Skip to content
Post Views: 3,204
அத்தியாயம் 18
ரசிகா கீழே வரும் போது, அவர்கள் பேசி முடித்து இருந்தனர். ஆதியிடம் ரசிகாவை பற்றி சொல்லி அகரனின் மாமா பேச, ஆதி அவரிடம் ஒரே வார்த்தையில் முடித்து விட்டான்.
“ரசி சொன்ன மறுநிமிடம் எங்க கல்யாணம் நடக்கும்” என்று உறுதியாக அவன் சொன்னான்.
ரொம்ப சந்தோசம்பா. பிள்ளை அவ வீட்ல ரொம்ப கஷ்டப்பட்டுச்சி. இந்த மாதிரி நல்ல வாழ்க்கை அமைய தான் இத்தனை துன்பங்களையும் கடந்து வந்திருக்கா போல என்று அவர் சொல்ல, நாங்க பார்த்துக்கிறோம். நீங்க கவலைப்படாதீங்க என்றார் சவிதா.
Advertisement
இல்லம்மா, எப்படி அந்த பய உடன் பிறந்தவளுக்கு இப்படியொரு துரோகத்தை பண்ணாணோ தெரியலை. அதான் கஷ்டமா இருந்தது என்றார் அவர்.
ம்ம்..என்று ஆதியும் அமைதியானான். அப்பொழுது தான் ரசிகா கீழே வந்தாள்.
விபுதனும் பிரணிதாவும் எல்லார் முன்னும் வெளியே சென்றனர். மெல்லினாவும் பொறுக்க முடியாமல் பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது நழுவினாள்.
Advertisement
என்ன பேசணும் பிரணி? விபுதன் கேட்க, விபு என்று கண்ணீருடன் அவனை அணைத்தாள் பிரணிதா.
Advertisement
ஓய், என்ன? அன்று தான் ஓவரா பேசின? இப்ப என்ன? என்று விபுதன் அவளை விலக்கி கேட்க, இல்ல விபு, நீ இல்லாத இந்த இரு நாளே ரொம்ப கஷ்டமா இருந்தது. நீ என்னிடம் காதலை சொல்லும் போது, எனக்கு நேரம் தேவைப்பட்டது. அன்று எதேச்சையாக தான் உன் வீட்டுக்கு வந்தேன்.
அந்த பிரச்சனையில உன்னிடம் பேச முடியலை. சாரிடா..எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு விபு. உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது. அப்பாவிடம் ஏதாவது சொல்லேன். நான் மாமா வீட்ல கூட இருந்திருக்கிறேன் என்றாள்.
சொல்ல வேண்டியதை தெளிவா சொல்லு. பிடிக்குதுன்னு மட்டும் சொன்னால் எப்படி? விபுதன் புன்னகையுடன் அவளை அவனருகே இழுத்தான்.
Advertisement
சொன்னால் போதுமா? என்று பிரணிகா அவன் கன்னத்தில் கை வைத்தாள்.
இது சரியில்லை? எட்டவேயில்லை என்றான் விபுதன்.
நீ வளர்ந்துட்டா. நான் என்ன செய்வது? என பிரணிதா கேட்க, ஓ..அப்படியா? என்று பிரணிதாவை தூக்கி அவனுக்கு நேராக நிறுத்தினான்.
இப்ப சொன்னாலும் சரி, கொடுத்தாலும் சரி என்றான் விபுதன்.
அவன் கன்னத்தை நகர்த்தி இதழ் பதிக்க வந்தாள் பிரணிதா. அவன் சட்டென முகத்தை திருப்பினான். அவள் இதழ்கள் அவன் இதழில் பட, அவள் பதட்டமாக முகத்தை திருப்பினாள்.
நீ இன்னும் சொல்லலை என்று விபுதன் கேட்க, அவன் இதழ் கோர்த்தாள் பிரணிதா. இருவரையும் தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த மெல்லினா உடைந்து போனாள். வேகமாக அவ்விடம் விட்டு நகர, இல்லை கனவாக இருக்கும் என்று மீண்டும் அவ்விடம் வந்தாள். இருவரின் நெருக்கமும் அவளுக்கு கண்ணீரை வர வைத்தது.
தோட்டத்து பக்கம் நகர்ந்து ஓரிடத்தில் அமர்ந்து மெல்லினா அழுதாள்.
இது தெரியாமல் விபுதன், பிரணிதா அருகே அமர்ந்து பேச ஆரம்பித்தான். ரசிகா ஆதி பற்றி சொல்ல, அன்று மாமாவை பார்க்க வந்த போதே நினைத்தேன் என்று அவன் கை கோர்த்து பிரணிதாவும் பேசினாள்.
“உள்ளே போகலாம்” என்று நகர்ந்த மெல்லினா, இருவரும் பேசுவதையும் கேட்டாள். மெல்லினா பற்றி விபுதனிடம் கேட்டாள் பிரணிதா.
ஓ..பிரணிக்கு ஜெலஸ்ஸா? என்ற விபுதன், அவ ஜஸ்ட் ப்ரெண்டு தான். அவள மாதிரி பொண்ணிடம் பேச தான் முடியும். வாழ முடியாது என்றான். மெல்லினா மீண்டும் உடைந்தாள்.
ஏன் விபு, அப்படி சொல்ற?
அவளுக்கு டிரிங்ஸ் பழக்கமெல்லாம் இருக்காம். கிளப்பிற்கு பசங்களுடன் போவாலாம். இன்னும் என்னவெல்லாம் செய்வாளோ? யாருக்கு தெரியும்? என்று அவன் பேச, இருவர் முன்னும் வந்தாள் மெல்லினா.
விபுதன் எழ, அவன் கையை பிடித்துக் கொண்டு பிரணிதாவும் எழுந்தாள்.
நேராக விபுதனிடம் வந்து, அவனை அடிக்க கையை ஓங்கினாள். ஆனால் மெல்லினாவால் முடியவில்லை.
“சாரி மெல்லி” என்றான் அவன்.
