Skip to content
Post Views: 6,737
பொழுது விடிந்ததன் அடையாளமாய் குருவிகளின் சத்தமும், பின்கட்டில் இருக்கும் கறவைகளின் சத்தமும் இன்னும் பல ரம்யமான ஒலிகளும் கேட்டிட, அந்த காலைப்பொழுதின் இதம் தொலைத்து, அறையின் மூலையில் கால்களை சுருட்டிக்கொண்டு சத்தமின்றி கதறிக்கொண்டிருந்தாள் ஒருத்தி!
நட்டநடு கட்டிலில் குப்புறவிழுந்து அயர்ந்து உறங்கிகொண்டிருந்தவனுக்கு கீழே அவளது ஆடைகள் சிக்கிக்கொண்டிருந்தன. தன் உடலை கொஞ்சமாய் மறைத்திருந்த அந்த துண்டை தன்னோடு இறுக்கமாய் கட்டிக்கொண்டு அழுத பெண்ணவளுக்கு வாழும் எண்ணமே அற்றுப்போனது போன்ற மனநிலை தான்.
Advertisement
அவள் ரேகா!
சுரேஷின் இரண்டாம் மனைவியாக இங்கே வந்து மூன்று மாதங்கள் தான் முடிந்திருந்தது. அதற்குள் உயிரையே விடும் அளவுக்கு அவள் சிந்தனை போய்விட்டது.
Advertisement
தாயில்லாத பெண்ணாக தந்தையின் துணையோடு வளர்ந்த பெண்ணுக்கு திருமண ஆசைகள் எல்லாம் இயல்பு போல அதிகம் இருந்தது. முதலில் சுரேஷின் வரன் வந்தபோது அவள் தந்தை ஒப்புக்கொள்ளவே இல்லை. வசதியில் ஒன்றுமில்லாமல் போனாலும் பெண்ணை இரண்டாம் தாரமாய் அனுப்பும் அளவு தான் வக்கத்து போய்விடவில்லை என்றுவிட்டார்.
Advertisement
வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க நாட்கள் தான் ஓடியதே தவிர ஒன்றும் தகைந்து வரவில்லை. நல்ல வரன்கள் சீர்வரிசை எதிர்ப்பார்க்க, சுமாரான வரன்களில் அவருக்கு திருப்தி இல்லை. அத்தனையும் மீறி ஒன்றிரண்டு வந்தால், அதுவும் சுத்த ஜாதகம்!
Advertisement
பெண்ணுக்கு ‘வாய்’யே இல்லையென்றால் கூட திருமணம் ஆகும் போல, இந்த ‘செவ்வாய்’யை வைத்துக்கொண்டு பொருத்தமாய் ஒன்றுக்கூட தகைந்து வரவில்லை. மூன்று வருடங்கள் பொறுத்தும் யாரும் சரிவராமல் போக, மீண்டும் சுரேஷின் ஜாதகம் இவர்களிடம் வந்தது.
முன்பு போல தரகரிடம் முகத்தில் அடித்தாற்போல பேச முடியவில்லை. ‘யோசிக்கிறோம்’ என்று அனுப்பிவைத்தவர், சுரேஷ் குடும்பத்தை பற்றி விசாரித்தார். முதல் மனைவியின் தற்கொலை பற்றியும் கேட்டுப்பார்க்க, ‘அந்த பொண்ணுக்கு யாரோடவோ தொடர்பாம். அதை ஏன்னு கேட்டதுக்கு கையை அறுத்துக்கிச்சு… இந்த காலத்து புள்ளைங்க இருக்குங்களே!?’ என்று சலித்துக்கொண்டனர் அண்டை வீட்டினர்.
அப்போதும் மனம் கேட்காமல் ஆறு மாதங்கள் ஆறப்போட்டார். அதற்க்கிடையிலும் வேறு எந்த வரணும் சிக்காமல் போக, முழு மூச்சாய் சுரேஷை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார் அவர். மனம் சஞ்சலப்படும்படி ஒரு வார்த்தையும் யாரும் சொல்லிவிடவில்லை. அதோடு முதல் மனைவியை பற்றிய நல்ல பேசும் அங்கே இல்லை.
