Skip to content
Post Views: 7,482
ரீங்காரமாய் என்னுள்ளே – 1
திருப்பூரில் இருந்த பெரிய மண்டபத்தை நோக்கி அந்த கார் செல்ல, காரை ஓட்டியவன் முகமோ டென்ஷனாக இருந்தது.
அவனின் டென்ஷனை மேலும் கூட்டுவதற்காகவே அவனின் கைபேசி அழைக்க, அதை பார்த்துட்டுவிட்டு கடுப்புடன் போன் காலை கட் செய்தான்.
மறுமுறையும் அழைப்பு வர, பல்லை கடித்துக்கொண்டே அதை அட்டென்ட் செய்து “ம்மா… எதுக்கு இப்போ கால் பண்ணிட்டே இருக்கீங்க?… அங்க தானே வந்துட்டு இருக்கேன்… இப்படி நீங்க நிமிசத்துக்கு ஒரு தடவை கால் பண்ணிட்டே இருந்திங்க, அப்பறம் நான் வரவே மாட்டேன் சொல்லிட்டேன்…” என்று சீற,
Advertisement
“இதையே தான்டா நீ இங்க ரிசெப்ஷன் ஆரம்பிச்சதுல இருந்து சொல்லிட்டு இருக்க… இப்போ அது முடிஞ்சி எல்லாரையும் தூங்கவே போயிட்டாங்க… நீ இன்னும் வந்துட்டு இருக்க…” என அவனுக்கு சரிக்கு சரியாக பேசினார் அவனின் தாய் விசாலாட்சி.
“அப்போ நான் வரத்துக்காக தனியா ஒரு ரோடு போட்டு வச்சிருக்க வேண்டியது தானே… இந்நேரம் இந்த டிராபிக்ல சிக்காம வந்திருப்பேன்ல…” என்றான் நக்கலாக.
“தங்கச்சியோட அண்ணனா முன்னாடி நின்னு இழுத்து போட்டு கல்யாண வேலை செய்யாம, சொந்தக்காரன் போல கல்யாணத்துக்கு வரவனுக்கு தனியா ரோடு வேற போடணுமோ…” என்று அவனை சாடினார் விசாலாட்சி.
Advertisement
“அப்படி செய்யணும்னா, நீங்க என்ன பண்ணிருக்கணும்?… எனக்கு தோதான நாளா பாத்து வச்சிருக்கணும்… உங்க இஷ்டத்துக்கு வச்சிட்டு, அப்பறம் என்ன பேச்சி வேண்டி கிடக்கு…” என அவனும் விடாமல் பேச,
Advertisement
“உனக்கு என்னைக்குடா வேலையில்லாம இருந்திருக்கு… பெருசா பேசுறான்… ஏதாவது சொல்லிட போறேன்… போடா… என அவனை திட்டி, இங்கே உன்னோட அத்தை, சித்தியெல்லாம் நீ எதுக்கு இன்னும் வரலன்னு சும்மா நொய் நொய்யின்னு கேட்டு, அதுக்கு நான் பதில் சொன்னதுல எனக்கு வாயே வலிக்குதுடா விஷ்ணு…” என்று அலுத்தார் அன்னை.
“உங்களுக்கு வலிச்சுதே…. அப்போ அவங்களோட வாயெல்லாம் வலிக்கலையாமா?…” என அவன் பதிலுக்கு கேட்க,
“அப்படி வலிச்சிருந்தாலும் வாயை மூடிருப்பாங்களா என்ன?…” என்று அவரும் பேச,
Advertisement
“அப்போ அவங்க வாயை மூடுற போல நீங்க பேசல…” என கேட்டான் சீற்றமாக.
“நம்ம வீட்டு விசேஷத்துக்கு வந்திருக்காங்கடா… இவங்களோட பேசி என்னோட நல்ல மனநிலைமையை நான் கெடுத்துக்க விரும்பல…” என்றார் விசாலாட்சி.
“என்னமோ சொல்லுங்க… அப்பறம் எதுக்கு அவங்களுக்கு சொல்லுறிங்கன்னு தெரியல…” என்று முடித்தான் அவன்.