மெல்லினா கோபமாக உள்ளே சென்றாள். எல்லாரும் ரசிகாவுடன் பேசிக் கொண்டிருந்தனர். இப்படியே உள்ளே போக முடியாதே? என்று மீண்டும் வெளியே வந்தாள்.
பிரணிதா மெல்லினாவை அழைத்தாள்.
“யாரும் ஏதும் பேச வேண்டாம்” என்று வெளியே அமர்ந்தாள். விபுதன் அருகே வந்து அமர்ந்தான்.
என்னை பார்த்தால் அவ்வளவு கேவலமாக தெரியுதோ உனக்கு? இரு நாள் தான பார்த்த? யாரோ ஏதோ சொல்றாங்கன்னு இப்படி நினைச்சுட்டு தான் என்னுடன் பழகினாயா? அண்ணாவுக்காக பேசுன? ஆனால் நீயும் மத்தவங்க போல தான நடந்துகிட்ட?
இல்லை மெல்லி. நான் அந்த அர்த்தத்தில் பேசல.
அப்புறம் எப்படி பேசுன? உன்னோட ப்ரெண்ட்ஷிப் தேவையில்லை. போதும். இங்கிருந்து அவளை கூட்டிட்டு போ. நீங்க தனியா வந்து ரொம்ப நேரமாகிடுச்சு. தப்பா நினைக்க போறாங்க. போ என்றாள்.
“பேசும் போது வார்த்தைகள் தடுமாறி மாறிடுச்சு” என்றான் விபுதன்.
பொய் சொல்லாதடா. போயிரு. என்னால உன்னிடம் பேச முடியாது என்றாள்.
அவனும் ஏதும் பேச முடியாமல் எழுந்து சென்று விட்டான். அனைவரும் சென்ற பின் உள்ளே நுழைந்த மெல்லினா நேராக அகரன் இருந்த அறைக்கு சென்று அழுது புலம்பினாள்.
அகரா, நீயும் போயிட்ட. நான் யாரிடம் சொல்வது? அம்மா, அப்பாவிடம் சொன்னால் கஷ்டப்படுவாங்க. அண்ணாவிடம் சொன்னால்..இல்லை, அவனே இப்ப தான் அவனது குடும்ப வாழ்க்கையில் நுழைந்திருக்கான். இது யாருக்கு தெரிந்தாலும் பிரச்சனை தான் என்று அகரன் படுக்கையில் படுத்தாள். அவளுக்கு ஏதோ குத்தியது.
என்னவென்று எழுந்து போர்வையை விலக்கி பார்த்தாள். அதில் அவளது பிரேஸ்லெட் இருந்தது. அவனது அறையை துலாவினாள். அவன் ஆடை அடுக்கி வைத்திருந்த அலமாரியை திறந்தாள். அதில் ஒரு நோட் இருந்தது.
“உன்னோட காதலுக்கு என்னால் உதவ முடியாது. நீயே பார்த்துக்கோ. என் அருகே வர நினைக்காதே!” என்று அகரன் எழுதி இருந்ததை பார்த்து, அகரா நீயும் இவனை போல் என்னை தப்பான பொண்ணா தான் பார்க்கிறாயா? என்று வேதனை மேலிட, அவள் கையிலிருந்த பிரேஸ்லெட்டை பார்த்தாள். அவனை பார்க்க வரும் போது விழுந்திருக்கும் என்று அவள் நினைத்தாள்.
அகரன் பேசிய அனைத்தையும் யோசித்து பார்த்தாள். ஆடை பற்றி அவன் அடித்த கமெண்ட், அவளை காப்பாற்ற வந்து அவனுக்கு கத்தி குத்து பட்டது, அவனை மெல்லினா டீஸ் பண்ணும் போது அவன் பார்வை, விபு மேல் அவனுக்கு இருந்த பாசம் என சிந்தித்த மெல்லினா, ஓ..விபுவை நான் நெருங்கக் கூடாதுன்னு தான் நீ எனக்கு உதவலையா அகரா? என் மேல் உனக்கும் நம்பிக்கை இல்லையா? என்று கதறி அழுது சோர்ந்து அவனறையிலே படுத்தாள்.
மெல்லி, நீ வெளிய போ. யாராவது பார்த்தால் தப்பா நினைக்க போறாங்க என அவன் சொன்னது அவள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. மெல்லினா எழுந்து அவ்வறையின் குளியலறைக்கு சென்று முகத்தில் தண்ணீர் அடித்தாள். அங்கே அகரனது “ப்ளாக் பிரேஸ்லெட்” இருந்தது. அதை எடுத்து பார்த்துக் கொண்டே படுக்கையில் அமர்ந்தாள்.
அவன் இருப்பதாக நினைத்துக் கொண்டு, அகரா இது எனக்கு வேணும். வச்சுக்கவா? என்று கேட்டாள். அவளுக்கு அவன் புன்னகையுடன் “எடுத்துக்கோ” என்று சொல்வது போல் இருந்தது.
“தேங்க்ஸ்டா” என்று அவளது இடக்கையில் மாட்டிக் கொண்டு, விபு என்னை காதலிக்கலை என்பது கூட எனக்கு பெரியதாக தெரியவில்லை. அவன் என்னை இப்படி கேவலமா நினைச்சுட்டான் அகரா? நீயும் என்னை இப்படி தான் நினைக்கிறாயா? என்று கேட்டுக் கொண்டே மெதுவாக சோர்வுடன் நடந்து வந்தாள்.
விபுதன் தவறு செய்து விட்டோமோ? இதனால் அத்தை, மாமாவிடம் விரிசல் வந்து விடுமோ? என எண்ணி எண்ணி தூங்க முடியாமல் வெளியே வந்தாள்.
மெல்லினா சிவந்த முகத்துடன் அவளறைக்கு சோர்வுடன் செல்ல, விபுதன் சென்று அவள் கையை பிடித்தான்.
