Skip to content
Post Views: 3,358
அத்தியாயம் – 16
காலையில் தலைமைக் காவலர் கந்தசாமியைக் கண்டதும், அவளுக்குப் பழைய நினைவுகள் மனதில் வந்து அவள் மனதை அலைக்கழித்தன.
இங்கு வந்ததில் இருந்தே அவள் மனம் பழைய நினைவுகளால் அதிகம் பாதிக்கப்படுகிறது தான்.
Advertisement
மறந்துவிட்டோம் என்று அவள் நினைத்திருந்தது எல்லாம் இங்கே வந்த பிறகு ஆழ்மனதில் புதைந்து கிடக்கின்றன என்று அவளுக்குத் தெரிந்தது.
அவளுக்குத் தனிமை தேவையிருந்தது.
வீட்டை விட்டு வெளியில் செல்லலாம் என்று யோசித்த போதுதான் அருகிலேயே பூங்கா ஒன்று இருப்பது தெரிந்தது.
Advertisement
சித்தரஞ்சன் வீட்டில் இல்லை.
Advertisement
தேவேந்திரன் அவர்கள் அறையில் இருந்ததால் அவரைத் தொந்தரவு செய்யாமல் மனோரஞ்சனிடம் மட்டும் சொல்லிவிட்டுச் சென்றாள்.
“என்னாச்சு அண்ணி?” என்றான் அவள் முகத்தைக் கவனித்தவன் யோசனையாய்.
“ஒன்னுமில்லை மனோ. கொஞ்சம் வெளிக்காத்தில் நின்னா நல்லாருக்கும்னு தோணுது. வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கிறது ஒரு மாதிரி இருக்கு. அதான்.”
Advertisement
அவள் ஏதோ மறைக்கிறாள் என்று புரிந்தாலும், அதற்கு மேல் எதுவும் தோண்டித் துருவாமல் தலையசைத்தான்.
எல்லாவற்றையும், எல்லோரிடமும், எல்லோராலும் கூறிவிடமுடியாது.
அதனால் அவளிடம் எதுவும் கேட்க அவன் முயலவில்லை.
அவள் பூங்காவிற்கு வந்துவிட்டாள். நீண்ட நேரம் யோசனையில் அமர்ந்துவிட்டாள்.
அப்போதுதான் அங்கே வந்தான் சின்ன மைனர்.
“அப்ப உன்னைத் தவற விட்டது தப்பே இல்லைன்னு இப்பத் தோணுது.” என்று பல்லை இளித்தவாறு நின்றிருந்தவனைக் கண்டு திடுக்கிட்டாள்.
முதலில் அவன் யார் என்றே அவளுக்குப் புரியவில்லை.
“எங்கே தப்பித்துவிட்டாயோ என்று கொஞ்சம் கவலைப்பட்டேன்தான். ஆனால் மீண்டும் வந்து மாட்டிக்கிட்டாயே கண்ணு. டேய் சின்ன மைனர். உனக்கு மச்சம்தான்டா.”
தன்னைத்தானே புகழ்ந்து கொண்டான்.
“என்ன கண்ணு புரியாமல் நிற்கிறே? இந்த மாமன் மகனை மறந்துட்டியா என்ன?”
‘மாமன் மகனா?’ அப்படி ஒரு உறவு அவள் கேள்விப்பட்ட நினைவு அவளுக்கு இல்லை.
“என்ன கண்ணு, உன்னைக் கல்யாணம் பண்ணிக்க இருந்த மைனர் மாமாவையே மறந்துட்டியே. எங்க அப்பனுக்கு வாய்த்தது அதிர்ஷ்டம்னு அப்பவே எனக்கு பயங்கர பொறாமை. எத்தனை நாளு மனுசன் வாழ்ந்துடுவான். அவன் செத்த பிறகு உன்னைக் கவனிச்சுக்கலாம்னு பார்த்தால், நீ எல்லாருக்கும் டிமிக்கி குடுத்துட்டு எவன் கூடவோ ஓடிப்போயிட்டியே கண்ணு.”
