Skip to content
Post Views: 8,085
அத்தியாயம் 10
அலுவலகத்தில் பங்க்ஷன் முடிந்து வீடு வர இரவு கவிழ்ந்துவிட்டது. அவளே காரை எடுத்துக்கொண்டு போனதால் அவளை அழைத்துவர கோவர்த்தன் வந்திருக்கவில்லை. வீட்டின் முன்கதவை திறக்கும்போதே தூரத்தில் எங்கோ கேட்பதை போல பாடல் சத்தம்.
Advertisement
வழக்கம் போல வீட்டில் ஆள்நடமாட்டம் இருக்கிறதா இல்லையா என்றே கணிக்க முடியாத நிசப்தம், அதன் நடுவே பாடல் என்பதால் தெளிவாக கேட்டது வானிலாவிற்கு. மாடி ஏற ஏற, சத்தம் அண்மையில் கேட்க, இன்னும் தெளிவாய் அது கோவர்த்தன் அறையில் இருந்து வர, சற்று ஆச்சர்யத்தோடு அவன் அறைக்கதவை தட்டினாள் வாணிலா.
தட்டும் சத்தம் கூட கேட்க்காத அளவுக்கு பாடல் சத்தம் இருக்க, குமிழியில் அவள் கை வைத்ததுமே திறந்துக்கொண்டது கதவு. லேசாக திறந்த கதவின் வழி காதை அடைத்தது சத்தம். இன்னும் அகல திறந்ததும், அணங்கின் அஞ்சன விழிகள் அகல திறந்தது.
Advertisement
Advertisement
அங்கே பேண்டின் மேலே துண்டை கட்டிக்கொண்டு, “ஹே செல்லம்… ஹே செல்லம்… ஹே செல்லம்…” என தன் போக்கில் ஆடிக்கொண்டிருந்தான் கோவர்த்தன்.
அவன் நடனத்தில் நளினமும் இல்லை, நேர்த்தியும் இல்லை. ஏதோ நடக்க தெரிந்த குழந்தை பாட்டு சத்தம் கேட்டால், கைக்காலை ஆட்டுமே அது போல ஏதோ செய்துக்கொண்டிருந்தான். ஆனால், அவன் உடல்மொழியில் அவனது உற்சாகம் தெரிந்தது.
Advertisement
சத்தமில்லாமல் அவனையே அவள் வேடிக்கை பார்க்க, “எனக்கு மொத்தமாக குடுத்துப்புடு பத்துப்புள்ள” என்று சத்தமாக பாடிக்கொண்டே, “ஐ ஐ பத்துப்புள்ள… ஐ ஐ பத்துப்புள்ள…” என்று திரும்பியவன், வாசலில் வஞ்சியை கண்டதும், கட்டிய துண்டை நொடியில் உருவி முகத்தை மூடிக்கொண்டான். அவனுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.
‘பார்க்குறான்னு தெரியாம பப்பரப்பேன்னு ஆடிட்டேனே!’ அவள் முகத்தை பார்க்கவே சங்கடம் அவனுக்கு.
அவனை மேலும் சங்டகப்படுத்தாமல், “கீழ வர சத்தம் கேக்குது, யாரும் இல்லையா வீட்ல?” என்றாள் சாதாரணமாய்.
முகத்தை மூடியிருந்த துண்டில் முகம் துடைப்பதை போல பாவ்லா காட்டியவன், “இல்ல, அதான் சத்தமா வச்சேன்” என்றான் துண்டை மடித்துக்கொண்டே.
“காது வலிக்குது” அவள் சொன்னதும் தான் இன்னமும் சத்தத்தை தான் குறைக்காமலேயே இருப்பது புரிய, உடனே பாதி சத்தத்தை குறைத்துவிட்டான். இந்த நிமிட இடைவெளியில் அவன் வெட்கம் சற்று மட்டுப்பட்டிருக்க, “சீக்கிரமே வந்துட்ட போலயே” என்றான்.