“அவங்களை விடு அப்படி தான்… உங்க அத்தைக்கு அவங்க பொண்ணை உனக்கு கொடுக்கணும்னு அப்படியே லேசுபாசா இன்னைக்கு அவங்க பேசுனதுல கொடுபோட்டு காமிச்சாங்கடா….” என நாத்தனார் பேசியதை மகனிடம் பகிர்ந்தார் அவர்.
“என்னமோ அவங்களுக்கு அந்த எண்ணம் இன்னைக்கு தான் புதுசா வந்த மாறி சொல்லுறீங்க… வேற ஏதாவது புதுசா சொல்லுங்க ம்மா…” என்றான் மகன்.
விசாலாட்சி, “இல்லடா… உங்க அத்தை மாறி இல்லடா மானசி, நல்ல பொண்ணு…” என்றார்.
“அதனால…” என்று அவன் கேக்க,
“உனக்கு அவ மேல அபிப்பிராயம் இருக்கோன்னு கேட்டேன்…” என்று சொன்னார் விசாலாட்சி.
விஷ்ணு, “ஒரு ஆணியும் இல்ல…” என்றான் உடனடியாக.
“அதானே உனக்கு யாரையாவது பிடிச்சிட்டாலும்… நீயெல்லாம் என்னோட மகன்ன்னு வெளில சொல்லிக்காத…” என்று அவனை வாரினார் அன்னை.
அவரின் பேச்சை கிடப்பில் விட்டு, “உங்களுக்கு அங்க வேலையில்லையா?… என்கிட்ட சாவகாசமா பேசிட்டு இருக்கீங்க…” என்று அவன் கேட்க,
“உங்கிட்ட பேச ஆரம்பிக்கும் போதே என்ன சொன்னேன்?, நைட் ரிசெப்ஷன் முடிஞ்சி எல்லாரும் தூங்க போயாச்சுடா… ஆனா நீ என்னமோ டிராபிக்ன்னு சொல்லிட்டு இருக்குற… இந்த நடு ஜாமத்துல என்ன ட்ராபிக்ன்னு எனக்கும் புரியல…” என்று கடுப்பாக சொல்ல,
“அப்போ நான் பொய் சொல்லுறேன்னு சொல்லுறீங்களா?… ஒரு போலீஸ்காரனையே நீங்க சந்தேக படுறீங்க…” என்று சூடாக கேட்டான் அவன்.
அவன் விஷ்ணு பிரசாத் ஏஎஸ்பி. கோவை மாவட்டத்தின் காவல்துறை உதவி கண்காணிப்பாளர். லா அண்ட் ஆர்டர் துறையில் பணியாற்றுகிறான். பொலிஸிற்கே இருக்கும் மிடுக்கும், கம்பிரமும் நிரம்ப பெற்றவன்.
“நீ போலீஸ் ஆஹ் இருந்தா கூட சந்தேகப்படலாம்… ஒன்னும் தப்பில்ல…” என்று அவர் பதிலடி கொடுத்தார் விசாலாட்சி.
“நீங்க சந்தேகப்படுறீங்கன்னு எல்லாம் நான் பொய் சொல்ல முடியாது…” என்றான் மிடுக்காக.
“அடப்போடா…” என்று கொட்டாவியுடனே அவர் சொல்ல,
“இப்போ எதுக்கு இவ்வளோ கொட்டாவி விட்டுட்டு பேசிட்டு இருக்கீங்க… போயி படுக்க வேண்டியது தானே கொஞ்ச நேரம்…” என்று அவரிடம் கேட்டுவிட்டு, அடுத்து “அப்பா எங்க இருக்காங்க…” என்று சேர்த்து அவன் வினவ,
“அப்பா ஒரு தடவை எல்லாம் சரி ஆஹ் இருக்கான்னு பாக்க போனாங்க…” என்றார் விசாலாட்சி.
