Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சினமே சினாமிகா

சினமே சினாமிகா 3

வழக்கு எண்.11/2024

பொம்மியின் பதாகையைத் தாங்கியவளாய் வீடு வந்து சேர்ந்தாள் அவள். உள் நுழைந்ததும் பிரதக்ஷனா, 

‘பொம்மி எப்படியிருக்கா?.. ரொம்ப அழுதாளா?..’

‘இல்ல பிரதி. ரொம்ப கஷ்டப்பட்டா.. ஆனா புரிஞ்சிக்கிட்டா.. இதுக்கப்புறம் எவ்வளோ சீக்கிரம் முடியுமோ, அவ்வளோ சீக்கிரம் எல்லாத்தையும் சரி பண்ணனும்..’



Advertisement

‘பேசுனது போதும்.. சீக்கிரம் கிளம்புங்க கோர்ட்டுல இன்னிக்கு வாய்தா இருக்கு.. ஏற்கனவே நேரமாகிடுச்சி. நான் வக்கீல்கிட்ட பேசிட்டேன்’. 

அது அவர்களின் தாய் ஜானு.

இருவரும் கிளம்ப ஆயத்தமானார்கள். அவளோ தன் அறையில் இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன்னைத்தானே சிந்தனைகள் ஆட்கொள்ளப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

Advertisement

அவள் பின்னால் வந்து நின்றார் ஜானு, ‘வா.. எல்லாம் சரியாகிடும்..’ என்று கூறிக்கொண்டே அவளது புடவையின் மடிப்பை சரிசெய்துவிட்டார்.

Advertisement

‘ம்.. போகலாம்மா’ என்றவளை பின்னாலிருந்து அணைத்து அவளது கன்னத்தில் முத்தமிட்டார் ஜானு.

அன்றையதினம் நீதிமன்றமே பரபரப்பாக இருந்தது. மாவட்ட நீதிமன்றம் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். இந்த வழக்கிற்காகவும், அதன் தீர்ப்பிற்காகவும் மட்டுமே நிறைய பேர் அங்கு குவிந்திருந்தனர். பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் என நிறைய பேர் குழுமியிருந்தனர்.

அவள் தனது மகிழுந்துவிலிருந்து இறங்கினாள். உடனே இனிப்பை மொய்க்கும் எறும்புகள் போல அனைத்து பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள் என அனைவரும் சூழ்ந்து கொள்ள, அவர்களை சட்டை செய்யாமல் நிமிர்ந்து நடந்து தவிர்த்துச் சென்றாள். அவளது தலை குனியவும் இல்லை, கைகள் நடுங்கவும் இல்லை, அவளது சிந்தையும், பார்வையும் தடுமாறவும் இல்லை.

Advertisement

‘சார்.. இந்த தடவை எல்லாம் சரியாகிடுமா?.. தீர்ப்பு எங்க பக்கம் வருமா?’ ஜானு அவரது வழக்கறிஞரிடம் வினவினாள்.

‘கண்டிப்பா மேடம். சாட்சியெல்லாம் விசாரிச்சு இன்னிக்கு ஃபைனல் ஆர்கியூமென்ட்.. ரெண்டு பக்கமும் வாதம் முடிஞ்ச பிறகு தீர்ப்புக்காக தேதி போடுவாங்க. நியாயம் நம்ம பக்கம் இருக்கு. கவலைப்படாதீங்க’

அவர்கள் உள்ளே நுழைய முற்பட எதிர்ப்பட்டவர், நல்ல கம்பீரமான தோற்றத்தோடு சற்றே கருப்பான நிறத்தில், முறுக்கிவிடப்பட்ட மீசையும், நீளமான மூக்கும் கொண்டு பார்ப்போரை பார்வையாலேயே மிரட்டிவிடும் தோரணையில் இருந்த ஒரு நபர். அவரைச் சுற்றிலும் நான்கைந்து இளைய வழக்கறிஞர்கள், அவர்களோடு ஒரு வயதான குமாஸ்தாவும் இருந்தார்.

