Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

என்னுயிரில் தணிவதுண்டோ காதல்? – 10.2

அவள் சென்ற போது மனோரஞ்சன் விழித்திருந்தான்.

“என்ன மனோ? நல்ல தூக்கமா?”

“பின்னே என்னண்ணி பண்றது? ஒரே இடத்தில் கிடக்கிற மாதிரி ஆயிடுச்சு.”

“ஏன் ஒரே இடத்தில் இருந்தால் தூங்கத்தான் செய்யனுமா? இப்ப தூங்கிட்டால் நைட் என்ன பண்ணுவே?”



Advertisement

“கொஞ்சம் கஷ்டம்தான்.”

“ஏதாவது புத்தகம் வாசி. இல்லன்னா செல்லுல பாட்டு கேளு. வாசிக்கிற பழக்கம் உண்டுதானே?”

“கிண்டல் பண்ணாதீங்க. பாடப் புத்தகத்தை மட்டும்தான் படிக்க மாட்டேன். மத்தபடி நான் நல்லா படிக்கிற பையனாக்கும்.” என்று சிரிக்காமல் சொன்னான்.

Advertisement

“ஓ. நீ அப்படிப்பட்ட அறிவாளியா?” என்று பேசிக்கொண்டே குளியல் அறைக்குள் சென்றாள்.

Advertisement

உள்ளிருந்து ஒரு குவளையில் தண்ணீரும், மற்றொரு குவளையும் கொண்டு வந்தாள்.

“இந்தா தண்ணீர். வாய் கொப்பளிச்சுட்டு டீ குடிக்கலாம்.”

“அண்ணி. இதெல்லாம் நீங்க செய்யனுமா?”

Advertisement

“இதெல்லாம் செய்யத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன்.”

அவன் யோசனைக்குள்ளானான்.

“என்ன யோசனை மனோ? இந்தா.”

அவள் சொன்னபடியே செய்தான்.

அவனுக்கு தேநீர் கொடுத்தாள்.

“மது எங்கண்ணி? என் கண்லயே படலை. அவன் என்னைத் தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலை.”

“மது உங்கப்பாவோட போயிருக்கான்.”

“அப்பாவுக்கு சின்னக் குழந்தைகள்னா பிரியம்.” என்றவன் பார்வை எங்கோ வெறித்தது.

“சும்மா தேவையில்லாமல் எதையும் யோசிக்காதே மனோ. நடந்து முடிந்ததை நினைத்து கவலைப்படறதினால் எதுவும் மாறப்போறதில்லை.”

“அதுவும் சரிதான்.”

“இவ்வளவு நேரம் எங்கேயிருந்தீங்க?”

“சண்முகம் அண்ணா அவர் குடும்பத்தைப் பற்றி பேசிக்கிட்டிருந்தார். அவர் மாமனாருக்காக அவரோட மனைவி குழந்தைகளோட அங்கேயே தங்கிட்டாங்களாம்.”

அவள் கூறியதும் சிறிது நேரம் அமைதியானான்.

“ப்ச் பாவம் அண்ணி அவர். அங்கே போய் குடும்பத்தோட இருக்கவும் ஆசை. ஆனால் இங்கே எங்களை விட்டுட்டுப் போகவும் மனசில்லை.”

“இப்ப அவரோட மாமனார் இருக்காரா?”

“இல்ல. அந்த தாத்தா இறந்துட்டாங்க.”

“அப்ப அவரோட மனைவி இங்கே வரலாமே?”

“இல்லண்ணி. இங்கே வரமாட்டாங்க.”

“ஏன்?”

“அது ஒரு பெரிய கதை அண்ணி.”

திருமணம் ஆன புதிதில் சண்முகம் யார்? அவருடைய குலம் கோத்திரம் என்று எல்லாவற்றை பற்றியும் தன் மாமியாரிடம் கேட்டார் சகுந்தலா.

“அதெல்லாம் எதுக்கு யோசிக்கிறே? பையன் ரொம்ப நல்லவன்மா. அவனோட சின்ன வயசுலேயே இங்க வந்துட்டான். இப்ப அவனைப் பெத்தவங்களும் இல்லாததால் நாங்க தான் அவனுக்கு எல்லாம்.” என்றார்.

ஆனாலும் சகுந்தலாவுக்கு சண்முகம் சமைத்ததை சாப்பிட பிடிக்கவில்லை.