“சரி… நீங்க எங்க இருக்கீங்க… தூங்கத்தானே?…” என்று அவன் மறுபடியும் வினவ,
“நான் இங்க தான் இருக்கேன்…” என்று இடக்காக பதில் சொல்ல,
“ம்மா…” என்று அவன் ஆரம்பிக்க,
“டேய் நீ முதல்ல வந்து சேரு… அப்பறம் நான் போயி தூங்கிக்கிறேன்… சும்மா தூங்க சொல்லாத…” என்றார் விசாலாட்சி கோவமாக.
“அது தான் நானும் சொல்லுறேன்… போயி தூங்குங்கன்னு…” என்று போனில் அவன் சொல்ல,
“வந்துட்டியா விஷ்ணு…” என்று அவர் உற்சாகமாக கேட்க,
“அப்பறம் எதுக்கு உங்களை தூங்க சொன்னேன்…” என்று சொல்லி போனை கட் செய்து அவரின் அருகில் வந்தான் விஷ்ணு.
அச்சமயம் சரியாக அங்கிருந்த சில உறவினர்களை தூங்க அனுப்பிவிட்டு, அவனின் தந்தை சுவாமிநாதன் வரவும் சரியாக இருந்தது.
“சாப்டியா விஷ்ணு… இல்ல காபி ஏதாவது குடிக்கிறீயா?…” என்று அன்னை அவனிடம் கேள்வியெழுப்ப,
அன்னைக்கு பதில் சொல்லும் முன், “ப்பா… நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க… நான் பாக்குறேன்…” என்று அவரிடம் கூறிவிட்டு, அன்னையிடமும், “ம்மா நீங்களும் தான்…” என்று முடித்தான்.
விசாலாட்சி, “இல்லடா விஷ்ணு… உங்க அப்பா போயி செத்த வேணும்னா அசரட்டும்… நான் உன்கூட இருக்கேன்… எனக்கு தூக்கம் வரல…”
“இவ்வளோ நேரம் கொட்டாவி விட்டு பேசிட்டு, இப்போ உங்களுக்கு தூக்கம் வரலையா…” என்று அன்னையிடம் கேட்டு அவரை முறைக்க,
விசாலாட்சி பதில் சொல்லாமல், தன் பதியை பார்க்க,
“அம்மாவும் பையனும் என்னமோ பண்ணுங்க… நான் ரூம்க்கு போறேன்…” என்று சொல்லிவிட்டு கிளம்பினார் சுவாமிநாதன்.
“என்னடா… உங்க அப்பா துண்டை காணும் துணியை காணும்னு ஓடுறாரு…” என்று மகனை பார்த்து சிரிப்புடன் கேட்க,
“உன்னையவே என்னால சமாளிக்க முடியாது… இதுல உன் பையன் கூட சேர்ந்தா என் மண்டை தான் உருளும்… அதுக்கு தான்…” என்று போகிற போக்கில் சொல்லிக்கொண்டே சென்றார் அந்த அப்பாவி கணவன்.
அவரின் அந்த பேச்சில் மகனோ, “எங்க அப்பாவை அந்த பாடு படுத்திவச்சிருக்கீங்க நீங்க… பாவம் மனுஷன்… நின்னு கூட பதில் சொல்லாம ஓடுறாரு…” என்று சோகமாக சொல்ல,
“போதும்டா மகனே… வெட்டி பேச்சு பேசாம… வேலையை பாரு…” என்று அரட்டினார் விசாலாட்சி.
“பதில் பேச முடியலன்னு, என்னமா அரட்டுறீங்க நீங்க…” என கேட்டு அவன் சிரிக்க,
“என்ன சிரிப்பு… உங்க அப்பா உன்னையும் சேர்த்து தான் சொல்லிட்டு போயிருக்காரு…” என்று சிடுசிடுத்தார் விசாலாட்சி.
விஷ்ணு, “ஹா ஹா… சரி விடுங்க… அப்பாவை அப்பறம் பாத்துக்கலாம்…” அதுக்கு முன்ன, “எங்க அந்த ரோமியோ… கல்யாண வேலையை கவனிக்காம கடலை போட கிளம்பிட்டானா…” என்று தாயிடம் தன் நண்பன் சூர்யாவை கேட்டான்.
