Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அரங்கேற்ற வேளை

அரங்கேற்ற வேளை – 7

வேளை 7 

லாலா சென்றதும் உதயா அப்படியே உட்கார்ந்துவிட்டாள். தனிமை அவளின் நீண்ட கால துணை. ஆனால் இன்றும் அது துணையாக இருப்பதை துளியும் விரும்பவில்லை. அரை மணி நேரம் அப்படியே சுவரில் சாய்ந்து, தரையில் உட்கார்ந்தவள் எழுந்தாள். ஊரிலிருந்து கொண்டு வந்த பெட்டியிலிருந்து துணிகளை அடுக்கினாள்.



Advertisement

மதியம் உணவு செய்ய, லாலாவுக்குக் குறுஞ்செய்தி அனுப்ப, அவனோ மதிய உணவுக்கு வர மாட்டேன் என்றான், வெளியே உண்ணப்போகிறேன் என்று சொல்லிவிட, உதயாவின் மனம் வாடாமல் இருக்க அத்தனை பிரயர்த்தனப்பட்டது. அவளுக்கென்று தனியே சமைக்க இஷ்டமில்லை, அம்மா வாங்கி வைத்திருந்த தயிர் இருக்க, சோறு வைத்து தயிர் போட்டு சாப்பிட்டாள்.

உண்ட பின் வீட்டை சுத்தம் செய்து, அது நாள் வரை விட்டுப்போயிருந்த அலுவலக இமெயில்களைப் பார்வையிட்டாள். அவுட்லுக்கில்(outlook) வெள்ளத்தை சமாளிப்பதற்குள் திணறிப்போனாள், மெயில்களைப் பார்வையிட்டு, வந்திருந்த செய்திகளுக்குப் பதில் சொல்லி அந்த ஒன்றரை மணி நேரமும் அவள் கவனம் மொத்தமாக குவிந்திருந்தது. 

Advertisement

Advertisement

முதுகு வலியில் மெல்ல நிமிர்ந்தவளுக்கு நாக்குக் கூட வறண்டு போயிருந்தது. தேனீரின் சுவைக்கு ஏங்கியது நாவு, விடுதியென்றால் கீழே சென்றால் எடுத்துக் குடிக்கலாம். அலுவலகத்தில் அதற்கென்றே இருக்கும் சாதனத்தில் வகை வகையாகக் குடிக்கலாம். என்ன எத்தனை வகையாக இருந்தாலும் அவை டீ போல இருக்கும், காஃபி போல இருக்குமேயன்றி அதுவாக இருக்காது. வீட்டில் அவள் தானே குடிக்க வேண்டும், அவள் வீடு என்ற நிதர்சனம் தட்ட மெல்ல எழுந்து சமையலறை சென்றாள். வாசல் மணி அழைப்பில் யாரென்று பார்க்க, லாலா நின்றான். 

அவ்வளவுதான் உதயாவின் முகத்தில் புன்னகை உதயமாக, ஆவலாக கதவைத் திறக்க, லாலாவிற்கும் பேச்சுலர் ரூம் கதவைத் திறந்து கலைந்திருந்த அறையையும் பார்த்து பழகியவனுக்கு மனைவியின் அந்த மஞ்சள் மேக்ஸி பளிச்சென்று மனதை நிறைக்க, அவன் சித்தப்பா சொன்னது போல் அவனுக்கென்று ஒருத்தி! அவனுக்குப் பிடித்த ஒருத்தி! 

Advertisement

இருவரும் கதவருகே அரை நிமிடம் ஒன்றும் பேசாமல் புன்னகைத்து நின்றனர். லாலா மெல்ல கதவை சாற்றியவன், 

“சாப்பிட்டியா?” என்று மனைவியிடம் அக்கறையாக விசாரித்தான்.

“சாப்பிட்டேன், நீங்க?” 

“ம்ம், டீ வேணும் உதயா” என்றதும் அவளுக்குப் போட அதுவரை யாராவது வருவார்களா என்பது போல அத்தனை அயர்ச்சியோடு இருந்தவள், லாலா கேட்டதும் லாலாலா என்று மனது பாட, 

“டென் மினிட்ஸ்” என்று சொல்லி சமையலறைக்குள் சென்றவள், 

“லாலா இஞ்சி டீ போடவா? ஏலக்காய் சேர்க்கவா?” என்று சத்தமாகக் கேட்டாள்.

