Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அலைபாயுதே

அலை – 5.1

இது தங்கள் வீடு தானா என்ற சந்தேகம் கணவன், மனைவி முன்பு, பெரிய கேள்விக்குறியாக கண் முன்னே நின்றது.

வந்தார்கள் வென்றார்கள் என்பது போல், வந்தார்கள் அன்னையும் மகனும். வீட்டையே தங்கள் பொறுப்பில் எடுத்து அவர்கள் வசமாக்கிக் கொண்டனர். மாறன் காபி எடுத்து வர, மதி மற்றும் சித்தார்த் அதனை பருகும் வரை அமைதியாக அமர்ந்திருந்தனர்.

இரண்டு நாட்களாக அலைந்து திரிந்து, தெளிவான முகவரி இல்லாமல் கண்ணில் பட்ட அனைத்து இல்லத்திற்கும் சென்று, கதவைத் தட்டி ஆரோஹி ஆரோஹி என கேட்டு கேட்டு சலித்துப் போனது. அதில் பலர் கேள்வியாய், சந்தேகமாய் பார்க்க ஓடியே வந்துவிட்டனர்.

அதனால் தான் அத்தனைக்கும் சேர்த்து இப்பொழுது நிம்மதி பெருமூச்சு விட்டு, ஆழ்ந்து தேநீரில் கவனம் செலுத்தி வந்தனர். அப்படி தான் மகன் நினைத்திருந்தான்.



Advertisement

ஆனால் அன்னையின் மனதில் பல வினாக்கள் சந்தேகமாய் உருமாறி நின்றது. சரி வருமா சரி வருமா என்றெல்லாம் யோசித்து யோசித்து, தேநீர் முடிந்ததை கூட கவனிக்க மறந்து, வெறும் கோப்பையை உதட்டினை ஒட்டி உறிந்து கொண்டிருந்தார்.

“ஆன்ட்டி டீ?” திவ்யா, அவரது நினைவலைகள் ஊடே புகுந்து தேநீர் கோப்பையை நீட்ட, தெளிந்தவர் மறுக்காமல் அதையும் வாங்கிக் கொண்டார்.

“அக்கா டீ சூப்பர், எந்த டீத்தூள்?”

Advertisement

“சார் டீ போட்டது நான், அது என்ன பாராட்டு அங்க போகுது?” உரிமை குரல் தூக்கி மாறன் வந்து நிற்க, திவ்யாவுக்கு கணவனைப் பார்த்து சிரிப்பு வந்தது. அவர்களை வரவேற்ற சந்தோசம் இப்பொழுது இல்லை.

Advertisement

அது என்ன, காரணமே கூறாமல் மௌனமாய் உள்ளே வந்து அமர்ந்து, உரிமையாக தேநீரை அருந்திவிட்டு வார்த்தை மொழிய மறுக்கின்றனரே. ஏதோ ஆரோஹி என்னும் பெயரைக் கூறியதால் மட்டுமே இந்த அமைதி.

“அட விடுங்க ப்ரோ, நீங்களும் அக்காவும் என்ன வேற வேறயா?”

“ம்ம்… வந்ததுல இருந்து பாக்குறேன், வாயிலேயே வடை சுடுற, ஆனா வந்த காரணத்தை மட்டும் சொல்லவே மாட்டிங்கிறீங்க. என்ன, ஆரோஹி உங்கிட்ட எதுவும் வம்பு பண்ணாளா?” இதற்கு தான் வாய்ப்பு அதிகமென யோசித்து அந்த கேள்வியை வைத்தான்.

Advertisement

“மாறா… ரோஹி எதுவும் பண்ணிருக்க மாட்டா.”

மனைவியை முறைத்து, “நம்பு, நம்பிக்கை தான வாழ்க்கை?” கேலி செய்தான்.

சித்தார்த்த்துக்கு முகம் எல்லாம் மத்தாப்பு தான், “ஆரோஹி அண்ணி சேட்டை பண்ணுவாங்களா?”

தனக்கு தெரிந்த ரைம்ஸ் கேட்ட குழந்தை போல, அத்தனை ஆனந்தம் திவ்யாவுக்கு, “ஐயோ சேட்டையா? அவ சரியான குசும்புக்காரி ப்பா. காலேஜ்ல ஸ்டாப்ஸ் எல்லாம் இவ கிளாஸ்ல இருந்தா, நான் உள்ளையே வர மாட்டேன்னு தர்ணா பண்ணாங்கனா பாத்துக்கோ, எவ்ளோ சேட்டை பண்ணுவானு…”

“திவி நில்லு…” மனைவியை நிறுத்திய மாறன் முகம் இப்பொழுது கடினமாகியிருந்தது. சித்தார்த்திடமிருந்து பார்வையை மதிவர்தினியிடம் மாற்றினான்.