‘சரியான உம்மனாமூஞ்சி… பேசவே பேசாது. தம்பி சிரிச்சமேனியா அதை கூட்டிட்டு நடந்து போகும். அது என்னவோ மூஞ்ச இழுத்துக்கிட்டு திரியும். சரி, புது பொண்ணு, அழகா இருக்கோம்ன்னு அல்டாப்பு காட்டுதுன்னு நினைச்சா அப்புறம் தான் தெரிஞ்சுது சேதி! காலேஜுல எவனையோ விரும்பிருக்கா… அவன் கூடவே போறேன்னு நின்னவளை குடும்பமே புத்தி சொல்லி வீட்டோட வைக்க பாத்துருக்காங்க. ஆனா அவ!? வயித்துல புள்ளை வந்துமே அடங்கலையே! ஓடி போக பாத்துருக்கா, புடிச்சு வச்சு ரெண்டு பேச்சு பேசுனதுக்கு கையை அறுத்துக்கிட்டா!’
தெருவாசிகள் இத்தனை அழுத்தமாய் சொன்ன பிறகு அவர் யோசிக்கவில்லை. விஷயத்தை ரேகாவிடம் கொண்டு சென்றார். போட்டோவில் பார்த்ததுமே அவளுக்கு சுரேஷை பிடித்துப்போனது. மேற்கொண்டு காரியங்கள் விரைவாக நடந்தன. இரண்டாம் தாரமாய் தருகிறோமே என்ற ரேகா தந்தையின் சஞ்சலம் கூட சுரேஷும் அவன் குடும்பமும் நடந்துக்கொண்ட பாங்கில் மாறிப்போயின.
திருமணம் செய்து வைத்து அவள் சிரித்த முகமாய் இருப்பதை மனதார கண்டவர் தங்கள் ஊரோடு போய்விட்டார். இதோ இந்த மூன்று மாதங்களில் அவர் இருமுறை வந்து பார்த்துவிட்டு போனபோதும் அவர் மனதுக்கு நிறைவே!
அவர் நிறைவாய் போக வேண்டும் என்றே அவள் முகம் புன்னகையை கடன் வாங்கியிருக்கிறது என்று அவருக்கு எப்படி தெரியும்?!
இரவு ஒரு பொட்டு தூக்கம் இல்லை கண்ணில். தூக்கம் மட்டுமா கெட்டது!? எல்லாமே தான் கெட்டுப்போனது! மனதிலும் உடலிலும் இருக்கும் ரணத்துக்கு தூக்கம் தான் வருமா என்ன!?
அறைக்கதவு படபடவென தட்டும் சத்தம் கேட்க, உடல் மெலிதாக குலுங்கியது அவளுக்கு. தினமும் கேட்கும் சத்தம் தான் என்றாலும் இன்னமும் நடுக்கம் போனபாடில்லை. தட்டும் சத்தம் நின்று, “பொழுது விடிஞ்சுதுன்னு தினம் வந்து கதவை தட்டுனா தான் மகாராணி எழுந்துரிப்பீங்களா? வாடி சீக்கிரம்!” பெரும் அதட்டலோடு முடிந்துப்போனது.
அடுத்த பத்தாவது நிமிடம் கதவு திறந்து, இருபதாவது நிமிடத்தில் அந்த அதட்டல் ராணியின் கரத்தில் ஆவி பறக்கும் காஃபி இடம் பிடிக்க வேண்டும். இல்லையென்றால் அன்றைய பொழுதுக்கும் அவள் பேச்சை கேட்க சகிக்காது. எழுந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் சுவரை பிடித்துக்கொண்டு மெல்ல எழுந்து அறையோடு இருக்கும் குளியலறையில் புகுந்தாள் ரேகா. விரைவில் வந்தவள் கைக்கு கிடைத்த புடவை ஒன்றை எடுத்து சுற்றிக்கொள்ள, அயர்ந்து உறங்கும் ஆளை பார்க்கையில் அப்படியே அவன் கழுத்தை நெரித்து கொன்றால் தான் என்ன!? என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.
எண்ணத்தால் கூட அதை செய்ய முடியாதபடி வெளியே ஏதோ பாத்திரம் உருளும் சத்தம் கேட்க, அது அவளுக்கான எச்சரிக்கை ஒலி என்று புரிந்தவளும், நகர்த்த முடியாத கால்களை மெதுமெதுவாய் நகர்த்தி அங்கிருந்து சென்றாள்.
