Skip to content
Post Views: 8,449
டைனிங் டேபிளில் உணவு பாத்திரங்களை கொண்டு வந்து அடுக்கினாள் ரேகா. காலையில் இருந்து அடுக்களையில் வெந்ததில் அயர்ந்துப்போய் இருந்தாள். இன்னும் ஒரு டம்ளர் டீ’க்கூட அவள் வயிற்றுக்குள் போயிருக்கவில்லை. அத்தனை வேலை செய்பவளுக்கு தன்னை கவனித்துக்கொள்வது பெரிய காரியம் இல்லை தான். ஆனாலும் அதை செய்ய அனுமதி வேண்டும். மாமியாரின் மேற்பார்வையில் தான் எல்லாமே நடக்கும். அவர் மனது வைத்தால் தான் அவள் வயிறுக்கு சிறுது ஈய முடியும்.
அவர் செய்ய சொன்ன பதார்த்தங்கள் அத்தனையும் செய்து முடித்து மேசையில் அடுக்கி முடிக்க, நீட்டாக அயர்ன் செய்த சட்டை பேன்ட்டில் வேகமாய் வந்து ஒரு சேரை இழுத்துப்போட்டு அமர்ந்தான் சுரேஷ்.
Advertisement
அவனுக்கு தட்டை வைத்து அருகே நின்று பரிமாற ஆரம்பித்தாள் ரேகா. அவர்கள் பார்வை படும் இடத்தில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார் ரேகாவின் மாமியார் திலகா. சுரேஷ் உண்டுமுடிக்கும் வரை ரேகா அவன் அருகில் தான் நிற்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ‘கொஞ்ச நேரம் உட்காரேன்’ என கெஞ்சும் காலை சமாளித்து கடமையே என நின்றிருந்தாள் ரேகா.
Advertisement
ஒரு பூரியை முடித்து அடுத்த பூரிக்கு அவன் சென்றபோது, தட்டில் குறைந்த உருளை மசாலாவை அவள் பரிமாற, நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்தான் சுரேஷ். தன்னிச்சையாய் அவன் முகத்தை கண்டவள் அடுத்த நொடியே பார்வையை பாத்திரங்களுக்கு மாற்றிக்கொண்டாள்.
Advertisement
அவன் பார்வை விடாமல் மொய்ப்பது தெரிந்தும் அவள் பார்க்கவே இல்லை.
Advertisement
“அழுக்கு புடவை, கழுவாத மூஞ்சின்னு காலைல, நைட்டு எல்லா நேரமும் மூஞ்ச தூக்கிவச்சுட்டே நில்லு. புதுசா கல்யாணம் ஆனவ மாறியா இருக்க? இப்படி இருந்தா மனுஷனுக்கு எங்கிருந்து டி மூடு வரும்!?” சத்தம் போடாமல் பல்லை கடித்தான் சுரேஷ்.
ரேகாவுக்கு கண்ணை கரித்தது. காலை எழுந்து குளித்துவிட்டு அடுக்களைக்குள் புகுந்தால், ஒற்றையாளாய் அவள் பார்க்கும் வேலைகளில் அலுத்துதான் போகிறாள். மனம் உற்சாகமாய் இருந்தால் கூட வெளியே வாட்டம் தெரியாமல் இருக்கும். இங்கே உடலை விட அவள் மனது தானே மொத்தமாய் புண்பட்டு கிடக்கிறது.
இப்படி இருக்கும்போதே கணவன் என்ற பெயரில் அவன் தன் உடம்புக்கு கொடுக்கும் ரணங்கள், தன் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தன்னை காமத்திற்கும் அவன் இச்சைக்கும் மட்டுமே தினமும் நாடும் தன்மை எல்லாம் அவளை மனதை விட்டுப்போக செய்திருந்தது. அது மட்டுமா?
அவன் அறையை சுத்தம் செய்தபோது கிடைத்த அந்த டைரி! அதில் எழுதியிருந்த சில விஷயங்கள்!!! அதை படித்ததில் இருந்து தனக்கும் அந்த நிலை வந்துவிடுமோ என்று அஞ்சியே ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைக்கிறாள் என்றால் மிகையல்ல.
அவள் அப்படியே நிற்க, இன்னும் எரிச்சல் ஆனவன், “உனக்கு… அவ எவ்வளவோ தேவலாம் டி! ஒரு வீட்டு வேலைக்கே இப்படி மூஞ்ச தூக்குற! வீட்டு வேலைக்கு மட்டும் தான் ஆகலன்னு பாத்தா, கட்டில் வேலைக்கு சுத்தம்… மரக்கட்டை கூட குடும்பம் நடத்த வேண்டிய தலைஎழுத்து… ச்சை!” அவன் எரிந்து விழ, அவள் ஒன்றுமே பேசவில்லை.
“என்னப்பா சாப்பிடாம என்னவோ பேசிட்டு இருக்க?” அங்கிருந்து திலகத்தின் குரல் வந்தது.
