Skip to content
Post Views: 6,781
வேளை 4(1)
‘ஒரு வருடத்திற்கு முன்’
Advertisement
இரவு எட்டு மணி. சென்னை மெரீனா கடற்கரையில் மக்கள் வெள்ளம். அத்தனை மக்கள் வெள்ளத்திலும் தனியே வந்து உட்கார்ந்திருந்தான் லாலா லஜபதி ராய். அதிக ஆளவரமற்ற பகுதியில் கடலுக்கு சில அடி தூரத்தில் அதன் அலை தீண்டாவண்ணம் அதனை பார்த்தபடி இருந்தான். கடல் மிகப்பெரியது. கரையை விட கடல் எப்போதும் பெரியதாக இருக்கிறது என்று தோன்றியது. கடல் நீண்டு கொண்டு போவது போல் அவன் வாழ்க்கையில் கவலைகளும் நீள்வதாக ஒரு எண்ணம்.
துணை தேடியது அவன் மனது. ஆனால் யாரிடமும் பேசவில்லை. தோல்விக்குத் துணை கிட்டுவது கடினமல்லவா? அதே நேரம் அவன் தோல்வி அவனோடு என்ற எண்ணம். இதோ இருபத்தாறு வயது முடிந்துவிட்டது. இன்னும் நிலையான ஒரு வேலையில்லை. அவனோடு படித்தவர்களில் எல்லாரும் நிலையான வேலை, பெண்கள் எல்லாம் திருமணம் குழந்தை என்று அடுத்தக் கட்டத்தில் இருக்க, அவன் மட்டுமே சின்னதாய் ஒரு சதுரத்தில் சிக்கிய உணர்வு.
Advertisement
Advertisement
கைப்பிடிக்க ஒரு கரம் வேண்டிய மனது அதே நேரம் யாருமற்ற தனிமையைத் தேடியது.
“என்ன தம்பி பண்ற?”
Advertisement
“எங்க வேலைக்குப் போற? என்ன சம்பளம்?”
“இன்னும் பரீட்சைக்குப் படிக்கிறியா?”
“கவர்மெண்ட் வேலையெல்லாம் இந்த காலத்துல கஷ்டம்”
“ஒஹ், சும்மாதான் இருக்கியா?” என்று வகை வகையான கேள்விகள். வினாத்தாள்கள் கேள்விகள் அளவுக்கு உறவினர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்களிடமிருந்து வரும் இந்த கேள்விகளும், பதில் சொன்ன பின் கேளாமல் அவர்கள் தரும் அறிவுரைகளும் பாகற்காயாக அவனுக்குக் கசந்தது.
கல்லூரி காலத்தில் லாலாவை சுற்றி நண்பர்களுண்டு. மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் இயல்பாக, எதார்த்தமாக அன்பாக பழகுபவன். கல்லூரி முடித்து போட்டித்தேர்வுகளுக்குப் படிக்க ஊரில் இருந்தபடியே இணையதள வகுப்புகளில் சேர்ந்தான். இவனோடு படித்தவர்கள் எல்லாம் வெவ்வேறு வழிகளில் சென்றுவிட்டனர், மேற்படிப்பு, படித்த மெக்கானிக்கல் படிப்புக்கேற்ற வேலை, சிலர் ஐடி துறை, வெளி நாடுகளில் மேற்படிப்பு என்று போய்விட்டனர். இவன் வகுப்பில் இவனும் சக்தியும் இன்னும் மூன்று பேர் மட்டுமே அரசுத்தேர்வுகளுக்குத் தயாராகினர். அதில் சக்தியும் இன்னொரு நண்பனும் தேர்ச்சிப்பெற்று வேலையிருக்கிறார்கள். மற்றவர்கள் பற்றித் தெரியவில்லை. அவன் அப்பா, சித்தப்பா எல்லாம் அரசு வேலை, அதனாலயே அவனுக்கு அந்த துறையில் கால் பதிக்க ஆரம்பத்தில் பயமில்லை.
பள்ளி, கல்லூரி கால நண்பர்கள் யாரோடும் இப்போது தொடர்பில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, குறைத்து இப்போது சக்தி தவிர வேறு யாரோடும் பேச்சில்லை. அப்பாவிடம் சண்டை போட்டு சென்னை வந்தபின் யாரோடும் பேசுவதில்லை, சென்னையில் இருக்கிறேன் என்றும் சொன்னதில்லை. முழு மூச்சாகப் படித்தாலும் சொற்ப மதிப்பெண்களில் போய்விடுகிறது.