***
வானிலாவுக்கு அவள் இந்த உலகத்திலேயே இல்லை என்ற உணர்வு. செய்த காரியத்தின் கனம் உணர்ந்து படபடப்பாகவே இருந்தது. ஏதோ பொம்மை கல்யாணம் போல விளையாட்டாய் ஒரு கையெழுத்தில் பிணைந்தாலும் இதுவும் முறையான திருமணம் தானே!?
பதிவு திருமணதிற்க்கே ஒருத்தி இங்கே போட்டு சரியா? தவறா? என உலப்பிக்கொண்டிருக்க, மோதிரம் மாற்றிய கணத்தில் இருந்து அவளை மனைவி என வரித்துக்கொண்டவனுக்கு சொர்க்கத்தில் மிதக்கும் நிலை தான். அதை எதையும் அறியாதவள், யாருக்கும் சொல்லாமல் தான் எடுத்த முடிவு சரிதானா? என அன்றைய நாளில் நூறாவது முறையாக கேட்டுக்கொண்டிருந்தாள்.
இந்தியா போக விருப்பமில்லை என்றால் போகிறது. இந்த நாட்டிலேயே இருக்க வேண்டும் என்றாலும் வேறு வழியா இல்லை!? அவன் தான் தன்னை திருமணம் செய்து குடியிரிமை பெற்றுக்கொள் என்று சொன்னால், அதற்கு தானும் தலையாட்டுவது எந்த வகையில் சரி!?
அவனாவது தன் மனதை அவளிடம் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தான். அவள் சின்ன இசைவு கூட கொடுக்கவில்லையே! ஆனாலும் திருமணமே செய்துக்கொண்டாள். தன் மனதில் அவன் அழுத்தமாய் இருக்கப்போய் தானே அவனை இந்த அளவுக்கு அனுமதிக்கிறோம் என்றும் புரிந்தது.
நிலையான மனநிலைக்கு வர முடியாமல் இப்படியும் அப்படியுமாய் அவள் தடுமாறிக்கொண்டிருக்க, அவள் அறைக்கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்தான் கோவர்த்தன்.
இலகுவான வெண்ணிற பைஜாமாவில் கையில் கண்ணாடி கிளாஸ் ஒன்றை எடுத்துக்கொண்டு அவன் வாணிலா அருகே வர, ஏதோ அவன் அன்றுதான் தன் அறைக்குள் முதன்முறை வருவதை போல பதட்டமாய் எழுந்து நின்றாள் வாணிலா.
அருகே வந்தவன், “பால் குடி!” என்று கிளாசை நீட்ட, அவனையும் கிளாசையுமே மாற்றி மாற்றி பார்த்தவளுக்கு அதை வாங்க கை எழவே இல்லை.
“புடி!” அவன் மீண்டும் சொல்ல, “வேண்டாம்!” என்றவள் திரும்பிக்கொண்டாள். அவனிடம் அடக்கப்பட்ட முறுவல் ஒன்று கிளம்பியது. அவனும் அவளை சீண்ட கூடாது என்று தான் முயன்று தன்னை கட்டுப்படுத்தி பார்க்கிறான். ஆனாலும் அவள் காட்டும் பாவனைகளில் அவனுக்குள் குறும்பு கொப்பளித்தது.
“ஆக்சுவலி இன்னைக்கு நம்ம பர்ஸ்ட் நைட்… இல்ல?” அவன் சிரிக்காமல் கேட்க, வெடுக்கென திரும்பிய வாணிலா, “சிட்டிசன்ஷிப்’க்காக தான் இந்த கல்யாணம் ன்னு மறந்துடாதீங்க கோ! நீங்க எனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னதால தான் நான் இதுக்கு ஒத்துக்கிட்டேன்” என்றாள்.
“அஃகோர்ஸ்! நான் மறுக்கலையே! நாளைக்கே அந்த ப்ராசஸ் ஸ்டார்ட் பண்ணிடுவேன். ஆனா, அவ்ளோ ஈசியா உனக்கு குடியுரிமை கிடைச்சுடாது. வீட்டுக்கே கூட வந்து நம்ம நிஜமான புருஷன் பொண்டாட்டி தானான்னு செக் பண்ணுவாங்க. ஸோ, உனக்கு இஷ்டமோ இல்லையோ… நாளைல இருந்து நீ என் பொண்டாட்டியா மாறி தான் ஆகணும்!” என்றான் அசட்டையாய் தோள் குலுக்கி.
