Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maruvak Kaathal Kondaen

மருவக் காதல் கொண்டேன்-5

வசீகரன் தன் நண்பர்களை உணவுக்கு அழைத்திருக்கிறேன் என்று உமையாளிடம் சொல்லவும், பாலா சமையலறையின் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

உள்ளே நுழைந்த பாலாவை பார்த்த உமையாள் மகிழ்ச்சியுடன், அவனை வரவேற்க நினைத்து வாயை திறக்க போக, பாலாவோ தன் நண்பன் வேர்வை சிந்தி சமைப்பதையும், உமையாள் வெட்டியாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பதையும் பார்த்து பொங்கி,

“ஏன் உமா, ஒரு ஆம்பிளை பிள்ளை இப்படி தனியா சமைக்கிறான், நீ வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க, பெண் பிள்ளையா லட்சணமா அவனுக்கு உதவி செய்யலாம் இல்ல” என நண்பனுக்காக வரிந்துகட்டி கொண்டு கேட்டான் பாலா.

அவன் அப்படி கேட்டது தான் தாமதம், தான் அணிந்திருந்த முழுக்கை டிஷர்ட்டை முழங்கைக்கு ஏற்றிவிட்டவாறே, போர்களம் புகும் வீராங்கனை போல தான் அமர்ந்திருந்த திண்டில் இருந்து குதித்து இறங்கினாள், உமையாள்.



Advertisement

வசீகரனோ, பாலா அவனுக்காக தான் அவனின் பாப்புவிடம், நியாயம் கேட்டான் என்பதை மறந்து, பாலா உமையாளிடம் வசமாக சிக்கி கொண்டிருக்கும் நிலையை நினைத்து “மகனே நீ இன்னைக்கு செத்தடா” என மனதிற்குள் குதுகளித்து, சமைலயறையின் திண்டிலே நன்றாக சாய்ந்து, வசதியாக நின்று கொண்டு நடக்க போவதை வேடிக்கை பார்க்க தயாரானான்.

உமையாளோ பாலாவை முறைத்தவாறே, “அது என்ன பெண் பிள்ளையா  லட்சணமா உதவி பண்ணனும், பெண்களுக்கு மட்டும் தான் சமையலறையின் பட்டா எழுதி கொடுத்திருக்காங்களா, ஏன் இவன் சமைச்சதால இப்போ என்ன கெட்டுப்போச்சு,  டீவில வர விளம்பரத்துல கூட மிக்சி, கிரைண்டர், குக்கர், தவானு சமைக்கிற, துவைக்கிற, வீடு கிளீன் பண்ற பொருள் எல்லாத்துக்குமே பெண்கள் தானே வராங்க, இந்த மாதிரி விளம்பரம் மூலமா மறைமுகமா ,ஆனா எவ்ளோ அழுத்தமா சொல்லுறீங்க, இது  எல்லாம் உங்க வேலைதானு,ஏன் ஆண்கள் நீங்க அந்த வேலையை எல்லாம் செஞ்சா உலகம் அழிஞ்சிடுமா, உங்களை சொல்லியும் தப்பு இல்ல, உங்களை அப்படி வளர்த்து வச்சி இருக்காங்க, இதுவே நான் சமைச்சிக்கிட்டு இருந்து, கரன் இப்படி உட்கார்ந்து இருந்து இருந்தா, அதை இயல்பா எடுத்துகிட்டு இருப்பிங்க தானே, ” என பொரிந்தால் உமையாள்.

[the_ad id=”6605″]

Advertisement

உமையாள் பேசி முடித்த இரண்டு நிமிடங்களுக்கு அங்க மழை அடித்து ஓய்ந்தது போல அப்படி ஒரு  அமைதி. பாலாவோ பேயடித்தது போல அப்படியே நின்றான்.

