Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இலக்கணம் பெண்மையே

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 5

இலக்கணம் பெண்மையே!

அத்தியாயம் 5

          இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. காலையிலே சாலா கோவிலுக்கு சென்று வந்தாள். கையில் இனிப்புடன் தான் பிரகாஷ் உள்ளே நுழைந்தான். பள்ளியில் இரண்டாம் இடம் பெற்று இருந்தான் அஜய். நல்ல மதிப்பெண் தான். சாலாக்கு, இத்தனை கஷ்டத்தில் ஒரு ஆறுதல். நீண்ட நாளுக்கு அப்புறம் ஒரு மன நிறைவான புன்னகை அவள் முகத்தில்…

       அன்று மாலையே குடும்பமாக வெளியில் செல்ல திட்டம் போட்டார்கள். எல்லாம் அஜய் விருப்பம் தான். மதுரையில் ஒரு பெரிய பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு சேர்க்க வேண்டும். இது அஜயின் ஆசை தான். இவர்கள் நட்பு வட்டம் பத்து பேரும் அங்கு சேர்வதாக பிளான். ஹாஸ்டல் வரை பார்த்து வைத்து இருந்தான் பிரகாஷ்.



Advertisement

        அன்று சாலா புன்னகை முகமாக தான் இருந்தாள். மகனின் சந்தோசமும், ஆர்ப்பாட்டமும் இவளுக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்தது. மகன் நின்று விடுவான் என்று ஒரு நம்பிக்கை வந்தது. வீட்டில் எல்லோரும் வெளியில் கிளம்பும் நேரம், கழுகுக்கு மூக்கு வேர்த்தது போல வந்து விட்டாள் ஷாலினி.

         பிரகாஷ் தான் மகனின் மார்க் சொன்னவன், வெளியில் செல்வதாகவும் அறிவித்தான். அவளுக்கு இருப்பு கொள்ள வில்லை. முன்பெல்லாம் இப்படி நடப்பது தான் என்பதால் யாரும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. யாரும் சொல்லாமலே அவர்களோடு இணைந்து கொண்டாள் ஷாலினி.

     பிரகாஷ்க்கு கொஞ்சம் எரிச்சல். மனைவியை நெருங்கவே முடியவில்லை என்று தவித்து கொண்டிருந்தவனுக்கு, இன்றைய மனைவியின் சிரித்த முகம் ஒரு நம்பிக்கையை கொடுத்தது. ஆனால், அதை கெடுக்கும் வகையில் ஷாலினி வந்தது, அவனுக்கு சுத்தமாக பிடிக்க வில்லை. சாலா மீண்டும் முகம் இறுகி கொள்ள, ரொம்பவும் பயந்து போனான் பிரகாஷ். சாலா கொஞ்சம் கூட ஷாலினியை கண்டு கொள்ளவே இல்லை. அவளுக்கு எந்த உபசரிப்பும் வழங்கவும் இல்லை. இது தான் பிரகாஷின் பெரிய உறுத்தல்.

Advertisement

          சாதரணமாக மனைவி அப்படி கிடையாது. வாழ்க்கையை இழந்து தனியாக நிற்கும் பெண் என்று ஷாலினி மீது கொள்ளை பிரியம் வைத்து இருந்தாள். இவ்வாறு சாலா, ஒதுங்க ஒரு காரணம் தான் இருக்க முடியும். அதை நினைக்கும் போதே நெஞ்சு வலிப்பது போல இருந்தது.

Advertisement

          ஒரே காரில் வந்தாலும் சாலாவின் பேச்சு எல்லாம் பிள்ளைகள் இடம் மட்டும் தான். பிரகாஷ் பார்வை எல்லாம் மனைவி மீது தான். தன்னையே சுற்றி வரும் தன் மனைவி எங்கே போனாள்?…

       நடுத்தர வயது உடல்வாகுடன், இடது பக்க கால் லேசாக சாய்த்து சாலா நடந்து வர, அவளுக்கு ஈடு கொடுத்து நடந்து வந்தான் பிரகாஷ். அதை பார்க்கையில் ஷாலினி முகத்தில் எரிச்சல் கூடியது. நம்பிக்கையில்லா உறவு, தனக்கான இடத்தை தக்க வைக்க போராடியது போல…

     “அக்கா, நீங்க காலுக்கு எந்த வைத்தியமும் பார்க்கலையா. ரொம்ப சாச்சு நடக்குறீங்க, வித்தியாசமா இருக்கு. மாமா ஸ்டைலா நடந்து வாறாங்க. உங்க பக்கத்துல தம்பி மாதிரி இருக்காங்க…” கேலி செய்து சிரித்தாள் ஷாலினி.