விபுதனை பார்த்தவுடன், நான் குடிக்கலை. நல்லா தான் இருக்கேன் என்று அவன் கையை தட்டி விட்டு, “என் அருகே வராதே. ஐ ஹேட் யூ” என்று அவளறைக்கு சென்று பொத்தென அவளது படுக்கையில் விழுந்தாள். சோர்வுடன் தூங்கி விட்டாள்.
காலையிலே அகரனின் மாமாவும் பிரணிதாவும் அகரன் வீட்டிற்கு கிளம்பி விட்டனர். திரிவேஷ் அவர்களை அழைத்து சென்று விட்டான்.
ஆதிரேயன் வீட்டில் அனைவரும் பள்ளிக்கு தயாராகி கீழே வந்தனர்.
மெல்லி, எங்க? ஆதிரேயன் கேட்டுக் கொண்டே அவளறையை பார்த்தான். அறை பூட்டி இருந்தது.
ரசிகா அவளறைக்கு சென்று கதவை தட்டினாள். விபுதனும் ரசிகாவுடன் சென்றான். ஆதி இருவரையும் பார்த்துக் கொண்டே மேலே வந்தான்.
மெல்லி, என்ன பண்ற? நேரமாகுது? வெளிய வா என்று ரசிகா அழைத்தாள்.
ரசி, நான் இன்று ஸ்கூலுக்கு போகலை. நீ போ என்றாள்.
“மெல்லி, கதவை திற” விபுதன் அழைக்க, மெல்லினா சத்தமே கேட்கவில்லை.
மெல்லி, “உள்ள என்ன பண்ணிட்டு இருக்க?” ஆதிரேயன் சத்தமிட்டான்.
ஆதி சத்தம் கேட்கவும் கதவு திறக்கப்பட்டது. போர்வையை உடல் முழுவதும் சுற்றி முகத்தை மறைத்துக் கொண்டு நின்றாள் மெல்லினா.
மெல்லி..ஆதி அழைக்க, அவனை கட்டிக் கொண்டு மெல்லினா அழுதாள். விபுதனுக்கு பதட்டம் ஆரம்பித்தது.
எதற்கு போர்வையை சுற்றி வச்சிருக்க? என்று மெல்லினாவை நிமிர்த்த, அவள் முகம் சிவந்து வீங்கி இருந்தது.
ஆதி போர்வையை விலக்க, அதற்குள் அவனை விட்டு விலகி, படுக்கையில் படுத்துக் கொண்டாள்.
மெல்லி, என்ன? ரசிகா அருகே வந்தாள்.
“வராத ரசி” என்ற மெல்லினா, அண்ணா, நேற்றிரவு நான் தோட்டத்து பக்கம் போனேன் என்று மெல்லினா தொடங்க விபுதனுக்கு பக்கென இருந்தது. பிரணியுடனான காதலும் சேர்த்து சொல்லப் போறாள் என்று மனதினுள் பதறிக் கொண்டிருந்தான் அவன்.
தோட்டத்தில் என்னை ஒரு பூச்சி கடித்து விட்டது. அதனால் தான் முகம் இப்படி ஆகிடுச்சு அண்ணா என அழுது கொண்டு, தமிழ் மாமாவை வரச் சொல்லேன் என்றாள்.
பிரபாகரனும் அவர் மனைவி சவிதாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். தாத்தா..அத்தை வரலை என்றாள் நிது.
பெற்றோர்கள் மெல்லினா அறையை பார்த்தனர். ஆதி தமிழரசனை அழைத்து விசயத்தை சொன்னான். அவர் கிளம்ப, அப்பா எங்க போறீங்க? அகரன் கேட்க, நான் போனவுடன் வந்திடுறேன்ப்பா என்று அகரன் மாமாவிடம் அகரனை பார்த்துக் கொள்ள சொல்லி கிளம்பினார். தமிழரசன் அவர்களிடம் அகரனை தத்து எடுக்க போவதாக சொல்ல, அவர்கள் அதிர்ந்தாலும் அவனுக்காக ஒருவர் இருப்பதும் நல்லது தான் என்று அமைதியாக விட்டனர்.
வீட்டிற்கு வந்த தமிழரசன் நேராக மெல்லினா அறைக்கு சென்றார். அவர் அருகே வரவும், மாமா எல்லாரையும் வெளிய அனுப்புங்க. நான் பேசணும் என்றாள் மெல்லினா அவளது மெல்லிய குரலில்.
அவரும் யோசனையுடன், மாப்பிள்ள முதல்ல பிள்ளைங்கல்ல ஸ்கூல்ல விட்டு வாங்க. நான் பார்த்துக்கிறேன். விசயம் சீரியசெல்லாம் இல்லை. முகம் வீங்கியதால் தான் இப்படி சுத்தி இருக்கா என்றார்.
ஆதி தயங்கி நிற்க, “ரசிம்மா நேரமாகுதுல்ல. கூட்டிட்டு போ” என்று தமிரழரசன் ரசிகாவிடம் சொல்லவும், ஆதி வாங்க. அதான் அப்பா இருக்கார்ல்ல. பார்த்துப்பார். நாம பசங்களை விட்டு வந்து என்னன்னு பார்க்கலாம் என்று ஆதியையும் விபுதனையும் அழைத்து சென்றாள்.
விபுதனுக்கு “அப்பாடா” என்றிருந்தது. அவர்கள் சென்று விட்டனர்.
போர்வையை விலக்கிய மெல்லினா, எல்லாரும் போயிட்டாங்களா? என்று பார்த்தாள்.
அவங்க போயிட்டாங்க? இப்ப என்னம்மா செஞ்ச? தமிழரசன் கேட்டார்.
மாமா..அவள் தயங்க, இரவு தூங்காம அழுதுட்டு இருந்தியா? அவர் கேட்டார்.
பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, மாமா எனக்கு ஆகாஷ், லீனா நினைவாகவே இருக்கு. பயமாகவும் இருக்கு. அவங்கள பார்க்கணும் போல இருக்கு என்று மேலும் அழுதாள்.