Advertisement

பாலா கேட்க நினைத்தது, “வசீகரன் மட்டும் தனியே சமைக்க, நீயும் உதவி இருக்கலாமே” என்று தான், அதுவும் ஒரு சக மனிதனுக்கு, இன்னொரு மனிதன் உதவும் முறையில். ஒரு வேளை உமையாள் தனியே சமைக்க, வசீகரன் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாலும் இப்படித்தான் அவன் கேட்டிருக்க கூடும்.

உண்மையில் ஆண், பெண் என்ற பாகுபாடு எல்லாம் பாலா கருத்தில் கொள்பவன் இல்லை தான். ஆனால் தான் பார்த்து வளர்ந்த விஷயங்கள், அது மனதில் பதிந்து போன விதத்தில், பெண் பிள்ளை என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி இருந்தான்.

நேற்று விளையாட்டு பிள்ளையென இருந்தவளிடம் இருந்து, அவன் உண்மையில் இப்படி ஒரு ஆதங்கத்தை எதிர்பார்க்கவில்லை, அதேநேரம் தானும் இப்படி பேசியிருக்க கூடாது என்றும் தோன்ற, சற்றும் யோசிக்காமல், தயங்காமல், “சாரி உமா” என்றிருந்தான்.

Advertisement

அவனின் “சாரி” யில் இப்போது முழிப்பது உமையாளின் முறையானது, அவளின் பாவத்தை பார்த்து வசீகரன் சிரிக்க, பாலாவோ,”என்ன உமா” என்றிருந்தான்.

உமையாளோ ஒரு சலிப்புடன், “போங்க அண்ணா,உங்களை மலை போல நம்பி இருந்தேன், என்ன இப்படி ஏமாத்திட்டிங்களே” என போலியாக மூக்கை உறிஞ்சிக்கொண்டு வெசனப்பட்டாள்.

பாலாவோ இன்னுமே இயல்பு திரும்பாமல், ஒரு வேளை நானும் உமையாள் சொன்னபடி, ஒரு சராசரி ஆணாக, சமைப்பது எல்லாம் பெண்கள் வேலை என்று தான் நினைக்கிறோமோ என்ற சிந்தனையில் இருந்தவன், அவளின் “ஏமாத்திட்டிங்க” என்று வார்த்தையில், தன் கவனத்தை முழுதும் அவள் புறம் திருப்பி,

“நான் என்ன பண்ணேன் உமா”

“நீங்க  என்ன இப்படி உடனே சாரி கேட்டுட்டீங்க, நீங்க எதிர்த்து ஏதாவது பேசினா, பதில் பேசனு நான் நல்லா லட்டு, லட்டா பாயிண்ட் எல்லாம் யோசிச்சி வச்சி இருந்தேன், என்னை இப்படி ஏமாத்திட்டிங்களே கோபால், கோபால்” என வசனம் பேச,

அவள் கடைசியில் கொண்டு வந்த, கொண்டு வர முயன்ற சரோஜா தேவி குரலில் பாலா  பக்கென சிரித்துவிட்டான்.  அந்த சிரிப்பினுடே, “உன்னோட போதைக்கு எல்லாம் என்னால ஊறுகாயை ஆக முடியாது ஆத்தா” என,

அவளோ, “அண்ணா, நீங்க தண்ணி அடிப்பீங்களா, அது ஹெல்த்கு நல்லது இல்லை தெரியுமா” என அடுத்த பிரசங்கத்துக்கு தயாராக, இப்போது பாலா, வசீகரன் இருவருமே அலறி, ஒருமித்த குரலில்,

“வேணாம் விட்டுரு, வலிக்குது, அழுதுடுவோம்” என வடிவேல் மாதிரி சொல்ல மூவருமே சிரித்துவிட்டனர்.

பாலாவும் வசீகரனும் சிரித்து முடித்ததும், உமையாள், “நீளமா பேசி தொண்டை எல்லாம் வறண்டு போச்சி,  எனக்கு குடிக்க யாராவது ஜிகர்தண்டா தாங்கப்பா” என மேடைப்பேச்சாளரை போல பாவனையோடு கேட்டாள்.

