Skip to content
Post Views: 8,265
அத்தியாயம் 15
நாட்கள் நகரும் வேகத்தில், இருவருக்கும் இடையான நெருக்கமும் கூடிக்கொண்டே தான் போனது. அவன் மனதை தெளிவாக உணர்த்திவிட்ட பிறகு அவனை ‘நண்பன்’ என்ற இடத்தில் வைத்து பார்க்க அவளுக்கு வரவே இல்லை. அதன் விளைவாய் சிறு தயக்கம், வெட்கம், கண்ணுக்கு புலப்படாத உரிமையுணர்வு எல்லாம் அவளுக்கு அவனிடம் எழ, தன்னை மறைப்பதே அவளுக்கு பெரும்பாடு தான்.
Advertisement
அவனிடம் தன் மனதை காட்ட அவளுக்கு ஒரு நொடி போதுமே! ஆனால், அதை செய்யத்தான் அவளுக்குள் பெரும் தயக்கம்… உண்மையில் பயம் என்றுக்கூட சொல்லலாம்.
காதலிப்பது தவறு என நினைப்பவள் அல்ல அவள்.
Advertisement
Advertisement
அவளுக்கென ஒரு கனவு கோட்டையே இருந்தது. காதலிக்க வேண்டும் என்பது மட்டும் அல்ல, எப்படியெல்லாம் காதலிக்க வேண்டும்… தன் காதலன் எப்படி இருக்க வேண்டும், தன்னை எப்படி ஆகர்ஷிக்க வேண்டும் என்றெல்லாம் அவளுக்கு தனி கனவே உண்டு.
பள்ளி முடித்து கல்லூரியில் காலெடுத்து வைத்ததுமே வயதுக்குரிய ஆசைகள் எழும்ப, அதை தன் அக்காவிடம் மறைக்காமல் உளறுவாள். பொறுப்பான அக்காவாக தேனிலா தான் அவளிடம், ‘உனக்கானவன் வரும் நேரம் இது அல்ல, பொறு’ என எடுத்து சொல்லுவாள்.
Advertisement
தேனிலா போனபிறகு வானிலாவின் காதல் கனவுகள் எல்லாம் எங்கோ காணாமல் போயிருந்தது. ஈடுபாடில்லாத ஒரு வாழ்வில் எங்கிருந்து காதல் மலர?! தனக்கு யாருமே வேண்டாம் என்ற நிலைக்கு அவள் எப்போதோ சென்றிருந்தாள். இப்போது அதையெல்லாம் மாற்றி ஒருவன் தன் மனதுக்குள் வந்து அழுத்தமாய் அமர்ந்துவிட, ‘இது எங்கே போய் முடியும்’ என அறிந்தவள் உண்மையில் கொஞ்சம் பயந்து தான் இருந்தாள்.
வாணிலா காதலை சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன? நான் இப்படிதான்’ என்றபடி கோவர்த்தன் அவளிடம் அதீத உரிமையுடன் பழகினான். மீண்டும் ஒருமுறை அவளிடம் மனதை வெளிப்படுத்த நினைக்கவில்லை அவன். அவளே யோசித்து முடிவெடுத்து வரட்டும் என விட்டுவிட்டான். ஆனால், முன்பு போல அவளிடம் நாகரீகம் பார்ப்பது, சங்கோஜப்படுவது என்று எதுவுமே இல்லை. அவனை பொறுத்தவரை அவர்களுடைய திருமணமே முடிந்தது போல தான். அவள் அவன் ‘மனைவி’ தான்.
அதை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தான் தன் செய்கைகளால். உடலை தீண்டாதவன் அவள் மனதை நொடிக்கு நொடி தீண்டிக்கொண்டிருந்தான்.
அன்று இருவருக்குமே விடுமுறை என்பதால், பேசி சிரித்தபடி காலை உணவை உண்டுவிட்டு வானிலாவின் அறையில் ரிலாக்ஸாக அமர்ந்திருந்தனர் இருவரும். அவள் தனது வாட்ரோபை கலைத்துப்போட்டு அடுக்கிக்கொண்டிருக்க, அவள் மடிக்கணினியை எடுத்து நோண்ட ஆரம்பித்தான் கோவர்த்தன். அவள் சேமித்து வைத்திருந்த அவளது பழைய புகைப்படங்கள் எல்லாம் ஒன்றுவிடாமல் பார்த்தான்.
