Skip to content
Post Views: 11,913
அத்தியாயம் 1
“அக்கா, நிஜமா சொல்லு, உனக்கு இந்த கல்யாணம் ஓகே வா?” கண்ணாடி முன்னே சர்வ அலங்காரங்களுடன் அமர்ந்திருந்த தேனிலாவிடம், அவளது நகைகளை அவிழ்க்க உதவிக்கொண்டே கேட்டாள் வாணிலா.
Advertisement
மௌன சிரிப்போடு வளையல்களை கழட்டிக்கொண்டிருந்தாலே தவிர அவள் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அவளிடம் இருந்து பதில் வரவில்லையே என்ற கவலையும் வாணிலாவிடம் இல்லை. தேனிலா தலையில் சுற்றியிருந்த ஒரு கூடை பூவை, பூவுக்கும் நோகாமல், தன் அக்காக்கும் வலிக்காமல் மெது மெதுவாய் அகற்றிக்கொண்டே, “நல்லா யோசிச்சு முடிவு பண்ணுக்கா… அவங்களை உனக்கு யாருன்னே தெரியாது. சும்மா அம்மா அப்பா சொல்றதுக்கு எல்லாம் கண்ணை மூடிக்கிட்டு தலையாட்டாத!” என்றாள்.
‘ஸ்ஸ்… மெதுவா!’ லேசாக ஒரு முடி பின்னில் பட்டு இழுத்ததற்க்கே வலியில் முனகினாள் தேனிலா.
Advertisement
Advertisement
‘சாரி சாரி’ என்ற வாணிலா, இன்னும் மெதுவாக பூவை அகற்றிக்கொண்டே, “உனக்கு அந்த பையன் ஓகேன்னு தோணுதா? எனக்கு என்னவோ செட் ஆகும்ன்னு தோணல” என்றவள், பதில் சொல்லாமல் இருந்தவளின் தோளை பற்றி தன்புறமாய் பட்டென திருப்பி, “உனக்கு அந்த ‘ஸ்பார்க்’ வந்துச்சா? அவன் முகத்தை பார்த்ததும், இவன் தான் என் ஆளுன்னு, இவன்கூட தான் என் லைப் ட்ராவல் ஆகணும்ன்னு…? தோணுச்சா அப்படி?” என்றாள் ஆர்வமாய்.
பதிலின்றி, ‘இல்லை’ என்பதை போல, உதடு பிதுக்கி தேனிலா அசட்டையாய் தோள் குலுக்க, தன் மொத்த ஆர்வமும் வடிய, “போடி அக்கா… சரியான மக்கு நீ!” அவள் நெற்றியில் தட்டி, “உனக்குன்னு வரப்போறவன் எப்படி இருக்கனும்ன்னு கொஞ்சம் கூடவா ஆசை இருக்காது?” வியப்பாய் கேட்டாள் வாணிலா.
Advertisement
“எனக்கென்னடி தெரியும்?” அப்பாவியாய் அவள் கைவிரிக்க, “எப்பவும் அப்பா அம்மா சொல்றது தானா? கல்யாணத்துல கூட சுயமா யோசிச்சு முடிவெடுக்க மாட்டியா?” என்று ஆச்சர்யமாய் கேட்டாள் வாணிலா.
“அம்மா அப்பாக்கு தெரியாததா எனக்கு தெரியப்போகுது?” பெற்றவர் பேச்சை மீறாத பெண்ணாய் தேனிலா பதில் சொல்ல, “அதில்ல க்கா…” வாணிலா மறுத்து பேச வர, அவள் காதை ஒரு கரம் நறுக்கென திருகி இழுத்தது.
‘ஸ்ஸ்…ஆஆ’ அவள் லேசாக அலற, “நீ தான் அடங்கா கழுதையா வந்து வாய்ச்சுருக்கன்னா, ஒழுங்கா இருக்கவளையும் மூளை சலவை செஞ்சுட்டு இருக்கியா?” என்று முறைத்தார் அவர்களின் அன்னை, காஞ்சனா.