“ஒண்ணுமில்ல மா! பூரி எதுக்களிக்குது. அதான் தோசை கேட்டுட்டு இருக்கேன்” அவன் சொல்ல, “அடியே, கேக்குறான்னு தெரிஞ்சும் சிலையாட்டம் நிக்குற? போய் சட்டுன்னு சுட்டு கொண்டு வாடி” அதட்டல் வரவும் வேகமாய் கிச்சனுக்குள் சென்றாள் ரேகா.
சுரேஷ் இங்கே நிதானமாய் அடுத்த பூரியை உண்ண, காலிங் பெல் சத்தம்.
திலகம் எழுந்துக்கொள்ள போக, “நான் பாக்குறேன்மா” என்ற சுரேஷ், உண்ட கையோடு சென்று கதவை திறந்தான்.
வெளியே டிப்டாப்பாக ஒரு புதியவன் நிற்க, அவனுக்கு பின்னே சற்றே வயதில் மூத்த ஒரு ஆணும் நிற்க, குழப்பமாய் அவர்களை பார்த்த சுரேஷ், “யாரு?” என்றான்.
அந்த புதியவன் சிரித்த முகத்துடன், “மாப்பிள்ளை, நான் நகுலன். இது என் அப்பா” என்று சொல்ல, அவனது ‘மாப்பிள்ளை’ என்ற அழைப்பில் புருவம் சுருக்கினான் சுரேஷ்.
“ரேகா தங்கச்சி என்ன செய்றா? அண்ணன் வந்துருக்கான்னு சொல்லுங்க. பாத்தே பல வருஷம் ஆச்சு. அடையாளம் தெரியுதோ என்னவோ?” நகுலன் அவன் பாட்டிற்கு பேசிக்கொண்டே போக, ஒன்றும் புரியாமல் நின்றிருந்தான் சுரேஷ்.
உள்ளிருந்து, “யாருப்பா?” என்று திலகம் குரல் கொடுக்க, சுரேஷை முந்திக்கொண்டு, “அத்தே… நல்லா இருக்கீங்களா?” என கேட்டுக்கொண்டே உள்ளே சென்றான் நகுலன். அவனோடே அவன் தந்தையும் சென்றுவிட, அவர்களை தடுக்க முடியாமல் குழப்பத்துடனேயே பின் சென்றான் சுரேஷ்.
வெகு நாட்கள் பழகியவன் போல, “எப்படி இருக்கீங்க அத்தே! சித்தப்பா எங்களை பத்தி எல்லாம் சொல்லிருக்காரா?” என்று கேட்டுக்கொண்டே அவர் எதிரில் அமர, “வணக்கம் சம்பந்தியம்மா” என்று அமர்ந்தார் நகுலனின் தந்தை.
திலகம் சுரேஷை பார்க்க, அவனும் புரியாத பார்வையை கொடுக்க, நிலைமையை சமாளிக்க, “நல்லா இருக்கேங்க!” என்று சிரித்து வைத்தார் அவர்.
“ரேகா எங்கம்மா?” நகுலன் கேட்க, “ரேகாஆஆ…” சற்று உரக்க குரல் கொடுத்தார் திலகா.
நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தபடி வெளியே வந்தவள், புதியவர்களை கண்டுவிட்டு தயங்கி நிற்க, “எப்படி இருக்க தங்கச்சி? அண்ணனை தெரியுதா?” என்றான் நகுலன். பேந்த பேந்த விழித்தாள் பெண்.
“பாருங்க ப்பா… நம்மளை அடையாளம் கூட தெரியல புள்ளைக்கு” தன் தந்தையிடம் சொன்னவன், “சேதுபதி மாமா இருக்காங்கள்ள… அவங்களோட ஒன்னு விட்ட தங்கச்சி பசங்க… சின்ன வயசுல நீ நான் எல்லாம் ஒண்ணா தான் விளையாடுவோம். உன் கல்யாண சமயம் எங்களால வர முடில. அதுல சித்தப்பாக்கு ரொம்ப கோவம். நீ தான் உன் அப்பாக்கிட்ட எங்களுக்காக பேசணும் சொல்லிட்டேன்” என்று சொன்னவன், “அப்பா குடுங்க” என்றான்.
“கொண்டு வந்த பெரிய பையை அவர் திலகாவிடம் நீட்டினார்.
“வர அவசரத்துல பெருசா எதுவும் வாங்க முடில. அதனால என்ன? விருந்துக்கு வீட்டுக்கு வரப்போ தடபுடலா கவனிச்சுடுவோம்” அவனாகவே சொல்லிக்கொண்டான் நகுலன்.
ரேகாவுக்கு எப்படி யோசித்தும் இவர்களை நினைவு வரவில்லை. மறக்கும் அளவுக்கு இவர்களுக்கு அத்தனை சொந்தமும் கிடையாது, அதோடு அந்த சேதுபதி மாமா வேறு யாரென்று தெரியாமல் யோசித்துக்கொண்டே தான் நின்றிருந்தாள்.
