Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மறக்குமோ மாமன் எண்ணம்

அம்மையப்பன் 4

அம்மையப்பன் 4

 

டேய்.. அமுதா.. நம்ம ஜவுளிக்கடையில வந்த பண்டல்ல ஏதோ டேமேஜ் இருக்கான்.. அத என்னன்னு கொஞ்சம் பாத்துக்கோடா..

 



Advertisement

யோவ் மாமா.. என்னைய அப்படி கூப்புடாதன்னு எத்தனை வாட்டி சொல்றது.. ஊருல இல்லாத பேரா ஒன்ன வச்சுருக்கியே.. அத முழுசா சொல்லித்தான் கூப்புடேன்.. என போனில் கடுப்படித்தான் அமிர்தவல்லி திருநாவுக்கரசுவின் புதல்வன் அமுதன்..

 

ஏண்டா.. இப்படி சலிச்சுக்கிட்டு சொல்ற.. உன்ற பேருக்கு என்ன குறைச்சல்.. அழகான தமிழ் பேரா அமுதன்னு நல்லாத்தாண்டா வச்சுருக்கேன்.. அமுதா.. என குறும்புசிரிப்புடன் மீண்டும் அதனையே சொன்னான் அகத்தியன்..

Advertisement

 

Advertisement

யோவ் மாமா.. வந்தேன் மொத டெட் பாடி நீதான்யா.. நீ சொல்றதுனால தான் உன்ற குள்ளக்கத்திரிக்கா மவளும் அப்படியே சொல்றா..

 

அடேய் என்ற அம்மணிய குள்ளக்கத்திரிக்கா சொல்லதடா.. அவ நல்லா உசரமாத்தான் இருக்கா.. என பொய்யாய் மிரட்டினான்..

Advertisement

 

ஏதே உசரமா இருக்காளா.. மாமே கொஞ்சமாச்சும் மனசாட்சியோட பேசு.. நான் உன்ற மவக்கூட பேசணும்னா கீழே குனிஞ்சு தான் பேசணும்.. என விடாமல் கேலி செய்ய.. முகம் கடுகடுக்க அவர்களின் உரையாடலை கேட்டுக்கொண்டிருந்தாள்.. கார்குழலி..

 

ஐயா.. நீங் எதுக்கு இவருகூட எல்லாம் பேசிகிட்டு இருக்கீங்.. அவரு பனைமரம் உசரம் வளர்ந்தா நம்மளா பொறுப்பு.. ஒட்டடைகுச்சிக்கு முன்னாடி எல்லாரும் குள்ளமாத்தான் தெரிவோம்.. அதுனால எல்லாரும் குள்ளம்ன்னு அர்த்தமா என இவள் கடுகாய் பொறிய.. அமுதன் காண்டானான்..

 

அடியே குள்ளச்சி.. உன் உசரத்துக்கு இம்புட்டு பேச்சு ஆகாதுடி.. அப்பனும் மவளும் மனசாட்சியே இல்லாம பேசுறீங்களே.. புழுவினி மூட்டைங்களா.. யோவ் மாமா உனக்கோசரம் இவ பேச்சை எல்லாம் கேட்க வேண்டியதா இருக்கு..

 

ஐயா.. இவங்கள பேச வேண்டாம்ன்னு சொல்லுங்.. இல்ல நா அத்தை மாமாக்கிட்ட சொல்லி கொடுத்துபோடுவேன்..

 

இன்னும் போட்டு கொடுக்கிற புத்தி போகுதா பாரு.. இருடி இந்த வாரம் அங்கன தான் வரேன்.. வந்து ஓவரா பேசுற வாய பெவிக்கால் போட்டு ஒட்டுறேன்.. அப்பொறம் எப்படி போட்டு கொடுக்கிறேன்னு பாக்கலாம்.. என மேலும் ஏதோ சொல்லப்போக.. அகத்தியன் அதட்டினான்.. 