“ஸ்ஸ்… வலிக்குது விடுங்கம்மா” அவரிடம் இருந்து தப்பித்து நகர்ந்தவள், “அவளுக்கு புடிச்சுருக்கான்னு தெரியனும்ல ம்மா?” என்று கேட்டிட, “அதை அவளே சொல்லுவா… நீ ஒழுங்கா லீவை முடிச்சு காலேஜுக்கு போய் டிகிரி வாங்குற வழியை பாரு” என்றுவிட்டார்.
வாணிலா, தேனிலா இருவரும் காஞ்சனா ஜெயமோகனின் பிள்ளைகள். ஒன்னரை வருட இடைவெளியில் பிறந்திருந்தாலும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போல தான் இருவரும். ஆனால் குணமோ நேரெதிர். தேனிலா பெற்றவர்கள் கொண்டாடும் தித்திப்பான ரகம், வாணிலா ஒரு சுதந்திர பறவை!
படிப்பை கூட பெற்றவர்கள் சொல்படி, விருப்பபடி படித்து முடித்து இப்போது ‘திருமணம் செய்’ என்றதும் உடனே சரி என்று விட்டாள் பெரியவள். சின்னவளோ பெற்றவர்களை எதிர்த்து ஹாஸ்டலில் தங்கி, ஒன்றுக்கும் உதவாத ஒரு கோர்சை படித்துக்கொண்டிருக்கிறாள். அப்படிதான் அவளை பெற்றவர்கள் எல்லோரிடமும் சொல்வார்கள்.
வாணிலாவின் போதனைகள் எதுவும் தேனிலாவின் ‘பெற்றோர் பக்தி’ முன்னே பலிக்கவில்லை. வாயில்லா பூச்சி என்றே அழைக்கப்பட்டவள், தனக்கென முடிவானவனிடம் கூட வெட்கப்பட்டு அளவாக தான் அலைபேசியில் பேசினாள். நாட்களும் நெருங்கி திருமண நாளும் புலர்ந்து, தேனிலா மருமகளாய் இன்னொரு வீட்டிற்கு தாரைவார்க்கப்பட்டாள்.
அவள் கண்கலங்க கணவனோடு காரில் ஏறும்போது, பெற்ற இருவரை விட, வாணிலா தான் கண்ணீரோடு நின்றிருந்தாள். ஏனோ அவளுக்கு அக்காவின் கணவன் மேல் ஒரு நம்பிக்கை வரவில்லை. அவள் தன் வாழ்வின் அடுத்த அத்தியாயத்திற்கு செல்கிறாள் என மனதை தேற்றிக்கொள்ள முடியவில்லை. மனதில் பாரம் தான் ஏறியது அவளுக்கு.
எட்டு மணி நேர பயணத்தில் அவளை திருமணம் முடித்து வைத்திருந்தனர். நினைத்ததும் சென்று பார்த்து வர முடியாத தொலைவு தான். வாணிலாவுக்கு தன் வீடே ஏதோ போல இருந்தது. அக்கா இல்லாமல் அந்த வீட்டில் அவள் இருந்ததே இல்லை. அம்மாவை விட அக்கா தான் அவளுக்கு எப்போதும். ஹாஸ்டலில் சேர்ந்தபோதும் கூட தினமும் அக்காவுக்கு அழைத்து பேசிவிட்டால் தான் அந்த நாளே ஓடும் அவளுக்கு.
திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஓடியிருக்க, இங்கே தன் வீட்டில் இருந்த வாணிலாவுக்கு உடனே தன் அக்காவை பார்க்க வேண்டும் போல எண்ணம்.
‘அவ இப்ப இன்னொரு வீட்டுப்பொண்ணு. அந்த வீட்டோட பொறுப்பை அவ பாக்கணும், சும்மா தொந்தரவு செய்யக்கூடாது’ அவள் அன்னை காஞ்சனா நேற்றே கண்டித்து சொல்லியிருக்க, அதையெல்லாம் கேட்டுவிட்டால் அவள் ‘தேனிலா’ ஆகிவிடுவாளே!!!