‘பார்க்கட்டுமா?’ என்ற அனுமதி எல்லாம் அவன் கேட்கவே இல்லை.
“டாக்டருக்கு மேனர்ஸ் இல்லையோ?” துணியை மடித்துக்கொண்டே அவனை பார்க்காமல் சொன்னாள் வாணிலா.
அவன் கொஞ்சமும் தயங்காமல், “உன்கிட்ட எனக்கு எதுவுமே இல்ல…” என்றான்.
அவனுக்கு முகத்தை காட்டாமல் அமர்ந்திருந்தவள், மெலிதான புன்னகையுடன், “அது என்னோட ப்ரைவசி கோ!” என்றாள் முயன்று வரவழைத்த கடினக்குரலில்.
“இந்த ரூம் கூட உன் ப்ரைவேட் ஸ்பேஸ் தான். ஆனா, நான் உன் பெட்’ல இருக்கேன்” டக்கென அவன் சொல்லிவிட, அவளுக்கு தான் அவனை கோவிக்க முடியாமல் முகம் சிவந்தது. பேச்சை அத்தோடு நிறுத்திவிட்டாள்.
அவனும் பேச்சை வளர்க்கவில்லை. அவனுக்கு அந்த லேப்டாப்பில் பார்க்க சில விஷயங்கள் கிடைத்தன.
“இந்த மெயில் ஐ.டி உன்னுது தானே!? யூஸ் பண்றது இல்லையா?” அவன் ஒன்றை காட்டி கேட்க, எட்டிப்பார்த்தவள், “இந்தியால இருந்தவரை யூஸ் பண்ணிட்டு இருந்தேன்… இங்க வந்த அப்புறம் பாக்கவே இல்ல” என்றாள் அசட்டையாய்.
“இங்க வந்து ஒன்னரை வருஷம் ஆச்சு நிலா. இவ்ளோ நாளுமா ஓபன் பண்ணல?” அவன் சற்று வியந்து கேட்க, “தோனல” என்றாள், இலகுவான தோள் குலுக்கலோடு.
“நான் திறந்து பாக்கட்டுமா?”
“எதுக்கு?” கேட்டுக்கொண்டே மடித்த துணிகளை ரேக்கில் தூக்கி வைத்தாள்.
“ஒரு ஆசை தான், உள்ள அப்டி என்ன இருக்கும்ன்னு பாக்க!”
“நீங்க ஆசையாசையா பாக்குற அளவுக்கு எல்லாம் ஒன்னும் இருக்காது கோ!”
“அதை நீ சொல்லாத நிலா, நான் பாத்து தெரிஞ்சுக்குறேன்” கன்னத்தில் கையை ஊன்றி அவளையே பார்த்துக்கொண்டு சொன்னான் அவன்.
“சொன்னா கேளுங்க, எனக்கு தெரியாம அதுல ஒண்ணுமே இருக்க போறதில்ல. நான் பாத்ததா தான் இருக்கும்”
“நீ பாக்குறது வேற… நான் பாக்குறது வேற நிலா… உன் பார்வையும் என் பார்வையும் ஒண்ணா என்ன?” அவன் கேட்க, பதில் சொல்ல வந்தவளுக்கு, சட்டென பொறி தட்டியது. கபோர்டை அடித்து சாற்றியவள் சில நொடிகள் கடந்து போன பேச்சை மீள்கொனர்ந்து பார்க்க, ‘கேடி, அத்தனையும் வேற அர்த்தத்தில் பேசியிருக்கிறான்’ என்று புரிய, முறைப்போடு திரும்பினாள்.
அவனோ ஒருக்களித்து படுத்து அவளை பார்த்து தான் கன்னத்தில் நாவை அதக்கி சிரித்துக்கொண்டிருந்தான். அவள் கடினப்பட்டு முறைப்பை தொடர, “என்ன நிலா, திறந்து பாக்கட்டுமா? உனக்கு ஓகே வா?” என்றான் சிரிப்பை தொடர்ந்து.