Advertisement

    “நீ பேசினாயா…” என்று தான் சாலா பார்த்தாள்.

      பிரகாஷ் முறைத்து பார்க்க, அவனுக்கு முந்தி பதில் வந்தது அஜயிடம் இருந்து,

       “அக்கா, எங்க அம்மா நடை ஒன்னும் அவ்வளவு வித்தியாசமா இல்லை. மெதுவா நடக்குறாங்க அவ்வளவு தான். அத்தோட எங்க அம்மாக்கு அவ்வளவு வயசும் ஆகிடல. அம்மாவை விட அப்பா எட்டு வருசம் பெரியவங்க. எங்க அப்பா இளமையா காட்டிகிறாங்க, இளமையா ஒன்னும் இல்லை. இவருக்கு நாப்பத்து அஞ்சு முடிஞ்சு போச்சு…” கடுப்பாகவே பதில் சொன்னான் அஜய்.

         “ என்ன அஜய். சும்மா கேலிக்கு தான் அக்கா சொன்னேன்…” என்று சமாளிக்க பார்க்க.

        “நம்மளோட கேலி, கிண்டல் எல்லாம் அடுத்தவங்களை காயப்படுத்தாத வரை தான் என்ஜாய்மெண்ட். மத்தவங்களை கஷ்டப்படுத்தி நாம காமெடி பண்ண கூடாது. இது ஒரு வகை ராகிங்…” தெளிவாக அஜய் சொல்ல, வாயடைத்து போனார்கள் ஷாலினி, பிரகாஷ் இருவரும்…

        முகமே விழுந்து விட்டது ஷாலினிக்கு. “சாரி அஜய். மனசுல பட்டத ஓபனா பேசி தான் எனக்கு பழக்கம். அதான்…” என்று இழுக்க,

         சின்ன சிரிப்பு அஜய் முகத்தில், “நீங்க போடுற ட்ரெஸ் சில நேரம் எனக்கு பிடிக்காது. உங்க பேச்சு பல நேரம் எனக்கு பிடிக்காது. இப்ப கூட பாருங்க, நாங்க குடும்பமா வெளியே போறோம். எங்க பிளான் என்னன்னு தெரியாம, நீங்களும் வந்து ஜாயின் பண்ணிட்டீங்க. இந்த பிகேவியர் எனக்கு சுத்தமா பிடிக்கலை. ஆனா, நாங்க யாரும் வாய திறந்தோமா, அது தான் மேனர்ஸ்…” என்று வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று அஜய் பேச, ஷாலினிக்கு பேச்சே வரவில்லை.

       அசந்து போய் தான் பார்த்தான் பிரகாஷ். இதுவரை தன் தப்பு என்ற வட்டத்தில் பிள்ளைகளை சேர்க்க வில்லை. அவன் மனைவியை யோசித்தானே தவிர மகனை நினைக்க வில்லை. அரும்பு மீசை தொடங்க, தன் உயரத்திற்கு நிமிர்ந்து நிக்கும் மகனை பார்த்து நெஞ்சில் முதல் முறை பயம் வந்தது.

            அதே நேரத்தில் தன்னை குறித்து அவமானமாகவும் இருந்தது. ஷாலினியின் அதீத கவர்ச்சி உடைகளை பார்த்து பதினாறு வயது மகன் வெட்கி ஒதுங்கி கொள்ள, நாற்பத்தி ஐந்து வயதில் ரசித்து பார்த்தோமே என்று குறுகி போனான். இன்று நிமிர்ந்து நிற்கும் மகனை பார்க்கையில் மனம் அடித்து கொண்டது. என்றேனும் தன் தவறு வெளி தெரிந்தால் என்ன ஆகும்.