“அதே தான்டா மகனே… ஒரு பொண்ணை விடல இங்க மண்டபத்துல, இதுல பொண்ணோட அம்மாவும் அடக்கம்…” என்று அவரும் சேர்ந்து சுருதி பாடினார்.
அவரின் பதிலில் சிரித்துக்கொண்டே, போனில் அவனுக்கு டயல் செய்தான்.
“சொல்லுடா நல்லவனே… வந்துட்டியா…” என்றான் அந்த புறம் தூக்க கலக்கத்தில் பேசினான் சூரியா.
“அடிங்க… உன்னைய கல்யாண வேலைய பாக்க சொன்னா… நீ அங்க சொகுசா தூங்கிட்டு இருக்கியாடா மண்டை… ஒழுங்கா மண்டப ஹாலுக்கு நான் கண்ணைமூடி தொறக்குறதுக்குள்ள வந்து சேருற…”
“நீயெல்லாம் போலீஸ் ஆஹ் டா… எப்படிடா நீ கண்ணைமூடி தொறக்குறதுக்குள்ள வர முடியும்…” என்று அவன் கேட்க,
“நீ வா… நான் போலீஸ் தான்னு காமிக்குறேன்…” என்று அவன் ஒரு மார்க்கமாக சொல்லி போனை அணைத்தான்.
“அய்யய்யோ… சும்மா இருந்தவனை சொறிஞ்சி விட்டுட்டமோ…” என்று அவன் மைண்ட் வாய்ஸில் புலம்பி, வேகமாக ரூமை விட்டு வந்தான்.
இவன் போன் பேசுவதை கேட்ட விசாலாட்சி, “என்னடா வரானா…” என கேக்க,
“ம்ம்… அதோ அங்க அரக்கப்பரக்க ஓடிவரான் பாருங்க…” என்று வேகமாக படிக்கட்டுகளில் இறங்கும் நண்பனை அன்னைக்கு சுட்டிக்காட்டினான்.
“மம்மி நீங்களும் இங்க தான் இருக்கீங்களா… இவன் என்னை என்ன பேசுறான் பாத்திங்களா… நீங்க சொல்லுங்க நான் என்ன சும்மாவா உக்காந்திருந்தேன்…” என்று மூச்சுவாங்கிப்படியே சூரியா கேட்க,
“சும்மா உக்காருலடா விஷ்ணு…” என்று விசாலாட்சி மேலும் பேச வர,
“கேட்டுக்கோடா பெத்த போலீசு…” என சூரியா இடை சொறுகளாக உள்ளே வர,
விசாலாட்சி, “இருடா முந்திரிக்கொட்ட… நான் இன்னும் சொல்லியே முடிக்கல்ல… உன்னை யாரு அதுக்குள்ள பேச சொன்னா…”
“அச்சோ சாரி சாரி மம்மி… நீங்க சொல்லுங்க சொல்லுங்க…” என்று அவரிடம் பணிவாக சொல்லி, “டேய் கேட்டுக்கோடா…” என்று விஷ்ணுவிடம் மிதப்பாக சொன்னான் சூரியா.
விஷ்ணு அடக்கப்பட்ட சிரிப்புடன் தாயை பார்க்க,
“சும்மா உக்கரலைடா இவன், கால் மேல கால் போட்டு வெட்டியா உக்காந்திருந்தான்…” என முடித்தார் விசாலாட்சி.
விசாலாட்சியின் வார்த்தையில் சூரியா நெஞ்சை பிடித்துக்கொண்டு , “யு டூ மம்மி…” என்று நடிக்க,
தாயும் மகனும் கையை தட்டிக்கொண்டு சிரித்தனர்.
“நல்லா தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி வர சொல்லிட்டு, என்னைய வச்சி காமெடி பண்ணிட்டு இருக்கீங்க… நல்லா இருக்கு… ரொம்ப நல்லா இருக்கு…” என்று சூரியா ஏகவசனத்தில் சிலிர்த்தான்.
“அடேய்… விடிஞ்சா தங்கச்சிக்கு கல்யாணம், அதுக்கு வேலை பாக்காம அப்படி என்னடா உனக்கு தூக்கம் வேண்டி கிடக்கு…” என கேட்டான் விஷ்ணு.
