Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இலக்கணம் பெண்மையே

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 7

இலக்கணம் பெண்மையே!…

அத்தியாயம் 7

         சாலா, தன் பிள்ளைகள் உடன் மதுரைக்கு வந்து விட்டாள். அவர்களை வழி அனுப்பவோ, வரவேற்கவோ யாரும் வர வில்லை. யார் சொல்லியும் தான் சாலா கேட்க வில்லையே… அந்த கோபம், உன் இஷ்டம் என்று விட்டு விட்டார்கள். பிரகாஷ் முகம் கொடுத்து கூட பேச வில்லை. அதை சாலா கண்டு கொள்ளவில்லை என்பது தான் அவனுக்கு அதிக கோபமும் கூட…

         விசாலாட்சி படித்தது எல்லாம் மதுரை தான் என்பதால் அங்கு அவளுக்கு நட்பு வட்டம் அதிகம். எளிதாக வீடு கிடைத்து குடி புகுந்து விட்டாள். அஞ்சு குட்டிக்கு தான் ரொம்ப கோபம். அங்கு அவளால் ஒட்டவே முடியவில்லை. சென்னையில் இருந்த வசதி இங்கு கிடையாது… அவள் அப்பாவை ரொம்பவும் மிஸ் செய்தாள் போல, சில நாள் தூக்கத்திலே அழுகையும் தொடர்ந்தது.



Advertisement

        சாலாவும், அஜயும் ஒருவாறு அனுசரித்து தான் அந்த சூழலுக்கு பழகினார்கள். கஷ்டம் தான், ஆனாலும் வைராக்கியமாக வாழ பழகி கொண்டாள். ஒரு வாரம் முகத்தை தூக்கி கொண்டு இருந்த அவள் பெற்றவர்களும் அடுத்த வாரத்தில் வந்து விட்டார்கள்.

        “உனக்கு இதெல்லாம் தேவையா சாலா… மாப்பிள்ளை உன்னை ராணி மாதிரி வச்சு இருந்தாங்க, எதுக்கு அவங்களை தனியா விட்டு வந்த… நீ இல்லாம எம்புட்டு சிரமம் தம்பிக்கு. பிள்ளை பெற கூட உன்னை ரொம்ப நாள் நம்ம வீட்டுல விட்டது இல்லை…” என்று பாண்டியம்மா புலம்ப,

     சிரித்த முகத்துடன் கேட்டு கொண்டு இருந்தாலும், அவர் வார்த்தைகள் ரம்பாமாக நெஞ்சை அறுத்தது.

Advertisement

      உண்மை தான், கல்யாணம் ஆன புதிதில் பிரகாஷ் சாலாவை எங்கும் விட்டதில்லை. அஜய் பிறந்து ஒரு மாதம் தான் ஆகும். அதற்குள் மனைவியை தேட தொடங்கி விட்டான். சென்னையில் இருந்து வாரம் வாரம் வரும் மருமகனை தடுக்க முடியாமல் சங்கட பட்டு போவார் பாண்டியம்மாள்.

Advertisement

      “அம்மா… அவருக்கு அங்க சாப்பாட்டுக்கு சிரமம். தனியா ரொம்ப கஷ்டபடுறாங்க. மகனை பார்க்காமையும் இருக்க முடியலையாம். வாரம் வாரம் வந்து போக ஆகாதும்மா… நான் எங்க வீட்டுக்கு போகவா…” தயக்கமும், வெட்கமாக தாயிடம் கேட்டதும்.

    இரண்டு மாத கை குழந்தையோடு அனுப்ப பயந்தவரை, கொஞ்சி, கெஞ்சி சமாதானம் செய்து, கணவன் வீடு சென்ற நினைப்பும் நெஞ்சை கிழித்தது.

      பாதி நாள் அஜய் தூக்கம் அப்பா நெஞ்சில் தான். நன்றாக பார்த்து கொண்டான். அவ்வளவு வாங்கி போடுவான். பிரகாஷ் வீட்டில் தங்கை திருமணம் முடிந்து, இரு தம்பிகள் கல்லூரியில் நிற்க. கொஞ்சம் பொருளாதார சிரமம் தான். அப்படியும் பொண்டாட்டி, பிள்ளைகளை தாங்குவான். இதெல்லாம் அவன் கடமை தான் என்ற போதும் சாலாக்கு இறகு முளைக்காத குறை தான்.

