Skip to content
Post Views: 16,967
இலக்கணம் பெண்மையே!
அத்தியாயம் 13
பிரகாஷ் வார்த்தை இன்றி அவளையே பார்த்து நின்றான்.
“இந்த புக்க நான் விமர்சனம் செய்யும் போது, அந்த ஹீரோயின்க்கு ஆதரவா தான் பேசினேன். அவளோட அப்பாவி கணவனை நான் யோசிக்கவே இல்லை. ஆனா, காலம் அந்த கணவனோட இடத்துல என்னை கொண்டு வந்து நிறுத்தி இருச்சு…”
Advertisement
“கொலை செய்யிற கொலை குற்றவாளிக்கு கூட ஒரு நியாயம் இருக்குமாம். உங்களோட நியாயம் என்ன? இந்த ஊர், நம்ம குடும்பம் எல்லாம் சொல்றாங்க, பொண்டாட்டி ஒழுங்கா இருந்தா புருசன் சரியா இருப்பான்னு… அது தான் உண்மையா. உங்க தப்புக்கு நான் தான் காரணமா?… சாதாரணமாக கேட்டாலும் கண்களில் தீ எறிந்தது.
“நான் தான் தப்பு சாலா. ஷாலினி கிட்ட இருந்து தான் முதல்ல வார்த்தை வந்தது. ஆரம்பத்துல நான் கவனிக்கல, தெரிஞ்ச பின்னாடி கண்டிச்சேன்,அடிச்சேன்… ஒரு கட்டத்துல வீட்டை விட்டு கூட போக சொன்னேன். நானும் ஒதுங்கி போனேன்…”
ஆனா, அவ விடலை, நீயும் அவளை விடல. உன்னை பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வருவா… உனக்கு வந்தது காதலே இல்லன்னு சொன்னேன். அவ காதலை நிரூபிக்க கையை கையை அறுத்து கிட்டா, எனக்கு ரொம்ப பயம். நல்ல விதமா பேசி அவளுக்கு புரிய வைக்க நினைச்சேன். கொஞ்சம் ஃப்ரீயா பழகினேன். அப்புறம்… அப்புறம்…” என்ன சொல்ல என்று தெரியாமல் தயக்கமாக பார்த்தவன்,
Advertisement
“ஒரு கட்டத்துல எல்லை மீறி போற மாதிரி ஆகிடுச்சு. அவளும் தனியா இருக்கா, வேற மாதிரி வழி மாறி போயிடுவான்னு நினைச்சு…” என்று இழுக்க
Advertisement
“அவளுக்கு வழி காட்ட நீங்க வழி மாறி போயிட்டீங்க…” சாலா முடித்து வைத்தாள். சங்கடமாக தலை குனிந்தான் பிரகாஷ்.
“நான் கேட்டது என்னை பத்தி… உங்களோட கள்ள காதல் கதையை இல்லை. நீங்க கண்ட மாதிரி திரிய நான் தான் காரணமா… சொல்லுங்க…”
“சாலா…”
Advertisement
“வாழ்க்கையில ஒரு தடவை யாவது, ஒரு முறையாவது உண்மையை பேசணும். தப்பாவே இருந்தாலும் நேர்மைக்கு ஒரு மதிப்பு இருக்கு… எனக்கு உண்மை தான் வேணும். இவ்வளவு நடந்தும், இதுவரைக்கும் உங்களை நான் ஒரு வார்த்தை கேட்கல. உங்க செயல் நியாயமும் இல்லை. ஆனா நான் தெரிஞ்சுக்கணும். எனக்கு ஏன் இவ்வளவு பெரிய அநியாயம் நடந்ததுன்னு நான் தெரிஞ்சுக்கணும்…”
“இல்லை சாலா அது வந்து நீயும் ஒரு காரணம்…” என்றவன் மனைவியின் அழுத்தமான பார்வையை கண்டு மேலும் தயங்கினான். அவள் இதை எதிர்பார்த்தால் போல… தன்னை நியாயப்படுத்த துணிந்தான்.
“சாலா நீயே யோசி. மொத எல்லாம் நீ என்கிட்ட எப்படி இருப்ப… கொஞ்ச நாளாக நீ என்னை கவனிக்கவே இல்லை. நான் யார் கிட்ட என்னோட அழுத்தம், கவலை, பயம் எல்லாம் குறைப்பேன்.உன்னை பார்க்கணும், பிள்ளைகளை பார்க்கணும், வீட்டை பார்க்கணும், ஆபீஸ், வேலை, எங்க வீடு, சொந்தம்ன்னு அல்லாடி போய்ட்டேன். எனக்கு ஆறுதல் சொல்லவே ஆள் இல்லை. உனக்கும் முடியலை, ரொம்ப உடைஞ்சு போனேன்…” தலையை தாங்கி கொண்டான்.