அவன் பேச்சில் சுரணை வரப்பெற்றாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு அவனை ஞாபகத்தில் கொண்டு வர முடிந்தது.
“என்ன இப்ப ஞாபகம் வந்துடுச்சியா கண்ணு. அப்ப அய்த்தானுக்கு வசதியாப் போச்சு.” என்று இளித்துக்கொண்டே வந்து அவள் கையைப் பற்றினான்.
“கையை விடுடா.” என்றாள் கோபமாய்.
“விடறதுக்கா பிடிக்கிறது. உன்னை ஆத்தங்கரை கோயிலில் பார்த்த உடனே உன்கிட்ட வரனும்னு யோசிச்சேன் கண்ணு. ஆனால் எவனோ போலீஸ்காரன்கிட்ட பேசிக்கிட்டிருந்தியா? எதுக்கு வம்புன்னுதான் வெயிட் பண்ணேன். அப்புறம் பார்த்தால் ஒரு தடியன் வந்துட்டான். நீ எப்ப வருவேன்னு பார்த்துக்கிட்டிருந்தேன். இப்ப வசமா மாட்டிகிட்டே.” என்றான் இளித்தவாறே.
“அப்ப நான் யார் வீட்டுப் பொண்ணுன்னு தெரிஞ்சே வாலாட்டுறே. அப்படித்தானே?”
“நீ ஒன்னும் அவங்க வீட்டுப் பொண்ணு கிடையாதே. அவங்க வீட்டில் வேலைதானே செய்யறியாம்? எல்லாத்தையும் விசாரிச்சுட்டேன். உன்னைப் பத்தி சொன்னால் அவங்களே உன்னை வீட்டை விட்டே துரத்திடுவாங்க.”
“என்னை என்ன அறியா வயசுல பார்த்த அந்த அபர்ணான்னு நினைச்சுட்டியா?” என்றவள் தன் கையைப் பற்றியிருந்தவனின் கையை இறுக்கினாள்.
“ஏய் விடு. என்ன பண்றே?” என்று அவன் கத்தினான்.
“என்ன நடக்குது இங்கே?” என்ற குரலில் தான் அவன் கையை விட்டாள்.
சித்தரஞ்சன் நின்று கொண்டிருந்தான். சின்ன மைனர் கையை உதறிக்கொண்டான்.
“அங்கே அவ்வளவு வேலை கிடக்கு. என்ன பண்றே இங்கே?” அதட்டலாகக் கேட்டான்.
அவனுக்கு முன்பு எதுவும் பேச இயலாமல் அபர்ணா அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
‘என்னிடம் ஒருவன் வம்பு செய்கிறான். அதைப் பார்த்த பின்பும், அவனைக் கண்டிக்காமல் வீட்டில் வேலையைப் போட்டுவிட்டு வந்துவிட்டேன் என்று என்னைத் திட்டுகிறான்.’ என்று மனதில் நொந்து கொண்டே வீட்டை நோக்கி நடந்தாள்.
“என்ன தைரியம் இருந்தால் எங்க வீட்டுப் பொண்ணு மேல கை வைப்பே?” ரௌத்ரத்துடன் கேட்டான்.
சித்தரஞ்சன் விழிகளில் தெரிந்த சிவப்பு, அவன் குரலில் இருந்த கடினம் கண்டு மிரண்டு விட்டான் சின்ன மைனர்.
அவன் இந்த ஊர்க்காரன் இல்லை.
வந்த வழியில் அபர்ணாவைக் கண்டுவிட்டு, அவளுக்கு இப்போது யாருமில்லை என்ற நினைப்பில் அவளிடம் வாலாட்ட வந்தவன்.
அத்துடன் இருக்கும் சொத்தை செலவழிப்பதற்கென்றே ஏகப்பட்ட கெட்ட பழக்கங்களைக் கொண்டவன்.