“போடுமா” அறைக்குள் ஆடையை மாற்றிவிட்டு முகம் கழுவி, உள்பனியனும் கறுப்பு நிறத்தில் காட்டன் வேஷ்டியும் அணிந்து வந்தான் லாலா.

“லாலா! புதினா போடவா?” என்று மீண்டும் உதயா கேட்க, 

“ஏட்டி! நீ டீ போடுறியா இல்ல பிரியாணியா?” என்று கேட்டபடி லாலாவும் உதயாவின் அருகே சென்றான். உதயா திரும்பி முறைக்க, 

“புதினா எல்லாம் வேண்டாம், டீன்னு சொல்லி நான் எதை கொடுத்தாலும் குடிப்பேன் டி” என்ற லாலா

“நானெல்லாம் ஹாஸ்டல்வாசி,  நம்ம காலேஜ்ல ரசத்தை சாம்பார்னு சொல்லி போடுவாங்க, அதையெல்லாம் நம்பி சாப்பிட்டவன் நான்..ஸோ நீ டீன்னு ஒன்னு போடு, போதும்” என்றான்.

டீத்தூளைக் கொதிக்கும் நீரில் போட, அது நீரோடு சங்கமித்து அழகாய் கரைந்து போக, கணவனுக்காக முதல் முதலில் போடும் தேனீர் என்பதால் அதில் பாலை விட பாசம் அதிகமிருந்தது உதயாவுக்கு. தேனீர் கொதிக்க,

“நானும் அதே ஹாஸ்டல்வாசி, அப்போ என் சமையல் எப்படியிருக்கும்?” என்றதும் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த லாலாவுக்குப் புரையேறியது. 

“பார்த்து பார்த்து” என்று உதயா பதறி அவன் தலையில் தட்ட,  உதயாவின் நெருக்கம் அவனை இம்சிக்க, 

“ஓகே ஓகே!” என்றபடி மெல்ல நெஞ்சைத் தடவிக்கொண்டவன் மெல்ல விலகினான்.

“நீ சொல்றதும் சரியான பாயிண்ட் தான்” என்றதும் 

“கவலைப்படாதீங்க! நான் கொஞ்சம் குட்டி வயசுல இருந்தே சமைப்பேன்.” என்றாள் உதயா. அவள் டீயை வடிகட்ட, 

லாலா மனைவியிடம், “மதியம் என்ன சாப்பிட்ட?” என்றபடி பாத்திரங்களைத் திறக்க, கொஞ்சம் சோறு மட்டும் மிச்சமிருந்தது. 

“தயிர் சாதம், நீங்க?”

“நானும் அதே தயிர் சாதம்தான். நீ எதாவது சமைச்சு சாப்பிட்டிருக்கலாமில்ல” என்று கடிந்துகொண்டான்.

“டயர்டா இருந்தது, ஒன்னும் சமைக்கத் தோணல” 

“சரி, இப்போ எதாவது ஸ்னாக்ஸ் செய்றியா? வயிறு சத்தம் போடுது” என்றதும் 

“டீ ரெடி, குடிச்சிட்டு செய்யவா? வெங்காயமிருக்கு, வெங்காய பக்கோடா?” என்று கேட்க,

“பசிக்கு நீ என்ன செஞ்சுக் கொடுத்தாலும் ஓகே” என்ற லாலா தேனீரைப் பருகினான்.

“ஹே! நல்லாதானடி போடுற, ஓவரா பண்ணின” என்று சிரித்தவன் டீ’யை ரசித்துக் குடித்தான்.

உதயாவும் அவனோடு டீ பருகியவள், வெங்காயம் நறுக்க ஆரம்பிக்க, 

“சரி, எனக்குக் கண்ணு எரியும். நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன், நீ செஞ்சுட்டுக் கூப்பிடு.” என்றவன் டீ குடித்த டம்ளரைக் கழுவாது அப்படியே போட்டுவிட்டு சென்றான். உதயா அதையெல்லாம் கவனிக்கவில்லை. வீட்டில் அவன் சத்தமும், அவன் இருப்புமே அந்த நேரம் அவளுக்கு அலாதியான இதம் தர, வெட்டிய வெங்காயம் கண்ணீர் கொடுத்தாலும் கணவனுக்காக என்பதில் அவள் கால்களில் சலங்கையின்றி ஒரு ஆட்டம்.