இந்த முறை எழுதிய வங்கித் தேர்வில் செக்ஷனல் கட் ஆப்-பில் அவன் தேர்ச்சிப்பெறவில்லை. கண்டிப்பாகக் கிடைத்துவிடும் என்று நினைத்த தேர்வு, அந்த தோல்வியை ஏற்க முடியாது, அதனை எதிர்கொள்ள முடியாது இதோ கடலை வெறித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். மதியம் தேர்வு முடிவுகள் வெளிவந்திருக்க, காலை உண்டதோடு சரி.
தாத்தா அழைத்துக் கேட்டு ஆறுதலாகப் பேசியிருந்தாலும், அப்பா அவனை திட்டியிருந்தார். அவரின் மீதான வருத்தம் என்பதை விட இப்படியே இருந்துவிடுவேனோ என்ற பயம் அவனை மிகுதியாக ஆட்டியது. இதையெல்லாம் யாரிடம் பகிர என்று கூட தெரியவில்லை. சக்தி வேலையில் பிஸியாக இருக்க, அவனிடம் பேசக் கூட இப்போதெல்லாம் சிற்சில தயக்கங்கள் தலைத்தூக்கின.
லாலா யோசனையில் இருக்க, “ஹலோ! எப்படி இருக்கீங்க?” என்ற பெண்ணின் குரல் அவனை கலைத்தது.
“ஹான்..” என்று திரும்பிய லாலாவின் அருகே ஒரு பெண் நின்றாள்.
சிந்தனையில் இருந்தவனுக்குச் சட்டென்று நின்றவளை அடையாளம் தெரியவில்லை.
“நான் உதய நிலா, உங்களுக்கு ஞாபகமில்ல போல. பரவாயில்லை, உங்களைப் பார்க்கவும் ஜஸ்ட் ஹாய் சொல்லலாம் நினைச்சேன்” என்றிட அவனுக்குத் தெரிந்தது.
“சாரிங்க, எனக்கு டக்குனு ஞாபகமில்லை. இப்போ ஞாபகமிருக்கு 32 பெர்த்” என்று சொல்ல உதய நிலாவின் விழிகளில் ஆச்சரியம்.
“என்னங்க டிரெய்ன் டிக்கெட் மாத்தி புக் பண்ணிட்டு பெர்த் நம்பர் இப்போ கூட கரெக்டா சொல்றீங்க?” என்றவள் இயல்பாக அவன் பக்கத்தில் கொஞ்சம் இடம் விட்டு உட்கார்ந்தாள்.
“அது தட்கல் புக்கி’ங் பண்ணும்போது டிக்கெட் கிடைக்கணும்னு டென்சன்ல பண்ணிட்டேன்ங்க. சீட் நம்பர் கம்யூனல் அவார்ட் இயர்னு ஞாபகமிருந்தது.” என்று சொல்ல
“என்ன அவார்ட்?” உதயா புரியாமல் பார்க்க
“அதொன்னுமில்ல, எனக்கு ஞாபகமிருக்கணும்னு அப்படி எதாவது ஞாபகம் வச்சிப்பேன். இந்தியாவில கம்யூனல் அவார்ட் 1932 இயர்ல கொண்டு வந்தாங்க, ஹிஸ்டரி சப்ஜெக்ட்’ங்க, நீங்க பரவாயில்லை நம்ம பார்த்து ரொம்ப மாசமிருக்கும் ஆனாலும் என்னை மறக்காம இருக்கீங்க?” என்ற லாலா “எப்படி மறக்கும் அப்படி மடத்தனமா டிக்கெட் புக் பண்ணினவனை?” என்று அவனை திட்டிக்கொண்டான்.
(communal award- மைனாரிட்டி மக்களுக்காகக் கொண்டு வந்த தனி தேர்தல் முறை)
உதயா அவனை குறை சொல்லவில்லை. அப்படி பார்க்கக் கூட இல்லை.
“அட விடுங்க! டேட் மாத்தி புக் பண்றது, இப்படி பண்றதெல்லாம் டிரெயின் புக்கிங்ஸ்ல சகஜம். அப்படியொன்னும் பெரிய குற்றம் பண்ணல நீங்க, இன்பெக்ட் அதுக்கு அப்புறம் நானெல்லாம் இன்னும் ஜாக்கிரதையா புக் பண்றேன். நம்ம மீட் பண்ணி ஒன்பது மாசம் ஆகுது, சரி சொல்லுங்க அப்போ எக்ஸாம் எழுதப்போற டென்சன்’ல இருந்தீங்களே, எப்படி இருந்துச்சு?”
