Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் ஹைக்கூ காதல்

என் ஹைக்கூ காதல் 7

அத்தியாயம் 7

அந்த மருத்துவமனையின் கேண்டீன் போன்ற இடத்தில் காலியான ஒரு டேபிள், முன்னே இருக்க, அதன் எதிரே வந்து அமரப்போகும் ஆளுக்காக காத்திருந்தாள் வாணிலா.  வார இறுதியானதால் அவளுக்கு விடுமுறை தான்.  அவனுக்கு அன்று விடுமுறை இல்லை என்பதை தெரிந்தவள், அவனது ப்ரேக் டைமில் வரும்படி சொல்லிவிட்டு காத்திருந்தாள்.



Advertisement

இரவு அவர் அழைத்து, ‘தான் அம்சவர்த்தினி’ என்று சொன்னதுமே நொடியில்லாமல் புரிந்துப்போனது அழைத்தது யாரென்று! புரிந்தாலும், அவர் ஏன் தனக்கு அழைக்க வேண்டும் என்ற திகைப்பு அவளிடம். அதோடு விட்டாரா?

“நீ என்ன பண்ற? ராத்திரிக்கு நல்லா தூங்கி எழுந்து, காலைல அவனுக்கு ஒரு போனை போடுற! ‘இங்கரு கோவர்த்தா… சும்மா சும்மா உன் ஆத்தா அப்புச்சியை எல்லாம் நேரம் கெட்ட நேரத்துல தொல்லை பண்ணக்கூடாது, சரியா?’ன்னு ஒரு முறைக்கு நாலு முறை அழுத்தி சொல்லிடு… ஆச்சா?” என்றார்.

Advertisement

Advertisement

“ஹான்? நானா?” அவள் கேட்க, “ஆமா நிலா கண்ணு… பைத்தியக்காரங்கிட்ட பே…சி மாளலை எனக்கு… முடிஞ்சா அவனோட பிரண்டா இருந்துக்க, நல்லா ருசியா சமைப்பான். என்ன?” என்று வேறு கேட்க, அவர் பேசுவதில் முன்னுரையும் இல்லை, பொருளுரையும் இல்லை.  புதியதாய் ஒருவரிடம் பேசும் பாங்கும் இல்லை.

“ஹும்ம்!” கடமைக்காய் அவள் ஒப்புக்கொள்ள, “சரி, பூசை இருக்கு, நான் போறேன்! நீ மறக்காம நாளைக்கு பேசிடு சொல்லிட்டேன்” என்றவர் வைத்துவிட்டார்.

Advertisement

‘என்னடா இது… அவங்களா வந்துட்டு, அவங்களே போறாங்க? நான் யாருன்னு கூட தெரியுமோ என்னவோ!?’ என்ற சிந்தையோடு படுத்தவளுக்கு அதன் பின் தூக்கம் வர வெகு நேரம் ஆனது. காலையில் எழுந்ததும் முதல் வேலையாய் அந்த ‘கோமட்டி தலையனுக்கு’ சந்திக்க வேண்டும் என்ற மெசேஜை தட்டிவிட்டாள்.

            மருத்துவமனையில் தனது கேபினில் தான் மட்டுமே அனாதையாக அமர்ந்திருந்தான் கோவர்த்தன்.  இனி பேஷன்ட் யாரும் இல்லை. கீழே வாணிலா காத்திருக்கிறாள் என்றும் தெரியும். எழுந்துப்போக ஒரே வெட்கமாய் இருந்தது. வெட்கம் என்றால், ‘நாணம்’ போல அல்ல, ‘பப்பி ஷேம்’ வெட்கம்!!!

கடந்த நாட்களில் வாணிலாவை மறந்து வேலைகளை பார்த்துக்கொண்டு தான் இருந்தான். அப்படி தான் அவன் நினைத்திருந்தான். அவன் வீட்டில் ‘பேயிங் கெஸ்ட்’டாக இருக்கும் ஆப்ரிக்க அழகன் ஒருவன் அவனை ‘நைட் கிளப்’புக்கு இன்வைட் செய்ய, உடனே ‘அவள்’ நியாபகம் தான்.

