Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் ஹைக்கூ காதல்

என் ஹைக்கூ காதல் 3 1

அத்தியாயம் 3

காவல் நிலையத்துக்கு வெளியே இருந்த மர பெஞ்சில் தரை பார்த்தபடி அழுகையை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள் வாணிலா. தேனிலா இறந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தது. உயிரோடு இருந்திருந்தால் வளைகாப்பு நடத்தியிருக்க வேண்டியது, இப்படி காரியம் செய்யும்படி ஆகிப்போனதே என எந்நேரமும் அழுகையுடன் வீட்டில் பெற்றவர்கள் நடமாட, தானும் அழுகையோடு நாட்களை நகர்த்தியவள், ‘அக்காவின் மரணத்திற்கு என்ன காரணம்’ என்று அறிய வேண்டும் என்று சொன்னபோது, ‘வாயை மூடு’ என கோவமாய் அதட்டி விட்டனர்.



Advertisement

அதையும் மீறி அவள், ‘போலீஸ்ல புகார் தரலாம் ம்மா… காரணம் இல்லாம அக்கா இவ்ளோ பெரிய முடிவை தேடிருக்க மாட்டா’ என்று சொல்ல, ‘மாப்பிள்ளை வீட்டை சந்தேகப்படுறியா? அவங்க காதுக்கு போச்சுன்னா எவ்ளோ வருத்தப்படுவாங்க தெரியுமா? சும்மா இரு!’ என்றுவிட்டார் காஞ்சனா.

ஜெயமோகனோ, ‘தேனு போன துக்கத்துல இருக்க நீ… படிப்பை நல்லபடியா முடி… எல்லாம் மாறும், மறக்கும்!’ என்று சொல்லிவிட, மறக்கக்கூடிய விஷயமா இது? என்ற ஆதங்கம் அவளுக்கு.

Advertisement

Advertisement

அவர்களிடம் ஒன்றும் சொல்லாமல் கல்லூரிக்கு கிளம்பி சென்றவள், அடுத்த விடுமுறையில் தங்கள் வீட்டுக்கு செல்லாமல், நேரே அக்காவை கட்டிக்குடுத்த ஊரின் பெண்கள் காவல் நிலையத்துக்கு சென்று, ‘அக்கா சாவுல சந்தேகம் இருக்கு. அவ புகுந்த வீட்டு ஆளுங்களை விசாரிங்க’ என்று எழுதிக்கொடுத்திருக்க, இதோ… தேனிலாவின் புகுந்த வீட்டு ஆட்கள் ஸ்டேஷன் உள்ளே, பெஞ்சில் அமர்த்திவைக்கபட்டிருந்தனர்.

முறையே வாணிலாவின் வீட்டுக்கு தகவல் போயிருக்க, அடித்துப்பிடித்துக்கொண்டு கிளம்பி வந்துக்கொண்டிருந்தனர்.

Advertisement

வந்ததுமே வாசலுக்கு எதிரே வாணிலா இருக்க, என்னவென்று உணரும் முன்னே அவளை கன்னம் சிவக்க அறைந்திருந்தார் காஞ்சனா.

‘ம்மா?’ அவள் குரல் விக்கித்து வர, “என்ன காரியம் பண்ற நீ?” என்ற முறைப்போடு உள்ளே சென்றவர், அங்கே சம்பத்தி வீட்டாட்கள் இருப்பதைக்கண்டு பதைப்புடன், “மேடம்… இவங்க மேல எந்த தப்பும் இல்ல மேடம், என் பொண்ணு தான் ஏதோ, விவரம் பத்தாம… பயந்தவ மேடம் அவ… பேசவே கூலி கேப்பா. கட்டிக்குடுத்தா தைரியமா இருந்துப்பான்னு தப்பா நினைச்சுட்டோம்” என்று கண்ணீர் சிந்தினார் காஞ்சனா.

மனைவியின் தோளை அழுத்திய ஜெயமோகன், “என் சின்ன பொண்ணுக்கு அக்கா மேல பாசம் அதிகம். அதுல துடுக்குத்தனமா இப்படி செஞ்சுட்டா… தயவுசெஞ்சு எந்த தொந்தரவும் இல்லாம இவங்களை நீங்க வெளில விடனும்” என்று கையெடுத்து கும்பிட, அந்த லேடி இன்ஸ்பெக்டர் அங்கிருந்த அத்தனை பேரையும் சில நொடிகள் வெறித்துப்பார்த்தார்.