பார்த்து பார்த்து வெங்காய பக்கோடா அவள் செய்ததில் பக்கோடாவே வெட்கப்பட்டிருக்கும், அதோடு விடாது அதற்கு இணை சேர்க்கிறேன் என ஒரு சட்னி அரைத்தாள். அரை மணி கழித்து கணவனை எழுப்பப் போக, லாலா ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தான்.

உதயா அழைக்க, “வெங்காய பக்கோடா வாசனை பயங்கரமா இருக்கே” என்று தலையை இருபக்கமும் புன்னகையோடு ஆட்டியபடி ஹாலுக்கு வந்தான். இருவரும் கீழே உட்கார, இரண்டு தட்டுகளில் பக்கோடாவும் சின்ன கிண்ணங்களில் காரமாக சட்னியும் இருக்க, 

“அடடா!” என்ற லாலாவுக்கும் மதியம் சாப்பிட்ட தயிர் சாதம் டாடா காட்டிருக்க, பக்கோடாவைப் பார்க்கவும் பரவசமானான். 

வெங்காயப் பக்கோடாவை ரசித்துண்டவன், “இப்போ இந்த உலகத்திலயே அழகான விஷயம் என்ன தெரியுமா உதயா?” என்று கேட்க, பக்கோடாவை சட்னியில் தொட்டபடி கணவனைப் பார்த்தாள் உதயா.

“ஒன்னு இந்த பக்கோடா, இன்னொன்னு நீ” என்று கணவன் சொல்ல, அவன் பேச்சில் சிரிப்பும் வெட்கமும் இணைந்தே வந்தது.

“வீட்ல இருந்தவரைக்கும் எங்கம்மா எதாவது நொறுக்குத்தீனி கொடுத்துட்டே இருக்கும், சென்னை வந்ததும் எந்த எண்ணெய்ல சுடுற பஜ்ஜியோ போண்டாவோனு பயம்தான் அதிகமா இருக்கும். ஸோ டீயோட நிறுத்திப்பேன்! ஒன்றரை வருஷம் அப்புறம் இப்படி ஈவினிங் ஸ்னாக்ஸ், டீன்னு எஞ்சாய் பண்றேன், தேங்க்ஸ்” என்ற லாலாவின் முகத்தில் பெரிய புன்னகை. 

“நான் ஸ்கூல் படிக்கும்போது  இந்த நேரம் டீ குடிப்போம், அப்போ என்னை ஸ்கூல்ல இருந்து அழைச்சிட்டு வந்திட்டு அப்பாவும் டீ குடிச்சிட்டு, அம்மா செஞ்சிருக்க ஸ்னாக்ஸ் சாப்பிடுவாங்க, அப்புறம் எல்லாம் மாறிடுச்சு”

“அப்புறம் டீ’ல இருந்து காஃபிக்கு மாறிட்டீங்களா?” லாலா சந்தேகத்தை சாதாரணமாகக் கேட்க, 

“டீ’ல இருந்து காஃபிக்கு மாறல, எங்கப்பா போய் சேர்ந்துட்டார்” எட்டுவயது சிறுமியாக முதல் முதலில் மரணத்தை அதுவும் கண்ணெதிரே தூக்கில் தொங்கிய அப்பாவைக் கண்ட காட்சி அவளின் நினைவினை விட்டு என்றாவது அகலுமா தெரியவில்லை. இப்போதும் உடலில் ஒரு பயம் ஓட, மெல்ல பக்கமிருந்த கணவன் தோள் சாய்ந்தாள்.