மெலிதாய் வாய் பிளந்து நின்றுவிட்டாள் பெண்.
“இதெல்லாம் நீங்க முன்ன சொல்லவே இல்லையே!?” அவள் கேட்க, “கல்யாணம் செஞ்சா அடுத்து எப்படி இருக்கனும்ன்னு தெரியாதா என்ன உனக்கு!?” என்றான் அவன்.
“ஹே? நம்ம என்னவோ ஆசைப்பட்டு கல்யாணம் செஞ்ச மாறி பேசிட்டு இருக்கீங்க?” அவள் திகைத்துக்கேட்க, “நான் ஆசைப்பட்டு தானே கட்டிருக்கேன்” என்றான் ஒற்றை கண் சிமிட்டலோடு.
அவன் பாவனையில் குப்பென வியர்த்தது பெண்ணுக்கு. நேருக்கு நேராக அவன் சொல்லிவிட சில நொடிகள் பேச்சின்றி நின்றவள், சட்டென தன்னை சுதாரித்துக்கொண்டு, “ஆனா, நான் அப்படி இல்லை! நான் சுயநலமா மட்டும் தான் உங்களை கல்யாணம் செஞ்சேன்” என்று சொல்ல, “ஐ டோன்ட் மைன்ட்!” என்றான் அத்தனை அசால்ட்டாய்.
அவளுக்கு பேச்சே மறந்தது.
‘என்ன இவன்? இப்படி பேசுகிறான்?’ என்று தோன்றினாலும் உள்ளுக்குள் அவளையறியாமல் சிவக்கத்தான் செய்தாள்.
அதுவரை கட்டிலில் அமர்ந்திருந்தவன், கைகளை தலைக்கு அடியில் கொடுத்து, அவளை பார்த்தபடியே மல்லாந்து படுத்திட, “இப்ப என்ன செய்ய சொல்றீங்க என்ன?!” என்றாள் கடுப்பு போல.
“அந்த பாலை குடிச்சுட்டு, விளக்கை அணைச்சுட்டு, என் பக்கத்துல வந்து படு!” இதை சொல்லி முடிப்பதற்குள் அவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு. வெகுவாக கடினப்பட்டு அடக்க, அவன் நினைத்தது போலவே புசுபுசுவென முறைத்து நின்றது பெண்.
“பக்கத்துல படுக்கணுமா? அதுக்கு வேற மாறி பொம்பளையை பாருங்க” கோவமாய் சொன்னவளை, கோவமே இல்லாமல் பார்த்தவன், “தேவைப்படுறப்போ பாத்துக்குறேன். இப்போ நீயே வந்து படு!” என்றான்.
“முடியாது” அவள் முறுக்கி நிற்க, “நான் பத்து எண்ணுறதுக்குள்ள, சொன்னதெல்லாம் செஞ்சுட்டு வந்து பக்கத்துல படுக்கணும். இல்லனா அடுத்த செகன்ட் உன்னை தூக்கி என் மேல போட்டுப்பேன். அப்பறம் விடிய விடிய….” இழுத்தவன், “விடவே மாட்டேன்!” என்று கண்ணடிக்க, தன்னை மறந்து வாய் பிளந்தாள் அவள்.
‘பேசுவது கோவர்த்தன் தானா? இல்லை ஏதாவது ஆன்டி ஹீரோ ஆவி புகுந்து விட்டதா?’ என்ற ஐயம் வேறு அவளுக்கு!!!
“ஒன்பது… எட்டு… ஏழு…” அவன் கண்ணை மூடி எண்ண ஆரம்பிக்க, ஆறிப்போன பாலை ஒரே மடக்கில் வாயில் ஊற்றிக்கொண்டு, கடுப்போடு லைட் சுவிட்சை அணைத்துவிட்டு பொத்தென மெத்தையில் விழுந்தாள்.
கண்ணை மூடியபடி, “குட்” என்றவனுக்கு ‘இதுக்கூட நல்லா இருக்கே’ என்று தான் தோன்றியது.
அவனுக்கு முதுகு காட்டி மறுபக்கம் படுத்திருந்தவளுக்கோ, கோபமுகமூடி கழண்டு விழுந்ததில் மெல்லிய புன்னகை கூட எட்டிப்பார்த்தது. ஒருவர் அருகில் மற்றவர் நிம்மதியுடன் கண்ணயர்ந்தனர்.
***
error: Content is protected !!