Skip to content
Post Views: 16,441
இலக்கணம் பெண்மையே!…
அத்தியாயம் 13.2
சாலாக்கு முட்டி கொண்டு வார்த்தைகள் வெளிவந்தது, அதிகமான அழுத்தம் ஒழுங்காக பேச விடவில்லை. நெஞ்சே வலித்தது. முன்பெல்லாம் பொண்டாட்டி சரியில்லை அடுத்தவளை தேடி போனேன் என்பார்கள். இப்போது எல்லாம் அப்படி கிடையாது என்று நினைத்து இருக்க, கண் முன் அவள் புருசனே காரணம் சொல்லி கொண்டு நிற்கிறான்.
உலகத்தில் எந்த பொண்டாட்டியாவது புருசன் வேற ஒருத்தி கூட குடும்பம் நடத்த காரணமாக இருப்பாளா… இவனின் சப்பை கட்டுக்கு உடைய கூடாது, முகத்துக்கு நேரா பதில் தான் கொடுக்க வேண்டும்.
Advertisement
சேலை முந்தியால் முகத்தை அழுந்த துடைத்தவள். நிமிர்ந்து நின்று,
“ஆக, நீங்க வழி மாறி போனதுக்கு நான் தான் காரணம்…”
“அப்படி சொல்லலை சாலா, நியும் ஒரு காரணம். நீ விலகி நிக்கவும் தனிமை என்னை தப்பு பண்ண தூண்டிருச்சு…”
Advertisement
“ம்ம், தப்பு ஒன்னும் ஒரே நாள்ல நடந்து முடியாது. அதுவும் நீங்க செஞ்சது, பக்க திட்டமிட்டு செஞ்சது. ரொம்ப யோசிச்சு தெளிவா நடத்தி இருக்கீங்க. உங்க மனசுல ஏதோ ஒரு மூலையில் ஆசை இருந்திருக்கு, அதுக்கு ஷாலினி தூபம் போடவும் பத்திகிச்சு… சரி தான். ஆனா, எனக்கு ஒரே ஒரு கேள்வி, இப்போ நான் என்ன பண்ணனும்…”
Advertisement
“என் தப்புக்கு மன்னிப்பு தவிர வேற எதுவும் என்னால கேட்க முடியாது. குடும்பம், பொண்டாட்டி, பிள்ளைக, பொறுப்பா வாழ்ந்த எனக்கு ஷாலினியோட கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை மேல ஒரு ஈர்ப்பு. செஞ்சு தான் பார்ப்போம்ன்னு ஒரு எண்ணம், அப்படி என்ன தான் இருக்குன்னு ஒரு ஆர்வம், என்னை மீறியா நடக்க போகுதுன்னு ஒரு அகந்தை. என்னையே இழந்து, எல்லாத்தையும் இழந்து, வழி மாறி போய்ட்டேன். என் மனசாட்சி குத்துது. இனி எனக்கு அந்த வாழ்க்கை வேணாம். எனக்கு என் குடும்பம் தான் முக்கியம்…” என்று பிரகாஷ் சொல்ல
“அதாவது, உள்ளங்கையில தேனு இருக்க சும்மா இருக்க முடியலை. நக்கி பார்த்தா ஒரே தித்திப்பு, இவ்வளவு இனிப்பு ஆகாதுன்னு கை கழுவ பாக்குறீங்க. பலே கில்லாடி தான்…”
“சாலா, அது வந்து…” என பிரகாஷ் தொடங்கும் போதே…
Advertisement
“உங்க பக்க விளக்கத்தை முழுசா கேட்டாச்சு, இனி என் பக்க விளக்கத்தை நீங்க கேட்டு தான் ஆகணும். ஏன்னா, நாம ரெண்டு பேரும் தான சேர்ந்து வாழ்ந்தோம்… அநியாயம் பண்ண உங்களுக்கே நியாயம் இருக்கும் போது, துரோகத்தை நெஞ்சுல சுமந்து நிக்கிற எனக்கு நியாயம் இருக்காதா… என் பக்க நியாயத்தையும் கேளுங்க…” என்றவள் முகம் கழுவி வந்து சேரில் அமர்ந்தாள்.