உடல் உழைப்பை அறியாதவன். ஊளைச் சதை தொங்கிற்று.
அவனுக்கெதிரில் ஆஜானுபாகுவாய் நின்ற சித்தரஞ்சன் தோற்றத்தாலேயே அவனை மிரட்டினான்.
“இந்தக் கைதானே அவளைப் பற்றியது.” என்று அபர்ணா உடைத்துவிடாமல் விட்டுவிட்டுச் சென்ற கையை உடைத்தான்.
“இனி அவள் இருக்குமிடம் உன்னைக் கண்டேன் உன் உடம்பில் உயிர் தங்காது. ம். ஓடு.” என்று உறுமியவன் அவனை உதறித் தள்ளினான்.
‘எல்லாம் இவளைச் சொல்லனும். இவ எதுக்கு இப்ப இங்கே வந்தா?’ என்று அபர்ணாவையும் திட்டித் தீர்த்தான்.
சின்ன மைனர் தட்டுத் தடுமாறி எழுந்து ஓடுவதைக் கண்ட பிறகுதான் அவ்விடத்தை விட்டு அகன்றான் சித்தரஞ்சன்.
வீட்டிற்கு வந்த அபர்ணா தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
சித்தரஞ்சன் சொன்ன மாதிரி வேலையைப் போட்டுவிட்டு அவள் செல்லவில்லை.
அவன் சொன்னால் தான் கேட்க வேண்டுமா?
அவளது இளவயது ஞாபகங்களில் மூழ்கினாள்.
பெற்றோர் அவள் மீது அன்பைப் பொழிந்தனர். நல்ல ஆடைகள், உணவு என்று தங்களுக்கு இல்லை என்றாலும், அவளுக்குப் பார்த்துப் பார்த்து செய்தனர்.
இதன் பின்னணியில் இருப்பது அவர்கள் தன் மீது வைத்திருந்த பாசம் என்று அவள் நினைத்திருக்க, அதன் பின்பு உள்ள காரணத்தை அவள் அறியும் காலமும் வந்தது.
அன்றுதான் அவள் கண்ணனையும் சந்தித்தாள்.
அன்றைய தினம் அவள் பெற்றோர் ஒரு அசைவ உணவகத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
கூடவே ஒரு உறவினரும் வந்திருந்தார்.
எதுவும் விசேச நாள் இல்லை என்றாலும், அவளுக்கு அன்றும் புதிய உடை எடுத்துக் கொடுத்திருந்தனர்.
அவளுக்குப் பிடித்த அசைவ உணவுகள். அவள் ரசித்து ருசித்து உண்டாள்.
அவள் அருகில் அந்த உறவினர் அமர்ந்திருந்தார்.
ஏதோ அவளை உறுத்த, எதார்த்தமாகத்தான் நிமிர்ந்துப் பார்த்தாள்.
அங்கேதான் கண்ணன் இருந்தான். அவளைப் பார்த்த அவன் பார்வையில் அருவருப்புத் தெரிந்தது. அதில் பயம் கொண்டாள்.
அந்தப் பார்வை அவளை என்னவோ தவறு செய்துவிட்டதாக குற்றம் சாட்டியது. அதே மாதிரி ஒரு பார்வையை அவள் அதுவரை கண்டதில்லை. அதுவும் ஆண்களிடம்.
அதற்கு மேல் அவளுக்கு உணவு சுவைக்கவில்லை.
அவள் மீண்டும் அவன் அமர்ந்திருந்த இடத்தைக் கண்டாள். அந்த இடம் வெறுமையாக இருந்தது.
‘அது என்ன பார்வை? அத்தனை அசிங்கமாகவா இருக்கிறேன்?’
வீட்டிற்கு வந்ததும், முதல் வேளையாக கண்ணாடி முன் நின்று தன்னைத்தானே பார்த்தாள்.