முழுதும் இயல்பு திரும்பி இருந்த பாலா, மீண்டும் தனது குறும்புடன், “தங்கள் கூற்றில் பிழையுள்ளது” என நக்கீரனுக்கு அடுத்தபடியாக அதே தீவிரத்துடன் சொல்ல, உமையாளோ ஒற்றை புருவத்தை தூக்கி அவனை பார்த்தவள்,

“என்ன பிழை, சொல்லும், சொல்லி தொலையும்” என இப்போது சிவாஜியின் உடல்மொழியில் கேட்க,

பாலா, “காலங்காலமாக மேடைப்பேச்சாளர்கள் எல்லாம் சோடா தானே கேட்பார்கள், தாங்கள் என்ன வித்தியாசமாக ஜிகர்தண்டா கேட்குறீர்கள்” என  செந்தமிழிலே கேட்க, உமையாளோ உடனே சென்னை தமிழுக்கு மாறி,

“ஐய்ய, உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்காபா, பேசி தொண்ட நமநமனுங்கீர போது, ஜோடா எப்படி குடிக்க முடியும், அது புல்லா காஸ், இரண்டு வாய் சேர்ந்தப்பல குடிக்க முடியாது, அப்டியே குடிச்சாலும் வாயிலிருந்து, வயிறு வரைக்கும் எரியும்பா” என, பாலாவும்

“அப்புறம் இன்னாத்துக்குபா, பேசி முடிச்சதும் ஜோடா கேட்குறாங்க” என அவளோ,

“அதானேபா, அது இன்னா கலாச்சாரம் பண்பாடா இருக்கும்” என இருவரும் சேர்ந்து அதிதீவிரமாக மோட்டுவலையை பார்த்து “இஸ்ரேல் விஞ்ஞானிகளுக்கே நாங்க டௌப் கொடுப்போம்” என்ற உடல்மொழியுடன் யோசித்தபடி இருந்தனர்.

[the_ad id=”6605″]

உமையாள் ஜிகர்தண்டா கேட்டதுமே, அங்கிருந்து நழுவி, கையில் ஒரு சின்ன கண்ணாடி குவளையுடன் குளிர்சாதனப்பெட்டியிடம் சென்றிருந்த வசீகரன், அதில் பெரிய பாத்திரத்தில் இருந்ததை கொஞ்சமே கொஞ்சம்  தன் கையில் இருந்த குவளையில் மாற்றியவன், தீவிர சிந்தனையில் இருந்த இருவரையும் நெருங்கி, அந்த குவளையை அவனின் பாப்புவிடம் நீட்டினான்.

பாலாவும், உமையாளும் ஒரு சேர தங்கள் அரும்பெரும் கண்டுபிடிப்பை கைவிட்டு, வசீகரனையும் அவனின் கையில் இருந்த குவளையும் பார்த்தனர்.

வசீகரனிடம் இருந்து யார் முதலில் அதை கைப்பற்றப்போவது என்பதை போல பாலாவும், உமையாளும் ஒருவரை ஒருவர் பார்க்க, சடுதியில் உருவானது ஒரு போட்டி இருவருக்குள்ளும்.

போட்டியை அங்கீகரித்து,  இருவரும் தங்களின் பார்வையிலே முரசு கொட்ட, சற்றும் தாமதிக்காமல் பாலா தனது வலது கையை நீட்டி, வசீகரனின் இடது கையில் இருந்த அந்த குவளையை கைப்பற்ற போக,  கடைசி நொடியில் வசீகரன் அதை தனது வலது கைக்கு மாற்ற, அடுத்த நிமிடம் அந்த குவளை உமையாள் கைகளில் அடைக்கலம் ஆகி இருந்தது.

பாலா, வசீகரனை “துரோகி” எனும் குற்றம் சாட்டும் பார்வை பார்த்துவைக்க, வசீகரனோ கிஞ்சித்தும் பாலாவை கணக்கில் கொள்ளாமல், உமையாள் உண்பதையே  வாஞ்சையுடன் பார்க்க, உமையாளோ பாலாவை பார்த்து, சிறுகுழந்தை போல வக்களம் காட்டிவிட்டு, அதில் இருந்ததை என்னவென்று கூட பார்க்காமல், எடுத்து வாயில் வைத்தாள்.