“சாரி ஆன்ட்டி, பட் ப்ளீஸ்… அமைதியை பிரேக் பண்ணிட்டு வந்த விசயத்தை சொல்றிங்களா? இவர் அண்ணி, மருமகனு என்ன என்னவோ சொல்றார். ப்ளீஸ்… அபன்ஸிவா பேசுறேன்னு மட்டும் தப்பா நினைக்க வேணாம்.” அன்னையும் மகனும் இருவரையும் மாறி பார்க்க, திவ்யாவுக்கு அப்பொழுது தான் கணவன் பேச்சும் அவர்கள் வரவும் புரிந்தது.

அதை விட மதிவர்தினியின் கவலையான முகம், ஏதோ பெரிய அச்சத்தை அவளுக்கு காட்ட, தன்னுடைய சிறிய மேடிட்ட வயிற்றைப் பிடித்து அந்த சோபாவின் நுனியில் வந்தமர்ந்தாள்.

“திவி பாத்துடி, பின்னாடி தள்ளி ஒக்காரு” மனைவியை குரல் உயர்த்தாமல் கடிந்தவன், அவள் கையைப் பற்றி பின்னால் இழுக்க, கணவன் முகம் பார்த்து கண் சுருக்கி கெஞ்சி தன் கையை அவனிடமிருந்து பிரித்து, மதிவர்தினியிடம் மீண்டும் கவனத்தைத் திருப்பினாள்.

“ஆரோஹி உங்களுக்கு எப்படி தெரியும்?”

“ஆரோஹி தெரியாது, ஆனா லட்சுமி தெரியும்.”

திவ்யாவின் கைகள் உடனே சில்லிட, அவளது கையைப் பற்றிக்கொண்ட மதியின் கண்களில் அத்தனை வலி.

தன்னுடைய சிறு வயதில் எடுத்த புகைப்படத்தை அவர்களிடம் நீட்டினார். அதில் மதிவர்தினியும் அருகே லட்சுமியும் தாவணி அணிந்து, ஒரு மரத்தில் சாய்ந்து சிரித்தபடியே நிற்க, அத்தனை உயிர்ப்பிருந்தது அந்த புகைப்படத்தில்.

“ரொம்ப சின்ன வயசுல அம்மாவை இழந்துட்டு நின்னப்போ, பெண்ணுக்காகனு இன்னொரு கல்யாணத்தை பண்ணிட்டு வந்து நின்னார் என்னோட அப்பா. அம்மா மாதிரி இல்லனாலும் சித்தி ஒருத்தவங்க வர்றாங்கனு சந்தோசம் தான் எனக்கும். ஆனா அதெல்லாம் ஒரு மாசம் கூட நிலைக்கல. எந்நேரமும் திட்டு, அடி தான். அம்மாவோட சேர்த்து அப்பாவையும் மொத்தமா இழந்துட்டேன். வாழ்க்கையே நரகமாச்சு. அந்த நேரம் தான் ஆரோஹி அம்மா லட்சுமியை பாத்தேன். என்னோட அமைதிக்கெல்லாம் சேர்த்து அவ பேசுவா…”

அந்த நாளின் நினைவில் இப்பொழுது கூட அவருக்கு கண்ணீரோடு சிரிப்பு வந்தது, “பெருசா வயசு கூட இருக்காது, எயிட்த் தான் படிச்சிருப்போம். எந்நேரமும் எதையோ பறிகொடுத்த மாதிரியே இருந்த என்னை அழுக வச்சு, சிரிக்க வச்சு சாதாரண மனுசியாக்குனா. வீட்டுல இருந்து தப்பிக்கவே ஸ்கூல்க்கு வந்த என்னை படிக்க வச்சு, காலேஜ் வர கொண்டு வந்ததே அவதான். அங்கதான் சித்தார்த் அப்பா ராகவ்வை லவ் பண்ணேன்.

வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சு பெரிய பிரச்சனை ஆச்சு. ரெண்டு பக்கமும் போராட்டம் தான். எனக்காகனு பேச யாரும் இல்லனு கலங்கி நின்னப்போ, லட்சுமி அவளோட அப்பாவை வச்சு ரெண்டு பக்கமும் சமாதானம் பேசி கல்யாணம் பண்ணி வச்சா. அவ இல்லனா என் வாழ்க்கை இவ்ளோ சந்தோசமா இருக்குமானு என்னால சொல்ல முடியாது.

