Skip to content
Post Views: 13,936
அத்தியாயம் 3
“அந்த பொண்ணுகிட்ட பேசினதை ஒன்னுவிடாம என்கிட்ட சொல்லு” என மிரட்டினான் அன்பரசு.
“ண்ணா ண்ணா… விட்டுடுங்கண்ணா, இனிமே அப்படி பண்ணமாட்டேன்” என வாயில் ரத்தம் ஒழுக கெஞ்சினான் கஜேந்திரன்.
“இதான் ப்ரப்போஸ் பண்றதாடா? பெரிய மனுசன்கிட்டயும், பொட்டபிள்ளைங்ககிட்டயும் வீரத்தை காட்டவாடா ஜிம்முக்கு வர?” என மீண்டும் உதைத்து, “சைக்… மனுசனாடா நீ? இனிமே ஜிம் பக்கம் வந்த… உரிச்சு உப்புகண்டம் போட்டுடுவேன். கிளம்புடா” என்றான் ஆத்திரத்தோடு.
Advertisement
“ண்ணா இன்னும் இரண்டு மாசத்துல காம்ப்படேஷன் வருதுண்ணா” என இருகை கூப்பி கெஞ்சினான்.
“அந்த பொண்ணுகிட்ட என்ன சொன்ன? உன் ஹைட்டுக்கும் வெய்ட்டுக்கும் என்னாலதான் உன்னை சமாளிக்க முடியும்னு” என பல்லை நெறித்தவன், “நீ பேசினதுக்கு அர்த்தம் கூட தெரியாம அந்த புள்ள நின்னுருக்கு, அதுக்கப்புறமும் வம்பிளுத்திருக்க” என மீண்டும் உதைத்தவன், “நீதான் அதுல சேம்ப்பியன்னு சொல்லியிருக்கியே, எதாவது அந்த மாதிரி படத்துல நடிச்சி உன் திறமையை காட்டு” என்றான்.
“ண்ணா இனி எந்த பொண்ணுகிட்டயும் இப்படி பேசமாட்டேன்னா” என அன்பரசின் காலை பிடிக்க, சிறு உதறலில் அவனிடமிருந்து தன்னை விடுவித்தவன், “உன்னைலாம் சும்மா விடற நிலையை நினைச்சாதான்டா வேதனையா இருக்கு. கம்ப்ளைன்ட் கொடுக்கத்தான் சொன்னேன். வயசான காலத்துல கோர்ட்டு கேசுனு என்னால அலைய முடியாது… இனிமே இதுமாதிரி நடக்காம பார்த்துக்கிட்டா போதும்னு என்கிட்ட கெஞ்சும்போது, இதுக்குத்தான் ஜிம் நடத்துறேனானு எவ்வளோ அவமானமா இருந்தது தெரியுமா?
Advertisement
பெரியவர் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா மிரட்டியாவது கம்ப்ளைன்ட் கொடுக்க வச்சிருப்பேன். என்ன பண்றது அவர் நிலையில இருந்தும் யோசிக்கனும். தவிர எக்ஸாம் டைம்ல அந்த பொண்ணுக்கும் மன உளைச்சலாகிடும்னு உன்னை சும்மா விடுறேன்.
Advertisement
இத்தனைக்கு பிறகு உன்னை ஜிம்முக்கு வர அனுமதிச்சேன்னா என்னை விட கேவலமானவன் வேற யாரும் இருக்க முடியாது. வேற ஜிம்ல சேர்ந்து ஆணழகனாவியோ, இல்ல உன் விருப்பப்படி பொண்ணுங்ககிட்ட ஆம்பிளைனு நிரூபிப்பியோ… என்னவோ செய். ஆனா இனி நீ இங்க வரக்கூடாது” என்றான் கட்டளையாக.
வெட்கிய முகத்தோடு கஜேந்திரன் வெளியேற, “கஜேந்திரா” என உரக்க குரல் கொடுத்து, “பழிவாங்குறதா நினைச்சோ, அந்த பொண்ணோட அப்பன் வயசனவர்னோ எதாவது ஏடாகுடம் செய்த… அதுக்கப்புறம் உன் வருங்கால பொண்டாட்டிகிட்ட கூட உன்னை ஆம்பிளைனு நிரூபிக்க முடியாத மாதிரி செய்திடுவேன்” என்று கடுமையாய் எச்சரித்து உடற்பயிற்சி செய்ய ஆயத்தமானான் அன்பரசு.