“நீங்க மெயிலை தான் சொல்றீங்களா?” அவள் அதே முறைப்போடு கேட்க, “அதே மயிலை தான் சொல்றேன்” என்றான் அவன்.
முறைத்து முறைத்து அலுத்தவள், அருகே கிடந்த பில்லோ ஒன்றை தூக்கி அவன் மீது கோவமாய் வீச, சத்தமாய் சிரித்துக்கொண்டு அதை கேட்ச் பிடித்தவன், நெஞ்சோடு அதை கட்டிக்கொள்ள, அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் அறையை விட்டு வெளியே ஓடினாள் வாணிலா.
சிரிப்பு சத்தம் குறையாமலேயே அவளது பழைய மெயில் ஐடியை திறந்து நோட்டம் விட்டான் கோவர்த்தன்.
புதிய மெயில்கள் ஏகப்பட்டது இருந்தது. பற்பல பெயர்களை தாங்கிய அந்த மெயில்கள் எதையுமே அவன் திறந்தே பார்க்கவில்லை. ஸ்க்ரோலிங் மட்டுமே செய்துக்கொண்டிருக்க, கையில் ஜூஸுடன் உள்ளே வந்தாள் வாணிலா.
அவன் முகத்தை பார்க்கமால் ஜூசை நீட்டியவள், அவன் பெற்றுக்கொண்டதும், “என்ன? ஆராய்ச்சி முடிஞ்சுதா?” என்றாள் அருகே அமர்ந்தபடி.
“ஏதாவது பாய் பிரன்ட் கிட்ட இருந்து வந்துருக்கும்ன்னு பார்த்தா ஒண்ணுமே இல்லையே!” சலிப்பது போல சொன்னான் அவன்.
“இருந்தா தானே வரும்!” என்றவள், “யாரெல்லாம் மெயில் பண்ணிருக்காங்க?” என்றாள் சிறு ஆர்வத்துடன்.
அவளுக்கு ஏகப்பட்ட நட்புகள் உண்டு. வீட்டு பிரச்சனையில் அவர்கள் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் இங்கே வந்தவள், யாரிடமும் பேச விருப்பமின்றி தொடர்பை வலுக்கட்டாயமாய் துண்டித்துக்கொண்டாள். இப்போது கோவர்த்தன் ஆரம்பிக்க, அவளுக்கு ஆர்வம் வந்தது.
“ஆத்மிகா, சௌந்தர்யா, திலீபன்…” அவன் ஒவ்வொரு பேராய் வாசிக்க, அவர்கள் தனக்கு எந்த வகையில் நட்பு என சின்ன அறிமுகம் கொடுத்துக்கொண்டிருந்தாள் வாணிலா.
அவன் வாசித்த பெயர் வரிசையில் ‘ரேகா’ என்ற பெயர் வர, “ரேகா’வா? அப்படி யாரும் இல்லையே எனக்கு?” என்று சந்தேகமாய் யோசித்தாள்.
“மூணு மெயில் வந்துருக்கே நிலா… ஓபன் பண்ணவா?” என்று கேட்டு, அவள் சம்மதத்துடன் அதை திறக்க, அதில், “ஹாய், நான் ரேகா. சுரேஷ் வைஃப். உன்கிட்ட பேசணும். கால் பண்ணுங்க” என்று முதல் மெயில் பத்து இலக்க இந்திய எண்ணோடு வந்திருந்தது.
“யாருன்னு தெரியுதா?” அவன் கேட்க, அவளுக்கு அந்த நேரம், இதே வார்த்தைகளை சமீபத்தில் அலைபேசியில் கேட்டது தான் நினைவு வந்தது. அதை அவனிடமும் சொல்ல, “எதுக்கு ப்ளாக் பண்ற நிலா? முக்கியமா எதாவதா இருந்தா என்ன பண்ணுவ?” மெலிதாக கடிந்தவன், அடுத்த மெயிலை திறந்தான்.