வாணிலா உடனே தன் அக்காவுக்கு அழைத்தாள். இரண்டு மூன்று முறை முயன்ற பின் அழைப்பு எடுக்கப்பட, “சொல்லு வாணி” என்றாள் தேனிலா அவசரமாய்.
பேச வேண்டும் என்றிருந்த வாணிலாவின் ஆர்வம் தேனிலாவின் அவசர குரலில் மட்டுப்பட, “வேலையா இருக்கியா?” என்றாள்.
“வீட்டுக்கு கல்யாணம் விசாரிக்க வந்துருக்காங்க… டீ போட்டுட்டு இருக்கேன். அவங்க போனதும் பேசவா?” தேனிலா கேட்க, இவள் வேண்டாவெறுப்பாய் சொன்ன ‘ம்ம்ம்’ முடியும் முன்னே அழைப்பு துண்டிக்கப்பட்டது.
முதலில் கோவம் வந்தாலும், தேனிலாவின் சூழ்நிலையை புரிந்துக்கொள்ள முயன்றாள் வாணிலா. இரவு கவிழும் வரை காத்திருந்தாள்.
‘அக்கா!?’ என்று அவள் புலனத்தில் அனுப்பிய குறுஞ்செய்தி கேட்பாற்று கிடந்தது. மணி பத்தை தொட, மனம் கேளாமல் அழைத்துவிட்டாள். கடைசி நொடியில் எடுக்கப்பட்ட அழைப்பில், “அக்கா?” என்ற அவள் விளிப்புக்கு, “அவ தூங்குறா! அப்புறம் பேசு” என்ற அவள் அத்தானின் குரல் கேட்க, “அவ தூங்க லேட் ஆகுமே!” என்றிருந்தாள் வாணிலா.
“எல்லாம் முன்ன மாதிரியே இருக்குமா?” அவன் குரல் ஒருமாதிரி ஒலிக்க, கூடவே மெலிதாய், ‘ப்ச், குடுங்க’ என்ற அவளின் அக்காவின் குரல்! அவளுக்கும் ‘இங்கீதம்’ தெரியும் தானே! உடனே வைத்துவிட்டாள். என்னவோ தன் ‘அக்கா’ தூரமாகி சென்ற உணர்வு.
விடுமுறையை சீக்கிரமே முடித்துக்கொண்டு கல்லூரிக்கு சென்று சேர்ந்தவளுக்கு, வழமைப்போல நடப்பதை எல்லாம் அக்காவிடம் ஒப்பிக்கும் வேகம். ஆனால், அவளால் தான் முன்பு போல இலகுவாய் பேச முடிவதில்லை. பேசிக்கொண்டிருக்கும்போதே குறுக்கே யாராது வந்து ஏதாவது அவளிடம் பேசுவர், ‘அப்புறம் பேசுறேன் வாணி’ என்று விடுவாள் தேனிலா.
நாள் போகப்போக, அரைமணி நேரத்தில் குறுக்கே வந்தவர்கள், தங்கள் கால அளவை குறுக்கி, இப்போதெல்லாம் ஐந்து நிமிடங்களுக்குள்ளேயே வந்துவிடுவர். இவளும் ‘பிறகு அழைக்கிறேன்’ என்று சென்றுவிடுவாள். அவளாக அழைக்கும் பொழுதுகள் எல்லாம் சொற்பம் தான்.
கிடைக்கும் ஐந்து நிமிடத்தில் அவளிடம் சொல்ல வேண்டியதை எல்லாம் முன்கூட்டியே மனதில் வரிசைப்படுத்திக்கொண்டு தான் பேசவே ஆரம்பிப்பாள் வாணிலா. அதையும் முடிக்கும் முன்னே யாரேனும் குறுக்கே வந்துவிட்டால், அழுகையே வந்துவிடும் அவளுக்கு.