லாலாவுக்கும் உதயா சொல்ல கஷ்டமாக இருக்க, அடுத்து என்ன ஆறுதல் சொல்ல தெரியவில்லை. இதற்கெல்லாம் எப்படி ஆறுதல் சொல்ல என்ற அகராதி யாருக்கும் அத்துப்படி ஆகவில்லை. ‘அப்பா இல்லையா?’ ‘நான் இருக்கிறேன்’ என்று சொல்லலாம், ஆனால் அப்பாவின் இழப்பு, ஒரு மனிதனின் இடத்தை எக்காலத்திலும் இன்னொரு மனிதனால், மனிதியால் நிரப்பிட முடியாது, அவர்களை நினைவுப்படுத்தும் மனிதரைப் பார்க்கலாம், மற்றபடி வெற்றிடம் வெற்றிடமே! 

லாலா உதயாவின் இடக்கையைப் பிடித்துக்கொள்ள, உதயா மெல்ல உள்ளம் திறந்தாள். எட்டுவயதில் அழவும், அப்பாவைக் கேட்டு அடம்பிடிக்கவும் மட்டுமே தெரிந்த சிறுமி அவள். அம்மாவின் அடிகள் அவளை அடக்கியிருக்க, உள்ளத்தின் ஓலங்கள் ஒடுங்கிப்போயிருந்தன. துக்கத்தை சொல்லத் தெரிந்த வயதில் சொல்ல ஒரு துணையில்லை. வாதையை(துன்பம்) அனுபவிக்கவும் வசதி வேண்டுமே. அப்பாவின் இழப்பு, அதனை தொடர்ந்து அம்மா வாழ்க்கையை நடத்தவே சிரமப்பட எதையும் பகிர்ந்ததில்லை. 

“அப்பா போன பின்னாடி, அம்மா வேலைக்குப் போனாங்க. அவங்க எட்டாவதுதான் படிச்சிருந்தாங்க, அதனால் நான் ஸ்கூல் போறதே எங்கம்மாவுக்கு அவ்வளவு பெருமை. நான் அப்போ நல்லாவும் படிப்பேன், சாப்பாடு கட்டிக்கொடுத்து, ஈவினிங் ஸ்னாக்ஸ் கொடுத்து அது ஒரு காலம். அப்புறம் அம்மா வீட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சாங்க. ஃபீஸ் கட்ட முடியாம கவர்மெண்ட் ஸ்கூல் சேர்ந்தேன், அங்கயே சாப்பிட்டுப்பேன். சாயங்காலம் வீடு வந்தா அம்மா இருக்க மாட்டாங்க, அவங்க வேலை முடிஞ்சு வர ஏழெட்டு மணி ஆகிடும். வாடகை வீட்லதான் இருந்தோம், பக்கத்து வீட்ல பார்த்துக்க சொல்லிட்டுப் போவாங்க, ஆனாலும் எங்க வீட்டை விட்டு எங்கேயும் போக கூடாதுனு அம்மா ரொம்ப ஸ்ட்ரீக்ட்.”

“எனக்குப் பசிக்கும், ஆனா சாப்பிட ஒன்னுமிருக்காது. அப்புறம் அம்மா கிட்ட சொன்னேன், பிஸ்கெட் வாங்கி வச்சிருப்பாங்க, அதை தண்ணீல நனைச்சு சாப்பிட்டு அம்மா வேலை செய்ற வீட்ல எப்பவும் நைட் டீஃபன் எங்களுக்கும் சேர்த்துக் கொடுப்பாங்க, ரெண்டு வீட்ல செஞ்சாங்க, ஒரு வீட்ல அது பழக்கமில்ல, அங்க போனா அம்மா வீடு வந்து சமைப்பாங்க.”

“நான் டென்த் படிக்கும்போதுதான் தாமோதரன் அங்கிள் வீட்ல வேலை செய்ய ஆரம்பிச்சாங்க, அப்புறம் டெய்லி அங்க இருந்து சாப்பாடு வரும். ஹாஸ்டல் போனதும் ஈவினிங் நமக்கு டீ, பிஸ்கட், ஸ்னாக்ஸ் உண்டுதானே? ஆனாலும் தனியா பசிக்கு உட்கார்ந்து சாப்பிட்டு வந்துடுவேன், ரொம்ப வருஷம் கழிச்சு என்னோட வீட்ல, எனக்குனு ஒருத்தங்க இருக்க அவங்களோட சாப்பிடுறேன்.” என்றவள் அப்படியே அவன் தோளில் சாய்ந்தே கதை சொன்னாள். 

