Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மிளகாய் பழுத்தது

மிளகாய் பழுத்தது : 2

மிளகாய்: 2

மாலையில் வீடு திரும்பிய கணவனுக்கு சுட சுட டீ பரிமாறினார் உமா. கை கால்களை கழுவிவிட்டு வந்த சங்கர் அதை பருக ஆரம்பித்தார்.இது தான் சமயம் இப்போவே பாப்பா,தம்பி ஸ்கூல் லீவ் பத்தியும் அம்மா வீட்டுக்கு போறத பத்தியும் பேச வேண்டியது தான் .

“என்னங்க ?”

“ம்ம் சொல்லு”



Advertisement

“பாப்பா,தம்பி ரெண்டு பேருக்கும்”

“ரெண்டு பேருக்கும் என்ன ?”

“ரெண்டு பேருக்கும் ஒன்னும் இல்லங்க ,உள்ள தான் உக்காந்து பரீட்சைக்கு படிச்சிட்டு இருக்காங்க “

Advertisement

“சரி வேற என்ன ?”

Advertisement

“இல்ல இன்னும் ஒரு வாரத்துல பரீட்சை முடிய போகுது லீவ் விட்ருவாங்க அதான் ரெண்டு பேரையும் கூட்டிகிட்டு அம்மா ஊருக்கு போயிட்டு வரட்டுமா?”

“என்ன திடீர்னு புதுசா ?”

“புதுசா? வருஷம் வருஷம் கேட்டுட்டு தான இருக்கேன் “

Advertisement

“அதுக்கு நான் என்ன சொல்லுவேன் வருஷம் வருஷம் “

“வேணாம்னு தான் சொல்லுவீங்க “

“அதே தான் இப்பவும் “

“அம்மா அப்பா ரொம்ப ஆசைப்படறாங்க”

“வீட்ல சும்மா தான இருக்க வெறும் டீ மட்டுமா போட்ட,கூட கொஞ்சம் பஜ்ஜியும் செய்ய வேண்டியது தான “

“நாளைக்கு செய்றேன், அம்மாட்ட காலைல போன் பேசினேன் அப்போ தான் வர சொன்னாங்க”

“நாளைக்கு வாழைக்காய் பஜ்ஜி போடாம உருளைக்கிழங்கு பஜ்ஜி போடு “

உமாவிற்கு புரிந்தது அவர் ஊருக்கு போவதை பற்றி பேச விரும்பாமல் தான் பேச்சை மாற்றுகிறார் என்று.

இந்த வருஷமும் விட மாட்டார் என்பதை அறிந்து கொண்டவர்,

“சரிங்க உருளைக்கிழங்குலயே போடறேன்” என்று மட்டும் வேண்டா வெறுப்பாக சொல்லிவிட்டு அங்கேயே நின்றார்.

“இவ்ளோ பேசறியே காலைல புருஷன் காரன் மீட்டிங் போனானே என்னாச்சு , ஏதாச்சுன்னு ஒரு வார்த்தை கேக்க தோனுதா”

இதையெல்லாம் கேட்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதோ உமாவிற்கு தோன்றியது ஆனால் அவருக்கு தெரியும் என்னாச்சு என்று கேட்டால் உனக்கு எதுக்கு இதெல்லாம் என்று தான் கேட்பார் .இருப்பினும் இவர் சொன்னதிற்கு என்றே கேட்டார்.

“நானே கேட்கலாம்ன்னு தான் இருந்தேன் , மறந்துட்டேன் “

“மறக்கறது ஒன்னும் உனக்கு புதுசு இல்லயே , உன் மூஞ்சில முழிச்சிட்டு போனால் வெளங்குமா? புரொமோஷனும் கிடைக்கல ஒரு மண்ணும் கிடைக்கல “

தன்னை ராசி இல்லாதவள் என்று சொன்ன கணமே உமாவின் கண்களில் நீர் கோர்த்தது.பழைய நினைவுகள் எல்லாம் மனதில் அலைகளாய் தவழ்ந்தது.

