Skip to content
Post Views: 482
ஆளுக்கொரு ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு இருவரும் ஃபுட் கோர்ட் சொல்ல எழிலும் மலரும் வந்துவிட்டனர். பின் நால்வரும் அளவாக மதிய உணவை முடித்துக் கொண்டு படம் பார்க்க சென்றனர். முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே வந்தான் எழில்.
இருக்கைக்கு இருபுறமும் ஆண்கள் கூட்டமாக இருக்க மலரையும் இசையையும் நடுவே அமர சொல்லிவிட்டு இவர்கள் அவர்களின் இருபுறமும் அமர்ந்து கொண்டனர்.
Advertisement
மேட்னி ஷோ என்றாலும் ஓர் அளவு நல்ல கூட்டம் இருந்தது. டைட்டில் கார்டு போட்டதும் திரையரங்கில் ஓரே சத்தம். புதிதாக வெளியாகும் திரைப்படங்களைவிட மறுவெளியீடு செய்யப்படும் திரைப்படங்களுக்கு மௌவுசு சற்று அதிகம் தான்.
“கிறுக்கனுங்க..” ஆர்ப்பரித்து கொண்டிருந்தவர்களை எழில் எரிச்சலுடன் திட்ட, விசில் சத்தம் அவன் காதை கிழித்தது.
Advertisement
Advertisement
அதில் இன்னும் எரிச்சலானவன் அவன் இடப்புறம் திரும்பி பார்க்க அருகே இருந்த ஆடவன் அமைதியாக தான் இருந்தான். இவனில்லை என்றால் வேறு யார்? என்று சிந்தனையுடன் திரும்ப, சூரியாவை திரையில் கண்டதும் அவன் காது ஜவ்வு கிழிய விசில் அடித்தாள் மலர். ஸ்தம்பித்துவிட்டான் எழில்!
பொண்ணா இது! என்ற தொனியில் அவன் பார்க்க அவன் காதருகே குனிந்து, “ரொம்ப சைட் அடிக்காதீங்க சீனியர்” என்று கண்ணடித்தவள் மீண்டும் திரைப்படத்தில் கவனமாகிவிட அவள் பேச்சில் ஒரு நிமிடம் தடுமாறி போனான்.
Advertisement
அவன் உதடுகள் தன்னால் விசில் அடிக்க முயற்சிக்க, காற்று தான் வந்தது. சட்டென்று வாயை மூடிக் கொண்டான். பார்த்துவிட்டால் கலாய்த்தே அவனை ஒரு வழியாக்கிவிடுவாளே!
தமிழ் மெல்ல அவன் அருகே இருந்த இசையை பார்க்க, அவள் விசில் மட்டும் தான் அடிக்கவில்லை மற்றபடி மலர் செய்த அத்தனை சேட்டைகளையும் செய்தாள்.
தோழிகள் இருவரும் அடிக்கும் லூட்டியில் தமிழும் எழிலும் மற்றொருவரை பாவமாய் பார்த்துக்கொண்டனர்.
திரைப்படம் தொடங்கவும் ரசிகர்களின் ஆர்பரிப்புகள் குறைந்துவிட எல்லோரும் திரைப்படத்தோடு ஒன்றிவிட்டனர்.
இருள் சூழ்ந்த திரையரங்கம்.. சைட் அடிக்க வெகு சவுகரியமாக இருக்க தமிழின் மனநிலையை கேட்கவா வேண்டும்? படுகுஷியாக இருந்தான்.
திரையில் மூழ்கிப்போனவள் இவனை கண்டு கொள்ளவே இல்லை. தமிழோ இசையை விட்டு பார்வையை நகர்த்தவில்லை. மீண்டும் இது போல் ஓர் வாய்ப்பு கிடைக்குமா? கிடைத்ததை பயன்படுத்திக்கொண்டான்.