நிர்மலமான மனைவி முகம் கணவனுக்கு குழப்பத்தை கொடுத்தது…
“எனக்கு ஒரு விசயம் புரியவே இல்லை. குடும்பத்துல மூத்தவனா பொறந்து பொறுப்ப சுமந்த உங்களுக்கு, கைக்கு அடங்கி போற, கூட்டு குடும்பத்தை கட்டி இழுக்குற பொண்ணு வேணும்ன்னு தானே, ஏதோ ஒரு மூலையில் கிராமத்தில் வளர்ந்த என்னை நீங்க கட்டுனிங்க… கல்யாணம் ஆன புதுசுல உங்க ஆசையும், மோகமும் ராத்திரி மட்டும் தானே…”
“எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் இருக்கும். சரியா தலையை துவட்டால, நீர் வடியுது. என் சேலையை வச்சு உங்க முதுக துடச்சதுக்கு என்ன சொன்னீங்க, “தள்ளி போ சாலா, கல்யாணம் ஆகாத என் தம்பி, தங்கச்சி இருக்காங்க… கொஞ்சல் எல்லாம் நாலு சுவத்துகுள்ள தான்னு நீங்க தான சொன்னீங்க…”
பிரகாஷ் அமைதியாக மனைவி முகம் பார்த்தான்.
“நானும் புது பொண்ணு தான் எனக்கு ஆசை இருக்காது. கல்யாணம் ஆன புதுசுலயே தள்ளி நின்ன நீங்க நாப்பது வயசுலையா தேட போறீங்கன்னு தள்ளி நின்னதுல என்ன தப்பு…” கொஞ்சம் நிறுத்தியவள்,
“நான் என்ன உங்களை கவனிக்கல. ஒரு டம்ளர் தண்ணிக்கு கூட நான் தான் வேணும். சாலா தண்ணி, சாலா துண்டு, சாலா செருப்பு, சாலா சோப்பு… இப்படி எத்தனை, இதை விட பக்கத்துல தான் சாம்பார் இருக்கும். உங்க கை அங்க போகாது, சாலா சாம்பார்ன்னு என் முகம் தான பார்ப்பீங்க…”
“காலை சாப்பாடு உங்களுக்கு பிடிச்சது, மதியம் சமையல் நீங்க கேட்டது, ராத்திரி டிபன் உங்க விருப்பத்தை பொறுத்து… குளிக்கிற சோப்பு கூட கவரை பிரிச்சு கொடுக்கணும்… நீங்க வாய் தொறந்து மறு சோறு, தோசை, இட்லி எதுவும் கேட்க மாட்டிங்க. உங்க முகம் பார்த்து பரிமாறுனும்… டென்ஷனா இருந்த தலையை புடிச்சு விடணும், வேலை அதிகம்ன்னா கால் அமுக்கி விடணும், சீக்கிரம் ஆபீஸ் போக நான் உறங்காமல் கூட உங்களை எழுப்பணும்…”
“உங்களுக்கு மார்னிங் ஷிப்ட் வந்து காலையில ரெண்டு மணிக்கு… வெளில சாப்பிட்ட உடம்பு கெடும்ன்னு அர்த்த ராத்திரியில் சாப்பாடு கட்டி கொடுக்குற நான் உங்களுக்கு சலிச்சு போனேன், அப்படி தான…”
“என்னங்க, என்னங்க இதை தாண்டி எனக்கு எதுவுமே தெரியாது. பாகற்காய் புருசனுக்கு பிடிக்காது, அந்த காய் வாங்குறதே இல்லை. கல்யாணம் ஆகி இத்தனை வருசத்துல, “சாலா, இன்னைக்கு உனக்கு புடிச்ச மெனு செய்ன்னு ஒரு வார்த்தை வந்து இருக்கா…”
“வராது, நீங்க என்னைக்கும் என்னை யோசிச்சது இல்லை. உங்க தனிமைக்கு ஷாலினி ஆறுதலா… அப்ப என் தனிமைக்கு…”
“சாலா…” என்றான் பிரகாஷ் அதிர்ந்து.