ஆளுக்கு ஒவ்வொரு பக்கம் வேலை, குடும்பம்னு போனாலும் லெட்டர், போன்னு பேசிப்போம். திடீர்னு லெட்டர் எதுவும் இல்லாம போச்சு. ரெண்டு வருஷம் முன்னாடி தான், அவளைத் தேடி கோயம்புத்தூர் வந்தப்போ அவ இல்லாதது தெரிஞ்சது.

லட்சுமி இல்லாததையே ஏத்துக்க முடியாத எனக்கு, ஆரோஹி எங்க இருக்கானு தெரியாம ரொம்ப சோர்ந்து போனேன். அதுவே எனக்கு ஒடம்பு சரியில்லாம பண்ணிடுச்சு. அவங்கள நினைச்சு நினைச்சு நெஞ்சு வலி வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிட்டேன்.”

சித்தார்த் அதிர்ந்து அன்னையைப் பார்க்க அவர் மகனிடம் திரும்பவே இல்லை. மாறன் கூட அவரது நிலையை எண்ணி வருந்தி அவரைப் பார்க்க, திவ்யா பதமாய் அவரது கை பற்றி ஆறுதல் வழங்கும் விதமாய் அழுத்தி பிடித்தாள்.

“ஹார்ட்ல பிளாக் இருக்குனு சொல்லி மொத்தமா என்னை முடக்கிட்டாங்க. ஆனாலும் அப்டியே விட முடியல. இப்ப அவளை தேடி இங்க வந்துருக்கேன்.” கண்ணீர் மளமளவென வடிய சித்தார்த் வியந்து தான் போனான்.

“அதுக்கு காரணம் கூட உங்களுக்கே இந்நேரம் தெரிஞ்சிருக்கும்…” கண்ணீரைத் துடைத்து, அவர்களைத் தலை தூக்கி பார்த்தார்.

திவ்யாவின் கைகள் தளர்வை உணர்ந்தவர் அதை விடாது பிடித்துக்கொள்ள, தவிப்பாய் கணவனை ஏறிட்டாள் திவ்யா. மாறனும் யோசனையில் பல நொடிகள் வீழ்ந்திட, அவர்களுக்கு தக்க நேரம் கொடுத்து மௌனமாய் இருந்தார் மதி.

ஏதோ கூற வருவதும், பின்பு தயங்குவதுமாய் திவ்யா இருக்க, அவளுக்கு பதில் கணவனே பேசத் துவங்கினான், “இது சரியா வராது ஆன்ட்டி.”

இப்பொழுது உண்மையாகவே அழுதுவிட்டார். மகனோ அன்னையின் உணர்வு புரிந்து, அவர் அருகில் வந்து வேகமாக அமர்ந்து அவர் தோளில் கை போட்டு ஆறுதல் படுத்தினான், “விடுங்க ம்மா…” என்று.

“அப்டி எல்லாம் விட முடியாது. ஏன் சரி வராது? நான் என்ன ஆரோஹிய கொடுமையா படுத்தப் போறேன்? இல்ல, என் மேல நம்பிக்கை தான் இல்லையா?”

மாறன், “உங்கள எதுவும் சொல்லல ஆன்ட்டி. நீங்க நல்லாவே பாத்துக்கிடாலும் முக்கியமா பாக்க வேண்டியது உங்க பையன் தான்.”

“அவன் என்னை விட பத்திரமா பாத்துக்குவான் ப்பா. அவனை பத்தி உங்களுக்கு தெரியாது.”

“பாசம் உங்க மேல வைக்கிறது வேற, தனக்கு வர்ற பொண்ணு மேல வைக்கிற பாசம் வேற. அதை அவரால ஆரோஹிக்கு குடுக்க முடியும்னு எனக்கு தோனல.”

பீதியோடு மாறனைப் பார்த்தவர் கண்ணில் அப்பட்டமான பயம், “இல்ல ப்பா…”

“ப்ளீஸ் ஆன்ட்டி புரிஞ்சுக்கோங்க, எங்களுக்கு மட்டும் இல்ல, அவர் லவ் பண்ற விஷயம் அரசல் புரசலா வெளிய வந்துட்டே தான் இருக்கு, அது தப்பில்ல. அவர் வேலை அப்டி. ஆனா எங்க ஆரோஹி அப்டி இல்ல. பாக்கதான் எதுக்கும் கேர் பண்ணிக்காத மாதிரி இருப்பா, பட் ரொம்ப சென்சிடிவ்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!