Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அரங்கேற்ற வேளை – 8(1)

வேளை 8 

லாலா கொடுத்த உணர்வில் மெய்மறந்து நின்ற உதயாவை அவன் அலைப்பேசி அழைப்பு கலைத்தது. பெருமூச்சோடு அடுப்பில் இருந்த பாலை இறக்கி, காஃபி கலந்தாள். நடுவீட்டில் லாலா சக்தியோடு பேசிக்கொண்டிருந்தான், உற்சாகமாக அழைப்பை ஏற்றவனின் குரல், கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் குறைந்து பேச்சு மெல்ல முணுமுணுப்பானது.



Advertisement

“என்னடா? ஹனிமூன் கூட போகாத விளக்கெண்ண எதுக்குக் கல்யாணம் பண்ற? உதயாவுக்கு லீவ் இல்லைனு பொய் சொல்லியிருக்க. அந்த புள்ளையைக் கேட்டா லீவ் இருக்குண்ணா சொல்லுது” என்று சக்தி அதட்டலாகக் கேட்டான்.

“லீவ் கிடைக்காது” லாலா முணுமுணுக்க

Advertisement

Advertisement

“லீவ் போடுடா” என்று சக்தி சொல்ல, லாலா கேட்பதாக இல்லை.

“டேய்! நானே கல்யாணத்தைப் பண்ணிட்டு கஷ்டப்படுறேன். நீ வேற என்னை பேசாத” லாலா ஆயாசமாக சொன்னான்.

Advertisement

“ஏண்டா எரும! கல்யாணமாகி உனக்கு ஒரு வாரம்தானே முடிஞ்சது, அதுக்குள்ள கஷ்டம்ன்ற? அப்படியென்ன கஷ்டம்?” சக்தி மிரட்டலாகக் கேட்டான்.

அதை நண்பனிடம் எப்படி சொல்வான்? பிடித்த மனைவி அருகே இருந்தும் அவளுக்கும் அவனுக்கும் ஒரு எல்லைக்கோடு! அதை போட்டவனும் அவன், இருந்தாலும் அதை கடக்க காதலும் ஆவலும் தவிக்க, இன்னொரு பக்கம் கனவுகள் பயமுறுத்தின.

கல்யாணமே அவனுக்கு மிகப்பெரிய பொறுப்பாகத் தோன்றியது. 

அடுத்தவர் நமக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது கூட எளிதானது, அதனை கடக்க நினைக்கையில், கட்டுப்பாடு விதித்தவர்களை வசைபாடி மனம் ஆறுதல்பட்டுக்கொள்ளும். நமக்கு நாமே விதித்துக்கொள்ளும் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற மிகுந்த சுயகட்டுப்பாடு வேண்டும். அதனை பின்பற்ற முடியாத கணங்களிலும், அதனை மீற துடிக்கும் கணங்களிலும் நம்மையே வசைபாட தோன்றும். ஏன் என்ற ஒற்றைக் கேள்வியே நம்மை கட்டுப்பாட்டை காப்பாற்ற வைக்கும். 

சுயத்தின் சுதந்திரத்தை மிகவும் லாகவமாக கையாள வேண்டும்!

லாலா அப்படியான நிலையில் இருந்தான். ஊரில் இருந்தவரை அவனை கேள்வி கேட்க தாத்தா, அப்பா இருந்தார்கள். சரோஜினியின் கிண்டல் பேச்சு, ஆத்தாவும் அம்மாவும் அக்கறையில் கேட்பார்கள். இங்கு வந்த பின் சுயக்கட்டுப்பாடு மட்டுமே அவனை லட்சியம் நோக்கி ஓட வைக்கிறது. இதில் திருமணம் விரும்பிய ஒன்றென்றாலும் விரும்பாத காலத்தில் நடந்துவிட, முழுமையாக அதன் சுவையை அறிய முடியாத ஏக்கம் அவனிடம். 

மனைவியோடு ஒரு முத்தம், அவளோடு அமைதியாக சில கணங்கள். எதுவுமில்லை! ஏக்கம் மட்டுமே மிச்சம்! இதோ சக்தி அழைப்பதற்கு முன்னான நிமிடங்களை இப்போது நினைத்தால் அவன் மீதே கோபம் உண்டானது. 

கட்டுப்பாட்டோடு இருப்பது லாலாவுக்கு முன்பு கடினமானதாக இல்லை. உறக்கத்தை துறப்பதோ, உணவை விடுவதோ எதையும் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் வீட்டில் அவனுக்கென ஒருத்தி இருக்க, அவளை கண்டுகொள்ளாமல் இருப்பது அவளுக்கு செய்யும் அநீதியாகத் தோன்றியது. அவனுக்கும் மனைவியோடு அளவளாவல் ஆவல் இருந்தது, கைகோர்க்கவும் கண்பார்க்கவும் கட்டிக்கொள்ளவும் கட்டற்ற ஆசைகள் இருந்தன.

