Skip to content
Post Views: 7,052
“நிலாம்மா… நிலா?” அவன் அருகே நெருங்குவதற்குள் அவளை நெருங்கியிருந்தார் அம்சவர்தினி. அவள் அருகே போனவர் முகத்தில் லேசாக தண்ணீர் தெளிக்க, அதிகம் சிரமமின்றி கண்ணை திறந்து எழுந்து அமர்ந்த வாணிலா, “சாரி” என்றாள் சங்கோஜமாய்.
Advertisement
“நைட் ஒழுங்கா வயிறு ரொம்ப தின்னுன்னா கேக்குறியா நீ? காலைல வெறும் வயித்துல கொஞ்ச நேரம் வேலை செஞ்சதுக்கே தலை சுத்தி விழுற? இந்த வயசுல எல்லாம் நான் மூணு புள்ள பெத்துட்டேன். நீ இருக்க தெம்புக்கு ஒன்ன பெத்து எடுக்கமுன்னேயே ரத்தபசை போய்டும் போலயே” அவர் போக்கில் சொல்லிக்கொண்டிருக்க, வாத்தியாரிடம் திட்டு வாங்கும் மாணவி போல தலைகுனிந்து கேட்டுக்கொண்டிருந்தாள் வாணிலா.
“ம்மோவ்… தள்ளுங்கம்மா அங்குட்டு… அவளே முடியாம இருக்கா, திட்டிட்டு இருக்கீங்க” கோவர்த்தன் சொன்னதை அம்ஸா கேட்கவுமில்லை, நகரவும் இல்லை.
Advertisement
Advertisement
அதற்குள் ஒரு எலுமிச்சையை பிழிந்து தண்ணீர் சேர்த்து உப்பு இனிப்பு சரிசமமாய் கலந்து கொண்டு வந்தாள் தீபா. அதை அவளிடம் கொடுத்த அம்சா, “கொஞ்ச கொஞ்சமாய் குடி. ஒன்னும் பண்ணாது” என்று சொல்ல, “தள்ளுங்க ம்மா நீங்க” என்றான் கோவர்த்தன்.
அமர்ந்தபடியே அவன் பக்கம் திரும்பிய அம்ஸா, “ஏன்? நீ வந்து தூக்கி இடுப்புல வச்சுப்பியோ?” என்று திட்டியவர், “என்னடா சமைச்சு போட்ட நீ?” என்றார் அவனை.
Advertisement
“நான் சமைச்சு போட்டே இப்படி இருக்கா… அதுக்கு முன்ன நீங்க பார்த்துருக்கணும்” அவனும் ரோஷமாக சொல்ல, “இத பாரு… கழுத்து எலும்பு தெரியுது… இத பாரு… கைய? கொத்தவரங்கா வாட்டம்…” அவள் மணிக்கட்டை பிடித்தபடி அவர் சொல்ல, கோவர்த்தனுக்கு திக்கென்றது. நொடியில் வெளிறியது அவன் முகம்.
மணிக்கட்டை பிடித்து, அங்கும் இங்கும் ஆட்டியவர், “எப்படி ஆடுது பாரு?” என்று சொல்லும்போதே, “சரி சரி எல்லாரும் வாங்க… காத்தோட்டமா இருக்கட்டும் பொண்ணு” என்று மற்றவர்களை நகர்த்த ஆரம்பித்தார். நடக்கப்போவது தெரிந்துவிட்டது அவருக்கு.
தந்தையின் செயலில், ‘டேய் தகப்பா!’ மோடில் கோவர்த்தன் திரும்பி பார்க்க, இருபக்கமும் தலையாட்டியபடி நகர்ந்துவிட்டார் அவர்.
மணிக்கட்டை பிடித்த அம்சவர்த்தினி சட்டென பேச்சை நிறுத்தினார். அவர் பிடித்த பிடியை விடவில்லை. கோவர்த்தனின் முகம் பேயறைந்ததை போல மாறியது.
‘இப்படி ஒன்று நடக்கும்’ என அவன் நினைக்கவே இல்லை. தன் அன்னையை பற்றி அவனுக்கா தெரியாது? அவரே பாதி மருத்துவர். இத்தனை நாள் சொன்ன ‘ஜெட் லாக்’ கதையை இனியும் சொல்லவே முடியாது. ‘தான் தொலைந்தோம்’ என்று தெரிந்தே போனது.
