Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் ஹைக்கூ காதல்

என் ஹைக்கூ காதல் 24 2

“இப்போ தானே டா வந்த?” ஹர்ஷவர்த்தன் தொடங்க, “ஒரு மாசம் லீவுன்னு சொன்னியே?” என்று தொடர்ந்தார் பர்வதவர்தினி.

“அதுக்குள்ள ஏண்டா கிளம்புற? என்ன அவசரம் இப்ப உனக்கு?” அம்சவர்தினி கேட்க, “வளைகாப்புக்கு வர சொன்னீங்க… வந்துட்டேன்ல? அப்புறம் என்ன?” என்றான் கோவர்த்தன் அசட்டையாய். அவனது இந்த பதில் போதாதா அம்சவர்த்தினி தன் ரேடியோவை ஆன் செய்ய. விஷ்ணுவர்தனை தவிர அத்தனை பேரும் அன்னைக்கு சப்போர்ட்டாய் நின்று கோவர்த்தனை ஒருவழியாக்கினர்.



Advertisement

எதையும் கண்டுக்கொள்ளாமல் உண்டு முடித்தவன், வானிலாவையும் எழுப்பிக்கொண்டு, “சரி, இவ்ளோ கெஞ்சுறீங்க… உங்களுக்காக இன்னும் கொஞ்ச நாள் தங்குறேன்” என்றான் தெனாவட்டாய்.

அம்சவர்தினி ஸ்ரிவர்த்தனை அழைத்து என்னவோ காதில் சொன்னார். அதை கேட்டவன் சின்ன சிரிப்போடு முதல் கட்டுக்கு ஓட்டமாய் ஓட, அங்கிருந்து போக முயன்ற கோவர்த்தனை, “செல்லப்பட்டு? இங்க வாடா” என்றார் அம்ஸா வாஞ்சையாய்.

Advertisement

Advertisement

‘என்னையா?’ என இருமுறை திரும்பிப்பார்த்து சந்தேகத்தோடே தான் அவரிடம் வந்தான் கோவர்த்தன். அவன் இரு கரங்களை பிடித்துக்கொண்டு தன் அருகில் தரையில் அமர வைத்தவர், “ஏங்கண்ணு சும்மா சும்மா போறேங்குற?” என்றார்.

‘நீயா பேசியது என் தாயே! நீயா பேசியது?’ பின்னணியில் அவனே மானசீகமாய் பாடிக்கொண்டு அமர்ந்திருக்க, “எட்டாம்ப்பு படிக்கையில ஒரு பொண்ணு கையை பிடிச்சு இழுத்தன்னு வாத்தியார் உன்னை வீட்டுக்கே வந்து விட்டு வெளுத்துட்டு போனாரே…” என்கையில், அவசரமாய் திரும்பி வானிலாவை பார்த்தான்.

Advertisement

அவன் எதிர்ப்பார்த்தது போலவே ‘அடப்பாவி!’ என வாயை பிளந்து அவள் நிற்க, “அப்போவே உன்னைய மண்டைல தட்டி உள்ளூருல சாணியள்ள விட்டுருந்தா புத்தி ஸ்பெயினுக்கு போறேன்னு சொல்லுமா? சொல்லு…” என்று அம்ஸா கேட்டதும், சுற்றி நின்ற கூட்டம் எல்லாம் கிளுக்கி சிரிக்க, சிறுசுகள் கூட ‘அய்ய… மாமா பேட் பாய்’ என கேலி பேசியது.

‘இப்ப சந்தோசமா?’ என்ற ரீதியில் அன்னையை கோவர்த்தன் பார்த்திருக்க, ஓடிவந்த ஸ்ரிவர்த்தன், எதையோ மறைத்தபடி அன்னையின் மடியில் வைத்தான். அவன் வைத்த வேகத்தில் அதை எடுத்து வலபக்க இடுப்பில் சொருகிக்கொண்டவர், பிடித்திருந்த அவன் கரங்களை உதறிவிட்டு, “எங்க போறேன்குறியோ? போய்க்க” என்று எழுந்துவிட்டார்.

அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. என்னடா இது? அம்பி ரெமோ என மாறி மாறி செய்கிறாரே!? என அவன் குழம்ப, அவனைப்பார்த்து நக்கலாய் சிரித்துக்கொண்டிருந்தான் ஸ்ரிவர்த்தன். எல்லோரும் அங்கிருந்து கலைந்து செல்ல, அம்சவர்தினி மகளையும் மருமகளையும் பாத்திரங்களை ஒதுங்க வைக்க சொல்லிவிட்டு தன் அறை நோக்கி சென்றார்.

தம்பியிடம் வந்த ஸ்ரிவர்த்தன், “என்னடா சிரிப்பு உனக்கு?” என்றான் அதட்டலாய்.

 “அம்மாக்கிட்ட மாட்டிக்கிட்ட ப்ரோ!” என்றவனை புரியாமல் பார்த்தவன், “ஒழுங்கா என்னன்னு சொல்லு?” என்று கேட்க, “உன் குடுமி அம்மா இடுப்புல மாட்டிகிச்சு ப்ரோ… கிச்சு கிச்சு மூட்டுனா கூட கிடைக்காது” என்றபோதும் அவனுக்கு விளங்காமல் போனது, அவனது அறைக்குள் திறந்துக்கிடந்த பெட்டியை பார்த்தபோது புரிந்துப்போனது.