அந்த ஆசைகள் அவனை அச்சமூட்டின. யாரிடமும் அவன் உணரும் உணர்வுகளை சொல்ல முடியவில்லை. யாருக்கும் புரியப்போவதில்லை என்று நினைத்தவன், 

“அதெல்லாம் புரியாது, போடா” என்றான் சக்தியிடம் எரிச்சலாக.

“என்ன புரியாது? நானும் கல்யாணமானவன்தான்” சக்தியும் கடுப்படிக்க, 

‘கல்யாணமான கன்னிப்பையன் டா’ என்று லாலாவால் மனதுக்குள் மட்டுமே புலம்ப முடிந்தது.

“நாங்க போறப்போ சொல்றேன், நீயே டிக்கெட் போடு. போதுமா? நான் அப்புறம் பேசுறேன்” என்று சக்தியோடான பேச்சைத் துண்டித்தவன், சமையலறைக்குள் பிரவேசித்தான். உதயா சமையலறை பக்கமாக இருக்கும் அந்த குட்டி பால்கனி வழி வேடிக்கைப் பார்த்தாள். கையில் காஃபி கோப்பை இருந்தது. 

லாலா வரும் சத்தம் கேட்டு திரும்பியவள், “காஃபி மூடி வச்சிருக்கேன்” என்றாள். 

காஃபியைக் கையில் எடுத்துக்கொண்ட லாலா, “சக்திகிட்ட உனக்கு ஆபிஸ்ல லீவ் கிடைக்கலனு நான் சொல்லி வச்சிருந்தேன். நீ ஏன் அவன் கிட்ட உனக்கு லீவ் இருக்குனு சொன்ன?” நண்பனிடம் காட்டிய எரிச்சலின் மீதியை சரிபாதியிடம் சரிசமமாகக் காட்டினான். 

உதயா ஒரு நொடி மாறிய அவன் அவதாரத்தை அவதானித்தாள். அவளுக்கும் கோபம் வந்தாலும் சட்டென்று கோபத்தைக் கொட்டும் வழக்கமில்லாதவள்.

உதயநிலா நீர் போல். மெல்ல வெப்பமடைந்து, மெல்ல குளிரடைவாள். லாலா நிலம் போல்! சீக்கிரம் வெப்பமாகி சீக்கிரம் குளிர்ந்துவிடுவான். 

எவ்வுணர்வானாலும் அவன் உடனே வெளிக்காட்டிவிடுவான். அது சில சமயம் அவனுக்குச் சாதகமாக இருந்தாலும் சில நேரம் பாதகமாக இருந்திருக்கிறது. 

“ஏன் உண்மையைத்தானே சொன்னேன்?” உதயா கணவனிடம் கேட்க, 

“நீ உண்மையை சொன்னா அவன் என்னைப் பேசுறான். எனக்கு மட்டும் ஹனிமூன் போகணும்னு ஆசையில்லையா? நான் உனக்கு லீவ் இல்லைனு சொல்லி வச்சிருந்தேன்” லாலா எரிச்சலாக முணுமுணுத்தான்.

“அதை எங்கிட்ட சொல்லியிருந்தா நானும் அதையே சொல்லியிருப்பேனேங்க?” உதயா கேட்க, அதுவும் நியாயமாகத்தான் இருந்தது.

லாலாவுக்கே காலை வேளையில் இப்படி இருப்பது சலிப்பாக இருந்தது. 

“சொல்லியிருக்கலாம், என் தப்பு. சாரி” என்றதும் 

உதயாவும், “இனிமே சொல்லிடுங்க. இப்போ காஃபியைக் குடிங்க” என்றாள் இயல்பாக. வாழ்க்கை அவளை சிறு விஷயங்களுக்கெல்லாம் கோபத்தை இழுத்துப் பிடிக்கக் கூடாது என்று சொல்லிக்கொடுத்திருந்தது. எட்டு வயதிலே தந்தையின் தற்கொலையைக் கண்டதால் வந்த இசையாத தன்மையாக இருக்கலாம். 

வானத்தில் மேகங்கள் கூடியிருந்தன. இதமான ஒரு காலைபொழுதாக இருக்க, 

“க்ளைமேட் நல்லாயிருக்குல்ல?” உதயாவே வேறு பேச்செடுக்க

“வெதர் நல்லாயிருக்கு” என்றான் லாலா சிறு புன்னகையோடு.

ஒருவாரமாக மழிக்கப்படாத தாடிக்குள் அவன் புன்னகை மெல்ல தெரிய, உதயா புரியாமல் பார்த்தாள்.

“வெதர்தான் டே டூ டே கன்டிஷன். முப்பது வருஷத்தோட ஆவரேஜைத்தான் க்ளைமேட் சொல்வாங்க. வெதர் அப்படின்னா வானிலை, க்ளைமேட் காலநிலை.” என்றதும் 

“அப்படியா? இதெல்லாம் எனக்குத் தெரியாது. சாருக்கு சரியான அறிவுதான்” கணவனை மெச்சுதலாகப் பார்த்தாள் உதயா. அவனை எப்போதும் மதித்துப் பார்ப்பவள் என்றாலும் அவன் ஒவ்வொரு விஷயத்தையும் இப்படி அறிவாய்ப் பேசும்போது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது.