“அந்த நேரத்துல ஷாலினியோட ஆதரவு எனக்கு ஆறுதலா இருந்துச்சு… தப்பு தான். நிச்சயம் பெரிய தப்பு தான். ஆனா, அந்த நேரம் எனக்கு வேற வழி தெரியலை. உன்னை பார்த்த, நீ எப்பவும் சோர்ந்து போய் கவலையா கிடந்த, கிட்ட போன அழுகிற… நான் என்ன செய்வேன். மன அழுத்தம் தாங்கல… எனக்கு இது எல்லாத்தையும் விட்டு ஒரு சுதந்திரம் தேவை பட்டுச்சு…”
“சாலா என்னை புரிஞ்சுக்க… காலையில எந்திரிக்க பரபரப்பா ஆபீஸ், வேலை, பிள்ளைக, சம்பாத்தியம், எதிர்காலம், குடும்பம்ன்னு ஓடுறேன். இதுக்கு இடையில எங்க அம்மா, அப்பா, கூட பொறந்தவங்க, சொந்தம், விசேஷம்ன்னு எத்தனைய நான் பார்க்க. எனக்காக நான் வாழவே இல்லை. என் கூட வேலை பாக்குற எல்லாரும் எவ்வளவு ஜாலியா வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்றாங்க தெரியுமா!… ஆனா நான் உங்களுக்காகவே வாழ்ந்துட்டு இருக்கேன்…” என்ற கணவனை சாலா வெறுமையாக பார்த்தாள்.
“உனக்கு புரியாது சாலா. ஓடி ஓடி சம்பாரிக்கிறேன். ஆனா என் விருப்பப்படி எதுவும் செய்ய முடியலை. அது எவ்வளவு கஷ்டம்… உங்களை எல்லாம் யோசிக்க நான் இருந்தேன். எனக்காக யாருமே யோசிக்கலை. உன் பேச்சு எல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா… பையனுக்கு வீடு வாங்கணும், பொண்ணுக்கு நகை சேர்க்கணும், பிள்ளைக்கு வாங்கி கொடுக்கணும், தங்கச்சி சீர் செய்யணும், தம்பிக்கு பார்க்கணும். இது தான் என் வாழ்க்கையா? இப்படி ஓடியே எனக்கு நாப்பத்தி அஞ்சு முடிஞ்சு போச்சு… எனக்காக கொஞ்ச நாள் வாழ நினைச்சேன்…” என்றவன் மனைவி முகம் பார்த்தான்.
சாலாவிடம் எந்த பதிலும் இல்லை. உள்ளம் எரிமலையாக கொதித்து கிடந்தது. வெளியே மெளனத்தை கடை பிடித்தாள்.
“என் வாழ்க்கை முழுசும் உங்களுக்காக மட்டும் தான் ஓடி இருக்கேன். உங்களை சொந்த வீட்டுல உட்கார வைக்க எவ்வளவு பாடு பட்டேன் தெரியுமா… சண்டே கூட என்னால நிம்மதியா வெளிய போக முடியாது. நானும் வாரேன்னு பிள்ளைக நிப்பாங்க … எங்க போனாலும் குடும்பமா தான் போகணும். கோவில், பீச், மால், ஹோட்டல் இதை தாண்டி எங்க போவீங்க…”
“எப்படி சொல்றது, உனக்கு புரியுதா… எனக்கு உங்களை பிடிக்கும், நீங்க தான் என் குடும்பம். ஆனா, புருசன், பொண்டாட்டியாவே இருந்தாலும் அவங்களுக்குன்னு தனிப்பட்ட சுதந்திரம் இருக்கு. உன் கிட்ட எனக்கு அது இல்லை. மூச்சு முட்டுது…” இதற்கு மேல் வேற என்ன வேண்டும். மொத்தமாக சாலாவை முடித்து விட்டான்.
“ஷாலினி ஒரு மாதிரி என் ஸ்ட்ரெஸ்க்கு விடுதலை கொடுத்தா. தப்பு தான் விட முடியலை. ஆனா, உன் , இடத்துல அவளை வைக்கணும்ன்னு ஒரு நாளும் நான் நினைச்சது இல்லை. இது ரொம்ப சுதந்திரமான உறவு. எந்த கட்டாயமும் கிடையாது. இது ஒரு வழி பாதையும் இல்லை. விலக நினைச்சா ஒதுங்கி போகலாம். நான் இப்போ ஒதுங்கி வந்துட்டேன். உனக்கு எதுவும் தெரியும் முன்னவே ஒதுங்க தான் நினைச்சேன்…”
“ சாலா…” என்றான் கணவன். பாசி பச்சையில் சாதாரண கார்டன் சேலை, கொண்டை போட்டு, முகத்தில் சின்ன பொட்டு வைத்து, அழுததால் முகம் சிவந்து இருந்தாள்.