அப்பொழுது உமாவிற்கு வயது பத்து இருக்கும் . உமாவின் தந்தை வண்டியில் தான் ஜவுளி வியாபாரம் செய்வார். தினமும் காலை உமாவின் முகத்தில் தான் முழிப்பார். தினமும் காலையில் உமாவின் கையால் தான் முதல் வியாபாரம் நடக்கும் . வேறு யாரும் அவரிடம் இருந்து முதல் ஆளாக துணி வாங்கிட முடியாது . அப்படி பட்ட ராசிக்காரர் தான் உமா.

ஒரு நாள் உமா அவரின் சித்தி வீட்டிற்கு சென்றிருந்தார் அன்று இரவு வீட்டிற்கு வர தாமதம் ஆகும் என்பதால் அன்று சித்தி வீட்டிலேயே தங்கி கொண்டார் . இங்கே உமாவின் தந்தையிற்கோ அன்று தான் முதல் நாள் தன் மகளை பிரிந்து இருப்பதால் எதுவும் பெரியதாக தோன்றவில்லை .

அடுத்த நாள் காலை உமாவின் முகத்தில் முழிப்பதற்கு உமா இல்லை , சரி என்று வியாபாரத்திற்கு குளித்து முடித்து விட்டு கிளம்பியவர் வழக்கம் போல முதல் வியாபாரம் செய்ய தன் மகள் உமாவை கண்கள் தேடின . கண்களும் ஏமாந்தது . சரி என்று வியாபாரத்திற்கு கிளம்பினார்.

இத்தனை வருடங்களில் இது போல் நடந்ததே இல்லை என்ற நிலைமை .இது போன்ற குறைந்த விற்பனையை அவர் பார்த்ததே இல்லை . மனசெல்லாம் நொந்து போனார் , அன்று மாலை வீடு திரும்பிய போது உமா சித்தி வீட்டில் இருந்து வந்து சேர்ந்திருந்தார். உமாவை பார்த்தவுடன் அவருக்கு மகிழ்ச்சி பொங்கியது.அடுத்த நாள் காலை எப்பொழுதும் போல உமாவின் முகத்தில் முழித்து , அவர் கையால் முதல் வியாபாரம் செய்து விட்டு சென்றார் . எப்பவும் போல வியாபாரம் சிறப்பாக நடந்தது. அன்று மாலை வீட்டுக்கு வந்த போது தின்பண்டங்கள் நிறைய வாங்கி வந்தார்.உமாவிற்கு அதை பார்த்து மகிழ்ச்சி தாளவில்லை .

“இதெல்லாம் எனக்காப்பா?”

“எல்லாமே உனக்கு தான் “

“ஐ..ஜாலி “

“நீ என்னோட அதிர்ஷ்ட தேவதை தங்கம் ” என்று உமாவின் நெற்றியில் முத்தம் வைத்த காட்சியை நினைத்து பார்த்து சிலை போல் நின்றுகொண்டு இருந்தார் உமா.

“என்ன டி அப்படியே நிக்கற, போ என் மூஞ்சில முழிக்காத,அந்த பக்கம் போ “

இரவு படுக்கைக்கு சென்ற பின்பும் இவர் சொல்லி திட்டியது மனதிற்கு ஏனோ வேதனை அளித்தது . தினமும் திட்டுபவர் தான் இருப்பினும் இன்று ஏனோ உமாவிற்கு மனம் மிகுந்த வேதனை அளித்தது. சத்தம் வெளியே கேட்காத மாதிரி மெல்ல தேம்பி தேம்பி அழுதார் . ஆராதனா அதை பார்த்துவிட்டாள்.

“ஏன் மா அழுகரிங்க ?” எனக் கண்களைத் துடைத்துவிட்டாள்.

“ஒன்னும் இல்ல டா” என ஆராதனாவைக் கட்டியணைத்து பக்கத்தில் படுக்க வைத்தார் .

“சொல்லுங்க மா ஏன் அழுகரிங்க”

மௌனம் சாதித்தார் உமா.

