Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அலைபாயுதே

அலை – 4.2

அவள் தலை ஆட்டுவதைப் பார்த்தவன் முகம் சிரிப்பில் படர, அதே சிரிப்போடு அவளுக்கு கை அசைத்து உள்ளே நகர்ந்தான்.

“கிரிக்கெட்டரே…” எந்த விதமான உணர்வை அந்த குரல் சுமந்து வந்ததென தெரியாமல் அஸ்வின் அவளைப் பார்க்க, அந்த முகம் இப்பொழுதும் மாறாமல் சிரிப்பில் பூத்திருந்தது.

“டபுள் சென்சுரி அடிப்பீங்களா?”

சிரித்துவிட்டான் அவன், “என்ன?” மேலே ஏறிய இரண்டு படிகள் விட்டு இறங்கி வந்திருந்தான் அப்பொழுது.



Advertisement

“முடிஞ்சா ட்ரிபிள்?” தலை மெல்ல சாய்த்து கேட்டவள் முகம், நிழல்படமாய் அவன் மனதில் பதிய வைத்தது அவள் பிழையோ!?

பிரியா இதழ் சிரிப்பில் அவளைப் பார்த்தவன், “அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு, வர்றேன்.” என்றவன், உள்ளே சென்ற வேகத்தில் கூறியது போல், ஐந்தே நிமிடத்தில் மீண்டும் வந்து அவள் முன்பு ஒரு காகிதத்தை நீட்டினான்.

புரியாமல் பார்த்தவளிடம், “மேட்ச் டிக்கெட், நீ சொன்னதை நான் செய்றேனானு நேர்ல வந்து பாரேன்.”

Advertisement

உடனே மறுத்துவிட்டாள், “எனக்கு கிரிக்கெட் பிடிக்காதுப்பா.”

Advertisement

முகத்தை சிறிதாக அவள் தூக்கி வைக்க, அவளை பொய்யாக முறைத்தவன், அவள் கைகளில் அந்த டிக்கெட்டை திணித்து, “திமிரு… புடிக்காதுன்னா வேற யாருக்காவது குடுத்துடு.” முணுமுணுத்து உள்ளே சென்றுவிட, ஆரோஹியின் இதழ்கள் சிரிப்பில் விரிந்தது.

அதே சிரிப்போடு உள்ளே நுழைந்த அஸ்வினை, கேலி புன்னகையோடு எதிர்கொண்டான் இந்திய அணியின் கேப்டன் நிதின் திவாரி, “சரியில்லையே அஸ்வின்?”

விழித்த அஸ்வின், “பாய்… ஐ அம் நார்மல்!” என்றான் தன்னையே பார்த்தபடி.

Advertisement

“நீ நார்மல் தான், உன்னோட ஸ்மைல் தான் நார்மல் இல்லனு சொன்னேன்.” தெரிந்தே பேசுபவனிடம், விளக்கங்கள் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் தோன்றியது நிதினுக்கு.

தன்னுடைய உடையை கலைத்து இந்திய அணியின் ஜெர்சியை எடுத்து அணிந்த அஸ்வின், “அப்டிலாம் இல்ல பாய், வர்ற வழில ஒரு வித்தியாசமான ஆளை பாத்தேன். ஷி… ஷி இஸ் சம்திங்… சம்திங்… எனக்கு சொல்ல தெரியல, வித்தியாசமா இருக்கா. போலியான மனுஷங்கள்ல இருந்து வித்தியாசமான பொண்ணா இருந்தா.”

பெரியவனாக இவன் எண்ணத்தை உடனே புரிந்துகொண்டான் நிதின், “நீ டேட் பண்ணிட்டு இருக்க அஸ்வின், மனசு அலைபாயுதா?” எச்சரிக்கை வாசித்தான்.

“அஃப்கோர்ஸ் பாய்! (bhai) நான் அந்த அளவு போகல. சில மனுசங்க நமக்கு ஒண்ணுமே பண்ணிருக்க மாட்டாங்க. ஆனா அவங்க ஒரு வார்த்தை, ஒரு சிரிப்பு, ஒரு செயல் நம்மளை நகர விடாம பண்ணும்ல? அதுபோல அந்த பொண்ணு. உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன, ஏதோ ஒன்னு நகர விடாம ஸ்டாப் பண்ணுது.”