Advertisement

         எல்லா வலியையும் ஒரு பெரு மூச்சு விட்டு அடக்கி, அடித்து என்ன என்று பார்க்க தொடங்கினாள். பிள்ளைகள் பள்ளி சேர்க்கை, டியூசன் என்று நாள் பறக்க, பிரகாஷ் எட்டி கூட பார்க்க வில்லை. அவனின் ஆதங்கம் வேற ரூபம் கொண்டது. என் மனைவி, என் பிள்ளைகள்… என்னை தாண்டியா நீங்கள், அதையும் பார்த்து விடுவோம்…

       ஒரு மாதமும் திகட்டாத தேன் தான் பிரகாஷ், ஷாலினி வாழ்க்கை. கேள்வி கேட்க, கட்டுப்பாடு விதிக்க, மாட்டி கொள்வோமோ என்று பயப்பட எதுவுமில்லையே. சென்னையே ஒரு சுற்றுலா தளம் போல் அவர்களுக்கு மாறி போனது. அவர்கள் விருப்பம் போல யார் வீட்டிலும் அன்றைய இரவை கழித்தார்கள்.

      பிரகாஷ், அவன் மனைவிக்கு என்று ஒரு செக் வைத்து இருந்தான். சாதுவாக தன் கைக்குள் நின்ற மனைவி தன் கைக்குள் தான் நிற்க வேண்டும். குடும்ப தலைவன் இன்றி குடும்பம் எவ்வாறு சுழலும். சுழல சாலா நினைத்தாள் பிரகாஷ் விடுவானா என்ன?…

        அவன் முதலில் கை வைத்தது பணத்தில் தான். இவர்களின் வசதி, வாழ்க்கை எல்லாம் அவனை வைத்து தான், அவனை ஒதுக்கி வைத்து தனியாக எவ்வாறு சமாளிப்பாள். எதுவென்றாலும் சாலா, பிரகாஷ் இடம் தான் அடங்க வேண்டும்…

             அவள் பெயரில் இருக்கும் பணம் வைத்து தான் இரு பிள்ளைகளுக்கும் பள்ளி செலவை பார்த்து கொண்டாள். அடுத்த முதல் மாதத்தில் சாலா அக்கவுண்ட்டில் பணம் போட பட வில்லை. பெரிய செலவு என்று இல்லை தான். ஆனால், அடிப்படை செலவு என்று இருக்கும் தானே…

    அஞ்சு அப்பா கையிலே வளர்ந்தவள். பார்த்தது எல்லாம் வாங்கி பழக்கம் உண்டு. ரோட்டில் ஆயிரம் போகும், எல்லாவற்றையும் வாங்கி கொடுக்க சொல்லுவாள். எதுவும் கண்டித்தால், நான் அப்பா கிட்ட போறேன் என்று ஒரே அழுகை. அஞ்சுக்கு அப்பா வேண்டும் தான். ஆனால், அம்மா இல்லாமல் எல்லாம் இருக்க மாட்டாள். சாலாக்கு ஒரு நாளில் பாதி இவளை சமாதானம் செய்வதிலேயே கழியும். அவளின் ஒரு ஆறுதல் மகன் மட்டும் தான். எந்த விதத்திலும் தொந்தரவு தந்தது இல்லை.

       பிரகாஷ் எதிர் பார்த்தான். எந்நேரமும் மனைவி தன்னை அணுகுவாள் என்று… இந்நேரம் தெரிந்து இருக்கும், யாரின் வங்கி கணக்கிலும் பணம் இல்லையென்று… நான் வேண்டாம், என் பணம் மட்டும் வேண்டுமா… என் மனைவி என்னிடம் தான் வர வேண்டும். ஆனால், அஜய் தெரிந்து கொண்டான். தன் பெயரில் வைப்பு நிதி இல்லை என்று…

     சாலா தன்னை நிதான படுத்தி கொண்டாள். அவளுக்கு தெரிந்தது, தான் ஒரு ஆடுபுலி ஆட்டத்தில் உள்ளோம் என்று… ஆக, கணவன் சம்பாத்தியம் மனைவிக்கு உரியதோ?… அல்லது அவர்கள் பிள்ளைகளுக்கு உரியதோ? அல்ல. அது முழுக்க முழுக்க அவனின் சுய சம்பாத்தியம் எனும் போது அவனுக்கு மட்டுமே உரியது. எங்களுக்கானது என்று நாங்கள் நினைத்தது வெறும் கண் துடைப்பு.