“ஆமா, டின்னர் முடிச்சுட்டு போக சொன்னாங்க, எனக்கு அங்க சாப்பாடு எதுவும் பிடிக்கல, வந்துட்டேன்” என்றாள்.
“எக் ரைஸ் செஞ்சுருக்கேன்… சாப்புடுரியா?” அவன் அக்கறையாய் கேட்க, “அப்கோர்ஸ்… ஆனா இப்போ வேணாம்! லேட் ஆகட்டும்” என்றுவிட்டாள். அவனும் சரி என விட்டுவிட, “எதாவது விளையாடலாமா கொஞ்ச நேரம்?” என்றாள் ஆவலாய்.
அவள் கேட்ட நொடியில்லாமல், “செஸ்?” என்று அவன் கேட்டதும், “வாட்?” என்றாள் கண்ணை விரித்து. அவன் சொன்னது அவள் காதில் வேறு மாதிரி கேட்டுவிட்டது.
“செஸ்’ம்மா! சதுரங்கம்!!!” அவனும் சொன்ன பிறகே அவள் ஏன் அப்படி முழித்தாள் என்று புரிய நமட்டு சிரிப்பு அவனிடம்.
பின்னால் பாடல் வேறு அவனுக்கென ஓட, “சாமத்தில் உன் பக்கம் சாஞ்சு படுப்பேன்… சம்மதம் கேக்காம செஞ்சு முடிப்பேன்” என்று சத்தமாய் முணுமுணுக்க, “கோ….!!!” என்றாள் முறைப்பாய். அவன் ஒன்றுமே பேசவில்லை.
“என்னோட சம்சாரம்… அழகான மின்சாரம்!” என அடுத்த வரிக்கு வைப் செய்ய தொடங்கிவிட்டான். அவள் தான் முகத்தை திருப்பிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
கொஞ்ச நாட்களாய் அவனது குறும்பு எல்லைத்தாண்டி போகத்தான் ஆரம்பித்திருந்தது. அவன் சீண்டலுக்கு பதில் கொடுக்க முடியாது, திண்டாடிப்போவாள். ஆனாலும், அவனது உரிமையான சீண்டலை தடுக்கவும் அவள் நினைக்கவில்லை, அதற்க்கான பெயரை வழங்கிடவும் அவள் நினைக்கவில்லை.
வெகு நேரமாக புடவையை சுற்றிக்கொண்டு இருப்பது வேறு கசகசவென இருக்க, மாற்றுடையோடு பாத்ரூமை சரணடைந்தாள். அங்கே ஸ்ட்ரீமர் பெட்டியை திறந்து உள்ளே ஆசுவாசமாய் அமர்ந்துக்கொள்ள, அடுத்த பத்து நிமிடங்களுக்கு சூடான நீராவி அவள் உடலை இதமாக தழுவியது.
கோவர்த்தன் கையில் செஸ் போர்டும் காயினும் எடுத்துக்கொண்டு அவள் அறைக்கே வந்தான். பாத்ரூமில் இருப்பாள் என்று புரிந்து மேசை மீது போர்டை வைத்தவன் இருபக்கமும் காயின்களை அடுக்க ஆரம்பித்தான். சில நிமிடங்களில் அவள் அலைபேசி இசைக்க ஆரம்பித்தது. முதலில் அவன் கண்டுக்கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் அழைப்பு வரவே, “நிலா’ம்மா… உனக்கு போன்!” என்றான் சத்தமாக.
அவளுக்கும் அலைபேசி விடாமல் அழைப்பது தெரிந்தது.
“குளிச்சுட்டு தான் வரணும், நான் லேட்டா பேசுறேன்னு சொல்லிடு கோ!” என்றாள் உள்ளிருந்தே. அவன் எழுந்துக்கொள்ளும் போது அழைப்பு நின்றுவிட, மீண்டும் அமர்ந்துவிட்டான்.