“அறிவா? போ உதயா. எல்லாம் பேசிக் ஜியாக்ராபி” என்றவன்  நடுவீட்டில் இருந்த புத்தர் சிலையைப் பார்த்தான். 

“புத்தரா இருக்கிறது ரொம்ப கஷ்டம்ல” மனைவியின் கண்பார்த்து அவன் கேட்க 

“என்ன புத்தர் மேல அக்கறை? ஷ்ரவன் அண்ணா எனக்குப் பிடிக்கும்னு கிஃப்ட் பண்ணினது. பார்க்கும்போது அமைதியா ஃபீல் ஆகும்” உதயா சொல்ல 

“அக்கறையில்லை, யோசிச்சுப் பார்த்தேன். எல்லாம் இருந்தும் ஆசையை விடுறது சாதாரணமில்லையே” என்றான் லாலா.

“ஆசையை விட்டதால தானே அவர் புத்தரானார்?” உதயா கன்னத்தில் குழி விழ கேட்க, அந்த கன்னக்குழியைத் தொட்டுப்பார்க்க விரைந்த கரத்தைக் கட்டுப்படுத்தி பால்கனி கம்பியைப் பற்றினான்.

“அதுவும் உண்மைதான்! நீ நான் வரலன்னு தயிர்சாதமே செய்யாத, எதாவது சத்தா செஞ்சு சாப்பிடு. புரிஞ்சதா? அப்படி நான் வரதுன்னா உனக்கு எப்போ இன்ஃபார்ம் பண்ணனும்?” என்று அன்றைய நாளைக் குறித்துப் பேசியவர்கள் அவரவர் வேலையைப் பார்த்தனர். லாலா அடுத்த அரைமணி நேரத்தில் அகாடெமிக்குச் செல்லும் வண்ணம் தயாராகி வந்தான்.

காலையில் அவனுக்குச் சூடாக தோசை ஊற்றித் தந்தவள், அவனோடு உண்டாள். லாலாவும் அகாடெமி கிளம்பிச் சென்றான். உதயாவும் வேலையில் சேர்ந்திருக்க மதியத்திற்கு அரிசியை ரைஸ் குக்கரில் போட்டவள், லாக் இன் செய்யும் முன்னே தக்காளி தொக்கு செய்துவிட்டாள். 

லாக் இன் செய்யவும் வேலை அவளை இழுத்துக்கொண்டது. காலையில் சீக்கிரமே சாப்பிட்டதால் மதிய உணவை ஒரு மணிக்கு உண்டுவிட்டாள். மூணே முக்கால் மணி போல் லாலா வீட்டிற்கு வந்தான். உதயா நடுவீட்டில் இருக்கும் மேஜையில் உட்கார்ந்துதான் வேலை செய்தாள். அவளும் பத்து மணியிலிருந்து ஒரே இடத்தில் இருந்தபடி வேலை செய்ய, முதுகில் அப்படியொரு வலி. விடுதியில் இருக்கையில் அறையில் உடனிருக்கும் பெண் இவளோடு பேசிக்கொண்டிருப்பாள், விடுதியில் வேலை செய்யவென தனியாக ஒரு பெரிய அறை உண்டு. அங்கே எல்லாம் பேசியபடி வேலை செய்ய, உதயாவுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கும். அலுவலகம் சென்றாலும் உடன் அவளது குழு இருக்கும்.

இப்போதோ வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அலுவலகம் செல்ல வேண்டும். வீட்டில் தனியாக இருக்க சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஒரு டீ குடிக்கலாம் என்றாலும் அவள் எழுந்து போய் போட வேண்டும், பத்து நிமிட செயல். ஆனால் அதற்கும் கூட அவள் வேலை விடவில்லை. யாரேனும் டீ கொடுத்தால் பரவாயில்லை என்ற எண்ணம். சோர்வு மோசமாக அவளை உடலளவிலும், உள்ளத்தளவிலும் தாக்கியது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளின் குழு மொத்த code-ஐ சரி பார்த்துத் தர வேண்டும். இப்போது எழவும் முடியாது, எல்லாரோடும் அழைப்பில் இணைந்திருந்தாள்.

உதயாவுக்கு ஒரு தேனீர் இடைவேளை தேவையாக இருந்தது. 

கதவை ஒருக்களித்து சாற்றியிருந்தாள் உதயா, அவள் அங்கேயே உட்கார்ந்திருப்பதால் பூட்டவில்லை. அதே நேரம் லாலாவும் வீடு வந்தான். அரை மணி நேரம் கழித்து அவனுக்கு அடுத்த வகுப்பென்பதால், உதயாவைப் பார்த்துவிட்டு ஒரு டீ குடிக்கலாம் என்று நினைத்தான்.

“உதயா!!!!!!!!!” என்று உற்சாகமாகக் கத்திக்கொண்டு அவன் வீட்டினுள் நுழைய, உதயா கண்களை உருட்டி முறைத்து கையால் அமைதியாக இருக்கும்படி சொன்னாள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!