“எனக்கு தெரியும் அப்பா இன்னிக்கு உங்களை ரொம்ப திட்டிட்டாரு தான “

“இல்ல இல்ல அப்பா திட்டல எனக்கு தாத்தா, அம்மாயி ஞாபகம் வந்துருச்சு “

“அப்போ வாங்க போலாம்”

“எங்க?”

“அம்மாயி , தாத்தாவைப் பார்க்க தான்”

“உனக்கு பரீட்சை இருக்குல்ல, அது முடியட்டும் “

“ஓகே, கண்டிப்பா போலாம் “

“அப்பா பெர்மிஷன் குடுத்தா கண்டிப்பா போலாம் “

“எதுக்கு?”

“எதுக்கா? அப்பா பெர்மிஷன் குடுத்தா தான நாம போக முடியும் “

“அது தான் மா ஊருக்கு போக போறது நம்ம தான அப்பா எதுக்கு பெர்மிஷன் குடுக்கணும் “

இதற்கு மேல் உமாவிடம் பதில் இல்லை .

“உனக்கு தெரியாது டா , கல்யாணம் ஆகிருச்சுன்னா அப்படி தான் எதுக்கா இருந்தாலும் பெர்மிஷன் வாங்கணும் , இது எல்லாம் உன்கிட்ட ஏன் சொல்லுறேன் நீயே சின்ன பொண்ணு”

“அம்மா எங்கிட்ட தாராளமா சொல்லலாம் , எனக்கு பத்து வயசு ஆச்சு , நான் பெரிய பொண்ணு தான், நானும் பாத்துட்டு தான் இருக்கேன் அப்பா உங்களை திட்டிட்டே தான் இருக்காரு , உங்களை திட்டும் போது எனக்கு கஷ்டமா இருக்கும்மா , நீங்க ஏன் அப்பா திட்டும் போது அமைதியாவே இருக்கீங்க , எதுக்கு என்னை திட்றிங்கன்னு திருப்பி கேளுங்க , இன்னிக்கு நான் கேட்டேன் , உங்களால தான் புரொமோஷன் கிடைக்கலன்னு சொல்லிட்டு இருந்தாரு , அப்பா சரியா வேலை செய்யாம இருந்துருப்பாரு அதான் கிடைக்கல , நீங்க கவலை படாதீங்க அம்மா , இந்த தடவை நீங்க அவருகிட்ட பெர்மிஷன் கேட்க வேண்டாம் , நம்ம ஊருக்கு போலாம் . அண்ணனுக்கு உங்க மேல கவலையே இல்ல போல ,அப்பா திட்டும் போது நான் அவன் கிட்ட கேட்டேன் , அப்பா ஏன் அம்மாவை இப்படி பேசறாங்கன்னு, அவன் அதுக்கு ஆமா அம்மா மேல தான் தப்புன்னு சொல்லுறான், நீங்க ஒன்னும் கவலை படாதீங்க நான் இருக்கேன் ” எனக் உமாவைக் கட்டியணைத்தாள் ஆராதனா .

உமாவின் அழுத முகத்தில் சற்று புன்னகை பூத்தது.

“சரிங்க மேடம், நாளைக்கு பரீட்சை இருக்கு படுத்து தூங்கு ” என்று தன் மகளை உறக்கத்தில் ஆழ்த்தினார் .

என்ன தான் ஆராதனா உலகம் அறியாத சின்ன பிள்ளையாக இருந்தாலும் அவள் சொல்வதிலும் நியாயம் இருக்க தான் செய்கிறது என்பதை உமாவும் நன்கு அறிந்திருந்தார். இத்தனை வருட திருமண வாழ்வில் தனக்கென்று எதுவும் விருப்பப்பட்டு கேட்காத உமா இந்த முறை எப்படியும் அம்மா அப்பாவைப் பார்த்து விடுவது என்று மனதில் உறுதி பூண்டார்.

ஒரு வாரம் கழித்து ,

பிள்ளைகளின் பரீட்சை முடிந்தாகிவிட்டது . உமா ஒரு உறுதியுடன் தான் இருந்தார் இந்த முறை எப்பாடு பட்டாவது ஊருக்கு போய் விடவேண்டும் என்று. கடைசி முயற்சியாக அவரிடம் கேட்கலாம் என்று ஹாலிற்கு வந்தார் .