அந்த உணவு  நாக்கில்பட்ட அடுத்த நொடி, சுவை நரம்புகள்,  அது அவளுக்கு பிடித்த “அரிசி பாயசம்” மூளைக்கு செய்தி அனுப்ப, உமையாளின் கண்கள் மகிழ்ச்சியில் விரிந்தது. அவளின் பாவனைகளையே வசீகரன் ரசித்திருக்க, உமையாளோ தன் கையில் இருந்ததை, ரசித்து, ருசித்து சாப்பிடலானாள்.

சாப்பிட்டு முடித்தவள் நிமிர்ந்து வசீகரனை பார்த்து, “எப்படா பண்ண, என் கிட்ட சொல்லவே இல்ல, சூப்பர் டேஸ்ட்” என்றவள் அவனின் பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்து, “உன்ன மாதிரி நல்லா சமைக்க தெரிஞ்ச பையனா பார்த்து தான் கல்யாணம் பண்ண போறேன்” என்றும் அறிவித்தாள்.

அவளின் அறிவிப்பில் வசீகரன் சிரிக்க, பாலாவோ மனதிற்குள், “ஹுக்கும் இந்த பக்கி வசீகரன் தான் சமைக்கிறது மட்டும் இல்லாம , நீ “ம்” னு சொன்னா ஊட்டியும் விடுவான்” என்று நொடித்து கொண்டவன், ஒருவேளை உமையாள் வசீகரனை மனதில் நினைத்து தான் சொல்கிறாளோ, இவனும் அவளை அப்படி பார்த்து கொள்கிறானே என யோசிக்கலானான்.

அப்போது தான்  பாலாவும், உமையாளும் பாயசத்தை கைப்பற்ற நடத்திய போராட்டத்தில், அந்த பாயாசம் கொஞ்சம் உமையாளின் உடையில் பட்டு பல்லிளித்து கொண்டு இருப்பதை பார்த்த வசீகரன்,

“பாப்பு, டிரஸ்ல பாரு, பாயசம் சிந்தி இருக்கு, போ பொய் டிரஸ் சேன்ஞ் பண்ணிட்டுவா” என, அவளின் உடையை குனிந்து பார்த்தவள், சரி எனும் விதமாக தலையாட்டிவிட்டு வெளியே வர, அங்கு கிருஷ்ணா வரவேற்பரையின் சோபாவில் அமர்ந்து தனது கைபேசியில் தலையை விட்டவண்ணம் அமர்ந்திருந்தான்.

கிருஷ்ணாவை பார்த்த உமையாள் அவனிடம் சென்று, “வாங்க கிருஷ்ணா, எப்போ வந்திங்க, ரொம்ப நேரம் ஆச்சா, கூப்பிட்டு இருக்கலாமே” என்று வரவேற்றவள், தொடர்ந்து கேள்விகளையும் அடுக்கினாள்.

[the_ad id=”6605″]

தன் கேள்விக்கு  அவனின் பதிலை எதிர்பார்க்காமல், உள்ளே சமையலறையை நோக்கி திரும்பி, “கரன் கிருஷ்ணா வந்து இருக்காங்க பாரு” என்று குரல்கொடுத்தாள்.

வசீகரனை கூப்பிட்டவள், அவன் பதில் சொல்லாமல் அமைதியாய் இருக்க, அவனுக்கு கேட்டதோ, இல்லையோ என மறுமுறை இன்னும் சத்தமாக, “கரன்” என்று அழைத்த வண்ணமே, திரும்பி கிருஷ்ணாவை பார்க்க, அவனோ இவள் கத்திய கத்தலில், சுண்டுவிரலை காதில் விட்டு குடைந்த வண்ணம் அமர்ந்து இருந்தான்.