என்னது? செத்து போனவங்கல்ல பார்க்கணுமா? அவர் கேட்க, மாமா அப்படி சொல்லாதீங்க என்று அழுது கொண்டே அவர் தோளில் சாய்ந்தாள். அவள் காரணத்தை பொய்யாக்கினாலும் அவள் நண்பர்களை அதிகம் மிஸ் செய்கிறாள்.
சரிம்மா, இப்ப என்ன செய்யலாம்? அவர் கேட்க, அவரை நிமிர்ந்து பார்த்து விட்டு, என் முகத்தில் வீக்கத்தை குறைக்கணும். முகத்தை சரி செய்யணும் என்றாள்.
வாய்பில்லைம்மா. நீ இன்று மட்டும் இப்படியே தான் இருந்தாகணும். இதை உன் அண்ணாவிடம் சொல்லி இருக்கலாமே?
மாமா, அவனுக்கு தெரிந்தால் வருத்தப்படுவான். எனக்காக தான் இந்த பிரச்சனையிலே இறங்கி இருக்கான். அவனுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு வேற பயமா இருக்கு என்றாள்.
மாப்பிள்ளைக்கு என்ன ஆகப் போகுது? அதெல்லாம் ஒன்றுமாகாது. நீ ஓய்வெடு.
மாமா, அகரன் நல்லா இருக்கானா? நான் அவனிடம் பேசவா? மெல்லினா கேட்க, அவளை ஒரு மாதிரி பார்த்தவர். அவனுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்காதுன்னு நினைக்கிறேன்.
ஏன்?
அவனோட மாமாவை பார்த்தேல்ல. அவரோட பொண்ணு இந்த வருசம் பள்ளிப்படிப்பை முடித்து விடுவாளாம்? அவளுக்கு அகரனை கல்யாணம் முடிப்பது பற்றி பேச போவதாக என்னிடம் கேட்டார்.
எனக்கு அகரன் தனியே இருக்க வேண்டாம் என்று தான் பட்டது. அதனால் அவன் எடுக்கும் முடிவுன்னு சொல்லீட்டேன் என்றார்.
அகரனுக்கும் பிரணிதாவுக்கும் கல்யாணம் பேசப் போறாங்களா? என கேட்டுக் கொண்டே விபுதனும் பிரணிதாவும் கிஸ் செய்வது கண் முன் வந்தது.
மாமா..வேண்டாம். அவள் அகரனுக்கு வேண்டாம் என்றாள்.
உனக்கு என்னம்மா பிரச்சனை?
அய்யோ மாமா, பிரச்சனை எனக்கில்லை. அவங்களுக்கு தான் என்றாள்.
ஏம்மா, அகரன் கல்யாணம் செய்து கொள்வது உனக்கு பிடிக்கலையா? அவர் கேட்க, அப்படி இல்லை என்று தயங்கிக் கொண்டு விபுதன் அகரன் இருவரையும் நினைத்து, அகரனுக்கு இந்த பொண்ணு செட் ஆக மாட்டா. சொன்னா புரிஞ்சுக்கோங்க மாமா.
எனக்கு புரியலையேம்மா. நீ புரிய வையேன்.
ஹ்ம்..அகரனுக்கும் பிரணிதாவிற்கும் எட்டு வருட வித்தியாசம் இருக்கும் மாமா.
அதை அவள் பெற்றோரே ஏற்றுக் கொண்டார்களே?
இல்ல மாமா. பிரச்சனை வரும் என்று விபுதனை மனதில் வைத்துக் கொண்டு மெல்லினா பேசினாள்.
பிரச்சனையை அவங்க பார்த்துப்பாங்க என்றார் அவர்.
இவரை..என மெல்லினா முறைத்தாள்.
தமிழரசன் சட்டென உனக்கு அகரனை பிடிக்குமாம்மா? எனக் கேட்டார்.
ஆமா, பிடிக்கும் என்று சாதாரணமாக கூறி விட்டு அவரை பார்த்தார்.
உனக்கு அவனை பிடித்ததால் தான் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றீயா? எனக் கேட்டார்.
மாமா, நான்..இல்லை…என்று அவளால் முழுதாக ஏதும் பேச முடியாமல் அவரை பார்த்தாள். பிரபாகரன் உள்ளே வர, ஆதியும், ரசிகாவும் வந்தனர்.
மெல்லி, நீ நல்லா இருக்கேல்ல ஆதி கேட்க, பிரபாகரனும் தன் மகளிடம் அமர்ந்து, உனக்கு பிரச்சனையோன்னு? அம்மா பதட்டமா இருக்கா என்றார் அவர்.
அண்ணா, எனக்கு ஒன்றுமில்லை என்று தமிழரசனை பார்த்து விழித்தாள்.
அப்பாவை எதுக்கு அப்படி பாக்குற? ரசிகா கேட்க, ஒன்றுமில்லை ரசி. நான் தூங்கணும் என்று குழம்பிய மனதுடன், அண்ணா, நான் படுத்துக்கவா? எனக் கேட்டாள்.
வாங்க ஒன்றுமில்லை. ஓர் இன்ஜெக்சன் போட்டிருக்கேன். பாப்பா தூங்கட்டும் என்று தமிழரசன் அனைவரையும் அழைத்து வெளியே சென்றார்.
விபுதனிடம் காதலை சொல்லாமல் தோல்வியுற்றது, அவனின் தவறான பேச்சு, இப்ப அகரனுக்கும் பிரணிக்குமான திருமணம். அகரனை உனக்கு பிடிக்குமா? என்ற தமிழரசனின் கேள்வி அனைத்தும் மெல்லினாவை குழப்பி தவிக்க வைத்தது. அவளுடைய காதலை விட விபுதன் காதலும் தோல்வியாகி விடுமோ? என்று எண்ணினாலும், விபுதனின் வார்த்தையில் அவளால் அவனை முன் போல் காதலனாக நினைக்க முடியவில்லை. அவளுக்கு தமிழரசன் அகரன் பற்றி பேசியதே ஓடியது.