          அஜயின் சிறு வயதில், காந்தியின் சத்திய சோதனை என்ற புத்தகத்தை தினமும் வாசிக்க சொல்லி கொடுப்பான் பிரகாஷ். நேர்மை, உண்மை என்றெல்லாம் சொல்லி மகனை வழி நடத்தி விட்டு, தான் வழி மாறி போனது மட்டும் மகனுக்கு தெரிந்தால் என்ன ஆகும்… துளி குற்ற உணர்வு கூட இல்லாமல் இனி மகனை நிமிர்ந்து பார்க்க முடியுமா…

         பிரகாஷ் தன் துணைக்கு வருவான், மகனை அதாட்டுவான் என்று எதிர்பார்த்த ஷாலினிக்கு ஏமாற்றம் தான். ஒரு வித கோபமும் வந்தது.

      “தனிமையில் தன் காலை கூட அமுக்கி விடும் பிரகாஷ் மாமா, இன்று கண்டு கொள்ள வில்லையே?… போயேன் எனக்கென்ன வந்தது. இன்னும் நாலு நாள் உன்னால் தாக்கு பிடிக்க முடியாது. வாலாட்டும் நாய் போல என் பின்னே வந்து விடுவாய். அப்போ கவனித்து கொள்கிறேன்…” என்று கர்வமாக எண்ணி கொண்டாள் ஷாலினி.

         சாலா மகனை பிரமிப்பாக பார்த்தாள். அஜூ எப்பவும் அம்மா செல்லம் தான். ஆனாலும், அவனின் இந்த பேச்சு எதிர்பாராதது.

   “அட! என் மகன் வளர்ந்து விட்டான்…” என்று தான் பார்த்தாள் சாலா.

    அன்று இரவு தூக்கம் பொட்டுக்கு கூட அணுக வில்லை பிரகாஷ்க்கு. எல்லாம் ஒரு வித அழுத்தம் கொடுத்தது. எதையும் யோசிக்காமல் தப்பு செய்தவன், இன்று எல்லாவற்றையும் நினைத்து பயந்தான். அதுவும் ஷாலினியை புரிந்து கொள்ளவே முடியவில்லை. தன்னையே நாய்க்குட்டி போல சுற்றி வந்தவள். இன்று தன்னையே அடக்கி ஆள பார்க்கிறாள். அவள் சொல்லில் தான் அடங்கி நிற்க வேண்டும் என்று நினைக்கிறாள். இது எல்லாம் எவ்வாறு சாத்தியம் ஆகும். அவளுக்கு என்று தனிப்பட்டு குடும்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு என்று குடும்பம் உள்ளதே. ஷாலினியை பிடிக்கும் தான். அவள் அழகு, பேச்சு, நடத்தை எல்லாம் ஈர்க்கும். அதற்காக அவளை முன் வைக்க முடியுமா!… என் குடும்பம் என்றால் சாலாவும், பிள்ளைகளும் மட்டும் தான்.

        யோசித்து யோசித்து தலை எல்லாம் வலித்தது. மெல்ல எழுந்து அறைக்கு செல்ல, அஞ்சுவை அணைத்து சாலா உறங்கி கொண்டு இருந்தாள். இதுவே முன்பு இருந்த சாலாவாக இருந்தால்,

    என்னங்க, என்ன ஆச்சு?…, ஏன் தனியா உட்கார்ந்து இருக்கீங்க?…, உடம்புக்கு என்ன பண்ணுது… நூறு கேள்வி வாயில் வார்த்தையாக வந்தால், ஆயிரம் கேள்வி பார்வையில் தவிப்பாக வெளிப்படும். இரண்டு மணி நேரமாக தனியாக தவிக்கிறான். துளி கூட கண்டு கொள்ளாமல் அவள் வேலையை மட்டும் பார்க்கிறாள். ஒரு குருட்டாட்ட வாழ்க்கையில் சிக்கி கொண்ட உணர்வு. தவறு என்றும் தெரிகிறது, வெளி வந்து விட வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஆனால், வெளி வர தான் முடியவில்லை.

        அவசரமாக வர சொல்லி சுதா சொல்ல, எல்லாவற்றையும் போட்டு விட்டு ஓடினாள் சாலா. பெரிதாக என்ன வர போகுது, இவர்களின் உறவு தான் தெரிந்து விட்டதே… இதை மட்டும் யோசித்து தான் சாலா சென்றாள். ஆனால், அங்கு அவள் தலையில் இடியே விழுந்து விட்டது.