‘என்ன மேடம்? இன்னிக்கு கேஸ்ல ஜெயிச்சிடலாம்னு கனவு கண்டுட்டு வந்திங்களா?.. கனவு மட்டும்தான் உங்களால காண முடியும்.. இந்த கேஸை இன்னிக்கு நான் முடிக்கப் போறேன். அதோட உங்க கனவையும்தான்…’ 

அது அரசு வழக்கறிஞர் திருவேங்கட சுப்ரமணிய ஸ்வாமி. எல்லாரும் அவரை டி.எஸ்.எஸ்.சார்னு தான் கூப்பிடுவாங்க. சட்டமும், சட்டத்திலிருக்கும் ஓட்டையும் நன்கு தெரிந்தவர். அவருக்கு சட்டத்தில் ஓட்டையை ஏற்படுத்தவும், இருக்கும் ஓட்டையை அடைக்கவும் தெரியும். 

இதற்கொல்லாம் அஞ்சாதவள் தன் கர்ஜனை குறையாமல் அவரை வார்த்தைகளால் பதம் பார்க்க எத்தனித்தாள்.

நக்கலாக உதட்டோர விளிம்பில் புன்னகையைத் தெறித்துக் கொண்டே, ‘என்ன மிரட்டிப் பாக்குறீங்களா? மிஸ்டர் டி.எஸ்.எஸ். நான் பழைய ஆளா இருந்திருந்தா, என் முன்னாடி நீங்க நின்னு பேசிட்டிருக்கவே முடியாது.. நியாபகத்துல வச்கிக்கோங்க..

பாப்போம் நீங்க இந்த கேஸை ஒண்ணுமில்லாம ஆக்கப் போறிங்களா?.. இல்ல உங்க இந்த வக்கீல் தொழிலையே நான் ஒண்ணுமில்லாம ஆக்கப் போறேனான்னு… பாக்கலாம் மிஸ்டர்.டி.எஸ்.எஸ். ஒரு வேலை தோத்துப்போனா நீங்க என்ன தொழில் செய்யலாம்னு இருக்கீங்க?.. சொல்லுங்க, கவர்ண்மெண்ட் ப்ளீடர்?.. ஏதாவது பிளான் வச்சிருக்கிங்களா? நான் வேணா ஒரு ஐடியா சொல்லட்டுமா? இந்த கோர்ட் வாசல்ல ஒரு டீக்கடை போட்டுடுங்க தொழில் அமோகமா போகும்.. ஆனா அதுக்குல்லாம் ஒரு எக்ஸ்ப்பீரியன்ஸ் வேணுமில்ல.. எக்ஸ்பையரி ஆன உங்கக்கிட்ட எக்ஸ்ப்பீரியன்ஸ் எதிர்பார்க்க முடியாதே?.. ம்ப்ச்.. பாவம் நீங்க…’

பொறிந்து தள்ளி அவரைப் பார்வையாலேயே மிரட்டிச் சென்றாள் அவள்.

‘ஹேய்! யூ ஆர் பேக்… திரும்பவும் என் அக்கா எனக்கு கிடைச்சிட்டா.. நான் உங்கிட்ட இதை எதிர்பார்க்கவே இல்ல சிமி… இப்போத்தான் நீ என் பழைய அக்கா மாதிரி இருக்க.. நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்.’ என்றாள் பிரதக்ஷனா.

‘வா…’ அவளை அழைத்துச் சென்றாள் அவள்.

ஆம்… அவள் கர்ஜனைக்குரியவள் தான். அவள் பெயரோ சினாமிகா… அவளைத் தெரிந்தவர்களுக்கு சிமி.. தெரியாதவர்களுக்கு சினத்தை உமிழும் சினாமிகா… 

சினத்தை அவளால் கட்டுக்குள் வைக்க இயலாது. சிங்கமாய் கர்ஜித்திருந்த அவளை இத்துணை நாட்களாய் கட்டிப்போட்டிருந்தது அந்த சிறு பூங்குயில் தன் பாசத்தால்…

‘வழக்கு எண்.11/2024.. சினாமிகா வெர்சஸ் ஸ்டேட்…’

‘சினாமிகா.. சினாமிகா..’ நீதிமன்றத்தில் அவளை அழைத்தனர்.

உள் சென்றவள் அவைக்குத் தன் வணக்கத்தைத் தந்தாள். சார் உங்க தரப்பு வாதத்தை ஆரம்பிக்கலாம் என்று சினாமிகாவின் வழக்கறிஞரைப் பார்த்து உரைக்க, அவர் தனது வாதத்தை ஆரம்பித்தார். 

