க வைக்கலாம் என்றுதான் சகுந்தலா கூறியிருந்தார்.



Advertisement

பக்கத்தில் இருந்தால் மகனை கவனித்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்று தேவேந்திரன் இந்த அறையை ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டார்.

அவரால் கணவரின் பேச்சை மீறமுடியவில்லை.

ஆனாலும் அவள் யாரோ? எவளோ? அவளை எப்படி நம் வீட்டிற்குள் தங்க வைப்பது என்று அவர் மனம் முரண்டியது. இருந்தும் கணவரிடம் எதுவும் கூற இயலவில்லை.

Advertisement

மனோரஞ்சனின் திருமண விசயத்தில் துணை நின்ற மூத்த மகன் இப்போது தந்தை பேச்சை ஒட்டியே நடக்கவும், அவருக்கும் வேறு வழியில்லாமல் போனது.

Advertisement

மனோரஞ்சனின் மருத்துவ உதவிக்கு ஒரு பெண்ணை அழைத்து வருகிறேன் என்று மட்டுமே தேவேந்திரன் கூறியிருந்தார்.

ஆனால் நேரடியாக அபர்ணாவைக் கண்டதும் அவருக்கு அவள் வருகை சுத்தமாகப் பிடிக்கவில்லை.

அதனால்தான் ஆரத்தி சுற்றும்போது அவளிடம் எரிந்து விழுந்தார்.

Advertisement

அவளை மருத்துவமனையில் பார்த்தபோதே அவள் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டதாகவே அவருக்குத் தோன்றியது.

மற்றவர்கள் மரியாதையாக கூழைக்கும்பிடு போடாத குறையாக அவரைக் காணும்போதெல்லாம் நடந்து கொள்ள, அபர்ணா சாதாரணமாக இருந்தது அவருக்கு பெருங்குற்றமாகப் பட்டது.

மரியாதை தெரியாதவள் என்று அப்போதே மனதிற்குள் அவளைத் திட்டித் தீர்த்திருந்தார்.

இப்போது அவளே தன் வீட்டிற்குள் வருவாள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

இரண்டு வயதுப்பையன்கள் இருக்கும் இடத்தில் இந்த மேனாமினுக்கியை போய் வேலைக்கு அழைத்து வந்திருக்கிறாரே என்று கணவர் மீது கோபப்பட்டாலும் அதை கணவரிடம் காட்டவில்லை. காண்பிக்கவும் முடியாது.

ஆனாலும் பேரழகுடன் இருந்த அபர்ணாவைக் கண்டு அவருக்கு அடிவயிற்றில் திகில் பரவியது.

‘இவள் இன்னும் எத்தனை நாட்கள் இங்கே தங்கப்போகிறாளோ? தெரியலையே. ஆண்டவா இதற்காகவாவது என் பையனுக்கு சீக்கிரம் குணமாகவேண்டும்.’ என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டார்.

மனோரஞ்சனை அவனது அறையில் விட்டுவிட்டு அவனுடைய மருந்துகளை எல்லாம் அங்கிருந்த அலமாரியில் அடுக்கி வைத்தாள் அபர்ணா.

“அம்மாடி அபர்ணா.”

தேவேந்திரன் அழைக்கவும் “நான் இங்கே இருக்கேன் சார்.” என்று குரல் கொடுத்தாள்.

அவரும் மகனுடைய அறைக்குள் நுழைந்தார்.

“என்னம்மா வந்த உடனே வேலையை ஆரம்பிச்சிட்டியா?”

“சும்மா மருந்துகளை எல்லாம் எடுத்து வச்சிட்டு இருந்தேன் சார்.”

“சரிம்மா. வச்சிட்டு வா. உன் சாமான்களை எல்லாம் பக்கத்து அறையில் வைக்க சொல்லியிருக்கிறேன். உன் தம்பியும் அங்கேதான் இருக்கிறான். நீ அவனைக் கூட கவனிக்காமல் இங்கே வந்திட்டே.”