ஹாலில் அமர்ந்து கிரிக்கெட் மேட்ச்சை பார்த்து கொண்டிருந்தார் சங்கர்.

“என்னங்க “

“ஹே … சிக்ஸ்..போடு சக்க ” மேட்ச்சை ரசித்து கொண்டிருந்தார்.

“என்னங்க….” என்று சற்று குரலில் அழுத்தம் கொடுத்து கூப்பிட்டார் உமா.

உமாவை பார்த்தவர் ,

“என்ன ?” என்று வேண்டா வெறுப்பாக கேட்டார்.

“போன வாரம் உங்ககிட்ட கேட்டிருந்தேன்ல ஒரு விஷயம் “

“நீ நேத்து சொன்ன விசயத்த இன்னிக்கு மறந்துருவ , நான் மட்டும் நீ போன வாரம் சொன்ன விஷயத்தை இன்னிக்கு வரை ஞாபகம் வெச்சிட்டு இருப்பனோ ? என்ன மேட்டர்ன்னு சொல்லு “

“ஸ்கூல் லீவ் விட்டதுக்கு பொறவு அம்மா , அப்பா ஊருக்கு போறேன்னு சொன்னேன்னே “

“நான் தான் அப்போவே வேணாம்ன்னு சொல்லிட்டேன்னே”

“அதான் ஏன் போக கூடாது?”

“எங்கிட்ட எதிர்த்து கேள்வி கேக்கற அளவுக்கு வந்துட்டியா?”

“உங்ககிட்ட கேள்வி தான் கேட்டேன் , எதிர்த்து கேட்கல “

“இங்க பாரு உன்கிட்ட பேச நான் தயார் இல்லை , நீ போக கூடாதுன்னா போக கூடாது தான்,புரியுதா ?”

“நீங்க எங்கிட்ட பேச தயார் இல்லனா பரவால்ல, நான் உங்ககிட்ட பேச தயாரா தான் இருக்கேன் , நான் ஏன் போக கூடாது , பதில் சொல்லுங்க “

“என்னடி சும்மா சும்மா அதையே கேட்டுகிட்டு இருக்க ? நீ ஏன் போக கூடாதுன்னு சொல்லுறேன் , நீ ஊருக்கு போய்ட்டா இந்த வீட்டு வேலை எல்லாம் யார் செய்றது , எனக்கு ஏது சாப்பாடு , அதான் நீ ஊருக்கு போக கூடாது “

“அப்போ கடைசி வரை நான் போகவே கூடாதா “

“அதெல்லாம் எனக்கு தெரியாது , இப்போ போய் தூங்கு போ , காலைல எந்திரிச்சு சீக்கிரம் சமைச்சு குடு நேரமா ஆபீஸ் போகனும் “

அவரை திரும்பி கூட பார்க்காமல் சென்று படுத்து விட்டார் உமா. சிறிது நேரம் தேம்பி தேம்பி அழுதவர் அழுத மயக்கத்தில் உறங்கியே போனார் .

அடுத்த நாள் காலை சங்கர் ஆபீஸ் செல்ல தயாரானார் ,

“என்ன இந்த உமா காலைல இருந்து ரூமுக்கு உள்ளேயே என்னமோ பண்ணிட்டு இருக்கா , அப்படி என்ன பண்றா?”

“ஏய் உமா , என்ன பண்ணிட்டு இருக்க காலைல இருந்து ரூமுக்கு உள்ளேயே இருக்க “

“டிரஸ் எடுத்து வெச்சுட்டு இருந்தேன் “

“அலமாரில எடுத்து வெக்கற துணியை அடுக்கறது தான் இப்போ வேலையா, வேற வேலை இல்லையா” என்று சங்கர் சொல்லி முடிப்பதற்குள் உமா தன் ஆடைகளையும் , பிள்ளைகளின் ஆடைகளையும் அடுக்கிய லக்கேஜ் பேக்கை எடுத்து டேபிள் மேல் வைத்து சங்கரின் மீது பார்வையைத் திருப்பினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!