“வாணிலா… உன்கிட்ட நான் பேசியே ஆகணும். தயவுசெஞ்சு என் நம்பர்க்கு கால் பண்ணுங்க. முக்கியமான விஷயம். ப்ளீஸ்” என்று வந்திருக்க, “சுரேஷ் யாரு?” என்றான் கோவர்த்தன்.
சட்டென தலையில் மின்னலாய் நினைவு வர, சற்றே திகிலுடன், “என் அக்காவோட… அவளை கல்யாணம் பண்ணவன்!” என்றாள்.
“அப்போ இது?” அவன் கேட்க, “செகன்ட் வைஃப் போல. அன்னைக்கு பேசுனப்போ இவனுக்கு இன்னொரு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னாங்க” என்றாள். வேகமாய் மூன்றாம் மெயிலுக்கு அவன் போக, அதில் இரு புகைப்படங்கள் தவிர எதுவுமே இல்லை.
அந்த படங்களை அவன் தரவிரக்கம் கொடுக்க, ‘எரர் டவுன்லோடிங்’ என்று காட்டியது. சில முறை முயன்றும் பலனில்லை. சரியாக பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று புரிந்தது. அந்த மெயிலில் கொடுத்திருந்த எண்ணுக்கு உடனே தொடர்புக்கொண்டான் கோவர்த்தன்.
‘இந்த எண் உபயோகத்தில் இல்லை’ என்றே வந்தது.
வானிலாவுக்கு பெரும் கவலையாய் போய்விட்டது. அன்றே பொறுமையாய் பேசியிருக்கலாமோ என்று வருந்தினாள்.
“அவங்க நம்பரை அன்ப்ளாக் பண்ணு நிலா. திரும்ப கூப்பிடும்போது தெளிவா பேசிடு!” என்று கோவர்த்தன் சொல்ல, உடனே செய்தாள்.
அடுத்து அவளது அலுவலக மெயிலை திறந்து அவன் பார்வையிட, சில நொடிகளில் கண்ணில் சிக்கியது அது. திறந்து படித்தவன், “ஏய்…!” என்று கொஞ்சம் சத்தமாகவே அலறினான்.
பழைய நினைவுகளில் இருந்தவள், “என்ன?” என்று புரியாமல் முழிக்க, “இதென்ன மெயில் வந்துருக்கு?” என்று காட்டினான். எட்டிப்பார்த்தவள் அசட்டையாய், “ரெண்டு வருஷ காண்ட்ராக்ட்ல தான் இங்க வந்ததே! இன்னும் நாலு மாசத்துல அது முடியப்போகுது. திரும்பி போக ரெடியா இருன்னு மெயில் வந்ததுல என்ன தப்பு?” என்று கேட்டாள்.
என்ன இவ்ளோ ஈசியா சொல்ற நீ? என்கிட்ட சொல்லனும்ன்னு தோணலையா?” அவன் கோவமாகவே கேட்டான்.
“சொல்லி என்ன ஆகப்போகுது கோ? காண்ட்ராக்ட் எக்ஸ்டென்ட் ஆகுமான்னு கேட்டுப்பார்த்தேன். வாய்ப்பில்ல ராஜான்னு கையை விரிச்சுட்டாங்க”
“உனக்கு இந்தியா போணுமா?” அவன் கேட்க, “போனும்னு சொல்வேனா நான்?” என்றாள் அவள்.
“ப்ச்… நான் கேக்குறதுக்கு மட்டும் சொல்லு… உனக்கு இந்தியா போணுமா? இல்ல, இங்கேயே இருக்கனுமா?” என்றான்.
“எனக்கு உன்கூட இருக்கணும்!” தன்னைமீறி சொல்லியிருந்தாள் தையல்.
அவன் இதழ்களில் மெலிதான கர்வப்புன்னகை. கண்கள் மையலில் மின்ன, “அப்போ நீ இங்க தான் இருப்ப!” என்றான் திடமாய்.
“எப்படி?” அவள் விழிகள் வியப்பில் விரிந்தது.