லாலாவிடம் இதற்கு முன் இதெல்லாம் சொன்னதில்லை. புலம்பல்கள் எல்லாம் எப்போதும் அவன் வசம். உதயாவின் முகத்தை மெல்ல குனிந்து பார்க்க, கண்ணீரோ கவலையோ இல்லை. ஆனால் தனக்கென ஒரு இடம், தனக்கென ஒரு உறவு என்ற எண்ணத்தில் ஒரு திருப்தி கண்டான். 

“இனிமே நம்ம சேர்ந்து சாப்பிடலாம்” என்று லாலா சொல்ல, உதயாவின் புன்னகை விரிந்தது. 

“ஆமா, உன் ஆபிஸ்ல ப்ரண்ட்ஸ் கூட ஒன்னா சாப்பிட மாட்டியா?”

“ஆபிஸ்ல இருக்கவங்க கூட டீ குடிப்பேன், வெளியே சாப்பிட்டா எனக்கு ஒத்துக்காது. ஆனாலும் வீட்ல இப்படி சாப்பிடுறது வேறதானே? நான் ப்ரைவேட் ஸ்கூல்ல இருந்து மாறிப்போனதால கவர்மெண்ட் ஸ்கூல்ல என்னை கொஞ்ச நாள் வேற மாதிரி தனியா பார்ப்பாங்க, எனக்கும் அங்க செட் ஆக டைம் ஆச்சு.” 

“காலேஜ்லதான் மறுபடி நல்ல ப்ரண்ட்ஸ் கிடைச்சாங்க. காலேஜ் ப்ரண்ட் மலர் கல்யாணத்துக்குத்தான்  நான் நம்ம ஊருக்கு வந்தேன்.”

“நைட் என்ன வேணும் உங்களுக்கு?” உதயா தானாக லாலாவை விட்டு விலகி எழுந்து கேட்டாள். கையில் பாத்திரங்களை எல்லாம் அவள் எடுத்துக்கொள்ள, லாலா

“உனக்கு என்ன பிடிக்குமோ செய்” என்றான்.

“பூரி செய்யவா?” என்று உதயா கேட்க, லாலா தலையசைத்தான்.

உதயா அவ்வளவுதான்! உற்சாகமாக பூரி செய்ய போனாள். கணவனிடம் மனதை பகிர்ந்ததில் கொஞ்சம் லேசாக உணர்ந்தாள் உதயா. அவள் கணவனின் மனதில் கனம் கூடியது. அவனால் இந்த வயதிலும் கூட அப்பா இல்லாத ஒரு நிலையைக் கற்பனை செய்ய முடியவில்லை, அப்படியிருக்க எப்போதும் உதயாவைப் பார்க்கும்போதெல்லாம் சிறு பொறாமை இருக்கும். 

லாலாவைப் பொருத்தவரையில் பால் வழிப்பேரடையில் (milky way galaxy) இல் பெருந்துன்பம் அனுபவிப்பது அவன்தான் என்ற எண்ணம். அது உண்மையும் கூட! சுயத்தின் சுகமோ வலியோ அதுதான் எப்போதும் பெரியதாக இருக்கும். ஆஃப்கானிஸ்தானில் குண்டு போட்டார்கள் என்பதை விட நாம் அண்டாவில் சுட்டுக்கொண்டோம் என்பதே வலிக்கும். அதெல்லாம் கற்பனை செய்து, கவலைப்பட வேண்டிய சமாச்சாரம். இங்கோ சுட்ட சுடே எரிச்சலை தர கற்பனையின்றி கன்றிப்போன இடமே கவலை தரும்.

உதயா படித்திருக்கிறாள், நல்ல சம்பளம், வெளியே சொல்லிக்கொள்ளும் அளவு பெருமையான வேலை. ஏசி அறை, ஏகப்பட்ட சலுகை, வீட்டிலிருந்தே கூட வேலை செய்யலாம். விடுப்புகளுக்குக் கூட சம்பளம் உண்டு என்று அவளுக்கான சலுகைகளை மட்டுமே நினைப்பான். 