    குடும்பத்தில் ஒரு சண்டை வந்தால் கணவனை, மனைவியோ யாரோ ஒருவர் விட்டு கொடுத்து போவது போல… தானும் தன்மானத்தை விட்டு, “என்னங்க வீட்டு செலவுக்கு பணம் கொடுங்க…” தயக்கத்தோடு என்றாலும் ஒரு வார்த்தை கேட்டால் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விடும். அதே சொகுசு வாழ்க்கை, கௌரவமான தம்பதிகள், வளமான எதிர்காலம்.

   ஆனால், இதுவா விசாலாட்சிக்கு தேவை. இதோ ஒரு நொடியில் தூக்கி விட்டானே… பதினேழு வருட திருமண வாழ்க்கை, நான் ஒன்றுமே இல்லையா… அவனிடம் கையேந்த வைக்கிறான். இதற்கு முன் அப்படி தான். என் கணவன் என்ற உரிமை, உறவு இருந்தது. தயக்கம் எல்லாம் இல்லை, “என்னங்க பானிபூரி வாங்கி வாங்க, ஊருக்கு போறேன் செலவுக்கு காசு வேணும், பிள்ளைக லீவு வெளிய போவோமா…” என்று எதற்கும் தயங்காமல் கேட்டாள். இன்று கூசியது, இந்த சொகுசு வாழ்க்கையை காட்டி, தன் தப்பை சரி கட்டபார்க்கிறான். சாலா வாய் திறந்து பணம் கேட்டு விட்டால், அர்த்தமே மாறி விடும். அவளின் வைராக்கியம் நீர்த்து போகும், வலி குறைந்து போகும்.

   கணவனை நம்பி, அவனுக்கு அடங்கி, அவனை ஏற்று தான் நடக்க வேண்டும். இவளும் வாய் செத்த பூச்சியாய் அடி பணிந்து போவாள்.

   சாலா தலையை பிடித்து கொண்டாள். தன் வீட்டில் போட்ட நகையை கூட கை பற்ற வில்லை. என் புருசனுக்கு மறைத்து என்னிடம் எதுவுமில்லை என்று அவள் எல்லாவற்றையும் தூக்கி கொடுக்க, அவன் எல்லாவற்றிலும் காரியவாதி. ஒரு நிமிடம் போதும் எல்லாவற்றையும் மாற்ற, நம் ஊரில் பல பெண்கள் போல, “எந்த ஆம்பிளை தான் ஒழுக்கமா இருக்கான். எல்லார் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தப்பு இருக்கும். ஊர், உலகத்தில நடக்காததா…” என்று தன்னை தான் சரிகட்டி, கணவனோடு ஒரு வாழ்வை துவங்கலாம்.

    ஆனால், இந்த மனம் வலிக்குதே. கண்டும் காணாமல் கடக்க முடியவில்லை. உடம்பின் ஏதோ ஒரு மூலையில் தன்மானம், சுய கௌரவம் ஒட்டி கொண்டு இருக்கிறதே… அதை தூக்கி போட முடியவில்லை.

   பூசிய உடல் வாகு, கொஞ்சம் மங்கு தட்டுபடும் முகம், வட்ட பொட்டு, வயது நாற்பதை நெருங்கி வரும் இவளுக்கு யார் வேலை கொடுப்பார். தூக்கமே இல்லை, தனக்கு இட பக்கம் மகனும், வல பக்கம் மகளும் ஒட்டி உறங்கி கொண்டு இருந்தார்கள். கண்களில் நீர் தளும்பியது. நீ ஓட தான் வேண்டும் சாலா, பின் வாங்காதே… மனம் குரல் கொடுக்க, முடிவு செய்து விட்டாள். நடுதரவயதில் நிர்க்கதியாக நிற்கும் நிலை வந்தால், பிள்ளைகள் என்ற ஓடம் தான் கரை சேர்க்கும்.