அவர் பார்வையில் என்ன இருந்தது என்பதை யாரும் உணரவில்லை. ஒரு சலிப்பான மூச்சுடன், “அப்போ இந்த கம்ப்ளைன்ட்?” வாணிலா குடுத்த புகாரை பற்றி கேட்க, “வாபஸ் வாங்கிக்குறோம் மேடம்” என்றார் ஜெயமோகன்.  இன்னும் சலிப்பாய் தலையாட்டியவர், “போங்க” என்று சொல்லிவிட்டு வேறு வேலை பார்க்க, கோவத்தை அடக்கிக்கொண்டு நிற்கும் சம்பந்தி வீட்டாரை சங்கடமாய் எதிர்கொண்டனர் நிலாவின் பெற்றோர்.

முதல் ஆளாய் அந்த மாப்பிள்ளை தான் விறுவிறுவென வெளியேறினான். கூடவே மற்றவரும் போக, அவர்கள் பின்னே ஓடினர் காஞ்சனாவும் ஜெயமோகனும்.

“சம்பந்தி? மாப்பிள்ளை?” ஜெயமோகன் அழைக்க, விருப்பமின்றி நின்றவர்கள், “அசிங்கப்படுத்துறீங்களா?” என்று பொரிய, “ஐயோ இல்லங்க சம்பந்தி… சின்னவ ஒரு லூசு… அக்கா போன அதிர்ச்சில கிறுக்குத்தனமா செஞ்சுட்டா” காஞ்சனா சொல்ல,

“கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கூட முழுசா முடியல… அதுக்குள்ள உங்க பொண்ணு செத்துட்டா. துக்கம் எல்லாருக்கும் தான். ஆனா கஷ்டம்? அடுத்து என் பையன் வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்வீங்க? பொண்டாட்டி ஒரே வருஷத்துல தற்கொலை செஞ்சுக்கிட்டான்னு தெரிஞ்சா யாரு பொண்ணு குடுப்பா? இப்போவே எங்களை கொடுமைக்காரங்க மாறி பாக்குறாங்க. இதுல போலிஷ் ஸ்டேஷன் வேற… உங்க குடும்பத்துல பொண்ணு எடுத்துட்டு இன்னும் நாங்க எவ்ளோ தான் அசிங்கப்படனுமோ… ச்சை” காரி உமிழாத குறையான அந்த அம்மா முகத்தை திருப்ப, இங்கே பெற்றவர்கள் இருவரும் உடைந்துப்போயினர்.

“கொஞ்ச நாள் போச்சுன்னா உங்க சின்ன மகளையே இவனுக்கு கேக்கலாம்ன்னு தான் இருந்தோம். ஆனா இப்போ? யப்பா சாமி… ஆளை விடுங்க” என்று கும்பிடு போட்டவர் காரில் ஏறிவிட, மற்றவரும் ஏறினர்.

“மாப்பிளை…?” ஜெயமோகன் அழைத்ததற்கு ஒரு சூடான பார்வையை கொடுத்தவன், “வண்டி எடு” என்று டிரைவரிடம் சொன்னதும், கார் அங்கிருந்து மறைந்தது.

அங்கே அழுகையோடு துக்கம் தொண்டையை கவ்வ இருவரும் நின்றிருக்க, “ஏன் ம்மா இப்படி செஞ்சீங்க? அக்காக்கு என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்…” சொல்லி முடிக்கும்போதே, ஜெயமோகன் அவளை ஓங்கி அறைந்திருந்தார். அவர் அடியின் வேகத்தில் சில அடிகள் தள்ளி  கீழே விழுந்தவள், “அம்மாஆஆஆ” என்று அலற,

“அம்மேஏஏஏ”  அவளை விட அதிகமாய் ஒரு சத்தம். பட்டென கண்ணை திறந்தாள் வாணிலா.