இப்போது பார்த்தால் எட்டு வயதில் அவள் மனம் எப்படி அப்பாவின் மரணத்தைப் புரிந்திருக்கும்? எப்படி கடந்திருப்பாள் என்று நினைக்க நினைக்க தணியாத ஒரு தவிப்பு. மனைவியை இன்னும் நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும், அவளை எதற்கும் கவலைப்பட விடக்கூடாது என்று ஆயிரத்து ஒன்றாம் முறை நினைத்தவன், சிந்தனையை விட்டு செயலில் இறங்கினான். வேகமாக படுக்கை அறைக்குப் பக்கத்து அறைப்போனவன் அவனது புத்தகங்களை அங்கே அடுக்கிவிட்டு கதவை சாற்றிவிட்டு படிக்க ஆரம்பித்தான்.

இரவு உணவு தயார் செய்துவிட்டு உதயா அழைக்க, லாலாவும் மனைவியோடு சேர்ந்து உண்டான்.

“நாளையிலருந்து நானும் ஆஃபிஸ் ஜாய்ன் பண்றேங்க, வாரம் ரெண்டு நாள் நேர்ல போகணும்.” என்றவள் அடுத்த நாள் சமையல் செய்யக் கேட்க, லாலாவுக்குச் சிரிப்பு.

“ஏண்டி இத்தன நாளா நான் எப்ப சிக்குவேன், உன் சமையலை எங்கிட்ட காட்ட காத்திருந்த மாதிரி இருக்கே” என்றான் கிண்டலாக.

உண்மையில் அவள் கவனிக்க ஒரு ஆள், அவளை கவனிக்க ஒரு ஆள் என்ற ஏக்கம்தான் உதயாவிற்கு. அம்மாவை அருகே இருந்து பார்க்க நினைக்க, அவரோ வேலை செய்த வீட்டிற்கு விஸ்வாசமாக இருப்பேன் என்று அவர்களின் பேரப்பிள்ளையைப் பார்த்தார். 

“ரொம்பப் பண்ணாதீங்க, ஆசையா கேட்டா” என்று உதயாவின் முகம் வாட

“அச்சோ! கோச்சுக்காதடி” என்ற லாலா 

“எனக்காகன்னு ஒன்னும் செய்யாத, நான் க்ளாஸ் டைம் பொருத்து சாப்பிடுவேன், சமைச்சு வேஸ்டா போகும். அப்படி வேணும்னா நான் முன்னாடியே சொல்றேன். சரியா?” என்று கேட்டு சமாதானம் செய்தான்.

காலை பொழுதில் கெட்ட இதம் மாலையில் மொத்தமாக மீண்டிருக்க, அதே இனிமையோடு இரவினை எதிர்கொண்டாள் உதயா. அறைக்குள் சென்றவள் லாலா வருவதற்காகக் காத்திருக்க, பத்தரை ஆன பின்னும் அவனை காணும். படிக்கிறானோ என்று எட்டிப்பார்க்க, அவனோ தரையில் போர்வை விரித்துப் படித்திருந்தான்.

உதயாவுக்குச் சட்டென ஒரு வேகம், கதவை முழுதாக திறந்து விளக்கைப் போட்டவள், 

“ஏன் லாலா இங்க வந்து படுத்துருக்கீங்க?” என்றாள் கோபமாக.

“என்னடி நீ புதுசா கேட்குற?” என்றான் சலிப்பாக.

அந்த சலிப்பான குரல் உதயாவின் கோபத்தைத் தூண்டின, ஊரில் ஒன்றாகத்தானே ஒரே அறையில் படுத்தோம் என்ற எண்ணம் உதயாவிற்கு. காலை முதலே தனித்து வெந்ததன் காரணமாக கோபமெழ, 

“நமக்குக் கல்யாணமாகிடுச்சு லாலா. ஊர்ல ஒரே ரூம்லதானே படுத்தோம்?” கேள்வியாக உதயா நிறுத்த, 

“ஊர்ல நம்ம தனியா படுத்தா எல்லாரும் நம்மைக் கேள்வி கேட்பாங்க, என்ன சும்மா கல்யாணமாகிடுச்சுன்னு சொல்ற? கல்யாணமானாலும் எனக்கு வேலை கிடைக்கிற வரைக்கும் நீயும் நானும் தனி தனி ரூம்தான் உதயா.” என்றான் அவனும் இறுக்கமான குரலில்.