‘ஐயா, என் கட்சிக்காரர் இந்த வழக்கை போட்டிருக்காங்க. ஒரு சாதாரண உரிமைக்காகக் கூட இந்த சமூகத்தில ரொம்ப போராட வேண்டியிருக்கு. மிசஸ் சினாமிகா வெல் செட்டில்ட். ஒரு பெரிய மென் பொருள் துறையில் சி.இ.ஓ. ஆக வேலை பார்த்து வராங்க. 

மிசஸ்.சினாமிகா மைனர் பொம்மியைத் தத்தெடுக்க விரும்புறாங்க.. இந்த கேஸ் மைனர் பொம்மிக்கு கிட்டத்தட்ட 2 வயசு இருக்கும்போது போடப்பட்டது. இப்போ மைனர் பொம்மிக்கு 7 வயசு ஆகுது. கிட்டத்தட்ட அஞ்சு வருஷமாகியும் இந்த கேஸ் இன்னமும் முடியல யுவர் ஆனர்.’

‘அப்ஜெக்ஷன் யுவர் ஆனர். வழக்கு போட்டது. அது நடந்துட்டிருக்கிறது இப்படி ஏற்கனவே நமக்கு தெரிஞ்ச விசயங்களையே வக்கீல் பேசிக்கிட்டிருக்காரு. வழக்குக்கு தேவைப்படற விசயங்களை மட்டும் பேசினா இந்த கோர்ட்டோட நேரம் வீணடிக்கப்படாது யுவர் ஆனர்’

‘டி.எஸ்.எஸ். சார் இருங்க. அவங்க இப்பத்தானே ஆரம்பிச்சிருக்காங்க அதுக்குல்ல ஏன் இடையில நிறுத்திறீங்க. இதுவும் இந்த கேஸைப் பத்தினதுதானே? சார் நீங்க கன்டினியூ பண்ணுங்க..’ நீதிபதியின் கண்டிப்பில் அமர்ந்தார் அவர்.

‘யுவர் ஆனர். பொம்மியோட அம்மாவும், அப்பாவும் ஒரு கார் ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க. அவங்க ரெண்டு பேரும் முத்தங்கா கிராமவாசிகள், பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். அதை ஆக்சிடென்ட் அப்படின்னு எங்களால ஏத்துக்க முடியலை யுவர் ஆனர். குடிபோதையில ஒரு பணக்கார பையன் வண்டியை அவங்க மேல ஏத்திட்டான்.’

‘அப்ஜெக்ஷன்… இந்த கேஸ்ல சம்மந்தம் இல்லாததை வக்கீல் பேசிக்கிட்டிருக்காரு. மைனர் பொம்மியோட அம்மா, அப்பா இறந்தது ஆக்சிடென்ட் அப்படின்னு ஏற்கனவே நிரூபணமாகி அந்த கேஸ் முடிந்துபோன பிறகு இப்படி அந்த வழக்கை இதோட சேர்த்து வைச்சி சொல்றது ஏத்துக்க முடியாது யுவர் ஆனர்.’

நீதிபதி ‘சார்.. இந்த வழக்குக்கு சம்மந்தமானதை மட்டும் பேசுங்க. அது வேற வழக்கு. அந்த வழக்கு முடிஞ்சு போச்சி. ஒருவேலை அந்த வழக்கோட தீர்ப்பில உங்களுக்கு உடன்பாடு இல்லன்னா நீங்க மேல்முறையீடு பண்ணலாம். இப்போ இந்த வழக்குக்கு உரியதை மட்டும் வாதிடுங்க’

‘சரிங்க ஐயா. மைனர் பொம்மி இப்போ அவங்க பாட்டியோட பராமரிப்பில இருக்காங்க. அவங்களைத் தத்தெடுக்க மைனர் பொம்மியோட பாட்டியும் சம்மதம் தெரிவிச்சிருக்கிற இந்த சூழ்நிலையில, கவர்ன்மெட்ல மிசஸ் சினாமிகா மைனர் பொம்மியைத் தத்தெடுக்க சட்டத்தில இடம் இல்லன்னு சொல்லி, தத்து எடுக்க மிசஸ்.சினாமிகா கொடுத்த மனுவைத் தள்ளுபடி பண்ணியிருக்காங்க. அதனாலத் தான் இந்த வழக்கு இங்க தொடுக்கப்பட்டிருக்கு.’