சிக்கென்று அவள் உடலைக் கவ்வியிருந்தது அந்த உடை. அவளது அழகை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டியது.
ஏனோ ஒரு கணம் அந்தப் பார்வை ஞாபகத்தில் வந்து, அவளைக் கூசச் செய்தது.
அதன் பிறகுதான் அவள் பிறந்த நாள் அன்று அவள் அந்த உடையை வேண்டாம் என்று மறுத்தாள்.
காரணம் கேட்ட பெற்றோரிடம் என்னவென்று கூறுவாள்.
அதனால் மற்றவர்கள் தன்னைப் பார்க்கும் பார்வை சரியில்லை என்று பொதுவாகக் கூறினாள்.
“அது மத்தவங்க உன்னைப் பொறாமையாகப் பார்க்கிறார்கள் தங்கம்.”
“இல்லம்மா. பொம்பளைங்க மட்டும் இல்லை. ஆம்பளைங்க கூட அப்படி பார்க்கிறாங்க.” என்றாள் மேலும்.
“அது அவங்க வீட்டில் இப்படிப்பட்ட பெண் இல்லையேன்னு இருக்கும். ஆம்பளைங்க பார்வைக்கெல்லாம் ஆயிரம் அர்த்தம் இருக்கும் பாப்பா. உனக்கு அதெல்லாம் புரியாது. அம்மா அப்பா உனக்கு நல்லது தான் செய்வோம்.” என்று அவளை அமர்த்திவிட்டனர்.
இருந்தாலும் தன்னிடம் என்னவோ தவறாக இருக்கிறது என்று மட்டும் அவள் மனதில் பதிந்துவிட்டது.
அன்று அவள் பிறந்த நாள் என்று கோயிலுக்குப் போய்விட்டு வந்த போது, அந்த ஆள், அன்று அவர்களுடன் உணவகத்தில் உணவு உண்டவர் வந்திருந்தார்.
“வந்தவங்களை வாங்கன்னு கூப்பிடனும் செல்லம். போய் அவரை கூப்பிடு.” என்று தாய் அனுப்ப வெளியில் சென்றாள்.
அவளைக் கண்ட அந்தக் அரைக்கிழவரின் கண்களில் ஒளி.
“வாங்க தாத்தா.”
அவளின் தாத்தா என்ற அழைப்பைக் கேட்டதும் அவர் முகம் சுருங்கியது.
“தாத்தா இல்லை தங்கம். அவர் உனக்கு மாமா. மைனர் மாமா.” என்றனர் அவளது பெற்றோர்.
வேறு வழியில்லாமல் அவள் மாமா என்றதும் மைனரின் முகம் ஒளிபெற்றது.
“இங்க வா கண்ணு.” தன்னருகில் கூப்பிட்டு அமரச் சொன்னார் அந்த மைனர்.
அருகில் அமர்ந்தவளின் இடுப்பைச் சுற்றி வளைத்தன அவர் கைகள். அவள் நெளிந்தாள்.
“பொண்ணு பயப்படப்போகுது. எல்லாம் கால நேரம் கூடி வரட்டும்.” என்ற அவளது பெற்றோர் அவளை உள்ளே போகச் சொன்னார்கள்.
“என்ன கால நேரம் கூடி வரனும். என்னோட ஜாதகம் பற்றிச் சொன்னேனே.” என்ற பேச்சு அவள் காதில் விழுந்தது.
அதன் பிறகு அவர்கள் என்ன பேசினார்கள் என்று அவளுக்குத் தெரியவில்லை. அறையிலேயே படுத்துறங்கிவிட்டாள்.
அவள் கண் விழித்த போது அவளுடைய அறையில் வெளிச்சம் இல்லை.
அறைக் கதவை சாற்றியிருந்தனர் அவளது பெற்றோர்.