“இங்க பாரும்மா. இதெல்லாம் நாங்க பார்க்க மாட்டோம். உனக்கு அவன் சமைக்கிறது சங்கடமா இருந்துச்சுன்னா இனி நீயே சமையலைப் பார்த்துக்கோ. அவன் வேணும்னா மத்த வேலைங்களைப் பார்த்துக்கட்டும். ஆனால் அவனை நிறுத்திட்டு வேற ஆளைப் போடற எண்ணம் எங்களுக்கு இல்லை. அவனும் இந்த வீட்டுப் பிள்ளை மாதிரி தான். அவனை நாங்க சமைக்க சொல்லலை. அவனா பிரியத்தில் அந்த வேலையை ஏத்துக்கிட்டான்.” என்று ஒரேயடியாக அடித்துப் பேசிவிட்டார் தேவேந்திரனின் தாய்.

மற்றவர்கள் சண்முகத்திடம் சகஜமாகப் பேசினாலும், சகுந்தலா முதலாளியின் தோரணையில்தான் பேசுவார். அதை சண்முகமும் ஏற்றுக்கொண்டார். சகுந்தலாவை மாற்ற முடியாது என்று பெரியவர்களும் அப்படியே விட்டுவிட்டனர்.

வனிதா சகுந்தலாவிற்கு உறவு முறைப் பெண்தான். மாமன் மகள் ஆவாள். ஆனாலும் வசதிக்குறைவு.

வசதிக்குறைவு என்பதால் வனிதாவுக்கு திருமணம் தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது.

அப்போது ஒரு நாள் வனிதாவின் தந்தை தன் மகள் திருமண விசயமாகப் பேச இங்கே வந்தார். அப்போதுதான் சண்முகத்தைப் பார்த்தார்.

அவருக்கு சண்முகம் என்ன ஜாதி, இனம் என்றெல்லாம் தெரியாது. அதைப் பற்றிய கவலையும் இல்லை.

இங்கே தேவேந்திரனின் பெற்றோரும் சண்முகத்திற்கு திருமணம் செய்ய பெண் பார்க்க ஆரம்பித்திருந்தனர்.

அந்த நேரத்தில் வனிதாவின் அப்பா தன் விருப்பத்தைக் கூற தேவேந்திரன் பெற்றோரும் மகிழ்ச்சியுடன் திருமணத்தை நடத்திவிட்டனர்.

மணமக்களை இங்கேயே ஒரு வீடு கொடுத்து தங்க வைத்தனர்.

ஆனால் உறவுக்காரியான வனிதா ஏழை என்பதால் ஏற்கனவே மதிக்காத சகுந்தலா, இப்போது பணம் இல்லாமல் சாதி விட்டு வேறு சாதியில் கல்யாணம் செய்து கொண்டது இளக்காரமாய் போயிற்று.

வனிதாவின் முன்பே, சண்முகத்தை அலட்சியமாய் நடத்த, அதைக் காண சகிக்காத வனிதா தன் கணவனைத் தன் வீட்டிற்கு அழைத்தாள்.

ஆனால் முதலாளியின் வீட்டிற்கு விசுவாசமாய் இருந்து விட்ட சண்முகத்தால் உடனே மனைவியோடு செல்ல முடியவில்லை.

அதனால் மனைவியை மட்டும் ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டுத் தன்னால் முடியும் போது ஊருக்குச் சென்று வருகிறார்.

இதை எல்லாம் மனோரஞ்சன் மூலம் அறிந்த அபர்ணாவிற்கு சண்முகத்தை நினைத்து வருத்தமாய் இருந்தது.

அப்போது அங்கே சித்தரஞ்சன் வந்தான்.

“அண்ணா. எனக்கு ஏதாவது படிக்க புத்தகம் கொண்டு வந்து தர்றியா? போரடிக்குது.”

“அப்படியா?” தாடை தடவி யோசித்தான்.

“என்னண்ணா யோசிக்கிறே?”

“அது ஒன்னுமில்லடா தம்பி. நீ அரியர்ஸ் வச்ச பாடப் புத்தகங்கள் எல்லாம் எங்க போட்டோம்னு யோசிக்கிறேன்.” என்றான் சிரியாமல்.

“ஐயோ. அண்ணா. பாடப்புத்தகமா? இதுக்கு நான் உன்கிட்டே எதுவுமே கேட்காமல் இருந்திருக்கலாம்.”

“அப்ப படிப்பை முடிக்கிற ஐடியா இல்லை.”

“போண்ணா. இத்தனை வருசம் பிரேக் விட்டுட்டு எப்படி படிக்கிறது?”