“அதுதான் நீங்க எல்லாம் இருந்தீங்களே சார். அத்தோட மது இடத்துக்கு தகுந்த மாதிரி நடந்துக்குவான். இது அவனுக்குப் பழக்கமான விசயம்தான். அப்புறம் நானே இங்கே வேலைக்காகத்தான் வந்திருக்கிறேன். எனக்காக மத்தவங்களை வேலை வாங்க வேண்டாம் சார்.”

தயக்கமாய் கூறினாள்.

“அது என்னவோம்மா. உன்னை வேலைக்காக வந்த பெண்ணாக நினைக்கத் தோன்றவில்லை. எங்க வீட்டுப் பெண் போலவே எனக்குத் தோன்றுகிறது. நீயும் சகஜமாக இரு. சரியா?”

“சரி சார்.” அவரது இந்த அணுகுமுறையில் அவள் நெகிழ்ந்து போனாள்.

ஏற்கனவே கிருஷ்ணா மூலமாக ஓரளவிற்கு அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதுதான்.

“சரிம்மா. நீ எல்லாத்தையும் முடிச்சுட்டு வா. நான் குட்டிப்பையன்கூட இருக்கிறேன்.” என்றவர் வெளியேறினார்.

“வெல்கம் டூ அவர் ஹோம் அண்ணி.” என்று புன்னகையுடன் கூறினான் மனோரஞ்சன்.

“என்ன வந்து அரை மணி நேரம் கழிச்சு இப்படி ஒரு வரவேற்பு.”

“ஏன் அண்ணி நான் உருப்படியா இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலையா? என் அம்மாவும், அண்ணனும் இருக்கிற இடத்தில் நான் மட்டும் இப்படி பேசியிருந்தால் என்னவாகியிருக்கும்? உங்களுக்கு ஏன் இந்த கொல வெறி?”

“ஏன் மனோ? அவங்க இரண்டு பேரும் உன்னுடைய அம்மாவும், அண்ணாவும்தானே? எதற்காக அவர்களுக்கு இப்படி பயப்படறே?”

“அது என்னவோ தெரியலை அண்ணி. அம்மா அப்படியே வளர்த்துட்டாங்கன்னு நினைக்கிறேன்.”

அரவிந்தன் அவளிடம் கூறியிருக்கிறான். மனோரஞ்சன் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவன். அதிகமாக யாரிடமும் பேச மாட்டான்.

ஒரு சில பேரிடம் மட்டும்தான் பேசுவான். அண்ணன், அம்மாவிற்குப் பயப்படுவான் என்று சொல்லியிருக்கிறான்.

அவளுக்கு உடனே நவீன் பிரசாத் நினைவு வந்துவிட்டது. படித்து, மருத்துவர் ஆன பின்பும் இன்னும் சின்னக் குழந்தை போல் ராஜலட்சுமியிடம் அவன் நடந்து கொள்வது கண் முன் நின்றது.

வீட்டில் இருந்தால் அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கொள்ளாத குறையாக பின்னாடியே சுற்றுவான்.

அடிக்கடி அணைத்துக்கொள்வான். அன்னைக்கு முத்தம் கொடுத்து கொஞ்சுவான்.

தனக்கும் தரச் சொல்லி அன்னையை வம்பிழுப்பான். மடியில் படுத்துக்கொள்வான். சாப்பாடு ஊட்டி விடச்சொல்வான்.

ஆனால் இது எதுவுமே மனோரஞ்சனுக்குக் கிடைத்திருக்காது என்றுதான் அவளுக்குத் தோன்றியது.

எங்கே மகன்கள் யாரையாவது காதல் என்று இழுத்துக்கொண்டு வந்துவிடுவார்களோ? என்ற பயத்திலேயே அவர்களைத் தூர நிறுத்தி கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்.

ஆனால் காதல் எப்போது வரும், யாரிடம் வரும் என்று எல்லாம் யாரால் சொல்ல முடியும்?

செய்யாதே செய்யாதே என்று சொல்லும்போதுதான் செய்துதான் பார்ப்போமே என்ற உந்துதல் வருவது இயல்பு.