‘என்னவொரு வேடிக்கை.. யுவர் ஆனர்.. இவங்க சொல்ற இந்த மிசஸ் சினாமிகா… இவங்க எப்போவும் பிரச்சனையை புதுசு புதுசா உருவாக்கிட்டே இருப்பாங்க போல. இந்த சொசைட்டிக்குன்னு ஒரு ரூல்ஸ் இருக்கு. நாம நம்ம சமுதாயத்துக்கு ஒரு பாரம்பரியம், கலாச்சாரம், மரியாதை, ஒழுக்கம், வாழ்வியல் முறை எல்லாம் உருவாக்கி வச்சியிருக்கோம். இந்தப் பொண்ணால எல்லாம் இதைப் பின்பற்ற முடியாது.

இவங்க எப்பவும் காலம் காலமாக இருந்து வர வழக்கத்தையும், விதிகளையும் பின்பற்றாதவங்க. சரி அது கூட அவங்களோட தனிப்பட்ட விருப்பம்னு விட்டுடலாம். ஆனா இவங்க நம்ம சட்டத்திட்டத்தைக் கூட மதிக்காதவங்க. இவங்களால சட்டத்தையோ, சமுதாயத்தையோ மதித்து நடக்க முடியாது.

இவங்களால இந்த சமுதாயத்தில இருக்கிற பல பெண்கள் தப்பான நெறிமுறைகளை பின்பற்றிட்டு வராங்க. மிசஸ் சினாமிகாவோட எதிர்காலம் அது அவங்களோட முடிவு. ஆனா அவங்களை பின் தொடர்ந்து அவங்களோட கொள்கைகளை பின்பற்றி பல பெண்களோட வாழ்க்கை, எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கு. அது மட்டும் இல்ல அல்டிமேட்டா இந்த சமுதாயத்தோட எதிர்காலமும், எதிர்கால சந்ததியின் வாழ்க்கையும் கூட கேள்விக்குறியாக இருக்கு..

மிசஸ் சினாமிகாவுக்கு வழக்கு போடறது, கோர்ட்டுக்கு போறது, பிரச்சனையை உண்டு பண்றது எல்லாம் பொழுதுபோக்கு போல. ஒருவேலை இவங்களுக்கு பத்திரிக்கை, செய்தியாளர்கள், சமூக ஊடகங்கள் எல்லாம் எப்பவும் தன்னை சுத்தி வரணும்னு நினைக்கிறாங்க போல. இந்த நாட்டோட ஹாட் டாப்பிக் ஆர் சென்சேஷனா இருக்கனும்னு விருப்பப்படறாங்க போல.

தான் பிரலமாகனும் அப்படிங்கிறதுக்காக இப்படியெல்லாம் செய்றாங்கன்னு நினைக்கிறேன். யுவர் ஆனர் இவங்களைப் போல இருக்கிற ஒரு சிலரால இந்த சமுதாயத்திற்கே பாதிப்பு தான். இவங்க எல்லாம் கேன்சர் மாதிரி. மொத்த சமுதாயத்தையும் பாதிச்சிடுவாங்க.’

‘அப்ஜெக்ஷன் யுவர் ஆனர். அரசு வழக்கறிஞர் தன் எல்லையை மீறி பேசிக்கிட்டிருக்காரு..

மிசஸ் சினாமிகா தன்னோட சொந்த காலில் நிக்கிறவங்க. மைனர் பொம்மிக்கு அவங்களால ஒரு நல்ல வாழ்க்கையையும், நல்ல படிப்பையும், இந்த சமுதாயத்தில ஒரு நல்ல அடையாளத்தையும் உருவாக்கித் தர முடியும்.

யுவர் ஆனர். நம்மலோட சமுதாயத்தில நிறைய குழந்தைகள் அநாதையா ஆக்கப்பட்டிருக்காங்க. அது அவங்களோட தப்பில்ல. மிசஸ் சினாமிகா மாதிரி சிலர் அவங்களை தத்தெடுக்க நினைக்கிறது அந்த குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தையும், நல்ல சமுதாயத்தையும் உருவாக்கித் தரும் யுவர் ஆனர்.