“இப்போ வந்த இவன் என்னை என்ன கேக்குறான் பாருங்க மம்மி… இதுல நீங்க அவன்கூட போயி கூட்டு சேர்ந்து சிரிக்குறிங்க…” என சூரியா பீல் பண்ணுவது போல் பேச,
“உன் நடிப்பு அவ்வளோ சிறப்பா இல்ல… இன்னும் பெட்டெர் ஆஹ் ட்ரை பண்ணுடா சூரி…” என விஷ்ணு கௌண்ட்டர் அடித்தான்.
நண்பனை முறைத்து பார்த்துக்கொண்டே, “மம்மி… இவனை பாருங்க, என்னை போயி நடிக்குறன்னு சொல்லுறான்…”
விஷ்ணு, “வேலையும் பாக்கல… ஒழுங்கா நடிக்கவும் தெரில… உன்னைய வச்சிக்கிட்டு உங்க மம்மி எப்படி மேய்க்குறாங்கன்னு தெரியல…”
“மம்மி… பாருங்க இவனை திரும்ப திரும்ப என்னை எப்படி பேசுறானு… நீங்க ஒன்னும் வாயவே தொறக்க மாட்டுறீங்க…” என்று மீண்டும் சூரியா புகார் வாசிக்க,
“என்கிட்ட நேரா பேசுடா… எதுக்கு உங்க மம்மிகிட்ட கம்ப்லைன் பண்ணுற என்னமோ சின்ன புள்ளை மாறி…” என்றான் விஷ்ணு விடாப்பிடியாக,
“ஏன்! இல்ல ஏன்னு கேக்குறேன்… எங்க மம்மியை நான் கூப்பிடுறேன்… உனக்கு அதுல என்னடா வந்துச்சி…” என்று சூரியும் விடாமல் பேச,
விஷ்ணு, “பொண்ணுங்க கிட்ட மட்டும் நல்லா கடலை வறுக்க தெரியும்… என்கிட்ட நேரா பேசுறதுக்கு உங்க மம்மியை கூப்பிடுற… பெருசா வந்துட்டான் எகிறிக்கிட்டு… போடா போடா…”
“மம்மி…” என்று சூரியா ஆரம்பிக்க,
“அடேய் போதும்டா நிறுத்துங்க… நீங்க ரெண்டு பேருமே உருப்படி கிடையாது… இவன் என்னடான்னா தங்கச்சி கல்யாணத்துக்கு தாலி காட்டுற நேரத்துக்கு வந்திருக்கான் என்று விஷ்ணுவை பார்த்து சொல்லி, நீ என்னடான்னா தங்கச்சி கல்யாணத்துல, கடலை வறுத்துட்டு உக்காந்திருக்க… ஆகமொத்தம் எவனும் ஒன்னும் செய்யல… இதுல பெரிய இவன் மாறி வாய் சண்டை போட்டுட்டு இருக்கீங்க… உங்களை நான் என்னனு சொல்லுறதுன்னு தெரியல…” என சலிப்பாக சொன்னார் விசாலாட்சி.
அன்னையின் சலிப்பான பேச்சில், நண்பர்கள் இருவரும் அவரை முறைத்து வைத்தனர்.
சரியாக அவ்விடம் வந்தார்கள் சுவாமிநாதனும், அவருடைய நண்பனும் சூர்யாவின் தந்தையுமான வேணுகோபால்.
வேணு, “இங்கே தான் இருக்கீங்களா… விஷ்ணு எப்போ வந்த?…” என்று வந்தவுடன் கேட்டார்.
விஷ்ணு அவருக்கு பதில் சொல்லாமல், “உங்களை யாரு தூங்காம வர சொன்னா…” என்று அவன் அவரிடம் எதிர்கேள்வி கேள்வி கேட்டு, தகப்பனிடம், ” உங்களை கொஞ்ச நேரம் படுக்கத்தானே சொன்னேன்… எதுக்கு அவரையும் கூட்டிட்டு வந்திங்க…” என்று கேட்டு தந்தையை முறைத்தான்.