“போச்சுங்க” என்றான் லாலா.
“அடுத்த எக்ஸாம் கிடைச்சிடும்” புன்னகையுடன் சொல்ல
“ஒன்பது மாசம்னு எப்படிங்க சொல்றீங்க?” லாலா சந்தேகமாகக் கேட்க
“நான் என் ப்ரண்ட் கல்யாணத்துக்காக ஊருக்கு வந்தேன்ங்க, எனக்கு சென்னைதான் நேட்டிவ். ஸோ அவ கல்யாண டேட் தெரிஞ்சதால சொன்னேன்.”
லாலா தலையாட்டியவன் அமைதியாக இருந்தான்.
சில நிமிடங்கள் அமைதியாக இருந்த உதயா, “தனியா வந்தீங்களா? இல்லை ப்ரண்ட்ஸோடவா? நான் டிஸ்டர்ப் பண்றேனா?” என்று கேட்க
“அதெல்லாமில்ல. நீங்க ஞாபகம் வச்சிக் கேட்டதே சந்தோஷம். நான் தனியாதான் வந்தேன்” என்று சொல்ல
“நானும்” என்றாள் உதயா.
“ஓஹ், என்ன பண்றீங்க?” என்று கேட்க
“நான் ****’ல டீம் லீடா இருக்கேன். இன்னிக்கு வர்க் முடிஞ்சு என்னமோ போல இருந்துச்சு, ஹாஸ்டல் போய் தனியாதான் இருக்கணும். அதான் பீச் வந்தேன்” என்றதும்
“உங்க வீடு..?” என்று லாலா நிறுத்த
“அம்மா ஹைதரபாத்’ல பேபி கேர் டேக்கரா வேலை பண்றாங்க, ஸோ நான் இங்க தனியா இருக்கிறதுக்கு ஹாஸ்டல்ல இருக்கேன். அப்பா சின்ன வயசுல இறந்துட்டாங்க” என்று சுருக்கமாக சொன்னாள்.
லாலா அவள் வேலை பற்றி சொல்லவும் அவளின் சம்பளத்தை, அவள் வேலை செய்யும் நிறுவனத்தையெல்லாம் யோசித்து ஒரு பிரமிப்பிலும், இந்த பொண்ணுக்கு என்ன கவலை என்ற எண்ணம் வந்தது. அடுத்து அவள் அம்மா பற்றி சொல்ல, கஷ்டப்பட்டு பெண்ணைப் படிக்க வைத்திருக்கிறார். இந்த பெண்ணால் அவள் அம்மாவிற்கு எத்தனை பெருமை என்று எண்ணம் அப்படியே மாறியது.
“சூப்பருங்க நீங்க, எவ்வளவு பெரிய கம்பெனில வேலை பார்க்குறீங்க.” என்று பாராட்டிட, அவள் லேசாக புன்னகைத்தாள்.
அவளுக்கு அப்பா இல்லை, அம்மாவும் உடனில்லை என்பதெல்லாம் அவள் மீது பரிவை உண்டாக்கியது.
“வீட்டை விட்டு இருக்கிறது கஷ்டம்தான் இல்ல?” என்று லாலா கேட்க
“வீட்ட விட்டு இருக்கிறதுன்றதை விட அம்மா விட்டு இருக்கிறது எனக்குக் கஷ்டம், பட் பழகிடுச்சு” என்றாள் உதயா சாதாரண குரலில்.
லாலா சும்மா இருக்காமல், “ஏங்க எப்படியும் உங்களுக்கு நல்ல சம்பளம் வருமே, இப்பவும் ஏன் உங்கம்மாவை உங்க கூட வச்சிக்காம வேலைக்கு அனுப்புறீங்க?” என்று பட்டென்று கேட்டவன் பின்
“அய்யோ சாரிங்க! உங்க பெர்சனல் விஷயம். நீங்க அம்மாவை மிஸ் பண்றேன் சொல்லவும் வாயை விட்டுட்டேன்” என்று வருந்தினான்.