ஒரு உற்சாகம் உள்ளெழ, அவனுடன் பார்ட்டிக்கு போனவன், பார்த்தான்… ரசித்தான்… ருசித்தான்…! அங்கேயே ஒரு ஓரமாய் கிடந்தவனின் அலைபேசி அலற, எடுத்துப்பார்த்தால், அவன் அம்மா!

“மம்மி… ஓ மை மம்மிஈஈ…” லேசான ராகத்தில் அவன் தொடங்க, “ஊத்தப்பயலே… குடிச்சுருக்கியா?” உடனே கண்டுப்பிடித்துவிட்டார் அம்சவர்த்தினி.

“நானா… இல்லையே!” குழறல் தெரியாவண்ணம் அவன் சமாளிக்கப்பார்க்க, “உன்னை நடு புள்ளைன்னு நடு ரோட்லையா விட்டேன்? இரண்டு வயசு வர, என் ஒக்கல்(இடுப்பு)லையே வச்சு ஓவியமா வளர்த்தது எதுக்கு? நீ ஊர்க்காலியாவுறதை பாக்கவா?” அவனை பிடி பிடியென பிடிக்க ஆரம்பித்துவிட்டார்.

சுகமான போதையில் இருந்தவனுக்கு அது சடுதியில் சர்ரென பாதிக்கு இறங்கியது.

“அம்மா… அம்மா… இது சும்மா… பார்ட்டிக்காக…” அவன் சொல்ல, “யாருக்கு கல்யாணம்?” என்றார் அவர்.

“கல்யாணமா? அம்மா… இங்க காரணமே இல்லாம பார்ட்டி நடக்கும் ம்மா” என்று சொல்ல, “நீயும் காரணமே இல்லாம குடிக்க வந்துட்டியா?” அவர் கேட்டதும், திணறியவன், “ம்மா… அங்க நேரம் என்ன இப்போ? நடு ராத்திரி தூங்காம என்ன செய்றீங்க?” என்று மடக்க,

“இப்படி நேரங்கெட்ட நேரத்துல அழைச்சதால தானே உன் அமுக்குனியாட்டம் தெரியுது!” என்று சொல்ல, நொந்துப்போனான். இவர் பேசுவது இவரோடு மட்டுமே போய்விடாதே! வீட்டின் ரேஷன் கார்ட் உறுப்பினர்கள் அனைவரும் வரிசைக்கட்டி அல்லவா வருவார்கள்!?

“எதுக்கும்மா கூப்பிட்டீங்க?” அவன் கேட்க, “சிவராத்திரி பூசை டா… உனக்கும் போனை போட்டு காட்டுவோம்ன்னு நினைச்சேன்! எங்க…?” அங்கலாய்ப்பு அவரிடம்.

“விடுங்க ம்மா… நானே மனசு சங்கடத்துல இருக்கேன்… இதுல எங்க பூசை எல்லாம்…” அவன் சோகமாய் சொன்னதும், “என்ன டா அப்படி சோகம் உனக்கு?” என்றார் அம்ஸா.

“ஒரு புள்ளையை சங்கடப்படுத்திட்டேன் ம்மா… கோச்சுக்கிட்டு பேசமாட்டேங்குது!” அவன் குரலில் வருத்தம் அப்பட்டமாய் தெரிய, “போறான்னு விடு!” என்றவர், “ராகா… உன் அயித்தையை சீக்கிரம் வர சொல்லு” என்று சத்தம் போட்டார்.

“ம்மா… தமிழ் பொண்ணு ம்மா!” அவன் முனக, “என்ன?” வியப்பாய் வந்தது அவர் குரல்.

“ம்ம்ம்!!!”

“என்ன ஊருடா? என்ன வயசு? என்ன வேலை? கல்யாணம் ஆகலை தானே!?” அவர் அடுக்கிக்கொண்டே போக, “ம்மாஆஆ…” என கடுப்பாய் இழுத்தான் அவன்.

“சரி சரி, என்ன கோக்குமாக்கு செஞ்சீன்னு சொல்லு…”

அவன் மொத்தமாய் இல்லாமல் மேம்போக்காய் விஷயத்தை சொல்ல, “ஆவாத பேச்சை பேசுனா அனுபவிக்க வேண்டியது தான்!” என்று ஒரே பேச்சாய் முற்றுப்புள்ளி வைத்தார் அவர்.