தந்தையோ நண்பனிடம், “எல்லாம் உன்னால தான்…” என்ற பார்வையை வீச,
உடனே வேணு, “அவனை ஒன்னும் சொல்லாத விஷ்ணு… நான் தான் அவனை கூட்டிட்டு வந்தேன்… எனக்கு தூக்கம் போயிடுச்சி… அதான்…” என்றார்.
“உங்க பிரெண்டை ஒன்னும் சொல்லிட கூடாதே… இப்போ கண்ணு முழிச்சிட்டு அப்பறம் உடம்புக்கு ஏதாவது இழுத்து வச்சிக்கவா…”என விஷ்ணு வேணுவை பேசி, “எப்போடா வேணுப்பா தூங்க போனாங்க…” என்று நண்பனையும் விஷ்ணு கேட்க,
“அதையும் அவங்க கிட்டயே கேளுடா…” என்று பதில் சொல்லி, தந்தையை முறைத்து வைத்தான் சூரியா.
வேணுவோ விஷ்ணுவின் பேச்சில் பாவமாக விசாலாட்சியை பார்க்க,
“இப்போ எதுக்கு உங்க தங்கச்சியை பாக்குறீங்க…” என்று விஷ்ணு அதற்கும் பேச,
“விடு விஷ்ணு… ரொம்ப அலட்டாத…” என்று விசாலாட்சி இடையில் வர,
“உடனே நீங்க சப்போர்ட்க்கு வராதீங்க ம்மா…” என்றான் காரமாக விஷ்ணு.
வேணுகோபால்க்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தான் ஆஞ்சியோ செய்தனர். அதன் பொருட்டு தான் விஷ்ணுவின் இந்த கண்டிப்பு.
விஷ்ணு பேசுவதை பார்த்துக்கொண்டிருந்தான் சூரியா. விஷ்ணு சொன்னால் மட்டும் தான் வேணு கொஞ்சம் அடங்கி இருப்பார்.
நாதனும், வேணுவும் கல்லூரிக்கால நண்பர்கள். இப்போது வரை உறவாக தொடர்கிறது ஆத்மார்த்தமாக தொடர்கிறது அவர்களின் நட்பு.
நாதனும் விசாலாட்சியும் காதல் மனம் புரிந்து கொண்டவர்கள். இவர்களின் காதல் தெரிந்து விசாலாட்சியின் வீட்டில் அவருக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்க்க, இருவரும் வீட்டை விட்டு வெளியில் வந்து திருமணம் பண்ணிக்கொண்டனர். இருவரின் பெற்றோர்களும் வீட்டில் ஒத்துக்கொள்ளாத பட்சத்தில், அவர்களுக்கு அச்சமயம் எல்லாமுமாய் இருந்தவர் வேணுவும் அவரின் குடும்பமும் தான்.
அப்பொழுதே வேணு வீட்டின் பக்கத்தில் குடியேறினர் நாதன் தம்பதிகள். அவர்களுக்கு பிறந்தவர்கள் மூத்தவன் விஷ்ணு பிரசாத், இளையவள், மணப்பெண்ணான வைஷ்ணவி.
வருடங்கள் கடந்து, நாதனின் அந்தஸ்து, வளர்ச்சியை பார்த்து, அவரின் தம்பியும், தங்கையும் உறவு கொண்டாடி வர போக இருந்தனர். அவர்களின் குணம் தெரிந்து நீக்குப்போக்காக நடந்துகொள்வார்கள் நாதன் மற்றும் விசாலாட்சி.
வேணுகோபால், மலர்க்கொடி தம்பதிகளுக்கு சூரியா ஒரே மகன். வேணுவின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட, அதில் தளர்ந்தார் வேணு.
அவரை அப்படியே விட்டுவிடாமல் மீட்டுகொண்டுவந்தது விஷ்ணு என்றால் மிகையல்ல. தூங்குவதற்கு மட்டுமே வேணுவும், சூர்யாவும் அவர்கள் வீட்டுக்கு செல்வர் முன்பு… வேணுவின் உடல்நிலை வைத்து இப்போது அதுவும் இல்லை… எல்லாம் விஷ்ணு வீட்டில் தான் சேர்ந்து வசிக்கின்றனர்.. அந்தளவுக்கு ஆழம் அவர்களின் நட்பு.