அவளுக்கு மட்டும் தான் இப்படி வருத்தம் போலும். அவள் அன்னை தந்தைக்கு தேனிலா குடும்பம் நடத்தும் பாங்கில் அத்தனை பூரிப்பு. இரண்டொரு முறை சென்று பார்த்துவிட்டுக்கூட வந்திருந்தனர். அவள் நிற்க நேரமில்லாமல் சிட்டாக வேலை செய்வதைக்கண்டு பூரிப்பு தான் இருவருக்கும். கூடவே இவளை போல சின்னவளும் இருந்துட்டா எவ்ளோ நல்லா இருக்கும்? என்ற அங்கலாய்ப்பு வேறு!
சம்பந்தி வீட்டிற்கு அடிக்கடி சென்று தங்கி வருவதெல்லாம் மரியாதை குறைச்சல் என எண்ணும் ஆட்கள் என்பதால், நெடு நேர பயணம் சென்று போனாலும் மகளை பார்த்துவிட்டு சிறுது நேரத்தில் கிளம்பிவிடுவர். உபசரிப்பு, நலம் விசாரிப்பு இதிலேயே நேரம் ஓடிவிட, மகளிடம் தனித்து பேச எல்லாம் நேரம் கிடைக்காது. கூடவே அவர்களுக்கு அப்படி பேச வேண்டும் என்றெல்லாம் தோன்றவும் இல்லை.
மகள் அந்த குடும்பத்தில் ஒருத்தியாக தன்னை இத்தனை சீக்கிரத்தில் பொருத்திக்கொண்டு நற்ப்பெயர் எடுப்பதே மகிழ்ச்சியாய் இருக்க, மேற்க்கொண்டு எதையும் அவர்கள் ஆராயவில்லை.
செமெஸ்டர் தேர்வுகளுக்கான விடுமுறையில் உம்மென தங்கள் வீட்டிற்கு வந்தாள் வாணிலா. ‘அக்கா இல்லாத வீடு’ என்பதே அவள் உம்மென்ற முகத்திற்கு காரணமாய் இருந்தது. ஆனால், அவளை துள்ளிக்குதிக்க வைக்கும்படியான செய்தியோடு அவளை பெற்றவர்கள் காத்திருந்தனர்.
“தேனு முழுகாம இருக்காடி!”
தன் அன்னை சொல்ல, அக்காளை காண கையும் காலும் பரபரத்தது அவளுக்கு. உடனே கிளம்பி சென்றனர்.
கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு தன் அக்காவை காண்கிறாள் வாணிலா.
அவள் புசுபுசு கன்னம் எங்கோ காணாமல் போய், கழுத்தெலும்பு தெரிய, கொஞ்சமாய் எட்டிப்பார்த்த கருவளைய கண்களோடு, பொருத்தி வைத்த சிரிப்போடு அவள் வாசலில் நிற்க, வாணிலாவின் உற்சாகம் சர்ரென இறங்கியது.
அவளைத்தவிர வேறு யாருக்கும் அது உறுத்தவில்லை போல. சந்தோஷமாய் சென்று கட்டிக்கொண்டனர். வாணிலாவை கண்ட தேனிலாவின் கண்களில் அழைப்பிருக்க, ஆர்ப்பாட்டமின்றி சென்று கட்டிக்கொண்டாள்.
“எப்படி இருக்க வாணி?” அவள் கேட்டதும், “எனக்கென்ன? நீயேன் இப்படி இருக்க? நீ … நீ நல்லா தானே இருக்க?” என்று தயங்கி வாணிலா கேட்டதும், “ஏன்? உன் அக்காக்கு என்ன குறைச்சல்?” என்றான் அவள் அத்தான்.
அதே பொருத்தி வைத்த சிரிப்பொன்று தேனிலாவிடம். அந்த சிரிப்பில் உயிர்ப்பு தான் தென்படவில்லை.