“என்ன ம்மா நீங்க?” அவன் அன்னையிடம் இருந்து வேற என்ன எதிர்பார்த்தானோ தெரியாது, இப்படி ‘அம்புட்டுதான்’ என்ற பேச்சு அவனை சோர்வாக்கியது.

“நான் என்னடா சொல்ல இதுல? மன்னிப்பு கேட்டும் பேச்சுவார்த்தை வேண்டானுட்டா மரியாதையா விலகிடனும்… அதை விட்டுபுட்டு…”

“ப்ச்… ம்மாஆஆ…” அம்மாவிடம் கொஞ்சலாய் சிணுங்கினான்.

“என்னடே, என்னை என்ன செய்ய சொல்ற? உனக்காவ அந்த புள்ளைக்கிட்ட போய் என் புள்ளை நல்லவன், பிரண்டா இரும்மான்னு சொல்லவா?”

‘இப்படியா செய்ய முடியும்?’ என்ற தொனியில் அவர் கேட்டுவிட, அதையே பிடித்துக்கொண்டான் அவன்.

“அம்மா… அம்மா… நீங்களே பேசுங்க ம்மா…!” என்று ஆரம்பித்தவன், நைத்து எடுத்துவிட்டான் அவரை. ஒரு கட்டத்தில் ‘வேலை கடக்கு, கம்முன்னு வையு’ என்று வைத்தே விட்டார்.

விட்டானா அவன்? யாரோ ஒருத்தியையே விடாமல் தொடர்பவன், அன்னையையா அப்படியே விடுவான்!?

போடுறா போனை! என்று வீட்டின் அத்தனை உருப்படிக்கும் மாற்றி மாற்றி அழைப்பு. அன்னையிடம் பேச வேண்டும் என!

ஊர் கோவிலில் பூஜை நடக்க, அதை பார்க்க விடாமல் இவன் கொடுத்த தொந்தரவில், அம்சவர்த்தினி இது தான் விஷயம் என அவர் மூத்த மருமகளிடம் சொல்லிவிட்டார். அவள் தன் கணவன் விஷ்ணு வர்த்தனிடம் சொல்ல, அந்த வர்தன், பெரிய வர்த்தினியிடம் சொல்ல, பெரிய வர்த்தினி சின்ன வர்தினியிடம் சொல்ல, அப்படியே சொல்லி சொல்லி… விஷயம் வீட்டின் மூத்த வர்த்தன்… மிஸ்டர். விஷ்ணு வர்த்தனிடம் போய்விட்டது.

“என்ன அம்ஸா இது?” அவர் மூத்த வர்தினியிடம் வந்து நிற்க, “ஒரு பேச்சுக்கு நானாடா பேசி சமாதானம் பண்ண முடியும்ன்னு கேட்டுட்டேன்… அதையே ஒரு தலையா புடிச்சுட்டு தொங்குறானே!” என்றார் அவர்.

சரியாய் தன் தந்தையின் தொலைபேசிக்கு கோவர்த்தனிடம் இருந்து அழைப்பு வந்துவிட, பெற்றவர் இருவரும் சலிப்பாய் தலையாட்டிக்கொண்டு நிற்க, “எடுங்க, இல்லீன்னா, திரும்ப திரும்ப கூப்புடுவான்!” என்று அம்ஸா சொன்னதும், எடுத்தவர், “என்னடா?” என்றார் அவனிடம்.

“அம்மா இல்லையாங் அப்புச்சி?” அவன் கேட்டிட, “எதுக்கு? தூது போகவா?” என்றார் அவர்.

விஷயம் பரவிவிட்டது என்று புரிந்தது அவனுக்கு. தயங்கியது ஒரு நொடி தான்!

கையில் இருந்த காக்டெயிலை ஒரு மிடறு விழுங்கியவன், “அப்புச்சி, இதுவரை என்கிட்ட வந்து ‘ஹீல்லாகி’(சரியாகி) தான் போயிருக்காங்க… ‘ஹர்ட்’ (காயமாகி) ஆகி போனது இல்லை.  இந்த பொண்ணு இப்படி ஹர்ட் ஆனது ரொம்ப கஷ்டமா இருக்கு. சிரிக்க வச்சுட்டேன்னு பெருமையா நினைச்சேன், இப்போ என்னால அந்த சிரிப்பு போய்டுச்சுன்னு வருத்தமா இருக்கு…” உருக்கமாய் சொன்னான் அவன்.