திரைபடத்தின் நடுவே பாடல்கள் வரம்போதெல்லாம் திரையரங்கத்தை கான்செர்டாக (concert) மாற்றிவிட்டனர். ராசிகர்களும் பாடல்களோடு சேர்ந்து பாட இவர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். எழில் முதலில் மலரின் வற்புறுத்தலில் எழுந்து நின்றவன், ஒரு கட்டத்திற்கு மேல் விரும்பியே அவர்களுடன் ஐக்கியமாகிவிட்டான்.
நால்வரும் தங்களின் முதல் திரைப்பட அனுபவத்தை ஓர் அழகிய நினைவாக ஃபோட்டோகளும் வீடியோக்களும் எடுத்து ஆவணப்படுத்திக் கொண்டனர்.
மாலை நான்கு மணி போல் திரைப்படம் முடிய வெளியே வந்தனர். எழில் நினைத்த அளவு மோசமில்லை. ஓர் அழகிய அனுபவமே!
தமிழும் இசையும் தனியே பேசிக் கொண்டு நிற்க மலருடன் நின்றிருந்தான் எழில்.
“சீனியர் எடுத்த ஃபோட்டோஸ் எல்லாம் எனக்கு ஷேர் பண்ணுங்க” மலர் கரகரத்த குரலில் கூற
“என்ன நீ பேச சொன்னா மொட்ட ராஜேந்திரன் வாய்ஸ்ல மிமிக்ரி பண்ணீட்டு இருக்க” என்று கிண்டலடித்து சிரித்தான் எழில்.
கத்தி கத்தி அந்த அளவிற்கு புண்ணாக்கி வைத்திருந்தாள் தொண்டையை.
“தேவையில்லாம பேசாதீங்க..” எரிச்சலாக அவள் எச்சரிக்க “தேவையில்லாம பேசாதீங்க..” என்று அவளை போலவே கரகரத்த குரலில் பேசிக்காட்டி வம்பிழுத்தான்.
“சீனியர்..” ஏதோ சொல்ல வந்தவள் தொண்டை வலியில் முகத்தை சுருக்கவும் “வாய வச்சுட்டு சும்மா இருக்கணும்..” என்று நமட்டு சிரிப்புடன் அவன் நக்கலடிக்க கடுப்பானவள் பேசமுடியாமல் அவனை கண்டன பார்வை பார்த்தாள்.
“தேங்க்ஸ் சீனியர்..” பூரிப்புடன் போசினாள் இன்னிசை.
“எப்படி எழில் அண்ணாவ ஒத்துக்க வச்சீங்க?” இன்னும் நம்ப முடியவில்லை அவளால்.
“எப்படியோ வச்சேன்… அதெல்லாம் விடு நீ ஹேப்பி தான?”
“நான் ரொம்ப ஹேப்பி..” என்றாள் சிரிப்புடன்.
தமிழின் மனதில் ஓர் நிறைவான உணர்வு. காலையில் இன்றைய இனிமை பறிபோனதாக நினைத்தவன் அது இரட்டிப்பாக திரும்பிவிட்டதாக உணர்ந்தான். இதற்கெல்லாம் காரணமான மலரை மனதார மானசீகமாக வாழ்த்தினான்.
“சீனியர்…” இசை தயக்கத்துடன் இழுத்தவள் தன் பையில் இருந்து ஒரு புத்தகைத்தை எடுக்க மீண்டும் புத்தகமா?! என்று பீதியுடன் பார்த்தான் தமிழ்.
அவன் பார்வையில் சிரித்தவள், “எனக்கு தெரியும் உங்களுக்கு பிடிக்காதுனு.. ஆனாலும் நீங்க இப்போ இன்டர்வியூக்கு தயாராகிட்டு இருக்கீங்கல.. இது உங்களுக்கு ரொம்ப யூஸ் ஃபுல்லா இருக்கும்” என்று அவனிடம் குடுக்க இன்டர்வியூ என்றதும் “தேங்க்ஸ்!” என்று மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.