இந்த சமுதாயம் இதைக் கேலிக்கூத்தாக்கிட்டு இருக்கு. மிசஸ் சினாமிகா மென்டல்லி, ஃபிசிகல்லி பிட் அப்படிங்கிறதுக்கான சான்றிதழ் அரசு மருத்துவரால வழங்கப்பட்டு, அவரது சாட்சியமும் இருக்கு யுவர் ஆனர். மிசஸ் சினாமிகா திருமணமானவங்க. திருமணமான ஒருத்தர் தத்தெடுக்க எந்தத் தடையும் இல்லை யுவர் ஆனர். மிசஸ் சினாமிகாவிற்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகுது யுவர் ஆனர்.’

‘அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்… திருமணம்… அந்தத் திருமணம்… ஆமாம் அதைப் பத்தி நாம இங்கக் கண்டிப்பா பேசியே ஆகனும் யுவர் ஆனர். அந்தத் திருமணம்… அது தானே இந்த வழக்கிற்கு அடிப்படை..

மிசஸ் சினாமிகா மனநலம், உடல்நலம் சரியாக இருப்பதாக அரசு மருத்துவர் கூறியிருந்தபோதிலும், நான் அதை சரியான ஆவணம் தானா என சந்தேகிக்கிறேன் யுவர் ஆனர். அதற்கு அவரது திருமணமே ஒரு சாட்சி… 

சமுதாயத்திற்கு வெளியில் வாழக்கூடியவர்கள் இந்த மிசஸ் சினாமிகா போன்றவர்கள்… எப்படி இந்த மாதிரி ஆட்களை நம்ம சமுதாயத்துக்குள்ள விடறது? இவங்களை இந்த சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கிறது தான் நம்மலோட சமுதாயத்துக்கு நன்மையா இருக்கும்..’

‘அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்.. அரசு தரப்பு வழக்கறிஞர் தனி மனித உரிமைக்கு எதிராகவும், தனி மனிதரோட தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிற மாதிரி பேசிக்கிட்டிருக்காரு யுவர் ஆனர்.’

‘மிஸ்டர் டி.எஸ்.எஸ். கொஞ்சம் உங்க வார்த்தைகளை கவனமாகக் கையாளுங்க.. நீங்க இந்த மாதிரி பேசுறது மிசஸ் சினாமிகாவோட பிரைவேட் ஃலைபை பாதிக்கிற வகையில இருக்கு..’

‘யுவர் ஆனர்.. நான் சொன்ன விதம் தப்பா இருக்கலாம். ஆனா, நடப்பில இருக்கிறதைத் தான் சொன்னேன்…

மிசஸ் சினாமிகா மைனர் பொம்மியைத் தத்தெடுக்கிறது சட்டத்திற்கு எதிரானது. அதுவும் அதற்கான அடிப்படையா அவர் திருமணம் ஆனவர் எனக் காட்டுறது அதை விட மோசமானது..’

‘சரி.. இந்த வாதத்தோட தொடர்ச்சியை அடுத்த வாய்தாவில கேட்கலாம்.. வழக்கு வாய்தா மாற்றப்பட்டிருக்கு. அடுத்த கேஸை கூப்பிடுங்க..’

டி.எஸ்.எஸ். நக்கலெனவே புன்னகையை உதிர்த்துவிட்டு கிளம்பினார். வீட்டிற்கு வந்த சினாமிகா சிந்தனையில் ஆழ்ந்தாள். 

தன் அறைக்குள் நுழைந்தவள் விளக்கைப் போடாமல் மின் விசிறியை மட்டும் சுழல விட்டுக் கட்டிலில் மல்லாந்து படுத்துக் கொண்டே சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

அவளது சிந்தனை முழுதும் அந்த வார்த்தைகளாலேயே நிறைந்திருந்தது… 

‘திருமணம்… அந்தத் திருமணம்…’ 

நினைவுகளில் அவள் தொலைந்துப் போகத் தொடங்கினாள்…

என்னவாயிற்று சினாமிகாவிற்கு?… ஏன் அவள் மனம் கணக்கத் தொடங்கியது?… அவளது கடந்த காலப் பக்கங்களில் அவ்வளவு வலிகள் இருந்தனவா?.. அவள் ஏன் மௌனிக்கிறாள்?.. சினத்தை உமிழும் அவளுக்குள் சிந்தனைகளும் உமிழ்கிறதே… என்ன நடந்திருக்கும்?…

காண்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!