“ஒரே ஒரு கையெழுத்து போடு! அது போதும்!” கள்ளப்புன்னகையுடன் அவன் சொல்ல, அவள் புருவங்கள் புரியாமல் சுருங்கியது. அந்த சுருக்கம் அடுத்து வந்த பத்தாவது நாள், தானாக தளர்ந்தது.
சற்றே குனிந்து தன் முன்னிருந்த வெண்ணிற தாளில், எழுத்துக்களுக்கு கீழே, படபடக்கும் மனதோடு கையெழுத்து போட்டுக்கொண்டிருந்தாள் வாணிலா, வாணிலா கோவர்த்தன்.
அவள் அருகே நின்ற கோவர்த்தனுக்கு உலகையே வென்ற உவகை. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சமாளித்தபடி நின்றிருந்தான்.
கையொப்பம் போட்டு அவள் நிமிர, “ஹேப்பி மேர்ரிட் லைஃப்” என்று வாழ்த்தினார் அந்த அரசு அதிகாரி. நன்றி சொல்லி அங்கிருந்து வெளியே வந்தவர்களுக்கு சகஜமான பேச்சு சட்டென வரவில்லை.
வாணிலா ஒன்றும் அத்தனை சீக்கிரத்தில் பதிவு திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதற்க்காக கோவர்த்தனும் தன் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.
‘உனக்கு இங்கேயே இருக்க வேண்டுமென்றால், என்னை திருமணம் செய்து குடியுரிமை பெற்றுக்கொள். இதைவிட சுலபமான வழி கிடையாது’ என்றபோது அவள் திகைத்துப்போனாள்.
‘திருமணம் என்ற சொல்லே அவளுக்கு வேப்பங்காயாக கசக்கையில் அதை செய்ய துணிவு வருமா என்ன!?’ அவள் ‘திருமணம்’ என்ற வார்த்தையால் பட்ட வலி அப்படி!
ஆனால், அதே திருமணம் அவளுக்கு பிடித்தவனுடன் என்றபோது இனிக்கத்தான் செய்தது என்றாலும் ‘வேண்டாம்’ என்ற திண்ணம் தான்.
காதலையே வாய்விட்டு பகிராமுன் திருமணம் என்றால்?!
‘இது விளையாட்டல்ல!’ என்ற எவ்வளவோ சொல்லிப்பார்த்தாள். ‘கொக்குக்கு ஒன்றே மதி’ என்பதை போல அவளை சம்மதிக்க வைப்பது மட்டுமே தன் ஒரே வேலையாய் செய்துக்கொண்டே, அவளுக்கே சொல்லாமல் பதிவு திருமணதிற்க்கான வேலைகளையும் செய்ய ஆரம்பித்திருந்தான்.
என்னவோ அவளுக்கு முழுமனதாய் ஒப்புக்கொள்ள முடியாமல் போக, ‘நீ குடியுரிமை பெற்றவுடன் விவாகரத்து வாங்கிவிடலாம்’ என்று பேரத்தில் இறங்கிவிட்டான்.
முதலில் திகைத்தாலும், அதையும் மறுக்க ஆரம்பித்த வானிலாவுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் அவன் தொல்லை தாங்க முடியவில்லை. வைத்தியனின் வாய் திறமையை சொல்லி தான் விளங்க வேண்டுமா என்ன!?
அவளுக்கும் அடிமனதில் ஆசை உண்டு என்பதால் அவன் பேச்சுக்கு முதல் தினம் தான் அறைகுறையாய் அவள் தலையாட்ட, ‘நாளைக்கே திருமணம்’ என்றதை கேட்டு அதிர்ந்தே போனாள் அவள்.
‘சம்மதம்’ சொன்னாலும் நிறைய ஃபார்மாலிட்டீஸ் உண்டு என்பதால் இரு வாரங்கள் எடுக்கும் என அவள் கணக்கிட, இவன் அத்தனை வேலையையும் பத்தே தினங்களில் முடித்து காட்டியிருந்தான். அவன் வேகத்தை நினைத்தபடி அரசு அலுவலகம் வெளியே உள்ளங்கை வியர்க்க, அருகே நிற்பவனை பார்க்க தயங்கி சாலையை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் வாணிலா.