   மறுநாளே தன் நட்பு வட்டத்தை போனில் பிடித்தாள். திருமணம் தாண்டி, பிள்ளைகள் வளர ஆரம்பித்த பின் சாலா நட்பு வட்ட அரட்டை குறைந்து போனது… நீண்ட நாள் கழித்து சென்ற போதும் அரவணைத்து கொண்டார்கள். சொந்தங்கள் போல விலாவாரியாக துருவாமல், ஒரு இக்கட்டு உதவி செய்யுங்கள் என்ற வாசகம் போதுமானதாக இருந்தது.

    இதோ சூரத்தில் இருக்கும் அனிதா பல வண்ண நைட்டிகளை பண்டல் போட்டு அனுப்பி விட்டாள். பெங்களூரில் இருக்கும் காயுவிடம் பட்டு, வெள்ளி கம்பி ஜரிகை வைத்த பிளவுஸ் துணி வாங்கி கொடுத்தாள். இது மாதிரி தூர நட்புகள் உதவியுடன், அம்மா வீட்டில் கிடந்த ஒரு பழைய ஸ்கூட்டியை சரி செய்து நைட்டி, உள் பாவாடை, பிளவுஸ் பிட், சாதாரண பூனம் சேலை என்று அக்கம், பக்கம் இருக்கும் கிராமத்திற்கு தன் நடமாடும் ஸ்கூட்டி துணிக்கடையை நகர்த்தி கொண்டு போனாள்.

    தாலி கொடியுடன் எப்போதும் போட்டு இருக்கும் அரும்பு சங்கிலி, அவளின் ஆதாரமாகி போனது. பிரகாஷ் காத்திருந்தான், எப்படியும் மனைவி தன்னிடம் வருவாள் என்று… அவனின் செல்ல மகள், அந்த காரியத்தை கச்சிதமாக செய்வாள். ஒரு மாதத்துக்கு அவர்கள் வீட்டில் ஆகும் செலவு அப்படி… கண்டிப்பாக சாலாவால் சமாளிக்கவே முடியாது என்ற எண்ணம் தான் கணவனுக்கு…

    சொந்த ஊர் என்பது ஒரு பாதுகாப்பு, நம்பிக்கை. அது மாறாமல் இருந்தது சாலாக்கு… பழகிய ஊர், தெரிந்த இடம் என்பதால் சுதந்திரமா செயல்பட முடிந்தது. அத்தோடு பெற்றோரும் அருகிலே இருந்தார்கள்.

   சாலாவின் சுமையை பாதி அவர்களே குறைத்தார்கள். முக்கால் மணி நேரத்தில் ஊர் வந்து விடும் என்பதால் வார வாரம் வந்து விடுவார்கள். சாலாவை கல்யாணம் செய்து கொடுத்ததே தூரம் என்பதால், பொறந்த வீட்டு சீராடல் எல்லாம் அவளுக்கு கிடைத்தது இல்லை. இப்போது மூத்த மகளும் இல்லாமல் போக, இளைய மகளை காண அடிக்கடி வந்து விடுவார்கள். சும்மா எல்லாம் இல்லை, காய்கறி, பழம், அரிசி, கோதுமை, மளிகை பொருட்கள் கூட வந்து விடும்.

   “இந்த ஆத்தா குழம்பு மசால் உனக்கு பக்குவம் வராது உங்கம்மை கொடுத்து விட்டா, விடக்கோழி உனக்கு புடிக்கும் தானா, நம்ம கம்மா மீனு, இட்டலி பூ மாதிரி வருதாம் மாவு ஆட்டுனா, உனக்கு கொடுக்காமலா, இந்த பூ போட்ட சம்படம் உன்கிட்ட இல்லையாம் வாங்கி வந்தேன்…” என்று ஏதேனும் ஒன்று வார வாரம் வந்து விடும்.