“உங்களை கல்யாணம் பண்ணும் போது எனக்கு இருபத்தி ஒரு வயசு தான். ரெண்டு பிள்ளைகளும் ஆபரேசன், அப்புறம் குடும்ப கட்டுப்பாடு செஞ்சு உடம்பு ஓரளவு நார்மலுக்கு வரும் போது முப்பதை தொட்டாச்சு. அது வரை என் உடம்பு என் கட்டுப்பாட்டுல தான் இருந்துச்சு… அப்புறம் முப்பத்தாறு வயசுல இடுப்புல ஒரு ஆபரேசன், அடுத்த ஒரு வருசத்துல கால் நரம்பு சுருண்டு நடக்க முடியாம போச்சு… எனக்கு ஒரே பயம். என் குடும்பம் என்னை நம்பி தானே இருக்கு. இந்த வயசுல படுத்துட்டா என் குடும்பத்தை யார் பார்க்க… மரண பயம் என்ன தெரியுமா… என் புருஷனை, பிள்ளைகளை விட்டு போயிடுவோமோன்னு பயம் ஒரு பக்கம். இந்த நேரத்துல நான் யாரை தேடுவேன். ஒரு ஆறுதல், நான் இருக்கேன்னு அரவணைப்பு எல்லாம் புருசன் கிட்ட தான தேட முடியும். நிச்சயம் மனசு உங்களை தான் தேடுச்சு…”
“ஆனா நீங்க, உங்களுக்கான சௌகரியம் தான் பார்த்தீங்க. சாலா இல்லன்னா என்ன ஷாலினி, குரங்கு புத்தி வேற மரம் தாவி போச்சு… இந்த பைத்தியகாரிக்கு அது தெரியலை. ஐயோ! என் புருசன் நான் இல்லாம கஷ்ட படுராங்கன்னு அவ்வளவு வலியையும் மீறி போராடி வந்தேன். ஆனா, உங்களுக்கு எனக்கு செலவு செஞ்ச காசு தான் கண்ணுக்கு தெரிஞ்சு இருக்கு…”
“எங்களுக்காக வாழ்ந்தீங்களா…” என்று வழியும் கண்ணீரை துடைத்தவள்.
“உங்களுக்கு ஒரு நாள் காய்ச்சல் வந்தா குடும்பமே பதரும். நான் உங்க பக்கத்திலே இருக்கணும், பிள்ளைகளுக்கு கூட வெறும் பருப்பு சாதம் தான். உங்களுக்கு தான் கவனிப்பு அதிகம். மாத்திரையை கூட பிரிச்சு கைல கொடுக்கணும். அதுவே நான் ஒரு நாள் முடியலன்னு படுத்தா… நீங்க என்ன சொல்குவீன், நியாபாகம் இருக்க, “சும்மா படுத்தே கிடைக்காத சாலா, போய் டாக்டர் பாரு… நீ ரெஸ்ட் எடு சாப்பாடு நான் வெளிய பார்த்துக்கிறேன்…” இந்த பதில் தான் வரும். உங்களோட அதிக பட்ச கவனிப்பே ரெண்டு தடவை போன் பண்ணி விசாரிப்பீங்க. அதுக்கே இந்த முட்டாள் புரிச்சு போவ… அம்புட்டு வேலைக்கு நடுவுல எனக்கு போன் பண்ணி விசாரிக்கிறார்ன்னு…”
பிரகாஷ் தலை குனிந்தான்.
“இதையெல்லாம் விட, சாப்பாடு எடுத்து வைக்கிறேன் தான, சாலா உனக்கு இருக்கான்னு என்னைக்காவது ஒரு நாள் கேட்டு இருப்பீங்களா… உங்க பசிக்கு நீங்க சாப்புடுவீங்க, உங்க பிள்ளைகளும் தான்… இந்த மடச்சி எனக்கு இல்லைன்னு எல்லாம் நினைக்காம நம்ம புருசன் சாப்புடுறாங்கன்னு சந்தோசமா தான் பார்ப்பேன்…”
“வருசா வருசம் தீபாவளிக்கு பட்ஜெட் போடுறோம். எத்தனை வருசத்துல ஒரு நாளும் நான் ஆசை பட்டதை எடுத்ததில்லை தெரியுமா…”
“என்ன…” என்று அதிர்ந்து போனான் பிரகாஷ்.