“என்ன பண்ணனுங்குற?” அவர் கேட்டதும், அங்கே அவன் பதில் சொல்லாமல் மேசையை சுரண்டிக்கொண்டிருந்தான்.

“சொல்லு…” அழுத்தி கேட்டார் அவர்.

“அம்மாவை அவங்க கிட்ட பேசி என்னோட பேச வைங்க ப்பு!” பத்து வயது சிறுவன் போல அவன் கேட்க, “நேரத்துக்கு கல்யாணம் முடிச்சுருந்தா, இந்நேரத்துக்கு உன் மவன் சண்டையை நீ தீத்துவச்சுருக்கலாம்! மண்டைல நாலு வெள்ளை முடி வந்துருச்சு, இன்னும் அம்மாக்கிட்ட சமாதானத்துக்கு தூது அனுப்புற? வெட்கமா இல்ல!?” காட்டமாய் அவர் கேட்க, ‘நானா கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குறேன்?’ என்று முனகினான் அவன்.

“என்ன?” அவர் குரல் உயர்த்த, “அப்பு… ப்ளீஸ்…!” அவன் கெஞ்ச துவங்க, அங்கே பூஜையில் அமர சொல்லி பூசாரி அழைக்க, “என்னவோ பண்ணித்தொல… இனி இதுமாறி போனு வந்துச்சு… காசானாலும் சரின்னு தேடி வந்து அடிப்பேன்!” என்றவர் மனைவியிடம் போனை நீட்டி, “சீக்கிரம் முடிச்சுட்டு வா!” என்றதோடு போய்விட்டார்.

“பூசைக்கு கூப்புடுறாங்கடா!” அம்ஸா சொன்னதும், “ரெண்டே நிமிஷம் தான் ஆகும், பேசிடு” என்றவன் நம்பரை அனுப்பிவிட்டான். அதன்பிறகு என்ன ஆனது என கேட்க ஆவல் இருந்தாலும், தந்தையின் ‘தேடி வந்து அடிப்பேன்’ திகில் கொடுக்க, அமைதியாய் நான்கைந்து கிளாஸ் வாங்கி உள்ளே அனுப்பினான்.

அதன்பிறகு அங்கேயே சரிந்து உறங்கி விடியலில் கிறக்கம் கலைந்து எழுந்து போனை பார்க்கையில் வாணிலாவிடம் இருந்து குறுஞ்செய்தி, ‘சந்திக்க வேண்டும்’ என!!!

இருந்த கொஞ்சநஞ்ச போதையும் தெளிந்துப்போனது. தலையில் அடித்துக்கொண்டான்.

“என்ன கருமம்டா செஞ்சு வச்சுருக்க? ஸ்கூல் புள்ளையாடா நீ!” சங்கடத்தில் சிணுங்கி நெளிய ஆரம்பித்தவன் இன்னமும் நெளிந்துக்கொண்டு தான் இருக்கிறான்.

மொபைலில் மெசேஜ் வந்ததற்கான ஒலி!

வாணிலா தான்… ‘நான் கிளம்பவா?’ என்றுக்கேட்டு!

இதற்குமேலும் தாமதிக்க முடியாது வேகவேகமாய் கேண்டீனை நோக்கி ஓடினான். அவன் உள்ளே நுழைந்த நேரம், அவள் கிளம்புவதற்காக எழுந்துக்கொள்ள, அவசரமாய் அவள் முன்னே சென்று மூச்சு வாங்க நின்றான்.

கிளம்பியவள், அவனை கண்டதும் எந்த உணர்வும் முகத்தில் காட்டாது அமர்ந்துவிட, தானும் அமர்ந்தவன், “சாரி… லேட் ஆகிடுச்சு” என்றான்.

“உங்க ஐ டி கார்ட் குடுங்க” என்று கையை நீட்டினாள் வாணிலா.