இருபது நாள் முடிந்திருக்க, முல்லையின் இறுதியாண்டு பரிட்சைகளும் முடிந்தது. கஜேந்திரனால் ஏதும் தொல்லையா என கடந்த இருபது நாளாக முல்லையை கவனித்துக்கொண்டுதான் இருந்தான் அன்பரசு.
Advertisement
அப்படியேதும் இல்லை. ஆனால் முல்லை முகத்தில் செழிப்பில்லை. சிறு வயதில் எப்பொழுதாவது ரங்கசாமியோடு காம்ப்ளக்சிற்கு வருவாள். இவங்ககிட்ட எதுக்குப்பா காசு வாங்குறிங்க என்பாள். இது நம்ம கடைடா, இவங்க இங்க இருக்கிறதுக்கு பணம் கொடுக்குறாங்க என்று ரங்கசாமி சொல்லும்போது பெருமையாய் பார்ப்பாள் தந்தையை.
முல்லை பெயரில் மட்டுமல்ல, முகமும் பூவைப்போல மலர்ந்துதான் இருக்கும். ஆனாலும் முல்லைனு பேர் வச்சதுக்கு பதிலா குண்டுமல்லினு வச்சிருக்கலாம். பொருத்தமா இருக்கும் என ஒருசில முறை நினைத்திருக்கிறான்.
உடற்பயிற்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்த பின்னே முல்லையை பார்க்கும் வாய்ப்பும் அமையவில்லை, தந்தைக்கும் ரங்கசாமிக்கும் அடிக்கடி சின்ன சின்ன பிரச்சனைகள் வர அன்பரசும் அவளை யோசிக்கவில்லை.
நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு கடந்த இருபது நாட்களாகத்தான் முல்லையை தினமும் பார்த்தான். இப்பொழுதும் கொஞ்சம் பருமனான உடல்வாகுதான். ஆனால் முகத்தில் கபடமற்ற பழைய சிரிப்பில்லை.
ம்… சிறுமிதான் தற்போது குமரி ஆகிவிட்டாளே… அதோடு கஜேந்திரன் பேசிய பேச்சிற்கு சிரிப்பு மறந்து போனதில் ஆச்சர்யமில்லை. இனி கஜேந்திரன் இவளை தொடரமாட்டான் ஆதலால் நாளடைவில் சரியாகிவிடுவாள் என நினைத்தபடி பயிற்சி செய்துகொண்டிருந்தான்.
பின்னே ஆதிராஜ் சொன்ன முல்லை மீதுள்ள தவறையும் நினைத்தவன், மாதக்கணக்கில் பின் தொடர்ந்திருக்கிறான். விருப்பமின்மையை திடமாய் காட்டியிருந்தால் இத்தனை துணிச்சல் வந்திருக்குமா அவனிற்கு? தந்தைதான் வயதானவர், ரங்கசாமியின் தம்பி, மற்றும் அக்காள் மகன்கள் இருக்கிறார்களே? அவர்களிடமாவது சொல்லியிருக்கலாம் அல்லவா?
எவ்வித எதிர்ப்பையும் காட்டவில்லை என்றால் அவளிற்கு விருப்பம் என்றுதானே எவனாக இருந்தாலும் நினைப்பான் என முல்லை மேல் கோபமும் வந்தது.
தனது சிறு வயதிலிருந்தே வனிதா, நாராயணன் இருவரும் ரங்கசாமி மற்றும் ஜானகி மீது அதீத பாசம் வைத்திருப்பதை தந்தை மூலம் அறிந்தவன்தான். ஆனால் முல்லையை தத்தெடுத்த பின்னே நடந்த சின்ன மனஸ்தாபத்தையும், ரங்கசாமியின் அன்னை மறைவிற்கு பின்னில் ஆரம்பித்து தற்போது வரை நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளையும் அறியாத அன்பரசு… எப்போவாவது அவங்கம்மாவையோ, அல்லது தம்பி மகன், அக்காள் மகன்களையோ பார்த்தால் அவ மேல உள்ள தப்பையும் சொல்லனும் என நினைத்துக்கொண்டான்.
உடற்பயிற்சி முடித்து வழக்கம்போல் எட்டு மணிக்கு வீட்டிற்கு வர, “ப்பா தூக்கம் வருது” என்றாள் தகப்பனிற்கு காத்திருந்து சோர்ந்த பாவனையில்.
“சாப்பிட்டியா ஜனனிம்மா?”
“சாப்பிட்டாச்சு, ஹோம்வெர்க்கு முடிச்சாச்சு, பால் குடிச்சிட்டு வாயும் கொப்பளிச்சாச்சு”
“அப்படியா? வெரிகுட்” என பாராட்டியவன், “சரி வா தூங்கலாம்” என்று அத்தைக்கு அறைக்கு அழைத்துச் சென்று கட்டிலில் தானும் படுத்தான் மகளோடு.