அவளுடனான நினைவுகளை மீண்டும் ஓட்டிக் கொண்டிருக்க, அவன் சென்றதை நினைத்தும், அவன் எழுதி வைத்திருந்த “நோட்”டை நினைத்தும், அவனும் தன்னை தவறான பெண்ணாக தான் பார்க்கிறானோ? என எண்ணியும் அவள் கண்ணீர் வர தூங்கினாள்.
அகரன் வீட்டில் அவன் மாமா பிரணிதா முன்னே அவளை திருமணம் செய்து கொள்ள சொல்லி இருவரையும் பார்த்தார்.
மாமா, என்ன சொல்றீங்க? பிரணிக்கு நான் தாய்மாமாவாக இருந்தாலும் அவள் உங்களுக்கு போல எனக்கும் பொண்ணு தான். அவள் பிறந்து முதலாய் வாங்கிய இந்த கைகளால் அவள் கழுத்தில் எப்படி தாலி கட்ட முடியும்?
மாப்பிள்ள, துணைக்கு யாருமில்லாமல் கஷ்டப்படுறியே? மனசு கேட்கலைய்யா. அதான் கேட்டுட்டேன் என்று தன் மகளை பார்த்தார்.
அப்பா, நான் இன்னும் படிக்கணும். மாமா கூறியது சரிதான். அவர் என்னோட செல்ல மாமா தான். என்னால அவரை கல்யாணம் பண்ணிக்க முடியாதுப்பா என்றாள் பிரணிதா.
அப்பா, மாமாவுக்கு நீங்களே பொண்ணு பாருங்களேன்? என்று பிரணிதா சொல்ல, இல்ல மாமா, இப்பொழுதைக்கு எனக்கு கல்யாணம் வேண்டாம். நான் நிறைய சம்பாதிக்கணும். என் நிலையை உயர்த்தணும் என்றான் அகரன்.
தாராளமா பண்ணு மாமா. கல்யாணம் பண்ணிட்டு பண்ணேன் என்று பிரணிதா சொல்ல, மாமா ப்ளீஸ் தொந்தரவு பண்ணாதீங்க.
தொந்தரவா? பிரணிதா கோபமாக கேட்டாள்.
இல்லடா பிரணி என்று அகரன் தயங்கினான்.
இன்னும் ருச்சியை நினைச்சுக்கிட்டு இருக்கியா மாமா? அவள் கேட்க, இல்லம்மா வேண்டாம் என்றான் அவன்.
சரிங்க மாப்பிள்ளை, ஆனால் உன் அக்கா தான் உங்க கல்யாணத்தை பத்தி கேட்டுகிட்டே இருக்கா? அதனால..அப்புறம் யாருமில்லைன்னு வருத்தப்படாதீங்க என்றார் அவர்.
ம்ம்..என்றான் அகரன் வெறுமையுடன்.
என்னாச்சு மாமா? வேற யாரையும் உனக்கு பிடிச்சிருக்கா? பிரணிதா கேட்க, அகரன் பதிலளிக்காமல் இருவரையும் பார்த்தான். “அவனுக்கு யாரையோ பிடிச்சிருக்கு” என்று இருவருக்கும் புரிந்தது.
யாரு மாமா? அவங்களுக்கு விருப்பமில்லையா? பிரணிதா கேட்க, தெரியல பிரணி. ஆனால் அந்த பொண்ணு வேற பையனை காதலிக்கிறாள் என்றான் அகரன் வருத்தமாக.
நல்ல பொண்ணா மாமா? அழகா இருப்பாங்களா? அவள் கேட்க, “ஆம்” என்று தலையை மட்டும் அசைத்தான்.
ஒரு வருசம் வேணும்ன்னா உங்க அக்கா சும்மா இருப்பா. அதுக்கு மேல அவள் பார்க்கும் பொண்ணை நீங்க கட்டிக்கிட்டு தான் ஆகணும் என்றார்.
மாமா, அக்காவிடம் நானே இதை பற்றி பேசிக்கிறேன். இதுக்கு மேல என்னால முடியாது மாமா என்று அகரன் கண்கலங்கினான்.
மாப்பிள்ளை இதுக்கெல்லாமா அழுறது? பொண்ணு யாருன்னு சொன்னா. நாங்களும் பார்த்து பேசிட்டு போவோம்ல்ல என்றார் அவர்.
வேண்டாம் மாமா. நடப்பது நடக்கட்டும் விடுங்க என்றான்.
இதற்கு மேல் அவனை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று இருவரும் விட்டு விட்டனர்.
மறுநாளே அகரன் மாமாவும் பிரணிதாவும் சென்னை சென்று விட்டனர். மெல்லினா மனதை சமாதானப்படுத்தி பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தாள். ஆனால் யாரிடமும் சரியாக பேசவில்லை. விபுதன் பேச வந்தாலும் அவனை விட்டு விலகியே இருந்தாள்.
ஆதிரேயன் வீட்டை விட்டு வெளியே சென்ற முனியன் நேராக சக்தியிடம் வந்தான்.
அய்யா, அவன் அழைக்க, நான் உன்னை என்ன சொன்னேன்? என்ன செஞ்சு வச்சிருக்க? சக்தி முனியனிடம் கத்தினான்.
அய்யா, நான்..அவர் தயங்க, இதில் பெருமையாக அவர்கள் சேர்ந்திருந்த வீடியோவை அனுப்பி இருக்க? சக்தி மேலும் கத்தினான்.
அன்றிரவு ஆதிரேயனும், ரசிகாவும் சேர்ந்து இருந்த வீடியோவை சக்திக்கு வீட்டை விட்டு வெளியேறும் முன் அனுப்பினான் முனியன்.
சொல்லு முனியா? அவ எனக்கு வேணும்ன்னு தான உன்னை அவளுக்கு காவல் வைத்தேன். இப்பொழுது ஆதியை அவள் காதலிக்கும் வரை கொண்டு போய் நிறுத்தி, ச்சே..இருவரும் உறவாடும் வரை வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்து வந்திருக்க? சக்தி கத்த, அய்யா நான் பேசலாமா? அவன் கேட்டான்.