‘எதுக்கு?’ என்று தோன்றினாலும் பர்சில் இருந்து மருத்துவ உரிமை அட்டையை எடுத்து நீட்டினான் அவன். ஒரு நிமிடம் எடுத்து முழுதாய் வாசித்தவள், திரும்ப அவனிடம் நீட்டி, “ஒரிஜினல் கார்ட் தானே?” என்று வேறு கேட்க, முகத்தை சுருக்கியவன், “என்னை நம்பவே மாட்டேங்குறீங்க!” என்றான் தாங்கலாய்.

“உங்க படிப்புக்கும், உங்க வேலைக்கும், உங்க வயசுக்கும்… நீங்க பண்றதெல்லாம் கொஞ்சமாது சூட் ஆகுதா?” ஸ்ட்ரிக்ட்டாய் கேட்டாள் அவள்.

டீச்சர் திட்டும்போது பாவமாய் விழிக்கும் மாணவன் போல முகத்தை தொங்கப்போட்டு அமர்ந்திருந்தவன், “சும்மா சும்மா திட்டுறீங்க!” என்றான் பாவமாய், எங்கோ பார்த்தபடி.

அவளுக்குமே அது தோன்றியது போலும். ஒன்றுமே சொல்லாமல் எங்கோ பார்க்கும் அவனையே பார்த்திருந்தாள்.  நெற்றியில் இருந்த கட்டு இப்போது பிளாஸ்டராய் மாறியிருந்தது.

நல்ல உயரம், மேல்நாட்டு நிறம், அடர்த்தியான மீசை, அடங்காமல் நெற்றி வரை புரளும் சிகை, கிண்’ணென இருக்கும் உடல்! வசீகரனாய் தான் இருந்தான். வசீகரிக்கவும் செய்தான். இத்தனை பெரிய ஆண்மகன் தன் அம்மாவை இழுத்துக்கொண்டு அவளிடம் சமாதானம் பேச வருவது ஒருவகையில் சிரிப்பை வேறு கொடுத்தது.

மெல்லிய புன்னகையை மறைத்தவள், “இனி இந்த மாறி பண்ணாதீங்க… ரொம்ப கிட்டிஷ்’ஷா இருக்கு” என்று மட்டும் சொல்ல, அவனுக்கே அப்படி தானே இருக்கிறது, அதனால் ‘சரி’ என தலையாட்டினான்.

இன்னும் சிரிப்பு எட்டிப்பார்த்தது. அவன் பார்க்காததால் அவள் அதை மறைக்க முயலவில்லை.

“அம்மாக்கிட்ட நான் பேசிட்டேன்னு சொல்லுங்க…!” என்று சொன்னதும், குடுகுடுவென தலை ஆட்டினான். நன்றாகவே சிரிப்பு கிளம்பியது நிலாவுக்கு.

“ஓகே மிஸ்டர் கோ! நான் கிளம்புறேன்” அவள் எழுந்துக்கொள்ள, எதையோ கேட்கும் தவிப்புடன் அவனும் எழுந்து நின்றான்.

அவன் பாவனை பார்த்தவள், “வாட் எல்ஸ்?” என்று கேட்க, “பிரண்ட்ஸ்!” என்று படபடப்பை அடக்கி அவளிடம் கரத்தை நீட்டினான் கோ.

அவனையும் அவன் கரத்தையும் யோசனையாய் அவள் பார்த்து நிற்க, லேசாக வியர்த்தது அவனுக்கு. இப்போதும் அவள் ‘நோ’ என்றுவிட்டு போய்விட்டால், இனி அவளை பிடிக்க அவனிடம் வழியே இல்லையே. ஆனால், அப்படி எதற்கு அவளை பிடித்து வைக்க வேண்டும் என்பதை மனோதத்துவன் இன்னும் மனசில் ஆக்க வில்லை.

கற்ற வித்தையை வைத்தியத்தை தாண்டி வேறு எதற்கும் பயன்படுத்த கூடாதென்ற கட்டுப்பாடு கொண்ட கோமாடு அவன்.

“நானும் ‘சாரி’ அடிச்சது தப்பு” அவள் சொல்ல, அவனுக்கு அதெல்லாம் தேவைப்படவில்லை. நீட்டிய கையை தான் கண்களால் காட்டினான். குறுநகை விரிய, மெல்ல அவன் கரத்தை பற்றியவள், “பிரண்ட்ஸ்!” என்று மெதுவாய் சொல்ல, ‘ஹப்பா’ அப்போது தான் அவனது இதயத்துடிப்பே சீரானது.