மின்மினியாய் மின்னியவள் முகம் இன்னும் மறையாமல் இருக்க, பேச்சை மாற்ற முடிவெடுத்தான், “கோச்! என்னை எதுவும் திட்டலயே?”

அஸ்வின் எண்ணம் அறிந்து அவனும் சூழலை இலகுவாக்க, “திட்டல, ஆனா அவர் ரூம் பக்கத்துல உனக்கும் ஒரு ரூம் புக் பண்ண சொல்லிட்டார்.”

திருதிருவென விழித்த அஸ்வினைப் பார்த்து திருப்தியோடு சிரித்தவன், “ரொம்ப முழிக்காதடா, அவர் போர்ட் மெம்பெர்ஸ் கூட மீட்டிங்ல இருக்கார். நீ போ, நான் பேசிட்டு வர்றேன்.”

ஜாக்கெட் அணிந்து நகர்ந்தவன், நிதின் ஜாக்கெட்டை பிடித்து இழுத்து, “பாய் இங்க நடந்தது வெளிய யாருக்கும் தெரிய வேணாம்.” கண்கள் சுருங்க கெஞ்சி கேட்டான்.

நிதினுக்கு அவன் கேட்கவும் தான் அந்த எண்ணமே தோன்றியது, “அப்போ மேட்ச்ல சென்சுரி அடி, விஷயம் வெளிய போகாது.”

ஒரு நிர்பந்தனையை வைத்து அவன் செல்ல, அந்த நிர்பந்தனை கூட எளிதாகவே தெரிந்தது அஸ்வினுக்கு. அவன் நோக்கம் தான், அந்த நூறையும் தாண்டியதாயிற்றே…

***

“ம்மா, இதோட இருபத்தி மூணாவது வீடு. எனக்கு அசிங்கமா இருக்கு ம்மா…” சித்தார்த், அன்னையிடம் புலம்பிக்கொண்டு வண்டியை விட்டு இறங்க மறுத்தான்.

“இறங்கி வந்தா நீ லவ் பண்ற பொண்ணு கூட கல்யாணம், இல்லையா நான் பாக்குற பொண்ணு தான், எது வசதி?”

“தாயே…!”

வாயைப் பிளந்து அதிசயித்தவன், தன்னுடைய கேள்வியை வைக்கும் முன்பே மதிவர்தினி வாகனத்தை விட்டு வெளியேற பார்க்க, அவரை முந்தி மகன் அவர் கையைப் பிடித்து நிறுத்தினான், “ம்மா, உங்களுக்கு எப்டி தெரியும்?”

“நாக்கை தொங்க போட்டு நிக்கிற நாய் மூஞ்ச பாத்தா தெரியாதா? அது எலும்புக்கு நிக்கிதா இல்ல, கறிக்கு நிக்கிதானு?”

“ம்மா, அந்த பொண்ணு…” மென்று விழுங்கும் மகனின் வேதனை உணர்ந்தவர், “வேணாம்டா… உன் கதையை கேட்டா இப்பயே கல்யாணம் பண்ணி வைனு நிப்ப. நான் தெரிஞ்சதா சொன்னதை நீ கேக்கலனு வச்சுக்கோ.

இப்போ இறங்கி வந்து உன் அண்ணனோட கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு. என்கிட்ட சொன்ன மாதிரி அவன் பொண்ணுங்கள டேட் பண்றது, சாட் பண்றது எல்லாம் சொல்லிட்டு இருந்த, மவனே! மொட்டை மாடில இருந்து கீழ தள்ளி விட்டுடுவேன்.”

அன்னையைப் பார்த்து பீதியடைந்தவன் நெஞ்சில் கை வைத்து, “ஆத்தி! இது வில்லங்கமான பொம்பளையால இருக்கு…”

“ம்ம்ம்… கொலைகார பொம்பளடா! அந்த வெர்ஷன் வெளிய வர்றதும், வராததும் உன் கைல தான் இருக்கு.” கீழே இறங்கி, பின்னால் வைத்திருந்த பெரிய பையை எடுத்து அந்த அபார்ட்மென்ட்டினுள் நுழைந்தார்.

அன்னையோடு தானும் மூன்றாவது மாடிக்கு சென்றவன், அங்கு இருந்த ஒரு வீட்டின் கதவைத் திறக்கவே பல வினாடிகள் போராடினர்.