இசைக்கு காலையிலிருந்தே அவனை காயப்படுத்திவிட்டோம் என்ற உறுத்தல் இருக்க தமிழுக்கு ஏதாவது பரிசளிக்கலாம் என்று யோசித்தாள். அவனுக்காக என்பதையும் தாண்டி அது அவள் மனதிற்கு ஒரு ஆறுதல். மாலில் தேடிப் பார்த்தவளுக்கு புத்தகங்களை தவிர வேறு எதுவும் பயனுள்ளதாக தோன்றவில்லை. அதனால் தான் அவனுக்கு பிடிக்காத போதும் பயனுள்ளதாக இருக்கும் என்று வாங்கிவிட்டாள்.
தமிழ் புத்தகத்தை ஆராய்ந்தவன் அதன் விலையை கண்டு “நானூறு ரூபாயாக?” என்று சற்று அதிர்ச்சியுடன் கேட்க ஆம் என்றாள்.
“எதுக்கு இசை வீண் செலவு பண்ற?”
“புக்ஸ்ல செலவு பண்றது என்னிக்குமே வீண் ஆகாது..”
புன்னகைத்தவன், “இது யாரு சொன்னா?” என்று கேட்க “எங்க அப்பா சொல்லியிருக்காரு” என்றாள் சிரிப்புடன்.
இருவரும் பேசிக் கொண்டு நிற்க பொறுமை இழந்த எழில் ‘இதுங்க விட்டா நாள் முழுக்க கடல போடுங்க’ என்று தனக்குள் திட்டியபடி “கிளம்பலாமா?” என்று அவர்கள் முன் சென்று நின்றான்.
நேரம் ஆவாதை உணர்ந்தவர்களும் சரி என்க நால்வரும் வீட்டிற்கு புறப்பட்டனர்.
கிளம்புமும் நேரம் எழில் மலரிடம் சென்றவன், “பாய் மலர்.. போய்டு வர்றேன்..” என்று அவளை போலவே கரகரத்த குரலில் பேசி விடை பெற பேச முடியாதவள் கடுப்பாகி அவன் கழுத்தை நெரித்து கொன்று விடுவேன் என்று சைகையில் மிரட்டி துரத்திவிட்டாள்.
அவளை கடுப்பேற்றிய திருப்தியுடன் தமிழுடன் வீட்டிற்கு புறப்பட்டான் எழிலமுதன்.
வழியில் தமிழை அவன் வீட்டில் இறக்கிவிட்டவன் தன் வீட்டிற்கு சென்றான். வண்டியை நிறுத்துவட்டு வீட்டிற்குள் நுழைய ஏதோ பாடலை விசில் அடித்தபடி சமையலறையில் இருந்தார் கோபால். சனிக்கிழமை விதுரனுக்கு விடுமுறை, மகன் கேட்டான் என பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்தார்.
விசில் சத்தத்தை கேட்டதும் எழிலுக்கு மலரின் நினைவு. இதழ்கள் தன்னால் புன்னகையில் விரிந்தது. வேகமாக தந்தையிடம் ஓடியவன் அவரை பின்னிருந்து அணைத்து கொள்ள அவன் திடீர் செய்கையில் அதிர்ந்தவர் தெரியாமல் கையில் வைத்திருந்த கரண்டியால் சூடு வைத்துவிட்டார்.
“ஆஆஆஆ.. டேடி” வலி தாங்காமல் அவன் கத்த “கையில ஏன் ப்பா சூடு வச்ச நல்லா அவன் வாயிலையே வை” என்றான் விதுரன்.
“அப்படியா..இரு நான் இப்போ வச்சு காட்டுறேன்” என்று தந்தையிடம் இருந்த கரண்டியை பிடுங்கியவன் தம்பியை துரத்த எழிலிடமிருந்து தப்பி ஓடினான் விதுரன்.
இருவரின் சேட்டையில் எரிச்சலானவர், “பஜ்ஜி கருகுது கரண்டிய குடுங்க டா” என கரண்டியை எழிலிடமிருந்து பிடுங்கி அதிலேயே இருவருக்கும் அடி வைத்தார்.
இருவரும் தந்தையை முறைக்க, “நீ தான் இவன கெடுக்கிற” என்றார் எழிலை கண்டு. அதில் விது அவனை பார்த்து சிரிக்க தம்பியின் தலையில் தட்டியவன் மற்றவைகளை விடுத்து தன் காரியத்தில் கண்ணாணான்.