 

அடேய் வாப்பொட்டிய சாத்துடா.. லொட லொடன்னு பேசிக்கிட்டே இருக்க.. மொத நாஞ்சொன்ன வேலைய போயி பாரு.. அப்படியே நம்ம மில்லுக்கும் ஒரு எட்டு போயிட்டு வா..

 

ஹக்கும்.. உன்ற மவள ஒரு சொல்லு சொல்லிடக் கூடாதே.. உடனே ஆட்டத்த கலைச்சுபோடுவ.. சரி அவ சாப்ட்டாளா.. போன தடவை மார்க்கு கம்மியாகிடுச்சுன்னு மேட்டூர் அணை நெம்புற அளவுக்கு அழுதாலே இந்த தடவை என்னாச்சு..? என நக்கலாய் வினவினான்..

 

இந்த தடவை நான்தான் மொத மார்க்கு என பெருமையாக கூறினாள்..

 

ஹுக்கும்.. எடுத்துட்டாலும் கழுதையில.. என அவன் மேற்கொண்டு ஓர் பிரச்சனையை ஆரம்பிக்க..

 

ஏலேய் மறுக்கா ஒன்ன இழுக்காத.. 

 

சரி.. சரி.. அடியே குள்ளச்சி.. மாமா வரும்போது என்ன வாங்கிட்டு வர.. என அவன் கேட்க.. குழலி கன்னத்தில் விரல் கொண்டு தட்டி யோசித்தாள்.. என்ன சொல்லலாம்.. என அவள் தீவிரமாக யோசித்து.. ஒன்றை கூறவர..

 

வழக்கம் போல திங்கிறததான் சொல்ல போற.. நானே ஏதாச்சும் வாங்கிட்டு வரேன்.. தீனிப்பண்டாரம் என கேலியாக கூறி போனை வைக்க.. இதழ் துடிக்க.. கண்கள் கோபத்தில் சிவக்க.. அடக்கப்பட்ட அழுகையுடன் கார்குழலி தந்தையை பார்த்தாள்..

 

அச்சோ என்னம்மணி.. அவன் கிடக்கான் லூசுப்பைய.. வேணும்னே செய்றான் சாமி.. அதுக்கெல்லாம் என்ற மவ அழலாமா.. வரட்டும் இந்த தடவை அவன் கையகால இனுங்கிபோடுறேன்.. என அகத்தியன் மகளை அணைத்து.. சமாதானம் செய்ய.. குழலி தந்தையின் தோள் சாய்ந்தாள்..

 

மாமா.. எப்போ பாத்தாலும் இப்படித்தான் செய்யும்.. நான்தான் மறுக்கா மறுக்கா ஏமாறுறேன்.. என சோகமாய் கூறினாள்..

 

இவள் இங்கு புலம்பிக்கொண்டிருக்க.. அதற்கு காரணமானவனோ.. தன் மனதிற்கினியவளுடன் பேசிக்கொண்டிருந்தான்..

 

என்னாச்சு என்ற மருமவ ஏன் இப்போ உம்முனின்னு இருக்கா.. ஆரு என்னஞ்சொன்னாங்க என்ற சாமிய..

 

பெரிம்மா.. எல்லாம் அண்ணே கைங்கரியம் தான்.. வழக்கம் போல நங்கைகிட்ட என்ன வேணும்ன்னு கேட்டு.. ஏகடி(கேலி) பண்ணிடுச்சு.. என போட்டுக் கொடுத்தாள் ஷாலினி.. பவளமல்லி திருச்செல்வத்தின் இரண்டாம் மகள்.. மூத்த மகள் யாழினி கோவையில் இன்ஜினியரிங் படிக்கிறாள்.. இவள் ப்ளஸ் டூ படிக்கிறாள்.. குழலி சைன்ஸ் & மேத்ஸ் குரூப்.. ஷாலினி காமர்ஸ் குரூப்..

 

அந்த கழுதைக்கு இதே வேலையா போச்சு.. நீ வுடு சாமி.. இந்த தரம் வரப்போ சீவக்கட்டயால வெலுத்துப் போடுறேன்.. என அமிர்தவல்லி கூற.. குழலி மனம் அதை ஏற்கவில்லை..