“நீ எப்பவும் இப்படி தான் இருக்க… ரொம்பவும் சோர்ந்து போய், கிறக்கமா தான் இருக்க. பார்த்ததும் உற்சாகமா, ஹேப்பியா ஃபீல் பண்ணனும். நீ அப்படி இருக்க மாட்ட… அதுனால நான் உன்னை விலகல சாலா. நான் உன் மேல வச்ச அன்புல மாற்றம் கிடையாது. என்னைக்கும் நீ தான் என் மனைவி, அது மாறாது… ஒரு தடுமாற்றம் அது மாறி போச்சு… நாம விட்டுடலாம் பிளீஸ்… நமக்காக, நம்ம பிள்ளைகளுக்காக…” என்று பிரகாஷ் சொன்ன நொடி, சாலா குரலில் ஒரு ஆவேசம்.
“எதுக்கு மறக்கணும், எதுக்கு வாழனும்… தேவையில்லை. நீங்க எனக்கு தேவையே இல்லை. உங்களை இழுத்து பிடிச்சு, மூச்சு முட்ட வைக்கிற உறவு உங்களுக்கும் தேவை இல்லை. நாம தனித்தனியே நம்ம வழியில போலாம். இனி இது கரை சேராது…” சாலா தீர்மானமாக சொல்ல.
பிரகாஷ் கண்ணில் கோபம், “சாலா செஞ்சது தப்புன்னு மன்னிப்பு கேட்டேன் தான, வேற என்ன எதிர்பார்க்கிற… உனக்கான இடம் உனக்கு தான்…”
“எனக்கு எந்த இடமும் தேவை இல்லை. நீங்களும் தான். எனக்கு போலி தனம் தேவையில்லை…” என்றாள் தீர்மானமாக
“ என்னோட அன்பு உனக்கு போலி தனமா சாலா…”
“ஆமா…”
“உனக்கு ரெண்டு ஆபரேசன் பண்ணி இருக்காங்க. உனக்கு எவ்வளவு பார்த்தேன். காச தண்ணியா செலவு செஞ்சேன். பித்து பிடிச்ச மாதிரி இருந்த, உன்னை மீட்டு கொண்டு வர அவ்வளவு போராடினேன். இதையெல்லாம் யோசிக்காம ஒரு நொடியில என்னை தூக்கி போடுற. நான் தான் நான் செஞ்சது தப்பு ன்னு ஒத்துகிட்டேன் தான, அப்புறம் என்ன சாலா… வேற என்ன எதிர்பார்க்கிற…” பிரகாஷ் தாள முடியாமல் சொல்ல.
சாலாவிடம் எந்த சத்தமும் இல்லை. கராகரவென கண்ணீர் தான் வழிந்தது. ஏதோ அணை நிரம்பி வழிவது போல… ஒரு விக்கல், கேவல் எதுவுமில்லை.
“ சாலா…” என்று தோலை தொட போக
“கட்டுன பொண்டாட்டிக்கு செஞ்சதை சொல்லி காட்றீங்களா…”
“ உளறாத சாலா. எனக்கு உன் மேல உள்ள பாசத்தை சொன்னேன்…”
“ உங்க பாசத்துக்கு ரொம்ப நன்றிங்க. இனி எனக்கு அது தேவைப்படாது…”
“சாலா…”
“வேண்டாம் என்னை பேச வைக்காதீங்க… உங்க கிட்ட பேசவே கூடாதுன்னு நான் இருக்கேன்…” மனம் கொதித்தது. கடைசியில் எல்லாம் இவள் தான் காரணம் என்று விட்டான்.
இவளோ , வேற ஒருத்தி கூட கூத்தடிக்க சொன்னது. தன் கணவன் மனதில் இவ்வளவு அழுக்கா… இதயமே வெடித்தது. எப்படி ஒரு மனப்பான்மை. உலகத்தில் இப்படியும் மனிதர்கள்…
“இது தான் உன்னோட பெரிய குறை… எப்பவும், எதையும் புரிஞ்சுக்க மாட்ட. பத்தாம்பசிலி தனமா இருப்ப. கொஞ்சம் விரிவா சிந்தி சாலா. உன்னால என்னை புரிஞ்சுக்க முடியும்…”
“ புரிதல்ன்னா என்ன, உங்க மனசை புரிஞ்சு, அந்த கால பொம்பளைக மாதிரி உங்க விருப்பத்திற்கு தலையாட்டவா, இல்லைன்னா உங்களுக்கு விளக்கு புடிக்கவா…” கோபம் கரை உடைத்தது.
“சாலா…” கத்தினான் பிரகாஷ்.