அதற்குப் பதிலாக அருகில் அமர வைத்து இது சரி, இது தவறு என்று பேசி புரிய வைத்திருந்தால் அது அவர்களை சரியாக வழி நடத்தியிருக்கும்.

இங்கு பெரியவர்களே புரிதல் இல்லாமல் நடக்கும்போது இளையவர்கள் என்னாவார்கள்?

“சரி அண்ணி. நீங்க போங்க. போய் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.”

“நான் என்ன அப்படி வேலை செஞ்சு களைச்சுப் போயிட்டேன் ரெஸ்ட் எடுக்க?” என்றவள் புன்னகைத்தாள்.

“சரி. இப்பதான் நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க. போய் உங்களுக்கு அறை எல்லாம் வசதியா இருக்கான்னாவது பாருங்களேன்.”

“நான் இங்கே வேலைக்கு வந்திருக்கிறேன். எது எப்படியிருந்தாலும் எனக்கு சரிதான்.”

“சரி. நீங்க இப்படியேதான் பேசிக்கிட்டு இருப்பீங்க. நான் ரெஸ்ட் எடுக்கனும். என்னைத் தனியா விடுவீங்களா?” என்றவன் கொட்டாவி விட்டான்.

அவனது செயலைக் கண்டு சிரித்தவள் அங்கிருந்து வெளியேறினாள்.

அவள் இளைய மகனின் அறையில் இருந்து சிரித்துக்கொண்டு வெளியேறியதைக் கண்டதுமே சகுந்தலாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

‘வந்த உடனே வேலையை ஆரம்பிச்சிட்டாளா?’ பல்லைக்கடித்தார்.

அபர்ணா அந்த அறைக்குள் நுழைந்தாள்.

நல்ல வசதியாகவே இருந்தது.

நடுவில் ஒரு கட்டில். சுவரில் பதிக்கப்பட்டிருந்த அலமாரி. அங்கேயே அமர்ந்து கொள்ள வேண்டுமானால் நாற்காலி, சோபா.

இப்படி ஒரு ஏற்பாட்டை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

தேவேந்திரன் மதன்ராஜிடம் அமர்ந்து கொண்டிருந்தார். அவளைக் கண்டதும் புன்னகைத்தார்.

“என்னம்மா வேலை முடிச்சு வந்திட்டியா? என்ன உனக்கு இந்த அறை பிடிச்சிருக்கா? எது வேண்டுமானாலும் கேளும்மா.”

“இதுவே அதிகம் சார்.” என்றாள் அமைதியாய்.

“நான் திரும்பவும் சொல்றேன். நீ இந்த வீட்டுப் பொண்ணு மாதிரி. இங்க இருக்கிற வரைக்கும் உனக்கு அந்த நினைப்புதான் இருக்கனும். சரியா?”

“சரி சார்.”

“சரிம்மா. நீ ரெஸ்ட் எடு. அப்புறமா பார்க்கலாம்.” என்றவர் சென்றுவிட்டார்.

“மது. பாத்ரூமில் போய் கை கால் கழுவிட்டு வா.” என்று அவனை அனுப்பினாள்.

“என்ன எல்லாம் சௌகரியமா இருக்கா?” என்ற குரலோடு உள்ளே நுழைந்தார் சகுந்தலா.

அவர் இப்படி திடுதிப்பென்று வந்து நிற்பார் என்று அவள் யோசிக்கவில்லை.

தன்னைக் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிப் போவார் என்றுதான் அவள் நினைத்திருந்தாள்.

“வாங்க மேடம். எல்லாம் ஓகே மேடம்.”

“எப்படி ஓகே இல்லாமல் போகும்? நீ இதுக்கு முன்னாடி இப்படி வசதியான இடத்தில் இருந்திருக்க மாட்டே. அதுக்காக இங்கேயே இருந்திடலாம்னு நினைச்சிடாதே. அவருக்கு யாரை எங்கே வைக்கனும்னு தெரியவே மாட்டேங்குது.”

அவளுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. இப்படி எல்லாம் பேசாமல் இருந்தால் அவர் சகுந்தலா அல்லவே.