 

அய்யோ அத்த.. மாமா எப்போவும் போலத்தான் ஏகடி பண்ணுச்சு.. ஆனா வரப்போ எனக்கு பிடிச்ச மாதிரித்தானே வாங்கிட்டு வரும்.. வுடுங்க.. என ஷாலினியை முறைத்தவாறு கூற.. அங்குள்ளோர் அனைவரும் சிரிப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்..

 

குழலியை அமுதன் எவ்வளவு கேலி செய்தாலும் அந்நொடியே அதனை மறந்து விடுவாள்.. இப்பொழுது கூட அமுதன் மீது சிறிது நேரம் வருத்தமாக இருந்தவள்.. அவனை தன் அத்தை திட்டுவதைப் பொருக்காது.. மாமனுக்காக பரிந்து பேசுகிறாள்.. அடித்தாலும், அழுக வைத்தாலும்.. அமுதன் அழைத்தால் அடுத்த நிமிடமே.. எல்லாம் மறந்து மாமா என அவன் முன் நிற்பாள்.. அதனால் தான் பெரும்பாலும் இவர்களின் விஷயத்தில் யாரும் அவ்வளவாக தலையிடுவதில்லை.. 

 

ஹுக்கும்.. அண்ணே ஏதாவது சொன்னா நொழுவ வேண்டியது.. அத நான் இங்க சொன்ன என்னைய முறைக்க வேண்டியது.. என முகத்தை தோள்பட்டையில் இடித்தவாறு நொடித்துக் கொண்டாள் ஷாலினி..

 

அது மட்டுமா.. அண்ணே உன்ன என்ன ஏகடி பண்ணாலும் கடைசில உனக்கு பிடிச்சததான் வாங்கும்.. அவர உனக்கோசரம் ஏசுனா நீ முகத்தை தூக்குவ.. உங்களுக்கு நடுவால வந்தா எங்க தலை தான் உருளும்.. என பெரியமனிசியாய் அலுத்துக் கொள்ள.. அகத்தியன் மருமகளின் பேச்சில் வாய் விட்டு சிரித்தான்..

 

வர வர வாயி ரொம்பத்தான் நீளுது.. என மகளின் குமட்டில் குத்தினார் பவளமல்லி..

 

ஆஆ.. மாமா பாருங்.. என சலுகையாய் அகத்தியனின் அருகே செல்ல..

 

ப்ச் அக்கா வுடு.. 

 

உன்ற மருமவளுக்கு பேச்செல்லாம் பெரியமனுசியாட்டம் நல்லாத்தான் வரும்.. அத கொஞ்சம் படிப்புலயும் காட்ட சொல்லு.. என அவர் நொடிக்க.. ஷாலினி முகம் அஷ்டகோணலாகியது..

 

பாத்தியா படிப்புனுஞ் சொன்னதும் முகம் மாறுறத.. குழலி மொத மார்க்கு எடுத்துருக்கா.. அம்மணி எப்படி பாசாவது ஆனீங்களா என அவள் முகத்தை பார்த்தவாறு கேட்க.. ஷாலினி திருதிருவென விழித்தாள்..

 

உன்ற முழியே சரியில்லையே.. குழலியோடதான் நீயும் வந்தியா.. உன்ன பாக்கவேயில்லையே.. என சந்தேகமாய் மகளைப் பாத்தவர்.. நீ சொல்லு சாமி.. இவ பாசா என குழலியிடம் கேட்டார்..

 

அது.. அத்தை.. அது.. அது வந்துங்.. என குழலி இழுக்க.. அதில்லயே உண்மை நிலவரத்தை வீட்டினர் புரிந்து கொண்டனர்.. 

 

அம்மணிக்கு இந்த தடவை எத்தன பாடத்துல போச்சு.. என வினவ இருவரும் வாய் பேசவில்லை..