“அட சீ. நிறுத்து… நீயெல்லாம் ஒரு மனுசனா… பக்கா சுயநலவாதி. உன் புத்தி சாக்கடை. அந்த சாக்கடைய தான் நான் சந்தனம்ன்னு நினைச்சு பூஜை பண்ணி இருக்கேன்…”
“உம் மனசுல தான் எவ்வளவு அழுக்கு இருந்திருக்கு. நான் உன்னை தானே கல்யாணம் பண்ணேன். உனக்கு தான ரெண்டு பிள்ளை பெத்தேன். அப்போ நீ தான் பார்க்கணும்… வேற யார் பார்ப்பா…”
“எங்களுக்காக வாழ்ந்தையா… வேற யார்க்காக வாழணும். உன்னை நம்பி, உன்னால வந்த உன் குடும்பத்தை நீ தான் பார்க்கணும்… கல்யாணம் ஆன புதுசுல கொஞ்சுவாங்க, காலத்துக்கும் கொஞ்சிட்டேவா இருப்பாங்க…”
“அட பாவி…” என்று நெஞ்சில் கை வைத்தவள்,
“என்ன சொன்ன நான் உன்னை சரியா பார்க்கலையா?…. இந்த உடம்ப ரெண்டா வெட்டி போட்டாலும் உம் பேரை தான்யா சொல்லும். நானா உன்னை கவனிக்கல. சாமின்னு கையெடுத்து கும்பிட்டா உம் முகம் தான் வந்து நிக்கும். காலையில எந்திருச்சு என்னை சமைக்கன்னு கேக்குறதுல இருந்து ராத்திரி படுக்கும் போது வேற எதுவும் வேணுமான்னு கேக்குறது வரை உம் நினைப்பு தான், உன் தேவை மட்டும் தான் முன்ன நிக்கும்…”
“சாலா…” என்று பிரகாஷ் முன்ன வர
“ கூப்பிடாத உம் வாயாலா எம் பேரை சொல்லாத… உன்னையெல்லாம் ஏழு முறை இல்லை எழுவது முறை கத்தியால் குத்தினாலும் எம் மனசு ஆறாது. கடைசில நீ ஊர் மேஞ்சதுக்கு கட்டுன பொண்டாட்டி தான் காரணம்ன்னு சொல்லிட்டா…”
“புருசன், பொண்டாட்டின்னா கட்டில மட்டும் காட்டுற உறவா என்ன… உன்னை கொஞ்சிட்டே ஒவ்வொரு ராத்திரிக்கும் உன் தேவையை நிறை வெத்துறவ தான் பொண்டாட்டி… நான் ஒரு மடச்சி உன் புத்தி தெரியாம, உன்னை புருசனா அடைந்தது நினைச்சு பூரிச்சு போனேன்…”
“ஆமா, நான் கொஞ்சம் தள்ளி தான் நின்னேன். எதுக்கு ? எல்லா விவரமும் தெரிஞ்ச மகன், எப்ப வேணாலும் வயசுக்கு வர தக்க மக இருக்குற வீடுன்னு என் நடத்தை ஜாக்கிரதையா தான் இருக்கும். ராத்திரி ஒரு சேலை காட்டினாலும், “என்னாம்மா எப்பவும் நைட்டியோடு இருப்ப, இன்னைக்கு என்ன சேலை. எதுவும் விசேசமான்னு மகன் நிப்பான்…”
“கொஞ்சம் பூ கூட வச்சாலும், “இன்னைக்கு என்னம்மா பூ அதிகமா வச்சு இருக்க, என்ன விசேஷம்ன்னு தான் மக கேள்வி வரும். இதை எல்லாம் எதார்த்தமா, சகஜமா எடுக்குற மாதிரி நான் வளரல. எங்க அக்கா வயசுக்கு வந்ததுல இருந்து எங்கப்பா வெளி திண்ணையில தான் உறக்கம். அஞ்சு வயசுக்கு வர மாதிரி இருக்கவும் என் கவனம் எல்லாம் அவ மேல தான். பொம்பளை பிள்ளை பருவ வயசு கையிலே பிடிச்சு நின்னேன். அஜய் பத்தாவது அவன் மேலயும் கவனம் வைக்கணும். ஆம்பிளை பிள்ளை தான்னாலும் ஒழுக்கமா வளர்க்கணும் தானே… வீட்டில என்ன பாக்குறாங்களோ, அது தானே வெளிய… பிள்ளைக மேல அக்கறையும், கவனிப்பும் அதிகம் செலுத்தினேன். அவங்க வயசு அப்படி, அதுக்காக உங்க மேல பாசம் இல்லன்னு ஆகுமா…”
“ நான் உங்களை நம்புனேன். எனக்கு பிள்ளைக மேல அக்கறை இருக்குற மாதிரி தானே உங்களுக்கும் இருக்கும்ன்னு நம்பினேன். அங்க தான் தப்பு பண்ணிட்டேன்…”
error: Content is protected !!