Skip to content
Post Views: 3,195
அதைத் தகர்த்தெறியும் முகமாய், “இதுக்கு முன்னவே மாளவி உங்களைப் பத்தி நிறைய சொல்லிருக்கா என்கிட்ட..” என இதயநிலா கூற,
“என்ன!” என்றான், ஒற்றை வார்த்தையில்.
மாலையில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு மாளவிகாவிடம் மனம் விட்டுப் பேச நேரம் கிடைக்காதபடியால், “அவளுக்கு உங்களை ரொம்பப் புடிக்கும். மார்னிங் கூட உங்க ரெண்டு பேரோட போட்டோஸ் காட்டினா. சின்ன வயசுலயே வீட்டை விட்டுப் போய்ட்டிங்களாமே மானவ்?” என்க,
“ஓ, அவளோட சொந்த அண்ணன் பத்தி அவ உங்க கிட்ட சொல்லிருக்கா போல..” என்றான்.
Advertisement
இதயநிலா விழி சுருக்கினாள்.
எந்த கோணத்தில் யோசித்தாலும் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறியவள், “அப்படினா நீங்க?” என்றாள், குழப்பம் தீரா விழிகளுடன்.
அவளது கேள்விக்கு பதிலளிக்காமல், “வேற என்ன சொல்லிருக்கா?” என்று எதிர்வினா எழுப்பியவனுக்கு உள்ளுக்குள் ஏதோவொரு ஆர்வம்!
Advertisement
தன்னைப் பற்றியும் ஏதாவது கூறியிருக்க மாட்டாளா என மனம் வெகுவாய் எதிர்பார்த்தது. சொந்த சகோதரன் என தன்னை அறிமுகப்படுத்தி இருக்காவிட்டாலும், தெரிந்தவர், உறவினர், அண்ணனின் தோழன் என்று எதையாவது கூறி இருந்தாலும் மகிழும் நிலையில் அவனிருந்தான்.
Advertisement
ஆனால் அவளோ, “வேறென்ன.. அண்ணா, அண்ணானு நிறைய சொல்லுவா! ஆனா அவ அண்ணன் பேரு என்னனு இப்போ வரைக்கும் எனக்கு தெரியாது. அதனால அது நீங்களா தான் இருக்கும்னு நினைச்சிட்டேன்..” என புரியாத தோரணையில் பேசினாள்.
மானவ் புரிந்ததாகத் தலை அசைத்தான். என்றும் மாறாத அந்தப் புன்னகையை வந்து மீண்டும் உதட்டோடு ஒட்டிக் கொண்டது. அவள் கூறிய அந்த ‘அண்ணா’ என்கின்ற வார்த்தைகளில் தான் அடங்க வாய்ப்பில்லை என தெளிவாக ஊகிக்கவும் முடிந்தது.
“வீட்டை விட்டுப் போனதால தான் அவங்கம்மாவுக்கு உங்க மேல இவ்ளோ கோபம்னு நினைச்சேன். ஆனா இடைக்கிட அவங்க ஏதேதோ பேசுனாங்களே! நீங்க மாளவியோட சொந்த ப்ரதர் இல்லனா ஏன் அவ்ளோ கோபம், உங்க மேல?” என்றவள் ‘நீங்கள் யார்?’ என்று தன்னிடம் கேட்க வருவதைப் புரிந்து கொண்டவனாக,
Advertisement
“அவங்களோட பையனுக்கு நான் பெஸ்ட் ஃபிரெண்ட்டு! அவன் வீட்டை விட்டுப் போனது தெரிந்தும் நான் அவனைக் கன்வின்ஸ் பண்ணாம விட்டேன்ங்குற கோபம் தான் அவங்களை ஆட்டிப் படைக்குது. அவன் இப்போவும் எங்க வீட்டுல தான் தங்கி இருக்கான். விசேஷத்துக்கு நான் வந்தும் சொந்த மகன் வராம விட்டானேங்குற ஆதங்கம் இல்லாம இருக்குமா, சொல்லுங்க?” என்றான்.
தான் மாளவிகாவுக்கு ஹாஃப்-பிரதர் எனக் கூறாமல் மறைத்ததைத் தவிர அவன் கூறியதில் எந்தப் பொய்யும் இல்லை என்பதே வாஸ்தவம்!