முப்பத்து மூன்று வயது ஆணுக்கு அன்னையை கண்டு உடல் நடுங்குமா என்ன? நடுங்குகிறதே!!! வியர்த்துக்கொட்டுகிறது பயத்தில்.
வாணிலா மணிக்கட்டில் இரட்டை நாடி துடிப்பதை உணர்ந்து கோவர்த்தனை அம்சவர்த்தினி பார்த்த பார்வையில், அவனது சப்த நாடியும் அடங்கியது. விஷேஷ வேலைகள் இருப்பதால் எல்லோரும் அதை கவனிக்க சென்றிருக்க, உடன் நின்ற தீபாவை, “ராகாவை பாரு!” என்று அனுப்பிய அம்ஸா, “அம்மாடி, எழுந்து அறைக்கு போய் படும்மா!” என்றார்.
எழுந்தவள், கோவர்த்தனை பார்க்க, அவன் எங்கே அவளை பார்த்தான்!?
“ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?” வாணிலா கேட்க, தன்னையே பார்த்துக்கொண்டு நின்றவனை சளைக்காமல் பார்த்த அம்ஸா, “நீ போம்மா… பயந்துருக்கான். மந்திருச்சா சரியாகிடும்” என்றார் அவனிடம் பார்வை வைத்து.
அவளுக்கு மிகவும் சோர்வாக இருக்க, ‘சரி’ என்றபடி நகர்ந்தவளை, “அந்த விளக்கமாறை எடுத்து குடுத்துட்டு போம்மா” என்றார் அவனையே பார்த்து.
எதற்கென்றே கேட்காமல் எடுத்து கொடுத்தவள், “புது விளக்கமாறா ஆன்ட்டி?” என்றாள்.
“ம்ம்ம்… நல்லா கூட்டும்!” என்றவர், “நீ போ!” என்றார். அவள் போகும் முன் ஒருமுறை கோவர்த்தனை பார்த்தாள். அப்போதும் அவன் பார்வை அன்னையிடமே போக, ‘நான் மட்டும் இப்படி பண்ணுனா மூஞ்சை தூக்கிப்பான்’ என்று முனகிக்கொண்டே சென்றாள். அவள் போனதும், கதவை இழுத்து பூட்டியவர் மகனை நிலைத்துப்பார்க்க, நடுங்கியது அவனுக்கு.
“ம்மா… அது…” அவன் ஆரம்பிக்க, “இது உன் வேலை தானே!?” என்றார் அவர்.
“ஆமா!” அவன் தலையை ஆட்ட, ஒன்றுமே சொல்லவில்லை அவர். கையில் இருந்த விளக்கமாறின் பின்பக்கத்தை இடக்கை உள்ளங்கையில் தட்டினார். அடித்துவிட்டால் கூட தேவலாம் போல, அவரின் இந்த பில்ட் அப் தான் அவனை அதிக பயமுறுத்தியது.
“அம்மா… அது வேணுன்னே இல்லம்மா… ஒருமாதிரி… எப்படி சொல்றது? அவ சோகமா இருந்தாளா? அவளை சமாதானம் பண்ண…” திக்கி திக்கி சொல்லிக்கொண்டே பின்னோக்கி அவன் நடக்க, அவனை நோக்கி வந்தபடி, “மருத்துவ குழந்தை குடுத்தியோ?” என்றான் அம்சா.
“இல்லம்மா! அது… தெரியாம…” சொல்லும்போதே, அவன் இடது காலில் சுளீர் என விழுந்தது ஒரு அடி.
“ஆஆஆ….” அவன் அலற, “ஸ்ஸ்ஸ்… சத்தம் வரக்கூடாது! வெளில ஆளுங்க இருக்காங்க, விஷேஷ வீடு!” என்றார் கண்ணை உருட்டி.