“அப்புறம் இந்த வீட்டில் உன் இஷ்டத்துக்கு சுத்தக் கூடாது. நைட்டி கியிட்டின்னு போட்டுக்கிட்டு அலையக்கூடாது. தேவை இல்லாமல் இந்த வீட்டில் எந்த இடத்திற்கும் போகக் கூடாது. என்ன புரியுதா?”

“புரியுது மேடம்.”

“அப்புறம் இந்த வீட்டில் வயசுப்பசங்க இருக்காங்க. அதனால் …” என்று அவர் பேசி முடிக்கும் முன்னே குளியல் அறையில் இருந்து வந்த மதன்ராஜ் அவரைக் கண்டு தயங்கி நின்று, பின்னர் தன் சகோதரியின் பின்னே வந்து நின்றான்.

“இதப் பாரு. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”

“அம்மா.” என்ற சித்தரஞ்சனின் அழைப்பு அறைக்கு வெளியில் கேட்டது.

“நான் சொன்னதெல்லாம் நினைவில் இருக்கட்டும்.” என்று கூற வந்ததை முழுமையாகக் கூறாமல் கிளம்பினார்.

“இதோ வந்துட்டேம்பா.”

“இருங்கம்மா. நான் வர்றேன்.”

அவர் வெளியில் செல்லும் முன்னர் அவனும் உள்ளே வந்தான்.

“அம்மா. உங்களுக்குள்ள சரியான அறிமுகம் கிடையாது. நீங்க ஹாஸ்பிட்டலுக்கு வந்தப்ப இவங்க அங்கே வேலை பார்ப்பவங்க. அதனால் உங்களுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை. ஆனால் இனி இவங்க நம்ம வீட்டில் இருக்கப் போறாங்க. இவங்க பெயர் அபர்ணா. இது அவங்களோட தம்பி மதன்ராஜ்.”

“தம்பியா?” என்று யோசனையானார்.

அபர்ணாவிற்குப் புரிந்தது. மதன்ராஜைக் கண்டதும் தன் மகன் என்று நினைத்து, தனக்குத் திருமணம் ஆகிவிட்டதாக நினைத்து கொஞ்சம் ஆசுவாசப்பட்டிருப்பார்.

அதனால்தான் தான் சொல்ல வந்ததை விட்டுவிட்டுக் கிளம்பினார். இப்போது மீண்டும் சித்தரஞ்சன் வந்து மதன்ராஜ் யார் என்று சொன்னதும் அவருக்கு பக்கென்றிருக்கும்.

மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்.

“சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல. பார்த்து நடந்துக்க.” என்று கூறியவாறே மகனெதிரில் வேறு எதுவும் பேச முடியாமல் வெளியேறினார்.

இதை எல்லாம் அவள் எதிர்பார்த்துத்தான் இருந்தாள். அத்தனை எளிதாக சகுந்தலா வேற்று ஆளை வீட்டில் விட்டுவிடுவாரா என்ன?

தான் என்ன செய்தாலும் அதில் என்ன குறை கண்டுபிடிக்கலாம் என்று கண்காணித்துக்கொண்டேதான் இருப்பார் என்று அவளுக்குத் தோன்றியது.

அவளும் குளியலறைக்குச் சென்று குளித்துவிட்டு வந்தாள்.

“அம்மா உங்களை அய்யா கூப்பிட்டாங்க.” என்று ஒரு வேலையாள் வந்து அழைத்தான்.

“சரி வர்றேன்ப்பா.” என்றவள் மதன்ராஜை அழைத்துக்கொண்டு அவன் பின்னே சென்றாள்.

அவன் சமையலறையைத் தாண்டி வெளிப்பக்கம் சென்றான்.

அங்கே வீட்டிற்குப் பின்புறம் இருந்த ஒரு மரத்தடியில் போட்டிருந்த சிமெண்ட் பலகையில் அமர்ந்திருந்தார் தேவேந்திரன்.

“வாம்மா. ஏன் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கிறே?”

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே சண்முகம் அவர்களுக்கு தேநீர் கொண்டு வந்து விட்டார்.