“மனோ. விளையாட்டில்லை. இப்ப வேண்டாம். ஆனால் நீ கண்டிப்பா விட்ட படிப்பை முடிக்கனும். சரியா.” என்றான் அண்ணனாய்.

மனோரஞ்சன் அமைதியானான்.

“சரி என்ன புத்தகம் வேணும்னு சொல்லு. கொண்டு வர்றேன்.”

மனோரஞ்சன் உடனே அபர்ணாவைப் பார்க்க அதை சித்தரஞ்சன் கவனித்துவிட்டான்.

“ரஞ்சன். இங்கேயாப்பா இருக்கே?” என்றவாறே உள்ளே நுழைந்தார் சகுந்தலா.

மகன்கள் இருவரும் இருக்குமிடத்தில் அபர்ணா மட்டும் தனித்திருப்பது சகுந்தலாவுக்குப் பிடிக்கவேயில்லை.

முடிந்தளவு அவளைக் கண்காணிக்க வேண்டும் என்ற முடிவில்தான் மகன் பின்னேயே வந்திருந்தார் சகுந்தலா.

“நாங்க பேசிக்கிட்டிருக்கோம்ல. கொஞ்சமாச்சும் இங்கிதம் தெரியுதா?” என்று சகுந்தலா கூறிய உடனே அபர்ணா வெளியேறிவிட்டாள்.

“ஏம்மா இப்படி பேசறீங்க? அவங்க என்னைக் கவனிச்சுக்கத்தானே வந்திருக்காங்க. அவங்க வேலையை சரியா பார்த்தால் கூட பேசுவீங்களா?” எரிச்சல் பட்டான் மனோரஞ்சன்.

“மனோ. அம்மாக்கிட்ட ஏன் இப்படி பேசறே?” என்று சித்தரஞ்சன் சகோதரனை கடிந்தது வெளியில் நின்றிருந்த அபர்ணாவிற்குக் கேட்டது.

“அண்ணா. அம்மா பேசினது மட்டும் சரியா? அவங்க என்ன நினைச்சுப்பாங்க?”

“சரி. அதை விடு. உனக்கு வேற என்ன வேணும்னு சொல்லு.”

“அண்ணா. எனக்கு ஒரு மேல் நர்சை ஏற்பாடு செய்ய முடியுமா?” என்றான் தயக்கமாய்.

“எதுக்கு?”

“என்னண்ணா இப்படி கேட்கிறே? எனக்கு இன்னும் எழுந்து நடக்க முடியலை. என்னோட வேலைகளை நானே செய்துக்கிற நிலைமையில் நான் இல்லை. உனக்குப் புரியுதுதானே?”

“புரியுது.”

“ரஞ்சன். மனோ என்னப்பா சொல்றான்?” என்று கேட்டார் சகுந்தலா.

அவரிடம் மனோரஞ்சன் கேட்டதை கூறினான்.

“அப்படின்னா அந்தப் பொண்ணை அனுப்பிடலாம்ல.” என்றார் முகத்தில் ஒளிபெற.

“அம்மா. அவங்க என்னைப் பார்த்துக்க வந்திருக்காங்க. அவங்களை அனுப்பறதிலேயே குறியா இருக்கீங்க.”

“நீதானேடா சொன்னே உனக்கு வேற ஆள் வேணும்னு.”

“ஆமாம் சொன்னேன்தான். அதற்காக அவங்களை போகச்சொல்லலை. என்னோட மத்த தேவைகளை அவங்க கவனிச்சுப்பாங்க.”

“எதுக்கு தெண்டச்செலவு?” என்று கோபமானார் சகுந்தலா.

“நான் படிச்சு வேலைக்குப் போய் அந்தப் பணத்தைக் கொடுத்துடறேன்.” என்று அதற்கு மேல் கோபமாகப் பேசினான் மனோரஞ்சன்.

“இங்கே என்ன பிரச்சினை? ஏன் அந்தப் பொண்ணு வெளியில் நிற்குது?” என்றவாறே உள்ளே நுழைந்தார் தேவேந்திரன்.

மனோரஞ்சன் குற்றப்பத்திரிக்கை வாசித்தான்.

“சகுந்தலா. அவன் சொல்றதும் சரியாதான் இருக்கு. நம்மளுக்கு இருக்கற வசதிக்கு இப்படி கணக்குப் பார்க்கக் கூடாது.” என்று அந்தப் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் தேவேந்திரன்.

“சரி வா போகலாம்.” என்று சகுந்தலாவை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.