       அவள் கணவன் பிரகாஷ். அவன் கெட்டதும் இல்லாமல் இவர்களையும் சேர்த்து இழுத்து விட்டு இருக்கிறான். சபலத்தில் சாய்ந்து விட்டான் என்று இவள் நினைக்க, மனைவியாகவே வைத்து வாழ்ந்து இருக்கிறான்.

         சென்னை அவுட்டரில் ஒரு அபார்ட்மெண்ட் ஷாலினி பேரில். யார் பணம்?… எல்லாம் இவர்கள் உடையது தான். இவர்களின் பதினேழு வருட சேமிப்பு, யாரோ ஒருத்தி பெயரில் வீடாக நிக்க. தாங்க முடியாமல் கதறி விட்டாள் சாலா.

    “ஐயோ சுதா! எம் பிள்ளைக வாழ்க்கை பேச்சே. வாய கட்டி, வயித்த கட்டி காத்து வச்சிருந்த பணம் எல்லாம் பேச்சே… நான் என்ன பண்ணுவேன் சுதா. எம் பிள்ளைகளை எப்படி கரை சேர்ப்பேன்…” தலையில் அடித்து கொண்டு சாலா அழுக, பதறி போய் தடுத்தாள் சுதா.

      என்னவோ நேர காலம். தப்பு நடந்து போச்சு என்று கடக்க தான் எல்லோரும் நினைத்தது. ஆனால், நிலமை கை மீறி போகும் என்று யாரும் நினைக்க வில்லை. மனைவியாகவே வைத்து வாழ்ந்து இருக்கிறார் மனிதர். அதுவும் ஒரு வருசமாக துளி கூட சந்தேகம் வராமல். என்ன சொல்ல பிரகாஷ் கெட்டி காரரா? அல்லது சாலா ஏமாளியா?…

    தலையில் கை வைத்து ஒரு ஓரமாக சாய்ந்து அமர்ந்து விட்டாள். ஏதோ ஒரு சுழலில் சிக்கிய உணர்வு, வெளி வர முடியாமல் தத்தளிக்கிறாள். திடீரென்று ஏதோ ஒரு யோசனை தோன்ற,

    “அண்ணா… வீடு வாங்குற அளவுக்கு அவர் கிட்ட ஏது பணம். கை காசு, என் நகை எல்லாம் வச்சு தான் இந்த வீடு வாங்கினோம். என் மாமனார் வழி சொத்து கூட இன்னும் பிரிக்கல. அப்புறம் எப்படி?… சேவிங்தானாலும் வீடு வாங்குற அளவுக்கு பணம் தேறாது. அவர் பேருல மட்டும் சேவிங் போடல. என் பேருல, பிள்ளைக பேருல கூட சேவிங் இருக்கு. தனித்தனியா தான் பணம் போட்டு இருக்கோம். அப்புறம் எப்படி…” என்று யோசனையாக இழுத்தவள், உள்ளம் நடுங்க வாசுவை பார்த்தாள். அப்படி இருக்குமோ!…

      வாசுவிடம் இருந்து ஒரு பரிதாப பார்வை மட்டுமே கிடைத்தது.

     “ஆமா சாலா, பிள்ளைக பேருல போட்டு வச்சு இருந்த பணம் எல்லாத்தையும் எடுத்து இருக்கார்…” வாசு சொல்ல,

      “என்ன!… ஐயோ! அது அவங்க படிப்புக்காக போட்டு வச்ச பணம். அதுலையா கை வச்சான். படப்பாவி, எங்களை நட்டாத்துல விட்டுட்டான்…” என்று சாலா அழுக,

      “உனக்கு எதுவும் தெரியலையா சாலா?… நீ எதையும் கண்டு பிடிக்கலையா?…” என்று சுதா கேட்க.