“ம்மா? அவளும் நானும் கல்யாணம் பண்ணனும்ன்னு” அவன் அடுத்து சொல்ல ஆரம்பித்தபோது, “உன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சுருந்தா நீ விரும்புற பொண்ணை உன் வீட்டுலயே இருக்கட்டும்ன்னு சொல்லிருப்பேன்?” என்றார் அவர். அவனிடம் பதிலே இல்லை. அப்படியே நின்றான்.
அவரும் அவனை பார்த்தே நிற்க, “ம்மா… சாரி ம்மா!” என்றான்.
“குழந்தை உருவாகலன்னா நல்லவனாட்டம் நடிச்சு கல்யாணம் முடிச்சுட்டு போயிருப்பீள்ள? புள்ள வரவும் மாட்டிக்கிட்ட நீ!?” அவர் சொல்ல, “அப்படி இல்லம்மா” அவன் சமாளிக்க வர, “நான் ஒன்பது கட்டு விளக்கமாறு பிய்ய அடிப்பேன்னு சொல்லியும் திமிரெடுத்து ஆடிருக்கன்னா, என் வளர்ப்புக்கு என்னடா மரியாதை? வெளிநாடு போய்ட்டா கொம்பு முளைச்சுடுதோ?” கொஞ்ச கொஞ்சமாய் அவர் குரல் எகிறியது.
“இல்லம்மா இல்லம்மா! நாங்க ஏற்கனவே அங்க கல்யா…” அவன் சொல்லிமுடிப்பதற்குள், “குடும்ப மானத்தை கெடுக்கன்னே வேலை பார்த்துருக்கான் பாரு” என்றவர் கையில் இருந்ததைக்கொண்டு வீச ஆரம்பித்தார். ஒவ்வொரு அடியிலும் குச்சிகள் அவனை சுளீர் சுளீர் என குத்த, கத்தவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல், மூன்றாம் கட்டிலேயே சுற்றி சுற்றி ஓட ஆரம்பித்தான்.
அவரும் விடாமல் துரத்தி துரத்தி அடிக்க, அவனால் ஒரு அளவுக்கு மேல் வலி தாங்கவே முடியவில்லை.
‘ம்மோவ்… விட்ரும்மா…’ என அழுகையே வந்துவிட்டது. விளக்கமாறின் முடிச்சு கழண்டு குச்சிகள் எல்லாம் சிதறியதும் தான், மூச்சுவாங்க முறைத்துக்கொண்டு நின்றார். அவிழ்ந்து விழுந்த முடியை அள்ளி கொண்டையிட்டவர், கையை காலை பிடித்துக்கொண்டு தூணில் சாய்ந்து அமர்ந்தவனை குறையாத கோவத்தோடு பார்த்தார்.
“வலிக்குதும்மா” பாவமாக அவரிடமே சொன்னான்.
“தப்பு செஞ்சப்போ இனிச்சுச்சோ?” என்றவர், “உருண்டு விழுந்த பொருளை எல்லாம் அதது இடத்துல வச்சுட்டு போய் வாழைலை வண்டி எப்போ வரும்ன்னு விசாரி, போ” என்றார்.
“ம்மோவ், இதெல்லாம் அநியாயம்!” முனகினான். அதற்கே நின்று முறைத்தவர், “வேலைகடக்கு, அதனால தப்பிச்ச! இன்னும் எட்டு விளக்கமாறு மிச்சம் இருக்கு உனக்கு” என்றிட, விருட்டென எழுந்தவன், மூன்றாம் கட்டின் கதவை அகல திறந்துவிட்டு, “நீங்க போங்க, வேலையெல்லாம் நானே பாக்குறேன்” என்றான்.
அவனை முறைத்தபடி கடந்தவர், “மண்டைல இருக்க குச்சியை தட்டிவிடு” என்றுவிட்டு போக, திரும்பி அங்கிருந்து கண்ணாடியில் பார்த்தவன் அதிர்ந்தே போனான். மண்டையில் ஈட்டி போல நீட்டிக்கொண்டு சில குச்சிகள் நிற்க, முகத்திலும் கழுத்திலும் ஆங்காங்கே செம்புள்ளிகள் வேறு!
‘தாயா நீ! பேய்!’ மெல்லமாக அவன் சொல்ல, “என்னடா சத்தம்?” என்றார் அம்ஸா எங்கிருந்தோ!