மகன் நண்பனை மேலும் பேசுவதற்கு முன்,
“வேணு போலாம்…” என்பது போல நாதன் நண்பனிடம் கண்ணை காட்ட,
அதை பார்த்த சூர்யாவோ அவரின் எண்ணமறிந்து நமட்டு சிரிப்புடன், விஷ்ணுவிடம் போட்டு குடுக்க, தந்தையை அப்பட்டமாக முறைத்தான் விஷ்ணு.
“போட்டுகுடுத்துட்டியே பரட்டை…” என்ற ரேஞ்சில் சூர்யாவை, நாதன் பார்த்துவைத்தார்.
வேணுவோ, விஷ்ணுக்கு முன்னாள் சூர்யாவை ஒன்றும் பேச இயலாதவராய் கடுகடுவென பார்த்து வைக்க, அவனும் முறுக்கினான். திரும்ப உடம்புக்கு முடியாமல் போனால் அதை தாங்கும் சக்தி அவனுக்கில்லை என்பது அத்தனை உண்மை.
விஷ்ணு, “ரெண்டு பெரும் உங்க ரூமுக்கு போயி கிளம்பி வரீங்க…” என தந்தைமாரிடம் கட்டளையாக சொல்லி, தன் அம்மாவிடமும், “மணி ஆகப்போகுது… நீங்க வைஷுவை எழுப்பி அடுத்து என்னனு பாருங்க…” என்று அவருக்கும் சொல்லி, “நான் எல்லாத்துக்கும் குடிக்க குடுத்தனுப்புறேன்…” என்று பொதுவாக பேசி சூர்யாவுடன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
அதற்கடுத்து நேரம் பறக்க, அந்த கல்யாண மண்டபம் உறவினர்கள், நண்பர்கள் என படை சூழ, ஆர்பரிப்புகளுக்கும், ஆரவாரத்துக்கும் பஞ்சமின்றி இருந்தது.
முகுர்த்தத்திற்கு இன்னும் சில மணி நேரம் மட்டுமே இருக்க, தோழிகளின் கிண்டல், கலாட்டாக்களில் வைஷுவின் முகம் சிவந்து இருக்க, போதும்ப்பா ப்ளீஸ் என்று கெஞ்சினாள் மணப்பெண்.
“ம்க்கும், இவ அண்ணங்காரன் கிட்ட இப்படி சிரிச்சி பேசுனாலும் ஏதாவது பிரயோஜனம் இருக்கும். இவ என்னடான்னா இந்த வைஷுகிட்ட சிரிச்சி பேசிட்டு இருக்கா… நமக்குன்னு பொறந்திருக்கு பாரு…” என மணப்பெண்ணின் அருகில் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் தன் மகள் மானசியை பார்த்து பெருமூச்சினை விட்டார், அன்னையான கலைவாணி.
“வைஷு…” என அழைத்துக்கொண்டு அவ்விடம் வந்தான் வந்தான் விஷ்ணு அவனுடன் தாய் விசலாட்சி.
அண்ணனின் குரலில், “ண்ணா…” என்று உற்சாகமாக வைஷுவும் அழைக்க,
அவளின் பக்கத்தில் வந்து, “அழகா இருக்கடா வைஷு…” என்று சொல்ல, மணப்பெண் அழகாக சிரித்தாள்.
மகளின் முகத்தில் இருந்த மலர்ச்சியை பார்த்து ரசித்தபடி நின்றார் விசாலாட்சி.
“அடடே விஷ்ணு… எப்போ வந்த… வேலையை தள்ளிவச்சிட்டு முன்னாடியே வரது இல்லையா?…” என கலைவாணி கேக்க,
“ஏன்… என் வேலையை நீங்க பண்ணி தர போறீங்களா என்ன?…” என்றான் இடக்காக அவரிடம் விஷ்ணு.