“ஸ். அவ உள்ளே தூங்கறா. மெல்ல பேசுங்க.” என்று விஜயா முருகேசனிடம் பேசுவது கேட்டது.
“எல்லாம் அந்த வாணிக் கழுதையால் பாழாப்போச்சு. அவ மட்டும் அப்ப நாம சொன்ன மாப்பிள்ளையைக் கட்டிக்கிட்டிருந்தால் இப்ப நம்ம ரேஞ்சே தனி.”
என்று அவள் தந்தை ஆதங்கப்பட, அவளுக்கு வாணி யார் என்று தெரியவில்லை.
அடுத்து அவர்கள் பேச்சில் இருந்து அவள் புரிந்து கொண்ட விசயத்தை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.
அதில் வாணி என்கிற கலைவாணி அவளது சித்தி என்றும், அவளுக்கு இவர்கள் திருமண ஏற்பாடு செய்தது பிடிக்காமல் வேறு ஒருவனுடன் வீட்டை விட்டு ஓடிப்போனதாகவும் அறிந்து கொண்டாள்.
இதுநாள் வரைக்கும் அவள் கலைவாணியைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
இன்று வந்த மைனருக்கு அவளைத் திருமணம் செய்து கொள்ள ஆசை.
ஏற்கனவே அபர்ணாவின் அழகில் மதிமயங்கிப் போயிருந்த அந்த மைனர், அவளுக்கு ஜாதகத்தில் மாங்கல்ய பலம் இருப்பதாக அவள் பெற்றோர் காட்டிய ஆசை வார்த்தையில், திருமணத்தை உடனே நடத்த வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்.
அவளுடைய ஜாதகத்தைப் பாராமலே, மாங்கல்ய பலம் பற்றி மைனருக்கு ஆசை வார்த்தையைக் கூறி அவளது பெற்றோர் தூண்டிவிட்டனர்.
அப்படியே திருமணத்திற்குப் பிறகு அந்த மைனருக்கு ஏதாவது ஒன்று என்றாலும், அவரது சொத்து, வாரிசு என்ற முறையில் அபர்ணாவிற்குத்தான் வரும்.
அவருக்கு மகன் இருந்தாலும், பாதி சொத்தாவது கிடைக்கும்.
இல்லை என்றாலும், திருமணம் முடித்த கையோடு மொத்த சொத்தையும், மகள் பெயருக்கு எழுத வைத்துவிட்டால் சொத்து முழுவதும் கிடைக்கும்.
அதன் பிறகு சில காலம் கழித்து வேறு ஒருவனுக்குத் திருமணம் செய்து வைக்கலாம்.
அவனும் பணக்காரனாக இருந்துவிட்டால் நல்லது என்பதுதான் அவளது பெற்றோரின் ஆசை.
பெற்றோரின் பேச்சைக் கேட்டு அவள் அதிர்ந்து போனாள்.
தன்னை இத்தனை நாட்கள் பார்த்த ஆண்களின் கண்களில் தெரிந்தது என்ன?
அவளுக்குப் புரிந்து கூசியது.
இதெல்லாம் கண்ணனை சந்தித்த பிறகு அவளுக்குப் புரிய வந்தவை. அவன் ஏன் அப்படி ஓர் பார்வை பார்த்தான் என்று அவளுக்கு இப்போது புரிந்தது.
பள்ளிக்கூடத்தில் கூட ஒரு வாத்தியார் இவளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததையும் அவள் இப்போது யோசித்துப் பார்க்கிறாள்.
தன்னுடைய உடை மற்றவர்களின் ஆசையைத் தூண்டும் விதமாக இருந்தது என்பதை கடினப்பட்டு ஜீரணித்தாள்.
தன்னை வளமாகக் காட்டுவதற்குத்தான் அசைவ உணவுகள்.
தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பிள்ளைகள் பெற்றவர்களிடம் செல்வார்கள்.
இங்கே இவளைப் பெற்றவர்களாலேயே பிரச்சினை வந்தால் இவள் யாரிடம் முறையிடுவது?