“யாருக்கா இருந்தாலும் இந்த கேள்வி வரும், இட்ஸ் ஓகே. அம்மா ரொம்ப வருசமா தாமு அங்கிள் வீட்ல வேலை செய்றாங்க. இப்போ அவங்க சின்ன பையன் வருண்’ணா ஹைதரபாத்ல இருக்காங்க, அவங்களுக்குப் பாப்பா பொறந்திருக்கு. அதாவது வருண்’ணா சின்ன வயசுல இருந்தே அம்மாவைத் தெரியும். அதனால அவங்க குழந்தையும் அம்மாதான் பார்க்கணும்னு அண்ணா அழைச்சிட்டுப் போய்ட்டாங்க, தாமு அங்கிள் எங்களுக்கு நிறைய பண்ணியிருக்கார். நான் மார்க் கொஞ்சம் கம்மி, காசே இல்லாம ஸ்பான்ஸர்ஷிப்’ல அவங்க காலேஜ்ல’தான் நான் படிச்சேன்” என்றதும்
“எந்த காலேஜ்?” என்று கேட்க, அவன் படித்த கல்லூரி. இவன் அவளுக்கு ஒருவருட சீனியர். அவனும் அவளும் வேறு வேறு பிரிவில் பயின்றிருந்ததைக் கண்டுகொண்டனர். சிறிது நேரம் கல்லூரியில் அவர்களுக்குத் தெரிந்தவர்களைப் பற்றி பேசியவன்
“எந்த ஸ்கூல் நிலா நீ?”
“எங்க ஏரியா கவர்மெண்ட் ஸ்கூல்” என்று சொல்ல
“பரவாயில்லையே நீ, கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சு இவ்வளவு மார்க். ம்ம்” என்றான் மெச்சுதலாக.
“நீங்க என்ன பண்றீங்க?” என்று லாலாவுக்குப் பிடிக்காத கேள்வியைக் கேட்டாள் உதயா.
“இப்போதைக்கு விஐபி’ங்க நான்” என்றதும் உதயா நல்லெண்ணத்தில்
“என் கம்பெனில வேகன்சி இருந்தா சொல்லவா?” என்று கேட்டாள்.
“இல்ல, நான் கவர்மெண்ட் எக்ஸாம்ஸுக்குப் பிரிபேர் பண்றேன். கூடவே ஒரு அகாடெமியில ஹிஸ்டரி, கரெண்ட் அபைர்ஸ் க்ளாஸ் எடுக்கிறேன்.”
“அட டீச்சரா நீங்க? அப்புறம் ஏன் விஐபி சொல்றீங்க?”
“அதெல்லாம் நான் பார்ட் டைமா தான் பண்றேன், புல் டைம் பண்ணினாலும் அதெல்லாம் யாருங்க வேலையா பார்க்கிறா?” வருத்தமாக லாலாவின் குரல் ஒலிக்க
“நம்ம நேரத்தையும் உழைப்பையும் போட்டு ஒரு மணி நேரம் செஞ்சாலும் வேலைதானேங்க. எல்லாருக்கும் சொல்லிக்கொடுக்க வராதே, நீங்க நல்லா சொல்லிக்கொடுக்கிறதாலதானே உங்களை வேலைக்கு வச்சிருக்காங்க. அதுவும் பெரிய பசங்களுக்கு எடுக்கிறீங்க, நல்லா எடுக்கலன்னா உடனே சொல்ல மாட்டாங்களா?” உதயா வேகமாகக் கேட்டாள்.
அவளுக்கு லாலா அப்படி தன்னை வருத்திப் பேசுவது பிடிக்கவில்லை. யார் அப்படி பேசினாலும் உதயாவுக்குப் பிடிக்காது. மனிதர்களை அவர்களுக்காகவே மதிப்பவள்.
“பரவாயில்ல யாராச்சும் இப்படி பேசிறதைக் கேட்கவும் நல்லாதான் இருக்கு. அக்சுவலி இன்னிக்கு ஒரு எக்ஸாம் ஊத்திக்கிச்சு, அந்த சோகத்துலதான் இங்க வந்தேன். எல்லாம் நல்லா பண்ணினேன், கட் ஆப்ல செக்ஷன்ல கட் ஆப்னு ஒன்னு இருக்கு, அதுல போச்சு. செம மூட் ஆப்..” என்றான் லாலா.
தெரிந்தவர்களிடம் துயரங்களைப் பகிர்வதை விட தெரியாதவர்களிடம் பகிர்வது சில நேரம் எளிதாக இருக்கிறது. லாலா அந்த நேரம் அப்படித்தான் தன் நெருங்கிய நண்பனிடம் கூட அதுவரை பேசாதவன் அப்போது பார்த்த நிலாவிடம் அவன் தேர்வில் தோற்றதைப் பகிர்ந்தான்.