கோவர்த்தனுக்கு வீட்டுக்கு சொல்லாமல் செய்துக்கொண்ட திருமணம் உள்ளுக்குள் உறுத்தாமல் இல்லை. ‘இன்னும் தாலி கட்டல தானே!’ என்று தன்னை தானே சமாதானம் செய்துக்கொண்டான்.
வீட்டில் சொல்லியிருக்கலாம் தான். சொல்லியிருந்தால், உடனே ‘இங்கே வா! நாங்கள் செய்துவைக்குறோம்’ என்றிருப்பார்கள்.
அவளை ஒரு கையெழுத்து போட வைக்கவே இத்தனை பாடு எனும்போது, அதையெல்லாம் கனவில் கூட நினைக்க முடியாது அவனால்.
அருகில் நிற்ப்பவளின் விரல்களை தன்னோடு கோர்த்துக்கொள்ள அவன் விரல்கள் பரபரவென்று இருந்தது. இப்போதே புது மாப்பிள்ளை முறுக்கு உடலில் ஏற தான் செய்தது. என்ன இருந்தாலும் கல்யாண சந்தையில் அவன் காய்ந்த மாடு தானே! தன்னை அப்பட்டமாய் காட்டிக்கொள்ள கூடாது என்பதில் கவனமாய் இருந்தான்.
ஒரு கையெழுத்தை தாண்டி நமக்குள் எதுவும் மாறாது என்ற உத்திரவாதத்தில் நடந்த திருமணம் இது! எக்குதப்பாய் கைபட்டுவிட்டால் ஆடிவிடுவாளே! அதையும் விட அவனை மட்டமாக நினைத்துவிட்டால்?!
இதையெல்லாம் யோசித்தபடி அவன் நிற்க, “போலாமா?” என்றாள் வாணிலா.
“ஹான்!?” திரும்பியவன், “லஞ்ச் முடிச்சுட்டு போவோமா!?” என்றான்.
“ம்ம்ம்!” என்றவள், ஒரு நொடி தயங்கி, “டிவோர்ஸ் குடுத்துடுவீங்க தானே!?” என்றாள் சந்தேகமாய்.
உர்ரென கோவம் அவனுக்கு.
போட்ட கையெழுத்தின் ஈரம் காயும் முன் பேச்சை பார்! என மனதுக்குள் முனுமுனுத்தவன், “தரேன் தாயே!” என்றான் சற்று கடுப்புடன்.
“எனக்கு எப்போ சிட்டிசன்ஷிப் கிடைக்கும்!?”
“அப்ளை பண்றேன். ஒரு எக்ஸாம் இருக்கு, அதை கிளியர் செஞ்சா உடனே கிடைச்சுடும்!” என்றான் இப்போதும் கடுப்பாய்.
அவளுக்கு படபடப்பு அடங்கவில்லை. அவன் அருகே புதியதாய் ஒரு உணர்வு ஆர்ப்பரிக்க, அதை அடக்க வழி தெரியாமல் தான் இப்படி ஏதேதோ பேசி அவனை கடுப்பேற்றிக்கொண்டிருந்தாள்.
அவர்களுக்கு எதிர்புறம் கார் நிறுத்தப்பட்டிருக்க, சாலையை கடக்க வேண்டி அவன் கரம் நீட்டினான். சின்ன சாலை தான். பெரிதாக வாகனங்களும் வராத கிளை சாலை. ஆனாலும் கையை நீட்டினான். அவனுக்கு அவள் தொடுகை இப்போது வேண்டுமே வேண்டும்.
மெலிதாக நடுங்கும் விரல்களை மறைத்து, அவனிடம் திடமாக நீட்ட, அழுத்தமாய் பற்றிக்கொண்டவன் பார்வை இணைந்திருந்த இருவரின் கரங்களில் ஆசையாய் படிய, “வான்-கோ!” என்றான் லயிப்புடன்.
“என்ன!?” அவள் கேட்க,
“வாங்கோ!ன்னு சொன்னேன்!” என்றவன், அவளை இறுக்கமாய் பற்றிக்கொண்டு நடந்தான்.
error: Content is protected !!