“மாசமா இருக்க பொண்ணு இப்டி சோடையா தெரியுறது வழக்கம் தானே!? என்ன சொல்றீங்க சம்பந்தி?” அத்தானின் அம்மா சொல்ல, “அவ கடக்குறா லூசு! புள்ளை பெத்த நமக்கு தெரியாதுங்களா?” என்று சிரித்தார் காஞ்சனா.
அதன்பின்னான உபசாரங்கள் அனைத்தும் தேனிலாவின் கையால் அரங்கேறியது. பொதுவில் அமர்ந்து பேசும் வாணிலா பெற்றவர்கள், உரிமையாய் அடுக்களை வரை எல்லாம் சென்றதில்லை. இந்த தடை எல்லாம் வாணிலாவுக்கு இல்லையே! அக்காவை தேடி சென்றுவிட்டாள்.
“எதாவது வேணுமா வாணி?” அவள் கேட்க, மௌன பார்வை வாணிலாவிடம்.
“நல்லா படிக்குறியா? எல்லாம் ஓகே தானே!?” மதிய சமையலுக்கு வேலை செய்துக்கொண்டே தேனிலா கேட்க, அவள் கரம் பற்றி தன்னிடம் இழுத்தவள், “நீ ஓகே வா இங்க?” என்றாள் சந்தேகமாய்.
“எனக்கென்னடி? நல்லா இருக்கேன்” உடனே தேனிலா சொன்னாலும் வாணிலாவிற்கு அது உண்மை என்று தோன்றவில்லை.
“என்னவோ மறைக்குற நீ!?” அவள் சொல்ல, “அதெல்…” தேனிலா ஆரம்பிக்கும்போதே, “என்ன ரகசியம் ஓடுது இங்க?” என்று வந்து நின்றான் தேனிலா கணவன்.
தேனிலா தான் விட்ட வேலையை தொடர, வாணிலா சென்று பெற்றவருடன் அமர்ந்துவிட்டாள். சற்று நேரத்திற்கு பின், அந்த ஹாலில் இவர்கள் மூவர் மட்டுமே தனித்திருக்க, “ம்மா? அக்காக்கு எல்லாம் ஓகே’வான்னு கேளும்மா… என்னவோ அவ மறைக்குறான்னு தோணுது” மனது கிடந்து அடித்துக்கொள்ள சொன்ன சின்ன மகளை பொருட்படுத்தாமல்,
“அவ சாமர்த்தியமா குடும்பம் நடத்துறா! நீ சும்மா இரு” என்றார் காஞ்சனா.
“இல்லம்மா! அக்காக்கிட்ட என்னவோ சரி இல்லையோன்னு தோணுது”
“புருஷன் பொண்டாட்டிக்குள்ள எதாவது சின்ன ஊடலா இருக்கும்… இதெல்லாம் போய் நான் கேட்டுட்டு இருக்க முடியுமா? பொண்ணுக்கு புருஷன் வீடு தான் எல்லாம். கட்டிக்குடுத்துட்டா அனுசரிச்சு நடந்துக்கணும். அதெல்லாம் என் பொண்ணு என் பேரை காப்பாத்துவா!” என்ற காஞ்சா, “நீ தான் கட்டிக்குடுத்த கையோட பொட்டி படுக்கையை கட்டிட்டு நம்ம வீட்டுக்கே வந்து என் மானத்தை வாங்கிடுவியோன்னு பயந்து வருது” என்று சொல்ல,
“சும்மா இரு காஞ்சனா” என அதட்டினார் ஜெயமோகன்.