    “எதுவும் தெரியலையே. அவர் தானே சம்பாதிக்கிறார். பிள்ளைக பேருல பணம் போட்டு வைப்போம், மேல் படிப்புக்கு, கல்யாணத்துக்கு , வேலைக்குன்னு என்னவோ அவங்களுக்கு உதவும் சாலான்னு பணம் போட்டு வச்சதே அவர் தான். என் பேருல கூட மாச மாசம் போட்டு வாரார். அவர் பேருலயும் தான். அவ்வளவு தான் எனக்கு தெரியும். என் கிட்ட சொல்லாம எதுவும் செய்ய மாட்டார். ஒரு வார்த்தை என்கிட்ட சொன்ன பின்னாடி தான் எந்த முடிவும். அதுனால நானும் வாய முடிப்பேன். எனக்கு சொல்லி தான் எதுவும் செய்றார். வேற என்ன வேண்டும். இம்புட்டு நாளும் சரியா தான் இருந்துச்சு…” முகம், மூக்கு எல்லாம் சிவந்து வீங்கி போச்சு.

      “உனக்கு கொஞ்சம் கூட சந்தேகமே வரலையா சாலா…? அப்படி ஒருத்தர் இருக்க முடியுமா!…” கேள்வியாக சுதா கேட்க.

    “ இருந்தார் சுதா. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. இவருக்கு ஒரு தங்கச்சி, ரெண்டு தம்பி இருக்காங்க. குடும்பத்துல மூத்தவரா எல்லாருக்கும் பொறுப்பா செஞ்சாங்க. கடன் வாங்குறது எல்லாம் இவருக்கு பிடிக்காது. இந்த வீடு வாங்கும் போது கூட என் நகையை தான் வச்சோம். யார்டையும் கை நீட்டல. சம்பாத்தியத்தை ரொம்ப சரியா செலவு செய்வார். நாங்களும் ஒரு நாளும் கஷ்டப்படல. பதினேழு வருசம் அந்த நம்பிக்கையில தான் ஓடுச்சு. கையை பிடிச்சு கரை சேந்திருவோம்ன்னு நினைச்சேன். இப்படி நாட்டாத்துல நிப்பாட்டுவாருன்னு நினைக்கல சுதா…” மேலும் அழுகை பொங்கியது. அடுத்து என்ன என்ற யோசனையே அவளிடம் இல்லை. தொடர்ந்து அழுகை மட்டும் தான் வந்தது.

      “வேற என்ன எல்லாம் பண்ணி வச்சுருக்கார் அண்ணா?…” என்று சாலா கேட்க.

      கொஞ்சம் தயங்கினாலும் சொல்லி விட்டான் வாசு தேவன்,

        “மூணு மாசத்துக்கு ஒரு தடவை டூர் போவாங்க. அதுவும் வெளிநாட்டுக்கு மட்டும் தான். உள்ளூர்ல போன மாட்டிப்போம்ன்னு பயம் இருக்கலாம். லோன் வேற போட்டு இருக்கார்…” என்று வாசு சொல்ல

       முகத்தை அழுந்த துடைத்தாள், “அவரை நம்பி, அவர் கையை புடிச்சு தெரியாத ஊருக்கு வந்து, அவருக்கு ரெண்டு பிள்ளைகளையும் பெத்து, பதினேழு வருசம் அவருக்காக மட்டுமே வாழ்ந்த எனக்கு என்ன மிச்சம் வச்சு இருக்கார் அண்ணா?… நமக்கு அப்பா இருக்கார், அவரு எல்லாத்தையும் பாத்துபார்ன்னு கனவோடு இருக்குற பிள்ளைகளுக்கு என்ன வழி இருக்கு?…” பொங்கி எழும் அழுகை அடக்கி கொண்டு சாலா கேட்க.

      என்ன பதில் சொல்ல முடியும். நடுத்தர வர்க்க மக்களுக்கு சேமிப்பு தான் ஆதாரம். எதிர்கால நம்பிக்கையும் சேமிப்பு மட்டும் தான். அந்த அஸ்திவாரம் இல்லையென்றால் மேலே இருக்கும் வீடு மணல் கூடு தான். தற்போது சாலா நிலைமையும் அது தான்.

    “வீடு மட்டும் தான் இருக்கு சாலா. ஆனா, பிரகாஷ் இப்படியே இருந்தா அதுவும் லாக் ஆகும். எப்படி சொல்றது… ரொம்ப சுலபமா எல்லாத்தையும் விட்டுட்டார். இனி கஷ்டம் தான்…” வாசு சொல்ல.