அவள் பிடித்த பிடியை இவன் அழுத்திப்பிடித்தான். பிடியில் தெரிந்தது அவன் மகிழ்ச்சி. சில நொடிகள் பொறுத்தவள், “மெண்டல் டாக்டரை பாக்குறது பத்தாதுன்னு அடுத்து ஆர்த்தோ டாக்டரை பாக்க வச்சுடுவீங்க போலயே!” என்றவள் சொன்னதும் தான் கையை விட்டான், மனமே இன்றி!

“சரி, அப்புறம் பாக்கலாம்” அவள் கிளம்ப, “நானே டிராப் பண்றேனே!” என்றான். அவள் மறுக்கும் முன், “ப்ளீஸ்…ப்ளீஸ்…ப்ளீஸ்” என்று அடுக்க, தயங்கியவள், “ஹ்ம்ம்!” என்றாள்.

பரபரப்பாய் தன் பேகை எடுத்துக்கொண்டு நகர்ந்தவன் நான்கெட்டில் தலையில் தட்டியபடி, “கீ… ரூம்ல” என்றிட, அவள் முறைக்கவே… “லிப்ட் தானே, கூடவே வாங்க! ஜஸ்ட் டூ மினிட்ஸ்” என்றபடி, அவள் மறுக்க இடமே கொடுக்காமல் கூடவே அழைத்து சென்றுவிட்டான்.

அறையை திறந்து உள்ளே சென்றவன், தனது டேபிள் இழுப்பறையை திறந்து சாவி எடுக்க, உள்ளே வந்தவள் கண்களில் முதலில் பட்டது, ‘ஜோக் இஸ் இன்சூரியஸ் டு ஹெல்த்’ என்ற போர்ட். பார்த்த மாத்திரத்தில் புன்னகை அரும்ப, அதன் அருகிலேயே இன்னொரு போர்ட், புதிதாய்.

‘பேப்பர் வெயிட் இஸ் இன்சூரியஸ் டு லைஃப்’ என்று இருக்க, அதை கையில் எடுத்தவள், புன்னகையும் கோபமும் சேர, “என்ன கோ இது?” என்றாள். அந்த மேசையில் இப்போது பேப்பரும் இல்லை, வெயிட்டும் இல்லை.

சாவியை எடுத்து விட்டு நிமிர்ந்தவன், அவள் காட்டியதை பார்த்து, “உண்மை தானேங்க…” என்றான் பரிதாப முகத்தோடு.

“நீங்க இருக்கீங்களே…” அலுத்தபடி சொன்னவள் போர்டை அதே இடத்தில வைத்துவிட்டு திரும்ப, டேபிள் மேலே இருந்த ஹெல்மெட் அவள் கண்ணில் பட்டது. அவள் பார்வை போன இடத்தை பார்த்தவன், அவள் ஹெல்மெட்டை பார்த்து புரியாமல் வெறிப்பது கண்டு, சிரிப்புடன் ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு தன் சேரில் அமர்ந்து,

“ஹல்லோ… ஐ’யம் டாக்டர் கோ… ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?” என்று பேச, வாயை பிளந்தாள் அவள்.

“ஹெல்மெட் எதுக்கு?” அவள் திகைப்பு மாறாமல் கேட்டதும், “இடது நெத்திலையும் அடி வாங்கியாச்சு, வலது நெத்திலையும் அடி வாங்கியாச்சு. மிச்சம் இருக்கிறது நடு நெத்தி தான். அங்க போட்டா… போய்டுவேன்” என்று மேலே கை காட்டியவன், “உசுரு முக்கியம் இல்லையா? தலை கவசம், உயிர் கவசம்ன்னு சும்மாவா சொன்னாங்க!” என்று கேட்க, கஷ்டப்பட்டு உதடு கடித்து சிரிப்பை அடக்க முயன்றவள், முயன்று முயன்று தோற்று, வாய்விட்டே சிரிக்க ஆரம்பித்தாள்.

அவள் சிரிப்பதை ரசனையாய் பார்த்தாலும் அவன் மனதுக்குள், ‘நம்ம என்ன சிரிப்பு டாக்டர் மாறியா இருக்கோம்?’ என்ற ஐயம் தோன்றத்தான் செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!