ஒருநிமிட இடைவெளியில் மீண்டும் அலைபேசி அலற, எழுந்துப்போய் அவள் ஃபோனை பார்த்தான். இந்திய எண்ணாக இருக்க, சற்று தயக்கத்தோடே அவன் அதை அட்டென் செய்ய, “அம்மாடி, ஃபோனை வச்சுடாதம்மா!” என்ற கரகரத்த குரல்.
“அப்பா பேசுறேன்டா… என் நம்பர்ல இருந்து கூப்பிட்டா எடுக்கவே மாட்டேங்குறியே நீ” வருத்தமாக அவர் பேச, “சார்… நான் டாக்டர் கோவர்த்தன் பேசுறேன்” என்றான். மறுமுனையில் சில நொடி மௌனம், பின் பதட்டமாக, “என் புள்ளைக்கு என்ன ஆச்சுங்க?” அவர் பதறுவது புரிந்தது.
“ஒன்னும் ஆகலங்க… நல்லா இருக்காங்க! அவங்க என் வீட்டுல தான் வாடகைக்கு குடி இருக்காங்க” என்று சொல்ல, மீண்டும் மௌனம்.
“சார்?”
“என் புள்ள ஃபோன்ல நீங்க பேசுறீங்களே!?” என்று தயக்கமாய் அவர் கேட்க, ‘டிபிக்கல் இந்தியன் ஃபாதர்’ என்று எண்ணிக்கொண்டவன், “வீட்டுக்கு வெளில போனை சார்ஜ் போட்டு வச்சுருக்காங்க! ரொம்ப நேரமா அடிக்கவும் நான் எடுத்தேன்” என்றான்.
“அப்டிங்களா?” என்றவருக்கு இன்னமும் தயக்கம் தான்.
“உள்ளே கொஞ்சம் வேலையா இருக்காங்க… வந்ததும் பேச சொல்லட்டுங்களா?” அவன் கேட்க, பெருமூச்சு அவரிடம்.
“ஹலோ சார்?” அவன் அழைக்க, “ஆங்… சரிங்க தம்பி… அவ பேச மாட்டேன்னு சொன்னா, எனக்காவ அவளை பேச வைங்களேன்” என்று இறைஞ்சியது அவர் குரல்.
கோவர்த்தனுக்கு அவரது இறைஞ்சலுக்கான காரணம் புரிந்தது. கவுன்சிலிங் வந்த சமயம் அவள் விஷயங்களை ஓரளவு தெரிந்துக்கொண்டான். அவள் சொன்னது மட்டும் தான் நடந்துள்ளது என்று அவன் நினைக்க, அவள் சொல்லாதது எக்கச்சக்கமாய் அங்கே நடந்து, அதன் பாதிப்பில் தான் இப்படி கண்காணாத தொலைவில் யாருடனும் பேசாமல் இருக்கிறாள் என்பது அவனுக்கு தெரியவில்லை. தெரிந்திருந்தால் பின்னாளில் சேதாரம் ஆவப்போவதை தவிர்த்திருக்கலாம்.
“சொல்றேன் சார்!” அவன் சொன்னதும், “அது தம்பி? நீங்க மட்டும் தான் இருக்கீங்களா?” என்றார் இயல்பாக விசாரிப்பதை போல. அவர் கேட்பதன் உள் அர்த்தம் புரிந்தவனும், “இல்ல சார், இன்னும் மூணு பொண்ணுங்களும் இருக்காங்க” என்று சொல்ல அப்போது தான் அவருக்கு ஓரளவு நிம்மதி ஆகிற்று.
“சரிங்க தம்பி… உங்களுக்கு சிரமும் இல்லன்னா உங்க நம்பர் தர முடியுங்களா? எதாவது தகவல்ன்னா சொல்ல வசதிப்படும்” என்று கேட்டதும் தயங்காமல் தன் எண்ணை அவன் கொடுக்க, அழைப்பை துண்டித்தார் அவர்.