நீங்களும் உங்க பிள்ளைகளும் ஆசை பட்டதை எடுக்கும் போது மிச்ச மீதி இருக்குற காசுக்கு நான் எனக்கு எடுப்பேன். நானே நினைச்சுப்பேன் ஆபிஸ் போறவங்க பத்தாயிரம் ரூபாய்க்கு டிரஸ் எடுக்கலாம், நாம வீட்டுல தான இருக்கோம் ஏதோ ஒன்னு புதுசுன்னு அவ்வளவு தான்…”
“ஒரு ஏழு வருசம் முந்தி ஒரு சேலை. கிளி பச்சையில ரோசும், நீலமும் கலந்த ஒரு பார்டர். அவ்வளவு பிடிச்சது. முப்பதாயிரம், இந்த ஏழு வருசமும் என்னால எடுக்க முடியலை. நம்ம பட்ஜெட் எனக்கு வரல… ஆனா, நீங்க உங்க கள்ள காதலி கூட ஒரு நாள் ராத்திரி ஹனிமூன் டேக்கு நாப்பாதாயிரம் செலவு பண்ணீங்க. அதை பார்க்கும் போது எனக்கு எவ்வளவு வலிக்கும். நீங்க போடுற செருப்பு கூட ஐயாயிரம், ஆனா நான் தினமும் போடுற நைட்டி விலை வெறும் ஐநூறு…”
. வாயடைத்து போய் பிரகாஷ் பார்க்க,
“இத்தனை வருச வாழ்க்கையில ஒரு நாளாவது குறை சொல்லி இருப்பேனா… ஆடம்பர செலவு ஒன்னு வச்சு இருப்பேனா… அதையும் விடுங்க, எங்க அப்பா என்னை கல்யாணம் செஞ்சு குடுக்கும் போது ஐம்பது பவுன் போட்டாங்க. அப்புறம் சீர் அது, இதுன்னு ஒரு முப்பது. மொத்தம் எம்பது பவுன் நகை என்னோடது… அதை எத்தனை நாள் நான் கழுத்து நிறைய போட்டு இருந்தேன், சொல்லுங்க… உங்க தங்கச்சி கல்யாணம், உங்க தம்பி படிப்பு, அம்மா வைத்திய செலவு, சொந்த வீடுன்னு மாத்தி மாத்தி அடகுக்கு தான் போதே தவிர, இத்தனை வருசத்துல என் கழுத்து நிறையல… ஒத்த தாலி கொடி தான் பதினேழு வருசமும். என்னைக்காவது சொல்லி காட்டி இருக்கேன்…”
பிரகாஷ் யோசனையில் இவை எதுவும் கிடையாது.
“இத்தனை வருசத்துல என்னைக்காவது மாமியார் சண்டை, நாத்தனார் சண்டைன்னு ஒரு நாளும் வந்ததில்லை. ஏன் போடணும், அப்படி சண்டை போட்டா யாரை பாதிக்கும் எம் புருசனை, என் குடும்பத்தை… விட்டு கொடுத்து, அணுசரிச்சு தான் போவேன்…”
“குடும்பம்ன்னா நிறை, குறை இருக்க தான் செய்யும். விட்டு கொடுத்து, வாய மூடி, அணுசரிச்சு, தியாகம் செய்து தான் குடும்ப வண்டி ஓடும். வாழ்க்கையை கணக்கு பார்க்கலாம், ஆன புருசனும் பொண்டாட்டியும் கணக்கு பார்த்தோம் செல்லா காசு தான் மிஞ்சும்… பிள்ளைகளை நீங்க பார்த்தீங்களா?… உங்க முகம் எனக்கு பதில் சொல்லும்… அப்பா டென்ஷனா இருக்காங்க டிவிய போடாதீங்க, அப்பா அமைதியா இருக்காங்க சத்தம் போடாதீங்க, அப்பா உறங்குறாங்க விளையாடாதீங்கன்னு, உங்களுக்காக பிள்ளைகளை தான் அடக்குவேன். பிள்ளைகளுக்காக நீங்க விட்டு கொடுங்கன்னு ஒரு நாளும் சொன்னதில்லை. ஏன்?… இந்த மனுசன் யாருக்காக ஓடி ஓடி சம்பாதிக்கிறாங்க… நமக்காக, நம்ம குடும்பத்துகாகன்னு எந்த யோசனையும் உங்களை வச்சு தான். ஆனா, நீங்க எங்களை யோசிக்களையே…”