கண்விழித்தவளுக்கு தான் எங்கே இருக்கிறோம் என்பதே புரியவில்லை. லேசாக  மூச்சு வாங்கியது. முகத்தை அழுந்த துடைத்துவிட்டு திரும்பியவள், சற்று தள்ளி சோபாவில் இரு கால்களையும் மேலே வைத்து குரங்கு போல அவளை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தவனை கண்டதும், “ஏஏஏஏ” என இன்னும் கத்த, எசப்பாட்டு போல தானும், “ஏஏஏ” என்றவன், “என்னம்மா உன் பிரச்சனை?” என்றான் தூக்கம் களையா விழிகளோடு.

“அதை நான் கேட்கணும்… நீங்க என்ன பண்றீங்க இங்க?” என்று பதட்டமாய் கேட்டபடி, சடுதியில் தன்னையும் ஆராய, சோபாவில் வாகாக சாய்ந்து அமர்ந்த கோவர்த்தன், “வோட்டர்.. வோட்டர்… வோட்டர் நியாபகம் இருக்கா?” என்றான், ‘தகடு தகடு’ மாடுலேசனில்.

தலையை பிடித்தாள் வாணிலா.

“ஒரு ஷாட் அடிச்சதுக்கே ஷாக் அடிச்சமாறி மயங்கி விழுந்துட்டீங்க… நம்ம ஊரு புள்ளையாச்சேன்னு பத்தரமா கொண்டு வந்து படுக்க வச்சுட்டு காவல் காத்துட்டு இருக்கேன்” அத்தனை பாவனையாய் சொன்னான்.

“தண்ணி தெளிச்சு எழுப்பிருக்கலாம்ல?” கோவம் கொள்ளையாய் வந்தபோதும் அதை வெளிப்படையாய் காட்ட நாகரீகம் தடுத்தது.

“அதை கூடவா செய்யாம இருப்பாங்க?” அவன் குரலிலும் கோவம் தென்பட, பேச்சை வளர்க்காது அங்கிருந்து எழுந்து அவசரமாய் தன்னை சரிசெய்துக்கொண்டாள். அடுத்து அவள் கண்கள் எதையோ தேட, அவளையே பார்த்திருந்தவன், “அங்க…” என்று விரல் காட்ட, மேசை மீதிருந்த தனது ஸ்லிங் பேகை எடுத்து மாட்டிக்கொண்டு, “தேங்க்ஸ் ஃபோர் தி ஹெல்ப்” என்றொரு கடமைக்காய் சொல்லிவிட்டு வெளியேறினாள்.

அதன்பின் அவனும் அங்கே தாமதிக்கவில்லை. தன் ப்ளேசரை எடுத்து மாட்டிக்கொண்டு அறையை பூட்டிவிட்டு வெளியேற, லிப்ட்’க்காக காத்துக்கொண்டு நின்றாள் வாணிலா. இவன் வருவதை கண்டதும் அவனை தவிர்க்க வேண்டி, அவசரமாய் பொத்தானை நான்கைந்து முறை அழுத்த, அதற்குள் அருகே வந்துவிட்டவன், “நீங்க எவ்ளோ தட்டுனாலும் அது வரப்போ தான் வரும் மேடம்” என்று அவன் சொல்ல, இவள் பதில் சொல்லவில்லை.

இவளது சுபாவம் அவன் உதடுகளை மேம்பாலமாய் வளைய செய்தது. அதற்கு மேல் அவனும் பேசவில்லை. கீழே சென்றதும் அவன் ‘செக் அவுட்’ செய்துவிட்டு வெளியே வர, அந்த விடிந்தும் விடியாத காலை நேரத்தில் பெரிய நடமாட்டம் இல்லை.  இரவு சரியாக உண்ணாதது வேறு ஒருபக்கம் அவளை சோர்வாக்கி இருக்க, தளர்ந்த நடையோடு வெளியேறிக்கொண்டிருந்தாள்.

அவள் அருகே தன் காரை சென்று மெதுவாக நிறுத்தியவன், “ஹலோ நிலா?” என்று அழைக்க, ‘இவன் விடவே மாட்டானா?’ என்று எரிச்சல் தான் வந்தது அவளுக்கு. அதை சற்றும் மறைக்காது முகத்தில் அவள் காட்ட, சில நொடிகள் தயங்கியவன், தன் கையில் இருந்த ஒரு கார்டை எடுத்து அவளிடம் நீட்டி,

“நீங்க நார்மலா இல்ல, ஏதோ ஸ்ட்ரெஸ்ல இருக்கீங்கன்னு தோணுது. இப்படியே போனா கஷ்டம். உங்களுக்கு கவுன்சிலிங் தேவை” என்றவன்,