சித்தரஞ்சன் யோசனையோடு நின்றான்.

“என்னண்ணா?”

“இல்ல. இப்ப நீ சொன்னதை கேட்டதுக்கப்புறம் நான் என்னோட மனசை மாத்திக்கிட்டேன்.”

“என்ன மாத்திக்கிட்டே?”

“உனக்கு என்ன புத்தகம் வாங்கிக் கொடுக்கலாம்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன். இப்பதான் நீ படிச்சு முடிச்சுட்டு வேலைக்குப் போறதா சொன்னியா? அதுதான் உன்னோட புத்தகங்களை எங்கே மூட்டை கட்டி வச்சிருக்கோம்னு யோசிச்சேன்.” தீவிர யோசனையில் இருப்பது போல் முகத்தை வைத்துக்கொண்டான்.

“அண்ணா. நீ இப்படி எல்லாம் பேசுவியா?” என்று சிணுங்கினான் மனோரஞ்சன்.

சித்தரஞ்சன் வெளியில் சென்ற பிறகு அபர்ணா உள்ளே வந்தாள்.

“சாரி அண்ணி.”

“எதுக்கு?”

“அம்மா பேசினதுக்கு. இந்த காலத்திலும் அம்மா ஏன் இப்படி இருக்காங்கன்னு தெரியலை.”

“சரி விடு மனோ. அது அவங்க சுபாவம். நீ ஏன் இன்னொரு ஆளை ஏற்பாடு பண்ணச் சொன்னே? அதுதான் நான் இருக்கேன்ல.”

“இல்லண்ணி. அது சரிப்பட்டு வராது.”

“ஏன் வராது. என்னை அண்ணின்ற. அண்ணி அம்மா மாதிரின்னு டயலாக் எல்லாம் விட்டே. அப்புறம் என்ன?”

“அம்மா எனக்குன்னு எதுவும் செய்த ஞாபகம் இல்லை. பாட்டி இருந்த வரைக்கும் ஓகே. அதன் பிறகு எல்லாம் நானே தான் பார்த்துக்கனும். சண்முகம் அங்கிள் வயிறு வாடாமல் நேரா நேரத்துக்கு கொடுத்திடுவார். வேற என்ன?”

அவன் சாதாரணமாக கூறுவது போல் தோன்றினாலும், ஒரு தாயாக சகுந்தலா தனது பரிவையும், பாசத்தையும் மகனுக்குப் புரிய வைக்கத் தவறியிருந்தார்.

கண்டிப்பை மட்டுமே காட்டி வளர்த்திருக்கிறார்.

அபர்ணா அமைதியாகிவிட்டாள்.

“இப்படி வரும்போது மதுவையும் அழைச்சுட்டு வாங்கண்ணி. எனக்குத் தனியா இருக்கறது ஒரு மாதிரி இருக்கு.”

“வேண்டாம் மனோ. அவன் தனிமையில் இருக்கிறதுதான் அவனுக்கு நல்லது. இங்கே எப்படி நடந்துக்கனும்னு புரிஞ்சுக்கற வயசு அவனுக்கு இன்னும் வரலை.”

இரவு உணவு வேளையில் அவனுக்கான உணவை அவள் ஊட்டி விட்ட போது அவனுக்கு கண்கள் கரித்தது.

சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் கழித்து அவனுக்கான மாத்திரைகள் கொடுத்த பிறகு, அவனுக்கு ஏதாவது தேவை என்றால் தனக்கு அழைக்குமாறு கூறிவிட்டு வெளியேறினாள்.

தங்கள் அறைக்குள் வந்தவள் மதன்ராஜ் எதையோ வரைந்து கொண்டிருக்கவும் அருகில் அமர்ந்து பார்த்தாள்.

சகோதரியை நிமிர்ந்து பார்த்தவன் புன்னகைத்தான்.

“வரைஞ்சு முடிச்சிட்டியா மது? சாப்பிடப் போகலாமா?”

“ம்.”

“அப்பப் போய் கை கால் கழுவிட்டு வா.”

உடனே குளியல் அறைக்குள் ஓடினான். அவன் வந்த பிறகு அவளும் சென்றுவிட்டு வெளியில் வர மதன்ராஜைக் காணவில்லை.

அதற்குள் சென்றுவிட்டானா?

பின்னேயே வந்தவள் சகுந்தலாவின் செயலைக் கண்டு அதிர்ச்சியில் திகைத்து நின்றாள்.

காதல் வளரும் ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!