“அட! இது தான் விஷயமா?”
ஆமெனும் விதமாகத் தலை அசைத்தவன், “பெத்தவங்களுக்கும் அவனுக்குமிடைல ஏதோ மனக்கசப்பு. அவங்களுக்குள்ள நான் எப்படி இன்டர்ஃபியராக முடியும்? ஒவ்வொருத்தங்களோட விருப்பு, வெறுப்புகள் நம்ம சொல்லி மாறப் போறதில்லயே, டாக்டர்.” என்றான், அப்பாவியாக.
“உண்மை தான், சரியா சொன்னிங்க மானவ்!” என ஆமோதித்தவளுக்கு கோதை மீது கோபம் கோபமாக வந்தது.
‘நண்பனோட தங்கச்சிய தன் சொந்த சகோதரியாப் பாவித்து கடமையை நிறைவேத்த வந்திருக்கிறாரு. இவரைப் போய் அவ்ளோ கேவலமா பேசி, துரத்தாத குறையா அவமானப்படுத்திட்டிங்களே.. நான் இதை உங்ககிட்ட எதிர்பார்க்கவே இல்ல ஆன்ட்டி!’ என மானவ்விற்கான கோதையிடம் வம்புக்கு நிற்கவும் தயாராக நின்றாள், இதயநிலா.
மானவ்வின் இந்தப் பொறுப்புணர்ச்சி, அன்பு அவளைக் கட்டிப் போட்டது.
‘என்னா ஒரு பரந்த மனசு. மகன் இல்லங்குற குறை விளங்கக் கூடாதுனு நண்பனோட கடமையை செய்ய ஓடோடி வந்திருக்காரே..’ என மனம் பூரித்தாள்.
கைகளைப் பின்புறமாக ஊன்றியபடி சாவகாசமாய் ஆகாசத்தைப் பார்த்திருந்தவனின் கன்னம் கிள்ளி, ‘ஹவ் ஸ்வீட்யா நீ?’ என சிறு பிள்ளையைப் போல் கொஞ்சத் தோன்றியது.
அவனது ஆக்கிரமிப்பு பாவை நெஞ்சில் மேலும் பலப்பட்டது. உருகி நின்றாள். அவனுக்குள் மெல்ல மெல்லத் தொலைந்து கொண்டிருந்தது, இதயாவின் ஹிருதயம்!
தங்கள் சந்திப்புக்குச் சாட்சியாக இருந்த நிலவை அண்ணாந்து பார்த்து மோகனமாய் புன்னகைத்தாள்.
ராப்பொழுது; நிலவின் மடி; மனதுக்குப் பிடித்தவர்களின் அருகாமை என மனம் மெய் மறந்தது. மேனி சிலிர்த்தது. எதிர்பாராத தருணமல்லவா இது?
எவ்வளவு நேரம் அவ்வினிய மௌனம் தொடர்ந்ததோ, நாவில் வைத்ததும் கரைந்து போகும் பஞ்சு மிட்டாய் போல் அவனது குணாதிசயங்களை எண்ணி வியந்து உருகிக் கொண்டிருந்தவள், “மானவ்..” என்றழைத்தாள், மெலிதான குரலில்.
அவனிடமிருந்து எந்த சத்தமும் இல்லை.
“மானவ்..” என மீண்டும் விளித்தபடி திரும்பிப் பார்த்தவளின் பார்வை சட்டென்று கனிந்தது.
கால்கள் இரண்டையும் ஒருசேர அணைத்திருந்தபடி தரையில் அமர்ந்திருந்தவன், தன் புஜத்தில் கன்னம் சாய்த்து உறங்கிப் போயிருந்தான்.
ரசிக்கத் தகுந்த முகபாவனை! மீசை வளர்ந்த குட்டிப் பையனாகவே தெரிந்தான், அவள் கண்களுக்கு. வெகு தூரம் பயணித்து வந்த களைப்பில் தான் உறங்கி இருப்பானென ஊகித்தவளாக சத்தம் எழுப்பாமல் எழுந்து கொண்டவள்,
“விடிய தொடங்கிட்டா பனி விழுமே! அப்பறம் ஜலதோஷம் வந்துறப் போகுது..” என ஒரு வைத்தியராய் யோசித்து, “மானவ், எழுந்திருங்க..” என அவன் தோள் தட்டினாள்.