“இவன்தான் சண்முகம். இவன் புண்ணியத்தால்தான் நாங்க வயிராற சாப்பிட்டுக்கிட்டிருக்கோம்.” என்று சண்முகத்தை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

“ஏன்யா மாத்தி சொல்றீங்க. நர்சம்மா. ஐயா புண்ணியத்தால்தான் என் குடும்பமே நல்லாருக்கு.” என்று பவ்யத்துடன் கூறினார்.

“தம்பியும் டீ குடிப்பாருல்ல நர்சம்மா.” என்று கேட்டவாறே அவர்கள் இருவருக்கும் கோப்பையில் இருந்த தேநீரை கொடுத்தார் சண்முகம்.

“அண்ணே. என்னை நர்சம்மா நர்சம்மான்னு கூப்பிடவேண்டாம். சும்மா அபர்ணான்னே கூப்பிடுங்க.”

“அது எப்படிம்மா? நீங்க படிச்சவங்க.”

“பேரை சொல்றதுக்கு படிச்சவங்களாதான் இருக்கனுமா? உங்களை மாதிரி பிரியம் வச்சவங்களும் கூப்பிடலாம். சமயமறிந்து வயித்துக்கு தர்றீங்க. அதனால்தான் சார் உங்களை பத்தி பெருமையா சொல்றார்.”

அவள் சட்டென்று அண்ணா என்று அழைத்து ஒட்டிக்கொண்டது சண்முகத்துக்கும் பிடித்துவிட்டது.

“சரி அபர்ணாம்மா.”

“அண்ணா. இந்த அம்மாவை விட மாட்டீங்களா?” என்று சிரித்தாள்.

“அவன் விட மாட்டான்மா.” என்று தானும் சிரித்தார் தேவேந்திரன்.

“சார். நீங்க டீ குடிச்சிட்டீங்களா?”

“இல்லம்மா. நான் டீ, காபி எதுவும் குடிக்கிறதில்லை.”

“நல்ல பழக்கம்தான் சார். பால் குடிக்கலாமே.”

“இல்லம்மா. அதை எல்லாம் விட்டு ரொம்ப வருசமாச்சு. சரிம்மா. ஏன் நின்னுக்கிட்டிருக்கே. இங்கே உட்காரு.”

அவர் அமர்ந்திருந்த சிமெண்ட் பலகையில் அவரருகில் மதன்ராஜ் அமர்ந்திருக்க, அவன் அருகில் அமரச் சொன்னார்.

“இல்ல சார். பரவாயில்லை.”

“ஒரே வீட்டில் இருக்கப்போறோம்மா. இப்படி எப்போதுமே நின்னுக்கிட்டேவா இருக்க முடியும்?”

அவர் சொல்லவும், அவள் சட்டென்று அவர் எதிரே தரையில் அமர்ந்துவிட்டாள்.

“ஏன்மா தரையில் உட்கார்ந்துட்டே?”

“இந்த இடம் சுத்தமாத்தானே இருக்கு சார். அதோட இப்ப உங்களை பார்த்துப் பேசவும் வசதியா இருக்கு.”

“உனக்கு இங்கே ஏதாவது வசதிக் குறைவு இருந்தால் சொல்லிடும்மா. சந்திரா நான் ரொம்ப கேட்டுக்கிட்டேன்னுதான் உன்னை இங்கே அனுப்பி வச்சிருக்கான்.”

“அதெல்லாம் ஒன்றும் பிரச்சினையில்லை சார்.”

“உனக்கு ஏதாவது தேவைன்னாலும் என்கிட்டே தயங்காமல் சொல்லு.”

“சரிங்க சார்.”

“சரிம்மா. அப்படியே ஒரு வாக் போயிட்டு வர்றேன். என்னோட இந்தக் குட்டிப்பையனையும் அழைச்சுட்டுப்போகவாம்மா.”

“சரிங்க சார். அவன் பேர் மதன்ராஜ். நான் அவனை மதுன்னு கூப்பிடுவேன்.”

அவர்கள் இருவரும் கிளம்பினர்.