தந்தையின் தோள் சாய்ந்து நின்றவன், “டேடி..” என்றிழுக்க “என்ன டா? என்றார் கடுப்பாக.
“அப்பா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ ஒன்னு பண்ணீல.. எனக்கும் அதை சொல்லி குடு”
“என்ன பண்ணேன்? ஓ பஜ்ஜி செய்றதா.. ஏன் டா சமைக்க கத்துக்க போறியா?” என்று அவர் சற்று உற்சாகமாக பேச
“ஐயையே.. அது இல்ல.. விசில் அடிக்க சொல்லி குடு டேடி” என்றான்.
“அதான பார்த்தேன்.. ஏன் டா தடிமாடு மாதிரி வளர்ந்திருக்க ஒரு விசில் அடிக்க தெரியாதா?”
“தெரியலையே” என்றவன் விசில் அடித்து காட்ட வெறும் காற்று தான் வந்தது. விதுவும் கோபாலும் சிரித்துவிட்டனர்.
“சில்லி பாய்.. ஒரு விசில் அடிக்க தெரியல!” அவனை கலாய்த்த விதுரன் விதவிதமாய் வித்தியாசமாய் விசில் அடித்து காட்ட பேச்சற்று போனான் எழில்.
கோபாலுக்கு சிரிப்பு வந்தாலும் பெரியவனை பார்க்கவும் சற்று பாவமாக இருந்தது. “சும்மா இருடா” என்று சின்னவனை அடக்கியவர் “இப்படி செஞ்சு.. இப்படி ஊது..” என்று செய்முறையோடு சொல்லிக் குடுத்தார்.
பாவம் எழிலுக்கு தான் வரவில்லை. கால் மணி நேரம் அவனோடு போராடியவர் ஒரு கட்டத்தில் வெறுத்து போய்விட்டார்.
“டேடி..” அவன் இழுக்கவும் “டேடி கிடினு வந்த.. உனக்கு அவ்ளோ தான் மரியாத ஒழுங்கா ஓடி போயிரு” என்றார்.
“டேடி..”
“போறியா இல்ல வாயில் கரண்டிய விட்டு சொருகவா..” கோபால் கையில் கரண்டியை எடுக்கவும் “நோ நோ வயலன்ஸ்” என்றவன் அவர் சுட்டு வைத்திருந்த பஜ்ஜியில் இரண்டை எடுத்துக் கொண்டு அறைக்கு வந்தான்.
வந்தவன் தன் போனை சார்ஜில் போட எடுக்க இன்று இவர்கள் எடுத்த புகைப்படங்களையெல்லாம் அனுப்பியிருந்தான் தமிழ். கட்டிலில் படுத்தபடி ஒவ்வொரு புகைப்படமாக தள்ளி தள்ளி பார்த்துக் கொண்டிருந்தவனின் கைகள் ஒரு புகைப்படத்தில் நிலைத்துவிட்டது.
இவர்கள் திரையரங்கில் எடுத்த புகைப்படம் தான். பின்னே நின்றிருந்த மலர் அவன் கவனிக்காத நேரம் அவன் தலையில் தன் விரல்களால் கொம்பு வைத்திருந்தாள். சில நொடிகள் அதை பெரிதாக்கி உற்று நோக்கியவனுக்கு கோவம் வரவில்லை மாறாக காலையிலிருந்து அவள் செய்த சேட்டைகள் நினைவு வர புன்னகைத்தான், இதழ்களோ “அருந்த வாலு..” என்று முணுமுணுத்தன.
பிகு: முன்னொரு காலத்துல வாரணம் ஆயிரம் re-release ஆனா அப்போவே இத யோசிச்சு வச்சுட்டேன்.. கில்லி தீனா வே re-release பண்ணீட்டாங்க இப்போ தான் போஸ்ட் பண்றேன். அதனால நான் எதையும் மாத்தல என்ன கற்பன பண்ணேன்னோ அப்படியே எழுதீட்டேன்.
Please do share your thoughts ✨ Thankyou!
error: Content is protected !!