“ஏன்? அப்படி வந்துட்டா என்ன? புடிக்கலன்னாலும் கஷ்டப்பட்டு வாழணுமோ?” வாணிலா கேட்க, “ம்ம்… இந்த வாய் தான்டி என் பயமே! கல்யாணம் ஆகாம ஒரு பொண்ணு வீட்டோட இருந்தா அது வேற, அதுவே கல்யாணம் முடிச்சு வீட்டோட வந்துட்டா, அவளுக்கு ‘வாழாவெட்டி’ன்னு பேரு! பொண்ணை எப்படி வளர்த்துருக்கா பாருன்னு ஊரே ஏசும்” காஞ்சா நொடிக்க, வாணிலா பதில் பேசும் முன், “ம்மா… ப்பா… சாப்ட வாங்க, வா வாணி” என்று அழைத்தாள் தேனிலா.
அன்று அங்கிருந்து கையசைத்து விடைப்பெற்று சென்ற வாணிலாவுக்கு தெரியாது, அடுத்த தன் அக்காவை உயிரற்ற உடலாக தான் காணப்போகிறோம் என்று!!!
ஐந்து மாத கருவை சுமந்தபடி பாரமாகிய உடலோடு நடு வீட்டில் ஐஸ் பெட்டியில் இருந்தாள் தேனிலா.
இரண்டு முடி பின்னோடு சேர்த்து இழுபட்டாலே ‘வலிக்குது’ என்று முகம் சுருக்குபவள், கை மணிக்கட்டை அறுத்துக்கொண்டு உயிரை விட்டாளாம். ரத்தம் எல்லாம் வடிந்து உயிர் போகும்வரை அந்த வீட்டில் ஒருவரும் அவளை கவனிக்கவில்லையாம்.
பிரசவக்கால உடல் உபாதைகள், ஹார்மோன் மாற்றம், மனநிலை மாற்றம் எல்லாம் தான் அவள் தற்கொலைக்கு காரணம் என்றனர். சிறுது நாட்களாகவே சோர்ந்து கிடந்ததாக சொல்லி அவள் கணவன் கண்ணீர் விட, மேலும் அவர்கள் மேல் சந்தேகம் என்று யாரும் ஒரு வார்த்தை சொல்லாமல் இருக்க, போலீஸின் மேம்போக்கான விசாரணை முடிந்து… அத்தோடு எல்லாம் முடிந்தது.
மேலும் நான்கு வருடங்கள் அதன்போக்கில் ஓடின.
வாணிலா தன் படிப்பை முடித்து கேம்பஸ் மூலம் தேர்வாகி பெங்களூரில் பணியில் சேர்ந்தாள். முன்பு போல ‘கலகலப்பு’ கிடையாது. முகம் இறுக்கமாகவே இருக்கும் எந்நேரமும். தேவையை மீறி ஒரு வார்த்தை வாயில் இருந்து வருவதில்லை.
வயது இருபத்தி ஐந்தை தொடவே, வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் வேலையை ஆரம்பித்தனர்.
வாணிலா முடிவாக சொல்லிவிட்டாள், ‘தன் வாழ்வில் திருமணம் என்ற ஒன்றே கிடையாது’ என்று!
அக்கா சென்றுவிட்ட விரக்தியில் பேசுகிறாள் என்று நினைத்த பெற்றோருக்கு, அவள் காட்டிய அழுத்தமும், பிடிவாதமும் நாளுக்கு நாள் பயத்தை கொடுத்தது. வயது இருபத்தி ஏழை நோக்கி போக ஆரம்பிக்க, இவர்கள் இங்கே அனுதினமும் புலம்ப ஆரம்பித்தனர்.
பெங்களூரில் இருந்து விடுமுறைக்கு வருவதைக்கூட நிறுத்திக்கொண்டாள். சில வரன்கள் நேரே அவளை அவள் அலுவலகத்திலேயே வந்து சந்திக்க, சில மாதங்கள் பொறுத்தவள், ஒரு நாள் சொல்லாமல் பறந்துவிட்டாள், “ஸ்பெயின்”னிற்கு!
அங்கே அவளுக்கான ‘ஹைக்கூ’ அவளை வசீகரிக்க காத்திருந்தது!!!
error: Content is protected !!