நீ இனி என்ன பேசப் போற?
அய்யா, எல்லாம் நடந்தாலும் அந்த பொண்ணை உங்க பக்கம் வர வைக்கலாம். அந்த பொண்ணும் ஆதியும் உடலளவில் சேர்ந்தது ஆதி தம்பிக்கு தெரியாது. அந்த பொண்ணும் ஒரு விருப்பத்தில் அவருடன் இருந்தாலும் அவள் இன்னும் சில நாட்கள் அந்த வீட்டை விட்டு வெளியே சென்று விடுவாள்.
அந்த பொண்ணை உங்க பக்கம் இழுக்க அது தான் சரியான நேரம். இந்த மாதிரி பொண்ணுகளுக்கு உங்கள மாதிரி அழகான, வசதியான பசங்க கிடைப்பதே நடக்காத காரியம். ஆதியுடன் பசங்க இருப்பதால் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லி இருப்பாள். ஆனால் நீங்கள் திருமணமாகாதவர். கண்டிப்பாக ஒத்துப்பாள். ஆனால் உடனே எடுக்க நினைக்காதீங்க.
கல்யாணத்தை பற்றி பேசி அருகே வர வையுங்கள்.
ஏய், என்ன நினைச்சுகிட்டு பேசுற? நான் ஆதியை வெற்றியடைய மட்டும் அவளை அருகே வைத்துக் கொள்ள நினைக்கவில்லை. அவள் என்னையும் கவர்ந்து விட்டாள். அவளை நிஜமாக திருமணம் செய்து வாழணும்ன்னு நினைக்கிறேன். அது மட்டும் நடந்தால் நான் ஆதியை வெற்றியடைந்தும் விடுவேன். எனக்கான அவளும் எனக்கு கிடைத்தது போலாகும் என்றான்.
என்னய்யா பேசுறீங்க? உங்க லெவலுக்கு அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு சொல்றீங்க? கொஞ்சமும் பொருத்தமில்லாமல் இருக்கும் முனியன் சொல்ல., முனியா என்ன சொன்ன? உனக்கு என்ன தெரியும்? நான் மணக்க இருப்பவளை இப்படி இழிவாக பேசுவாயா? என்று கையிலிருந்த பொருளை அவன் மீது தூக்கி எறிந்தான் சக்தி.
அய்யா, நான் எல்லாரும் பேசப் போவதை தான் சொன்னேன்.
அந்த ஆதியே கல்யாணம் பண்ணிக்க நினைக்கலாம். நான் பண்ணக் கூடாதா? சக்தி கேட்க, அய்யா..அந்த பொண்ணு மேல உங்களுக்கு விருப்பம் இல்லாதது போல் இருக்கு. ஆதி தம்பியை வெற்றியடைய இதையா கையெடுப்பீங்க?
முனியா? அதிகம் பேசாத. இதில் அவனுக்கு மரியாதை வேற குடுக்குற? அவன் உன்னை வெளியே அனுப்பி விட்டான். மறந்துட்டியா? அவன் கேட்க, சாரிய்யா என்று அவன் சொன்னான்.
நானும் அவள் ஆதியிடமிருந்து வெளியே வர காத்திருக்கிறேன் என்றான் சக்தி.
அகரனுக்கு அடிபட்டு ஒன்றரை வாரத்தில் உடல் நிலை சீரானது. ஆதிரேயனுடன் வேலை செய்ய ஆரம்பித்தான்.
ஆதியின் ஹோட்டலுக்கு ஆதிரேயனும் அகரனும் சென்ற வேலையில் ஆதியின் போன் அவனை அழைத்தது. ஆதி மீட்டிங்கில் இருக்க, அகரன் அதனை எடுத்தான்.
ஆதி சாரா? பதட்டமாக ஒருவன் கேட்க, பாஸ் இல்லை. நான் அவர் செக்கரட்டரி. நீ யாரு? என்று அகரன் கேட்டான்.
சார், ஆதி சார் தங்கை மெல்லினா இங்க கிளப்ல இருக்காங்க. அவங்களருகே இருக்கும் பசங்க பேச்சும் பார்வையும் சரியில்லை என்றான்.
நீ யாரு? உன்னை எப்படி நம்புவது? அகரன் கேட்க, நீங்களே நடப்பதை கேளுங்க என்று மெல்லினா அருகே சென்று போனை வைத்தான்.
ஹே பேப், “வா நம்ம ரூம்ல டிரிங்ஸ் நிறைய இருக்கு” ஒருவன் குரல் கேட்க, ரெட் வொய்ன் இருக்கா? என்று வாய் உலற குடித்தவாறு மெல்லினாவும் பேசினாள்.
ம்ம்..நிறைய இருக்கு மற்றொருவன் சொல்ல, சோ..க்யூட் என்ற மெல்லினா, “நீ அவனை வரச் சொல்லு” என்று மெல்லினா சொல்ல, அதான் நாங்க இருக்கோமே பேப் என்று அவன் சொல்ல, நோ..நோ..எனக்கு அவனிடம் பேசணும்.
டேய், “அவனை வரச் சொல்லுங்க” என்று ஒருவன் சத்தமிட்டான்.
யாரை டா? மற்றொருவன் கேட்க, அவன் கண்ணடித்தான்.
ஹேய், நீ யாருடா? என்று அகரனிடம் பேசியவனை ஒருவன் தள்ளி விட்டான்.
எங்கடா இருக்கா? அகரன் சத்தமிட, அவ்வளவு தூரம் எப்படி போனா? என்று மெல்லினாவிற்கு பைக் பிடிக்குமே என்று புதியதாக வாங்கிய பைக்கை முழுவேகத்தில் செலுத்தினான் அகரன்.
எதிரே வந்த ஆதியையும் கவனிக்காமல் ஓடிய அகரனை பார்த்து, எதுக்கு இப்படி ஓடுகிறான்? என்று யோசனையுடன் அவனறைக்கு சென்று போனை தேடினான்.