‘பாஸ்போர்ட் சிக்கிக்கொண்டது அன்னையிடம்’

‘டேய்… ஸ்ரிவர்த்தா….’ பல்லைக்கடித்தான் கோவர்த்தன். அதைத்தவிர என்ன செய்ய முடியும்? அவனை கொட்டக்கூட முடியாது. வீட்டின் கடைக்குட்டி மீது கை வைத்தால், இவன் கைக்கே ஆபத்து வந்தாலும் ஆச்சர்யமில்லை.

மறுநாள் விசேஷத்தை வைத்துக்கொண்டு அன்னையிடம் சென்று ‘பாஸ்போர்டுக்காக’ மல்லுக்கட்ட தோன்றாமல் கட்டிலில் விழுந்துவிட்டான் அவன். சில நிமிடங்களில் மனம் நிலைபெற, சிந்தனையில் வந்து நின்றதெல்லாம் சுரேஷும் ரேகாவும் மட்டும் தான்.

வானிலாவுக்காக, அவளுக்கு நிம்மதி கொடுக்க என்று நினைத்து தான் ரேகாவை பற்றி அவன் விசாரிக்க சொன்னது. ஆனால், இப்போது ஒரு பெண்ணின் உயிர் சம்பந்தப்பட்டதாய் தோன்றியது அவனுக்கு. வாணிலா கொடுத்த புகாரை நாளை மதியமே பதிவு செய்து அந்த சுரேஷை நேரில் பிடித்து விசாரிக்க வேண்டும். அவனிடம் இருந்து உண்மைகளை வாங்க முயல வேண்டும் என்று என்னென்னவோ நினைத்தான். உறுதியாக அவன்மீது ஏதோ ஒரு தவறு உண்டு என்று ஆணித்தரமாய் தோன்றியது.

அதை அவனே ஒப்புக்கொள்ளும்படியான நிலைக்கு அவன் வர வேண்டும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு அவன் இருக்க, நகுலனுக்கு அதே எண்ணம் தான்.

‘இந்த ரேகா குறுக்கே வந்து என் கணவன் நல்லவன், நியாயவான், அவனை விடுங்கள்’ என்று கதறாமல் இருந்தால் தேவலாம் என்று அந்த பெண்ணை நினைத்து தான் தயங்கினான். அவள் பழைய பஞ்சாங்கத்தில் ஊறிய பாவையாகவே அவனுக்கு தோன்றினாள். ஆனால், இந்த ஆண்கள் இருவருமே எதிர்பாரா வகையில் அன்றிரவே அவர்கள் தூக்கத்தை கலைக்கும்படி நகுலன் கொடுத்த ஃபோனில் இருந்து அவனை தொடர்புக்கொண்டாள் ரேகா.

அவள் சொன்னதை எல்லாம் கேட்ட நகுலன் ஒரு நொடி ஆடிப்போனான்.

‘ச்சை! இப்படியும் ஒரு ஆண்மகனா?’ என அருவெருப்பே தோன்றியது. அவள் மிகவும் ரிஸ்க் எடுத்து பேசுகிறாள் என்று புரிய, என்ன செய்ய வேண்டும் என்பதை அவளுக்கு நாளைக்குள் குறுந்தகவலாக அனுப்புவதாக சொல்லி வைத்த நகுலன், உடனே சென்று கோவர்த்தனின் கதவை தட்டினான். அதன்பின் ஆண்கள் இருவரும் உறங்கவில்லை. அவர்கள் பேசி முடித்த நேரம் விடிந்தே போனது.

காலை நேரம் பெரிய பரபரப்புகள் எல்லாம் இல்லை. பத்து மணிக்கு மேல்தான் நல்ல நேரம் என்பதால் வேலைகள் நிதானமாக வழமைப்போல நடந்தன. பின்கட்டில் சமையலாட்கள் தங்கள் வேலைகளை ஆரம்பித்திருக்க, அவர்களை மேற்ப்பார்வை பார்த்துக்கொண்டே வீட்டு சமையலை கவனித்தார் அம்சவர்த்தினி.

பர்வதமும் தீபாவும் ஏதோ பேசிக்கொண்டே வேலை செய்ய, சற்றே தயங்கி அங்கே வந்தாள் வாணிலா. வந்தவளை கண்டதும், “ஏதாவது வேணுமா நிலா?” என்றாள் தீபா.

“இல்ல க்கா… சும்மாவே இருக்கேன். அதான்” என்றவளுக்கு, எந்த வேலையும் செய்யாமல் சும்மா உட்கார்ந்து உண்பதே அசௌகர்யமாய் தோன்றியது. வீட்டின் யாருமே சும்மா இருந்து அவள் காணவே இல்லை. உணவுண்ணும் நேரம் தாண்டி அந்த வீட்டில் எல்லோருக்கும் எதாவது ஒரு வேலை இருந்தது. இவளுக்கு வேடிக்கை பார்ப்பது மட்டுமே வேலையாய்.