 

பவளமல்லி கோபம்மிக ஓரத்தில் இருந்த சீவகட்டையை எடுக்க போக.. ஷாலினி பயந்து போனாள்..

 

அப்பச்சி.. அப்பத்தா.. அப்பச்சி.. அப்பா.. பெரியப்பா.. மாமா.. என அகத்தியன் பின்னின்று.. நொடியில் தொண்டை கிழிய அனைவரையும் கூப்பிட்டாள்..

 

பவளம் என்ன பண்ற நீ.. எப்போ பாத்தாலும் வயசுக்கு வந்த புள்ளைய அடிச்சுட்டுகிட்டே கிடக்க.. என கடிந்தவாறு வந்தார்.. மரகதம்.. 

 

ஹுக்கும் எல்லா நீங் குடுக்கிற இடம்தான்.. உங்க கண்ணு இந்த தடவையும் பரீட்சையில பெயிலாகி வந்துருக்கு..

 

அக்கா விடுங்.. அம்மணி அடுத்த தடவை பாசாகிடும்..

 

என்றா தம்பி.. இதே வார்த்தைய இந்த கழுதைக்காக எத்தன வாட்டி சொல்லிருக்கன்னு நியாபகம் இருக்கா..

 

ப்ச் விடு.. பவளம் என்ற பேத்தி படிக்கலைன்னாலும்.. திறமைக்காரி என அம்மையப்பன் புகழ.. ஷாலினி மிதப்பாய் தன் அன்னையை பார்த்தாள்..

 

பாத்திங்களா திமுரா பாக்குறத.. ஐயா.. இவ கொஞ்சம் அத்தை மாதிரி இருக்காங்குறதுக்காக.. அதிகம் செல்லம் கொடுக்குறீங்.. அதான் கழுதைக்கு கொழுப்பு அதிகமாகிடுச்சு.. என பவளம் கூற அம்மையப்பன் முகத்தில் ஓர் நொடி ஏதோவொரு வலி மின்னி மறைந்தது.. நல்லவேளை அதனை யாரும் பார்க்கவில்லை என அவர் நினைக்க.. ஒரு முகம் மட்டும் அதனை கவனித்துவிட்டது..

 

அடியே ஒழுங்கா இந்த வருசம் படிச்சு பாசாகி.. காலேசுக்கு போற வழிய பாரு.. இல்லன்னா நம்ம வூட்டுல உள்ள மாடுகள மேய்க்க விட்டுபோடுவேன் என உண்மையாகவே மிரட்டினார்..

 

ஷாலினிக்கு படிபென்றாலே ஆகாத விஷயம்.. ஒரு சிறு அடிபட்டாலே அதை வைத்து பள்ளிக்கு லீவ் போடலாமா என யோசிப்பாள்.. அப்படியில்லை என்றால் இவளாகவே ஒன்றை இழுத்து வைத்துக்கொள்வாள்.. அவளுக்கு கைவினைப் பொருட்கள் செய்வதில் தான் ஆர்வம்.. ஒரு சிறு பேப்பர் கிடைத்தாலே போதும்.. அதில் ஏதேனும் செய்து கொண்டு இருப்பாள்..

 

சுவர் அலங்கார பொருட்கள், காகித பூக்கள், வளையல் ஜிமிக்கி செய்வது, கூடை பிண்ணுவது.. ஒயர் கூடையில் ப்ளவர் வாஷ் செய்வது.. என ஏதேனும் செய்வாளே அன்றி புத்தகம் எடுத்து வைத்து ஒருநாளும் படித்ததில்லை.. இதுவரை பார்டரிலாவது தேர்ச்சி பெற்று ப்ளஸ் டூ வரை வந்திருக்கிறாள்.. 