“அப்படியே நின்னா எப்படி? இதை உள்ள வச்சுட்டு காபி கொண்டு வந்து குடு ரேகாம்மா” திலகா இதமாய் சொல்ல, “ஹான்?” என்றவள் உடனே உள்ளே சென்றாள். கை அதன் போக்கில் காபியை போட்டாலும் காதெல்லாம் வெளியே இருப்பவர்கள் பேசுவதில் தான் இருந்தது.
ஐந்தே நிமிடத்தில் காபியை கொண்டு வந்து அவள் நீட்ட, பேசிக்கொண்டே காபியை எடுத்தவன், அவள் கரத்தில் எதையோ திணித்தான். பதறி விலகப்பார்த்தவள், அவன் கண்களில் கண்ட கண்டிப்பில் பயந்து உள்ளே ஓடிவிட, “சரிங்க மாப்பிள்ளை… விருந்துக்கு என்னைக்கு வரீங்கன்னு எனக்கு மறக்காம ஃபோன் போட்டு சொல்லுங்க. முறையா வந்து அழைச்சுட்டு போறேன்” என்று எழுந்துக்கொண்டான்.
“வரேன் அத்தே!”
“வரேன் சம்மந்தி”
இருவரும் வாசல் வரை போக, உள்ளே படபடப்போடு அவன் சுருட்டிக்கொடுத்த காகிதத்தை பதட்டதோடு பார்த்தபடி நின்றிருந்தாள் ரேகா.
“அப்புறம் மாப்பிள்ளை… சொல்ல மறந்துட்டேன் பாருங்க. உங்களுக்கு எதாவது பிரச்சனைன்னா யோசிக்காம எனக்கு கூப்புடுங்க. நான் காரைக்குடில இன்ஸ்பெக்டரா இருக்கேன். இங்க சிவகங்கைலயும் ஆளுங்க இருக்காங்க” என்று சொல்ல,
“போலீஸா நீங்க?” என்ற சுரேஷ், “எனக்கு என்னங்க பிரச்சனை வர போகுது?” என்றான் அசால்ட்டாய்.
“வரலாம் மாப்பிள்ளை. இதுவரை இல்லன்னாலும் இனிமே கூட வரலாம் இல்லையா? வந்தா… கண்டிப்பா கூப்புடுங்க!” என்றவன், தலையசைப்போடு கிளம்பிவிட்டான்.
‘வந்தார்கள்; போனார்கள்’ கதையாக அவர்கள் வந்து சென்றிருக்க, ரேகாவிடம் விசாரிக்க நேரமின்றி வேலைக்கு கிளம்பி சென்றான் சுரேஷ்.
அவர்கள் வீட்டை விட்டு அரைமணி நேரம் கடந்த பின் வண்டியை சாலையோரம் நிறுத்தினான் நகுலன். அவன் பின்னே அமர்ந்திருந்த ‘அப்பா’ இறங்கி ஓரமாய் சென்று நின்றுக்கொண்டார். ஃபோனை எடுத்தவன், ‘கோ மச்சான்’ என்ற எண்ணிற்கு வாட்சப் கால் செய்தான்.
நன்கு உறங்கிக்கொண்டிருந்த கோவர்த்தன் அலைபேசி சத்தத்தில் சட்டென எழுந்து அதை சைலென்ட் செய்ய, அருகே இருந்தவள் உறக்கத்திலேயே திரும்பி படுத்தாள். பால்கனிக்கு போனவன், அழைப்பை இயக்கி, “அயித்தான்” என்று ஆரம்பிக்க, “எழுப்பிட்டேனா?” என்றான் நகுலன்.
“இல்ல அயித்தான், விடிஞ்சு போச்சு! சொல்லுங்க, அந்த புள்ளையை பாத்தீங்களா?” என்று கேட்டதும், “ம்ம்… கான்ஸ்டபில் ஒருத்தரையும் கூட அழைச்சுட்டு போனேன். அண்ணன்னு சொல்லி தான் பேசுனேன். சந்தேகம் எதுவும் வந்த மாறி தெரியல. அந்த புள்ளை கைல பேப்பரை திணிச்சுட்டேன். உண்மையிலேயே அதுக்கு பிரச்சனைன்னா அது நமக்கு கூப்புடும். நீ கலங்காத” என்றான் நகுலன், கோவர்த்தனின் தங்கை கணவன்.
“உங்களுக்கு எதாவது தோணுச்சா? அந்த சூழ்நிலை பார்த்து” கோவர்த்தன் கேட்க, “தப்பா தெரியல. அதே நேரம் சரியாவும் படல… பாப்போம் அந்த பொண்ணு கூப்புடுதான்னு” என்ற நகுலனுக்கும் அந்த பெண்ணின் தோற்றம் அவள் நன்றாக இருப்பதாக சொல்லவில்லை. ஒரே நாளில் எந்த முடிவுக்கு வர முடியாதே என்று நல்லவிதமாகவும் நினைத்துக்கொண்டான்.
யாரென்று தெரியாத ஒரு பெண்ணுக்காக இங்கே இரு ஆண்கள் மெனக்கெட, அங்கே நகுலன் கொடுத்த பேப்பரை பிரித்துக்கூட பார்க்காமல் நின்றிருந்தாள் ரேகா.
error: Content is protected !!