“ப்பா… நல்லா நடிச்சிங்களா?”
“நடிச்சேனா? யார்கிட்டடா?” என்றான் புருவம் சுருக்கி.
“ஷுட்டிங்தான போனிங்க? இல்ல பாடிபில்டிங் காம்படேஷன்க்கா?” என தற்போது சிறுமி புருவம் சுருக்க, ஓஹ் என “காம்படேஷன் போகலடா, ஷீட்டிங்க்குத்தான் போனேன். நல்லா நடிச்சேன்” என்றான் புன்னகையோடு.
“ம்… குட் அப்பா” என்றவள் முகத்தில் எதோ கேள்வி இருக்க, மகள் எதையோ தன்னிடம் எதிர்பார்க்கிறாள் என யோசித்தான். ஆனால் ஏதும் நினைவில் வராமல் போக, “உன் சிங்கிங் காம்படேஷன் எப்போ?” என்றான்.
சிறுமியின் முகம் பிரகாசமாக, ஓஹ் இதைதான் நான் கேட்கவேண்டும் என நினைத்தாளா? எதிர்பார்க்குற அளவுக்கு ஜனனி குட்டி வளர்ந்துட்டாளா? என வியந்தவன், “என்னடா அப்படி பார்க்குற? காம்படேஷன் டேட் மறந்துடுச்சா?” என்றான் கிண்டலாக.
“எனக்கு நியாபகம் இருக்குப்பா, பெரியப்பாக்குத்தான் நியாபகம் இல்ல” என்றாள் வருத்தமாக.
தந்தையைதான் அப்படி சொல்வாள் ஆதலால், “சத்தியன் அப்பா போன் செய்தானா?” என்றான்.
“ம்” என்றவளுக்கு லேசாய் கண்கள் கலங்க, உதட்டை பிதுக்கினாள் அழுகையை அடக்க.
சத்தியன் மீது கோபம் வர, “இனி பெரியப்பா போன் செய்தா நீ பேசாத. ப்ரைஸ் வாங்கினாலும் சொல்லாத” என்றான் உண்மைக்கோபமாக.
“தாத்தாவும், ஆயாவும் பெரியப்பா வேலை டென்ஷன்ல மறந்திருப்பாங்கனு சொல்றாங்க” என மேலும் வெம்பினாள்.
“அவங்களை நான் பேசிக்கறேன்டா ஜனனிம்மா. டைம் ஆகிடுச்சு, நாளைக்கு அஞ்சு மணிக்கு எழுந்துக்கனும்ல? தூங்கு” என மகளை தன்மேல் படுக்க வைத்து தட்டிக்கொடுக்க, அன்பரசின் அரவணைப்பில் பிணக்கு தீர்ந்து உறங்க முற்பட்டாள் சிறுமி.
பத்து நிமிடம் கழித்து ஜனனி நன்றாக உறங்கியபின்னே மெத்தையில் படுக்க வைத்து வெளியே வந்தவன், “அப்பா சத்தியன் போன் செய்தான்னா ஒரு வாரத்துக்கு அட்டன் பண்ணாதிங்க, அத்தை நீங்களும்தான்” என்றான் கோபமாக.
மாதவன் “ஜனனிம்மா கம்ப்ளைன்ட் பண்ணுச்சா?” என்றார் இலகுவாக.
“அப்படி என்னப்பா அவனுக்கு?” என்றவன் முகம் கோபத்தில் சிவக்கவே பிறகுதான் அன்பரசு கோபத்தின் வீரியம் புரிய “போன் எடுக்கலனாலும் கவலைப்படமாட்டான் அன்பு. இன்னும்தான் விலகிப்போவான்” என்றார் வருத்தமாக.
“போனா போகட்டும். இப்ப மட்டும் என்ன ஒட்டிட்டா இருக்கான்?” என்றான் கோபமாகவே.
கல்பனா “இரண்டு வருசம் முன்ன நீதான கல்யாணம் செய்யும் எண்ணமிருந்தா வா, இல்ல எங்கேயோ இருந்துக்கோனு சொன்ன?” என்றார் பாவமாக.
“அவனுக்கு சப்போர்ட் பண்ணாத்த” என முறைக்க, சத்தியனிடமிருந்து அழைப்பு வந்தது அன்பரசுக்கு.