“கண்டிப்பா நீங்க ஒரு நாள் பாஸ் ஆகிடுவீங்க. ஆல் தி பெஸ்ட்” என்றவள்
“நான் நைட் வெளியே சாப்பிட போறேன். என்னோட வாங்களேன், என் டீரிட் இன்னிக்கு” என்று புன்னகையோடு நட்பு கரம் நீட்டினாள்.
“அட போங்க நான் சாதிச்சதுக்குச் சாப்பாடு தான் இப்போ குறை” என்று லாலா குறைபட
“சாதிச்சா மட்டும் சாப்பிடணும்னா டெய்லி உலகத்துல எல்லாரும் பட்டினிதான் கிடக்கணும்” என்று சிரித்த உதயா
“ப்ளீஸ் வாங்க சீனியர்” என்று அழைத்தாள்.
“சீனியரா? எப்போ பொறந்த நீ?” என்று கேட்டவன்
“நமக்கெல்லாம் அப்போ ஒரே வயசுதான், நான் உனக்கு முன்னாடி ஸ்கூல் சேர்ந்துருப்பேன். பெயர் சொல்லியே கூப்பிடு உதய நிலா” என்றான்.
“அதுக்குப் பெயரை சொல்லணுமே” என்றதும் லாலாவுக்கு அன்றைய தினத்தில் முதல் புன்னகை உதயாவின் முன், உதயாவினால் உதயமானது.
“என் பெயர் லாலா லஜபதி ராய்” என்றான்.
“அப்போ நீங்க தமிழ் இல்லையா?” என்ற உதயாவின் விழிகளில் ஆச்சரியம்.
“நான் எப்போ தமிழ் இல்லைன்னு சொன்னேன். இல்லை என் தமிழ் அப்படி தெரியுதா? காவிரிகரை காரன் மேடம்” என்றான் பெருமையாக.
“இல்லை உங்க பெயரைக் கேட்டதும்..”
“என்னைப் பார்த்து தமிழனா தெரியலன்னா கூட தெரியல… எந்த ஆங்கிள ஆச்சும் நான் பஞ்சாபி மாதிரி தெரியறனா?” என்று சிரித்தவன் சுதந்திரா விலாசத்துக் கதையைச் சொன்னான்.
“என் கொள்ளுத்தாத்தா சுதந்திர போராட்ட வீரர். என் தாத்தா அப்போ கொஞ்சம் சின்னப்பையன், அவரோட பெயர் கூட திலகர். எங்க கொள்ளுத்தாத்தா உயிரோட இருந்தவரைக்கும் தியாகி பென்ஷன் கூட வாங்கல…கேட்டா தேசத்துக்காகப் போராடுறது இந்தியனோட கடமைன்னுட்டார். எங்க வீட்ல எல்லாருக்கும் இப்படித்தான் பெயர், எங்கப்பா பெயர் வாஞ்சி நாதன், சித்தப்பா சித்ரஞ்சன், என் தங்கச்சி சரோஜினி, தம்பி பெயர் பகத் சிங்” என்றான்.
“நல்லாயிருக்குங்க இப்படியெல்லாம் கேள்விப்பட்டதில்லை”
“எங்க ஊர்ப்பக்கம் இதெல்லாம் சகஜம், நேருஜி, நேதாஜி, லெனின், ஸ்டாலின், மார்க்ஸ்’னு பெயர் வச்சிருப்பாங்க. எல்லாம் அவங்க தாத்தா, அப்பா அந்த கொள்கைப் பிடிச்சு வச்சிருப்பாங்க, இவனுங்க தற்குறியாட்டம் சுத்துவானுங்க. இவ்வளவு ஏன் என்னோட ஒரு அக்கா வீட்டுக்கார் பேர் கேஸ்ட்ரோ, க்யூபாவோட கம்ப்யூனிஸ தலைவர் பெயர். ரஷ்யா, மாஸ்கோன்னு கூட எங்க ஊர்ல பெயர் இருக்கு.”
லாலா மிகவும் இயல்பாகப் பேசினான். அன்னிய ஆணிடம் பேசுகிறோம் என்ற உணர்வுப் போய் நட்பின் அலைவரிசையில் அவர்களின் பேச்சுப் பயணித்தது.
“அப்போ நான் ஒரு ஹிஸ்டாரிக்கல் பேமிலி சேர்ந்த ஆளோட பேசிட்டு இருக்கேன், என்னோட சாப்பிட வரலாமே லாலா” என்று உதயா மீண்டும் அழைக்க லாலாவும் அவள் அத்தனை முறை அழைக்க, மறுக்காது வந்தான்.