லேசாக அசைந்து கண் திறந்து பார்த்தவன், “போங்க டாக்டர்..” என சிணுங்கலாகக் கூறிவிட்டு முகத்தை மறுபுறம் திருப்பிப் படுத்து விட,
“ஹாஸ்பிடல்ல தான் டாக்டர்னு மரியாதை குறையாம அழைக்கிறாருனு பாத்தா, இங்கேயுமா? இது என்ன கொடும, சரவணா?” என வாய் விட்டுப் புலம்பியவள்,
‘இங்கயேவா படுக்க போறாரு? கொஞ்ச நேரத்துல எழுந்து அவரே உள்ள போய்டுவாரு..’ என நினைத்தபடி சென்று அறைக்குள்ளிருந்து போர்வை எடுத்து வந்தாள்.
கண்ணுறங்கும் மாயவனின் முகத்தில் சொட்டிய அப்பாவித்தனம் அவளை தன்னாலே முறுவலிக்கச் செய்தது.
கையிலிருந்த போர்வைகளில் ஒன்றை விரித்தவள், மெல்லக் குனிந்து புஜத்தில் சாய்த்திருந்த அவனது கன்னத்தைத் தன் உள்ளங்கைக்கு இடமாற்றி, உறக்கம் கலையாத வண்ணம் விரிப்பில் படுக்கச் செய்தாள்.
“சபரி! தூங்க விட மாட்டியா?” என தூக்கத்தில் பற்களை நறநறத்தான், மானவ்.
“போச்சு போ! எழுந்திருக்குற நேரங்கள்ல முகத்துல பாட்டில் கணக்குல அப்பாவித்தனம் கொட்டிக் கிடக்கும். தூக்கத்துல மட்டும் கோபப்படறாரு பாரேன், இருந்தாலும் நீ அழகு தான் மானவ்..” என கன்னம் கிள்ளி விட்டு எழுந்து மற்றொரு போர்வையால் அவனைப் போர்த்தினாள்.
கால்கள் அவ்விடம் விட்டு நகர மறுத்தன.
இருப்பினும் நெடுநேரம் தன்னைக் காணாதபடியால் மாளவிகா மொட்டைமாடி வரை வந்து விட்டால் ஏதேனும் தவறாக எண்ணி விடுவாள் என நினைத்து, நகரவெனத் திரும்பினாள்.
பார்வை சொல்பேச்சு கேட்காத பிள்ளையாய் மீண்டும் அவனை நோக்கியே பயணித்தது.
அவனருகே வந்து மெல்லக் குனிந்தவள், “ஏன்னே தெரியல, நான் கடந்து வந்தவங்க மத்தியில நீங்க வித்தியாசமா தெரியறிங்க மானவ். லாஸ்ட்டா நான் உங்க கிட்ட ஹாஸ்பிடல்ல வைச்சு பேசினதுக்கு பிறகு, கால் பண்ணுவோமா வேணாமானு தினமும் யோசிப்பேன்.
என்ன நினைப்பிங்களோனு ஒரு பக்கம் தவிப்பு; அதேநேரம் உங்க வாய்ஸைக் கேட்டே ஆகணும்ங்குற ஆசை இன்னொரு பக்கம். அப்போவே புரிஞ்சிக்கிட்டேன். அப்பாவியா மூஞ்ச வைச்சிட்டு என் மனசைக் கெடுத்துட்டிங்கனு.. நீங்க என்ன உணருறீங்கனு தெரியல, மானவ். ஆனா நான் நிச்சியமா உங்களை என் கைமீறி போக அனுமதிக்க மாட்டேன்..” என அவன் கை பற்றியபடி பேசி,
“குட் நைட்!” என்ற வாழ்த்துடன் அவனது கேசம் தவழ்ந்த நெற்றியில் பட்டும்படாமல் தன் முத்த அச்சாரத்தைப் பதித்திருந்தாள்.
தொடரும்.
error: Content is protected !!