இவளுக்குத் தெரிந்து உறவினர் யாரும் இல்லை.
இல்லை இவர்கள் குடும்ப லட்சணம் தெரிந்து அவர்கள் இவர்களை ஒதுக்கி வைத்தார்களோ என்னவோ?
இப்போதைக்கு அவளுடைய சித்தி கலைவாணிதான் உறவாகத் தெரிந்தாள்.
இவர்களுடைய செய்கையால் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டுப் போனவள் நிச்சயம் நல்லவளாகத்தான் இருப்பாள்.
ஆனால் அவள் எங்கிருக்கிறாள் என்று தெரியாது. அவளிடம் எப்படி உதவி கேட்பது?
மறுநாளுடன் எட்டாம் வகுப்பிற்கான தேர்வுகள் முடிகின்றன.
அதன் பிறகு வீட்டை விட்டுச் செல்லும் சுதந்திரம் கிடைக்குமா என்ன?
இது நாள் வரைக்கும் அவள் மீது பெற்றோருக்கு சந்தேகம் வரவில்லை.
கலைவாணிக்கு பதினெட்டு வயதிற்கு மேல்தான் திருமண ஏற்பாடு செய்தார்கள்.
அவள் விவரம் புரிந்து சென்றுவிட்டாள்.
அதனால் மகள் விசயத்தில் அவர்கள் கவனமாக இருந்தனர்.
இன்னமும் மகள் குழந்தைத்தனம் மாறாமல் தாங்கள் சொல்வதை நம்புகிறாள்.
அவளுக்கு விவரம் வருவதற்குள் எல்லாவற்றையும் முடித்துவிட வேண்டும்.
அதன் பிறகு கிடைக்கும் ஆடம்பரமான வாழ்க்கைக்குப் பழகிவிட்டாள் என்றால் அதன் பிறகு மகளும் தங்கள் சொல்பேச்சுக் கேட்டு நடப்பாள் என்ற நம்பிக்கை அவர்களிடம்.
மறுநாள் அவள் தேர்வெழுத போகும்போது அங்கிருந்த விநாயகர் கோயிலுக்குச் சென்றாள்.
செல்லும் வழியில் மற்றவர்கள் தன்னைப் பார்க்கும் பார்வையில் அவள் கூசிப் போனாள்.
‘யாரிடம் சித்தியைப் பற்றி விசாரிப்பது?’
‘யாராவது நான் சித்தியைப் பற்றி விசாரிப்பதை அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டால் அவர்கள் உசாராகிவிடுவர்.’
‘ஆனாலும் சித்தியிடம் என்ன சொல்லி, அவள் என்ன செய்ய முடியும்?’
‘அவளே இவர்களுக்குப் பயந்து தானே ஓடிவிட்டாள்.’
அங்கு பூ விற்கும் பாட்டி கொஞ்சம் வயதானவராக இருந்தார்.
அவருக்கு சித்தியைப் பற்றி தெரிஞ்சிருக்கலாம்.
‘இது சரியா? தவறா?’ என்று யோசித்துக்கொண்டே இல்லாமல் ஏதாவது ஒரு முடிவெடுக்க வேண்டும்.
சாமி கும்பிட்டு விட்டு வெளியில் வந்தாள்.
“பாட்டி. உங்களுக்கு என்னோட சித்தியைப் பற்றி தெரியுமா? அவங்க எங்க இருக்காங்க?”
“யாரு உன் சித்தி கலைவாணியைப் பத்தியா கேட்கறே? ஏன் தெரியாம? சின்ன வயதில் உன்னை இடுப்பில் தூக்கி வச்சுக்கிட்டே அலைவாளே?”
“அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியுமா பாட்டி?”
“எதுக்கு இப்ப கேட்கறே? அவ பத்தி நான் ஏதாவது சொன்னேன்னு தெரிஞ்சுச்சு உன் அம்மா பத்ரகாளியா மாறிடுவாளே?” என்றார் பயத்துடன்.