“கல்யாணமானதும் எல்லாம் மறந்திட்டியா?” என்றான் அதட்டலாக. 

உதயாவிற்கு அவன் எண்ணம் புரிந்தது, அவள் மீதுதான் தவறென்று உரைத்தது. மாலையில் அவனோடு இயல்பாகப் பேசியதின் விளைவு, மீண்டும் தனியே உறங்க வேண்டும். தொண்டையடைத்தது, விடுதியில் கூட ஒரே அறையில் இரண்டு பெண்கள் தங்குவர். இப்போதோ இவள் மட்டும் தனியே. 

“சாரிங்க, குட் நைட்” என்று குரல் கமற சொல்லிவிட்டு உதயா சென்றுவிட, லாலாவுக்கு இருந்த சோர்வில் அவள் குரலின் பேதம் புரியவில்லை.

உதயாவுக்கு உறக்கம் வர வெகு நேரம் பிடித்தது. இதில் அவனுக்கு வேலையே கிடைக்காவிட்டால் கணவன் என்னவாவான் என்ற எண்ணம் வேறு திடீரென முளைத்தது. உதயாவுக்கு அது பிரச்சனையில்லை, ஆனால் லாலா? நல்லதே நடக்கும் என்று நம்பியபடி எப்படியோ உறங்கிய உதய நிலா உதய சூரியன் வரும் நேரம் விழித்துவிட்டாள். 

லாலா அவளுக்கு முன்பே எழுந்து குளித்துவிட்டு அறையை விட்டு வந்தான். உதயா உறக்கம் தொலையாத விழிகளோடு சமையலறைக்குள் சென்று, ப்ரிட்ஜிலிருந்து பால் எடுத்தாள். 

காஃபி போட அவள் பாலைக் கொதிக்க வைக்க, லாலா அவளருகே வந்து நின்றான்.

“என்ன நீயும் சீக்கிரம் எந்திரிச்சிட்ட?” இயல்பாகக் கேட்டபடி மனைவியைப் பார்க்க,

“அப்போதானே உங்களைக் கொஞ்சம் பார்க்கலாம்” சொல்லிவிட்டு பாலை அவள் பார்க்க, பாவை பக்கமே லாலாவின் மொத்தப்பார்வையும் குவிந்திருந்தது. நேற்று போட்டிருந்த மஞ்சள் நிற மேக்ஸியில், சோர்ந்த விழிகளில் கூட மனைவி அத்தனை அழகாக தெரிந்தாள். 

லாலா மனம் அப்படியே லாலாலா பாட, அவள் பேச்சில் அந்த காலை வேளை அவனுக்கு இனித்தது. 

“கொஞ்சம் என்ன? நிறையே பாரேன்டி” என்று அவள் முதுகில் சாய்ந்தவன் காதில் மெல்ல சொல்ல, அவன் அணைப்பில் உதய நிலா அடங்கி நிற்க, காதில் பேசியவன் மெல்ல காதோரம் முத்தமிட்டான். 

லாலாவின் திடீர் முத்தத்தில் திகைத்து, சிலிர்த்து காதை கழுத்தோடு சேர்த்து கூச்சத்தில் உதய நிலா நிற்க, அது இன்னும் லாலாவைத் தூண்டிட, மனைவியை அப்படியே இறுக்கமாக அணைத்து முதல் அணைப்பை, அணைப்பின் கதகதப்பை உணர்ந்து கண்மூடி நின்றான். கட்டுப்பாடுகள் எல்லாம் அந்த நேரம் மறந்து நின்றான் லாலா. 

அந்த நேரம் ஹாலில் இருந்த லாலாவின் அலைப்பேசி சத்தம் போட, 

“நான் கொஞ்ச நேரம் சந்தோஷமா இருந்தா இவனுங்களுக்குப் பிடிக்காதே..” என்று முணுமுணுத்தவன் விருப்பமேயின்றி உதயாவை விட்டு விலகி ஹாலுக்கு வர, அழைத்தது சக்திவேல். 

சக்தியிடம் பேசும்போதே லாலா மனைவியை முறைத்தான். உள்ளே எழுந்த எரிச்சலை அப்படியே அவளிடம் காட்டினான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!