“வெஜ் ஆர் நான் வெஜ்?” என்று உதயா கேட்க
“எதாவது சிம்பிளா வெஜ் போதும்” என்றான்.
இருவரும் பேருந்தில் ஏறி மவுண்ட் ரோட் ஹிக்கின்பாதம்ஸ் பக்கமிருந்து ஒரு சிறிய உணவகத்தை அடைந்தனர்.
“அட இவனுக்கு இங்கயும் ப்ராஞ்ச் இருக்கா? அண்ணா நகர்ல கூட இருக்கு, என் அகாடெமி பக்கம். இவன் புதினா சட்னி செமயா இருக்கும். ஆனா கூட்டமா இருக்கும்னு நான் போறதில்ல” லாலா சொல்ல
“இங்க புதினா சட்னி இல்ல போலயே..” என்றாள்.
“பரவாயில்லை. என்னை நம்பி இவன் சாம்பார் வாளியை அப்படியே வச்சிருக்கான் பாரு” என்று சிரித்தவன் சாம்பாரைத்தான் அதிகம் விரும்பி சுவைத்தான்.
“இன்னிக்கு வீட்டுக்குப் பேசினதோட சரி, என் ப்ரண்ட் சக்தி என் தங்கச்சி ஹஸ்பண்ட் கூட.. கொஞ்சம் மாசம் முன்னாடிதான் அவங்க கல்யாணம் நடந்துச்சு. நானும் அவனும் செம க்ளோஸ். அவன் கிட்ட பேசணும் போல இருந்துச்சு, ஆனாலும் அவன் வேலையில பிஸீயா இருப்பான்னு டிஸ்டர்ப் பண்ணல.. சோகத்துல சோத்தையும் மறந்துட்டேன் இருந்தேன். நீ என்னையெல்லாம் ஞாபகம் வச்சிட்டு பேசுவனு நான் நினைக்கல உதயா. பட் நீ பேசினது, உன்னை இன்னிக்குப் பார்த்தது எல்லாம் எனக்குச் சந்தோஷம். தேங்க்ஸ்” என்றான் மனதார.
“இதுல என்ன இருக்கு?”
“என்ன இருக்கா? நான் ஒரு மாதிரி நம்பிக்கையே இல்லாம இருந்தேன், நீ ஒன்னும் பண்ணலதான். ஆனா ப்ச் எனக்குப் புரிய வைக்கத் தெரியல விடு” என்றவன்
“ஆனாலும் ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ, ஒரு முறை டிரெய்ன்ல பார்த்தவன் கிட்ட எல்லாம் இப்படி பேசி தோசை சாப்பிடுற அளவு வரதெல்லாம் நல்லதில்ல. உன் அம்மா வேற ஊர்ல இருக்காங்க. நீ ஜாக்கிரதையா இருக்கணும்” என்று அறிவுரை சொல்ல
“என்னைப் பார்த்தா உங்களுக்கு அவ்வளவு முட்டாளா தெரியுதா? எனக்கு மனுஷங்களைத் தெரியும் லாலா. இப்போ இல்ல… எட்டு வயசுலயே..” என்று கசந்த குரலில் சொன்ன உதயா பின் முகத்தில் புன்னகையோடு
“எனக்கு ஒரே பாலிசிதான், முதல்ல எல்லாரையும் நம்பணும். அவங்க ஏமாத்துற வரைக்கும். ஏமாத்திட்டா அடுத்து நம்பவே கூடாது! யாரையும் நம்பாம எல்லாம் வாழவே முடியாது லாலா.. யார் மேலவாச்சும் வைக்கிற நம்பிக்கைதான் வாழ வைக்கும்” என்ற உதயாவுக்கே இவனிடம் ஏன் இவ்வளவு அதிகம் பேசுகிறோம் என்ற எண்ணம்.
எங்கோ அவனின் தோல்வி அவளைப் பாதித்தது. நண்பனுக்கு ஜாமின் கையெழுத்துப் போட்டு, அவன் ஏமாத்திச் சென்றதால் கடன்காரர்கள் கழுத்தை நெறிக்க, வாழ்வினை எதிர்கொள்ள முடியாது, துவண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தையின் ஞாபகம். கடலை வெறித்தபடி, எதையோ தொலைத்த மாதிரியிருந்த லாலாவின் முகம் பார்த்தவளுக்கு அவனை நினைவு வர, சட்டென்று பேசிவிட்டாள்.
error: Content is protected !!