எதற்காக சித்தி பற்றி விசாரிக்கிறோம் என்று அவளால் கூற முடியவில்லை.
“இல்ல பாட்டி. சும்மாதான் அம்மாவும், அப்பாவும் அவங்களைப் பத்தி பேசிக்கிட்டிருந்தாங்க. அதான் கேட்டேன்.”
“இப்பவுமா அவளைப் பத்தி பேசிக்கிட்டிருக்காங்க. விட்டது தொல்லைன்னு இருந்தவங்கதானே அவங்க.” என்றார் பாட்டி யோசனையுடன்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது பாட்டி. எனக்கு பரிட்சைக்கு நேரமாச்சு. நான் வர்றேன்.”
கிளம்பிவிட்டாள்.
அரை நேரத்தில் தேர்வு முடிந்துவிடும். அதன் பிறகு வீட்டிற்குள் அடைபட்டுவிட்டால் தன்னால் மீள முடியுமா?
ஆனால் அவளுக்குப் போக்கிடமும் இல்லையே.
மதியம் பள்ளி விட்டு மெதுவாக வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தாள்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவன் அவளை உரசியவாறு வண்டியை நிறுத்தினான்.
அவன் மைனரின் மகன்.
“எங்கப்பாவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு. நீதான் எங்கம்மாவோட சக்களத்தின்னு தெரிஞ்ச உடனே எனக்கு கோபமே வரலை. உனக்காகவே எங்கப்பன் மண்டையில் கல்லைத் தூக்கிப் போடலாம்னு இருக்கு.” என்றவாறே அவன் பேசப் பேச அவள் பயந்து போய் வீட்டிற்கு ஓடி வந்துவிட்டாள்.
“எங்க போயிடப்போறே? கடைசியில் என் வீட்டுக்குத்தானே வரப்போறே? அங்க வச்சு உன்னைக் கவனிச்சுக்கிறேன்டி.”
சென்ற வாரம் வரை குழந்தைத்தனத்துடன் இருந்த அவள், கண்ணனின் அருவருப்பான பார்வையால் உலகம் உணர்ந்த பெண்ணானாள்.
அவன் மட்டும் அன்று அப்படி பார்க்காமல், மற்ற ஆண்கள் போன்று ஆசைப் பார்வை பார்த்திருந்தால், அவள் யோசித்திருக்கவே மாட்டாள்.
“பாப்பாவுக்கு பரிட்சை எல்லாம் முடிஞ்சுடுச்சு.” என்று அவளது தந்தை யாரிடமோ பேசுவது தெரிந்தது.
இனி அவள் நிம்மதி பறிபோய்விடுமோ?
அன்று இரவு. அவள் பெற்றோர் தூங்கிய பிறகும் தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்த அபர்ணா அந்த முடிவிற்கு வந்தாள்.
தன்னை மாய்த்துக்கொள்வதென்று.
தன்னிடம் உள்ள நகப்பாலீஸ் எல்லாவற்றையும் எடுத்து ஒரு குவளையில் ஊற்றினாள். எப்போதோ அறிவியல் ஆசிரியை அது உடல்நலத்திற்குக் கேடு என்று சொன்னது நினைவில் இருந்தது.
அவள் குடிக்கப் போகும் நேரத்தில்
“அம்மு. வேண்டாம்.” என்று மெல்லிய குரல் பதறியது.
தன் தாய்தான் வந்துவிட்டாளோ என்று பயந்து போனாள்.
அவளைப் பார்த்த உடன் தினமும் கண்ணாடியில் பார்க்கும் தன் முகம், யோசித்தவளுக்கு அவள் யார் என்று புரிந்தது.
“சி.த்.தீ.ஈ.ஈ…” என்ற அலறலுடன் அவள் காலடியில் சென்று விழுந்தாள் அபர்ணா.