   அண்ணன் குமரன் ஆஞ்சுவை அழைத்து கொண்டு வெளியில் சுற்றி வருவான். பிள்ளைகள் ஓரளவு சூழல் ஏற்க தொடங்கினார்கள். சாலாவும் தன் ஓட்டத்தில் நின்றாள். பாண்டியம்மாக்கு மகள் தனியாக தொழில் ஒன்றை எடுத்தது பிடிக்கவில்லை. மருமகன் லட்சத்தில் சம்பளம் வாங்க. இவள் ஓடாக ஏன் தேய வேண்டும். மகளும் வாய் திறக்க காணம்.

  “பிரச்சனையை தள்ளி வச்சு பாரு சாலா. அது ஒன்னுமே இல்லன்னு தோணும். நாம தான் பிரச்சனையை பெருசுன்னு நினைக்கிறோம். அது ஒன்னுமே இல்லாததா இருக்கும்…” தாய் பூடகமாக சொல்ல.

   “மனுச ஜென்மத்துக்கு பிறப்பு, இறப்பு எல்லாம் சாதாரணம். அது ஒன்னுமே இல்லாதது… அதே மாதிரி உன் மூத்த மக இறப்பையும் சாதாரணமா எடுத்துக்க முடியுமா உன்னால…” சட்டென்று சாலா கேட்டு விட்டாள்.

   முடியுமா… பெற்ற மகள் சாவை கண்ணார கண்ட பின் சாதாரணமா யார் கடக்க முடியும்.

   “ஆத்துல நிக்கிற ஆளுக்கு தான் ஆழம் தெரியும். கரையில நிக்கிறவங்க குதிச்சு வான்னு தான் சொல்லுவாங்க. என் கஷ்டத்தை தள்ளி நின்னு பாக்குற யாருக்கும் என் வலியை புரிஞ்சுக்க முடியாது. அப்படி இருக்க அத்தோட வீரியம் சாதாரணம்ன்னு எப்படி சொல்ற…” மகளின் வாதத்தில் மொழி புரியாமல் நின்றார் பாண்டியம்மாள்.

    சாலாவின் தாய் பக்கா கிராமத்து பெண்மணி. அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய விசயமல்ல… நிச்சயம் கோபப்படுவார்கள், அடிதடி, சண்டை எல்லாம் நடக்கும். ஆனால், சாலாவின் கணவன் பிரகாஷ். இது மாறாது. என்ன நடந்தாலும் புருசன் புருசன் தான். செல்லம் கொடுத்து சீராட்டி வளர்த்தாலும் பெண், பெண் தான். சாலாவின் தன்மானத்தை செல்லா காசாக்கி, அவள் கணவனிடமே சேர்த்து விடுவார்கள்.

  சாலாவின் அண்ணன் குமரனுக்கே இரு மனைவிகள் தான். மூத்தவள் தேவிக்கு குழந்தை இல்லாததால், அவள் தங்கை சித்ராவை மனம் முடித்து, மூன்று குழந்தைகள் உள்ளார்கள். பிரகாஷ் விசயம் வெளி வந்தாலும், பெரிதான மாறுபாடு ஒன்றும் இருக்காது.

     பிரகாஷ் மதுரைக்கு கிளம்பி கொண்டு இருந்தான். ஐந்து மாதங்களாகியும் மனைவியிடம் இருந்து ஒன்றையும் காணம். அவள் வீட்டு ஆட்கள் தான் தாங்குவார்கள். கை நழுவும் முன் பிடித்து விட வேண்டும். ஷாலினியிடம் சொல்லாமல் தான் செல்கிறான். தெரிந்தால் விட மாட்டாள்.

   கட்டுப்பாடு இல்லா சுதந்திரம் கசந்தது. ஷாலினி தன்னை டாமினெட் செய்வது போல உணர்ந்தான். மனைவியை மனம் நாடியது. பிள்ளைகள் முகம் பார்க்க ஏங்கினான். எந்த அழகு, கவர்ச்சி அவனை கட்டி இழுத்ததோ அதன் ஈடுபாடு குறைய தொடங்கியது.

    மனைவி கையால் கிடைக்கும் காலை காபிக்கும், பிள்ளைகளோடு உறங்கும் உறக்கத்தையும் மனம் தேட, ஃப்ளைட் ஏறி விட்டான்.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!