இந்த நேரம் மகள் அன்பரசோடுதான் இருப்பாள் என்றுணர்ந்து அழைத்தான். ஆனால் அன்பரசு அழைப்பை ஏற்காமல் போக, ஒருவேளை திரும்பவும் ஷீட்டிங்க்கு போய்ட்டானா? இல்லையே… ஜனனி பாப்பா இன்னைக்கு அப்பாகூட தூங்கப்போறேனு சந்தோசமா சொன்னுச்சே என நினைத்தபடி மீண்டும் அழைத்தான் தம்பிக்கு.
அன்பரசு அழைப்பை துண்டிக்க, தந்தைக்கு அழைத்தான். “அட்டன் பண்ணாதிங்கப்பா” என்றான் கட்டளையாக.
“பாவம்டா, வெளிநாட்டுல இருக்கான், என்னவோ ஏதோனு நினைக்கப்போறான்” என்றவர் மகனின் கட்டளையை மீறி பெரிய மகன் அழைப்பை ஏற்றார்.
“பாப்பா காம்ப்படேஷன் பத்தி கேட்க மறந்துட்டேன்ப்பா. இப்போதான் நியாபகம் வந்தது. தூங்கிட்டாளா?” என்றான் வருத்தமாக.
“ம் இப்போதான் தூங்கினா. நீ கேட்கலனு ரொம்ப வருத்தப்பட்டா”
தந்தையின் பேச்சில் ஜனனி காம்ப்படேஷன் பற்றி கேட்கிறான் எனப்புரிய, சற்றே கோபம் தணிந்தவன், தந்தையிடமிருந்து மொபைலை வாங்கி, தன் காதில் வைக்க, “ரொம்ப வருந்தினாளாப்பா?” என்றான் வருத்தமாக.
“பெத்த பிள்ளையை பத்தி நியாபகம் இல்லாதவன்லாம் எதுக்குடா உயிரோட இருக்கனும்? சாவு. பெரியப்பா செத்துட்டாரு, இனி நம்மளை கேட்கமாட்டாருனு பாப்பா புரிஞ்சிப்பா” என்றான் ஆற்றாமையாக.
“ஹா…ஹா…” என பலமாய் சிரித்தவன், “நான் செத்துட்டா என் பொண்ணை காரணமா வச்சி நீ கல்யாணம் செய்துக்காம இருந்துடலாம்னு பார்க்குறியா? அதெல்லாம் வேலைக்கே ஆகாது. ஜனனிம்மா என் பொண்ணு. உனக்கு பாப்பா வேணும்னா கல்யாணம் செய்து பெத்துக்கோ” என்றான் இலகுவாக.
அன்பரசு முகம் இலகுவானாலும் “நான் முன்னவே சொன்னதுதான். நீ கல்யாணம் செய்துக்காம நான் செய்துக்கமாட்டேன்” என்றான் முடிவாக.
சத்தியனிடமிருந்து பதிலில்லாமல் போகவே, “எனக்கெல்லாம் கல்யாண ஆசை வந்து இரண்டு மூனு வருசமாச்சு. உன்னால கல்யாணம் செய்துக்காம இருக்கேன், என் பாவத்த வாங்கிக்காத” என்றான் அண்ணனின் மனம் கரைய.
“காலைல பாப்பா எழும்நேரம் கால் பண்றேன்டா” என இணைப்பை துண்டித்தான் சத்தியன்.
“கோபம் போச்சா?” என சிரித்தார் மாதவன்.
“கோபம்தான். ஆனா ஃபீல் பண்ணிட்டானு மன்னிச்சு விட்டுட்டேன்”
கல்பனா “கல்யாண பேச்செடுத்ததும் கட் பண்ணிட்டானா?” என்றார் வருத்தமாக.
“ஆமாத்த. ஆனா இந்த முறை ஒரு முன்னேற்றம். கல்யாணப் பேச்செடுத்தாலே என்னால முடியாதுனு சொல்றவன், இப்போ அதை சொல்லாம கட் பண்ணியிருக்கான்” என்றான்.
“என்னா நேரமோ தெரியல, குடும்பமே சின்னாபின்னமாகிடுச்சு. பெரியவன் ஒரு திசையில, சின்னவன் ஒரு திசையிலனு. பெத்த கடமையை கூட செய்யாம அண்ணியும் அம்போனு விட்டுட்டு போய்ட்டாங்க” என வருந்தினார் கல்பனா.
“நான் இருக்கேன்லத்த. பார்த்துக்கலாம் விடு” என தேற்றியவன், “சுகந்தி எப்படி இருக்கா?” என அக்கறையோடு விசாரித்தான் அத்தை மகளை.
error: Content is protected !!