“ம்மா, தட்ட தான் செய்யேன்…” மகன், அன்னையிடம் சிடுசிடுக்க, அவரோ அப்பாவியாய் முகத்தை வைத்து இரண்டடி பின்னால் நின்றார்.

இது ஆகும் காரியமல்ல என்றறிந்தவன் கையை எடுத்து தட்ட போக, முடியாமல் அன்னையிடம் திரும்பி, “மதி, இந்த வீடு தானா? நல்லா தெரியுமா?”

“அதை வீட்டுக்காரங்ககிட்ட கேட்டா தான்டா தெரியும்.” என்று முகத்தை தொங்கபோட்ட அன்னையை, என்ன செய்வதென தெரியாமல் முறைத்து மட்டும் பார்த்தான் சித்தார்த்.

“அட்ரஸ் ஒழுங்கா கேக்க தெரியல, முகத்தை மட்டும் பச்சை கொழந்தை மாதிரி வச்சு ஊரையே ஏமா…”

மகன் தன்னை திட்டும் நேரத்தில் முன்னிருந்த கதவை, பலமாக மூன்று முறை தட்டியவர், விறுவிறுவென ஓடி ஒரு சுவற்றின் பின்னே மறைந்து கொண்டார்.

மதிவர்தினியின் செயலை வியப்பாக பார்த்த சித்தார்த் விழிக்கும் முன்பு, “இருடி, உன்னை வந்து வச்சுக்குறேன்.” என்ற பொய் கோவம் நிறைந்த குரலோடு அந்த வீட்டின் கதவு திறக்கப்பட, சித்தார்த் கவனம் அங்கு சென்றது.

இளம் வயது ஆண் ஒருவன் வந்து கதவைத் திறந்தான், முகம் எல்லாம் புன்னகை பூத்து. அவனைப் பார்த்ததும் ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்ட சித்தார்த் முகம் எங்கும் ஏமாற்றம் படர்ந்தது.

“யார் வேணும்?”

“ஆரோஹி வீடு இது தானா?” ஆமா சொல்லிடாத என்று வேண்டியது மனம் சித்தார்த்துக்கு.

ஆனால் பதில்தான் சாதகமாக வரவில்லை, “ஆமா, நீங்க?”

“நான்… நான்… அவங்க ஓல்ட் கிளாஸ்மேட், நீங்க?”

“ஆரோஹியோட ஃப்ரன்ட் ஹஸ்பெண்ட், வாங்க உள்ள.” அவ்வளவு தான், தான் கேட்ட உறவு முறையில் அத்தனை சந்தோசம் சிறியவனுக்கு தொற்றிக்கொண்டது, நின்ற இடத்தில் இருந்தே கத்திவிட்டான், “ம்மா… உன் மூத்த மருமகளை கண்டுபுடிச்சிட்டோம் ம்மா…”

அந்த வளாகமே அதிரும் வகையில் சித்தார்த் கத்த, அதற்கு மேல் ஆனந்தம் அடைந்த மதி ஓடி வந்து அங்கு நின்ற அந்த ஆணையும் விலக்கிவிட்டு,

“தம்பி ஓரமா போ, சும்மா வழில நின்னுட்டு…” என்று வீட்டின் உள்ளே ஓடினார்.

அவர் மகனோ அன்னையின் செயலை எதிர்பார்த்தே இருக்க, அங்கு என்ன நடக்கின்றதென தெரியாமல் விழித்த ஆணைப் பார்த்து, பாவமாய் சிரித்தவன் தானும் வீட்டின் உள்ளே நுழைந்து,

“உள்ள வாங்க சார், ஏன் வாசல்லயே நிக்கிறிங்க?” என்றழைக்க, “யார் சாமி நீங்க?” என்றான் பரிதாபமாக அவன்.

சித்தார்த்துக்கு சிரிப்பு தாளவில்லை. அவன் கைகளைப் பிடித்து உள்ளே இழுத்து கதவை அடைத்து, “போங்க, போய் காபி போட்டு எடுத்துட்டு வாங்க.” என்றவன் சோபாவில் அன்னைக்கு அருகில் அமர்ந்து,

“அப்டியே பூ, பழம் வைக்க தட்டு ஒன்னும் மறந்துடாதீங்க.” என்று நினைவுபடுத்த, இருவரையும் என்ன சொல்வதென்றே தெரியாமல் நின்றான் அவன்.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!