“இந்த பித்தளை குண்டானை எங்க வைக்கன்னு கேட்டேன் ம்மா” அவன் அவசரமாய் குரல் கொடுக்க, “ஆங், பேன்க் லாக்கர்ல வையு” என்று குரல் வந்தது.
“ரைட்டு விடுங்க” என்றவன், வலியை காட்டிக்கொள்ளாமல் வேலைகளை பார்த்தான். நல்ல நேரத்தில் ராகவர்த்தினிக்கு வளைகாப்பும் முடிந்தது. வந்த உறவுகளுக்கெல்லாம் வானிலாவை ‘மருமகள்’ என அடையாளம் காட்டிவிட்டார் அம்சவர்த்தினி.
அன்று மதியமே வாணிலா கொடுத்த புகார் பதிவும் செய்யப்பட்டது.
கோவர்த்தனும் நகுலனும் தங்களுக்குள் பேசி எப்படி காய் நகர்த்துவது என்று திட்டமிட்டனர். அதை ரேகாவுக்கு குறுந்தகவல் செய்து, அவளது உறுதியை பெற, ஃபோனிலும் ஒருமுறை பேசிவிட்டனர். அவள் என்னதான் உறுதியாய் தலையாட்டினாலும், இறுதியில் சொதப்பிவிடுவாளோ என்ற பயம் நகுலனுக்கு ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்தது.
அதையும் மீறி அவர்கள் அந்த வார இறுதிக்காக காத்திருந்தனர்.
அந்த நாளும் வந்தது. திலகாவிடம் சொல்லிக்கொண்டு ஊருக்கு வெளியே இருக்கும் பண்ணை வீடு ஒன்றுக்கு இரவு நேரம் ரேகாவுடன் கிளம்பினான் சுரேஷ். போகும் வழியில் அவளுக்கு ஆயிரம் அறிவுரைகள். கல்லை போல அசையாமல் இருந்தாள் ரேகா.
அந்த பண்ணை வீட்டில் இவர்களை போல இன்னும் ஐந்து ஜோடிகள் இருந்தனர். அனைவரும் பரஸ்பரம் கட்டிப்பிடித்துக்கொள்ள, ரேகாவுக்கு உடல் கூசியது. சும்மாவேனும் கூட வேறொருவர் தன்னை தொடுவதை அவள் விரும்பவே இல்லை. ஆனால், அவள் விருப்பம் அங்கே யாருக்கும் பொருட்டில்லை.
சிறுது நேரம் பேசியவர்கள், பின் ஏதோ செய்தார்கள். கண்ணாடி குடுவை இரண்டை கொண்டு வந்தான் ஒருவன். விளையாடுவார்கள் என்று நினைத்தாள்.
குலுக்கியவன், இரண்டில் இருந்தும் ஓரோர் பேப்பரை எடுக்க, ஒன்றில், ரேகா என்றும், இன்னொன்றில் சிவா என்றும் வந்தது. சுற்றி இருந்தவர்கள் ‘ஓஓ’ என கோஷமிட்டனர். இவளுக்கு ஒன்றுமே புரியவில்லை, இவளையும் சிவாவையும் ஒரு அறைக்குள் கொண்டு விடும் வரை.
என்னத்தான் அவளை ரட்சிக்கும் ஆட்கள் வருவர் என்று தெரிந்தாலும், அதற்கும்முன் தன் கற்ப்புக்கு ஏதும் என்றால்? நடுங்கிக்கொண்டு கதவோரம் நின்றவள், காமப்பசியோடு தன்னை நோக்கி வந்தவனை பார்த்துக்கொண்டே தன் இடையில் கை வைத்தாள். அவள் மறைத்து வைத்த பேனா கத்தி ‘நான் இருக்கிறேன்!’ என்றது.
எதிராளியை குத்தி கொன்று, மீதமிருக்கும் நாலு மிருகங்களிடமும் போராடும் தைரியம் அவளுக்கில்லை. ஆனால், அவளை அவளே முடித்துக்கொள்ளும் மனதைரியம் அளவுக்கு அதிகமாய் இருந்தது.
தகுந்த நேரத்தில் ரட்சகர்கள் வருவார்களா!?
error: Content is protected !!