அவர் போனை வைக்கவும் வாணிலா பாத்ரூமில் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. அவள் போனை கையில் வைத்துக்கொண்டு அவன் நிற்க, “யாரு கோ கூப்பிட்டது?” என்றாள்.
“உங்க அப்பா தான்!” அவன் சொன்னதும் அவள் முகம் நொடியில் இறுகியது.
“அவர் உன்கிட்ட…” கோவர்த்தன் ஆரம்பிக்கும்போதே, “ரொம்ப பசிக்குது கோ… டின்னர் முடிச்சுட்டு விளையாடலாமா?” என்றாள்.
“ம்ம்ம்… ஆனா அவர் ஒருமுறை உன்ன…” அவன் சொல்ல துவங்க, “நான் டின்னர் எடுத்து வைக்குறேன். நீ பிரெஷ் ஆகிட்டு வா!” என்று சென்றுவிட்டாள்.
அவளுக்கு இந்த விஷயத்தை பேச துளியும் விருப்பமில்லை என்று தெளிவாய் புரிந்தது அவனுக்கு. இதற்குமேல் பேசினாலும் எரிமலை வெடித்தாலும் ஆச்சர்யமில்லை என்பதை இத்தனை மாத பழக்கத்தில் உணர்ந்தவன் விட்டுப்பிடிக்கும் எண்ணத்தில் இந்த பேச்சை ஓரங்கட்டினான்.
அந்த பெரிய தேவாலயத்தின் பின்னே போடப்பட்டிருந்த திறந்தவெளி மேடையில் உயர்தர கருநிற ஆடைகளில், ஒருவர் கரத்தை ஒருவர் பிணைந்தபடி நின்றிருந்தனர் அந்த ஸ்பானிஷ் ஜோடி. அவர்கள் முன்னே வட்ட வட்ட வெண்ணிற மேசை நாற்காலிகளில் விருந்தினர்கள் இருக்க, அவர்கள் கையில் மகிழ்ச்சியின் அடையாளமாய் ‘மது’ இருந்தது.
அந்த விருந்தினர் கூட்டத்தில் கோவர்த்தனும் வாணிலாவும் அடக்கம்!
மேடையில் இருந்த மணப்பெண்ணை பார்த்த வாணிலா, “கருப்பு ட்ரெஸ் போட்டா எங்க வீட்ல என்ன அடி விழும் தெரியுமா? இங்க என்னன்னா கல்யாண பொண்ணே கருப்பு துணி போட்டுட்டு நிக்குது?” என்று வியந்து கேட்டாள்.
ஒரு மிடறு மதுவை விழுங்கியவன், சின்ன சிரிப்போடு, “சாகுற வரைக்கும் உன் கூட நான் வருவேன்னு சிம்பாலிக்கா சொல்றாங்க” என்றான்.
‘உண்மையா?’ என்பது போல அவனை பார்த்தவள், “இருந்தாலும்… வேற போட்டுருக்கலாம்” என்றாள். அவள் மனதுக்கு ஒப்பவே இல்லை. நல்ல நாளும் அதுவுமாய் கருப்பா என்று!
இங்கு கிளம்பும்போதே கோவர்த்தன் சொன்னான், ‘எனது பேஷன்ட் ஒருவரின் திருமணம், கருப்பு நிற உடை எதாவது போட்டுக்கொண்டு வா!’ என்று.
‘கல்யாணத்துக்கு யாராது கருப்பு போடுவாங்களா?’ என்று திட்டிவிட்டு கருநீலத்தில் ஒன்றை அணிந்து வந்தாள். வந்து பார்த்தால், அங்கே நண்டு சிண்டு முதற்கொண்டு, தோல் சுருங்கியது வரை அத்தனை பேரும் கருப்பு உடை. அதைவிட மணமக்கள் கருப்பு நிற உடையில் இருந்ததை தான் அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.
error: Content is protected !!