அவன் அப்படி அமர்ந்து இருந்த தோற்றத்தை பார்த்தவள், “பாருடா இங்க ஒருத்தருக்கு சத்தம் பிடிக்கல” என மனதிற்குள் அவனை கலாய்த்தவள், வசீகரனும், பாலாவும் வரும் அரவம் கேட்கவும் உடை மாற்ற தனது அறைக்கு விரைந்தாள்.

உமையாள் கிருஷ்ணா வந்ததாக வசீகரனிடம் அறிவித்ததை கேட்ட பாலா “ஐயோ” என அப்படியே தலையில் கை வைத்தவண்ணம் உட்கார, அவனின் பாவனையில் குழம்பிய வசீகரன், “என்னடா” என,  பாலா பாவமாய் அவனை பார்த்துவிட்டு,

“இல்ல கரன், நானும் அவனும் ஒன்னா தான் வந்தோம், அவனை ஹால்ல உட்கார சொல்லிட்டு, நான் தான் உன்னை கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டு கிட்சனுக்கு வந்தேன், அப்புறம் உமா கூட பேசிகிட்டு இருந்தால் அவனை சுத்தமா மறந்துட்டேண்டா” சொல்லி முடிக்க, வசீகரனுக்கோ சிரிப்பை அடக்கவே முடியவில்லை. சிரிப்பினுடே,

“ஆனாலும் உனக்கு இன்னைக்கு நேரமே சரி இல்லடா, வரிசையா வாங்கிக்கட்டுவ போலவே” எனவும், மறுமுறை அவனின் பாப்பு அழைக்கவும், பாலாவை இழுத்து கொண்டு வரவேற்பறைக்கு வந்தான்.

கிருஷ்ணா பாலா பயந்த மாதிரி எதுமே திட்டாமல், ஏன் எதுவுமே கேட்காமல், ஏதோ ஆழ்ந்த சிந்தையில் மூழ்கி இருக்க, ஒரு நிம்மதி பெரு மூச்சுடன் பாலா அமர, வசீகரனும் அருகில் அமர்ந்தான்.

பாலா சமையலறையில் நுழைந்ததில் இருந்து, அவனும் உமையாளும் பேசிய உரையாடல்கள், வசீகரனும் அவர்களுடன் சேர்ந்து நகைப்பது என அனைத்தையும் கூர்ந்து கவனித்த வண்ணமே அமர்ந்திருந்தான் கிருஷ்ணா.

உமையாளின் காரசார பேச்சு, அதில் இருந்த பொருள் என எதுமே கிருஷ்ணாவை பாதிக்கவில்லை. அவனின் கவனம் முழுவதுமே அவர்களின் சிரிப்பில் இருந்தது. என்ன மாதிரியான பேச்சுகளுக்கு சிரிக்கிறார்கள் என்பதான அளவீட்டில் இருந்தான் கிருஷ்ணா. இதற்கு எல்லாம் சிரிக்கலாமா என்ற ஆராய்ச்சியும் கூட.

பெரும்பாலும் புன்னகை சிந்தாதவர்கள் கூட, சிரிக்க தெரியாதவர்களாக  இருக்க மாட்டார்கள் சிரிக்க விருப்பம் இல்லாதவர்களாக தான்  இருப்பார்கள். ஆனால் கிருஷ்ணா, அவனுக்கு உண்மையில் புன்னகை  என்ற ஒரு உணர்ச்சியே அவனால் மறக்கப்பட்டு, மறுத்து போய் இருந்தது.

[the_ad id=”6605″]

நேற்றைய சிந்தனைக்கு பிறகு,  அவன் இன்று தான், எதற்கு எல்லாம் சிரிக்கிறார்கள், எதற்கு எல்லாம் சிரிக்கலாம் என மொழி புரியாத மழலை என அவர்களை பார்த்து கற்றுகொண்டு இருந்தான். அவனுக்கு யார் புரிய வைப்பது, அது ஒரு இயல்பான உணர்ச்சி என்று.