பிரகாஷ் குறுகி போனான். இது எல்லாம் அவன் யோசனையில் கூட இல்லையே…
ஐ லவ் யூ, நீ தான் உலகம், உனக்காக கையை அறுத்துகுவேன், மூக்கை அறுப்பேன்றது தான் காதல்ன்னு நினைச்சீங்களா… போயா பைத்தியக்கார, உங்க ஒரு பார்வைக்கான அர்த்தம் எனக்கு தெரியும், உங்க புருவம் ஒரு நொடி சுளிச்சா கூட என்னால பதில் சொல்ல முடியும். உங்க அமைதில கூட எங்களால அர்த்தம் காண முடியும். நீங்க எனக்கு எந்த விளக்கமும் கொடுக்காமவே உங்க தேவை எனக்கு தெரியும். இது தான் என்னோட காதல். நீங்க கேக்குறது முன்னாலவே உங்களுக்கு கொடுக்குறதால என் அன்புக்கு மதிப்பில்லாம போச்சு… இலவசமா கொடுத்தா பொருள் மட்டும் இல்லை அன்பு கூட மதிப்பு இருக்காது போல…” என்றாள் விரக்தியாக,
“நானும் என் தேவையை சொல்லி இருக்கணும், கண்ட படி செலவு செஞ்சு இருக்கணும், டிரஸ், நகைன்னு வாங்கி குவிச்சுருக்கணும், என் பேருல சொத்து வாங்கி இருக்கணும், வீட்டு வேலைக்கு ஆள் வச்சு இருக்கணும், வெளிநாடு, வெளியூர்ன்னு கூட்டிட்டு கையை கடிக்கிற சுத்தி இருந்தா கொழுப்பெடுத்து போய் அடுத்தவளுக்கு செலவு செய்ய தோணுமா…”
. “நீ இப்படி கண்டபடி ஊர் மேய்வன்னு நான் நினைக்கலையே. எம் பிள்ளைகளுக்காக ன்னு தான் இறுக்கி பிடிச்சு செத்து வச்சேன். ஆனா, நீ சம்பாத்தியம் உன்னதுன்னு என் பிள்ளைக வாழ்க்கையை அழிச்சுட்டா…”
“எங்க அப்பா எனக்கு போட்ட நகையை தாண்டி என் மகளுக்கு வேற இல்லன்னு நகை எடுக்க சொன்னேன். ஒத்த வீட்ட தாண்டி எம் மகனுக்கு எதுவுமில்லைன்னு ஒரு இடம் வாங்க சொன்னேன். லட்ச லட்சமா கள்ள காதலிக்கு கொடுக்கும் போது கணக்கு தெரியலை, பதினேழு வரும் நாய் மாதிரி உழைச்ச பொண்டாட்டிக்கு கணக்கு பாக்குற… உங்களை சொல்ல முடியாது, சாலா தான் ஏமாளி…” மூக்கை உறிஞ்சியவள்,
“இந்த பணத்தை எடுத்து கண்ட படி செலவு செய்யும் போது ஒரு நிமிசம் கூடவா உனக்கு நான், எம் பிள்ளைக நினைப்பு இல்லை. நீயா எங்களுக்காக வாழ்ந்த, நீ உனக்காக வாழ்ந்த… எல்லாம் தப்பான எண்ணம். உனக்கு இருந்த ஆசையை ஷாலினி மூலமா நிறைவேத்தி கிட்ட, சந்தர்ப்பம் சூழ்நிலை எல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. இப்படி கூட வாழலாம்ன்னு ஒரு குறுக்கு புத்தி…”
“தெரிஞ்சாலும் பொண்டாட்டி என்ன சொல்லுவா… நிச்சயம் சண்டை இருக்கும் அழுவா, ஆனா எவ்வளவு நாளைக்கு… வெளிய தெரிஞ்சாலும் ஒரு பொம்பளையை தான் குறை சொல்லுவாங்க… நாப்பது நெருங்க போற இந்த வயசுல கோவிச்சு அம்மா வீட்டுக்கு போக முடியாது. எங்க அப்பா, அம்மா தளர்ந்து போனாங்க, மதினி கிட்ட இடி சோறு திங்க முடியுமா… இந்த வயசுல வேலைக்கு போகுறது சாத்தியமில்லை. புருசன் கையை பிடிச்சு ஆத்தா கடக்கும் போது ஆரம்பித்ததிலே கை விட்டா பின் வாங்கிருவேன், ஆத்த கடந்து கை விட்டா மேல ஏறிடுவேன். ஆனா, நாட்டாத்துல கை விட்டா… மூழ்காம இருக்க உங்க கையை தானே பிடிக்கணும். மூழ்க போறது நான் மட்டும்ன்னா கண்ணை மூடுவேன். ஆனா, உன்னை நம்பி ரெண்டை பெத்துட்டேன் தான, அதான் போராட துணிஞ்சுடேன். நான் கரை சேருவேன்னு நீங்க நினைக்கல போல…”
“நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது எங்க அப்பா வெளிய எங்கேயாவது கறி சாப்பிட்டா, வரும் போது கறி எடுத்துட்டு தான் வருவாங்க. பொண்டாட்டி, பிள்ளைகளை விட்டு சாப்பிட மனசு வராம தான். இதை பார்த்து தான் நான் வளர்ந்தேன். அதனால், எம் பிள்ளைகளை தாண்டி எனக்குன்னு ஒரு வாழ்க்கையை யோசிச்சது கூட இல்லை…”
“உன் தனிமைக்கு அவ ஆறுதல்ன்னு வாய் கூசாமல் சொன்னியே… அஞ்சு பிறந்து ஒரு வருசம் நீ வெளிநாடு போய்ட்ட, பிள்ளைகளை வச்சு தனியா தான் இருந்தேன். என் தனிமைக்கு நான் எந்த ஆம்பிளையை துணை பிடிச்சேன். எனக்கு யார் ஆறுதல்…”
“சாலா…” என்று கத்தினான் பிரகாஷ்.
“போதும் ரொம்ப கத்தாத, உன் மனச தொட்டு சொல்லு அவளை நெருங்கும் போது உனக்கு என் நினைப்பு வரலை, அவளை கட்டி பிடிக்கும் போது எம் வாசம் வரலை, அவளுக்கு முத்தம் கொடுக்கும் போது என் முகம் கண் முன்னாடி வரல…”
“சாலா…” என்றான் பிரகாஷ் இயலாமையில்…
“பஸ்ல, டிரெயின்ல போகும் போது கூட்டத்துல ஒரு ஆம்பிளை இடிச்சா கூட எனக்கு கொமட்டும்… உன்னை தவிர வேற ஒரு ஆம்பிளை வாசம் என்னால சகிக்கவே முடியாது. ஆனா, நீ ரசிச்சு, சுகிச்சுட்டு, அதுக்கு நியாயம் சொல்ற…”
“நீ கட்டுன ஒத்தை தாலி கொடிய உயிரா பிடிச்சு, உன்னை மட்டுமே நினைச்சு, ஒரு பூ வச்சாலும் உனக்காக, சேலை காட்டுனாலும் உனக்காக, சமைச்சாலும் உனக்காகன்னு உம் நினைப்பை தாண்டி எம் மனசுல ஒன்னும் இல்லை. நீங்க முகம் சுருக்குன எனக்கு மனசு தாங்காது, நீங்க அழுதா கூட சேர்ந்து நானும் அழுவேன். உன் கண்ணீர் எனக்கும் கண்ணீரை வர வைக்கும். நீ இல்லாட்டி எனக்கு ஒண்ணுமே இல்லன்னு நினைச்சேன், உனக்கு அப்புறம் எனக்கான வாழ்க்கை எதுவுமே இல்லனு நினைச்சேன். சுமங்கலியாவே போய் சேரனும்ன்னு தவம் கிடந்தேன்…”
. “ஆனா, நீங்க… பொண்டாட்டிய குத்து கல்லு மாதிரி நான் இருக்கும் போதே, வேற ஒருத்திய பொண்டாட்டின்னு சொன்னீங்க. உங்க ஆடியோ கேட்டேன்… ஷாலினி, ஐ லவ் யூ பொண்டாட்டின்னு உங்க வார்த்தையை கேட்கும் மரணம் கூட அப்படி வலிக்காது. என் வலி தெரியுமா?… அத்தோட வீரியும் தெரியுமா?… உன்னோட ஒத்த வார்த்தை மன்னிப்பாலா சரி செய்ய முடியுமா?…”
“உங்களுக்கு மன்னிப்பு கேட்க கூட தகுதி இல்லை. என் வாழ்க்கையில பிரகாஷ்ன்னு ஒரு ஆள் இல்லவே இல்லை. நம்ம பாதை ரெண்டா என்னைக்கோ பிரிஞ்சு போச்சு… இனி ஒட்டாது…”
error: Content is protected !!