அங்கிருந்தவர்களின் முகம் சிரிப்பை காட்ட,
கலைவாணி அடுத்து பேச வர, அதற்க்கு இடமளிக்காமல், “அண்ணி நீங்களும் மானசியை கூட்டிட்டு போயி சாப்பிட்டு வாங்க…” என்று சொல்லிவிட்டு,
மேலும் அங்கிருந்த வைஷுவின் தோழிகளையையும் பார்த்து, “சாப்பிடறவங்க, சாப்பிட்டு வந்துருங்க ம்மா…” என அகற்றினார் விசாலாட்சி.
“ம்ம்… போறோம் போறோம்…” என நொடித்துக்கொண்டே சென்றார் கலைவாணி.
இவர்கள் சென்றவுடன், ஒரு தட்டுடன் உள்ளே வந்தான் சூரியா.
அவன் வந்ததை பார்த்த விஷ்ணுவோ, “என் பின்னாடியே தான வந்த, இப்போதான் வர, இந்த கேப்ல யாருக்கிட்டடா, கடலை போட்டுட்டு வர…” என கேக்க,
“அதுலாம் அப்படி தான்… கண்டுக்காத … ஏன்னா… இது வாலிபவயசு…” என்று சூரியா வெட்கப்பட்டு சொல்ல,
விஷ்ணு அவனை கேவலமாக பார்த்து வைத்தான்.
வைஷு ஆர்ப்பாட்டமாக சிரிக்க,
விசாலாட்சியோ தலையில் அடித்துக்கொண்டு, அவன் கையில் இருந்த தட்டை வாங்கி, வைஷுவை சாப்பிட சொன்னார்.
“ண்ணா… அவருக்கு குடுத்தீங்களா…” என்று சூர்யாவை பார்த்து கேட்க,
“பாருடா… அவராமே…” என்று சூரியா வைஷுவை அதிசயிக்க,
“ண்ணா…” என வைஷு செல்லமாக அவனை முறைத்து பார்க்க,
“அந்த சுவருக்கு, சாரி சாரி அவருக்கு கொடுத்தாச்சு…” என சிரிப்புடன் சொல்லி முடித்தான்.
அடுத்தடுத்து நேரம் விரைவாக கழிய,
மணமேடையில் மணமகனாக பட்டு வேஷ்டி சட்டையில் சஞ்சீவ், அய்யர் சொன்ன மந்திரங்களை சிரத்தையாக சொல்லி கொண்டிருக்க, மணமகளும் முகுர்த்த புடவையில் வந்து அவனின் அருகில் அமர, இருவரின் கண்களும் ஒரு நாழி தன் இணையை திருப்தியாக ரசித்துவிட்டு, அடுத்து அங்கு மந்திரத்தில் கவனத்தை திருப்ப, சரியான முகுர்த்த நேரத்தில், விஷ்ணுவின் தங்கையும், நாதன் விசாலாட்சி தம்பதிகளின் மகளுமான வைஷ்ணவி, அவளின் காதல் மணாளனான சஞ்சீவை கரம் பிடித்தாள்.
அதற்கடுத்த நிகழ்வுகள் எல்லாம் விமர்சையாக, குட்டி குட்டி கலாட்டாக்களுடன் அரங்கேற, மணமக்களின் பெற்றவர்களும் நிறைவான புன்னைகையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஒரு வழியாக திருமண சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து, மணமக்களை மாப்பிள்ளையின் ஊரான திருப்பூரில் விட்டுவிட்டு, நாளை மறுவீடு அழைப்புக்கு வருகிறோம் என்று விடைபெற்று கிளம்பினார்கள் விஷ்ணுவின் குடும்பத்தினர் சொந்தங்களுடன்.
அவர்களுடன் செல்லாமல் சூரியா மற்றும் விஷ்ணு மட்டும் தனியாக காரில் வந்தனர்.
தங்கையை புகுந்த வீட்டில் விட்டு தொடங்கிய சூரியா மற்றும் விஷ்ணுவின் பயணம், முற்று பெற்ற இடம் மருத்துவமனை தான்.
error: Content is protected !!