        “அது எப்படிங்க அவ்வளவு பணமும் போகும். கொஞ்சம் கூட ஒரு மனுசனுக்கு யோசனையே இருக்காதா… கண்ணை மூடிக்கிட்டு காச எல்லாம் கடல்ல தூக்கி போட்டு இருக்கார். அப்படி என்ன அவ உசத்தி. எவளோ ஒருத்திக்கு லட்ச கணக்குல செலவு செய்ய என்ன இருக்கு. ஒரு குடும்ப தலைவன் செய்யிற வேலையா இது?… இதுக்கும் சட்டத்துல தண்டனை கிடையாதா?…” ஆதங்கமாக சுதா கேட்க.

           “அது அப்படி தான் சுதா. இப்ப இருக்குற நாகரீகம் அப்படி இருக்கு. காலத்துக்கு தக்க நாம தான் மாறனும் போல… லீவ் இன் ரெலேஷன்ஷிப் தப்புன்னு பேசலாம், கேஸ் போட முடியுமா. ஒரு தனி மனிதனோடு வாழ்க்கையில நாம தலையிட முடியாது. நாம தப்பு செஞ்சா கடவுள் கேட்பாருன்னு பயந்து வாழ்ந்தது எல்லாம் அந்த காலம். இப்ப எல்லாம் கடவுளா?… அது யாருன்னு தான் கேட்பாங்க. இருக்குற ஒரு வாழ்க்கையை ஒழுக்கமா வாழணும்ன்றது போய், இருக்குற ஒரு வாழ்க்கையை நம்ம விருப்பப்படி சந்தோசமா வாழணும்ன்னு கோட்பாடு வந்துச்சு. பரஸ்பர புரிதலும், நம்பிக்கையும், சகிப்பு தன்மையும் தான், இப்போ இருக்குற கல்யாண வாழ்க்கையை காப்பாத்தும்…”

     “என்ன நாகரீகமோ போங்க… பிள்ளைகளை வளர்க்க பயப்படனும் போல. ஏன் சாலா உனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் வரவே இல்லையா?… எப்படிடி இவ்வளவு தூரம் விட்ட?…”

      “கட்டுன புருசனை கூட நம்ப கூடாதுன்னு நான் நினைக்கலையே சுதா. நம்ம புருசன், நமக்கு கெடுதல் நினைப்பாரான்னு நினைச்சேன். இனி எப்படி நான் பிள்ளைகளை வளர்க்க போறேன். அஜய் பெரிய ஸ்கூல்ல சேரனும் சொல்றான். வயசுக்கு வர தக்க பொண்ணு இருக்கு, நகைன்னு எதுவும் சேர்க்கலை. படிப்புக்கு பணம் சேர்த்தாச்சு, இனி நகை சேர்த்து வைக்க நினைச்சேன். எல்லாம் போச்சு…”

    “எதுவும் போகலை. நாம சரி செய்யலாம்…” என்று சுதா எடுத்து சொன்னாலும்,

         சாலா மனம் ஒத்து கொள் வில்லை. “ நல்லா படிச்சவங்களுக்கே இங்க வேலை கிடைக்கிறது கஷ்டம். நாப்பது வயசுல வேலை தேடி ஓட முடியுமா… இவர் மட்டும் தன் உலகம்ன்னு நினைச்சு இருந்தேன். இப்படி பண்ணிட்டாரே சுதா. பெத்த பிள்ளைகளை கூட நினைக்கலையே. இனி அவரோட நான் எப்படி வாழ்வேன்…” அழுகை மட்டும் தான் வந்தது.

    அவர்கள் இருப்பது நடுத்தர வர்க்கத்துக்கும் ஒரு படி மேல் நிலை என்று கூட சொல்லலாம். ஆனால், தற்போது பத்து வருசம் பின் தங்கி நின்றாச்சு. தற்போது பிரகாஷ் பின்னி வைத்து இருக்கும் வலையில் இருந்து வெளி வர குறைந்தது ஐந்து வருங்கலாவது ஆகும். ஆனால், அதற்கு முன் காலம் ஓடி விடும். அவரவர் சமநிலை மக்கள் முன்னேறி செல்ல, இவர்கள் படிக்க வைக்கவே சிரமப்பட வேண்டும். அவ்வளவு ஆத்திரம் வந்தது கணவன் மேல்… அப்படி என்ன ஒரு பெண்ணின் மேல் ஆசை, மோகம்.