எக்ஸ்யூஸ்மி சார்? சத்தம் கேட்க, எஸ் என்று ஆதியும் குரல் கொடுத்தான்.
உள்ளே வந்த பொண்ணு, “சார் உங்களோட போன் கீழே கிடந்தது” என்று போனை கொடுத்தார்.
“தேங்க்யூ” என்று யோசனையுடன் போனை பார்த்து, இது என்ன புது நம்பரா இருக்கு என்று அழைத்தான். அகரனிடம் பேசியவன் விசயத்தை சொல்ல, “டேமிட்” ஒரு வார்த்தை சொல்லீட்டு போயிருக்கானா பாரு? ஆதி கோபமாக காரை எடுத்தான்.
கிளப்பிற்கு வந்து மெல்லினாவை அகரன் தேட, அவனை அழைத்தவன் ஓர் அறையை காட்டினான். கதவு பூட்டப்பட்டு இருந்தது.
“ரூம் பாய் சார்” என்று அகரனை அழைத்தவன் சத்தமிட, அவர்கள் கதவை திறந்தனர். அடுத்த நொடி சீற்றமுடன் உள்ளே நுழைந்தான் அகரன்.
மெல்லினா மேலே போட்டிருந்த வொயிட் ஸ்லீவ்ல்லஸ் கோர்ட் கழற்றி வீசப்பட்டு இருந்தது. அரைகுறை ஆடையுடன் படுக்கையில் போதையில் இருந்தாள் மெல்லினா. அவளை ஒருவன் நெருங்கும் சமயம் தான் அகரன் உள்ளே வந்தான். அவள் மேலே ஒருவன் இருப்பதை பார்த்து துடித்து போனான் அகரன். கையில் கிடைத்ததை வைத்து அங்கிருந்தவர்களை அடித்து விட்டு, அவளது கோர்ட்டை எடுத்தான். அதுவும் கிழிந்து இருக்க, அழுது கொண்டே மெல்லினாவிடம் சென்று அவனது ப்ளாக் ஆபிஸ் கோர்ட்டை போட்டு விட்டு, அவளை தூக்கினான்.
என்னடி பண்ணி வச்சிருக்க? அகரன் கத்தினான்.
அகராவா? அகரா விபு என்னை காதலிக்கலை. அவனுக்கு அவளை தான் பிடிச்சிருக்கு. அவன் என்னை கேவலமா பேசிட்டான். நீயும் என்னை அப்படி தான் நினைக்கிறாயா? என போதை மயக்கத்தில் அவன் கன்னத்தில் கையை வைத்து புலம்பினாள் மெல்லினா.
விபு உன்னை என்ன சொன்னான்? அகரன் மெல்லினா கன்னத்தில் தட்டினான். ஆனால் அவள் விழிக்கவில்லை. அகரா எதுக்கு போனான்? ஐ மிஸ் அகரா. அவனிடம் எதையும் ஷேர் பண்ண முடியாமல் பைத்தியம் பிடித்தது போல் இருந்தது. அகராவும் என்னை தப்பான பொண்ணா தான் பார்த்தானா? என்று கேட்டுக் கொண்டே மயங்கினாள்.
அகரன் அவளை தூக்கி வந்து அவன் பைக்கில் ஏறி, அவளை அவன் முன் அமர வைத்து சாய்த்து அவளது கிழிந்த ஆடையைக் கொண்டு இருவரையும் கட்டி விட்டு பைக்கை ஆதியின் வீட்டிற்கு விரட்டினான். அவன் சென்ற பின் ஆதி வந்தான்.
உதவி செய்தவன் ஆதியிடம் அகரன் அழைத்து சென்றிருப்பதாக கூற, ஆதியும் வீட்டிற்கு விரைந்தான்.
ஆதிரேயன் வீட்டிற்கு வந்த அகரன் மெல்லினாவை தூக்கிக் கொண்டு உள்ளே வந்ததும், விபு எங்கடா இருக்க? என்று கத்தினான்.
படிப்பில் இருந்த அனைவரும் வெளியே வந்தனர். சவிதாவும் வெளியே வந்து மெல்லினாவை பார்த்து, அய்யோ பிள்ளைக்கு என்னாச்சு? என்று பதறினார். ரசிகாவும் அகரனிடம் வந்து மெல்லினாவை பார்த்தாள்.
அவன் கோர்ட் அவளிடம் இருப்பதை பார்த்தும், ஆல்கஹால் வாடை மெல்லினா மீது வருவதை பார்த்தும், அகரா என்னாச்சு? என்று ரசிகா கேட்டாள்.
மெல்லினாவை அங்கிருந்த சோபாவில் போட்டு விட்டு அகரன் ரசிகாவை பார்த்து விட்டு மேலும் விபு..என கத்தினான்.
மாம்ஸ், என்னாச்சு? என்று விபுதன் கேட்டுக் கொண்டே அகரனிடம் வந்தான்.அகரன் விபுதனை அடித்தான். அந்நேரம் ஆதியும் கோபமாக உள்ளே வந்தான். அகரனை இழுத்து ஆதி அடித்தான். எல்லாரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
என்ன நடக்குதுடா? சவிதா சத்தமிட்டார
ஆதி அவரை பார்த்து விட்டு, பிரச்சனைன்னா முதல்ல சொல்லுன்னு சொல்லி இருக்கேனா இல்லையா? ஆதி அகரனிடம் கேட்க, அவனுக்கு ஆதி பேசும் எதுவும் காதில் விழவேயில்லை. மெல்லினா கிளப்பில் இருந்த நிலையிலே இருந்த அகரன் மீண்டும் விபுதனை அடித்தான்.
குட்டீஸ், எல்லாரும் பார்த்து அழுதனர்.
மாம்ஸ், என்னாச்சு? என்று வாயில் வழிந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டே விபுதன் கேட்டான்.