 

ப்ச் அக்கா.. உங்களுக்கு எத்தனை தடவை சொல்றதுங்.. அவளுக்கு விருப்பமானது எதுவோ.. அதுவே செய்யட்டும் விடுங்.. வெறும் படிப்பை வச்சே பேசாதீங்.. படிக்காதவங்கலாம் சாதிக்கறது இல்லையா.. இங்க சுவத்துல மாட்டிருக்கிறது என்ற அலுவலகத்துல இருக்கிறது எல்லாம் என்ற மருமவ செஞ்சது.. அம்மணி கைல காதுல கழுத்துல போட்ருக்குறதும் அதுவே தானுங் செஞ்சது.. இதெல்லாம் உங்களால செய்ய முடியுமா.. இந்த பொருளு எல்லாம் கடையில வாங்குனா எம்புட்டு வில சொல்றாங்க.. எல்லாருக்கும் எல்லாம் வராதுங்கக்கா.. என கண்டிப்புடன் கூற.. ஷாலினி முகம் மகிழ்ச்சியில் மின்னியது..

 

பவளமல்லிக்கு அவ்விஷயத்தில் பெருமை தான்.. வீட்டிற்கு வரும் சொந்தங்கள் இதனை பார்த்து நன்றாக இருக்கிறது என சொன்னாலே.. மகளின் புகழ் பாடிவிடுவார்.. அது அவள் படிப்பிலும் வேண்டும் என்பதுதான் இவர் கவலை.. இதில் உள்ள ஆர்வம் சிறிதளவாவது படிப்பில் வேண்டுமே என அடித்துக்கொள்கிறார்..

 

கண்ணு நீ இது பண்றதெல்லாம் சந்தோசம் தாண்டா.. அதோட படிப்பும் முக்கியமில்ல சாமி.. நீ எப்படியாவது பன்னென்டாவது பாஸ் பண்ணாத்தானே பைன் ஆர்ட்ஸ் படிப்புக்கு காலேசுக்கு அனுப்ப முடியும்.. அப்போ இதைப்பத்தி இன்னும் நல்லா தெரிஞ்சுக்கலாம் சாமி.. என அவள் தலையை வருடி பாசமாக கூற ஷாலினியின் விழிகள் விரிந்தது..

 

மாமா.. நிசமா என்னை பைன் ஆர்ட்ஸ் படிக்க வைப்பிங்களா என மகிழ்ச்சியும் ஆர்வமுமாய் கேட்க..

 

அகத்தியன் சிரிப்புடன் ஆமோதிப்பாய் தலையத்தான்.. மாமனை ஒருமுறை இருக்க அனைத்தவள்.. கண்டிப்பா நான் ப்ளஸ் டூ பாஸ் செய்துடுவேனுங் மாமா.. என சொல்லியவாரு குழலியை இழுத்துக் கொண்டு ஓடினாள்..

 

அடியே பாத்துப்போடி.. என்ற மருமவள தள்ளிவிட்டுபோடதா.. என கத்தியவர்.. தம்பி இப்போ நீ சொல்லியிருக்கில அதுக்காக ஒருவாரம் புத்தகத்த தூக்கி வச்சுக்குவா.. அப்பொறம் பழைய குருடி கதவ திருடி கத தான்.. இன்னும் முழுப்பரீட்சைக்கு ஒரு மாசம் தான் இருக்கு என கவலையாக சொன்னார்..

 

அதெல்லாம் ஒன்னுமில்லங் அக்கா.. அம்மணி பாசாகிடும் விடுங்.. என தன் தமக்கையை தேற்றினான் அகத்தியன்.. 

 

அம்மையப்பன் அமைதியாக மாடியில் நின்று எதிரே உள்ள இயற்க்கை காட்சிகளை இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தார்.. இவ அத்தை மாதிரி இருக்காங்குறதுக்காக.. அதிகம் செல்லம் கொடுக்குறீங்.. என்ற வாக்கியமே அவர் செவியினுள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தது.. உண்மைதானா அவள் மரகதம் போல் இருப்பதினால்தான்.. நான் அதிகம் பாசம் வைத்திருக்கிறேனா என அவர் மனதிடமே அவர் கேள்வி கேட்க.. அதுவோ நிர்த்தாட்சண்யமாய் மறுத்தது.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!