“இது நம்ம ஊரும் இல்ல, நம்ம சொந்தங்களும் இங்க இல்ல. நம்மளை நம்ம தான் பாத்துக்கணும். இஷ்டம் இருந்தா இந்த ஹாஸ்பிடல்ல ஒரு அப்பாயின்மென்ட் போடுங்க!” அவன் கார்டை நீட்டிக்கொண்டே இருக்க, அவள் தன்னியல்பாய் அதை பெற்றுக்கொண்டாள். மறுநொடி அவன் கார் அங்கிருந்து சென்றுவிட்டது.

அவன் சொல்லி சென்ற வார்த்தைகளை அசைப்போட்டபடியே தன் வீட்டை வந்து சேர்ந்தாள் வாணிலா.

‘நம்ம நார்மலா இல்லையா? பார்த்தாலே தெரியுற அளவுக்கா!’ யோசனை ஆக்கிரமிக்க, சில நிமிடங்கள் ஒரே நிலையில் கடந்தவள், பின் நேரமாவதை உணர்ந்து அலுவலகம் கிளம்பி சென்றாள்.

ப்ரோக்ராம் செய்யப்பட்ட ரோபோ போல வேலைகளை அவள் பார்த்துக்கொண்டிருந்தாலும், ‘நீங்க நார்மலா இல்ல’ என்ற அவன் வார்த்தைகள் ஏகத்துக்கும் அவளை உறுத்தியது. அவனைப்பார்த்து பேசிய நிமிடங்களை எண்ணி விடலாம். அந்த குறுகிய காலத்துக்குள்ளேயே அவனுக்கு தெரிந்துவிட்டதா? எனக்குள் ஏதோ உலட்டுகிறது என்று!?

அவன் அத்தனை புத்திசாலியா? இல்லை தான் அத்தனை மோசமாய் காண்பித்துக்கொள்கிறோமா?

தன்னை சுற்றிலும் பார்த்தாள்.  வேலை இருந்தாலும் ஒருவருக்கொருவர் கலகலத்து பேசி சிரித்துக்கொண்டு உற்சாகமாய் இருக்க, தான் மட்டும் ஏதோ தனித்தீவாய் வாழ்வதாய் தோன்றியது. வந்த புதிதில் அவளிடமும் பேச முயற்சி செய்தனர் தான், இவள் பிடி கொடுக்காததால், யாரும் அருகே வருவதில்லை.

ஏனோ மனது மிகவும் சோர்ந்துப்போனது. தானாக தேடிக்கொண்டபோது நிம்மதியை கொடுத்த தனிமை, இப்போது தான் தனிமையாக்கப்பட்டதாய் உணரும்போது கசந்தது. அதற்க்காக பெற்றவர்களிடம் செல்ல வேண்டும் என்றெல்லாம் அவள் நினைக்கவே இல்லை. போகவும் பிடிக்கவில்லை.

அதற்குமேல் வேலை செய்ய பிடிக்கவில்லை. சனி ஞாயிறு வார விடுமுறை வேறு. வீட்டுக்குள்ளேயே அடைக்காத்து அலுத்துப்போனாள்.  அந்த ‘நைட் க்ளப்’புக்கு செல்லலாமா என்றும் தோன்றும். கூடவே அந்த ஒருவனின் முகமும் சேர்ந்து நியாபகம் வர, ‘யாருடனும் சிநேகிதம் வேண்டாம்’ என்று விட்டுவிட்டாள்.

அந்த வாரமும் வேலை வீடு என ஓடியது. மீண்டும் வார இறுதி. என்னவோ முன்பை விட அதீத சோர்வாய் தெரிந்தது மனது. சரியான உணவு இன்றி உடலும் பலமிழப்பதை உணர முடிந்தது.  என்னதான் வீடியோ பார்த்து சமைத்தாலும் அது ருசியாக இருப்பதே இல்லை.  இந்திய உணவகங்களின் சுவை அந்த கொங்கு நாட்டுக்காரிக்கு  ருசிக்கவில்லை. பச்சைபயிறு, கொள்ளு ரசம், மிளகாட்டி குழம்பு என வக்கனையாய் தின்றவளுக்கு இங்கே உணவுமுறை சரி வரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!