நண்பர்கள் மூவருமே அமைதியாய் இருக்க, பாலா தான் பேச்சை ஆரம்பித்தான், “டேய் கரன்,  இத்தனை நாளில் ஒரு நாள் கூட உமா பத்தி பேசுனதே இல்லையே ஏன்டா?” என கேள்வி எழுப்ப, வசீகரனோ,

“ஸ்கூல் டேஸ்ல எல்லாம் பேசுவேன், அப்புறம் காலேஜ் டேஸ்ல நானும், பாப்புவும் பேசவே நேரம் சரியா இருக்கும், இதுல அவளை பற்றி எங்கே பேசடா” என பாலாவிற்கு புரிந்தது.

அவனின் பாப்புவுடன் பேசமுடியாத நாட்களில், அவளை பற்றி பேசி ஆறுதல் அடைந்திருக்கிறேன், பிறகு அவனின் பாப்புவுடன் பேச ஆரம்பிக்கவும்,  ஆறுதல் தேட அவசியம் இல்லாமல் போய் இருக்கலாம்.  இதனால் தான் கிருஷ்ணாவிற்கு வசீகரனின் பாப்புவை பற்றி தெரிந்திருக்கிறது. பாலா கல்லூரி தோழன் என்பதால் அவனுக்கு தெரியவில்லை.

மீண்டும் வசீகரனோ, “ஒரு ஆறு மாசம் முன்னாடி ஒரு ரெண்டு வாரம் நான் ஆபீஸ் வரல நியாபகம் இருக்கா”  என கேட்க, பாலா நினைவு கூர்ந்தவனாக தலையசைக்க, வசீகரன் தொடர்ந்து,

“அப்போ தான் அத்தை, அதான் பாப்புவோட அம்மா இறந்துட்டாங்க, அதுக்கு தான் நான் போய் இருந்தேன், அவளுக்கு அம்மானா அவ்ளோ பிடிக்கும், ரொம்பவே உடைஞ்சி போயிட்டா, கொஞ்ச நாள் அவ கூட இருந்துட்டு, அவ ஒரு அளவுக்கு சரி ஆனதும், அவளே தான் என்ன திரும்பி இங்க அனுப்புனா” என உணற்சியற்ற குரலில் சொல்ல,  பாலாவோ,

“அம்மா அவ்ளோ பிடிக்கும்னு சொல்ற, அப்போ உமாக்கு எவ்ளோ வருத்தமா இருந்து இருக்கும், ஏன்டா தனியா விட்டுட்டு வந்த, உங்க கூடவே கூட்டிகிட்டு வந்து இருக்கலாம் தானே, உனக்கு தான் தெரில, ஆண்ட்டி கூடவா இதை எல்லாம் யோசிக்கல” என உமையாள் மேல் இருந்த பாசத்தில் பேச, வசீகரன் அவனுக்கு ஒரு புன்னகையே பரிசாக தந்தவன்,

“அத்தை, மாமா லவ் மேரேஜ்டா, பிசினஸ் விஷயமா அப்பாவை பார்க்க வந்த மாமாவும், அத்தையும் காதலில் விழ, தாத்தாக்கு விஷயம் தெரிஞ்சி செம சண்டை, ஆனா அத்தை ரொம்ப ஸ்டெடி ஆஹ இருந்து எல்லாரையும் கன்வீன்ஸ் பண்ணி சம்மதிக்க வைச்சாங்க, அப்பா அப்பவும் அரைமனசா தான் சம்மதிச்சி இருப்பார் போல, போதாத்துக்கு கல்யாணத்துக்கு வந்த சொந்தகாரங்க எல்லாம் தப்பு, தப்பா இவரை சீண்டுற மாதிரி பேசிவைக்க, அப்பாக்கு இதனால் அத்தை மேல வருத்தம்.  இப்படி கண்டவங்க எல்லாம்  பேசுற மாதிரி வச்சிட்டாங்கனு, மாமா கிட்ட பேசவே மாட்டாரு, இத்தனை வருஷம் ஆகியும் அப்படி தான், அத்தை தான் லீவ்க்கு பாப்புவை கூட்டிக்கிட்டு வருவாங்க,  இப்படி இருக்கப்போ எப்படி பாப்புவை இங்க கூட்டிகிட்டு வரது, மாமா எங்க கூட அனுப்பி இருக்க மாட்டாரு” என வசீகரன் நீளமாக உமையாளின் பெற்றோர் காதல் கதையை சொல்லி முடித்தான்.