“மெல்லடா.” என்று கண்ணீர்க்குரலில் அவளை அணைத்துக்கொண்டாள்.
“வா. உடனே இங்கிருந்து போயிடுவோம். இப்ப எதுவும் பேச வேண்டாம்.”
எதுவும் எடுத்துக்கொள்ளாமலே, இருவரும் கொல்லைப்புற வாயில் வழியாக வெளியேறினர்.
அதுவரைக்குமே அவளது பெற்றோர் எழுந்து வரவில்லை.
சிறிது தூரம் சென்றதும்தான் அவள் பேசினாள். அங்கே அவர்களுக்காக குமரன் காத்திருந்தான்.
“நீங்க எப்படி வீட்டுக்குள் வந்தீங்க?”
“கொல்லைப்புற வாசலை என் அக்கா இன்னும் மாத்தவே இல்லை. சந்தேகத்துடன் தான் திறந்தேன். உன்னுடைய நல்லநேரம். அப்படியே இருந்தது.” என்றாள் நிம்மதிப் பெருமூச்சுடன்.
ஆம் அன்று அவளுக்கு நல்ல நேரம் இருந்திருக்கிறது. சந்தைக்குப் போன பாட்டி அங்கே கலைவாணியைப் பார்க்க நேர்ந்தது.
உடனே அபர்ணாவின் சோர்ந்த முகமும், சித்தியைப் பற்றிய ஏக்கமுமாக அவள் பேசிய விதம் பாட்டிக்கு என்னவோ விபரீதம் என்று உணர்த்தியது.
அவர்தான் கலைவாணியிடம் அவளுக்கு என்ன பிரச்சினையோ என்று கூறியிருந்தார்.
ஏற்கனவே தன் சகோதரியின் சுயநலம் பற்றி அறிந்தவள்தானே அவளும்.
தான் தூக்கி வளர்த்த பிள்ளை. உடனே கணவனிடம் சொல்லிவிட்டாள்.
இருவரும் பொழுது சாயும் வரையில் காத்திருந்து அவளை அழைக்க வந்துவிட்டனர். குமரனிடம் சைக்கிள் தான் இருந்தது.
“சரி கலை. நீ அம்முவை அழைச்சுட்டுப் போ. நான் மெதுவா நடந்து வர்றேன்.” என்றான் குமரன்.
“வேண்டாங்க. அவங்க யாராவது விழிச்சுட்டா அம்முவைத் தேட ஆரம்பிச்சிருவாங்க. நாம மூனு பேருமே போவோம்.” என்றாள்.
ஒல்லியான தேகத்துடன் இருந்த குமரன் மூச்சு வாங்க, சைக்கிள் மிதிக்க, முன்புறம் கம்பியில் கலைவாணி அமர்ந்திருந்தாள். பின்பக்கம் கேரியரில் அபர்ணா அமர்ந்திருந்தாள்.
தங்களுடன் வைத்திருந்தால் அபர்ணாவின் பெற்றோர் எளிதில் கண்டு பிடித்து அவளை அழைத்துச் செல்வர் என்று அவர்கள் யோசித்த போதுதான், குமரனின் நண்பர் காவலர் கந்தசாமி அவர்களுக்கு உதவ முன் வந்தார்.
அப்போது தங்கள் வீட்டில் வைத்திருந்தது, மட்டுமல்ல அவளை ‘நந்தவனம் இல்லத்தில்’ சேர்க்க உதவியரும் அவர்தான்.
கதவைத் தட்டும் ஒலியில் நினைவலைகள் அறுந்து போக, கதவைத் திறந்தாள்.
“உன் கண்களுக்கு ஆண்களைத் தவிர வேறு யாரும் தெரிய மாட்டார்களா?” என்று கோபம் தொனிக்க நின்றிருந்தான் சித்தரஞ்சன்.
காதல் வளரும் ……
error: Content is protected !!