         மனதில் எத்தனை வலி இருந்தாலும் பிள்ளைகள் தேவையை பார்க்க தானே வேண்டும். ஒரு ரவா கிச்சடியோடு இரவு உணவை முடித்து கொண்டாள். அதற்கு மேல் உடல், மனம் இரண்டிலும் தெம்பு இல்லை.

       தாய் முகம் பாத்தே பிள்ளைகள் அமைதியாக உண்ண,

      “என்ன சாலா, எனக்கு ரவா பிடிக்காதுன்னு உனக்கு தெரியும் தானே. அப்புறம் ஏன் செஞ்சு வச்ச… சப்பாத்தி, குருமா வச்சு இருக்கலாம் தான…” முனங்கி கொண்டே உண்டான்.

        உண்மையில் மறந்து தான் போனாள். பார்க்கும் டிவியில் இருந்து சமைக்கும் உணவு வரை கணவனுக்காக பார்த்து பார்த்து செய்ய, முழுதாக முட்டாள் பட்டம் கட்டி விட்டான்.

      தன் வலியை விட பிள்ளைகள் எதிர்காலம் தான் சாலா மனதை குடைந்தது. யாரிடமும் போய் நிற்க முடியாது. தற்போது தான் அக்கா செத்தாள். அதுவே பெரும் துயரம் தன்னை பெத்தவற்களுக்கு… இதில் இரண்டு பிள்ளைகளோடு தானும் போய் நின்றாள். அதுவும் பாதி வாழ்க்கை கடந்த பின்?…

       மெளனமாக கண்ணீர் தான் வெளியேறி கொண்டு இருந்தது. இத்தனை வருசம் கணவன் உடன் நின்று எவ்வளவு கஷ்டங்கள் பார்த்து இருப்பாள். எத்தனைக்கு தோல் கொடுத்து தூக்கி இருப்பாள். ஒரு நொடியில் என் சம்பாத்தியம், என் முடிவு என்பது போல் அல்லவா நடந்து கொண்டான். அப்போ நான் யார்? உன்னோட சுக, துக்கங்களை பங்கெடுத்த நீ அழுதால் உடன் அழுத நான் யாரடா உனக்கு?…

    இதயமே வெடிக்கும் போல இருந்தது. அப்படியே சோபாவில சாயா,

    “அம்மா…” வந்தது அஜய் தான்.

     “என்னம்மா ஏன் அழுகுறீங்க?…” பதறி போய் மகன் கேட்க.

  “ஒன்னும் இல்லை கண்ணா. நீ போய் தூங்கு…”

    “நானும் பெரிய பையன் ஆகிட்டேன். உங்க ஃபீலிங்க என் கிட்ட ஷேர் பண்ணுங்க…”

 சாலா முகத்தில் வலியையும் மீறி ஒரு புன்னகை.

   “ஒன்னும் இல்லைடா பெரிய மனுசா, கால் வலி அவ்வளவு தான்…”

    அஜய் உள்ளே சென்று மருந்தை எடுத்து வந்து காலுக்கு தடவி விட்டு, இதமாக பிடித்து விட்டான்.

       “உங்களுக்காகவது உங்க அப்பா யோசித்து இருக்கலாம்…” மீண்டும் கண்ணீர் பொங்க, மகனை கொண்டு சுதாரித்தாள்.

           பிரகாஷ் அலுவலகம் கிளம்பும் முன், அவன் எதிர் வந்து நின்றவள்.

      “அஜுவ தனியா விட முடியாது. என்னால என் பையனை விட்டு இருக்க முடியாது. அதனால, நானும் அவனோட மதுரைக்கு போறேன்…” சாலா அறிவிக்க,

     அரண்டு போனவன், “என்ன சொல்ற சாலா?…”

   “ ஆமா, அஞ்சு சின்ன பொண்ணு. அவளையும் தனியா விட முடியாது. அதனால நாங்க மூணு பேரும் மதுரைக்கு போறோம்…” தீர்க்கமாக, தெளிவாக சொல்லி விட்டாள் விசாலாட்சி.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!