கிருஷ்ணா வழக்கம் போல அமைதியாக வசீகரன் சொல்வதை மற்றும் செவிமடுக்க,  பாலா தான் கேள்விகளை அடுக்கிய வண்ணம் இருந்தான்.

“அப்போ இப்போ மட்டும் எப்படி உன்னோட மாமா அனுப்பி இருக்காரு”

“பாப்பு கேட்டதால், அவளோட சந்தோஷத்துக்காக அனுப்பி இருக்காரு போல, கண்டிப்பா முழு மனசோட அனுப்பி இருக்க மாட்டாரு அது நிச்சயம்”

“ஆமா உங்க அத்தை லவ்க்கு உங்க தாத்தா, பாட்டி சம்மதம் சொல்லலைனா ஒரு அர்த்தம் இருக்கு, உங்க அப்பாவும் ஏன்டா பிரச்னை பண்ணி இருக்காரு”

“அவரை பத்தி உனக்கு தெரியாத, அவருக்கு எப்பவும் குடும்ப கவுரவம், ஸ்டேட்டஸ் இது எல்லாம் முக்கியம்,  அது தான் பெரிய பிரச்சனை”

“ஓ…… ஏண்டா, உங்க அப்பாவை பார்க்க பிசினஸ் விஷயமா தானே உன்னோட மாமா வந்தாருனு சொன்ன, அப்போ அவரும் உங்களுக்கு ஒரு அளவாவது சரிசமமான குடும்பமா தானே இருந்து இருக்கணும்”

“அது எல்லாம் இல்லைடா, எங்க மாமா குடும்பம் எங்களை விட” என சொல்ல வந்தவன் பாப்புவின் அறைக்கதவு திறக்கும் ஓசையில் அப்படியே நிறுத்திவிட்டு, பாலாவை பார்த்து அவசரமாக, “இதுக்கு மேல இதை பத்தி பேச வேண்டாம், அத்தையை பத்தி பேசினாலே பாப்பு  மூட் அவுட் ஆகிடுவா” என்று உறைக்கவும், உமையாள் வரவும் சரியாக இருந்தது.

வந்தவள் அந்த பெரிய சோபாவில் வசீகரனின் அருகில் அமர்ந்தவாறே, “என்னடா ஏதோ பேசிகிட்டு இருந்திங்க, நான் வந்ததும் அப்படியே நிறுத்துடீங்க, என்ன விஷயம்” என கண்களை உருட்டி கேட்க,

கிருஷ்ணா இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல தலையை கைபேசியில் நுழைத்து கொள்ள, பாலா ஏதும் சொல்லாமல் வசீகரனை பார்த்தான்.

வசீகரன் தான், “ஒன்னும் இல்லடா ஆபீஸ் விஷயம் தான், உனக்காக தான் வைட்டிங், வா சாப்பிட போகலாம்” என அவளை திசைதிருப்ப, வசீகரனின் உடன் எழுந்தவள், அவனிடம்,

“கரன், இந்த வீட்டுல என்னமோ மிஸ் ஆகுதுடா” அதே கண் உருட்டல் உடன் சொல்ல, உமையாள் சொன்ன “அது” எதுவென வசீகரனுக்கு நன்கு புரிந்தது, ஆனால் குறைவாதாக சொன்ன உமையாளுக்கு தான் என்ன குறைகிறது என்று தெரியவில்லை.

 

காதல் கொள்வோம்…………..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!