அகரா, விபுவை எதுக்கு அடிக்கிற? ரசிகா கோபமாக அகரன் முன் வந்து நின்றாள். அகரன் அதையும் கண்டுகொள்ளாமல் ரசிகாவை தள்ளி விட்டு விபுதனை அடித்தான்.
“ரசி” என்று ஆதிரேயன் அவளை தூக்கி விட்டு, விபுதனை மீண்டும் அடிக்க வந்த அகரன் கையை பிடித்து அவனை தள்ளி ஓங்கி அறைந்தான் ஆதிரேயன்.
அகரன் ஓர் நிலைக்கு வர, பாஸ் என்று எழுந்து விபுவை பார்த்து, மெல்லிகிட்ட என்னடா பேசுன? சொல்லு என்று கண்ணீருடன் விபுதனை பிடித்து உலுக்கினான். விபுதனுக்கு பின் தான் புரிந்தது. அவன் மெல்லினாவை பார்த்து விட்டு அகரனை பார்த்து அமைதியாக தலைகவிழ்ந்து நின்றான்.
அகரா, என்ன பேசுற? விபு மெல்லிகிட்ட என்ன சொல்லி இருக்கப் போறான்? என்று ரசிகா கேட்க, சொல்லு விபு..அவகிட்ட என்ன பேசுற? அந்த மயக்க நிலையிலும் நீ அவள கேவலமா பேசிட்டன்னு தான் புலம்பினாள்.
அவளோட காதல் பிடிக்கலைன்னா. பிடிக்கலைன்னு ஒதுங்க வேண்டியது தான? அதுக்காக அவ தப்பான பொண்ணாகிடுவாளா? அகரன் கத்தினான். எல்லாரும் அதிர்ச்சியுடன் அகரனை பார்த்தனர்.
மாம்ஸ், காதலா? இல்ல மாம்ஸ், அப்படி ஏதுமில்லை விபுதன் சொல்ல, சவிதா பிரபாகரனை போனில் அழைத்து வரச் சொன்னார்.
இல்லையா? அவள் உன்னிடம் காதலை சொல்ல என்னிடம் தான் ஐடியா கேட்டாள். நான் சொன்னவுடன் சந்தோசமாக தான் அன்று உங்களுடன் வெளியே வந்தாள். உன்னிடம் சொல்லலையா? அகரன் கேட்டான்.
அவள் என்னை காதலிப்பதே எனக்கு தெரியாது. தெரிந்தால் நான் முதலிலே விலகி இருந்திருப்பேன் என்றான் விபுதன்.
ஆதி கோபமாக விபுதனிடம் வந்து, இந்த காதல் விசயத்தை விடு. நீ தான் காதலிக்கலைல்ல. அப்புறம் என்ன அவள பத்தி பேசுன? கத்தினான்.
மாமா..நான் என்று தயங்கிய விபுதன் பிரணிதாவிடம் பேசியதை சொன்னான்.
ஆதி விபுதனை விட்டு கண்ணீருடன் விலகி நின்றான். ஆனால் ரசிகா கோபமாக விபுதனை அடித்தாள்.
ஏன்டா, உனக்கு என்ன அவளை பத்தி தெரியும்ன்னு பேசுன? ரசிகா கேட்டுக் கொண்டே அடிக்க, மத்த பசங்க பேசியதை தான் சொன்னேன். நான் பிரணியிடம் முழுதாக கூட பேசலை என்றான் விபுதன்.
முழுசா பேசலையா? என்று அகரன் அவனிடம் வர, அகரா..என்று இதை கேட்டு உடைந்து நின்ற தன் மனைவியிடம் வந்தார் பிரபாகரன். உடன் தமிழரசனும் வந்திருந்தார்.
சவிம்மா, ஒன்றுமில்லை என்று பிரபாகரன் சொல்ல, இல்லங்க. நான் நல்லா இருந்திருந்து என் பிள்ளையை பார்த்துட்டு இருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது என்று அழுதார்.
பிரபாகரன் ஆதியை பார்த்தான். ஆதிரேயன் சவிதாவிடம் வந்து அவரை அமர வைத்து கோபமாக அருகே அமர்ந்து கொண்டான்.
என் பிள்ளையை கவனிக்காமல் விட்டது என் தவறுதான். அவளுக்கு போனை தவிர ப்ரெண்ட்ஸோட சுத்தும் பழக்கம் தான். மூன்று மாதமாக தான் பசங்களுடன் டிரிக்ஸ் பழக்கம் வந்தது. அதை தவிர என் பொண்ணுக்கு எந்த பழக்கமும் இல்லை. நானும் ஆதியும் வேலையில் பிஸியாக இருந்ததால் பிள்ளைகளை கவனிக்க தவறி விட்டோம். இனி ஏதும் இதை பற்றி பேசவேண்டாம் என்று சவிதாவை பார்த்தார் பிரபாகரன்.
அங்கிள், அவன் புரியாமல் பேசிட்டான். நீங்க எதுக்கு விளக்கம் கொடுக்குறீங்க? ரசிகா கேட்டாள்.
இல்லம்மா, இங்க பேசிய விசயம் வேலையாட்கள் மூலம் வெளியே போனால் பொண்ணோட பேரு கெட்டுப் போயிரும். அவளும் ஸ்கூல் கூட முடிக்கலை. உனக்கு புரியாதாம்மா? என்று ரசிகாவிடம் அவர் கேட்டார்.
ரசிகா அமைதியாக இருந்தாள். சாரி சார், நான் அவ கேட்டான்னு பதில் சொல்லப் போய் தவறாகி விட்டது. என்னை மன்னிச்சிருங்க என்று விபுதன் கேட்டான்.
மன்னிப்பு கேட்டால் எல்லாமே சரியாகிடுமா விபு? நீ பேசி ஒரு வாரம் இருக்கும்ல்லடா. இதுவரை ஏதும் செய்யாமல் மனசுக்குள்ளவே போட்டு கஷ்டப்பட்டுகிட்டு இருந்திருக்கா? என்ற அகரன் யோசனையுடன் ரசிகா பக்கம் திரும்பினான்.
error: Content is protected !!