அது ஒன்றும் அவளுக்கு கடினமாகவும் இல்லை தான். ஆனாலும், தன்னை தவறாக நினைப்பார்களோ என்றே தான் அவளாக வந்து கேட்டது.  அவள் கேட்டதும் சிரித்த பெண்கள், “சரி… என்ன பண்ணப்போற அதுக்கு?” என்றனர்.

“ஏதாவது வேலை சொல்லுங்க… செய்றேன்” வாணிலா சொல்ல, இரு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். அது இன்னும் சங்கடமாய் போனது அவளுக்கு.

“சரி வா… இந்த வெல்லத்தை திருகிக்குடு” சின்ன அருவாள் போன்ற ஒன்றோடு வெல்லம் உருண்டையை வானிலாவிடம் நீட்டினாள் பர்வதம். வாங்கிக்கொண்டவள் அவர்கள் அருகேயே அமர்ந்து வெல்லத்துக்கும் நோகாமல், அருவாளுக்கும் நோகாமல்  திருக, பார்த்த பெண்களுக்கு சிரிப்பை அடக்கத்தான் சிரமமாய் போனது. சிரித்தால் அவள் தவறாய் நினைப்பாளே என்று வேறு பக்கமாய் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர்.

வந்தவர்களை வரவேற்க வாசலில் பன்னீர் சந்தன தட்டு வைத்து, மேசை போட்டு, திரும்பி போகும்போது குடுக்க பரிசுப்பை கொடுக்க, பிள்ளைகளை வேலை வாங்கிக்கொண்டு நின்றிருந்தான் கோவர்த்தன். ஆளாளுக்கு தனித்தனி வேலைகள் அந்த காலை நேரத்திலேயே. வீட்டின் பெரியவர்களாக ஐயாவும், அப்பம்மாவும் பூஜைக்கான ஏற்ப்பாடுகளை சிரத்தையோடு பார்க்க, கிச்சனுள் வந்த அம்ஸா, வானிலாவை ஆச்சர்யமாய் பார்த்துவிட்டு இரும்பில் தொங்கிக்கொண்டிருந்த மணியை இருமுறை அடித்தார்.

அந்த மொத்த வீட்டுக்கே பலமாய் கேட்கும் அந்த சத்தம், கிச்சனில் எப்படி இருக்கும் என சொல்லவும் வேண்டுமா? மும்முரமாய் வெல்லம் திருகிக்கொண்டிருந்த வாணிலா துள்ளி விழுந்தாள்.

‘களுக்’ என சிரித்த தீபா, “தினம் கேக்குற… ஆனாலும் இப்படி பதறுற” என்று சொல்ல, அசடு வழிந்தது வானிலாவுக்கு. அந்த சத்தம் கேட்ட சில நிமிடங்களில் வீட்டின் அத்தனை உருப்படிகளும் கிச்சனுக்கு வெளியே மூன்றாம் கட்டில் அசம்பல் ஆனது. பெரியவர்கள் இருவருக்கு மட்டும்  பட்டாலைக்கே டீ போனது.

சுட சுட டீ’யோடு அப்பமும் கொடுக்க, பேசிக்கொண்டே உண்டுக்கொண்டிருன்தனர் எல்லோரும். டீயை வாயருகே கொண்டு சென்ற வாணிலா, அதன் ஏலக்காய் மணத்தில் முகம் சுளித்தாள். அவளுக்கு பிடித்த வாசனை தான் என்றாலும் இப்போது ஒவ்வாமையாய் போனது.

குடித்தால் கண்டிப்பாக குமட்டும் என்று தோன்ற அப்படியே வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“அப்பம் சாப்புடு நிலா! நல்லாருக்கும்” ஹர்சவர்த்தன் அவளை கவனித்து சொல்ல, “ஹான் அத்தான்” என்றவளுக்கு அதை வாயருகே கொண்டு சென்றதுமே தொண்டைக்கு ஏறியது.

நுனிபல்லால் கொறித்தாள்.  கோவர்த்தனுக்கு மனதெல்லாம் அடுத்து செய்யவேண்டியதில் இருந்ததில் வாணிலாவை கவனிக்க தவறினான். நகுலனுடன் ஏதோ முனுமுனுவென பேசிக்கொண்டே கொடுத்ததை உண்டுக்கொண்டிருந்தான்.

சில நிமிடங்களில், “ஏய் புடி புடி…” என பதட்டமாய் சத்தம் கேட்க, கோவர்த்தன் கவனிப்பதற்குள் அமர்ந்தவாக்கில் மயங்கி விழுந்திருந்தாள் வாணிலா. அருகே இருந்த ஸ்ரிவர்த்தன் அவள் தலை தரையில் படாதபடி, “அண்ணி…” என்று பதறி பிடிக்க, மொத்தமாய் அவளை சூழ்ந்தனர் எல்லோரும். கோவர்த்தனுக்கு அப்போது தான் அவளை கவனிக்காமல் விட்டதே கருத்தில் பட, தன்னையே திட்டிக்கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!