சண்முகம் அவள் குடித்த தேநீர் கோப்பையை பெற்றுக்கொள்ள கை நீட்டினார்.

“இருக்கட்டும்ணா. நானும் வர்றேன்.”

இருவரும் உள்ளே சென்றனர். கோப்பைகளை அவளே கழுவி வைத்தாள்.

“நீங்க எத்தனை வருசமா இங்கே இருக்கீங்கண்ணா?”

“என்னோட சின்ன வயசுலேயே என்னைப் பெத்தவங்க இங்கே அடைக்கலமாயிட்டாங்கம்மா. அவங்களுக்கு நான் மட்டும்தான். அம்மா இங்கேதான் சமையல் வேலை செய்வாங்க. அப்பா வெளி வேலை செய்வார். அம்மாக்கிட்ட தான் சமையல் செய்ய நான் கத்துக்கிட்டேன். அவங்க ரொம்ப நாள் என்னோட வாழ நான் கொடுத்து வைக்கலம்மா. பெத்தவங்க போன பின்னாடி இந்த குடும்பம்தான் என்னோடதுன்னு ஆயிடுச்சு.”

“அப்ப உங்களுக்கு கல்யாணம்…” என்று இழுத்தாள்.

“அது ஆயிடுச்சும்மா. முதலாளியம்மா ஊரில் இருக்கிற பொண்ணைத்தான் பெரியய்யாவும், பெரியம்மாவும் எனக்குக் கட்டி வச்சாங்க. அதுக்கு என்னவோ இங்கிருக்க சரியா வரமாட்டேன்னுட்டு. அது எங்க இரண்டு பெண் குழந்தைகளோட அங்கேயே தோட்ட வேலை பார்த்துக்கிட்டு, புள்ளைங்களை படிக்க வச்சுக்கிட்டு இருக்கும்மா.”

“அப்ப நீங்க சமையல் வேலை முடிச்சுட்டு அங்கே போயிடுவீங்களா?”

“இல்லம்மா. நான் அடிக்கடி போக மாட்டேன். மாசத்துக்கு ஒருக்கா போயிட்டு வீட்டுக்குத் தேவையானதை எல்லாம் வாங்கிக் கொடுத்துட்டு வந்துடுவேன். இங்கே முதலாளியம்மாவுக்கு கடை சாப்பாடு ஆகாது. அதனால் நான் அதிகமா போறதில்லைம்மா.”

“அப்ப அவங்க இங்கேயே வந்துடலாமேண்ணா. வீடு வாடகைன்னு செலவாகும்னு பார்க்கறீங்களா?”

“இல்லம்மா. பெரியய்யா காலத்திலேயே வேலை பார்க்கிறவங்களுக்காக இங்கேயே பக்கத்திலேயே தோப்பில் வீடு கட்டி கொடுத்திருக்காங்கம்மா.”

“சின்ன வீடுன்னாலும், அடக்கமா ஒரு குடும்பம் இருக்கலாம். அதில் எனக்கும் ஒரு வீடு கொடுத்திருக்காங்கம்மா. ஆனாலும் என் பெண்சாதி வனிதாவுக்கு என்னவோ சொந்த ஊரை விட்டு வரப் பிடிக்கலை.”

“அவளோட அவ அப்பா இருந்தார். அவரையும் பார்த்துக்க வேண்டிய கடமை இருந்தது. என் மாமனாருக்கு வனிதா ஒரே பெண். அவரும் இங்கே வந்து தங்க வசதிப்படலை. அதனால்தான் அங்கேயே தங்க சொல்லிட்டேன்மா.”

“சரிண்ணா. நான் உங்க வேலையைக் கெடுத்துக்கிட்டு இருக்கேன். நீங்க பாருங்க. நான் போய் மனோவைப் பார்க்கிறேன். அவருக்கு டீ கொடுக்கறீங்களா?”

“நான் பார்த்தப்ப சின்ன தம்பி தூங்குனுச்சும்மா.”

“சரி கொடுங்க. இப்ப நான் போய் பார்க்கிறேன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!